holy cross

மாலை மயங்கும் வேளை.... குருதி சொட்டும்... வழிதல்களின் இடையே இடது பக்கம் இருந்தவன்... மெல்ல தன் உடலை அசைத்தான்..... சற்று கண்களை நீட்டி, அவரையும் தாண்டி.... வலது பக்கம் இருந்தவனை கண்களாலே கவனித்தான்.... வலு பக்கம் இருந்தவனும்.. ரத்தம் சொட்ட, புருவத்தை மட்டும் தூக்கிக் காட்டினான்.... பிய்ந்து தொங்கிய மனம் திட்டமிட்டது....

கைகளில் அடித்திருந்த ஆணியை ஆட்டி ஆட்டி மெல்ல விலக்கினான் இடது பக்கம் இருந்தவன்.... வலது பக்கம் இருந்தவனும் அதே போல செய்யத் தொடங்கினான்.. கீழே காவலாளிகள் அவர்கள் மூவரின் உயிர் போகட்டும் என்று காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தாயம் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.... ஏளனப் பேச்சுக்கள் வேறு...ஏதாவது செய்ய வேண்டும்... வேறு வழியே இல்லை... உயிர் மட்டும் போய் விடக் கூடாது... மெல்லத் தடுமாறி வலது கையையும் விடுவித்துக் கொண்டவன் ரத்த வெள்ளத்தில் நடுங்கிக் கொண்டே உடல் பலம், உள்ள பலம் அனைத்தும் திரட்டிக் கொண்டு மரண நேரப் போராட்டத்தில் குதித்தான்.. காவலாளிகள் மொத்தம் 8 பேர் தான்.... கீழே விழுந்தவனை எட்டு பேரும் ஒரு சேரப் பார்த்து சிரித்தார்கள்... 'அத்தனை ஆசையா உயிர் மேல்' என்ற ஏளன சிரிப்புகளைக் கண்டு கொள்ளாத இடது பக்கத்துக்காரன்... கையில் கிடைத்த இரும்பைக் கொண்டு காவலாளிகளைத் தாக்கத் தொடங்கினான்...

"அவர் வேணும்னா மறு கன்னத்தைக் காட்டுவார்டா... நான் காட்ட முடியாது.... ஒரு நல்லவன் வாழனும்னா நூறு கெட்டவங்களக்கூட கொல்லலாம்"- என்று கத்திக் கொண்டே காவலாளிகளை துவசம் செய்தான்... காற்றும் இரைச்சலும்.. அந்த வனாந்தரத்தை பூமியின் மேற் பரப்பை போல காட்டியது...... யுத்தம் சத்தம் போட்டு வெடித்தது.... அநியாயம் ஒடுக்கப்படும் அலறல் ஆத்மார்த்தமாகப் பரவியது....

சூரசம்காரம் நடத்து கொண்டிருக்கும் போதே வலது பக்கம் இருந்தவனும் தன்னை விடுவித்துக் கொண்டு நடுவில் இருந்தவரை மெல்ல இறக்கிக் கொண்டிருந்தான்... முனங்கிக் கொண்டிருந்த அவர் அனைத்தையும் அர்த்தத்தோடு பார்த்தார்... பாவனையற்ற முகத்தில் நிதானமாகவே இருந்தார்...

வலது பக்கம் இருந்தவன் அவரை இறக்கி தோளில் போட்டுக் கொண்டு மருத்துவமனை நோக்கி ஓடத் துவங்கினான்......

"வெறும் 3 வருசத்துக்கே இந்த பூமில இத்தனை மாற்றம் பண்ணிட்டீங்களே... நீங்க இன்னும் 100 வருஷம் இருந்தா இந்த பூமியே புண்ணிய பூமியா மாறிடும் ஐயா.... உங்கள சாக விட மாட்டோம்" என்று கத்திக் கொண்டே வலது பக்கம் இருந்தவன் இன்னும் பலமெடுத்து ஓடத் துவங்கினான்..... இடது பக்கம் இருந்தவன் அனைவரையும் கொன்று விட்டு அவனும் வீழ்ந்தான், ஒரு ஆத்மதிருப்தியோடு.. இது வரை செய்த தவறுகள் அனைத்தும் மன்னிக்கப்பட்ட ஓர் ஆத்மாவாக அவனின் மரணம் கொண்டாடப்பட்டது....

மருத்துவனைக்கு ஓடிவந்த வலது பக்கக்காரன்... அவரை மருத்துவமனையில் சேர்த்து விட்டு உயிரை விட்டான்.... அதுவும்... வாழ்வின் அர்த்தம் கொண்ட மரணமாகிப் போனது...

அவர் மீண்டும் மறு கன்னம் காட்டிக் கொண்டே புன்னைகைத்தார்.... பிழைத்து விட வேண்டும் என்பது தான் நமது ஆசையும் பிராத்தனையும் கூட... ஏனெனில் அவரின் தேவை இந்த பூமிக்கு தேவையாய் இருக்கிறது...

- கவிஜி

Pin It