கணவன் இறந்தபின் அக்கணவனைப் பிரிந்து வாழ விருப்ப மின்மை கருதியோ அல்லது அப்படி வாழக்கூடாது என்கிற சமூக வழக்கம் கருதியோ, அக்கணவனை எரியூட்டும் இடத்தில் மனைவியும் அந்த எரியூட்டலில் உயிரோடு இறங்கி தன்னையும் மாய்த்துக் கொள்ளும் வழக்கமே சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கமாக இருந்துள்ளது என்பதை வரலாற்றில் பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களில் படித்திருப்போம். இந்தியா முழுக்கவுமுள்ள இந்து சமூகத்தில், பண்டைய தமிழ்ச் சமூகத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் இருந்ததாக அறியப்பட்டாலும் இது இராஜஸ்தான் மாநிலத்தில் இராஜபுத்திர சமூகத்திலேயே அதிகம் பின்பற்றப் பட்டு வந்தது.

இந்தியாவில் மொகலாயர் ஆட்சியின்போது அக்பர் இந்த சதி வழக்கத்தை ஒழிக்க முயற்சிகள் மேற்கொண்டதை நாம் அறிவோம். காலனி ஆதிக்க வெள்ளை ஆட்சியும், 1829இல் சதி ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வந்து சட்டப்பூர்வமாக இதைத் தடை செய்தது.

எனினும் மக்களிடையே பண்பாடு, பழக்கவழக்கங்கள் என்பதன் பேரால் மக்களிடையே நிலவும் எந்தச் சடங்கும் வெறும் சட்டத்தால் மட்டுமே தீர்க்க கூடியதல்ல. மாறாக, அது சமூக விழிப்புணர்ச்சி யோடும் சம்பந்தப்பட்டது என்பது வெளிப்படை.

எனவே, இந்தச் சதி வழக்கம் சட்டபூர்வமாக ஒழிக்கப்பட் டிருந்தாலும், சுதந்திர இந்தியாவிலும் இது இங்கொன்றும் அங் கொன்றுமாக இலைமறை காய் மறையாக நடந்து கொண்டே வந்திருக்கிறது. எனினும், இதன் உச்சம் போல ஒரு இருபத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் 1987ஆம் ஆண்டு இராஜஸ்தான் மாநிலம் தியோராலா என்னும் கிராமத்தில் ரூப் கன்வர் என்னும் ஒரு படித்த இளம் பெண் தன் கணவன் இறக்க, அதற்காக எரியூட்டப்பட்ட தீயில் தானும் இறங்கித் தன்னை மாய்த்துக் கொள்ள குடும்பத்தாரும், உற்றார் உறவினர்களும் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இதை வரவேற்று ஆரவாரம் செய்து, மந்திர உச்சாடனங்களுடன் அவளின் செயலை அங்கீகரித்ததுடன் அவள் எரியுண்ட இடத்தில் ஒரு கோயிலையும் கட்டிவிட்டனர்.

நியாயமாய் 1829 சட்டப்படி இந்தப் பெண் செய்தது தவறு. சட்டவிரோதம் என்பதால், மறைந்துபோன பெண்ணை விடுத்து, சுற்றி நின்ற இதை ஆதரித்த, இதற்கு ஊக்கம் அளித்த இதைச் சிறப்பித்துப் போற்றிய உற்றார் உறவினர் மீது அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் எடுக்கவில்லை. மாறாக வேறொரு புதிய சட்டத்தைக் கொண்டுவந்தது.

காரணம், ரூப்கன்வரின் இந்த உடன்கட்டை ஏறிய செயலை, நாடு முழுக்க உள்ள சனநாயக சக்திகள், மனித உரிமை ஆர்வலர்கள், பெண்ணுரிமைப் போராளிகள் பலரும் எதிர்த்துக் கண்டனக் குரல் எழுப்பிய அதேவேளை, சனாதனிகளும், மத அடிப்படைவாதிகளும், ரூப்கன்வரின் செயலை ஆதரித்தும் வரவேற்றும் கொண்டாட, பழமைவாத சக்திகளும் மீண்டும் புத்துயிர் பெற்று எழுந்தன. வாக்கு வங்கி அரசியல் நடத்தும் அரசியல் கட்சிகள், ஆட்சியாளர்கள், அச்சக்திகளைப் பகைத்துக் கொள்ள விரும்பாத நிலையில் அரசு சட்டப்படி நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து பல்வேறு ஓட்டைகளுடன் கூடிய ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்து பழமைவாதிகளைத் திருப்திப் படுத்தியது.

அதேவேளை உச்சநீதிமன்றமும் இதை அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என இதைக் கண்டிக்காமல், பழக்கம், மரபு என்பதன் பேரால், கோயிலுக்குள்ளே வழிபாடு செய்யவும், சதியைப் புகழ்ந்து பாடவும் அனுமதி அளித்தது.

மணக்கொடைத் தடைச் சட்டம்

சுதந்திர இந்தியாவில் 1947க்குப் பின் 14 ஆண்டுகள் கழித்து 1961இல் மணக்கொடை தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. எனினும் அது செயலற்ற தாள் வடிவிலான சட்டமாகவே இருந்து வந்தது. அதன்பின் அதைச் சீர்மைப்படுத்தி செவ்வனே செயல்படுத்தும் நோக்கில் 23 ஆண்டுகள் கழித்து 1984 ஆம் ஆண்டு மற்றும் 1986ஆம் ஆண்டில் அதில் பல திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இத்துடன் இதன் மீதான உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகளில் 498-ஏ மற்றும் 304 -பி ஆகியன புதியதாகச் சேர்க்கப்பட்டன. இத்துடன் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 174 (3) மற்றும் 176, இத்துடன் இந்திய சாட்சியங்கள் சட்டம் பிரிவு 113-ஏ, 113-பி ஆகியவற்றுள் சேர்க்கைகள் மற்றும் திருத்தங்கள் செய்யப்பட்டு இச்சட்டப் பிரிவுகள் மேலும் கடுமையாக்கப்பட்டன.

இதன்படி மணக்கொடை அளிப்பதும், பெறுவதும் இரண்டுமே குற்றச் செயல். இத்துடன் இது புலனறி (ஊடிபnணையடெந) குற்றச் செயலாகவும் பிணை மறுப்புக் குற்றச் செயலாகவும் ஆக்கப்பட்டது. தவிர, கணவனது அல்லது கணவனது உறவினர்களின் கொடுமை தாளாமல் பெண்கள் தற்கொலைக் குள்ளாகும் நிலைக்குத் தள்ளப்படுவது கடும் தண்டனைக்குரியதாக்கப் பட்டது. இத்துடன் மணமாகி 7 ஆண்டுகளுக்குள் ஒரு பெண் இறக்க நேரிட்டால், அந்த மரணத்தை இயல்பான மரணமாகக் கருதாது அந்த இறப்பில் சந்தேகம் கொண்டு அதன்மேல் ஆய்வு நடத்தி, அது இயற் கையான மரணமாக இல்லாதிருப்பின் அதற்குக் காரணமானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தண்டனை வழங்கவும் வழி வகுத்தது.

ஆனால் சட்டப்பிரிவுகள் இவ்வளவு கடுமையாக இருந்தபோதிலும், சம்பந்தப்பட்ட பெண்கள் மற்றும் உறவினர்களுக்கு இதுசார்ந்து போதுமான விழிப்பின்மை, குடும்ப மானம், கௌரவம், சமூக நோக்கில் தாங்கள் தாழ்வாகவோ, இழிவாகவோ பார்க்கப்படுவோமோ என்கிற அச்சம் இவை எல்லாவற்றையும் கடந்து புகார் தரப் போனாலும், வழக்குப் பதிவு செய்வதில், மேல் நடவடிக்கை எடுப்பதில் காவல் துறையின் மெத்தனம், சட்ட சடங்குகள், அதை நிறைவேற்றி முடிப்பதற்கான நுட்பக் கூறுகள், அதிலுள்ள ஓட்டைகள், நீதிமன்றங்களின் பழமைவாத அணுகுமுறை இவை எல்லாமுமாக இச்சட்டம் அதன் முழுமையான பயனை எய்தவிடாமல் தடையாக இருக்கின்றன.

மணம் கடந்த உறவு

ஆங்கிலத்தில் ஹனரடவநசல என்பதைப் பிறன்மனை நோக்கல், அடுத்தவர் மனைவியோடு உறவு கொள்ளுதல் என்பதாகச் சிலர் பொருள் கொள்ளுகிறார்கள். இது இதன் முழுமையான பொருளை உணர்த்துவதாகக் கொள்ள முடியாது.

மணவாழ்வில் இருக்கும் ஆணோ அல்லது பெண்ணோ அதாவது கணவனோ அல்லது மனைவியோ தன் மண உறவுக்கு அப்பால் இன்னொரு ஆண் அல்லது பெண்ணுடன் அவர் மணமானவரோ, அல்லாதவரோ, துணையிழந்தவரோ, அல்லாதவரோ எவரானாலும் அவரோடு பாலுறவு கொள்வதையே இந்த ஹனரடவநசல என்னும் சொல் அர்த்தப்படுத்துகிறது. எனவே இதை மணம் கடந்த உறவு என அழைப்பதே பொருத்தம்.

இதற்கெனத் தனியாகச் சிறப்புச் சட்டம் ஏதும் இல்லாவிட்டாலும் இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 497 இதனைக் குற்றச்செயல் ஆக்குகிறது. சட்டப்படி இது ஆண் செய்தாலும், பெண் செய்தாலும் யார் செய்தாலும் குற்றமே. ஆனால் இதில் உள்ள வேடிக்கை என்னவெனில், தன் மனைவியோடு இச்செயலில் ஈடுபடும் ஒரு ஆணைக் கணவன் கைது செய்யலாம். அதாவது கையும் களவுமாகப் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் தன் கணவனோடு இருக்கும் ஒரு பெண்ணைக் கையும் களவுமாகப் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்கக் கோரும் உரிமை மனைவிக்கு இல்லை.

அதாவது ஒரு பெண்ணே, இன்னொரு பெண்ணைக் குற்றவாளி யாக்குவதை விரும்பாது, ஆணுக்கு மட்டுமே தண்டனை வழங்குவது போல் தோற்றமளிக்கும் இச்சட்டம் குற்றச் செயலில் ஈடுபடும் ஆணைக் கைது செய்யும் அதிகாரத்தைக் கணவனுக்கு வழங்குவது போல் குற்றச் செயலில் ஈடுபடும் பெண்ணைக் கைது செய்யும் அதிகாரத்தைப் பெண்ணுக்கு வழங்கவில்லை என்பது நோக்கத்தக்கது.

அதோடு மட்டுமல்ல, ஒரு ஆண் மண உறவு கடந்து ஒரு பெண்ணோடு தொடர்பு கொள்கிறான் என்றால், அந்தப் பெண் திருமணமாகாத பெண்ணாயிருந்தால் அது குற்றச் செயல் அல்ல.

அப்படியானால், ஒரு பெண் மண உறவுக்கு அப்பால் உறவு கொள்ளும் ஆண், திருமணமாகாதவராக இருந்தால் அதுவும் குற்றச் செயல் அல்ல என்று சொல்ல வேண்டுமல்லவா? ஆனால் சட்டம், நீதி மன்றங்கள் அப்படிச் சொல்லவில்லை.

ஆக, பெண்ணுரிமை, பெண் சமத்துவம் என்கிற கருத்தாக்கங்களும், விழிப்புணர்வும் ஏற்படுத்துவதற்கு முன்னால் அதாவது நூறு, நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப் பட்ட சட்டங்கள் அனைத்தும் பெருமளவும் ஆணை மையப்படுத்தி, பெண்ணை ஆணுக்குத் துணையாக, ஆணின் பயன்பாட்டுக்குரிய கருவியாக, நுகர்பொருளாக மட்டுமே ஆக்கி வைத்துள்ளதே தவிர, பெண்ணையும் தனித்த ஒரு உயிரியாக, அவளுக்கும் தனித்துவம், ஆசாபாசங்கள், சுதந்திரம், சனநாயகம் உண்டு. அதை மதிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கில் இல்லை என்பது முக்கியமானது.

அது மட்டுமல்ல, பெண்களின் பாதுகாப்புக்கென்று நவீன காலத்தில் சில சட்டங்கள் கொண்டு வரப்பட்ட போதும், அவை பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கான நிவாரண நோக்கில் கொண்டு வரப்பட்ட சட்டங்களாகவே இருக்கின்றனவே தவிர, பெண்ணுக்கும் ஆணைப் போலச் சம உரிமைகள் உண்டு. எனவே, அவற்றை நிலை நாட்டவேண்டும் என்கிற நோக்கில் கொண்டு வரப்பட்டவையாக இலலை. இன்றும் மதம் சார்ந்து, குறிப்பாகச் சிறுபான்மை மதம் சார்ந்து நிலவும் பல மாறாத சட்டங்களை வைத்து நோக்க இதைப் புரிந்து கொள்ளலாம்.

சிறுபான்மை மதச் சட்டங்கள்

இந்து மதம் சார்ந்து இளம் வயது திருமண வயதை உயர்த்தல், மணவிலக்கு கோரும் உரிமை பெறல், கைம்பெண் மறுமணம் செய்து கொள்ள உரிமை அளித்தல் போன்று அவ்வப்போது பல சட்டங்கள் இயற்றப்பட்டு, பெண்ணுரிமை காக்க முற்பட்டாலும், பழமைவாதப் போக்குகளைப் பகைத்து அச்சக்திகளின் வாக்கு வங்கியை இழக்க விரும்பாமல் அதனோடு சதி போன்ற பழக்கங்களில் அரசும் நிர் வாகமும் சமரசம் செய்து கொண்டு வருகிறது என்று பார்த்தோ மில்லையா?

அதைப்போல, இந்து மதத்தில் உள்ள அளவுக்குக் கூட எந்தச் சிறிய மாற்றங்களும் செய்ய முடியாத அளவுக்குச் சிறுபான்மை மதங்களின் பிடியில் சிக்கி, கொடுமைக்குள்ளாகி வருகிறார்கள் அம்மதங்களில் உள்ள பல பெண்கள். ஆனால் இதுவே தங்கள் மத உரிமை எனப் பிடிவாதம் செய்து சிறுபான்மை உரிமை என்பதன் பேரால் அம் மதங்களில் உள்ள பெண்களின் உரிமைகளை, மனித உரிமைகளை ஒடுக்கி வருகின்றன மத அமைப்புகள். அதே வாக்கு வங்கி நோக்கில் அரசும் நிர்வாகமும் இவற்றை எந்த மாற்றத்துக்கும் உட்படுத்தாமல் நூறு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட சட்டத்தையே இன்னமும் வைத்துக்கொண்டு, சிறுபான்மை மதங்கள் தங்கள் மதத்தில் உள்ள பெண்களுக்கு இழைக்கும் மனிதக் கொடுமைகளைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன. அல்லது அவற்றுக்குத் துணை போய்க் கொண்டிருக்கின்றன.

முதலில் இசுலாம். இசுலாமியர்களைப் பொறுத்தமட்டில் இவர்களது திருமண உறவுகள் சார்ந்து நாட்டில் மூன்று சட்டங்களும், மூன்றாவது சட்டத்திற் கான விதிமுறைகளும் நடப்பில் உள்ளன.

1. ஆரளடiஅ ஞநசளடியேட டுயற ளுhயசயைவ ஹயீயீடiஉயவiடிn ஹஉவ, 1937

2. னுளைளடிடரவiடிn டிக ஆரளடiஅ ஆயசசயைபநள ஹஉவ, 1939

3. ஆரளடiஅ றுடிஅநn (ஞசடிவநஉவiடிn டிக சுiபாவள யனே னுiஎடிசஉந) ஹஉவ, 1986

4. ஆரளடiஅ றுடிஅநn (ஞசடிவநஉவiடிn டிக சுiபாவள யனே னுiஎடிசஉந) சுரடநள, 1986

இசுலாமியர்களைப் பொறுத்தவரை அவர்கள் இந்து மதவாதிகள் போல் திருமணத்தை ஒரு புனிதச் சடங்காகக் கருதுவதில்லை. மாறாக அதை ஒரு குடிமை ஒப்பந்தம் போலவே கருதுகிறார்கள். அதாவது ஒரு ஆணும் பெண்ணும் மணவாழ்வு வாழ ஒப்பந்தம் செய்து மணவாழ்வை நடத்துகிறார்கள். இதில் பிணக்கு ஏற்படும்போது பிரிந்து விடுகிறார்கள்.

மேலோட்டமாகப் பார்ப்பதற்கு இது நல்லதுதானே, நன்றாகத் தானே இருக்கிறது, இது சுதந்திரமான வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிப்பதாகத் தானே இருக்கிறது என்று தோன்றலாம். ஆனால் அது உண்மையல்ல. சுதந்திரம் உள்ளதுதான். ஆனால் அது இரு பாலருக்கும் சமமானது அல்ல. ஆணுக்கு மட்டுமே சுதந்திரம் அளிப்பது. பெண்ணுக்கு அதை மறுப்பது, அந்த வகையில் சமத்துவமற்றது.

முதலாவதாக இசுலாமிய மக்கள் வாழ்வில் திருமணம் என்று மட்டும் இல்லை. அவர்களது வாழ்வியலின் எல்லா அம்சங்களையும் இசுலாமிய மதச் சட்டம், ஷாரியத் சட்டமே கட்டுப்படுத்துகிறது. அந்த ஷாரியத் சட்டத்தில், சொல்லப்பட்டவற்றை நடைமுறைப் படுத்தவும், உத்திரவாதப் படுத்தவும்தான் அரசு இசுலாமிய திருமணச் சட்டம் கொண்டு வந்ததே தவிர, மற்றபடி அந்த ஷாரியத் சட்டத்தைத் தாண்டி இந்தச் சட்டத்தில் வேறு எதுவும் புதிதாக இல்லை. இருக்கவும் கூடாது. இருந்தாலும் அவர்கள் ஏற்கமாட்டார்கள். அந்த அளவு முழுக்க முழுக்க மதம் சார்ந்து நிலவுவதே இசுலாமியச் சட்டங்கள்.

இந்தச் சட்டப்படி மற்ற நாடுகளில் எப்படியோ இந்தியாவில் உள்ள இசுலாமிய ஆண்கள் ஒவ்வொருவரும் நான்கு மனைவி வரை வைத்துக் கொள்ளலாம்.

நடைமுறையில் யாரும் அப்படி வைத்துக் கொள்வதில்லை, தாக்குப் பிடிக்காது, கட்டுப்படியாகாது என்பது வேறு செய்தி. ஆனால் சட்டம் அதை அனுமதிக்கிறது. வாய்ப்பு, வசதி உள்ளவர்களை அப்படி வாழ விரும்புகிறவர்களை அது கட்டுப்படுத்தாது என்பது முக்கியம்.

ஆனால் ஆணுக்கு வழங்கப்படும் இந்த சுதந்திரம் பெண்ணுக்கு வழங்கப்படுகிறதா என்றால் இல்லை. பெண் ஒரு கணவனோடு தான் வாழ வேண்டும்.

அதேபோல மண விலக்குக் கோரும் உரிமை பெண்ணுக்கு இல்லை. ஆணுக்கு மட்டுமே உண்டு. அதுவும் எப்படி? கணவன் மனைவியைப் பார்த்து மூன்று முறை ‘தலாக்’ சொன்னால் போதும். அதுவே மண விலக்கு செய்ததாகப் பொருள்.

இப்படி மணவிலக்கு செய்யும் பெண்களுக்கு ‘இக்தாத்’ எனச் சொல்லப்படும் 3 மாத காலம் வரைக்கும் கணவன் மனைவிக்கு, மணவிலக்கு வாழ்வூதியம் தந்தால் போதும். அப்புறம் தர வேண்டியதில்லை.

ஒரு வேளை மணவிலக்கு செய்யும் போது மனைவி கருத்தரித் திருந்தால் பேறு காலம் வரைக்கும் வாழ்வூதியம் தந்தால் போதும். அதற்குப் பிறகு தரவேண்டும் என்று கட்டாயமில்லை.

ஷாரியத் சட்டப்படி மண உறவு சார்ந்து பெண்களுக்கு உள்ள நிலை இதுதான் என்ற போதிலும், பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125ஐ வாய்ப்பாக வைத்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் அளிக்க கணவனுக்கு ஆணையிடுகின்றன நீதிமன்றங்கள்.

ஆனால் இதைக் கூட ஏற்கமாட்டோம், ஷாரியத் சட்டத்திற்கு மட்டுமே உட்பட்ட எங்களை, இ.த.சட்டத்தை வைத்தெல்லாம் கட்டுப்படுத்தக் கூடாது, தீர்ப்பு வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் மதப் பழமைவாதிகள். அரசும் அதற்கு அடிபணிய அவர்களோடு சமரசம் செய்து கொள்கிறது.

இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன் நாடு முழுவதும் சர்ச்சையான இசுலாமியப் பெண் ஷா பானு வழக்கு. அஹ்மத்கான் என்பவருக்கு வாழ்க்கைப்பட்டு அவருக்கு மனைவி யானவர் ஷாபானு. அவர் ஷாபானுவை மூன்று முறை ‘தலாக்’ சொல்லி மண விலக்கு செய்து விடுகிறார். மூன்று மாதம் மட்டுமே வாழ்வூதியம் தந்து பின் அதை நிறுத்தி விடுகிறார். இதை எதிர்த்து ஷாபானு நீதிமன்றம் செல்கிறார்.

ஷாபானு, “மணவிலக்கு செய்யப்பட்ட ஒரு இசுலாமிய மனைவிக்கு மறுமணம் செய்து கொள்ளும் வரை வாழ்வூதியம் தரவேண்டும், நான் இன்னும் மறுமணம் செய்து கொள்ளாத நிலையில் அஹ்மத்கான் எனக்கு வாழ்வூதியம் தரவேண்டும்” என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். வழக்கை ஏற்ற நீதிபதி ஷாபானுவுக்கு அஹ்மத்கான் வாழ்வூதியம் தரவேண்டும் என்று தீர்ப்பளித்ததுடன், இதுபோன்ற அபலைகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ‘பொது குடிமைச் சட்டம்’ கொண்டு வரப்பட வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.

அவ்வளவுதான். சனாதன இசுலாமியர்கள் திரண்டெழுந்து இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஷாரியத் சட்டத்திற்கு உட்பட்ட எங்களை இ.த.ச. கட்டுப்படுத்துவதா எனப் போராட்டம் நடத்து கிறார்கள்.

வழக்கம்போல வாக்கு வங்கி அரசியல் நடத்தும் ஆட்சியாளர்கள் வீணாக இச்சக்திகளை எதிர்த்து ஏன் பகையைத் தேடிக் கொள்வானேன் என்று அந்தச் சனாதனிகளுக்கு அடி பணிந்து 1986இல் இசுலாமியர் மணவிலக்கு தொடர்பாகத் தனிச் சட்டத்தைப் பிறப்பித்து, கூடவே அதற்கான விதிகளையும் உருவாக்கி விடுகிறார்கள். அவைதான் நாம் மேலே மூன்றாவதாகக் குறிப்பிட்டுள்ள சட்டமும், அது சார்ந்த விதிகளும்.

சரி, அரசுதான் இப்படி இருக்கிறதே என்று இப்படிப்பட்ட சிக்கல்களில் மனித உரிமைகளின் அடிப்படை காக்க, அரசமைப்புச் சட்ட உரிமைகளைப் பாதுகாக்க உச்சநீதி மன்றமாவது ஏதாவது செய்கிறதா என்றால் ஏதோ அரிதாகச் சில நீதிபதிகள் சற்று முற் போக்கான தீர்ப்புகளை வழங்குகிறார்கள் என்பதைத் தவிர, மற்றபடி பலரும் பழைய கட்டமைப்பைப் பாதுகாப்பதிலேயே அதன் வரம்புக்குட்பட்டே தீர்ப்பளிக்கிறார்கள்.

அரசு கொண்டு வந்த 1986 சட்டப்படி ‘இக்தாத்’ காலம் முடிந்த பெண்ணுக்குக் கணவன் தொடர்ந்து வாழ்வுத் தொகை வழங்க வேண்டும் என்பதில்லை. அப்பெண் மறுமணம் செய்து கொள்ளா மலிருந்தால், தான் பொருளீட்டி வாழ, தன் வாழ்க்கைக்கு வேறு ஏதும் உத்திரவாதம் இல்லாமலிருந்தால், அப்பெண் தனக்குப் பிறகான தன் சொத்தை அனுபவிக்க இருக்கும் வாரிசுகளிடம் - முதலில் தன் பிள்ளைகளிடம், அடுத்துத் தன் பெற்றோர்களிடம், அடுத்து தன் உறவினர்களிடம் - கோர வேண்டும். அப்படி யாரும் அவருக்கு இல்லையென்றால் வக்ஃப் வாரியத் திடம்தான் கோரவேண்டும். இப்படி இசுலாமியப் பெண்களைப் பிச்சைக்காரிகள் போல் ஆக்கி வைத்திருக்கிறது இச்சட்டம். எனினும் வரும் வழக்கின் தன்மையைப் பொறுத்தும், நீதிபதிகளின் அணுகுமுறையைப் பொறுத்தும், இச்சட்டத்தைத் தாண்டி பாதிக்கப்பட்டஇசுலாமியப் பெண்களுக்கு நிவாரணம் அளித்து வருகின்றன சில நீதிமன்றத் தீர்ப்புகள். 

கிறித்துவம்

கிறித்துவ மதம் சார்ந்த திருமண உறவுகள் குறித்து நடப்பில் உள்ள சட்டங்கள் கீழ் வருமாறு :

1.    னுiஎடிசஉந ஹஉவ 1869

2.    ஐனேயைn ஊhசளைவயைn ஆயசசயைபந ஹஉவ 1872

3.    ஆயசசயைபநள ஏயடனையவiடிn ஹஉவ 1892

இச்சட்டங்கள் அனைத்தும், இந்திய சுதந்திரத்திற்குச் சுமார் 50க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டவை. இந்தியா சுதந்திரம் பெற்று அதற்கென தனி அரசமைப்புச் சட்டம் உரு வாக்கப்பட்டு, 1950 முதல் இந்தியா குடியரசாகப் பிரகடனம் செய்யப் பட்ட பிறகும், மாறியுள்ள சமூக அமைப்புக்கும், இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் பாதுகாப்பிற்கும் மேற்கண்டுள்ள சட்டங்கள் பொருத்தமானவை தாமா, அல்லவா என்கிற ஆய்வுகள் ஏதும் இன்றி சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு உரு வாக்கப்பட்ட அதே சட்டங்களே இன்றும் நடப்பில் இருந்து வருகின்றன.

அரசும், நிர்வாகமும் இதில் ஏதும் மாற்றங்கள் செய்யாததற்குக் காரணம் மதவாதிகளின் மனதைப் புண்படுத்தி வீணாக அவர்கள் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொள்வானேன், வீணாக அவர்களின் வாக்கு வங்கியை இழப்பானேன் என்பதே முக்கிய காரணமாகின்றன. இது சார்ந்து வரும் வழக்குகளில், முற்போக்கான தீர்ப்புகள் வழங்கும் ஒரு சில நீதிபதிகள் தவிர மற்றவர்கள் அனைவரும் பெரும்பாலும் இதே பழமைவாத தீர்ப்புகளை வழங்கும் நிலையிலேயே உள்ளனர்.

ஆகவே, இந்த நிலையில் நாம் மீண்டும் வலியுறுத்த விரும்புவது, மனித சமூகத்தில், மனித குல வாழ்வில் நிலவும் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், பிற நடைமுறைகள் எதுவானாலும், அது மரபு, காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவது என்பதானாலும் சரி, அல்லது மதம் சார்ந்ததானாலும், எது சார்ந்ததானாலும் சரி, அது மனிதர் களுக்குள்ளே சமத்துவத்தையும், சனநாயகத்தையும் வழங்குகிறதா, தனிமனித சுதந்திரத்தையும் உரிமைகளையும் பாதுகாக்கிறதா என்கிற கோணத்திலேயே பார்த்து மதநம்பிக்கைகளின் பேரால் அவற்றை மதிப்பிட வேண்டும். அது தேவையா அல்லவா என்று முடிவு செய்ய வேண்டுமே தவிர, அதை விட்டு எந்தக் காரணம் கொண்டும் அவற்றை நியாயப்படுத்தக் கூடாது. மாறாக, எந்த மதம் சார்ந்ததானாலும் அது மனித சுதந்திரத்தை மறுக்கிறது, மனித உரிமைகளை மீறுகிறது என்றால் மக்கள் அதை எதிர்க்க வேண்டும். அதை நீக்கப் போராடவேண்டும்.

இந்த நோக்கில் எல்லா மதங்களிலும் உள்ள மனிதர்களை ஆண்கள், பெண்களை அவர்களது உரிமைகளைப் பாதுகாக்க பொது குடிமைச் சட்டம் என்பது நிச்சயம் தேவை. ஆணாகவோ, பெண் ணாகவோ பிறந்த ஒருவருக்கு இந்து மதம் என்றால் ஒரு நீதி, இசுலாம் என்றால் ஒரு நீதி, கிறித்துவம் என்றால் ஒரு நீதி என்றால் இது என்ன நியாயம்? இது எந்த வகையிலும் நியாயமல்ல. எந்த வகையிலும் ஏற்கத் தக்கதும் அல்ல.

இப்படிச் சொல்வதால் மதங்களைக் குறை சொல்வதாக, மத நம்பிக்கைகளைக் கேள்விக்குட்படுத்துவதாக யாரும் தவறாக அர்த்தம் செய்து கொள்ளக் கூடாது. அவரவர் மதம் சார்ந்து அவரவர் விரும்பும் இறைவனைத் தொழட்டும். அது சார்ந்த விழாக்கள், பண்டிகைகளைக் கொண்டாடட்டும், பிற பண்பாட்டு நடவடிக்கைகள் பழக்கவழக்கங் களையும் கடைப்பிடிக்கட்டும். அதை யாரும் வேண்டாம் என்று சொல்ல வில்லை. ஆனால் எந்த மதத்தில் இருந்தாலும் ஒரு சமூக வாழ்வில் எல்லா மனிதர்களுக்கும் பொதுவான, அனைத்து மனிதர்களுக்கும் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் வழங்குகிற நெறி முறைகளைச் சட்ட திட்டங்களைக் கடைப்பிடிக்கட்டும். அதற்குத் தன்னை உட்படுத்திக் கொள்ளட்டும் என்றுதான் சொல்கிறோம்.

சுருக்கமாக, மதம் சார்ந்த எந்த நடைமுறைகளானாலும் அது தன் மதத்திற்குள்ளாகவோ அல்லது அடுத்த மதத்தில் இருப்பவர்களதோ, எவரது சுதந்திரத்தையும் மறுப்பதாக, உரிமைகளை மறுப்பதாக இருந்து விடக்கூடாது என்கிற ஒரு அளவு கோலை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும், கடைப்பிடித்தால் போதும். பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்கிறோம்.

அந்த வகையில் கடந்த 100, 150 ஆண்டுகளில் இந்து மதத்தில் எவ்வளவோ சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பழமைவாதிகளின் எதிர்ப்பை மீறி அச்சீர்திருத்தங்கள், மாற்றங்கள் சட்டமாக்கப்பட்டு, தற்போது அவை நடைமுறையிலும் இருந்து வருகின்றன.

ஆனால் பிற மதங்களில் மட்டும் அவை அப்படியே இறுகி கெட்டி தட்டிப் போனது போல் இருந்து வருகின்றன. இப்படியல்லாமல் இந்து மதம் போல, இசுலாமிய, கிறித்துவ மதங்களிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். மதவாதிகள் இது குறித்துச் சிந்திக்க வேண்டும். அந்தந்த மதத்திலும் உள்ள சனநாயக சக்திகள் இதற்காகக் குரல் கொடுக்கவேண்டும்.

Pin It