கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராடத்தின் வாயிலாக அண்ணன் உதயகுமாரை இப்போது ஓராண்டுக்கும் மேலாக அறிவேன். என் தம்பி தமிழர் களத்தின் தென் மண்டலப் பொறுப்பாளர் நன்மாறன் பல ஆண்டுகளாக அவரோடு தோள்கொடுத்து நிற்பவன். உடன் பிறக்கவில்லையே தவிர அண்ணன் என்ற உரிமையோடு அவரோடு களம் நிற்பவன் நான். 1991க்குப் பிறகு என் தமிழின விடுதலைக்காக உயிரைக் கரைக்கத் துணிந்தவன் நான்! ஒரு சாதியில், ஒரு குடும்பத்தில், ஒரு மதத்தில் பிறந்திருந்தபோதும் என் இனம் ஒடுக்கப்படுவதை நசுக்கப்பட்டதை புழு பூச்சிகளைவிட கேவலமாக நடத்தப்பட்டதைக் கண்டு உள்ளம் நொறுங்கியவன் நான்! குடும்பம், சாதி, மதம் கடந்து இனம் என்ற ஒற்றைப் பார்வையில் நிற்பவன்! தமிழின விடியலுக்காக களம் கட்டி நிற்கும் தமிழர் களமே என் குடும்பம், தமிழினமே என் சாதி சனம்! தமிழியமே என் மதம்! என் இனத்திற்கு எதிராக சிந்திப்பவன், செயல்படுவன் அத்தனை பேருமே என் எதிரிகளே! உடன் பிறந்திருந்தாலும்கூட, ஒரே சாதியில் மதத்தில் இருந்தாலும்கூட எதிரிகளை எதிரிகளாகவே பாவிக்க விரும்புகிறவன் நான்!

அண்ணன் உதயகுமார் அண்மையில் எழுதிய 'பச்சைத் தமிழ்த் தேசியம்' என்ற கட்டுரையைப் படித்தபோது உள்ளத்தில் பல நெருடல்கள் எழுந்தன.

கர்நாடக வீதிகளில் கசாப்புக் கடையில் ஆடுமாடுகளை அறுத்தெறிவது போல தமிழர்கள் தாக்கப்பட்டபோதும், தமிழச்சிகள் சீரழிக்கப்பட்டபோதும் அந்த வெறியர்கள் தமிழர், தமிழரல்லாதவர் என்று எப்படி அடையாளம் கண்டனர்? கொலைவெறியோ, பாலியல் வெறியோ அந்த வெறியர்களுக்கு ஓர் அடிப்படை வெறியாக இருந்திருந்தால் பக்கத்தில் கருப்பு வண்ணத்தில் தாலிச்சரடு போட்டிருந்த கன்னடப் பெண்கள் மீதும் கை வைத்திருப்பார்களே! அந்தக் கன்னட வெறியர்களுக்கு தமிழர்கள் என்று அடையாளப்படுத்த என்ன வரம்பு இருந்தது? பல நூறு ஆண்டுகள் அந்த மண்ணிலேயிருந்து கன்னடம் பேசி அடித்தட்டு மக்களாயிருந்த, ஆனால் பிறப்பால் தமிழர்களாகிப் போன பெரும் பாவத்திற்காக அவர்கள் தமிழர்களாகவே அடையாளப்படுத்தப்பட்டு மிதிக்கப்பட்டார்களே அப்போதெல்லாம் இனத்தை அடையாளப்படுத்தும் வரம்புகள் எங்கே போயின?

ஈழத்தில், மும்பையில், நமது கடற்கரைகளில், இன்றும் கர்நாடகத்தில், இன்றும் கேரளத்தில் தமிழர்கள் என்று எப்படி அடையாளப்படுத்துகிறார்கள்? உதயக்குமார் அவர்கள் சொல்வது போல தமிழ்ப் பற்றும், தமிழ்ப் பேச்சும், தமிழருக்காக உழைப்பதும் ஒருவரைத் தமிழராக்கிவிடுமா? இதே வரம்புகள் பிற மாநிலங்களிலும் நாடுகளிலும் வாழும் தமிழர்களுக்கும் பொருந்தியிருக்கிறதா?

ஒரு காலத்தில் கெம்பே கவுடா ஒரு கன்னடர் என்று கருதிய கன்னடர்கள் அவரைத் தலைக்கு மேல் தூக்கி வைத்து ஆடினார்கள். அன்றைய வெங்காலூரை அதாவது இன்றைய பெங்களூரை வடிவமைத்தவர் அவரே! ஆனால், அவர் ஒரு தமிழர் என்று அறிந்தமாத்திரத்திலேயே கன்னடர்கள் அவரைத் தொலைவில் தூக்கிப் போட்டுவிட்டார்கள். இன்றைய விதானசவுதா உட்பட பல கட்டடங்களையும் சாலைகளையும் இருப்புப்பாதைகளையும் குருதியும் வியர்வையும் சிந்தி கட்டியெழுப்பியவர்கள் தமிழர்களே! ஆனால் அவர்களை யாரும் கன்னடர்களாகக் கருதி காப்பாற்றவில்லை. அவர்களுக்கெல்லாம் பொருந்தாத ஒரு ஞாயம் நமக்கு மட்டும் ஏன் கற்பிக்கப்படுகிறது என்று எனக்கு விளங்கவில்லை. வடநாட்டில் பிறந்த காந்திக்கும், நேருக்கும், அம்பேத்கருக்கும் தமிழ்நாட்டில் ஊரெல்லாம் சிலைகள்! வ.உ.சி.க்கு வடநாட்டில் சிறப்பு உண்டா? அயோத்திதாசப் பண்டிதரையும், ரெட்டைமலை சீனிவாசனாரையும் வடநாட்டில் தெரியுமா? இது அடிமைகள் நாடு! ஆண்டைகள் வைத்ததுதானே வரம்பும் சட்டமும்!

கர்நாடக வீதிகளில் தமிழர்கள் கதறக் கதற கத்தித் தொலைத்த அந்தக் காட்சிகளைக் கண்டவனும் ஒரு தமிழ்த் தேசியத்தைக் கனவு காண்கிறான்.

ஈழத்தில் நம் சொந்தங்கள் கொத்துக் கொத்தாக சதைக் குவியலாக, குருதிச் சேற்றில் பிணங்களாகக் கிடந்ததைப் பார்த்த, கேட்ட பலரும் ஒரு தமிழ்த் தேசியத்தைக் கனவு காண்கிறார்கள்.

திராவிட நச்சுக்களால் தோற்றுவிக்கப்பட்ட தமிழர் ஒடுக்குமுறை என்ற அடக்குமுறை அரசியலால் தொடர்ந்து தோல்விகளைச் சந்திக்கும் தமிழரும் ஒரு தமிழ்த் தேசியக் கனவு காண்கின்றனர்.

அறிவை மட்டுமே கசக்கிப் பிழிந்து சிலர் ஒரு தமிழ்த் தேசியக் கனவு காண்கிறார்கள். காயப்பட்ட உள்ளங்களோடு மற்ற பலர் ஒரு தமிழ்த் தேசியத்தைத் தேடுகிறார்கள்.

இப்படித் தேடுகிற யாருக்கும் ஒரு சமூகப் பொருளாதார அரசியல் பார்வை இல்லை என்று சொல்லிவிட முடியாது.

பெரியாரையும் திராவிடத்தையும் சமரசமின்றிச் சாடும் தமிழர் களத்திற்கும் ஒரு சமூக, பொருளாதார, அரசியல் பார்வை உண்டு! தமிழருக்கான, தமிழ்த் தேசியத்திற்கான ஒரு கனா உண்டு!

நாம் தமிழர் கட்சிக்கும், தமிழ்த் தேசியப் பொதுவுடமைக் கட்சிக்கும், பிற தமிழ்த் தேசிய அமைப்புகளுக்கும் அது போன்ற ஒரு பார்வை உண்டு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இத் தமிழ்த் தேசிய அமைப்புகளும், இயக்கங்களும், கட்சிகளும் அவரவர் பட்டறிவு, கற்ற பாடங்கள், சுட்ட நிகழ்வுகள் என்ற அடிப்படையில் சிற்சில வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் தமிழர் நலம், தமிழ்நாட்டின் வளங்களைப் பாதுகாப்பது, ஈழம், பிரபாகரன், வந்தேறிகள் குறித்தப் பார்வை, மொழிக் கொள்கை போன்றவற்றில் பெரும்பாலும் ஒத்தக் கருத்துடையவர்களே!

“குணா ஐயா சொல்வதுபோல, திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பதுபோலவே திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பதும் ஒருவகையில் உண்மையே” என்ற கூற்று பச்சையான சப்பைக்கட்டு! தமிழர் நலம் என்ற பார்வையிலிருந்து ஒருக்காலும் திராவிடத்தால் வாழ்ந்தோம் என்று சொல்ல முடியாது. தமிழரை ஒடுக்குவதிலும், சுரண்டுவதிலும், தமிழரை அதிகாரத்திலிருந்து வீழ்த்துவதிலும் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடம் என்ற கருத்தியல் வரிந்து கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகிறது. உதயகுமார் அவர்கள் ஈடுபட்டிருக்கிற கூடங்குளம் பிரச்சனையிலும் திராவிடத்தின் நச்சு நிலைப்பாட்டைப் பச்சையாக உணரமுடியும். கருணாநிதி, செயலலிதா, விசயகாந்து போன்ற திராவிட வந்தேறிகள் என்ன செய்தார்கள்? வைகோ சரியாகத்தானே இருக்கிறார் என்று ஒருவர் சொல்லலாம். குறிஞ்சாக்குளம் படுகொலை பற்றி சற்று விரிவாகப் பேசுவோமா? அவருடைய கட்சி நிர்வாகிகளில் தமிழர்கள் எத்தனைப் பேர் என்ற ஒரு புள்ளி விவரம் எடுப்போமா?

காந்தி இந்திய தேசியம் உருவாவதற்கு உழைத்த ஒருவர். அகிம்சை என்ற போர்வைக்குள் காய் நகர்த்திய ஓர் அரசியல்வாதி! காந்தி இர்வின் உடன்படிக்கை பற்றி, பகத்சிங்கின் தூக்கு பற்றி காங்கிரசு கொண்ட கொள்கை என்ன? காந்தி செய்த கயமை என்ன? என்பது பற்றியெல்லாம் பேசினால் புத்தன், இயேசு, அம்பேத்கரோடு காந்தியைக் கட்டாயம் சேர்க்க முடியாது. ஆனாலும் அவர் இந்திய தேசிய உருவாக்கத்திற்குப் பாடுபட்டவர். இந்திய தேசியம் என்பது பிராமண வந்தேறிகளுக்கான ஒரு கட்டாயத் தேவை. காந்திக்கு இந்த நாட்டில் பல்வேறு தேசிய இனங்கள் உண்டு என்ற அறிவு இல்லாதவர் இல்லை. இருப்பினும் ஒரு பிராமண வர்க்கச் சிந்தனையாளராகவே இந்தி தேசியம் உருவாக காந்தி முனைந்தார். இருக்கட்டும்! அதுபோன்றே, பெரியார் திராவிடத் தேசியம் உருவாகப் பாடுபட்டவர்! இல்லை இல்லை, “தமிழ்நாடு தமிழருக்கே” என்று முழங்கியவர் அவர் என்று சிலர் சில மேற்கோள்களைக் காட்டலாம். திராவிட நாடு திராவிடருக்கே என்ற கொள்கையில் கேரளத்தில் வாழும் மலையாளிகளும் ஆந்திரத்தில் வாழும் தெலுங்கர்களும் கர்நாடகத்தில் வாழும் கன்னடர்களும் துளியளவும் ஆர்வம் காட்டவில்லை என்பதை உணர்ந்த பெரியார் சொல்லாடல்களை மாற்றிக் கொண்டார். பெரியாரைத் தூக்கிப் பிடிக்கும் பலர், “அவர் தமிழ்நாடு தமிழருக்கே” என்ற நிலைப்பாட்டிற்குள் வந்துவிட்டார் என்றே வாசிக்கின்றனர்.

நடைமுறையில் “தமிழ்நாடு திராவிடருக்கே” என்ற நிலைப்பாட்டிற்குத்தான் அவர் மாறினார். தமிழ்நாட்டில் வாழ்ந்த கன்னடரும் (பெரியார் போன்றோர்), தெலுங்கரும், மலையாளிகளும்தான் திராவிடர்கள்! நாங்கள் என்றைக்குமே தமிழர்கள்! பெரியாரோ, அண்ணாவோ, கருணாநிதியோ, ம.கோ.இரா.வோ, செயலலிதாவோ, வை.கோ.வோ, விசயகாந்தோ தமிழர் தலைமை வரவேண்டும் என்றோ, தமிழ்நாடு தமிழருக்கே என்று ஆக வேண்டும் என்று கருதியவர்களா? தமிழ்நாட்டில் திராவிடர்களின் ஆட்சியைத் தக்கவைப்பதில்தான் இவர்கள் அத்தனைப் பேரும் முனைந்து வரிந்து கட்டிச் செயல்படுகிறார்கள். இவர்கள் முன் மொழிகிற திராவிடம் என்பது தமிழ்நாட்டிற்கான இவர்களது சிறப்புக் கொள்கை! அந்தச் சிறப்புக் கொள்கை என்பது தமிழ்நாட்டிற்குள் சிறுபான்மையராக இருக்கும் வந்தேறிகளின் ஆட்சி அதிகாரத்ததைத் தக்க வைப்பதேயாகும்.

நடைமுறை அரசியல்களத்தில் திராவிடர் என்பது கேரளத்தில் வாழும் மலையாளியைக் குறிக்காது! ஆந்திராவில் வாழும் தெலுங்கர்களைக் குறிக்காது! அல்லது கர்நாடகத்தில் வாழும் கன்னடர்களையும் குறிக்காது! அப்படியானால் தமிழ்நாட்டில் வாழும் தமிழரை மட்டும் அது எப்படிக் குறிக்கும்? அது தமிழ்நாட்டில் வாழும் பிற இனத்தாரைக் குறிக்கிறது. குறிப்பாக தெலுங்கு, கன்னட, மலையாளிகளைக் குறிக்கிறது. திராவிடம் என்பது அவர்களின் வல்லாதிக்கத்திற்கான கொள்கையைக் குறிக்கிறது. அது எப்படி தமிழருக்கு நன்மை பயக்கும்? அந்த திராவிடத்தின் சூத்திரதாரி பெரியார்! அவர் எப்படி இந்த வீழ்ந்து கிடக்கிற தமிழ் இனத்தில் ஓர் விடுதலைக்கான அடையாளமாவார்?

அடுத்து, இன்றைய தமிழ்நாடு என்பது என்ன? 1956ல் வளமையான பல தமிழ்ப் பகுதிகளை இழந்து குறுகி சிறுத்து நிற்பதுதானே இன்றைய தமிழ்நாடு! தேவிகுளம், பீர்மேடு, அட்டப்பாடி, கொச்சின், திருவனந்தபுரம், மூணாறு, இடுக்கி, வெங்காலூர், கோலார், கொள்ளேகாலம், சித்தூர், நெல்லூர், திருப்பதி என்று எண்ணற்ற தமிழ்ப் பகுதிகளை இழந்தோம். இவையெல்லாம் இன்று திராவிட நாட்டிற்கள் அடங்கும்! ஆக, தமிழ்த் தேசியப் போர் என்பது திராவிட நாடு தமிழரதே! என்ற முழக்கத்தோடும் இழந்த அத் தமிழ்ப் பகுதிகளை மீட்பதிலுமே அடங்கும்.

திராவிட நாடு திராவிடருக்கே என்றதும் தமிழ்நாடு தமிழருக்கே என்ற புதிய சொல்லாடலை ஓடவிட்டதிலும் திராவிடர்களுக்கு என்று நோக்கமும் செயல்திட்டமும் இருந்தன. இவைகளை உற்று நோக்காது வந்தேறிகளின் வாய்சவடாலை மட்டுமே நம்பி அரசியல் களம் இறங்கும் தமிழர்கள் வருத்தத்திற்குரியவர்களே!

எனவே, “கொசுக்களைப் பாதுகாக்க வேண்டும்” என்று சொல்வது சீவகாருண்யத்தின் உச்சமாக இருக்கலாம். அதற்காகவே சாக்கடைகளை அள்ளக்கூடாது என்று அடம் பிடிப்பது தேவையில்லை. பிள்ளைகளை நோய் நொடி அண்டுகிறது என்பதற்காக கொசுக்களை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறோம். திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்கிறோம்! வாழ்ந்தோம், வாழ்வோம் என்று வரிந்து கட்டிக் கொண்டு வம்படி செய்தால், ஆழ்ந்த இரங்கலை மட்டுமே தெரிவிக்க இயலும்.

கூடங்குளம் அணு உலையைப் பற்றிப் பேசும்போது மென்னீர், நன்னீர், அணு உலை அமைப்பு, ருசிய முதலீடு போன்றவற்றைப் பேசுவதில் பொருள் இருப்பது போலவே தேவகவுடா, நாராயணசாமி போன்றதுகளையும் இதுகளின் பின்னணியில் இருக்கும் திராவிட, இந்திய வந்தேறி அரசியலைப் பற்றியும் பேசியே ஆக வேண்டியிருக்கிறது. அது போலவே, தமிழ்த் தேசிய அரசியலைப் பேசும்போது பெரியாரையும் இழுத்தே ஆக வேண்டும். வரலாறுகளை, இரண்டகங்களை, வீழ்ந்த பாதையை, தோற்ற தழும்புகளை, பட்ட காயங்களை எட்டிக்கூட பார்க்காமல் ஒரு தமிழ்த் தேசியத்தைக் கட்டிவிடலாம் என்பது, அடித்தளமில்லாமல் ஆகாயத்தில் கோபுரங்களைக் கட்டுவதற்குச் சமம்! கட்டலாம்! மதிய உணவிற்குப் பிறகு வரும் கனவில் கட்டலாம்!

பிரபாகரன் என்பார் இந்த இனத்தின் ஓர் முகமையான அடையாளம். ஈராயிரம் ஆண்டுகள் அடிமைப்பட்ட இனம் விடுதலையின் வெளிச்சத்தை அந்த மாமனிதனின் ஒப்பில்லா உயர்வாலும் செயலாலும் அடைந்தது என்பதை கற்றவருள் எவரும் மறுப்பாரில்லை. அவரைப் புகழ்வதால் மட்டுமே விடுதலை பெற்றுவிடுவோம் என்று தமிழ்த் தேசியர் யாரும் சொல்வதில்லை. ஆனால், வீழ்ந்து கிடக்கிற ஓர் இனம் தன் அடையாளங்களைப் பெருமையோடு நோக்குவது என்பது இயல்பு மட்டுமல்ல தவிர்க்கவியலாத தேவையுமாகும். இழப்புகளுக்கும், தோல்விகளுக்கும், நொறுங்கிக் கிடக்கிற சூழலிலும் நம்பிக்கைகளை விதைப்பது அந்த அடையாளங்களே! எனவேதான் வான்புகழ் கொண்ட வள்ளுவனைக் கொண்டாடுவோம், மொழிஞாயிறு பாவாணரைக் கொண்டாடுவோம், எங்கள் தலைவன் பிரபாகரனைக் கொண்டாடுவோம், வள்ளலாரை, ஓளைவையாரை, கம்பனை, இளங்கோவை, பாவேந்தரை, பாரதியை, சிதம்பரனாரை, குணாவை, அருளியாரை, பெருஞ்சித்திரனாரைக் கொண்டாடுவோம்! திலீபனை, முத்துக்குமரனை, பால்ராஜ்யை, மாலதியை, சங்கரை, மாவீரர்களைக் கொண்டாடுவோம்!

கூடங்குளம் போராட்டத்தில் பால்குடம் எடுப்பதிலும்கூட ஒரு போராட்ட உணர்வு உந்தித் தள்ளப்படும் என்று நம்புகிற நாம் அல்லது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு சின்ன யூத தேசிய இனத்தின் விடுதலைக்காகப் பாடுபட்டு உயிர்நீத்த ஓர் உத்தமனை அண்ணன் உதயக்குமார் கடந்த ஓராண்டாக நிலை கொண்டிருக்கும் இடிந்தகரை தேவாலய வளாகம் உட்பட உலகப் பரப்பெங்கும் வணங்கிக் கொண்டாடும்போது, அம் மனிதன் இன்றைக்கும் பலருடைய புரட்சிகர வாழ்வுக்கு ஒரு உந்து ஆற்றலாக இருக்க இயலும் என்றால் எங்கள் தலைவன் பிரபாகரன் இந்தத் தாழ்ந்த தமிழினம் தலைநிமிர ஓர் உந்து சக்தியாக இருக்க மாட்டானா?

அணு உலை எதிர்ப்புப் போராட்ட மேடைகளில் அந்தப் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் அண்ணன் உதயகுமாரை எத்தனையோ பேர் உயர்வாக, உச்சி குளிரப் பாராட்டுகிறார்கள். அப்படிப்பட்ட புகழ்ச்சி ஒரு போராட்ட வடிவில் ஞாயமான ஓர் அங்கம் வகிக்கிறது என்றால் பிரபாகரனைப் புகழ்வதும் தகுமே! பிரபாகரனை நாம் புகழாமல் இந்தியனும் சிங்களனுமா புகழ்வான்?

தமிழரே தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்பதில் தவறேதும் இல்லை! தமிழர் தமிழரல்லாதவர் என்று அடையாளம் காண்பதில் குழப்பம் இல்லை! அண்ணன் உதயகுமாரின் கட்டுரையே இதற்குச் சான்று! ஒரே ஒரு தமிழர் வருவார் என்று சொல்லும் பகுதியில் இயேசு, புத்தன், காந்தி, அம்பேத்கர், கார்ல் மாக்சு என்று பட்டியலிடுகிறார். அவர்களெல்லாம் தேவையில்லையா என்று கேட்கிறார். அப்படிக் கேட்கும்போது தமிழின விடுதலைக்கு ஒரு தலைவர்தான் வருவாரா? என்று கேட்கிறார்? இயேசு புத்தன், காந்தி, அம்பேத்கர், காரல் மார்க்சு என்ற அப் பட்டியல் தமிழரல்லாத நல்லோர் (ம் ஹூம்..... காந்தி உட்பட) பட்டியல்! ஏதோ நல்லோரெல்லாம் நாடு கடந்தே இருக்கிறார்கள் என்பது போல! தமிழர்களுக்கு ஒரு தலைவர் வரமாட்டார்; ஒவ்வொரு துறையிலும் பலர் வருவர். காந்தியைவிட ஈகம் பல செய்து உயிர் நீத்தவர் சிதம்பரனார், பொதுவுடமையைவிட மேலான கூட்டுடமை பற்றிச் சொல்லிய வள்ளுவர், இலக்கியம் செதுக்கிய இளங்கோ, பாட்டால் விடுதலை நெருப்பேற்றிய பாரதி, அம்பேத்கருக்கு முன்பாகவே ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்த ரெட்டைமலை சீனிவாசனார், சீவானந்தம், தமிழ்ச் சமூக விடுதலைக்கு அறிவாயுதம் தந்த அயோத்திதாசப் பண்டிதர், இசை அறிவில் கரைகண்ட ஆபிரகாம் பண்டிதர், அதில் ஓர் உச்சத்தைத் தொட்ட இளையராசா, பொதுவுடமைச் சிந்தனைகளை விதைத்த சிங்காரவேலர், நடிப்புலகில் கரைகண்ட சிவாசி கணேசன், சந்திரபாபு, கமலகாசன் அறிவுச் சுரங்கங்களை அகழ்ந்தெடுத்துக் கொடுத்த எங்கள் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், பாவேந்தர், குணா, அருளியார், பாவலரேறு, இளங்குமரனார், வள்ளலார், திலீபன், பிரபாகரன், சங்கர், மாவீரர்கள், முத்துக்குமரன் என்ற எண்ணற்ற ஒப்பற்ற வழிகாட்டிகள் தமிழ்கூறு நல்லுலகில் இருக்க நல்லோர் பட்டியல் என்றாலே காந்தி, (பகத் சிங் மன்னிக்க) நேரு, (மவுண்ட் பேட்டன் குடும்பம் மன்னிக்க), அம்பேத்கர், காரல் மார்க்சு போன்றோர் மட்டும்தான் அந்தப் பட்டியலில் எப்போதும் வரவேண்டுமா?

தமிழர் பொருளியல், சமூகவியல், அரசியல் தளங்களில் மட்டும் வீழவில்லை. மனதாலும், உளவில் வீழ்ச்சியாலும் தரையில் கிடக்கிறான். இந்த இனத்தின் விடுதலை என்பதை நோக்கும்போது பண்பாட்டுத் தளங்கள், இலக்கியம், மொழி, உள்ளம் உட்பட்ட பொருளியல் சமூகவியல் அரசியல் விடுதலையாகத்தான் நோக்க வேண்டும்!

பரந்துபட்டப் பார்வை என்ற போர்வையில் நான் வீழ்ந்து கிடக்கிற மண்ணையும் கட்டுண்டு கிடக்கிற என் மக்களையும் கடந்து போவதற்கு நான் “கடவுள்” அல்ல! வாழ்ந்த போது இயேசு ஒட்டுமொத்த விடுதலை பற்றியெல்லாம் பேசவில்லை. வாழ்ந்த போது அவரும் தன் இன விடுதலைக்காகத்தான் பாடுபட்டார். இறப்புக்குப் பின்னர்தான் அவரும் கடந்து உள் சென்றார். ஈழத்தில் மரித்த எங்கள் காவல் தெய்வங்களும் அப்படித்தான்! மொழிக் காப்புப் போரில், இனக்காப்புப் போரில் உயிரீகம் செய்த தமிழ்நாட்டு ஈகியரும் அப்படித்தான்!!

எங்கள் ஊரில் நிலங்கள் பறிக்கப்பட்டு வந்தேறிகளின் கைகளில் கிடக்கின்றன. அண்ணன் உதயகுமார் தற்போது வாழ்கிற இடிந்தகரைக்கு அருகில் உள்ள பரமேஸ்வரபுரத்திலும், உதயத்தூரிலும், சீலாத்திகுளத்திலும் தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு தெலுங்கர்கள் கைகளில் கிடக்கின்றன!

நீங்கள் வாழ்கிற கடற்கரை மணல்கள் கபளீகரம் செய்யப்பட வி.வி.மினரல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் காரணமாகி ஆண்டுகள் பல ஓடுகின்றன! அப்படி மணல் அள்ளப்பட்டதனால் ஏற்படும் கதீர்வீச்சுகள் பற்றி பச்சைத் தமிழ்த் தேசம் என்ன செய்யும்?

ஒரு சிறு தேசிய இனம்கூட தன் மொழியை, பண்பாட்டை, இன அடையாளங்களை காக்கப் போராடுகின்றன! 72 லட்சம்பேர் இருக்கிற இசுரேலில் ஐரோப்பிய ஆசிய அடையாளங்களைத் திணிக்க இயலாது. ஆனால், உலகின் மூத்த மொழியான தமிழ் இன்று பல்முனைகளால் தாக்கப்படுகிறது. அவற்றுள் ஒன்று இன்று தமிழ்நாட்டில் புற்றீசல் போலத் தொடங்கப்பட்டிருக்கும் ஆங்கில வழிப் பள்ளிகள்! (ஆங்கிலம் கற்பதற்கும், இந்தியைக் கற்பதற்கும், இன்னும் பல மொழிகளைக் கற்பதற்கும் நாங்கள் ஆதரவானவர்களே!) கணிதத்தையும் அறிவியலையும் வரலாற்றையும் ஆங்கிலத்தில்தான் கற்றுக் கொடுப்பேன் என்று அன்று ஆங்கிலேயன்கூட சொல்லவில்லை. ஆனால், இன்று நாம் செய்கிறோம். நீங்களும்கூட ஓர் ஆங்கில வழிப் பள்ளி நடத்துகிறீர்களே!

சில மாதங்களுக்கு முன்பாகக் கூட நான் சொன்னேன், “கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தோடு உதயகுமாருக்கு போராட்டம் முடிந்துவிடும். எங்களுக்கு அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் ஏராளமான போராட்டங்கள் உண்டு” என்று! ஆனால், நீங்களும் பச்சைத் தமிழ்த் தேசியம் என்ற கருவியேந்தி இப்போது களம் குதித்திருப்பது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி!

பெரிய கேள்வி என்னவென்றால், கட்டிலுக்கேற்ப காலை வெட்டுவதா? அல்லது காலுக்கேற்ப கட்டிலைச் செய்வதா? என்பதுதான்! 

என்றும் உங்கள் தம்பி,

அரிமாவளவன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

[கட்டுரையாளர் 'அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின்' அங்கத்தினர். அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் சார்பாக அரசுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளை தலைமை ஏற்று நடத்திய‌வ‌ர்.]

Pin It