சட்டத்தை மீறி எதிர்ப்பைத் தெரிவிப்பது ஜனநாயகத்திலிருந்து விலகிச் செல்வது ஆகாது, அப்படிப்பட்ட எதிர்ப்பு ஜனநாயகத்திற்கு முற்றிலும் இன்றியமையாததாகும் -ஹோவர்டு ஜின்

பொதுமக்கள் போராட்டங்கள், ஜனநாயகம் உயிரோட்டமாகவும் நலமாகவும் இருக்கிறது என்பதைக் குறிப்பனவாகும். அதன் வடிவம் எதுவாக இருந்தாலும், அரசாங்கத்திற்கு எதிராக தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கு மக்களுக்கு வழங்கும் வெளிதான் ஜனநாயகத்தின் சாராம்சம் ஆகும். உலகின் மிகப்பெரிய செயல்படும் ஜனநாயகம் என்று உலகிற்குக் காட்டிக்கொள்ள பல பத்தாண்டுகளாக இந்தியா முயன்று வருகிறது. ஆனால் அதேநேரத்தில், அது திட்டமிட்ட முறையில் மக்கள்திரளுக்கான அத்தகைய வெளியைக் குறைத்துகொண்டே வந்துள்ளது. இன்று, இந்த வெளி அடையாளரீதியாக, ஒவ்வொரு மாநிலத் தலைநகரிலும் ஒரு குறிப்பிட்ட ஒரு சிறிய இடத்தில், பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டமாகக் கூடி, தங்களுக்கு மட்டுமே கேட்கக் கூடிய வகையில், தங்களுடைய மனம் நிறைவடையும் வகையில், முழக்கம் எழுப்பும் அளவுக்குக் குறைக்கப்பட்டுவிட்டது.

sharmilaமுட்கம்பி வேலிகளுக்குள், குறுகிய வாயில் உள்ள சிறைகளைப் போல, பொதுஆர்ப்பாட்டம் பெரும்பான்மை மக்களிடம் சென்றுவிடாத வகையில் காவலர்கள் புடைசூழ, அதிகாரிகள் பார்த்துக்கொள்கிறார்கள். இந்த இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள் அதிகபட்சம் அங்கு அமர்ந்திருக்கும் காவல்துறை ஆய்வாளரிடம் மனுக்கள் கொடுக்கலாம். இருப்பினும் இந்திய ஜனநாயகம் இந்த ஜனநாயக வெளியை நசுக்குவதோடு மண்நிறைவடைவதில்லை. அது பலநேரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள மீது குற்றவியல் சட்டங்களை ஏவி விடுகிறது. அதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. அண்மைய நடைமுறைகளில் மணிப்பூரின் இரும்புப் பெண்மணியான ஐரோம் சர்மிளாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளலாம். அவர் ஜந்தர் மந்தரில் தற்கொலை முயற்சிக் குற்றம் சாட்டப்பட்டு டெல்லிக்குக் விசாரணைக்குக் கொண்டு வரப்பட்டதை எடுத்துக் கொள்ளலாம்.

சர்மிளாவின் எதிர்ப்பு அவருடைய காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்துடன் 2000 நவம்பர் 3 அன்று தொடங்கியது. இந்தியத் துணைப்படைகளில் ஒன்றான அசாம் ரைபிள்ஸ் மணிப்பூரில் இம்பாலுக்கு வெளியே பேருந்துக்காக நின்றுகொண்டிருந்த 10 பேரைச் சுட்டுக் கொன்றது. இந்த நிகழ்வு “மாலோம் படுகொலை” என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. சிலநாட்களில் சர்மிளா காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போதிருந்து ஒரு மருத்துவமனையில் சிறை வைக்கப்பட்டு, கட்டாயமாக மூக்கு வழியே திரவ உணவு அளிக்கப்பட்டு வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஒருநாள் மட்டும் விடுதலை செய்யப்பட்டு, மீண்டும் கைது செய்யப்படுகிறார். ஏனென்றால் மணிப்பூரிலும், அசாமிலும், நாகலாந்திலும், அருணாச்சலப்பிரதேசத்தின் பகுதிகளிலும் ஜம்மு காஷ்மீரிலும் நடைமுறையில் இருந்து வரும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை இந்திய அரசாங்கம் திரும்பப் பெறும் வரையில் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிட அவர் மறுத்துவருகிறார். பதிமூன்று வருடங்களாக நடந்துவரும் அவருடைய உண்ணாநிலைப் போராட்டம் இதுவரை பதிவுசெய்யப்பட்ட வரலாற்றிலேயே மிகநீண்ட காலப்போராட்டமாக உலகையே உலுக்கி வருகிறது. ஆனால் இந்திய ஆட்சியாளர்களை மட்டும் அதனால் அசைக்க முடியவில்லை. அதற்கு மாறாக அவர்கள் தமது தண்டனை எந்திரத்தைக் கொண்டு தற்கொலைக் குற்றம் சாட்டியுள்ளனர். தற்கொலை முயற்சி இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 309 இன் படி குற்றமாகும்.

ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு தனது எதிர்ப்பை ஐரோம் சர்மிளா டெல்லி மாநகரக் குற்றவியல் நடுவரிடம் வலியுறுத்தினார். ஆனால் அச்சட்டம் தொடர்கிறது. வெறும் சந்தேகத்தின் பேரில் மக்களைச் சுட்டுக் கொல்வதற்கும், வீடு புகுந்து தேடுவதற்கும் கைது செய்வதற்கும், சொத்தை அழிப்பதற்கும் கூட இந்தக் கொடூரச் சட்டம் ஆயுதப்படைகளுக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்தியாவின் வட கிழக்கில் உள்ள நாகா குன்றுகளில் உள்ள படைகளுக்கு, ஒரு குறுகிய காலத்திற்கு என்று இயற்றப்பட்ட இந்தச் சட்டம் ஐமபது ஆண்டுகளாகத் தொடர்கிறது.

மணிப்பூரில் உள்ள மனித உரிமைகளுக்கான குடிமைச் சமுதாயக் கூட்டணி மற்றும் ஐக்கிய நாடுகள் அவை அளித்த ‘மணிப்பூர்: நீதிவிசாரணையற்ற உடனடி அல்லது தன்னிச்சையான மரணதணடனைகள்’ என்ற தலைப்பிட்ட அறிக்கையின்படி, 1979 க்கும் 2012 மே மாதத்திற்கும் இடையில் மணிப்பூரில் மட்டும் 31 பெண்களும் 98 குழந்தைகளும் உட்பட 1528 பேர் பாதுகாப்புப் படைகளால் சுட்டுகொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 419 பேர் அசாம் ரைபிள்ஸ் படையாலும், 481 பேர் மணிப்பூர் காவல்துறை மற்றும் மத்தியப் பாதுகாப்புக் கூட்டுப்படையினராலும் கொல்லப்பட்டுள்ளனர்.

இவை கொடூரமான புள்ளிவிவரங்கள், ஆனால் அவை துப்பாக்கியின் நிழலில் வளர்ந்துவரும் தலைமுறை முழுவதையும் சூழ்ந்துள்ள மனிதத்துயரத்தை கூறுவதில்லை. மணிப்பூரில் பள்ளிக் குழைந்தைகள் கூட ஆயுதப்படைகளின் கொடுமைகளை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது ஒரு வழக்கமான காட்சியாகும்.

மணிப்பூர் மலைப்பகுதி அரசில் நிகழ்ந்துகொண்டிருக்கும் கிளர்ச்சிகளைக் காரணம் காட்டி ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற அரசாங்கம் மறுக்கிறது. அதன் வாதப்படி, அந்த மாநிலத்தில் 15 போராளிக் குழுக்கள் இயங்கி வருகின்றன. 2007க்கும் 2011க்கும் இடையில் போராளிக் குழுக்கள் தொடர்பான வன்முறையில் 1500 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 1100 பேர் போராளிகள், 400 பேர் குடிமக்கள். இந்த வாதமே ஒரு எளிய கேள்வியை முன்வைக்கிறது. முழுச் சுதந்திரமும் அளிக்கப்பட்டுள்ள படையால் ஐம்பது ஆண்டுகளாக கிளர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் அந்தச் சட்டத்திற்கு என்ன நியாயம் இருக்கிறது? அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களின் படியே சட்டம் நடப்பில் இருக்கும்போதே கிளர்ச்சி அதிகரித்துள்ளது என்று கூட வாதிடலாம். ஏனென்றால் ஆயுதப்படைகள் சட்டப்பாதுகாப்புடன் நடத்தும் அத்துமீறல்கள், மக்கள் அன்னியமாகி ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கின்றன.

இந்தியாவின் மொத்தப் பரப்பில் 7 விழுக்காட்டையும் மக்கள்தொகையில் 3.7 விழுக்காட்டையும் கொண்டுள்ள வடகிழக்கு மாநிலங்கள் பல நாடுகளையும் விடப் பெரியவை. ஆனால் எந்தக் குறிப்பிடத்தக்க வளர்ச்சியும் இல்லாதவை. ஒருவர் விருப்பு வெறுப்பின்றி இதைப்பார்த்தால் இந்தியாவின் ஆயுதப்படை வலிமையால் நிர்வகிக்கப்படும் காலனிகளாக இருப்பதாக உணராமல் இருக்க முடியாது. அரசியல் சாசனம் அவசரநிலைப் பிரிவுகளை வழங்குகின்றன, ஆனால் அவை குறுகிய காலமே இருந்தன. அரசாங்கமும் அதன் படைநிறுவனமும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் தொடர்வதற்கு முன்வைக்கும் காரணங்கள் 1942 ஆம் ஆண்டு இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசை காப்பதற்கு இயற்றப்பட்ட சட்டத்தின் காரணங்களாகவே இருப்பது வியப்பாக இருக்கும்.

அதே தர்க்கம் தான் இந்தியாவில் எதிர்ப்பில் ஈடுபடும் மக்களுக்கும் பொருந்துவதாக இருக்கிறது. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்புச்) சட்டம், சட்டிஸ்கர் சிறப்புப் பொதுப் பாதுகாப்புச் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம், மற்றும் தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள், தேசத்துரோகச் சட்டம் போன்றவை நாம் ஜனநாயகம் என்று கூறிக்கொள்வதைத் தொடர்ந்து கேலிக்குரியதாக்கி வருகின்றன. பெரும்பான்மை மக்கள் மோசமான வறுமையிலும் அதிகாரமற்றும் உழன்றுகொண்டிருப்பதற்கும் ஒரு மிகச்சிறிய சிறுபான்மை தீயவழியில் சேர்க்கப்பட்ட பணத்திலும் அதிகாரத்திலும் திளைத்துக் கொண்டிருப்பதற்கும் இடையில், மக்களின் எதிர்ப்புக்கள் இயல்பான வெளிப்பாடாக இருக்கின்றன. விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவில், தொடக்கப் பத்தாண்டுகளில், ஆளும் வர்க்கங்களே இன்னும் தம்மைப் பலப்படுத்திக்கொண்டிராத போது, இந்த எதிர்ப்புக்கள் காலனிய நாகரீகத்துடன் அரசால் எதிர்கொள்ளப்படுகின்றன.

manipur

1970களின் மத்தியில், நெருக்கடிநிலை என்ற பெயரில் ஓர் அடக்குமுறை அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு சிறிதுகாலம் நீடித்த அரசியல் கொந்தளிப்பான நிலைக்குப் பிறகு, சித்தாந்தரீதியாகப் போதையூட்டப்பட்ட சமூக எதிர்ப்புக்களும், ஆட்சியாளர்களின் சட்டபூர்வ ஒடுக்குமுறைப் பண்புகளும் கொண்ட புதிய-தாராளவாத காலக்கட்டத்திற்குள் நாடு நுழைந்தது. 1985 ஆம் ஆண்டின் பயங்கரவாதம் மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் தடைச்சட்டம் (தடா) 2002 இல் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமாக (பொடா) வும், அதன் பிறகு, இந்தக் காலக்கட்டத்தில், 9/11 கட்டவிழ்த்துவிட்ட உலகளாவிய “பாதுகாப்பு அச்சத்தின்” உதவியுடன் 2004 இல் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டமாகவும் (உலாபா) கொண்டுவரப்பட்டது இந்தப் பின்னணியில் காணப்படவேண்டியதாகும்.

அது வெளிப்படுத்தப்படும் முறையால் மோசமானதாகக் கூறப்படும் மாவோயிச இயக்கம் அவ்வப்போது அரசே ஒப்புக்கொள்வது போல, சாராம்சத்தில் ஒரு பொதுமக்கள் எதிர்ப்பாகும். ஆனால் “மிகப்பெரிய உள்நாட்டு அச்சுறுத்தல்” என்று குறிப்பிட்டு அரசாங்கம் அதைக் குற்றச்செயலாக்கி, அதற்கு எதிராக முழுவீச்சில் ஒரு யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இன்று, அது குடியுரிமைச் செயல்வீரர்களை மாவோயிச ஆதரவாளர்கள் என்று கூறி நசுக்குவதற்கு அதே செயலைச் செய்கிறது. நியாயமான முறையில் செயல்படுத்தப்பட்டால், சாதாரண சட்டங்களே எந்த ஒரு வகையான குற்றவியல் நடவடிகையையும் சமாளிக்கும் திறனுள்ளவையே என்று இந்தச் செயல்வீரர்களும், பல சட்ட அறிஞர்களும் கூட கூறுகின்றனர். கொடூரமான நடைமுறைகளைக் கொண்ட அசாதாரணச் சட்டங்கள் பாதுகாப்பு குறித்து ஒரு தவறான கருத்தை உருவாக்குகின்றன. ஆனால் அவை உண்மையில் சரியாகச் செயல்படுகின்றன என்பதற்கு எந்த அனுபவ உதாரணமும் இல்லை. அவை அப்பாவி மக்களுக்கு எதிராக ஒடுக்குமுறைக் கருவிகளாக மாறுபாட்டுக்கிடமற்ற வகையில் இயக்கப்படுகின்றன, மேலும் அதன்மூலம் தீர்க்கப்படக்கூடியவை என்று கருதப்படும் பிரச்சனையே தீவிரப்படுத்தப்படுகிறது. அது மக்களை தீவிரவாதத்திற்கு நிர்ப்பந்திக்கும் அரசின் அநீதியாக உணரப்படுகிறது. ஆளும்வர்க்கங்களின் இந்த அச்சுறுத்தும் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்துவதை, தொலைநோக்கின்றி புறக்கணிப்பதாக இருக்கிறது.

ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு எதிரான, ஐரோம் சர்மிளா மற்றும் மணிப்பூர் மக்களின் நீண்ட நெடிய போராட்டம் உறுதியாக நமது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கைகள் மீது அழிக்கமுடியாத அடையாளத்தை விட்டுச் செல்லும். அரசியல் சட்டத்தின் வரையறைக்குள் ஐரோம் சர்மிளாவுடைய போராட்டத்தை விட மிகவும் தீவிரமான எதிர்ப்பை இந்த நாட்டின் ஒரு சாதாரணக் குடிமகன் எப்படிக் காட்டமுடியும்? 2004 இல், தங்கியம் மனோரமா வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மணிப்பூரின் முன்னணிப் பெண்கள், படைத்தலைமை அலுவலகத்திற்கு முன்பு சென்று, தங்கள் ஆடைகளை அவிழ்த்து “இந்தியப் படையே எங்களை வன்புணர்ச்சி செய்!” என்று கூக்குரலிடுவதை விடத் தீவிரமான பொதுமக்கள் எதிர்ப்பு எதுவும் இருக்கமுடியுமா? அண்ணா ஹாசாரேவுடைய போராட்டத்தை விட ஒரு அப்பாவித்தனமான போராட்டம் இருக்க முடியுமா? ஆனால் அதிகாரபோதை கொண்ட அரசாங்கத்தை இவை ஒன்றாலும் அசைக்க முடியவில்லை. அதற்கு மாறாக, அரசாங்கம் இந்த எதிர்ப்புக்கள் அனைத்தையும் பல்வேறுவகையில் குற்றச்செயல்களாக ஆக்கியிருக்கிறது.

நாடெங்கும் எண்ணற்ற போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன; அண்மையில் மராட்டிய மாநிலம் ஜைதாபூரிலும் தமிழ்நாட்டில் கூடங்குளத்திலும் அணுமின் எதிர்ப்புப் போராட்டங்கள்; கைர்லாஞ்சி கொலைகளுக்குப் பிறகு தலித் மக்களின் தன்னெழுச்சியான போராடங்கள்; கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் நடந்துவரும் போராட்டங்கள்; ஊழலுக்கும் கருப்புப் பணத்திற்கும் எதிரான போராட்டங்கள்; மனித உரிமை மீறல்களுக்கு எதிரான போராட்டங்கள் அவற்றில் ஒரு சில ஆகும். இவை அனைத்துமே தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் ஆகும். அவை அனைத்துமே குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ளன. அவற்றில் பல கொடூரமான தாக்குதல்களாக இருக்கின்றன. நாட்டில் எந்த ஜனநாயக நடவடிக்கைக்கும் இடமில்லை என்பது நுட்பமாகச் சொல்லப்படுகிறது. அரசியல் வர்க்கத்தின் செருக்கு மக்கள் தேர்தல்கள் மூலமாக தீர்வுகாண்பதைக் கூட எதிர்க்கும் நிலையை அடைந்துவிட்டது. தேர்தல்கள் பணம் மற்றும் அரம்பத்தனத்தின் ஆட்டக்களமாகிவிட்டன. இந்த ஆட்டங்கள் மக்களுக்கு எட்டாத அளவுக்குச் சென்றுவிட்டன.

அடுத்த தேர்தல் வரை மக்களைச் சுரண்டுவதற்கு அதிகாரம் பெற்றுவிட்டவர்கள் போல நடந்துகொள்ளும் மக்கள் பிரதிநிதிகளின் ஒடுக்குமுறையை மக்கள் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, எளிய மக்களுக்கு இந்த அமைப்பு என்ன நம்பிக்கையை வைத்திருக்கிறது? கட்சிமாறும் ஆட்டமும் அரசியல் வர்க்கத்தினரால் “நிலையானவை”யாகச் செய்யப்பட்டுவிட்டன. வெளியிலிருந்து அதற்குள் யாரும் வந்துவிடுவதை அது ஏறத்தாழத் தடையே செய்துவிட்டது. அரசியல் வர்க்கத்தினரின் உறுப்பினர்களின் பண்பை அம்பலப்படுத்தும் அவர்களுடைய சொத்து மற்றும் குற்றவியல் வழக்குகளைப் பற்றிய தரவுகளை ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் ஆவணப் படுத்தியுள்ளது.

ஒட்டுமொத்த ஆளும் வர்க்கமும் மக்களுக்கு எதிராகத் தங்களைப் பலப்படுத்திக் கொண்டுள்ளது. மக்களிடம் நம்பிக்கையைப் பெறுவதற்காக அதன் அணிகளுக்குள் வேறுபாடுகளை எடுத்துக்காட்டலாம், ஆனால் அதன் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றே போல்வர் என்பது தான் உண்மையாக இருக்கிறது. உண்மையில், மக்களுக்கு ஜனநாயக மாற்றோ நம்பிக்கையோ விட்டுவைக்கப்படவில்லை, இந்தத் “தேர்ந்துகொள்ளும் வாய்ப்பற்ற,” நம்பிக்கையற்ற, நிலைமை தவிர்க்க முடியாமல் மக்களை அரசியல்சட்டவழியிலல்லாத முறைமைகளை நோக்கித் தள்ளிவிட்டு, அம்பேகர் எச்சரித்ததைப் போல, அரசியலமைப்பைத் தோற்றுவித்தவர்கள் மிகுந்த உழைப்பைச் செலுத்திக் கட்டியமைத்த ஜனநாயகக் கட்டமைப்பைத் தகர்த்தெறிவதற்கே இட்டுச் செல்லும்.

தமிழில்: வெண்மணி அரிநரன்
நன்றி: எகனாமிக் அன்ட் பொலிடிகல் வீக்லி

Pin It