"சதையும் எழும்பும் நீங்கவைச்ச தீயில்வேகுதே
உங்க சர்க்காரும் கோர்ட்டும் அதில எண்ணைய ஊத்துதே
எதை எதையோ சலுகையினு அறிவிக்கிறீங்க…
நாங்க எரியும்போது எவன் மசுர புடுங்க போனீங்க…
மனுசங்கடா நாங்க மனுசங்கடா….”

நீ பெரியவனாகி என்னவாகப் போகிறாய்..?
என்ன செய்யப் போகிறாய்..?

கேட்டார்கள் தோழர்கள். மழழை மொழியில் "துப்பாக்கி எடுத்து எம்.ஜி.ஆரை சுடுவேன், தேவாரத்தை சுடுவேன்.."

அதிர்ச்சியானார்கள் என் தந்தையின் தோழர்கள். டாக்டர், கலெக்டர் என கூறுவான்னு பார்த்தால், துப்பாக்கி எடுப்பேன் என்ற அந்த பதிலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

ஆம்.. அந்த துயரமிகுந்த வருடங்கள் எனக்கு விபரம் தெரிய ஆரம்பித்த 80களில் தமிழகத்தில் நக்சல்பாரி தோழர்கள் மீதான கொடும் அடக்குமுறைகள், தர்மபுரி, தஞ்சை, வட ஆற்காடு, தென்னாற்காடு போன்ற பகுதிகளில் அன்றைக்கு தேவாரம் தலைமையிலான காவல் துறை நக்சல்பாரி தோழர்கள் மீது நடத்திய நரவேட்டை மறக்கமுடியாத மன்னிக்க முடியாத வகையில் என் மனதில் அன்று பதிந்த வேதனையான சம்பவங்கள்.

தர்மபுரி நாய்கன்கொட்டாய் பகுதியில் பொதுகூட்ட நிகழ்வில் பேசிக்கொண்டிருந்த பாலன் என்கிற நக்சல்பாரி இயக்கத் தோழர் அடித்து இழுத்து வந்து ஜீப்பில் ஏற்றப்பட்டு கடுமையான சித்திரவதையின் மூலம் கொல்லப்படுகிறார்.

நக்சல்பாரிகளின் முக்கிய தலைவர்களான அப்பு, கண்ணாமணி போன்ற தோழர்கள் அதே காலகட்டத்தில் கொல்லப்படுகிறார்கள். தேவாரத்தின் நரவேட்டையில் தர்மபுரி, வட ஆற்காடு பகுதியில் நக்சல்பாரிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நிறைய பேர் ஏலகிரி மலைப்பகுதியில் கொண்டு செல்லப்பட்டு சுட்டு கொல்லப்படுகிறார்கள்.

சென்னையில் கடற்கரையை அழகு படுத்துகிறேன் என்று மீன‌வர்களை அவர்கள் வாழ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்த முயற்சிக்கும் போது மீன‌வர்களின் போராட்டத்தை ஒடுக்குகிறேன் என்று அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். துப்பாக்கி சூடு நடத்தி பல மீன‌வர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாகிறார். மக்கள் போராட்டத்தாலும், நக்சல்பாரி புரட்சியாளர்களின் போராட்ட போர் குணத்தாலும் சிறைசாலைகள் நக்சல்பாரி புரட்சியாளர்களால் நிரம்பியது.

வசந்தத்தின் இடி முழக்கம் என்று வர்ணிக்கப்பட்ட நக்சல்பாரி விவசாயிகளின் எழுச்சியும் அந்த எழுச்சியின் புரட்சிக் குழந்தையான இந்திய பொதுவுடைமை கட்சி (மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியின் நெருப்பு கங்குகளும் இந்தியா முழுவதும் தெறித்து விழுந்தது. அந்த அக்கினி கங்குகள் தமிழ்நாட்டிலும் விழுந்து பற்றி எரிந்தது.

கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், பள்ளி மாணவர்கள் என்று அறிவுஜீவி வர்க்கமாக கருதப்பட்டவர்கள் "உழுபவனுக்கே நிழம் சொந்தம்", "உழைப்பவனுக்கே அதிகாரம்" என்ற நக்சல்பாரியின் எழுச்சி முழக்கத்தை முழங்கி கல்லூரிகளை விட்டு வெளி வந்து தங்களின் அற்ப சுகவாழ்வை தூக்கி எறிந்து கிராமங்களில் உழைக்கும் மக்களோடு அவர்களின் துயர் துடைக்கப் புறப்பட்டார்கள்.

பண்ணையாளர்களின் உழைப்பு சுரண்டலை, உழவர்கள் இழந்த நில உரிமைகளை, அவர்களின் அடிமைக் கதைகளை, மக்களுக்கான அதிகாரத்தை பிரச்சாரம் செய்து,  உழவர்களை நக்சல்பாரி இயக்கத்தின் பின்பு அணிதிரட்டினார்கள்.

வர்க்க எதிரிகளை அழித்தொழிக்கவேண்டும் என்ற கோட்பாட்டை முன் வைத்து, அதுதான் புரட்சியின் முதல் படி; மக்களுக்கான அதிகாரம் பெற அழித்தொழிப்பு நடவடிக்கை அவசியம் என்று தமிழகத்தின் பல பகுதிகளில் 'அழிதொழிப்பு' நடவடிக்கைகள் நடந்தன. அதனால் மக்களை அணிதிரட்ட முடியும் என்று நக்சல்பாரி புரட்சியாளர்கள் நம்பினார்கள்.

பல நிலபிரபுக்களும், பண்ணையார்களும், மணியக்காரர்களும், மக்கள் விரோத சக்திகளும் நக்சல்பாரி புரட்சியாளர்களால் அழித்தொழிக்கப்பட்டார்கள். அதனால் அவர்களில் பலர் கைது செய்யப்பட்டு காவல்துறையால் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். மிஞ்சியவர்களை வழக்கு போட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்க அவர்கள் அதிகம் சிரமப்படவில்லை. குற்றங்களாக நக்சல்பாரி புரட்சியாளர்கள் அதைப் பார்க்கவில்லை. 'இது முதலாளித்துவ நீதிமன்றம் இதில் நாங்கள் பங்கேற்கமாட்டோம் நாங்கள் செய்தது நியாயமே' என்று கூறி நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்தார்கள்.

நீதிமன்றத்தை பிரச்சார மேடையாக்கினார்கள். நீதிமன்றத்தில் பாடல்களும் நீண்ட உரைகளும் நடக்கும். இது முடிந்ததும் அந்த நீதிமன்றத்திற்கும் தமக்கும் சம்மந்தமில்லை என்று திரும்பி நின்று கொள்வார்கள்.

தமிழகம் முழுவதும் பல அடக்குமுறைகளுக்கு நக்சல்பாரிகள் முகம் கொடுத்தாலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் இளைஞர்கள், மாணவர்கள் தலைமறைவாக மக்களோடு மக்களாக இயங்கினார்கள்.

அன்றைக்கு இருந்த தமிழக கிராமங்கள், அங்கு வாழ்ந்த‌ மக்களின் வாழ்நிலை மிகப் பரிதாபகரமானது. இன்றைக்கு என்ன வாழுதாம் என்று கேட்பது புரிகிறது. ஒப்பிட்டாளவில் இன்றைக்கு அது வேறு வடிவமாக இருந்து வருகிறது.

தன் துண்டு நிலத்தையும் இழந்து குடும்பத்துடன் பண்ணையடிமைகளாக அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தது போல் பண்ணைகளில் வாழ்க்கையைத் தொலைத்த எம் உழவர்களின் அடிமை வாழ்வு சாணிப்பால், சவுக்கடிகளால் துன்பமயமாக இருந்தது.

அரைபடி நெல் கூலி அதிகம் கேட்டதற்காக தாழ்த்தப்பட்ட மக்களான கூலி விவசாயிகளை ஒரே குடிசையில் போட்டு எரித்தார்கள் ஆதிக்க சாதி பண்ணை ஆண்டைகள். காவல்துறையும் நீதிமன்றங்களும் அவர்களை விடுதலை செய்தது. ஆனால் மக்கள் மன்றத்தால் தண்டிக்கப்பட்டார்கள். ஆம் நக்சல்பாரி புரட்சியாளர்களால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

கம்யூனிசம் என்ற பெயரால் பாராளுமன்ற சகதிக்குள் வீழ்ந்த இடது, வலது சந்தர்ப்பவாதத்திற்கு எதிராகப் பூத்த உழைக்கும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாம் நக்சல்பாரி இயக்கத்தின் மீதான ஒடுக்குமுறைகளைக் கேட்டு வளர்ந்த நான், 'பெரியவனானதும் துப்பாக்கி தூக்குவேன்' என்று கூறியதில் ஆச்சரியமேதும் இல்லை. தோழர்கள் என்னை தூக்கி வைத்து கொண்டாடினார்கள். மேலும் ஒரு பலி ஆடு என்று அன்று நினைத்திருப்பார்களோ…?

சைக்கிள் பெட்டியில் என்னை உட்கார வைத்துக்கொண்டு இயக்க நிகழ்வுகளுக்கும், கூட்டங்களுக்கும் அழைத்துச் செல்வார் சேக்பரீத்.

அங்கு நடக்கும் பேச்சுக்கள் எனக்கு சரியாகப் புரியாவிட்டாலும் உன்னிப்பாக அதைக் கேட்டு புரிந்து கொள்ள முயற்சிப்பேன். அதை விட என்னை அங்கு அதிகமாக ஈர்ப்பது தோழர்கள் பாடும் பாடல்கள்தான். நாடகங்கள் நடத்துவார்கள். வீதி நாடகங்கள்தான் அதிகமாக நடக்கும். 'குப்பைத் தொட்டி', 'பஞ்சோந்தி' போன்ற நாடகங்கள் மக்களிடம் வரவேற்பைப் பெற்றவை. அந்தப் பாடல்களையும், நாடகங்களையும் உன்னிப்பாகப் பார்த்து வீட்டிற்கு வந்ததும் பாடியும், நடித்தும் பார்ப்பேன். எங்கள் தெரு சிறுவர்களோடு வீதி வீதியாக பாடல்களை பாடிக் கொண்டு வல‌ம் வருவோம். சிறுவர்களுக்கு நாடகப் பயிற்சி கொடுத்து வீதியில் நாடகம் போடுவோம். இதுதான் அன்றாடம் பள்ளி விட்டு வந்ததும் எங்கள் விளையாட்டு. அதுதான் என் அறிதல் வளர்சிக்கும், சமுக சிந்தனையோடு நான் வளர்வதற்கும் காரணியாக‌ அன்றைக்கு இருந்தது. இன்றைக்கு மறைந்தவிட்ட‌ அந்தத் தோழர்கள்தான், நான் இன்றைக்கும் உங்களோடு பேசிக் கொண்டிருக்க காரணமான தியாக தீபங்கள்.

அந்தத் தோழர்களும், எனது தந்தையுமே ஏன் எதற்கு என்ற தர்க்க சிந்தனையோடு எனக்குள் கேள்விகளை பூக்க வைத்தார்கள்.

மே தினம் வந்தால் எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கும். வீதியில் தொழிலாளர்களின் ஊர்வலம். சிவப்பு சட்டையும், காக்கி பேண்ட்டும் அணிந்து ராணுவ நேர்த்தியில் போகும் அந்த ஊர்வலங்கள் என்னை மிகவும் கிளர்ச்சியடையச் செய்யும். மே தினத்திற்கு எனக்கு புதுத் துணி நிச்சயம் உண்டு. சிவப்பு சட்டையும், காக்கி பேண்ட்டும் அணிந்து அன்றைக்கு ஒரு விழா நடக்கும் மகிழ்ச்சியில் திரிவேன்.

எனக்கு நினைவு தெரிந்த ஒரு மே தின நாளில் புதுத்துணியோடு அன்றைக்கு மாலை ஊர்வலம் முடிந்து எனது தந்தை மே தினப் பரிசாக ஒரு புத்தகம் பரிசளித்தார்

"சிலந்தியும் ஈயும்"

முதலாளியான சிலந்தி தன் உடைமையை பெருக்க வலை பின்னி அதில் தொழிலாளியான ஈயை எப்படி வலையில் சிக்கவைத்து, ஈயின் ரத்தத்தை கொஞ்சம் கொஞ்சமாக உரிஞ்சி இறுதியில் ஈயின் சருகை மட்டும் விடும் என்பதை ஒரு கதையின் வடிவில் அந்த புத்தகம் இருக்கும். எனது தந்தையின் முதல் மே தினப் பரிசும் அந்தக் கதையும் என்னால் மறக்க இயலாதவை.

ஸ்டாலின் கிரடு என்ற திரைப்படம். வழக்கம் போல் சைக்கிள்.. அதில் உள்ள பெட்டியில் நான்... தோழர்களும் உடன் வருகிறார்கள். எனக்கு சினிமா பற்றி ஒன்றும் தெரியவில்லை என்றாலும் உற்சாகமாக வெளியில் போகிறோம் என்று பெட்டியில் உட்கார்கிறேன்.

அது இரண்டாம் உலகப்போர் பற்றிய திரைப்படம். இரண்டாம் உலகப்போரில் ரசியாவின் செம்படைகளுக்கும் இட்லரின் நாஜிப்படைகளுக்கும் இடையிலான சண்டை பற்றிய திரைப்படம். செங்கொடிகளுடன் சண்டையிடும் செம்படை வீரர்களைப் பார்த்து உற்சாகமான நான் "அவர்கள் நம் தோழர்களா..?" என்று கேட்டேன். "ஆம் அவர்கள் நம் தோழர்கள்தான்."

கொஞ்ச நேரத்தில் நான் சத்தமிட்டு அழ ஆரம்பித்தேன். செம்படை வீரர்கள் போரில் கொல்லப்படும் போது நம் தோழர்கள் செத்து விட்டார்கள் என்று அழ ஆரம்பித்தவனை அது திரைப்படம் என்றும் அதில் யாரும் சாகவில்லை என்றும் அது நடிப்பு என்றும் என்னை சமாதானப்படுத்தினார்கள்.

எனக்கு இன்று அதை நினைத்தாலும் சிரிக்கத் தோன்றும். அன்றைக்கு அவர்களை அந்த பாடு படுத்தி உள்ளேன்.

தேர்வு செய்யப்பட்ட திரைபடங்களுக்கு என்னை அழைத்துச் செல்வார் எனது தந்தை. அப்படங்களில் வரும் காட்சிகளும், புரட்சிகர வசன‌ங்களும் என்னை ஈர்க்கும். அதில் தோழர்கள் மரணிக்கும் காட்சிகள் என்னை மிகவும் பாதிக்கும்

அப்படி அந்த காலத்தில் என்னை பாதித்த சிவப்பு மல்லி, உமர்முக்தார் போன்ற திரைப்படங்கள் என் நினைவுகளில் இன்னும்....

அதுவரை மரணம் பற்றி தெரியாத நான், மரணம் என்றால் என்ன என்று அறிந்து கொள்ள ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

மோகனுரில் இருந்து எனது பாட்டி அலிமா ஈரோட்டிற்கே வந்து விட்டார்கள். எனது பாட்டியின் மோசமான உடல் நிலையிலும் கூட கம்பீரமான அந்த குரல் இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.

ஆளுமை நிறைந்த பேச்சுக்களும் தீர்க்கமாக முடிவெடுக்கும் திறனும் நிறைந்த நெடிய உருவமும், சிவந்த நிறமும் கொண்டவர் எனது பாட்டி.

நான் ஏதாவது கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பேன். வெள்ளை சேலைதான் உடுத்துவார்.

"அம்மா மற்றவர்கள் எல்லாம் கலராக சேலை கட்டும்போது நீங்கள் மட்டும் எப்பப் பார்த்தாலும் வெள்ளை உடுத்திறீங்க.?"

"உங்க தாத்தா இல்லை அதனால்தான்.."

"அவர் எங்கு போனார்..?"

"மவுத்தாயிட்டாரு..!"

"அப்படியினா..?"

"செத்துப் போயிட்டாரு.."

"செத்துப் போவதுனா என்ன..?"

"நான் இப்ப உங்கூட பேசுறேனுல்ல?"

"ஆமா"

"நான் பேசாம, நடக்காம, மூச்சு விடாம அப்படியே படுத்துட்டேன்னா அதுதான் செத்துப் போவது"

எனக்குப் புரியவில்லை.

"சரி... போய் விளையாடு! உனக்கும் ஒருநாள் புரியும்."

அன்றைக்கு பாட்டி போல் இருந்த பல பேர் வெள்ளைச் சேலை உடுத்தி இருந்தார்கள். முஸ்லீமான எனது பட்டியும் வெள்ளைச் சேலை உடுத்தி இருந்தார். கிராமத்தில் மற்ற மதத்தினர் பழ‌க்க வழக்கங்களும், அதன் மிச்சங்களும் இஸ்லாத்தைத் தழுவினாலும் தொடர்ந்துதான் வந்திருக்கிறது. இன்றும் பல பழ‌க்கங்கள் தொடர்கின்றன‌.

எனது பாட்டி என் மீது பிரியங்கள் நிறைந்தவர். அவருடன் இருக்கும் காலத்தில் நான் பசியை அறிந்திருக்கவில்லை. வெடக்கோழியை அறுத்து அதில் இருக்கும் முட்டைகள் அனைத்தும் எடுத்து எனக்குத் தனியாக குழம்பில் போட்டுத் தருவார்.

தனது பேரன் நல்ல பண்புகளோடு, ஒழுக்கம் நிறை வாழ்க்கை வாழவேண்டும் என்ற அக்கறையோடு நல்ல பல கதைகள் கூறி என்னை உறங்க வைத்தவர்..

என் பாட்டி மரணித்து மரணத்தை எனக்குப் புரிய வைத்தார். நான் சந்தித்த முதல் மரணம் அது.

அம்மாவும், பெரியம்மாவும் அழுகிறார்கள். நான் புரியாமல் பார்த்தேன். அப்போழுது வீட்டில் நாங்கள் மட்டும்தான். அப்பா வீட்டில் இல்லை. வியாபரத்திற்காக வெளியில் சென்று விட்டார்.

பாட்டியைப் பார்த்து பார்த்து அழுகிறார்கள். நான் தாதி, தாதி என்று எழுப்புகிறேன். அசையவில்லை. அந்தக் கிழவி மூக்கில் விரல் வைத்துப் பார்க்கிறேன். காத்து வரவில்லை. கண்கள் மேலே பார்த்து இருந்ததை அம்மா மூடிவிட்டார்கள். நான் எழுப்பிக் கொண்டே கண்களை பிதுக்குகிறேன்.

எழவில்லை. மக்களுக்காக நல்ல பல சிந்தனைகளைக் கொண்ட தோழர்களை ஆதரித்த எனது பாட்டி அலிமா மரணித்து விட்டார் என்பதை அக்கணத்தில் இருந்து உணர்ந்து கொண்டேன்.

எனது பாட்டி சொன்னதை நினைத்துப் பார்த்தேன். செத்துபோனால் மூச்சு வராது..!

எனது கண்முன் எனது பாட்டியின் மூச்சுக் காற்று நிரந்தரமாக இந்தப் பரந்த வெளியில் கலந்து விட்டது.

சிலரின் மரணம் மலையை விட கன‌மானது
சிலரின் மரணம் இறகை விட லேசானது.

(நினைவுகள் தொடரும்….)

Pin It