book pondicheryமண் வளமும், மனித வளமும், நீர் வளமும், இயற்கை வளமும் நிறைந்த இந்தியத் துணைக்கண்டத்தின் ஒரு சிறிய நிலப்பரப்புதான் புதுச்சேரி. இருந்தாலும், வரலாற்றுச் சிறப்பு மிகுந்த ஒரு தனிப்பட்ட நிலப்பரப்பாக இன்றும் விளங்கி வருகிறது. இதனுடைய தனிச்சிறப்பு அனைவரின் கவனத்திற்குத் தொடர்ந்து உள்ளாகி வருவதே.

பிரெஞ்சுக் காலனியாக விளங்கிய இதன் நூற்றிருபது வருட வரலாறுதான் இந்த நூல். இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் இந்தியர்கள் பலருக்குப் பாதுகாப்பளித்தது புதுச்சேரி. அந்த வகையில் மாபெரும் தத்துவஞானியான அரவிந்தருக்கும், மகாகவி பாரதியாருக்கும் புகலிடம் அளித்து தனக்குப் பெருமை சேர்த்துக் கொண்டது இந்த நகரம்.

வரலாறு குறித்த தனது தெளிவான கண்ணோட்டத்தை வரலாற்றாசிரியர் தன்னுடைய முன்னுரையில் குறிப்பிடுவதுடன் அதன் நோக்கத்தையும் தெளிவுபடுத்துகிறார். “ஒவ்வொரு காலத்திலும் வரலாறு திரும்ப எழுதப்பட வேண்டும். புதிய கோணத்தையும், பார்வையையும், புதிய கண்டுபிடிப்புக்களையும், புதிய உண்மை நிகழ்வுகளையும் கால முன்னேற்றத்தினால், மாற்றங்களால், சூழ்நிலைகளை நோக்கும் எண்ணங்களால், கடந்த காலத்தைப் பற்றி சரியான முடிவுகளைப் பெறவும், வரலாற்றுத் திருத்தம் செய்வது புதுமையான ஒழுகலாறாகவும் இருக்கும். ஒவ்வொரு வாழ்விடப் பகுதிக்கும் வரலாறு உண்டு.

மனித இனத்தின் பெருக்கத்தினால், ஏற்பட்ட வாழ்விடங்களின் வளர்ச்சியின் மூலம் அறிஞர்கள் கடந்த காலத்தை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுகளில் அதிக முக்கியத்துவமாக ஆற்று நாகரிகங்கள் குறித்தும் நிலவியல் குறித்தும் உள்ளன. நுட்பமான வரலாற்றை அறிதல் என்பது தொல்லியலோடு இணைந்துள்ளது. அதன் மூலம் கிடைத்த படிப்பினைகள், வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டே மனிதனும் இயற்கையும் இணைந்த வாழ்வியலை நன்கு அறிந்து கொள்ள உதவுகின்றன.”

அவர் எழுதியுள்ள இந்த வரலாற்று நூலை வாசித்தபோது அவருடைய கண்ணோட்டம் ஆழமாகவே புலப்படுவதை உணர முடிகிறது. புதுச்சேரி தமிழ் மக்கள் வரலாறு அடங்கிய 6 இயல்களை மட்டும் ஆசிரியரின் விருப்பத்திற்கு இணங்க மொழிபெயர்த்துள்ளார் கி.இளங்கோவன். வாசிப்புக்கு உகந்ததாக உள்ளது.

இயல் ஒன்றில், ஆய்வுப் பொருளையும் அதன் நோக்கங்களையும், குறிக்கோள்களையும் சுட்டிக்காட்டத் தற்போது இருக்கின்ற இலக்கியங்களை மறுமதிப்பாய்வுகளின் மூலமும் அதன் வழிமுறைகளையும் பின்பற்றி உள்ளார் ஆசிரியர்.

அடுத்த இயலில், புதுச்சேரியிலிருந்து ஆசியா மற்றும் பிரான்சிற்கு தமிழ் வணிகர்கள் துணி வணிக ஏற்றுமதி செய்வதில் ஆற்றிய பங்கு விரிவாக விளக்கப்படுகிறது.

மூன்றாவது இயலில், புதுச்சேரியில் இருந்து வந்த வலங்கை, இடங்கை சாதியினரையும், நடுநிலை மற்றும் கலப்பு சாதியினர் குறித்தும் விளக்கப்படுகிறது.

இயல் நான்கு, இந்து முசுலிம் மக்களின் சமூக வாழ்க்கையையும், பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனத்தின் மதக் கொள்கைகளில் இருந்து வந்த ஆழ்ந்த ஈடுபாட்டையும் ஆய்வு செய்கிறது.

ஐந்தாவது இயலில், உள்ளூர்க் கிறிஸ்தவர்களின் சமூக வாழ்வு குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. தமிழ்க் கிறிஸ்தவர்களின் சாதிய நடைமுறைகளும் அதற்கான அவர்களுடைய மனப்பான்மையும் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.

இயல் ஆறில், புதுச்சேரியில் இயற்கை மற்றும் மனிதர்களால் ஏற்பட்ட பேரிடர்கள் குறித்து மையப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில், புயல், வெள்ளம், போர் படையெடுப்பு, படை முகாம்கள் அமைத்தல், முற்றுகை மற்றும் சமூகக் கலகங்கள் அடங்கியுள்ளன. அவற்றின் விளைவாக ஏற்பட்ட சேதங்களும், துயரங்களும் குறிப்பிடப்படுகின்றன.

ஏழாவது இயல், பிரெஞ்சுக் குடியேற்றங்களில் நிலவிய தொழிலாளர்களின் சமூக வாழ்க்கையையும் புதுச்சேரியிலிருந்து கடல் கடந்து வேறு இடங்களுக்குச் செல்வதையும் எடுத்துக் கூறுகிறது. பிரெஞ்சு நிறுவனத்தில் பொதுவான பிரிவுகள், படைத்துறை மற்றும் நீதித் துறைப் பணிகளில் உள்ளூர் மக்களின் வேலை வாய்ப்பு குறித்து விவரிக்கப்படுகின்றது.

எட்டாவது இயலில், இந்த நூலின் இறுதிப் பகுதியில் முடிவுரையும், முக்கிய ஆய்வுத் தகவல்களும் தரப்பட்டுள்ளன. சங்க இலக்கியமான தொல்காப்பியத்திலும் மணிமேகலைக் காப்பியத்திலும் வர்த்தக நடவடிக்கைகளைக் கையாளும், தமிழ்ச் செட்டிகளையும், வைசிக வணிகர்களைப் பற்றியும், துணிவணிகர்களை அறுவை வாணிகர் என்று அழைக்கப்பட்ட தகவல்களையும் ஆசிரியர் அடையாளப் படுத்துகிறார்.

வணிகத் தொழிலுக்கு பிரெஞ்சு முக்கியத்துவம் அளித்தது. அதற்கு ‘துபாஷி’ என்ற மொழி பெயர்ப்பாளர் பதவியை பிரெஞ்சியர் வழங்கினர். துணி வணிகத்தில், பிரெஞ்சு நிறுவனத்திற்கும், உள்ளூர் வணிகத்திற்கும் கட்டுப்படியாகும் விலைகளை நிர்ணயம் செய்வது துபாஷியின் பணியாக இருந்தது.

அன்றைய புதுச்சேரியின் நிகழ்வுகளையும், நடைமுறைகளையும், மாற்றங்களையும், வளர்ச்சியையும் அவ்வப்போது ஆனந்தரங்கம் பிள்ளை தனது நாட்குறிப்பில் பதிவு செய்துள்ள விவரங்களை வரலாற்றாசிரியர் அங்கங்கே ஆதாரங்களாகவும், ஆவணங்களாகவும் முன்வைக்கிறார்.

“புதுச்சேரியில் பிள்ளை சாதியினர்களின் துணி வணிகத்தைக் குறிப்பிடுகிறார் வரலாற்றாசிரியர். பிள்ளை என்ற சாதியினர் வலங்கைப் பிரிவைச் சேர்ந்தவர்கள். அவர்களில் இரண்டு முக்கிய உட்பிரிவுகளில், வெள்ளாளர்கள், நிலச் சொந்தக்காரர்களாகவும், சைவ நெறியைப் பின்பற்றுபவர்களாகவும், இடையர்கள் என்பவர்கள் மேய்ச்சல் தொழில் செய்பவர்களாகவும், வைணவ நெறியைப் பின்பற்றுபவர்களாகவும் இருந்தனர் என்ற விவரங்களை இவர் குறிப்பிடுகிறார்.

தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் ஐரோப்பியர் துறைமுகக் குடியேற்றங்களை நிறுவியபோது, செல்வச் செழிப்பான இந்த உட்பிரிவுச் சாதியினர் கடற்கரை உள்நகரங்களுக்கு இடம் பெயர்ந்து பின்னர் துறைமுக நகரங்களில் குடியேறினர். துணிவணிகத்தில் முதலீடுகள் செய்து புதிய வகையான வருமானம் பெற்று மேலும் செல்வம் சேர்த்துக் கொண்டனர்.”

வணிகம் மற்றும் உற்பத்தி போன்ற தொழில் சார்ந்த வளர்ச்சிகளின் விளைவாகத் தமிழக மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்த விதத்தை விலாவாரியாக விளக்குகிறார் வரலாற்றாசிரியர்.

தமிழர்களிடையே காலப்போக்கில் சமூகத்தில் ஏற்பட்ட சமத்துவமின்மை காரணமாக, சமூக ஒழுங்கிற்காக சமூக அடுக்குகள் துளிர்விடத் தொடங்கின. அவை, வலங்கை, இடங்கை என்ற இரு குழுக்களாகப் பிரிந்தன. அதைக் குறித்த காரண காரியங்களைத் தகுந்த ஆதாரங்களோடு ஆசிரியர் விளக்குகிறார்.

அதைத் தொடர்ந்து அதற்கு உள்ளேயும், வெளியேயும் தோன்றிய உள்சாதிப் பிரிவுகளையும் அவற்றிற்கிடையே நிகழ்ந்த விளைவுகளையும் அடையாளப்படுத்துகிறார். அவற்றை விலாவாரியாக இனம் கண்டு வகைப்படுத்தி சமுதாய மாறுபாடுகளையும், வேறுபாடுகளையும் தெளிவாகக் குறிப்பிடுகிறார். கடந்த 1724ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆவணங்களின் படி புதுச்சேரியில் 18 வலங்கை மற்றும் இடங்கை சாதி மக்கள் மட்டும் வாழ்ந்தனர் எனத் தெரிகிறது.

புதுச்சேரியில் வலங்கை, இடங்கை சாதியினரிடையே நடந்த சமூக வன்முறைகளும் சண்டைகளும் வாழ்விடங்கள் மற்றும் நிலம் தொடர்பான மோதல்களும் தகுந்த எடுத்துக் காட்டுகளுடன் விவரிக்கப்படுகின்றன.

அதோடு மட்டுமல்லாமல், சமூக, கலாச்சார குடும்ப விழாக்களில் சலுகைகள் மற்றும் மரியாதைகளின் காரணமாக நிறையத் தகராறுகள் விளைந்தன. மேலும், மதம், கோயில் வழிபாட்டால் ஏற்பட்ட மோதல்கள் பற்றிய விவரங்களும் தகுந்த சான்றுகளுடன் விளக்கப்படுகின்றன.

தனிப்பட்ட வகையிலான காவல்துறை நிர்வாகம் ஒன்று புதுச்சேரியில் உருவானது. பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனம் புதுச்சேரியில் ஒரு பொது காவல் அமைப்பை அறிமுகப்படுத்தியது. சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்பு நயினார் என்ற அலுவலரையே சார்ந்தது. அவர் இந்தப் பதவியை பரம்பரை பரம்பரையாக வகித்து வந்தார். புதுச்சேரியில் ஒவ்வொரு சமூக இனக் குழுவிற்கும் மகாநாட்டார்கள் முன்னிலையில் ஆறு பாளையக்காரர்களை நியமித்தனர்.

ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்பு தமிழகத்தில் இந்து, முசுலிம் உறவு நல்ல நிலைமையில் இருந்ததைக் குறிப்பிடுகிறார் இவர். பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனத்தின் படையில் தமிழர்கள் தங்களுடைய சமூக பண்பாட்டு வாழ்வியலைத் தொடர்ந்து கடைப்பிடித்தனர்.

இந்து முசுலிம் மத அமைப்புக்களின் செயல்பாடுகளையும் நடவடிக்கைகளையும் விவரிப்பதுடன் பிரெஞ்சியரின் மதக் கண்ணோட்டம் குறித்தும் விவரிக்கிறார். காலப்போக்கில் அவைகளின் மோதல்களையும், கொந்தளிப்புக்களையும் விருப்பு வெறுப்பு இல்லாமல் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.

தொடர்ந்து, பிரெஞ்சு கிறிஸ்துவ சமயப் பரப்பாளர்களின் வருகையாலும், வெற்றிகரமான மதமாற்றங்களின் மூலமும் புதுச்சேரியில் கிறிஸ்துவ சமூகம் பெருக ஆரம்பித்தது. புதுச்சேரி உள்ளூர் கிறிஸ்துவ சமூக வாழ்விலும் அன்றாட வாழ்விலும் சமுதாய மாற்றங்கள் எவ்வாறு நிகழ்ந்தன என்பதையும் குறிப்பிட்டுக் காட்டுகிறார் ஆசிரியர்.

புதுச்சேரியில் பிரெஞ்சியர் ஆட்சியின்போது இயற்கைக்கும், மனிதர்களுக்கும் இடையில் எப்படிப் பெருந்துன்பங்கள் நிகழ்ந்தன என்பதையும் இவர் தெளிவாக விளக்குகிறார். மக்கள் புதிய இடங்களைத் தேடி எவ்வாறு புலம் பெயர்ந்தனர் என்பதையும் குறிப்பிடுகிறார்.

மக்கள் தொகை, புதுச்சேரியில் 1760ஆம் ஆண்டு ஆகஸ்டில் 20, 000 என்ற அளவுக்குக் குறைந்தது. அடுத்து, 1761ஆம் ஆண்டு சனவரியில் அதுவே 3, 000 ஆகக் குறைந்துவிட்டது.

மேலும் 1730 முதல் 1784 வரை புதுச்சேரி வாழ்மக்கள் மோரிசியத்திற்கும், ரீயூனியன் மற்றும் கோமோரோஸ் தீவுகளுக்கும் புலம்பெயர்ந்து சென்ற விவரங்களையும் அழுத்தமாகக் குறிப்பிடுகிறார் இவர். கடந்த 17ஆம் நூற்றாண்டில், டேனிஷ் மற்றும் டச்சுக்காரர்கள் வணிகத்தால் இதன் முக்கியத்துவம் குறைந்தது.

பிரெஞ்சுக்காரர்களின் வருகையால் புதுச்சேரி நகரமாக வளரத் தொடங்கியது. பிரான்சுவா மர்தேனின் வழிகாட்டுதலால் வேளாண்மை வளர்ச்சியடைந்தது. புதுச்சேரியின் உள்நாட்டுப் பகுதியில் வணிகமும், தொழில்களும் பெருகின. அதன் துணை நகர்ப்புறங்களும், நகர மையங்களும் வளர்ச்சி பெற்றன. புதுச்சேரியில் சிக்கலான மற்றும் பல அடுக்குகளைக் கொண்ட நிலப்பரப்பு இதில் காட்சிப்படுத்தப்படுகிறது.

- சி.ஆர்.ரவீந்திரன்

Pin It