ஊடகங்களிலும், இணைய தளங்களிலும் தளி சட்டமன்ற உறுப்பினர் மீது புழுதிவாரி தூற்றுதலும் பொய்யான புனையப்பட்ட குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. இதன் ஊடாக ‘அரசியல் வன்முறை’ குறித்தான உபதேசங்களும் வந்து விழுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பெரியார் தி.க.விற்கும் கொள்கை அளவில் எந்தப் பிரச்சனையும் எழவில்லை. நான் அறிந்த நாள் முதலாக கிருஷ்ணகிரி மாவட்ட சமூக, பொருளாதார அரசியல் பிரச்சனைகளில் 60 ஆண்டுகளுக்கு மேலாக தனது பங்களிப்பையும், செழுமையான அனுபவங்களையும் கொண்ட கட்சியாக சி.பி.ஐ உள்ளது. பெ.தி.க கடந்த 5 ஆண்டுகளாக இப்பகுதியில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் தனித்தன்மையோடு சிறுபான்மை மொழி பேசும் மக்கள் அதிகம் வாழும் ஒரு தொகுதியாக, தொடர்ந்து புறக்கணிப்புக்கு ஆளான ஒரு தொகுதியாக இந்த தளி சட்டமன்றத் தொகுதி அமைந்துள்ளது. தமிழகத்தில் ஈழப்பிரச்சனைகள், சமூக மாற்றங்கள் குறித்து அதிகம் அக்கறை காட்டும் இயக்கங்களாக பெ.தி.க.வும், சி.பி.ஐ.யும் விளங்கி வருகின்றன‌. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெ.தி.க.வில் இணைந்து செயல்பட்டு வந்த பழனி படுகொலை பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

2001 ஆம் ஆண்டு தேர்தலில் ராமச்சந்திரன் பி.ஜே.பியை ஆதரித்தார் என ஆராயாமல் பெ.தி.க ஒரு பெரும் பழியை சுமத்தியுள்ளது. உண்மை அதுவல்ல. 2001 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலின்போது ராமச்சந்திரனும் லகுமையாவும் (சி.பி.எம்.)ல் இருந்தார்கள். இது குறித்து குற்றச்சாட்டோ இதற்கான எந்த நடவடிக்கையும் அப்போது சி.பி.எம் எடுத்ததாக எந்த செய்தியும் இல்லை. ஆனால் மதச்சார்ப்பின்மை கொள்கையில் ஆழமான பிடிமானம் உள்ளவர்கள் தோழர் லகுமையாவும், ராமச்சந்திரனும் என்பது தான் உண்மை. சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாட்டில் சி.பி.ஐ.க்கு சொந்த பலத்தில் வட்டார ஊராட்சித் தலைவர் பதவிக்கு கெலமங்கலம் வட்டாட்சிக்கு வாய்ப்பு வந்தபோது அந்த ஒரு வாய்ப்பிற்கும் எந்த தயக்கமும் இன்றி சிறுபான்மை இனத்தை சார்ந்த திருமதி ஷனாஜ் என்ற பெண்ணுக்குத்தான் வழங்க வேண்டுமென வழிகாட்டி உறுதியோடு செயல்படுத்தியவர்கள் தோழர் ராமச்சந்திரனும், லகுமையாவும் ஆவார்கள். தளி வட்டார, ஊராட்சிக்கு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்ததற்குக் காரணம் “உலக அதிசயங்களில்” ஒன்றான அ.தி.மு.க.வின் (அமைச்சர் கே.பி.முனுசாமி உபயத்தில்) பேராதரவேடு தி.மு.க வட்டார ஊராட்சித் தலைவர் பதவியை பிடித்ததுதான். எனவே இந்த மாவட்டத்தில் அ.தி.மு.கவின் எதிரி தி.மு.க அல்ல என்பது நன்கு விளங்கும்!

பெ.தி.க.வினர் சிந்தனைக்கு சில, திராவிடர் கழகத்திலிருந்து பெ.தி.க பிரிந்ததற்கு காரணம் அது பெரியாரிய பாதையிலிருந்து விலகியதுதான் காரணம் என்றனர். கடவுள் மறுப்பு, சாதி ஒழிப்பு ஆகியவற்றில் பெரியார் உறுதி காட்டியது போலவே தேர்தல் அரசியலில் நேரடியாகப் பங்கேற்பது இல்லை என்பதிலும் உறுதி காட்டியவர். பெ.தி.க. நாகமங்களத்தில் ஊராட்சித் தேர்தலில் போட்டியிட்டதாக கூறியுள்ளீர்களே. இது கட்சியின் முடிவா? என்பதை விளக்கவும். அது போலவே கடவுள் மறுப்பில் முதன்மைப் பாத்திரம் வகிக்கும் பெ.தி.க. அங்கு நடைபெற்ற கோவில் விழாவில் பங்கேற்ற போதுதான் பெ.தி.க.விற்கும், சி.பி.ஐக்கும் பிரச்சனை வந்தது என்றால் ஒன்று தெளிவாகிறது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெ.தி.கவில் சேர்ந்த பழனி லட்சிய அடிப்படையில் சேரவில்லை என்பதும், இதில் ஏமாந்தது பெ.தி.க என்பதும்தான். ஆக இந்தப் போட்டிகூட வேறு “ஏதோ” ஒரு காரணத்திற்காகத்தான் என்பதும் விளங்கும்.

தந்தை பெரியார் தனது இயக்கத்திற்கு கொடியை உருவாக்கிய போது கறுப்பு வண்ணத்தின் மையத்தில் சிவப்பு வட்டத்தை அமைத்தார். அத்தோடு இந்த சிவப்பு வட்டம் நாளடைவில் வளர்ந்து கறுப்பு வண்ணத்தை முற்றிலும் எடுத்து சிவப்பு மட்டுமே நிலைத்திருக்கும் என்றார். ஆனால் இங்கு பெரியார் பெயரிலான தி.க. சிவப்பை கண்டவுடன் ஏன் மிரளவேண்டும்? ஜனநாயகத்தின் மீதும் பல கட்சி ஆட்சிமுறையையும் ஏற்றுக்கொண்ட சி.பி.ஐ (கொள்கை அடிப்படையில்)யை எதிர்க்க இதில் தெளிவில்லாத தனிநபர் நடத்தும் வட்டார அளவிலான மாவோவிய மா.லெ.கட்சிகளோடு எப்படி இணையமுடியும்; விந்தை வேந்தன் போன்றோர் பணம் கேட்டு மிரட்டி தராததால் பள்ளிகளை எதிர்த்து போராட்டம் அறிவிக்கும் பேர்வழிகள். இப்படிப்பட்ட பிளாக்மெயில் பேர்வழிகளோடு பெ.தி.க எந்த வகையில் இணையமுடியும் - விளக்கவும். பல கட்சி ஜனநாயகத்தையோ, ஆட்சிமுறையையோ ஏற்காதவர்கள் நல்லவர்கள், நாளும் மக்கள் பணி ஆற்றுபவர்கள் கெட்டவர்கள்! என்ன விந்தை!

பெ.தி.க பழனியைப்பற்றி ஒரு தவறான சித்திரத்தை இன்று ஏற்படுத்தி வருகிறது. பழனியும் தோழர் லகுமையா, ராமச்சந்திரனும், சி.பி.எம்.ல் இணைந்து செயல்பட்டவர்கள். 2005 ஆம் ஆண்டில் தனது மைத்துனரின் மனைவியோடு (தங்கைமுறை) தகாத உறவினால் வேறு காரணங்களுக்காகவும் அவரை கொலை செய்தவர் “செயல் வீரர்” பழனி!

இதனால்தான் அவர் (சி.பி.எம்.ல் நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் (இது தெரியாமல் சி.பி.எம். தோழர்கள் மகிழ்ச்சி கூத்தாடுவது சரியா? அதன் பிறகு பல சமூக விரோத கூலிப்படைகளுக்கு ஒரு இடைத்தரகராக, காவல்துறைக்கு மாமுல் வசூலித்துத் தருபவராக மாறியவர்தான் அவர். 2002-ல் தளி வட்டார சேர்மனாக இருந்த வெங்கடேசன் ஒரு பட்ட பகலில் பேருந்து நிலையத்தில், வெடிகுண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும், வெட்டியும், படுகொலை செய்யப்பட்டார். அவர் தி.மு.கவில் தான் இருந்தவர் என்றாலும் முன்பு சி.பி.ஐ.யில் இருந்தவர்; நல்லவர் என்று அந்தப்பகுதி மக்கள் மத்தியில் மதிக்கப்பட்டவர். இதில் முதன்மை குற்றவாளியாக இன்றும் வழக்கில் இருப்பவர் திரு பழனி!

சாதாரண விவசாயக் கூலியாக இருந்த பழனி இன்று 4 கோடி சொத்தை சேர்த்தது எப்படி?

சி.பி.ஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நாகராஜரெட்டியின் பேட்டியைக் காட்டி ஏதோ கட்சி தவறு செய்து விட்டது போன்ற ஒரு பிரம்மையை ஏற்படுத்தி வருகிறது பெ.தி.க. திரு.நாகராஜரெட்டி மாவட்டச் செயலாளராக கட்சியில் இருந்தபோதே, தோழர் ராமச்சந்திரன் ஏகமனதாக மாவட்டக்குழுவால் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டவர், அத்தோடு தோழர்கள் லகுமையா, ராமச்சந்திரனோடு பல்லாயிரக்கணக்கில் சி.பி.ஐ கட்சியில் இணைந்தபோது இவர்தான் மாவட்டச் செயலாளர். இணைப்பு விழாவிற்கு தலைமை தாங்கியது மட்டுமல்ல 'புரட்சியாளர்களே வருக! புதுயுகம் படைப்போம் வருக!' என வரவேற்று உரை நிகழ்த்தியவர் அப்படிப்பட்ட அவர்தான் தன்னை எம்.எல்.ஏ ஆட்கள் தாக்குவதாக சரடுவிட்டு வருகிறார். ஒரு அரசியல் போராட்டமாகக் கருதும் தேர்தலின்போது கட்சிக்கு துரோகம் இழைத்து 25 லட்சம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு தி.மு.க.விற்கு சென்றவர், எதிர்த்து தேர்தல் பிரச்சாரமும் செய்தவர். இன்று அ.தி.மு.வில் இதற்கு முன்பு காங்கிரஸ்க்கும் சென்று வந்தவர்தான். இப்படிப்பட்ட கூடுவிட்டு கூடுபாயும் அற்புத கலைஞனை பெ.தி.க. துணைக்கு அழைத்திருக்க வேண்டியதில்லை!

வில்லனை கதாநாயகனாக்குவதும் கதாநாயகனை வில்லனாக்குவதும் போதும், நிறுத்துங்கள். சில மனித உரிமை அமைப்புகளின் பத்திரிகை சந்திப்பு அதைவிடமோசம், இந்தப் பிரச்சனையை இருதரப்பிலும் விசாரிக்காமல் “புராஜக்ட் ரிப்போôட்டை” வெளியிட்டு விட்டனர். எப்போது காவல்துறையின் சித்திரவதை, அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்க்கும் திரு ஹென்றியின் அமைப்பு முதல் முறையாக சி.பி.ஐக்கு எதிராக இங்கு காவல்துறையோடு கைக்குலுக்கி கொஞ்சி மகிழ்வதை பார்க்க முடிகிறது. கொலை நடந்த பிறகு காவல்துறை இதுவரை 160க்கும் அதிகமானவர்களை சித்திரவதை செய்துள்ளது. அதில் பெண்கள் 48 பேர். மாலை 5 மணிக்கு மேல் பெண்களை காவல் நிலையத்திற்குள் வைத்திருக்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டல் இருந்தும் பலப் பெண்கள் பல நாட்கள் இரவு பகலாக சித்திரவதைக்குள்ளானார்கள். சிலர் நள்ளிரவு 2 மணிவரை காவல் நிலையத்தில் ஆறு மாத குழந்தையைக்கூட காவல்நிலையத்தில் தாயோடு பிரிந்து வைத்தக் கொடுமை நடந்தது.

கல்லூரி மாணவன் மீது மணல் கடத்தல் வழக்கு. பள்ளிக்கூட சிறுவர்கள் காவல்துறையின் தனிகொட்டடிக்குள் சித்திரவதை! இப்பகுதி முழுவதும் காவல்துறையில் வெறியாட்டம். கொலைக்கு காரணமாணவர்களை கைது செய்வதை யாரும் எதிர்கவில்லை. அவர்களது தொழிலில் ஈடுபட்டுவரும் அப்பாவி தொழிலாளர்கள் 115 பேர் மிரட்டப்பட்டனரே, இது விசாரணை என்ற பெயரில் நடந்த மனித உரிமை மீறல் தானே? கார் டிரைவர்கள் மீது வன்கொடுமை சித்திரவதைகளை காவல்துறை இழைத்ததே. மக்கள் கண்காணிப்பும் திரு ஹென்றி திபேனும் கண்டு கொள்ளாமல் விட்டது எதனால்? சுருங்கச் சொன்னால் கெலமங்கலம், தளி பகுதிகளில் அறிவிக்கப்பட்டாத நெருக்கடிநிலை காவல்துறையால் உருவாக்கப்பட்டள்ளது. “புராஜக்ட்” முடிந்து தீர்ப்பு எழுதியாகி விட்டாயிற்று அடுத்த புராஜக்ட்டில் பார்த்துக் கொள்ளாம் என்பதாலா? என்பதுதான் உண்மை! கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்!

இதை செய்தால் எல்லாம் சரியாகும். உண்மை வெளிவரும்!

Pin It