32,000 கோடி ரூபாய் செலவில் கூடங்குளத்தில் 3 மற்றும் 4 அணு உலைகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருப்பதாகவும், ரஷ்யா 18,700 கோடி ரூபாய் கடன் அளிக்க முன்வந்திருப்பதாகவும் செய்திகள் வெளி வந்துள்ளன.

 அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் இதை வன்மையாக கண்டிக்கிறது, எதிர்க்கிறது. இந்த 3, 4 அணு உலை குறித்து, தமிழகத்தை மாற்றி மாற்றி ஆண்டு கொண்டிருக்கும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளும் தலைவர்களும் தங்கள் நிலைப்பாட்டை அறியத் தரவேண்டும் என எமது இயக்கம் கோருகிறது.

 சிங்கள வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி தரக்கூடாது என்றும், தமிழ் மீனவர்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்றும், ஹஜ் பயணத்தில் தமிழர்களுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப் படவேண்டும் என்றும் தமிழ் மக்கள் பிரச்சினைகளில் தொடர்ந்து குரல் கொடுக்கும் தமிழக முதல்வர் இந்த கூடங்குளம் விரிவாக்கம் குறித்து தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

 போன வருடம் செப்டம்பர் மாதம் நாங்கள் முதல்வரை சந்தித்தபோது, மேற்கு வங்க மாநில முதல்வர் தனது மாநிலத்தில் அணு உலை வேண்டாம் என்று சொல்கிறார், அதுபோல நீங்களூம் கூடங்குளம் பிரச்சினையில் முடிவெடுங்கள் என்று கேட்டுக்கொண்டோம். அப்போது, அந்த திட்டம் துவக்க நிலையில் இருப்பதால் அவரால் அப்படி செய்யமுடிந்தது என்று முதல்வர் விளக்கிச் சொன்னார். இப்போது கூடங்குளம் 3, 4 பிரச்சினையில் தமிழக முதல்வர் அப்படி ஒரு முடிவெடுக்கவேண்டும் என்று தமிழ் மக்கள் நிச்சயம் எதிர்பார்க்கிறார்கள்.

 ஈழத் தமிழர்களுக்காக டெசோ மாநாடு நடத்தவிருக்கும் தி.மு.க.வும் அதன் தலைவரும் இந்த கூடங்குளம் விரிவாக்கப் பிரச்சினையில் தங்கள் கட்சி நிலை என்ன என்பதை தமிழ் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஈழத் தமிழர்கள் பிரச்சினையைப் பற்றி பேசுவதற்கு முன் இங்குள்ள தமிழர்களின் வாழ்வும், வாழ்வாதாரமும் கெட்டுக் கொண்டிருப்பதைப் பற்றி இவர்கள் பேசியாக வேண்டும்.

 அணு உலைத் திட்டங்கள் மக்களுக்கு, மக்களின் நல்வாழ்வுக்கு, வாழ்வாதாரங்களுக்கு உகந்தவை அல்ல என்பது உலகறிந்த உண்மை. எனவேதான் சப்பானிய மக்கள் தங்கள் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஜெர்மனி போன்ற நாடுகளில் அணு உலைகளை மூடி வருகிறார்கள். நம்நாட்டில் கூட நமது அண்டை மாநிலமான கேரளாவில் அணு உலை வேண்டாம் என்பதில் அனைத்து கட்சிகளும் ஒன்றாகவே சேர்ந்து செயல்படுகிறார்கள். பிற மாநிலங்களிலும் இந்திய மக்கள் அணு உலைகளைக் கடுமையாக எதிர்த்து போராடுகிறார்கள்.

தமிழகத்தில் மட்டும் கூடன்குளம், கல்பாக்கம் என்று மேலும் மேலும் அணு உலைகளை நம் மீது திணிக்கிறார்கள். தமிழக முதல்வர் அவர்களும், முன்னாள் முதல்வர் அவர்களும் உடனடியாக இந்த கூடன்குளம் விரிவாக்கத் திட்டத்தில் தங்கள் கட்சிகளின் நிலையினை அறிவித்து, இந்த விரிவாக்க திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கோரிக்கை வைக்கிறது.

 தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும், சமூக இயக்கங்களும், அவற்றின் தலைவர்களும் இந்த விரிவாக்கத்தை எதிர்த்து நிறுத்த வேண்டும் எனவும் அன்போடு கோருகிறோம்.

சுப.உதயகுமார்

ம. புஷ்பராயன்

மை. பா. சேசுராசு

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்,

இடிந்தகரை

Pin It