நாட்டின் அரிய நீர் வளம் குறைந்து கொண்டே வரும் ஒரு உத்திரவாதமற்ற சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இந்நிலையில் தண்ணீரை தனியார்மயமாக்குவது தண்ணீருக்கான அடிப்படை மனித உரிமையையே கேள்விக்குள்ளாக்குள்ளவதாகும். தண்ணீர் ஒரு சமூக வளமாகும். இது யாருக்கும் தனிச் சொத்தல்ல. உயிர் வாழ்வின் அடிப்படை ஆதாரமாக உள்ள தண்ணீர் தொடர்ந்து மாசுக்குள்ளாவதும் இலாப வெறியுடன் அபரிதமாக சுரண்டப்படுவதும் மனித குலம் உள்ளிட்ட அனைத்து உயிர் வாழ் இனங்களின் எதிர்காலத்தையே நம்பிக்கையற்றதாக மாற்றி விடும்.

water_ripples_350இந்நிலையில் தண்ணீர் வளம் எதிர்கொண்டுள்ள தீவிரமான பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வுகள், தண்ணீர் வளத்தைப் பாதுகாப்பதையும் மேம்படுத்துவதையும் மேலாண்மை செய்வதையும் உள்ளடக்கிய தண்ணீர் கொள்கை ஒன்று நடுவண் அரசினால் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் உலகமயமாக்கல் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பின்னர் நடுவண் அரசு நாட்டை பன்னாட்டு கம்பெனிகளுக்கு முழுமையாக திறந்துவிட்டது மட்டுமின்றி இயற்கை அளித்த கிடைத்தற்கரிய அனைத்து அற்புத வளங்களையும் விற்கத் தொடங்கியது. கடந்த 1980களின் இறுதியில் தொடங்கிய இந்த போக்கு தற்போது தீவிரமடைந்துள்ளது. கடந்த 2002ல் இயற்றப்பட்ட தேசிய தண்ணீர்க் கொள்கையானது தண்ணீரை தனியார்மயமாக்குவது, அதை வியாபாரமாக்குவது என்ற நச்சு அம்சங்களை முன்வைத்தது. இதற்கு நாடு தழுவிய எதிர்ப்பு எழுந்தது. இதனால் சற்று பின்வாங்கிய அரசு இன்று அதே கொள்கையை மேலும் தீவிரமான மக்கள் விரோத அம்சங்களுடன் முன்வைத்துள்ளது.

தேசிய தண்ணீர் கொள்கை 2012ல் தண்ணீர் தனியார்மயமாக்குவதை மட்டுமின்றி, விவசாயத்திற்கு தண்ணீர் அளிப்பதை முன்னுரிமையளித்து வந்ததை நீக்கி விட்டது. இதன் பொருள் விவசாயத்தை விட பன்னாட்டுத் தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் அளிப்பதில் முன்னுரிமை வழங்கப்படும் என்பதே. இந்திய மக்களின் உணவுத் தேவைக்கு தண்ணீர் அளிப்பது எல்லாம் முக்கியமல்ல; எங்களுக்கு பன்னாட்டு கம்பெனிகளின் உற்பத்தி தங்கு தடையின்றி நடக்க வேண்டும் என்பதே முக்கியமானது என்கிறது மன்மோகன் சிங் அரசு. இதைவிட தண்ணீரை வணிகமயமாக்கி அதை ஒரு விலை கொடுத்து வாங்கும் பண்டமாக்கினால் அன்றி அதை வீணாக்குவதைத் தடுக்க முடியாது என்று தனியார்மயமாக்குவதற்கும் வியாபாரமயமாக்குவதற்கும் ஒரு நொண்டிச் சாக்கு கூறுகிறது. இது சரியானதுதான் என்று கூறி ஆதரிக்கும் சில படித்த மேதாவிகளும் உள்ளனர். இன்னும் மனித குலத்தின் உயிரை உறிஞ்சி எடுக்கப் போகும் இந்த அபாய கொள்கையின் தீவிரம் பற்றி உணரமுடியாத அப்பாவி மக்களும் உள்ளனர். இந்த கொள்கையை எப்படியாவது தடுத்து நிறுத்துவதே நமது நாட்டின் அனைத்து மக்களின் முன்னுள்ள முக்கிய கடமையாக உள்ளது. பலரும் நினைப்பது போல், தண்ணீர்ப் பிரச்னை அவ்வளவு எளிமையானது அல்ல. பிரச்னை ஆழமானது; மிகவும் சிக்கலானது என்பதை இங்கு விரிவாகக் காண்போம்.

பொதுவாக கடினமான எந்தப் பொருளையும் அதைச் சுற்றியுள்ள புதிர்களை அவிழ்த்து யாரும் புரிந்து கொள்ளும்படி எளிமைப்படுத்திப் புரிய வைப்பது வழக்கமாக உள்ளது. ஆனால் தண்ணீரைப் பொறுத்தவரை விஷயம் இந்நடைமுறைக்கு எதிர்மாறாகவே உள்ளது. ஆம். தண்ணீரை நாம் சில எளிமையான விஷயங்களை வைத்தே புரிந்து கொள்கிறோம். தண்ணீர் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது நாம் அன்றாடம் பயன்படுத்தும் குடிநீரும் மற்ற தேவைகளுக்காகப் பயன்படுத்தும் நீரும்தான்.தண்ணீரின் பயன்பாடு இந்த எளிமையான விஷயங்களிலிருந்து சிக்கலான விஷயங்களை உள்ளடக்கியுள்ளது.

அனைத்து வகை உயிர்வாழ் இனங்களின் வாழ்விற்கு காற்று, நீர் மற்றும் தாவாரங்கள் ஆகிய மூன்றும் அவசியமாக உள்ளன. இந்த மூன்றும் ஒன்றையொன்று பிரிக்க முடியாதபடி சார்ந்துள்ளன. மனித குலமும் விலங்குகளும் உணவுக்காக தாவரங்களை சார்ந்துள்ளன. தாவரங்கள் தமது உயிர்வாழ்வுக்கு நீரையும் காற்றையும் நிலத்தையும் சார்ந்துள்ளன. மனிதகுலமும் தாவரமும் சுவாசிக்கும் பிராண வாயுவும் கரியமல வாயுவும் தண்ணீரிலிருந்தே பெறப்படுகின்றன. தாவரங்கள் தண்ணீரிலிருந்து பெற்றுக் கொண்டு ஏராளமான தூய்மையான காற்றை (ஆக்சிஜன் கலந்த ஆவியாக) வெளியிடுகின்றன. இங்கு தாவரங்கள் வேர்களின் மூலமாக உறிஞ்சும் தண்ணீரே காற்றாக வெளியிடப்படுகின்றது. அதே போன்று வேர்களிலிருந்து கிளைகளுக்கும் இலைகளுக்கும் இலைகளிலிருந்தும் தாவரம் முழுவதும் 90 விழுக்காடு தண்ணீரால்தான் எடுத்துச் செல்லப்படுகின்றது. தாவரங்கள் மட்டுமின்றி மனிதனின் உடல் முழுவதும் உடலின் எடையில் 70 விழுக்காடு எடை தண்ணீரால்தான் உள்ளது. உடலிலுள்ள இரத்தம் மட்டும் அல்ல உயிரணுக்களிலும் 90 விழுக்காடு தண்ணீரே உள்ளது. எனவே நாமும் அனைத்து வகை உயிரினங்களும் உயிர் வாழ ஏராளமான தண்ணீர் தேவைப்படுகின்றது.

நமது அன்றாட தேவைகளுக்கான உணவுப்பொருட்களான அரிசி, கோதுமை, பருப்பு, காய்கறிகள், சர்க்கரை ஆகியவை தாவரங்களிலிருந்தே கிடைக்கின்றன. இந்த உணவைத் தயாரிக்க ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீரை தாவரங்கள் வேர்கள் மூலமாக உறிஞ்சிக் கொள்கின்றன. ஒரு மனிதன் உண்ணும் உணவுப் பொருளுக்கும் இதர தேவைப் பொருட்களுக்கும் ஒரு ஆண்டுக்கு சராசரியாக 12500 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகின்றது. 70 வயது வாழும் ஒரு மனிதனுக்கு தன் வாழ்நாளில் 875000 லிட்டர் தண்ணீர் தேவை. இது போக ஒரு நபருக்கு நாளொன்றுக்கு குடிநீர் உட்பட இதர தேவைகளுக்கு சுமார் 150 லிட்டரிலிருந்து 300 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகின்றது. இந்த அளவுகோல் வளர்ச்சியடைந்த செல்வந்த நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் வித்தியாசப்படுகிறது. ஆசிய நாடுகளில் வசிக்கும் நபர் ஒருவருக்கு நாளொன்றுக்கு 85 லிட்டர் தேவைப்பட்டால் பிரிட்டனில் வாழ்பவருக்கு 334 லிட்டரும் அமெரிக்காவில் 587 லிட்டரும் தேவைப்படுகின்றன.

உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு தண்ணீர் எவ்வளவு தேவைப்படுகின்றது என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. உதாரணமாக 1 கிலோ அரிசி உற்பத்தி செய்ய 110 நாளைக்கு 2500 லிட்டர் தண்ணீரும், 1 கிலோ கோதுமை உற்பத்தி செய்ய 130 நாளைக்கு 4500 லிட்டர் தண்ணீரும், 1 கிலோ சீனி உற்பத்தி செய்ய (கரும்பு உற்பத்தி செய்து அதன் பின்னர் பல தயாரிப்பு நிலைகளைக் கடந்து வரும் வெள்ளைச் சீனிக்கு) 240 நாளைக்கு 2800 லிட்டர் தண்ணீரும், 1 கிலோ பால் உற்பத்தி செய்ய 80 லிட்டர் தண்ணீரும், சராசரியாக 1 கால்நடைக்கு நாளொன்றுக்கு 60 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகின்றன என்று ஆய்வுகள் மூலம் கணக்கிடப்பட்டுள்ளது.

எனவே தண்ணீரின்றி எந்த உயிரினமும் இருக்க முடியாது. மனித குல வரலாற்றை புரட்டினால் நாகரீகம் வளர்ச்சிடைந்ததே நதிக்கரைகளின் ஒரங்களின்தான் என்பது புரிய வரும். தாயைப் பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே என்ற சொலவடையும் ஆதிகாலந் தொட்டே மக்களின் மத்தியில் புழக்கத்தில் இருந்து வருகிறது. தண்ணீரின் முக்கியத்துவத்தை அறிந்தே திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பே நீரின்றி அமையாது உலகு என்று குறிப்பிட்டார்.

இப்படிப்பட்ட அரிய வளமான தண்ணீரை தனியார் மயமாக்கினால் என்ன ஆகும்? தண்ணீர் வளம் அபரிதமாக உள்ளதா.? இந்த கேள்விகளுக்கான பதில்களை அடுத்த பகுதியில் ஆராய்வோம்.

தொடரும்...

Pin It