electricity TNஅதிமுகவின் தனியார்மய கொள்ளை

தமிழ்நாட்டின் இன்றய மின்சார சிக்கலுக்கு மூலக்காரணமாக தனியார்மயம் மாறியிருக்கிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் சொந்தமாக உற்பத்தி செய்து கொண்டிருந்த மின்சார பணியை தனியாரிடம் ஒப்படைத்ததும், தனியாரிடமிருந்து அதிக விலைக்கு கொள்முதல் செய்வதுமானதாக மாறிய பின்னர் நேர்ந்த நேருக்கடியை இப்பொழுது தமிழ்நாடு எதிர்கொள்கிறது. இந்த தனியார்மயமே மின்சார ஊழலின் முதுகெலும்பாகி விட்டது.

2000ம் ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியம் சொந்த மின் உற்பத்தி, ஒன்றிய அரசின் மின் உற்பத்தியை வைத்தே தமிழகத்தின் மொத்த மின் தேவையை பூர்த்தி செய்தது. புதிய மின்சாரச் சட்டம் வந்ததால் தனியாரிடம் வாங்குவதை கொள்கையாக எடுத்தார்கள். இதனால் இப்போது கிட்டதட்ட 40% மின்சாரத்தை தனியாரிடம் வாங்கிக்கொண்டிருக்கிறது தமிழ்நாடு மின்வாரியம்.

இந்த தனியார் நிறுவனங்களிடம் மின்சாரம் வாங்குவதற்கு போடப்படும் ஒப்பந்தங்களில் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நிகழ்ந்திருக்கிறது. இது ஒரு சில ஆண்டுகளில் நடந்ததல்ல, கடந்த இரண்டு பத்தாண்டுகளில் நடந்த சுரண்டல்.

தமிழ்நாட்டின் மின் தேவை 10,000 கோடி யூனிட் அளவு எனில் தனியாரின் வ்ழியாக கிடைக்கும் மின்சார கொள்முதல் 4000 கோடி யூனிட் ஆக இருந்தது. இது 2018-19 இல் 10,700 கோடி யூனிட் ஆகியது. இந்த கொள்முதலில் சிறு அளவு கையூட்டாக எடுக்கமுடியுமெனில் மிகப்பெரும் தொகையாக இது மாறும். எனவே இது தங்கச்சுரங்கமாக ஊழல்வாதிகளுக்கு மாறிப்போனது.

தமிழ்நாடு மின்சாரவாரியம், ஒன்றிய அரசு ஆகியவற்றின் உற்பத்தி விலை ஒரு யூனிட்டிற்கு ரூ1.90லிருந்து ரூ2.20 ஆக இருந்தது. இந்த விலையில் அரசே உற்பத்தி செய்த வந்த நிலையில் தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ10.00க்கும் அதிகமான விலை கொடுத்து வாங்கப்பட்டது.

தமிழ்நாடு 2008-2013 வரை கடுமையான மின்சார நெருக்கடியில் தவித்த பொழுது இந்த தனியார் கொள்முதல் அதிகரித்தன. இந்த நிலையில் 2011இல் அதிமுக அரசானது தனியாரிடமிருந்து நீண்ட நாள் கொள்முதலுக்கான ஒப்பந்தங்களை தயார் செய்தார்கள்.

ஆனால் 2007இல் ஆரம்பிக்கப்பட்ட அரசு மின் உற்பத்தி நிலையங்கள் படிப்படியாக செயல்பாட்டுக்கு வந்ததால் மின் தேவையை பூர்த்தி செய்யும் நிலை ஏற்பட்டது. 2500 மெகவாட் மின் பற்றாக்குறை இருந்த இக்காலத்தில், அரசின் புதிய உற்பத்தி நிலையங்களோ 2800 மெகாவாட் அளவிற்கு உற்பத்தி செய்யும் நிலைக்கு படிப்படியாக வந்துவிட்டார்கள். எனவே மின் வெட்டும் குறைய ஆரம்பித்தது.

கூடங்குளம் அணுமின் நிலையம்

இக்காலத்தில், 2011-12 இல் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் தீவிரமாக இருந்தது. ஆனால் அரசு கூடங்குளம் அணு மின்நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வைத்தே தமிழ்நாட்டின் மின்வெட்டை குறைக்கமுடியும் என பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்தார்கள்.

கூடங்குளம் செயல்பட ஆரம்பித்து இன்றுவரை அதனால் முறையாக தொடர்ந்த மின்சாரத்தை அளிக்க முடியவில்லை. மேலும், வாக்குறுதி கொடுக்கப்பட்ட மின் உற்பத்தியும் நடக்கவில்லை. ஆனால் வருடத்திற்கு பலமுறை பழுதுபட்டு கூடங்குளம் செயல்படாமல் நின்றுபோன காலங்களே அதிகம் என்றாகியது. இந்நிலையில் மேலதிக அணு மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்கப்போகிறோம் என்கிறது ஒன்றிய அரசு.

இவ்வாறாக தமிழ்நாட்டின் மின்வெட்டு நிலை குறைந்து கொண்டு வந்த நிலையிலும் அதிமுக அரசு தனியார் நிறுவனங்களுடன் 1000 மெகாவாட்டிற்கு 15 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்திற்கு தயாரானது. அரசு உற்பத்தியில் அதிகபட்சமாக ஒரு யூனிட் ரூ2.20 என இருந்த நிலையில் தனியாரிடம் ரூ4.91 எனும் இருமடங்கு விலைக்கு வாங்க ஒப்பந்தம் போட்டது.

இந்த விலையேற்றத்திற்கான காரணமாக தனது சொந்த உற்பத்தி நிலையமான வல்லூர் உற்பத்தி நிலையத்தில் அதிக விலையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே அந்த விலையை காரணமாக்கி விலை உயர்ந்த கொள்முதலை நியாயப்படுத்தினார்கள்.

ஆனால் வல்லூர் நிலையத்தில் மின்சாரம் ஒரு யூனிட் ரூ3.40 ஆகத்தான் இருந்து வந்தது. இப்படியாக திட்டமிட்டு செயற்கை விலையேற்றத்தை அதிமுக அரசு செய்தது.

மேலும், கொள்முதலானது 1200 மெகாவாட் வரை செய்து கொள்ள வரையறையும் செய்து கொண்டது. ஆனால் ஒப்பந்தம் எடுக்க வந்த 12 தனியார் நிறுவனங்களின் மொத்த உற்பத்தித் திறன் 3430 மெகாவாட்டாக இருந்தது. இதில் 1200 மெகாவாட் மட்டிற்குமே ஒப்பந்தம் போடும் பட்சத்தில் 2122 மெகாவாட் தனியார் உற்பத்தி மிஞ்சி நிற்கிறது என்று தனியாருடன் சேர்ந்து அதிமுகவும் கவலைப்பட்டிருக்கலாம்.

தமிழ்நாட்டின் தேவை என்று எதுவும் இல்லாத நிலையில் 1200 மெகாவாட்டை தனியாரிடம் வாங்க அதிக விலைக்கு ஒப்பந்தம் போட்டது மட்டுமல்லாமல் மேலும் அதிகமாக 2122 மெகாவாட்டையும் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு வாங்க அதிமுக அரசு முடிவெடுத்தது.

சட்ட விதிகளை மீறியும் இம்முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு ஒழுங்குமுறை ஆணையம் கட்டுப்பாடு விதிக்காமல் தவிர்த்து ஆச்சரியமளிக்கும் வகையில் ஆணையிட்டது என்பது இந்த ஊழல் சாம்ராஜ்யத்தின் கோபுரகலசமாகியது. இவ்வாறான முறைகேடான ஒப்பந்தங்களின் அடிப்படையில் அதிமுக அரசு தன்னை மின்மிகை மாநிலமென அறிவித்துக்கொண்டது.

இந்த ஒப்பந்தங்களின்படி, ஒரு ஆண்டுக்கு கிட்டதட்ட 2,477 கோடி யூனிட் மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்முதல் செய்ய வேண்டும். ஆனால், தனியார் நிறுவனத்தில் ஒரு நிலையம் செயல்படாமல் போனதால் இந்த கொள்முதலானது 2105 கோடி யூனிட்டாக மாறியது.

இந்த மின்சாரத்தை அரசு உற்பத்தியில் அதிக விலை கொடுத்து அரசு உற்பத்தி செய்யும் வல்லூர் நிலையத்தின் உற்பத்தி செலவான யூனிட்டிற்கு ரூ3.50 என வைத்து கணக்கிட்டால் தனியாருக்கு யூனிட் ஒன்றிற்கு ரூ4.91 தருகிறார்கள். அதாவது ஒரு யூனிட்டிற்கு ரூ1.41 அதிகம் தருகிறார்கள்.

இதனை வைத்து கணக்கிட்டால் மொத்த 2105கோடி யூனிட் மின்சார தனியார் கொள்முதலில் ஒரு யூனிட்டிற்கு ரூ1.41 வீதம் அதிகமாக கொடுக்கப்பட்டது. அதாவது தனியாருக்கு வருடத்திற்கு அதிகமாக கொடுக்கும் தொகை ரூ2,961 கோடியாக இருக்கிறது. இந்த அதிகப்பணத்தில் யாருக்கு எவ்வளவு பங்கு என்பதை அரசு தான் கண்டறிந்து சொல்ல வேண்டும். பின்வரும் தகவல்களையும் வாசித்தால் இந்த ஊழல் இதோடு இது முடிந்துவிடவில்லை என்பதை அறியலாம்.

இவ்வாறு கொள்முதலின் பொழுது, மின்சார வாரியம் இந்த தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரத்தை வாங்கவில்லை என்றாலும் தனியாருக்கு ஒரு குறைந்தபட்ச கட்டணத்தை கொடுத்தாக வேண்டுமென்றும் ஒப்பந்தமாகியது. அதற்கு ‘நிலைக்கட்டணம்’ என்றார்கள்.

மின்சாரம் வாங்கவில்லையென்றாலும் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.2.20 கொடுத்தாக வேண்டுமென ஒப்பந்தத்தில் அதிமுக அரசு ஏற்றுக்கொண்டது. இவ்வகையில் வருடத்திற்கு கிட்டதட்ட ரூ4,600 கோடி ரூபாய் கொடுக்க வேண்டி வந்தது.

இது போன்ற தனியார் கொள்முதலை ஊழலைக் கண்டித்து மே17 இயக்கம் 2012, 2013 வருடங்களில் தொடர் பிரச்சாரம், போராட்டத்தை முன்னெடுத்தது. ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்துக் கேட்பு கூட்டத்தில் இதை குறித்து கேள்வியும் எழுப்பியது. உழவர்களுக்கான மின்கட்டண நிர்ணயம், சிறுகுறு தொழில்களுக்கான விலை உயர்வு திட்டத்தையும் எதிர்த்து அம்மக்களிடத்தில் பிரச்சாரம் செய்தது.

பெசாட் அமைப்பின் தலைவர் சா.காந்தி

உழவர்களும், வணிக சங்கங்களும் இக்கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கெடுத்து கடுமையான எதிர்ப்பை பதிவு செய்த காரணத்தினால் இந்த விலை உயர்வை கைவிட்டனர். இந்த ஒருங்கிணைப்பை பெசாட் எனப்படும் ஓய்வுபெற்ற மின்வாரிய பொறியாளர்களும், அதன் தலைவர் திரு.சா.காந்தி அவர்களும் முன்னின்று நடத்தினார்கள். இந்த பிரச்சாரங்கள் கூடங்குளம் மின் உற்பத்தி எனும் பொய் பிரச்சாரத்தை முறியடிக்க பெரிதும் உதவியது. அரசு பரப்பிய பொய் பிரச்சாரங்களுக்கிடையே இந்த ஊழல் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ஜி.எம்.ஆர் எனும் நிறுவனத்துடனான கொள்முதலை புரிந்து கொண்டால் இந்த ஊழல் வலைப்பின்னலை புரிந்து கொள்வது எளிதாகும். இந்த நிறுவனத்திடமிருந்து 1998லிருந்து 2014 வரை மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தம் உள்ளது. இந்த நிறுவனத்திடமிருந்து 196 மெகாவாட்டை வாங்கிக்கொண்டிருந்தது மின்சார வாரியம். இந்த நிறுவனத்திடம் மின்சாரத்தை வாங்க வேண்டாம் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 30-03-2012இல் சொன்னது.

ஏனென்றால், அந்த சமயத்தில் இந்த ஜி.எம்.ஆர் நிறுவனாம் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.12.77 விலைக்கு விற்றது. ஆனால் அச்சமயத்தில் அரசின் உற்பத்தி - கொள்முதல் விலையோ யூனிட்டிற்கு ரூ2.20 என இருந்ததால், இந்நிறுவனத்திடம் கொள்முதல் செய்யவேண்டாமென்றது ஒழுங்குமுறை ஆணையம். ஆனாலும் அதிமுக அரசு, ஆணையத்தின் தீர்ப்பிற்கு பின்னரும் மூன்றாண்டுகளுக்கு அதிக விலைகொடுத்து மின்சாரத்தை வாங்கியது.

இதை ஊழல் கணக்கில் சேர்க்காமல் எதில் சேர்ப்பது என 2016ஆம் ஆண்டு பெசாட் எனும் ஓய்வுபெற்ற மின்துறை அதிகாரிகள் அமைப்பு கேட்டது. அதற்கு அதிமுக அரசு இந்த மின் கொள்முதல் அவசர–கூடுதல் தேவைக்கென வாங்கியதாக சொன்னது.

தமிழ்நாட்டின் மின் தேவையான 12,000 மெகாவாட்டில் இந்த 196 மெகாவாட் அவசரத்தேவைக்கென்று வித்தியாசமான விளக்கத்தை அளித்தார்கள். இந்த ஜி.எம்.ஆர் நிறுவனம் சென்னை பேசின்ப்ரிட்ஜ் அருகே அமைந்துள்ளது. இந்த பேசின்ப்ரிட்ஜிலும் மின் உற்பத்தி நடக்கிறது. இது அரசுடையது.

ஆனால் இந்நிறுவனம் செயல்படாமல் முடக்கப்பட்டு கிடக்கிறது. அதன் அருகில் இருந்த ஜி.எம்.ஆருக்கு கோடிக்கணக்கான பணத்தை அதிமுக அரசு வாரிவழங்கியதை ஆவணம் சொல்லியது.

இதே போல, 2015ஆம் ஆண்டு ஜூன் முதல் 2016ஆம் ஆண்டு மார்ச் வரை குறுகியகால ஒப்பந்த முறையில் மின்சாரத்தை வாங்கினார்கள். இதன் விலை யூனிட் ஒன்றிற்கு ரூ5.50. இவ்வாறாக 2,100 மெகாவாட் மின்சார கொள்முதலுக்கு ஒப்பந்தமானது.

ஆனால் இந்த 2015 ஜூன் முதல் செப்டம்பர் வரையில் காற்றாலை மின்சாரம் 3500 மெகாவாட்டை உற்பத்தி செய்தது. இந்தக் காற்றாலை மின்சாரத்தின் ஒரு யூனிட் ரூ3.12 விலையாக இருந்தது. இருந்த போதிலும் ரூ5.50க்கு மற்றவர்களிடத்தில் அதிமுக அரசு கொள்முதல் செய்தது. இவ்வாறு ரூ2.00 ஒரு யூனிட் மின்சாரத்திற்கு அதிகமாக கொடுத்தது. இதனால் ஏற்பட்ட இழப்பு ரூ448 கோடி.

இதே போல அதானி குழுமத்துடன் சூரியஒளி மின் திட்டத்தில் இருந்து கொள்முதல் செய்ய அதிமுக ஒப்பந்தம் போட்டது. சூரிய ஒளியினால் உருவாக்கப்படும் மின்சாரத்தை ஒருயூனிட் ரூ7.01க்கு அதிமுக அரசு வாங்க ஒப்பந்தம் போட்டது. இது 2015இல் போடப்பட்டது.

இதே காலகட்டத்தில் சூரியஒளி மின்சாரம் ஒரு யூனிட் ரூ5.05க்கு மத்தியப்பிரதேசம் வாங்கிக் கொண்டிருந்தது. ஆந்திரா ரூ4.64க்கும், ராஜஸ்தான் ரூ4.34க்கும் வாங்கியது. இதைவிட ஒரு யூனிட்டுக்கு கிட்டதட்ட ரூ3 அதிகம் கொடுத்து ஏன் அதிமுக வாங்கவேண்டும்? அதுவும் 645 மெகாவாட் மின்சாரம் வாங்கப்படுகிறது. இதை குறித்து தனியே ஒரு கட்டுரையை ’குரல்’ விரைவில் வெளியிடும்.

ஊழல் மின்சாரம் - மே 17 இயக்கத்தின் ஆவணப்பட வெளியீடு அழைப்பிதழ்

இவ்வாறாக இக்காலத்தில் அதிமுக அரசின் ஊழல் ஒப்பந்தங்களால் தமிழ்நாடு மின்சார வாரியம் இழந்த நிதி கடந்த 10 ஆண்டுகளில் பல ஆயிரம் கோடியை எட்டுகிறது. இந்த ஊழல் போக்கினை அம்பலப்படுத்தும் விதமாக பெசாட் அமைப்பும், மே பதினேழு இயக்கமும் இணைந்து ‘ஊழல் மின்சாரம்’ எனும் ஆவணப்படத்தை தயாரித்தது.

இந்த ஆவணப்படம் 2016 தேர்தலின் பொழுது வெளியிடப்பட இருந்த நிகழ்வை தேர்தல் ஆணையம் காவல்துறை மூலமாக தடுத்து நிறுத்தியது. தோழர்.நல்லகண்ணு அவர்கள் தலைமையில் வெளியிடப்பட இருந்த இந்த நிகழ்வை இரத்து செய்து, மே17 இயக்கத்தின் மீது வழக்கு பதிந்தது தேர்தல் ஆணையம். இந்த ஆவணப்படம் இதே தினத்தில் தோழர்.பொழிலன் அவர்களின் நிகழ்வில் பள்ளிக்கரணையில் வெளியிடப்பட்டது. பின்னர் இந்த ஆவணப்படம் சமூகவளைதளத்திலும் யூட்யூப்பிலும் வெளியாகியது.

இந்த ஊழல் கட்டமைப்பை குறித்தும், தனியார்மயம் பற்றியும் மே பதினேழு இயக்கத்தின் நிமிர் பதிப்பகத்தின் வழியாக புத்தகம் 2016இல் வெளியிடப்பட்டது. திரு.சா.காந்தி அவர்கள் எழுதிய இந்நூலில் முழுமையான விவரங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் மின்சாரத்தின் தனியார்மயம் பற்றிய முழுமையான முதல் புத்தகமாக இந்நூல் உள்ளது.

இந்த ஊழல்களும், தனியார்மயமும் இன்று அரசு நிறுவனமாக, மக்களுக்கு சேவை செய்துவந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தை முடக்கும் நிலைக்கு தள்ளி உள்ளது. லாபம் கொடுத்த வாரியம் இன்று கடும் கடனில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. கொள் முதலை தனியார்வசம் கொடுத்த ஒன்றிய - மாநில அரசுகள், இப்பொழுது மின்விநியோகத்தையும் தனியாருக்கு கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

டாடா, ரிலையன்ஸ், அதானி போன்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டில் கால்பதிக்க காத்திருக்கிறார்கள். ஏனெனில் வடமாநிலங்களில் மின்சாரத்திற்கான கட்டணத்தை மக்களிடம் வசூலிப்பதில் இருக்கும் நெருக்கடிகள் தமிழர்களிடத்தில் இல்லை.

தமிழர்கள் மிகமுறையாக மின்கட்டணம் செலுத்துவதால் பெரும்லாபத்தை ஈட்டமுடியுமென மார்வாடி - பனியாக்கள் வேட்டையாட காத்திருக்கும் அபாயத்தை தொடர்ந்து மே17 இயக்கம் சொல்லி வருகிறது. இந்த நிறுவனங்களின் கைகளில் மின்விநியோகம் செல்லும்பட்சத்தில் ஏழை, சிறு - குறு நிறுவனங்கள், சிறு வணிகங்கள் கடுமையான நெருக்கடிக்குள்ளாகும்.

ஏனெனில் டில்லி, மும்பை போன்ற மாநிலங்களில் இந்த நிறுவனங்கள் மின்விநியோகத்தை கையில் எடுத்த பின்னர், மின்கட்டணம் மூன்று நான்கு மடங்கு உயர்ந்தது என்பதை மறக்க இயலாது. தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழர்களின் சொத்து. அதை காக்க வேண்டியது நம் கடமை. விழிப்புணர்வு பெறுவோம்.

- மே பதினேழு இயக்கம்

Pin It