விளையாட்டுப்  பிள்ளைகளின் விவசாயம் வீடு வந்து சேராது என்பது பழமொழி. அதுபோல தலித் மக்களின் போராட்டங்களும் ஏடுகளில் ஏறாது என்பது புதுமொழி போல.

dalit_fasting_620

ஆம்! நாமக்கல் அருகே உள்ள மொஞ்சனூர் கிராம அருந்ததிய மக்களின் சுடுகாட்டுப் பாதையை மீட்டுத் தரக் கோரி விடுதலை சிறுத்தைகளின் பட்டினிப் போராட்டம்  இன்றோடு ஏழாம் நாளைத் தொடுகிறது. பட்டினிப் போராட்டம் எதற்கு என்றால் எங்கள் வெள்ளாமையை பெருக்கிக் கொள்ள அல்ல, நாங்கள் வீடு வாசலை கட்டிக் கொண்டு குளிர்சாதன அறையில் ஓய்வு எடுக்க அல்ல, நாங்கள் இறந்துவிட்டால் எங்களை நல்லடக்கம் செய்ய சுடுகாட்டுக்கு செல்ல ஒரு பாதை வேண்டும். அதுவும் உங்கள் சொந்த இடத்தைத் தரவேண்டாம். அம்மக்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தை  சுடுகாடாக பயன்படுத்தி, சுடுகாட்டிற்குச் செல்ல மூன்று அடி பொதுப்பாதையை பயன்படுத்தி வந்தனர். ஆனால் திடீரென்று நான்கு தலைமுறைக்குப் பிறகு ராமசாமி கவுண்டர் என்பவர் அந்த பாதைக்கு போலி பட்டா வாங்கி வேலியும் அமைத்துவிட்டார். இதனால் சுடுகாட்டிற்குச் செல்ல இரண்டு கிலோமீட்டர் சுற்றிச் செல்லும் அவலம் அங்கே உள்ளது.

கடந்த பனிரெண்டு ஆண்டுகளாக பாதையை மீட்டுத்தரக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தியும் மாவட்ட நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. மேலும் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி விடுதலை சிறுத்தைகளின் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதையும் பொருட்படுத்தாத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும், ராமசாமி கவுண்டரின் பட்டாவை ரத்து செய்து சுடுகாட்டுப் பாதையை மீட்டுத் தரக் கோரியும் 25க்கும் மேற்ப்பட்ட பெண்கள் உட்பட 100க்கும் மேற்ப்பட்ட மக்கள் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அதில்  22 பேர் தொடர் பட்டினிப்போர் இருந்துவருகின்றனர். இதில் அருள், கனகராஜ், ரமேஷ் ஆகியோர் ஆபத்தான நிலையில் சேலம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாநகர், புறநகர் விடுதலைச் சிறுத்தைகள் செயலாளர் பார்வேந்தன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் மறியல் போராட்டத்தில் 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டம் இதுவரை எந்த ஏடுகளிலும் வரவில்லை; எந்த தொலைகாட்சிச் செய்திகளிலும் வரவில்லை.

கார்ப்பரேட் நிறுவனங்களின் கைப்பாவையாக, ஆர்.எஸ்.எஸ்ஸின் அடிமையாக செயல்பட்ட அன்ன‌ அசாரேவுக்கு வெளிச்சம் கொடுத்த ஊடகங்கள், அவரை ஹீரோ போல் சித்தரித்த பத்திரிக்கைகள் ஏன் இதை ஒரு செய்தியாகக் கூட பதிவு செய்யவில்லை? தனுஷுக்கும், கமலஹாசன் பொண்ணுக்கும் கள்ளக்காதல் என்று எழுதியவர்கள், ஐஸ்வர்யாராய்க்கு பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று கருத்துக் கணிப்பு போட்டவர்கள், பிரபுதேவா, நயன்தாரா கள்ளக்காதலை நல்ல காதலாக மாற்ற பாடுபட்டவர்கள், நமீதாவுக்கு எப்போது கல்யாணம் என்று கவலைப்பட்டவர்கள் ஏன் இந்த போராட்டத்தைப் பற்றி பேசவில்லை, எழுதவில்லை. சச்சின் நூறாவது சதம் அடிப்பாரா? அடிப்பாரா? என்று தினம் தினம் எழுதியவர்கள் ஏன் இதைப்பற்றி எழுதவில்லை. ஆக! எங்கே இருக்கிறது நடுநிலை. அம்பேத்கர் கார்ட்டூன் விவகாரத்தில் கருத்துரிமையின் குரல்வளை நெரிக்கப்படுகிறது என்று கண்ணீர் விட்டவர்கள் எல்லாம் இன்று டாப்சி பின்னால் டிக்கெட் கேட்டு நிற்கிறார்கள். ஒன்னும் இல்லாத நடிகர்களை ஒசத்தியாகப் பேசும் ஊடகங்கள் எல்லாம் உண்மையைக் கண்டு ஊமையாக கிடப்பதால் தான் நாட்டில் இன்னமும் கடைக்கோடி தமிழன் கூட தன்னை புதைக்க ஆறடி இடம் வேண்டும் என்று போராடிக் கொண்டு இருக்கிறான்.

ஊடகங்கள் தான் மவுனித்துக் கிடக்கின்றன என்றால், தாழ்த்தப்பட்டவர்களின் ஓட்டை பங்கு போடத் துடிக்கும் அரசியல்வாதிகளின் கண்களுக்கும், தமிழ்த் தேசிய சிந்தனையாளர்களின் கண்களுக்கும், திண்ணியத்தில் நடந்த தலித் ஒருவரின் வாயில் மலம் திணித்த கொடுமை எப்படி தெரியாமல் போனதோ, கோயம்புத்தூர் கவுண்டம்பட்டியில் சங்கர் என்ற தலித் வாலிபரின் வாயில் சிறுநீர் கழித்த கொடுமை எப்படி தெரியாமல் போனதோ, பரமக்குடியில் நடந்த அரச பயங்கரவாதம்  எப்படி தெரியாமல் போனதோ, விழுப்புரம் வானூரில் கல்குவாரியில் தொழிலாளியை மலம் தின்ன வைத்து அதை அவரது மனைவியைப் பார்க்க வைத்து செல் போனில் படம் பிடித்த அவலமும் எப்படி தெரியாமல் போனதோ, விழுப்புரத்தில் பழங்குடியினப் பெண்களை அரசு அதிகாரிகள் கற்பழித்த கொடுமை எப்படி தெரியாமல் போனதோ, அப்படியே இந்தப் பிரச்சனையும் தெரியாமலே போனது. திண்ணியத்தில் நடந்த கொடுமையை கண்டித்திருந்தால் வானூரில் நடந்திருக்குமா? வாச்சாத்திக் கொடுமையை கண்டித்திருந்தால் விழுப்புரத்தில் நடந்திருக்குமா? திருவள்ளூரில் ஆற்றைக் கடந்து பிணத்தை எரிக்கும் கொடுமையைக் கண்டித்திருந்தால் இது நடந்திருக்குமா?

தன்னை தமிழ்த் தேசியப் போராளி என்றும், தமிழ்த் தேசிய சிந்தனையாளர் என்றும் கூறிக்கொள்ளும் தலைவ‌ர்கள் முதலில் ஒன்றை விளக்க வேண்டும். தமிழர் என்றால் யார் என்பதை விளக்க வேண்டும். இலங்கையில் தமிழனுக்குப் பிரச்சனை என்றால் தமிழகத் தலைவர்கள் கொந்தளிக்கிறார்கள்!!! அப்போ தமிழ்நாட்டில் சாகும், கொடுமைக்கு ஆளாகும் தலித்துகள் யார் என்பதை விளக்க வேண்டும். ஆதிக்க சாதி வெறியர்களினால் தலித்துகள் செத்தால் துடிக்காத உங்கள் உணர்வு இலங்கையில் செத்தால்  மட்டும் துடிப்பது ஏன் என்பதை விளக்க வேண்டும். அப்படியானால் உங்கள் உணர்வு உண்மைதானா? தமிழ்நாட்டில் நடக்கும் கொடுமைகளை தட்டிக் கேட்க துணிவில்லாத, மனமில்லாத ஆதிக்க சாதிவெறியர்கள் தான் சாதியத்துக்கு எதிராகவும், தமிழர் விடுதலைக்கு ஆதரவாகவும் களமாடிவரும் விடுதலை சிறுத்தைகளைப் பற்றி அவதூறு பரப்புகிறார்கள்.

பால்விலை உயர்ந்தாலும், பேருந்து கட்டணம் உயர்ந்தாலும், ஈழத்தமிழர் பிரச்சனையானாலும், மூன்று தமிழர்களின் உயிரைக் காக்க வேண்டுமானாலும் முல்லைப் பெரியார் பிரச்சனையானாலும் வீதியில் இறங்கி உயிரைத் துச்சமென மதித்து போராடி உயிர்துறப்பவர்கள் தலித்துகள். ஆனால், அவர்கள் வீடுகள் கொளுத்தப்பட்டாலும், அவர்களை அரசே சுட்டுக்கொன்றாலும், அந்தப் பெண்களை அரசு அதிகாரிகள் பாலியல் பலாத்காரம் செய்தாலும், அதிகார வர்க்கம் அவர்கள் வாயில் மலத்தை திணித்தாலும், சாதி வெறியர்கள் அவர்கள் வாயில் சிறுநீர் கழித்தாலும் தட்டிக் கேட்க மனமில்லாதவர்கள், அந்த மக்களுக்காக ஒரு துண்டு காகிதத்தையோ, ஒரு துளி பேனா மையையோ, ஒரு மணித்துளியையோ செலவழிக்காதவர்கள் தான் தன்னை தமிழ் ஆர்வலர்கள் என்றும் தமிழ்த் தேசிய சிந்தனையாளர்கள் என்றும் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு முறை தலித்துகளுக்கு எதிராக வன்கொடுமை நடக்கும் போதெல்லாம் வேறு ஒரு பிரச்சனையைப் பேசி திசை திருப்புவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இப்போது கூட மொஞ்சனூர் கிராம அருந்ததிய மக்களின் சுடுகாட்டுப் பாதையை மீட்டுத் தரக்கோரி விடுதலை சிறுத்தைகளின் பட்டினிப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. ஆனால் இவர்கள் எதைப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். கருணாநிதியால் டெசோ மாநாடு நடத்த முடியாது என்கிறார்கள்! நாடகம் ஆடுவதாக சொல்கிறார்கள்!! இப்போது தனி ஈழம் தீர்மானம் ஏன் இல்லை என்று கேட்கிறார்கள்!! அட என்னையா! நாடகம் ஆடுவதாக சொன்ன ஒருவரிடம் ஏன் நியாயத்தை எதிர்பார்க்கிறீர்கள்? தேவையில்லாத ஒன்றைப் பேசி பூர்வீகத் தமிழர்களின், ஆதித் தமிழர்களின் போராட்டங்களை மழுங்கடிக்கின்றனர். மொஞ்சனூர் கிராம அருந்ததிய மக்களின் சுடுகாட்டுப் பாதை பிரச்சனையைப் பற்றி பேச வக்கில்லாதவர்கள் தான் டெசோ பற்றி பேசிக்கொண்டு காலத்தை வீணடித்துக் கொண்டு இருக்கின்றனர்.

மொஞ்சனூர் கிராம அருந்ததிய மக்களின் சுடுகாட்டுப் பாதை பிரச்சனையைப் பற்றி பேசினால் ஜெயலலிதா உங்கள் சொத்துக்களை எல்லாம் பிடுங்கிக் கொள்வாரா? இல்லை உங்களை அரசியலில் இருந்து விரட்டி அடித்து விடுவாரா? ஏன் வாய் திறந்தால் என்ன? வந்து ஒரு ஆதரவை சொன்னால் என்ன? இலங்கைத் தமிழன், அமெரிக்கத் தமிழன் என்று பேசிப் பேசியே ஆதித்தமிழர்களை அழித்து விடாதீர்கள். மானமுள்ள, உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும் இனி ஒரு முள்ளிவாய்க்கால் சம்பவம் நிகழக்கூடாது என்று விரும்புவான். ஆனால் தன்னை தமிழ்த் தேசிய சிந்தனையாளர்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இவர்கள் தமிழ்நாட்டில் தினம் அரங்கேறும் முள்ளிவாய்க்கால் கொடுமைகளைப் பற்றி வாய் திறப்பதில்லையே ஏன்? தலித்துகளை தமிழர்களாக அல்ல, மனிதர்களாகக் கூட பாவிக்காத இவர்களிடம் மனிதநேயம் தான் இருக்கிறதா? நாமக்கல், தமிழர் பூமியில் ஒன்று தானே? அங்கு வாழும் அருந்ததிய மக்களும் தமிழர்கள் தானே? அவர்களுக்காக நீங்கள் குரல் கொடுத்தால் கூடவா தீட்டு ஒட்டிக் கொள்ளும்??

தமிழினத் தலைவர்களாகவும், தமிழ்த் தேசியவாதிகளாகவும் தங்களை கூறிக்கொள்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். சேரித் தமிழனுக்கு விடுதலை இல்லாமல், ஊர்த் தமிழனுக்கு விடுதலை கிடைக்காது. பறையன் பட்டத்தை ஒழிக்காமல் சூத்திரப் பட்டத்தை ஒழிக்க முடியாது.

Pin It