madurai High Court 560பெற்றோர்கள் மாரடித்துக் கொண்டு கீழே விழுந்து புரண்டு கண்ணீரோடு கதறிய அந்த நாட்களை நினைத்தால் கண்கள் குளமாவதை எப்படி கட்டுப்படுத்தினாலும் தவிர்க்க முடிவதில்லை. தாங்கள் ஆசை ஆசையாய் வளர்த்த குழந்தைகளை ஒரு மருத்துவராகவோ, பொறியாளராகவோ, விஞ்ஞானியாகவோ ஆக்க வேண்டும் என்ற கனவுகளுடன் பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர்களுக்கு அவர்களை கரிக்கட்டைகளாக கொடுத்தது அந்த லாப வெறிபிடித்த, ஸ்ரீகிருஷ்ணா என்ற பெயரில் கும்பகோணத்தில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளி. அனைத்து விதிமுறைகளையும் மீறி கட்டப்பட்ட இந்தப் பள்ளிக்கு அனுமதியளித்து அரசு அமைப்புகள் பணத்திற்காக எவ்வளவு கீழ்த்தரமான விதிமுறை மீறலையும் செய்யும் என்பதை நிரூபித்தன. 94 குழந்தைகளை தனியார் பள்ளியின் லாப வெறிக்கு பலி கொடுத்த பெற்றோர்கள் பத்துவருட சட்டப் போராட்டத்திற்கு பின்பே ஒரு குறைந்த பட்ச நீதியைப் பெற்றனர். இப்போது அந்த நீதியைக்கூட நீதிபதிகள் தீ வைத்து கொளுத்தி இருக்கின்றார்கள். வழக்கின் குற்றத்தின் தன்மை எவ்வளவு கடுமையாக இருந்தாலும் அது சமூகத்தில் எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தி இருந்தாலும் அது பற்றி நீதிபதிகள் பெரிதாக கவலைப்படுவதில்லை, அவர்களுக்குத் தேவையானதை செய்துவிட்டால் அவர்கள் அனைத்தையும் சரி கட்டிவிடுகின்றார்கள்.

இந்த வழக்கில் ஆரம்பம் முதலே குற்றவாளிகளைத் தப்புவிக்கும் நோக்கத்தோடுதான் தமிழக அரசு செயல்பட்டு வந்தது என்று பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள். உண்மையில் தமிழக அரசுக்கு கொல்லப்பட்ட 94 குழந்தைகள் பற்றி எவ்வித அக்கறையும் கிடையாது என்பதுதான் உண்மை. பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் கூடுதல் இழப்பீடு கேட்டபோது அதை உச்சநீதி மன்றம் வரை போய் கொடுக்க முடியாது என்று வாதம் செய்தது தமிழக அரசு. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது ஒரு பக்கம் இருந்தாலும், அதிமுக குற்றக் கும்பலின் யோக்கியதை எவ்வளவு கீழ்த்தரமானது என்பதை தெரிந்துகொள்ள அது ஒன்றே போதுமானது. அப்படிப்பட்ட இந்தக் குற்றக்கும்பல் எப்படி இந்த வழக்கை நடத்தியிருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். காசுக்காக சாராயம் விற்று லட்சணக்கணக்கான பெண்களை விதவைகள் ஆக்கி அழகுபார்க்கும் இந்த அரசாங்கத்திடம் இருந்து பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தது ஒரு முரண்பாடாகும்.

இந்தச் சம்பவம் நடந்தபோது ஆட்சியில் இருந்தது அதிமுக என்பதையும், பெற்றோர்கள் கூடுதல் இழப்பீடு கேட்டு வழக்கு தொடுத்தபோது அதற்கு எதிராக உச்சநீதி மன்றம் வரை சென்று வழக்கை நடத்தியது அதிமுக அரசு என்பதையும் நாம் சேர்த்தே பார்க்க வேண்டும். பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டபோது தர்மபுரியில் கோவை விவசாய பல்கலைக்கழக மாணவிகள் வந்த பேருந்தை வழிமறித்து கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி என்ற மூன்று மாணவிகளையும் நெருப்புவைத்து கொளுத்திக் கொன்ற அதிமுக குற்றக்கும்பல் அதற்காக உச்சநீதி மன்றம்வரை போய் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றதை நாம் மறந்துவிட முடியாது. அப்படிப்பட்ட ஒரு கீழ்த்தரமான கட்சியும் அதன் ஆட்சியும் எப்படி பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு நீதியைப் பெற்றுத் தரும்?

94 குழந்தைகள் கொல்லப்பட்டதற்குத் தனியார் பள்ளியில் லாபவெறி எவ்வளவு காரணமோ அதே அளவிற்கு அன்று ஆட்சியில் இருந்த அதிமுக அரசுக்கும் இதில் முக்கிய பங்கிருக்கின்றது. அதனால் தான் அது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இந்த வழக்கை திட்டமிட்டே நீர்த்துப்போக செய்திருக்கின்றது. இதன் மூலம் தனியார் பள்ளிகளை நடத்திக் கொண்டிருக்கும் ரவுடி கும்பலுக்குப் புது உற்சாகத்தையும், நம்பிக்கையையும் அளித்திருக்கின்றது அதிமுக குற்றக்கும்பல்.

இந்த வழக்கில் இருந்து தற்போது அனைவரும் விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள். குறிப்பாக பள்ளியின் நிறுவனர் பழனிச்சாமி. இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை தற்போது உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன், வி.எம்.வேலுமணி ஆகியோர் ரத்து செய்திருக்கின்றார்கள். பழனிச்சாமி சிறையில் இருந்த காலத்தையே தண்டனைக் காலமாக கருதி அவரை விடுதலை செய்வதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர். ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் அனுபவிக்க வேண்டிய தண்டனை என்று உச்சநீதி மன்றம் அறிவித்துள்ள நிலையில் எப்படி பழனிச்சாமிக்கு ஏற்கெனவே கொடுக்கப்பட்ட ஆயுள் தண்டனையை அவர் சிறையில் அனுபவித்த காலத்தை மட்டும் கருத்தில் கொண்டு அவரை விடுவிக்க முடியும் என்று தெரியவில்லை. மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் நீதிபதிகள் விடுவித்துள்ளனர். ஏற்கெனவே 2014 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதி மன்றம் இந்த வழக்கில் தொடர்புடைய 11 பேரை விடுவித்தது, தற்போது அதற்கு எதிராக தமிழக அரசு மதுரை உயர்நீதி மன்றத்தில் செய்த மேல்முறையிட்டு மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.

இந்திய நீதி அமைப்பு எவ்வளவு அயோக்கியத்தனமாக செயல்படுகின்றது என்பதைத்தான் இது காட்டுகின்றது. 94 குழந்தைகள் துடிதுடிக்க தீயில் கருகி செத்திருக்கின்றார்கள். பள்ளியில் எந்தவித அடிப்படைக் கட்டுமானமும் இல்லாமல் கூரை கொட்டகையில் நடத்தி வந்திருக்கின்றார்கள். அதற்குப் பள்ளிக்கல்வித் துறையைச் சேர்ந்த அனைத்து அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளார்கள். குற்றத்தின் தன்மை என்பது மிக கொடூரமானது. தனியார் பள்ளிகளின் லாபவெறியும், அதற்கு உடந்தையாக இருந்த அரசு அலுவலர்களின் ஊழலும், அந்த ஊழலில் முக்கிய பங்காற்றிய அதிமுக குற்றக்கும்பலின் அயோக்கியத்தனம் என்று எல்லாம் சேர்ந்துதான் 94 குழந்தைகளை தீயில் இட்டு கொலை செய்திருக்கின்றது. இப்போது வழக்கில் சம்பத்தப்பட்ட அனைவரையும் விடுவித்ததன் மூலம் நீதிபதிகள் அனைத்துக் குற்றங்களையும் புனிதமாக்கி இருக்கின்றார்கள்.

குற்றத்தின் தன்மையைப் பொருத்தே எந்த ஒரு வழக்குக்கும் நீதி வழங்கப்பட வேண்டும். அரசியல் அற்ற தளத்தில் இருந்து நின்றுகொண்டு குற்றத்தின் கொடூரத்தை மதிப்பீடமால் வழங்கப்படும் தீர்ப்புகள் மீண்டும் மீண்டும் அந்தக் குற்றங்கள் நடைபெறவே வழிவகுக்கும். ராஜிவ்காந்தி கொலைவழக்கில் சிக்க வைக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சொல்வதற்கும், 94 குழந்தைகளை தன்னுடைய லாபவெறியால் கொன்றுபோட்ட பழனிச்சாமியையும் மற்றவர்களையும் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும் என்று சொல்வதற்குமான வேறுபாட்டில்தான் அரசியல் இருக்கின்றது. இந்த வழக்கில் இருந்து பழனிச்சாமியையும் மற்றவர்களையும் விடுதலை செய்திருப்பது அயோக்கியத்தனமானது. நீதியை நெருப்புவைத்து கொளுத்தும் செயல். மலைப் பாம்பு போன்று தமிழகத்தை சுற்றி இறுக்கி கொல்ல காத்திருக்கும் தனியார் பள்ளிகளுக்கும் அதற்கு அனுமதி அளித்து கோடிக்கணக்கில் சுருட்டிக் கொண்டிருக்கும் அரசுக்கும் இந்தத் தீர்ப்பால் பெரிய மன மகிழ்ச்சி ஏற்படலாம். ஆனால் துடிதுடிக்க தங்கள் பிள்ளைகளை பறிகொடுத்த அந்தப் பெற்றோருக்கு நிச்சயம் பெரும் ஏமாற்றத்தையும், வேதனையையுமே இந்தத் தீர்ப்பு கொடுக்கும்.

- செ.கார்கி

Pin It