கல்லறை அழைக்கும் கடைசிக் காலத்தில்
ஒவ்வொரு மனிதனும்
திரும்பிச் செல்ல ஏங்கும் இடங்கள் இரண்டு.
ஒன்று,
தாயின் கருவறை.
இன்னொன்று,
படித்த வகுப்பறை.

இன்றைய உலகமயமாக்கல் சூழலில் வளரும் நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகள் வளர்ந்த நாடுகளால் வரையறை செய்யப்படுகின்றன. இதனால் இந்தியா போன்ற நாடுகளில் கல்வி என்பது அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஒன்றாக மாற்றப்பட்டு வருகிறது. இந்தியக் கல்வி வணிகமயமாகி வருவதை இந்தப் பின் காலனியச் சூழலில்தான் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
இந்தியாவில் அனைவருக்கும் சமமான கல்வி அளிக்க வேண்டிய பொறுப்பிலிருந்து மத்திய, மாநில அரசுகள் கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருகின்றன. இதனால் ஏற்றத்தாழ்வான கல்வி முறையை உருவாக்குவதில் வணிக ரீதியிலான கல்வி நிறுவனங்கள் பெரும் வெற்றியை ஈட்டியுள்ளன. அரசுக் கல்வி நிறுவனங்கள் தரமின்றி தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட முடியாத நிலையில் இருப்பது குறித்து எந்த அரசும் கவலை கொள்வதாகவே தெரியவில்லை. அதற்கு மாறாக இந்த கவனிப்பின்மை மூலமாக தனியார் கல்வியை மறைமுகமாக ஊக்குவிக்கும் விதத்திலேயே செயல்படுகின்றன.
போதிய ஆசிரியர்கள் இன்றி, நல்ல கட்டிடங்கள் இன்றி கவனிப்பாரற்றுக் கிடக்கும் அரசுப் பள்ளிகள் இந்தியாவில் ஏராளம். ஏழை, எளிய மக்களின் கல்விக்கான ஆதாரங்களாக இருக்கும் பல பள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாகச் செயலிழந்து வருகின்றன. அந்த வகையில் செயலிழந்து சாவை எதிர்நோக்கி உள்ளது மதுரை லேபர் பள்ளி. வணிக வளாகம் கட்டப்படுவதற்காகத் தன் கல்விப் பணியை நிறுத்திக் கொள்ளும் நிலையில் உள்ளது இப்பள்ளி.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் ஏராளமான மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்ந்தது மதுரை கோட்ஸ் நிறுவனம். மதுரையில் ஆரப்பாளையம், புட்டுத்தோப்பு, காக்கா தோப்பு, அண்ணா தோப்பு, பெத்தானியாபுரம், பொன்னகரம், மேலப்பொன்னகரம், அரசரடி, அழகரடி, மணிநகரம், தமிழ்ச்சங்கம் சாலை, செல்லூர், தத்தனேரி போன்ற பகுதி மக்களின் பொருளாதார மையமாக விளங்கியது மதுரை கோட்ஸ் ஆலைதான். மதுரையில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் வலுப்பெற்றதற்கு இந்நிறுவனத்தின் தொழிற்சங்கங்கள் முக்கியக் காரணமாய் அமைந்தன. ஆனால் இன்று வெகுசிலர் மட்டுமே பணியாற்றும் சிறிய நிறுவனமாக இந்த ஆலை மாறிப் போயுள்ளது.
மதுரை கோட்ஸ் ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்களுடைய பிள்ளைகளின் கல்விக்காக உருவாக்கப்பட்டதே மதுரை தொழிலாளர் நல உரிமைக்கழக மேல்நிலைப்பள்ளி. லேபர் பள்ளி என்று இப்பகுதி மக்களால் அழைக்கப்படும் இப்பள்ளி 1951 ஆம் ஆண்டு மதுரை கோட்ஸ் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. அப்போதைய முதல்வர் ராஜாஜி இந்தப் பள்ளியை திறந்து வைத்தார்.
மணிநகரம் பகுதியில் ஏறத்தாழ அறுபது ஆண்டு காலமாக நடுத்தர மற்றும் ஏழை மக்களின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்து வந்த இந்தப் பள்ளி, கடந்த சில ஆண்டுகளாக நூறு சதவீத தேர்ச்சி எனும் இலக்கை வெற்றிகரமாக எட்டி வந்தது. ஆனால் வணிக நோக்கங்களுக்காக தற்போது மூடப்படும் நிலையில் உள்ளது. இதற்கு முன்னரே புட்டுத்தோப்பு பகுதியில் இதன் ஒரு கிளையாகச் செயல்பட்டு வந்த மதுரை தொழிலாளர் நல உரிமைக்கழக தொடக்கப்பள்ளி சில ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்டு, அங்கு மங்கையர்க்கரசி கல்வி நிறுவனத்தின் பள்ளி செயல்பட்டு வருகிறது.
2007ஆம் ஆண்டு ஜெயின் சமூக டிரஸ்ட் ஒன்றிடம் இந்தப் பள்ளி அமைந்துள்ள இடத்தை மதுரை கோட்ஸ் நிறுவனம் விற்றுள்ளது. இதையடுத்து 6 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டது. இந்த இடத்தை வாங்கியுள்ள டிரஸ்ட், பள்ளியை இடித்துவிட்டு வணிக வளாகம் கட்ட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து பள்ளிக் கட்டிடம் பழுதடைந்துள்ளது என்று காரணம் காட்டி இதனை மூட பள்ளி நிர்வாகம் கல்வித்துறைக்கு விண்ணப்பித்தது. இந்தக் கல்வியாண்டில் (2011-12) மாணவர் சேர்க்கை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இங்கு பயிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களும் ஆசிரியர்களும் வலுக்கட்டாயமாக மாநகராட்சிப் பள்ளிகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். இப்பள்ளியை மூடக்கூடாது என்று மாணவர்களும் பெற்றோர்களும் கடந்த ஜூன் மாதம் மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயத்திடம் மனு கொடுத்தனர். இதனை ஏற்ற ஆட்சியர் மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனாலும் மாணவர் சேர்க்கை நடத்தப்படவில்லை.
இதை எதிர்த்து தற்போது மாணவர்கள், ஆசிரியர் சங்கங்கள், பெற்றோர்கள் ஒன்று திரண்டு போராடி வருகின்றனர். மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற வேண்டும், பள்ளியை மூடக்கூடாது, ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு தொடர்ந்து அவர்கள் இதே பள்ளியில் பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும், இப்பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராடி வருகின்றனர். ஆனால் இந்தப் போராட்டங்கள் எதற்கும் சரியான பலன் இல்லை.
ஏழை மாணவர்கள் படித்த இந்தப் பள்ளி தற்போது பாழடைந்து வருகிறது. அவர்கள் படித்த வகுப்பறைகள் இன்று சுற்றியிருப்பவர்கள் சிறுநீர் கழிக்கும் இடங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. பள்ளியிறுதி ஆண்டுகளை இப்பள்ளியில் பயின்ற காலங்கள் மனத்தில் நிழலாடுகின்றன. பதினேழு ஆண்டுகள் கழித்து தற்போது நான் படித்த பள்ளியின் மரண தறுவாயை நினைத்து என்னால் கண்கலங்க மட்டுமே முடிகிறது.

Pin It