பால் விலை கூடுகிறது; பஸ் கட்டணம் எகிறுகிறது, பள்ளிக்கூட ஃபீஸ் கட்ட முடியவில்லை... என்கிற வீண் புலம்பல்களை எல்லாம் இனி விட்டுத் தள்ளுங்கள். உங்களால், ஒரு நாளைக்கு 22 ரூபாய் 50 காசு சம்பாதிக்க முடிகிறதா...? அப்படியானால், நிச்சயமாக நீங்களும் பணக்காரரே. இது விளையாட்டல்ல. மத்திய திட்டக் கமிஷனில் உள்ள பொருளாதார மேதைகள், அலசி ஆராய்ந்தப் பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிற சங்கதி இது.

‘வறுமைக்கோட்டை தீர்மானிப்பதற்கான வரையறைகள் என்று நீங்கள் கடைபிடிக்கிற விஷயங்கள் என்ன? மானிய விலையில் உணவு, தானியங்கள் பெறும் தகுதி கொண்டவர்கள் பட்டியலில் இடம் பெறுபவர்களின் மாத/நாள் வருமானம் எவ்வளவாக இருக்கவேண்டும் என நீங்கள் நிர்ணயம் செய்து வைத்திருக்கிறீர்கள்?’ - மத்திய திட்டக் கமிஷனிடம், கடந்த செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் கேட்ட கேள்வி இது.

‘கிராமங்களில் வாழ்பவராக இருந்தால், தின வருமானம் 25 ரூபாய், நகரங்களில் வசிப்பவராக இருந்தால், தின வருமானம் 32 ரூபாய். இதற்குக் குறைவாக வருமானம் ஈட்டுபவர்கள் மட்டுமே வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்கள்’ - இது, உச்சநீதிமன்றத்துக்கு திட்டக்கமிஷன் அளித்த பதில் இது. உச்சநீதிமன்ற நீதிபதிகளை மட்டுமல்ல... ஒட்டுமொத்த மக்களையும் திடுக்கிட்டு நிமிரச் செய்தது இந்த அதிரடி பதில். ‘குளிர்சாதன அறைகளுக்குள் அமர்ந்து கொண்டு, அடித்தட்டு மக்களின் வறுமையை அளவிட நினைப்பது அக்கிரமம்’ என நாடு முழுவதும் கடும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.

அதன் பிறகு அந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால், நிரந்தரமாக அல்ல. கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய திட்டக்கமிஷன் அதிகாரப்பூர்வமான ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அந்த அறிவிப்பின் படி, கிராமப்புறங்களில் நாளொன்றுக்கு 22 ரூபாய் 42 காசு, நகர்ப்புறங்களில் நாளொன்றுக்கு 28 ரூபாய் 65 காசுக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் இனி வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்களாக கருதப்பட மாட்டார்கள் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, கிராமங்களில் நாளொன்றுக்கு 22 ரூபாய் 50 காசு வருமானம் ஈட்டும் ஒரு கூலித் தொழிலாளி, இனி ஏழையாக கருதப்படமாட்டார். அவரும் இனி இந்தியாவின் பணக்காரர்களுள் ஒருவரே!

கிராமமாக இருந்தால் 25 ரூபாய், நகரமாக இருந்தால் 32 ரூபாய் என்ற செப்டம்பர் மாத வறுமைக்கோட்டு அறிவிப்பே பரவாயில்லை என்கிற அளவுக்கு, நிலைமை இப்போது இன்னும் மோசமாகி இருக்கிறது. வறுமைக்கோடு குறித்த முந்தைய அறிவிப்பு ஏற்படுத்திய சர்ச்சை, நாடு முழுவதும் கிளம்பிய எதிர்ப்புகளை, மத்திய திட்டக்கமிஷன் உறுப்பினர்கள் துளியும் பொருட்படுத்தவில்லை என்பதை இந்த அறிவிப்பு நிதர்சனமாக உணர்த்துகிறது. மாறாக, ‘இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களின் எண்ணிக்கை 7.3 சதவீதம் அளவுக்கு இப்போது குறைந்திருக்கிறது’ என்ற பெருமித அறிவிப்பு திட்டக்கமிஷனிடம் இருந்து வந்திருக்கிறது.

திட்டக்கமிஷன் என்பது சாதாரணமானதல்ல. பொருளாதார மேதைகளை தன்னுள் கொண்டது. பிரதமர் மன்மோகன் சிங்கை தலைவராகவும், மான்டேக்சிங் அலுவாலியாவை துணைத்தலைவராகவும் கொண்டது என்பதில் இருந்தே, இந்தக் குழுவின் பொருளாதார நிபுணரத்துவத்தை யாரும் புரிந்து கொள்ள முடியும். 2004&05ல் இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்தவர்கள் அளவு 37.2 சதவீதம். அது, 2010&11ல் 29.8 சதவீதமாக குறைந்திருக்கிறது. அதாவது, 2004&05ம் ஆண்டுகளில் வறுமைக்கோட்டுக்குள் சிக்கித் தவித்து, படாதபாடு பட்ட ஏழு சதவீதம் பேர், தங்களது கடின, அயராத உழைப்பு மற்றும் அரசாங்கத்தின் சிறப்பான பொருளாதாரக் கொள்கைகள், திட்டங்கள் காரணமாக, ஏழை என்கிற அவப்பெயரை உதறித்தள்ளி இப்போது பணக்காரர்களாக மாறியிருக்கிறார்களாம்!

திட்டக்கமிஷனின் இந்த தடாலடி அறிவிப்பு, அப்பாவி பொதுமக்களை மட்டுமல்ல... சக அரசியல் கட்சிகளையும் கூட திக்குமுக்காட வைத்திருக்கிறது. புதிய வறுமைக்கோட்டு அளவீடுகளின் படி, கிராமப்புறத்தைச் சேர்ந்த ஒரு நபரின் ஒரு நாள் வருமானம் 22 ரூபாய் 42 காசுக்கு மேல் இருந்தால், அவர் இனி ஏழை அல்ல. நான்கு பேர் கொண்ட குடும்பமாக இருந்தால், ஒரு நாள் வருமானம் 89 ரூபாய் 68 காசுக்கு மேல் இருந்தால் போதும். அதாவது மாதம், 2 ஆயிரத்து 690 ரூபாய் சம்பாதிக்கிற, நான்கு பேர் அடங்கிய குடும்பம் இனி வறுமைக்கோட்டு அளவீடுகளுக்குள் வராது.

இந்த 2 ஆயிரத்து 690 ரூபாய் மாத வருமானத்தை வைத்துக் கொண்டு அந்த குடும்பத் தலைவர் உணவு, உடை, குழந்தைகளின் கல்வி, மருத்துவச் செலவுகள், வீட்டு வாடகை, போக்குவரத்துச் செலவு, இன்னும் எதிர்பாராத சுப/சோக செலவுகள் அத்தனையையும் சமாளிக்கவேண்டும். முனைகளில் கிழிந்து, ஒட்டுப்போட்ட பையை கையில் எடுத்துக் கொண்டு காய்கறி, அரிசி, பருப்பு, எண்ணெய் வாங்க கடைத்தெருவுக்குச் செல்கிற பாமர மனிதனின் வலி திட்டக்கமிஷன் உறுப்பினர்களை இன்னும் சென்று சேரவில்லை என்பது மிக வேதனையான விஷயம்.

இந்தியா ஒளிர்கிறது, வளர்கிறது... சாப்ட்வேர் நிறுவனங்கள் படையெடுக்கின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடுகளைக் கொண்டு வந்து குவிக்கின்றன என அடுக்கடுக்காய், அழகழகாய் அறிவிப்புகளை அடுக்கினாலும் கூட, இந்தத் தேசத்தின் பெரும்பான்மை மக்கள், தங்கள் வருமானத்துக்குள் வாழ்க்கையை நகர்த்தி விடமுடியாத ஏழைகள் என்பதே அப்பட்டமான உண்மை. சாப்ட்வேர் பணியாளர்களின் அதிசொகுசு கார்கள் விரைகிற சாலையின் ஓரங்களில் வசிப்பவர்களுக்கு சாப்பாடு பிரச்னையே இன்னும் தீர்ந்தபாடில்லை. கிராமப்புறங்களில் இருந்து கூலிவேலைகளுக்காக நகர்ப்புறங்களுக்கு செல்லும் அப்பாவி மக்கள், பஸ்களில் டிக்கெட் கட்டணம் கட்டுபடியாகாமல் லோடு ஆட்டோக்களில் ஆட்டுமந்தைகளாய் அடைந்து செல்லும் காட்சிகள் கண்ணில் தினமும் படுகிறது. லோடு ஆட்டோக்களில் சென்று விபத்துக்களில் சிக்கி, கொத்துக் கொத்தாய் செத்து விழுகிற செய்திகளும் தினமும் வருகிறது.

நாள் வருமானம் 22 ரூபாய் 42 காசு என்கிற அறிவிப்பு மூலம் இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை குறைகிறது... ஏன், ஏழைகளே இல்லாத தேசமாகி விட்டது இந்தியா என்று கூறி நாமெல்லாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால், முகத்தில் அறைகிற நிஜம் அதுவாக இராது. மூங்கில் குச்சிகளை குறுக்கும், நெடுக்குமாய் போட்டு, அதற்கு மேல் காய்ந்து போன ஓலைகளை வேய்ந்து நடத்தப்படுகிற கிராமப்புற ஓட்டலில் 2 இட்லி, ஒரு பொங்கல் சாப்பிட்டு, கடைசியாய் ஒரு காபியும் குடித்து விட்டு கை கழுவ எழுந்திரிக்கையில், பில் வந்து சேரும். ஒரு நாள் வருமானம் என்கிற திட்டக்கமிஷனின் புதிய அளவீடு, அந்த ஓட்டலில் ஒருவேளை சாப்பிடக் கூட பத்தாது என்கிற உண்மையை அந்த பில் தெளிவாக உணர்த்தும்.

கிராமங்களில் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்கிற மக்கள் நிலைமைதான், இன்றைய நிலைமையில் படு மோசம். அரை சென்ட் நிலம் கூட சொந்தமாக இல்லாத ஒரு ரியல் எஸ்டேட் புரமோட்டார், ஐந்தே வருடங்களில் பல கோடிக்குச் சொந்தக்காரராக நம்மூரில் ஆகமுடிகிறது. ஆனால், ஐம்பது ஏக்கருக்குச் சொந்தக்காரராக இருக்கிற விவசாயியின் நிலைமையோ, அடுத்தவேளைக்கு திண்டாடுகிற அளவில்தான் இருக்கிறது.

குறுவிவசாயிகள் சிலரிடம் பேசியபோது, ‘‘வெறுமனே கடன் தள்ளுபடி அறிவிப்பு செய்தால் மட்டும் போதுமா? கடன் தள்ளுபடி அறிவிப்புகளால் சாதாரண விவசாயிகளுக்கு பெரிதாக எந்தப் பலனும் இல்லை. விவசாயத்தொழிலுக்கு மறைமுக நெருக்கடிகள் நாளுக்குநாள் அதிகரிப்பதை பார்க்கும் போது, விளைநிலங்களை, விலைநிலங்களாக்கும் திட்டம் ஓசைப்படாமல் நடந்து வருகிறதோ என சந்தேகப்படவேண்டியிருக்கிறது. மத்திய அரசு கொண்டு வந்த தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், விவசாயத் தொழில் மீது கொஞ்சநஞ்சம் ஆர்வமிருந்தவர்களையும் சோம்பேறிகளாக்கி விட்டது. உள்ளூரில் விளைகிற கோதுமையை விட, தரம் குறைந்த ரகத்தை ஆஸ்திரேலியாவில் இருந்து அதிகவிலை கொடுத்து இறக்குமதி செய்கிறது மத்திய அரசு. வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் குறித்த தர நிர்ணயம் நேரடியாக பாதிப்பது, இந்த நாட்டின் நாடி நரம்புகளாகக் கருதப்படுகிற விவசாயக் குடும்பங்களை மட்டுமே. நாட்டு நடப்புகளை பார்க்கும் போது, கையில் இருக்கிற நிலத்தை கிடைக்கிற விலைக்கு தள்ளி விட்டு, வேறு பிழைப்பைத் தேடிச் செல்லத்தான் தோணுகிறது. உழுதவன் கணக்குப் பார்த்தால்... உழக்கு கூட மிஞ்சாது என்பது சத்தியமான வார்த்தைகள்!’’ என்கிறார்கள்.

‘மக்கள் எல்லாம் சாப்பிடுவதற்கு ரொட்டி கிடைக்காமல் திண்டாடுகிறார்கள்...’ என்று பிரெஞ்ச் தேசத்து அரசி ஒருவரிடம் மந்திரிகள் முறையிட்ட போது.... ‘ரொட்டி கிடைக்காவிட்டால் என்ன...? அவர்கள் கேக் சாப்பிடலாமே!’ என்று அரசியிடம் இருந்து பதில் வந்தது. திட்டக்கமிஷனின் அறிவிப்பு, பிரெஞ்ச் தேசத்து அரசியின் பதிலைத்தான் நினைவுப்படுத்துகிறது.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It