வாரிசு அரசியல் என்பது வெறும் குடும்ப அரசியல் மட்டும் கிடையாது. சாதி அற்ற சமூகங்களில் தான் வாரிசு அரசியலை குடும்ப ஆதிக்கத்தின் நீட்சியாகப் பார்க்க முடியும். ஆனால், சாதி நீக்கமற நிறைந்திருக்கும் இந்திய துணைக்கண்டத்தில் வாரிசு அரசியலானது அப்பட்டமாக சாதி வெறி அரசியல் தான். தன்னுடைய சொந்த சாதிக்குள் ஒருவரைத் தெரிவு செய்வது சாதி அரசியல் என்றால், வாரிசினை முதன்மைப்படுத்துவது என்பது குரூரமான சாதி வெறி அரசியலே ஆகும். இது சாதியை அடிப்படை அலகு ஆகக் கொண்டு, சொந்த, தூய இரத்த வழி நீட்சியான தனது வாரிசுகளிடம் மாத்திரம் அதிகாரத்தை கைமாற்றுதல். அதாவது சொந்த சாதியையும் ஏமாற்றுவதுதான் வாரிசு அரசியல்.

நிலஉடைமை சார்ந்த அதிகார அமைப்புகளில் தான் மேற்கண்ட வழக்கம் உண்டு. இங்கு ஜனநாயகமும் மக்களாட்சியும் செயல்படுவதாக சொல்லப்படுகிறது. நாமும் அதனைப் பல நேரங்களில் நம்புகிறோம். ஆனால், அதிகார வெளிக்குள் கடந்த அறுபது ஆண்டுகளாக இருப்பவர் எவரும் கனவில் கூட அப்படி நினைத்துப் பார்க்கும் தவற்றினை செய்வது இல்லை. எளிய மக்களுக்கு மக்களாட்சி குறித்த புரிதல் வழங்கப்படவில்லை. அவர்கள் இன்னும் பழைய மன்னராட்சி வடிவத்தை ஏற்றுக் கொண்டவர்களாகவே உள்ளனர். தியாகம், தொண்டு போன்ற வார்த்தை ஜாலங்களின் அறுவடையாக அவர்களது குடும்ப உறுப்பினர்களை தலைமுறை தாண்டியும் இயல்பாக ஏற்கும் மனநிலையினை காணலாம். மக்களாட்சி என்ற பெயரில் பல மாநிலங்களிலும் மத்தியிலும் மன்னராட்சி கால நடைமுறையே நிலவுகிறது.

வாரிசுகள் யாருமே அரசியலுக்கு வரக்கூடாதா என்ற கேள்வி எழலாம். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் வரலாம் என்னும்போது வாரிசுகளும் வரமுடியும். இன்று ஒரு கட்சித் தலைமையினது வாரிசுகளுக்குக் கிடைக்கும் பதவி/பொறுப்பு/இடம் அதே கட்சியில் உள்ள ஒத்த வயதும் திறமையும் கொண்ட சாதாரண தொண்டனுக்குக் கிடைக்கும் சூழல் இல்லவே இல்லை. அப்படி ஒரு சூழ்நிலை உருவாகும்போதுதான் வாரிசுகள் வருகை இயல்பாகப் பொருத்தப்படும். அதுவரை, வாரிசு அரசியலும் நுட்பமான சாதி அரசியலாகவே அணுகப்பட வேண்டும்.
வாரிசு அரசியலுக்குள்ளும் இரண்டு விதமான அணுகுமுறை உள்ளது. அதாவது வாரிசு அரசியலை ஏற்றுக்கொள்வதிலும், மறுத்து விமர்சிப்பதிலும் ஊடகக் கூர்மையான சாதிப் படிநிலையினைத் தக்க வைக்கும் சூட்சும அரசியல் உள்ளது. சில நாட்களுக்கு முன் ஜெகன்மோகன் ரெட்டி தொடர்பாக எழுந்த உரையாடல்களை கவனித்தால் இந்த சூட்சுமம் புரியும். ராஜசேகர ரெட்டின் மகன் என்ற ஒரே ஒரு தகுதி மட்டுமே ஜெகனுக்கு உண்டு. அந்த வகையில் நிறைய சம்பாதித்துவிட்டார். நாற்பது வயது தான் ஆகிறது. ஒரு மாநிலத்தை ஆள்வதற்கு அவருக்கு என்ன தகுதி, திறன் உள்ளது? போன்ற குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன.

உண்மைதான். மேற்சொல்லப்பட்ட எல்லா வார்த்தைகளும் அப்படியே ராஜீவுக்கும் பொருந்தும் தானே. ஆனால், ஜெகனிடம் ஆந்திர மாநில அதிகாரம் போய் விடக்கூடாது என பேசிய, எழுதியவர்கள் அதனை ராஜீவுக்குப் பொருத்திப் பார்ப்பதை மிகத் தெளிவாகத் தவிர்த்து விடுவதோடு நியாயப்படுத்தவும் செய்வர். ஏனெனில் ராஜீவ் சாதிப் படிநிலையில் மேல்நிலையில் உள்ளவர். இந்த நுண் அரசியல் மிகவும் வலிமையானது. நாம் இருவரையுமே ஒன்றாகத்தான் பார்க்க முடியும். கூடவே, ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு, ஒரு கண்ணுக்கு வெண்ணை தடவி விடும் அகோர அரசியலையும் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது.

Pin It