தாய்…

அம்மா நான் இங்கு நலம்தான். என்னைப் பற்றி எதுவும் கவலை கொள்ளவேண்டாம். தங்கைகளை நன்றாக படிக்கக் கூறுங்கள். நம் தோழர்கள் யார் வந்தாலும் அவர்களை வழக்கம் போல் உபசரியுங்கள். பாவம் பசியுடன் மக்கள் பணியாற்றுபவர்கள். நானும் அவர்களும் மக்களுக்காகத்தானே போராடுகிறோம்; அதற்காகத்தானே சிறைப்பட்டோம். உங்களுக்கும் குடும்பத்திற்கும் நான் அதிக வேதனைகளைத் தந்துவிட்டேன். இருப்பினும் நீங்கள் எனக்காகவும் எனது தோழர்களுக்காகவும் சிரமப்படுவது மிகுந்த வேதனைகளைத் தருகிறது. நான் இல்லை என்றால்கூட நீங்கள் எந்தக் கவலையும் படவேண்டாம். என்னைப் போல் ஆயிரம் மகன்கள் உங்களைப் பார்த்துக் கொள்வார்கள். வழக்கில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். எதற்கும் மனதை தயார் படுத்திக்கொள்ளுங்கள், நாம் இறப்பது ஓர் இலட்சியத்திற்காகவே என்று. உங்களிடம் நிறைய பேசவேண்டும் என்று என்னைப் பார்க்க வரும்போது எண்ணுவேன். ஆனால் என்னால் எதுவும் பேசமுடியாது. நீங்கள் எங்களுக்காகவும் மக்களுக்காகவும் பட்ட சிரமங்களுக்கு ஓர் நாள் நிச்சயம் விடிவு உண்டு. கவலைப்படவேண்டாம். டீக் கடை பாய்லரில் வெந்து நீங்கள் வாங்கிவரும் பொருட்கள் உங்கள் உழைப்பின் வேர்வை மனத்தோடுதான் இருக்கிறது. அம்மா நான் எழுதுவது உங்களுக்குப் புரிகிறதோ இல்லையோ எனக்குத் தெரியாது. எனக்கு அடுத்த ஜென்மம் என்ற நம்பிக்கை இல்லைதான். உங்களுக்கும்தான்... இருப்பினும் என் அற்ப மனம் ஆசைப்படுகிறது. மீண்டும் உங்கள் மகனாகப் பிறக்கவேண்டும் என்று…

- சே.ஜெ.உமர்காயான்
நடுவண் சிறை, கோவை

ரேசன் அரிசி என்றாலும் எங்கள் வீட்டில் பெரிய சட்டியில்தான் சமையல். ஊற்றிக்கொள்ள அறுசுவை குழம்பு எதுவும் இல்லை என்றாலும் ரசமாவது இருக்கும். நாங்கள் எட்டு பேர் என்றாலும் 15 பேருக்கு உண்டான உணவு எங்கள் வீட்டில் எப்போழுதும் தயாராக இருக்கும். எங்கள் வீட்டிற்கு வரும் யாரும் சாப்பிடாமல் போக முடியாது. என்னுடைய தோழர்கள் எங்கள் வீட்டில் சாப்பாடு எப்படியும் இருக்கும் என்று நம்பிவருவார்கள். சமைக்கும் போதே அம்மா தோழர்கள் யாராவது வருவார்கள்; ஒரு படி அரிசி சேர்த்து போடு என்று அதிகமாகவே சமைப்பார்கள்.

கிளைச் சிறை என்று அழைக்கப்படுகிற சப் ஜெயிலில் தினமும் காலையில் ராகி கூல், மதியம் 150 கிராம் அரிசிச் சாப்பாடு, 100 கிராம் ராகி கழி சாம்பார் என்ற பெயரில் மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, சில பருப்புகள்; அதை எண்ணிவிடலாம் என்ற அளவில் குழம்பு என்று ஊற்றுவார்கள். காலையில் ராகி கூல் 8 மணிக்கு அலுமினியத் தட்டில் ஊற்றுவார்கள், நாய்க்கு ஊற்றுவது போல். அதைக் குடித்தவுடன் கூண்டில் அடைப்பது போல் அடைத்து விடுவார்கள். சிறுநீர் கழித்தால் சிறிது நேரத்தில் பசிக்க ஆரம்பித்துவிடும். 10 மணிக்கு ஆரம்பிக்கும் கோரப்பசி. மதியம் 12.30க்கு சோறு போடத் திறந்து விடும் வேளையில் அடித்துப் பிடித்து வரிசையில் நின்று அவசர அவசரமாக சாப்பிட்டு பசியை அடக்கவேண்டும். மீண்டும் பசிக்க ஆரம்பிக்கும். ஆம் உணவின் அருமை நிச்சயம் கிளைச்சிறையில் அறிந்து கொண்டேன்.

'அம்மா ஒரே பசியாக இருக்கிறது, நாளை வரும் போது பிரட்டும், பழமும் வாங்கி வாங்க' என்று நான் பரிதாபமாகக் கேட்டதும் தாமதம், கண்களில் இருந்து நீர் தானாக வழிந்து கொண்டே இருந்தது. வாய் விட்டு அழ ஆரம்பித்தார் அம்மா. எனக்கு தர்மசங்கடமாக இருந்தது. கேட்டிருக்க வேண்டாமோ என்று என்ன ஆரம்பித்தேன். இருப்பினும் பசி, தாங்க முடியா பசி. எனக்கு மட்டும் அல்ல... என்னுடைய தோழர்களுக்கும்தான். ஒரு மாதம் அரை வயிறு சாப்பாடு, முழுநாள் அடி என்று எழும்பும் தோலுமாக வயிறு சுருங்கி, சாப்பாட்டை எதிர்பார்க்காமல் எத்தனை மணிக்கு அடிப்பானோ என்று அடியை எதிர்பார்த்து, காவல் நிலைய கொட்டரையில் படுத்துக் கிடந்த எங்களுக்கு சிறையில் பசிக்க ஆரம்பித்தது. மிச்சம் இருக்கும் உயிர், அதைக் காக்கும் போராட்டம்.

என் அம்மா ஜெமிலா தனது கணவரின் கொள்கைகள் பற்றி அறிந்திருந்தார் அவரின் போராட்ட வாழ்விற்கு துணை நின்றவர். அதனால் அவர்பட்ட வேதனைகள் ஏராளம். அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த வேளை வீட்டில் அனைவரும் உறங்கிவிட்டார்கள். அப்பா காலை 4 மணி முதல் டீக்கடையில் கடுமையான வேலையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். அம்மா மட்டும் போனவனை இன்னும் காணவில்லையே என்று நினைத்துக் கொண்டு சற்று நேரத்திற்கு முன் நடந்தவைகளை நினைத்துக் கொண்டு படுத்திருந்தார்

இரவு 9 மணி. கைகளில் இரண்டும் கப்பிக்கல் சுமந்து ஏற்பட்ட கொப்பலங்களால் சாப்பாட்டை கைகளில் எடுத்துச் சாப்பிட முடியவில்லை. உடனடி பணத்தேவைகளுக்கு கையில் கிடைக்கும் வேலைகள் செய்வது வழக்கம். பனியன் கம்பெனிக்குப் போனால் வார சம்பளம்தான். உடனடியாகப் பணம் வேண்டும் என்றால் என்ன செய்வது? கிடைக்கும் வேலைகள் பார்த்து பணம் சேகரிக்கவேண்டும். அன்று எங்களுக்குக் கிடைத்த வேலை சுண்ணாம்புக் கல்லின் மிச்சங்கள்; பவுடர்கள். இதை எல்லாம் திரட்டி இன்றைய ஹாலோ பிளாக் கற்களுக்கு முன்னோடி கப்பிக்கல் சுமந்தால் பணம் கிடைக்கும். நானும் என்னோடு தோழர்களும் சுமந்து பணம் பெற்றோம்.

அல்சரால் வயிறு புண்ணாகி இருந்தது. தயிர் ஊற்றி அம்மா சாப்பாடு ஊட்டிவிட, 'ஏண்டா இப்படி அவசரமாக சோத்த தின்னுட்டு என்ன சாதிக்கபோற? தூங்கத் தானே போற? மெதுவா சாப்பிடு..' என்றார்கள்.

'இல்லமா.. கொஞ்சம் வேலை.. வெளிய போய்ட்டு வரேன்'

'9 மணிக்கு மேல ஆச்சு... இன்னேரஞ்செண்டு எங்கே போகப் போற? ஒடம்பு சரியில்லையில.. போ போய் படு'

'இல்ல போய்யிட்டு சீக்கிரம் வந்துவிடுவேன்'

'சொன்னா கேக்க மாட்ட. என்னமோ செய்' அம்மா ஜெமிலா சலித்துக்கொண்டார். அவருக்கும் தெரியாது; எனக்கும் தெரியாது. அன்று வீட்டை விட்டு வெளியே போகும் நான், வீடு திரும்ப சில வருடங்கள் ஆகும் என்று…

இருள் சூழ்ந்த அமாவாசை இரவு அன்று ஊர் சற்று அடங்கிக் கிடந்தது. இரவுப் பணி நடக்கும் சில பனியன் கம்பெனிகளில் இருந்து ஓவர்லாக் மிசின் சத்தமும் இரவு பனியின் சலிப்பு தெரியாமல் இருக்க டேப் ரிக்கார்டர்களில் இருந்து பாட்டுச் சத்தமும் அந்த இரவைக் கிழித்துக்கொண்டிருந்தன.

வீட்டின் கதவு படபட என்று இடிப்பது போல் சத்தம். நினைவுகளில் இருந்து மீண்ட அம்மா 'ஏங்க யாரோ கதவைத் தட்டுகிறார்கள்.. போய்ப் பாருங்கள்' என்று லாந்தர் விளக்கை அதிகப்படுத்தி அப்பாவை எழுப்பி விட்டார்.

கதவைத் திறந்து பார்த்தால் வீட்டைச் சுற்றி துப்பாக்கி ஏந்திய காவல் நாய்கள். என்ன ஏது என்று கேட்பதற்குள் வீட்டிற்குள் நுழைந்த காவல் நாய்கள், அந்த வீட்டையே அலங்கோலப்படுத்தி சோதனை இட்டார்கள். எனது தந்தையை வீட்டிலேயே அடிக்க ஆரம்பித்தவர்கள், வீடு முழுவதும் சோதனையிட்டு வீட்டில் இருந்த புத்தகங்கள், துண்டறிக்கைகள் அனைத்தையும் இரண்டு சாக்கு மூட்டைகளில் போட்டு தூக்கிக் கொண்டார்கள். பயங்கர ஆயுதங்கள் கிடைத்த திருப்தி அவர்கள் முகத்தில். வெடிகுண்டுகளும், துப்பாக்கிகளை விட புத்தகங்கள்தான் அவர்களுக்குப் பயங்கர ஆயுதம்..

எனது தந்தை சேக்பரீத்தை வீட்டில் எனது தங்கைகள், தம்பி அம்மாவின் கண்முன்னால் அடித்து கையை உடைத்தார்கள். வீட்டில் சின்னஞ்சிறுமிகளாக இருந்த என் தங்கைகளின் கதறல் ஒலி அந்த இரவைக் கிழித்து பெரும் ஓலமாக மாறியது. பக்கத்து வீட்டுக்காரர்கள் சன்னமாக ஜன்னல்களையும், கதவுகளையும் திறந்து பார்க்க முற்பட்டார்கள். ஆனால் அவரவர் மனைவிகள் கதவை இழுத்து சாத்தி 'நீங்களும் ஜெயிலுக்குப் போகனுமா..?' என்று கணவர்களைக் கடிந்து கொண்டார்கள். காவல்துறையின் வண்டியில் இழுத்து வீசப்பட்ட தன் கணவரைப் பார்த்து சத்தமிட்டுக் கொண்டு எனது அம்மா காவல்துறையின் வண்டிகள் முன் நின்று போலீஸ் வேனை மறித்து சத்தமிடும்போது, கடுமையான வார்தைகளால் அச்சுறுத்தி, 'உன்னையும் வண்டியில் ஏற்றட்டுமா..? உன் மேல் என்ன கேஸ் போடுவோம் தெரியுமா..?' என்று வக்கிரமாக இளித்த காவல்துறை அதிகாரி பின் ஒரு நாள் நடு ரோட்டில் செத்தானாம். அம்மாவைத் தள்ளி விட்டு வேகமாக வேனை எடுத்துக்கொண்டு காவல் நிலையம் வந்தார்கள். பின்பு பல நாட்கள் தேடியும் நானும் தந்தையும் எங்கு வைக்கப்பட்டுள்ளோம் என்று கண்டுபிடிக்க முடியவில்லை அம்மாவால்.

எமது போராட்டக் களத்தில் எம்மை விட வீரியமாக பொதுப்பணியில் அதிகமாக பங்கு கொண்டவர் அம்மா.. எனக்கு சமுக அக்கறையும், போராட்டக் களத்தில் அஞ்சாத வீரத்தையும் தாய்ப்பாலோடு ஊட்டி வளர்த்தவர் ஆம் ஜெமிலா என்ற என் தாய்..

கோவை மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி மொட்டையப்ப ராவுத்தர் என்று அழைக்கப்பட்ட அசன் முகமது, ஜெய்தூன் தம்பதிகளுக்கு இரண்டாவது மகளாகப் பிறந்தவர்தான் எனது அம்மா ஜெமிலா. எனது தாய்வழிப் பாட்டி திருப்பூர். எனது தாத்தா அசன் முகமது புளியம்பட்டியில் வாழ்ந்தவர். அங்கு சைக்கிள் கடை, பெட்ருமாஸ் லைட், வெடிகள் விற்பனை என்று செல்வாக்காக வாழ்ந்தவர். வெடிகள் ரகசியமாகத் தான் விற்பாராம். சோதனைக்கு போலீஸ் வந்தால் அவர்கள் வரும் முன் வெடிகள் அனைத்தையும் பாலீதீன் பைகளில் போட்டு கிணற்றில் போட்டு விடுவாராம். துப்பாக்கி வேறு வைத்திருந்திருக்கிறார்.

ஒரு புலிப் பல் நீண்ட நாட்கள் எங்கள் வீட்டில் இருந்தது என்று அம்மா அடிக்கடி கூறுவார்கள். புளியம்பட்டி பகுதியில் அந்தக் காலத்தில் கால்நடைகளை அடிக்கடி கிராமத்திற்குள் வந்து வேட்டையாடிச் சென்ற ஒரு புலியை தனது தந்தை வேட்டையாடியதை நினைவு கூர்வார். தனது தந்தையை இரட்டை மாட்டு வண்டியில் ஏற்றி, புலியைச் சுட்டதற்காக ஊர் மக்கள் ஊர்வலமாக சுற்றிவந்ததை பெருமையாகக் கூறுவார். மரப் புளியை சுட்டாரா இல்லை ஓடும் புலியைச் சுட்டாரா என நாங்கள் அம்மாவை கிண்டல் செய்வோம்.

மத நல்லிணக்கத்தோடு அந்த ஊரில் முஸ்லீம்களும் பிற சமுக மக்களும் வேறுபாடுகள் இல்லாமல் இணக்கமாக வாழ்ந்த அந்த காலத்தை அம்மா அடிக்கடி நினைவு கூறுவார். பிள்ளையார் கோவில் கட்ட அந்த ஊர் மக்கள் முடிவு செய்தபோது பிள்ளையாரை திருடித்தான் வைக்கவேண்டும் என்ற பழக்கவழக்கத்தின் அடிப்படையில் யார் போய் எடுத்து வருவது என்ற நிலையில், பக்கத்து ஊரில் இருந்து பிள்ளையாரை கடத்திக் கொண்டு வந்து கொடுத்தாராம் தாத்தா. அவர் பெயராலே அந்தக் கோவில் மொட்டையப்பர் பிள்ளையார் கோவில் என்று அழைக்கப்பட்டதாம். தன் சிறு வயதிலேயே தந்தையை இழந்த என் அம்மா திருப்பூரில்தான் வாழ ஆரம்பித்தார்கள்.

அனைவரையும் போலவே திருமண வாழ்வில் அடி எடுத்து வைத்த எனது அம்மா கொஞ்ச நாட்களிலேயே எதார்த்த வாழ்வைப் புரிந்துகொண்டார்கள். 1974ம் ஆண்டு திருப்பூரில் கொடிய பஞ்சம் நிலவியது. நெடியதூரம் சென்று ஒரு குடம் தண்ணீர் கொண்டு வரவேண்டும். உணவுத் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடியது. குச்சிக் கிழங்கு ஒரு ரூபாய்க்கு வாங்கினால் காலை, மதியம், இரவு என அதையே சாப்பிட்டு தண்ணீர் குடித்து பசியாறுவார்களாம். வாரத்திற்கு ஒரு முறை ரேசனில் சிறிது அரிசி போடுவார்களாம். அதை வைத்துக்கொண்டு வாரத்தில் ஒருமுறையோ அல்லது இருமுறையோ அரிசி சாப்பாடு, கோதுமை மாவு களி. இதுதான் சிறப்புணவு. தமிழகத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்நிலை இதுவாகத்தான் இருந்தது. இந்தியா முழுவதும் எழுந்த அவசர நிலைப் பிரகடனத்திற்கு எதிராகவும் உழவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் போராட்ட மேகங்கள் திரண்டன.

கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. இந்தியா முழுவதும் நக்சல்பாரி எழுச்சியில் உந்தப்பட்ட புரட்சியாளர்கள் அனைவரும் ஓர் அணியில் திரண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ம.லெ. என்று போலி கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராகவும், அவர்களின் திருத்தல்வாதத்திற்கு எதிராகவும் ஒன்று பட்ட நேரத்தில்தான் அதில் இனைத்து கொண்ட என் தந்தைக்கு ஆதரவாக என் தாயும் நின்றார். தலைமறைவு தோழர்கள் வீட்டிற்கு வந்து என் தந்தையோடு பேசியும், கைகளால் எழுதப்பட்ட சுவெரொட்டிகள் எழுதியும் அதை ரகசியமாக ஓட்டும் வேலையில் ஈடுபட்டும் இருந்தனர். எனது தந்தைக்கும் அவர் தோழர்களுக்கும் அடிக்கடி வர டீ வைத்து கொடுப்பதும், அவர்கள் பேசுவது புரிகிறதோ இல்லையோ அவர்கள் நல்லதுக்குதானே போராடுகிறார்கள் என்று ஒதுங்கி நின்று கேட்பதுமாக அம்மா இருப்பார்.

அந்த கொடிய காலகட்டத்தில்தான் நான் பிறந்து தொலைத்தேன்.

சனநாயகம்


அரிசியை சிந்திவிட்டு
உமிக்காக அடுப்பெரிக்கும்
முதுகிலே கண்முளைத்த
நாட்டில்....!

வேட்டியை விற்றுவிட்டு
நிர்வாணத்திடம்
கோவணத்திற்காய்
பல்லிளிக்கும்
கூனல் சனநாயகம்...

இங்கே.!
விளையாட்டுப்போட்டிக்கும்
பலகோடி

சட்டமன்றத்தில்
தலையாட்டும்
போட்டிக்கும் பலகோடி
வாக்களித்த மக்களுக்கோ
தெருக்கோடி....!

மின்மினிகள்
கண்ணடிக்க-இங்கே
தாரகைகள் எங்கோ
தலைமறைவாய் வாழும்...

கூழாங்கற்களின்
குன்று மூலையின் கீழ்
வைரத்துண்டுகள்-பாவம்
வறுமை பள்ளத்தின்
வயிற்று மடிப்பில்
இடிகளின் வயிற்றில்
பிடுங்கப்பட்ட
மின்னல்கொடிகள்...!

அடடா
ஆதிக்கசர்க்காரின்
அதிகார கழிப்பறையில்
பாதிக்கப்பட்ட
துடைப்பங்களாய்...

எரிதழல் வேலேடுத்து-தம்பி
இருட்டை கீற வாடா
எதிர்கால கனல் மழைக்காய்
நீயின்றே ஏந்தடா
நெருப்புப் பந்தம்...

சதிகார சர்க்காரின்
அதிகார சவுக்குக்குப் பணியும்
சமுதய சந்தையின்
சத்தில்லா மந்தையா நீ?

கொதிக்கும் இரத்தத்தில்
குளித்து வரும் கூர்வேலே-நீ
புலிகளையும் எலிகளாக்கும்
புதிய பொருளாதார மோகினியின்
பொய் முகத்திரை கிழிப்பாய்...!

எச்சரிக்கை என்று-நீ
உச்சரிக்கும் ஓசை உரசலில்
உதடுகளே தீ பற்றட்டும்
அந்த அக்கினி புயல் நாக்கின்
அனலை சுவாசித்து
ஆகாசகோபுரங்கள்
தீப்பிடிக்கும்.....

இனியும் இங்கே..
ஏழைகளின் இரத்தத்தில்
ஏகபோக அத்தர் எடுத்தால்
பிரளயங்கள் ஏற்பட்டு
பேதங்கள் தூளாகட்டும்

பீட பூமி தாழ்ந்து
பிறக்கட்டும் சமதர்மம்.......!

- இன்னும் நினைவுகள் தொடரும்..

Pin It