கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

நீங்கள் நாளிதழ்களையும் இதழ்களையும் மட்டும் படிப்பவர் என்றால், நம் நாட்டில் விவசாயத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தியாவில் உணவு உற்பத்தி வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. 1980களில் 3.5 சதவீதமாக இருந்த அது, 1990களில் 1.8 சதவீதமாகக் குறைந்துவிட்டது. விவசாயத்தில் முதலீடு குலைந்துவிட்டது. இந்திய தேசிய மாதிரி தகவல்சேகரிப்பு நிறுவனத்தின் (என்.எஸ்.எஸ்.ஓ.ஐ.) கணக்கெடுப்பின்படி, விடுதலை பெற்ற பிறகு 1990களில்தான் வேலை உருவாக்கம் மிகக் குறைந்த சதவீதமாக இருந்துள்ளது. நாட்டின் ஊரகப் பகுதிகளில் இது ஆண்டுக்கு 0.7 சதவீதத்துக்கும் குறைவு. 1980களில் விவசாயம் அற்ற பிற துறைகளில் வேலைவாய்ப்பு இரட்டிப்பானது, ஆனால் அது தற்போது தேக்கநிலையை அடைந்துள்ளது. கிராமப் பகுதி வளர்ச்சி சரிந்துள்ளது, ஊரக கடன் வழங்கும் முறை குலைந்துள்ளது. இதன் காரணமாக சிறு விவசாயிகள் நிலத்தை இழக்கும் வேகம் கடுமையாக அதிகரித்துள்ளது.

ஆந்திரத்தில் அதிகம் விற்கும் ஈநாடு நாளிதழில் அதிகம் வெளியாகும் விளம்பரங்கள் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் சார்ந்தவை அல்ல. கர்நாடகம், தமிழகத்தில் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள்தான் நாளிதழ்களில் அதிக விளம்பரங்களைக் கொடுக்கின்றன. அதற்கு பதிலாக ஈநாடு நாளிதழில் அதிகம் வெளியாகும் விளம்பரம், கடனைச் செலுத்த முடியாத சிறு மற்றும் குறு விவசாயிகளின் சொத்துகள் விற்பனை தொடர்பான வங்கி ஏல விளம்பரங்கள்தான் அதிகம் வருகின்றன. இந்திய வங்கிகளின் சொத்து ரூ. 1,00,000 கோடி. இதில் ரூ. 62,000 கோடியை (62 சதவீதம்) வாராக்கடன் செலுத்த வேண்டிய 800த்தி சொச்சம் பணக்காரர்கள். ஆனால் அவர்களை யாரும் கேள்வி கேட்டது கிடையாது, இதுவரை விசாரணைக்கு அழைக்கப்பட்டதும் இல்லை. ஆனால், அதேநேரம் சில ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சிறு விவசாயியின் வீட்டு மரச்சாமான்களோ, நகைகளோ நடுத்தெருவில் வைக்கப்பட்டு ஏலம் விடப்படுகின்றன.

ராஜஸ்தானில் ஏழைகள் பட்டினியை சுழற்சி முறையில் மாற்றிக் கொள்கிறார்கள். உணவில்லா குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் இன்றைக்கு யார் பட்டினி இருப்பது என்று முடிவு செய்து, தங்களுக்கிடையே சுழற்சி முறையில் மாற்றிக் கொள்கிறார்கள். எதைப் பார்த்து நாம் கோபப்பட வேண்டும்? இப்படி நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ள மாநிலங்கள் ஆந்திரா, ராஜஸ்தான், ஒரிசா. ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் மட்டும் 1997-2000க்கு இடைப்பட்ட மூன்று ஆண்டுகளில் 1800க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பாக மாநில சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டபோது, 54 பேர் மட்டுமே இறந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்கொலை செய்து கொள்வது குற்றச்செயலாக கருதப்படுவதால், மாவட்ட குற்ற ஆவணக் காப்பகங்கள் தற்கொலையின் வகைகளை பட்டியலிடுகின்றன. நிறைவேறாத காதல், பரிட்சை பயம், கணவர் அல்லது மனைவியின் நடத்தை சரியில்லாதது,... ஆனால் அனந்தபூரில் மேற்கண்ட வகைகளின் கீழ் இறந்தவர்கள் 5 சதவீதத்துக்கும் குறைவே.

மிக அதிகமாக, 1061 பேர் இறந்தது 'வயிற்று வலி'யினால். இங்கு உயிரிழப்புக்குக் காரணமாக இருப்பது சிபா-கெய்ஜியின் பூச்சிக்கொல்லி மருந்துதான். இந்த பூச்சிக்கொல்லி மருந்தை அரசு இலவசமாக விநியோகிக்கிறது. அந்த கிராமப்புற ஏழை மக்களுக்கு அது மட்டுமே உடனடியாக கிடைக்கிறது. (இறப்பதற்கு செலவு செய்யத் தேவையில்லை) ஏழ்மையால் வாடுவோர் வழக்கமாக நாடும் வேலைக்கான இடப்பெயர்வு என்பது, ஒரு சிலருக்காவது வேலை தந்தது. தற்காலிக வேலைகளைப் பெறுவதற்காக இடம்பெயரத் தயாராக இருக்கும் அவர்களுக்கும் தற்போது வேலை கிடைப்பதில்லை. எடுத்துக்காட்டாக, மேற்கு ஒரிசாவில் உள்ளோர் மேற்கு வங்கம், ஆந்திரம், பஞ்சாப்புக்கு ஆண்டுதோறும் இடம்பெயர்ந்து வேலைக்குச் சென்று வந்தனர். ஆனால் ஒரிசாவில் இருந்து வேலை தேடிச் சென்ற இடங்களில் எல்லாம் சம்பளம் குறைந்தது. பலர் மீண்டும் ஒரிசா திரும்பினர். ஆனால் இந்த ஊர் திரும்புதலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகங்கள் தயாராக இருக்கவில்லை. இப்படி ஊர் திரும்பியவர்கள், அவர்கள் வாழ்ந்த இடத்தை காலி ஏற்கெனவே செய்திருந்ததால், ஓட்டுரிமைகூட அவர்களுக்கு மறுக்கப்படுகிறது.

உலக வர்த்தக நிறுவனத்தின் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதுதான், இந்த மாற்றங்களில் சிலவற்றுக்கு நேரடிக் காரணம். இறக்குமதி கொள்ளளவுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு 2001ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த கட்டுப்பாட்டை விலக்க உலக வர்ததக நிறுவனம் நிர்ணயித்திருந்த காலக்கெடு முடிவதற்கு சரியாக இரண்டு ஆண்டுகள் முன்னதாக, கட்டுப்பாடு விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்திய விவசாயிகளால் போட்டியைச் சமாளிக்க முடியவில்லை என்று சித்தரிப்பது கையாலாகாதத்தனத்தையே சுட்டிக்காட்டுகிறது. சூழலில் ஏற்பட உள்ள மாற்றத்தை முன்கூட்டியே உணர்ந்த தொழில்வளர்ச்சி அடைந்த நாடுகள் 1980களில் விவசாயத்துக்கான மானியத்தை 2 முதல் 6 மடங்கு (சதவீதமல்ல) வரை உயர்த்தின. தற்போது மிகச் சிறிய அளவில் மானியத்தைக் குறைத்து, அரசு மானியங்களைக் குறைப்பதாக போலித் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.

இந்திய விவசாயி போட்டியை சமாளிக்க முடியாதவர் என்று கூறுவது ஒரு மாயைதான். இந்தியாவில் போட்டியிடுவதற்கான களமே இல்லை. திறந்த சந்தை என்பது ஒரு பாசாங்கு நாடகம். உலக வர்த்தக நிறுவனத்தில் இந்தியாவின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தியது யார்? அவர்கள் தற்போது எந்த நிலையில் இருக்கிறார்கள்? காட் (நிகிஜிஜி) பேச்சுவார்த்தையின் தொடக்கச் சுற்றுகளின்போது இந்தியாவின் பிரதிநிதிகள் என்று கூறிக் கொண்டவர்கள், மேசைக்கு அடியில் லஞ்சம் வாங்குவது போல இந்தியாவை விற்றுவிட்டனர். அதற்கு பதிலாக பணம் கொழிக்கும் வெளிநாட்டு வேலைகளை சொந்த லாபங்களுக்காக பெற்றுக் கொண்டனர்.

விவசாயிகளுக்கு மானியம் வாரி வழங்கப்படுகிறது என்று மக்கள் நினைக்கிறார்கள். மானியம் பெறுவதால் விவசாயிகள் வேளாண்மையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நகர்ப்புற மக்கள் கருதுகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், மானியத்தில் பெரும்பகுதி நேரடியாக விவசாயிகளுக்கு வழங்கப்படுவதில்லை. உர உற்பத்தி நிறுவனங்களுக்கே வழங்கப்படுகின்றன. மானியம் பெறும் 'விவசாயிகள்' டாடா, பிர்லா, அம்பானிகள்தான். (தமிழகத்தில்கூட கூட்டுறவு கடனின் பெரும்பகுதி உரமாகவே வழங்கப்படுகிறது. கடன் வாங்கும் விவசாயியின் விருப்பத்துக்கேற்ப இயற்கை உரம் போன்றவற்றை இடமுடியாது. கடன் வாங்கிய பாவத்துக்காக உரத்தை நிலத்தில் இட்டாக வேண்டும்.) மேலும் மானியம் எப்படி கொடுக்கப்படுகிறது என்றால், அதிகமாகத் தயாரித்தால் குறைவான மானியம், குறைந்த அளவு தயாரித்தால் அதிக மானியம் வழங்கப்படும். கொள்கைப்படி, இது சிறு விவசாயிகளுக்கு உதவ வேண்டும். ஆனால் பெரும் உற்பத்தியாளர்கள் அளவுக்கு அதிகமாக உற்பத்தி செய்துவிட்டு, தங்கள் உற்பத்தியை குறைத்துக் காண்பிப்பார்கள். அப்பொழுதுதானே அதிக மானியம் கிடைக்கும்.

ஏழை விவசாயி போட்டியிடும் தகுதியுடன் இல்லை, மானியங்களால்தான் அவன் வாழ்கிறான் என்று சிலநேரம் சித்தரிக்கப்படுகிறது. உலகளாவிய நிறுவனங்களுடன் விவசாயி போட்டியிட முடியவில்லை என்றால், அவன் வேறு தொழிலை செய்ய வேண்டியதுதானே என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை நிலை என்னவென்றால், இந்திய விவசாயிகள் போட்டியிடுமாறு வலியுறுத்தப்படுவது அமெரிக்க விவசாயிகளுடன். அமெரிக்க விவசாயி ஆண்டுக்குப் பெறும் மானியம் எவ்வளவு தெரியுமா? ரூ. 17 லட்சம்.

ஐரோப்பிய யூனியன் ஆண்டுதோறும் பால் மற்றும் பாலாடை போகிப் பண்டிகையை நடத்துகிறது. உபரி உற்பத்தியை அழிப்பதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. உள்ளூர் சந்தையில் அவற்றை சந்தைப்படுத்தினால் விலை குறைந்துவிடும் என்பதற்காக இப்படிச் செய்யப்படுகிறது. (உலக வர்த்தக நிறுவனத்தின்) வர்த்தக ஒப்பந்தங்கள் ஏற்படுத்தும் கட்டாயத்தால் தொடங்கப்படும் புதிய சந்தைகள், இந்தியா அல்லது மூன்றாவது உலக நாட்டில் தங்கள் உபரியை கொட்டுகின்றன. அது ஒன்றிரண்டு மாடு வைத்திருக்கும் சைக்கிள் பால்காரரின் வாழ்க்கையை பறிக்கிறது. (ஒன்று பாலை தீயில் இட்டு அழிக்க வேண்டும். அல்லது பால்காரனை அழிக்க வேண்டும். எப்படியோ இரண்டுமே அழிப்புதான்) இருந்தாலும், உலக வர்த்தக நிறுவனம் மட்டுமின்றி, பெரும்பாலான நஷ்டங்களுக்கு மத்திய அரசின் ஒற்றைத்தன்மையான கொள்கைகள்தான் முக்கிய காரணம். இந்தியாவில் தானிய உற்பத்தி 4.5 கோடி டன் உபரி எனப்படுகிறது. உண்மையில் அது விற்பனையாகாத தானியமே. பாகிஸ்தானும் வங்கதேசமும் இணைந்து தங்கள் உபரி உற்பத்தி 50 லட்சம் டன் என்கின்றன. உலகில் ஏதுமற்ற ஏழைகளின் ஆசிய துணைக்கண்டத்தில்தான் அதிகமாக இருக்கின்றனர் எனும்போது, உபரி உற்பத்தி எப்படி சாத்தியம்?

ஏழைகளின் வாங்கும் திறன் குறைவதைப் பொருத்தே உபரி உருவாகிறதே தவிர, அவர்களுக்கு உணவு கிடைத்துள்ளதா என்பதைப் பொருத்து அல்ல. இந்தியாவில் உற்பத்தியாகும் தானியத்தின் மொத்தத் தொகையை தலைக்கு தனித்தனியாகப் பிரித்தால், இந்த உபரி மாயமாய் மறைந்துவிடும். உணவு உத்தரவாதம் தொடர்பான கூப்பாடுகள் அற்பமானவை. அத்துடன், பலரின் வயிறு காலியாகவே இருக்கிறது என்ற கசப்பான உண்மையை அது புறக்கணித்துவிடுகிறது. 1991-94 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு இடையே உணவுப் பொருள்களின் விலை நு£று சதவீதம் அதிகரித்தது. முந்தைய பாரதிய ஜனதா அரசு மேலும் 100 சதவீதம் அதிகரித்தது. இதன் மூலம் விளிம்புநிலையில் உள்ள விவசாயிகளிடம் இருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது? பட்டினி. இதைத் தாண்டி, உபரி உற்பத்தி என்பது அவசரத் தேவைகளை பூர்த்தி செய்வதும் இல்லை. பெரும்பாலான நேரம் அது முறையற்று சேமிக்கப்படுகிறது. ஜான்சி, இதார்சி போன்ற பெரிய போக்குவரத்து சந்திப்புகளில் திறந்தவெளி சேமிப்பு கிடங்குகள் அக்கடாவென திறந்து கிடக்கின்றன. இந்த வகையில் உணவு தானியத்தை சேமிக்க ஒரு டன்னுக்கு ரூ. 1,500 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த சேமிப்பை நாம் நம்பிக் கொண்டிருக்கும்போது, இது முறையாக மூடப்படாமல், காற்றில் புழுத்துப்போக விடப்படுகிறது. பிறகு அழுகிப் போய்விடுகிறது. இதன் காரணமாக மக்களுக்குத்தேவைப்படும் தானிய அளவு குறைகிறது. உலகிலேயே வளமான எலிகள் தொகை இந்தியாவில்தான் இருக்கிறது.

ஒவ்வொரு அறுவடைக் காலம் வரும்போதும், அரசு தானியங்களை கொள்முதல் செய்கிறது, சந்தைகளுக்கு அனுப்பாமல் தேக்கி வைத்து, முறையற்று பாதுகாக்கிறது. மிகப் பெரிய கொண்டாட்டங்களுடன் ஈரான், ஈராக்குக்கு அனுப்பப்பட்ட தானியங்கள் சுவற்றில் அடித்தது போலத் திரும்பிவிட்டன. காரணம், அவை அழுகிவிட்டதுதான். அரிசி ஏற்றுமதி கொண்டாட்டத்தை விரிவாக பதிவு செய்த ஊடகங்கள், அவை திரும்ப அனுப்பப்பட்டபோது அடக்கி வாசித்தன.

ஒரு பக்கம் ஊட்டச்சத்து குறைவு சதவிகிதத்தில் உச்ச நிலை, மற்றொரு பக்கம் முறைப்படி பாதுகாக்கப்படாத பெருமளவு உணவு தானியங்கள், அறிவுள்ள எந்த அரசும் வேலைக்கு உணவுத் திட்டத்தை உருவாக்கியிருக்க வேண்டும். (தற்போது 100 நாள் வேலை உத்தரவாதத் திட்டத்தில் தானியங்கள் கொடுக்கப்படுகின்றன). ராஜஸ்தானில் இது போன்ற ஒரு திட்டம் உள்ளது. தண்ணீர் பஞ்சத்தால் போராடும் பாலைவன மாநிலத்தில், வேலைக்கு உணவுத் திட்டத்தின் கீழ் அரசு தேர்வு செய்துள்ள ஒரு செயல்திட்டம் என்ன தெரியுமா? (தண்ணீரை கபளீகரம் செய்யும்) ஒரு கோல்ப் புல் மைதானம்.

ஏற்றுமதிச் சந்தைகளின் மீது தீவிரஆசை கொண்ட அரசுக் கொள்கை, எதிர்பார்க்காத பல காவுகளை வாங்குகிறது. மீன் பண்ணை/இறால் பண்ணை ஏற்றுமதியால் பலப்பல அரிசி ஆலைகள் மூடப்பட்டுவிட்டன. ஒரு ஏக்கர் நெல் விவசாயம் 150 நாட்கள் வேலை தரக்கூடியது. கூடுதலாக 40 நாட்களுக்கு பறவைகளை விரட்டும் வேலை கிடைக்கும். அதேநேரம் ஒரு ஏக்கர் இறால் பண்ணையில் மிகக் குறைவனவர்களுக்கே வேலை கிடைக்கும். எண்ணெய் உற்பத்தி விவசாயிகளிடம் மகசூலை அதிகரிக்குமாறு அரசு கூறியபோது, அவர்கள் அதை நிகழ்த்திக் காட்டினர். ஆனால் அரசு குட்டிக்கரணம் அடித்தது. பெருமளவு பனை எண்ணெயை (பாமாயில்) இறக்குமதி செய்தது. மகசூல் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், கடுமையான விலை குறைவு ஏற்பட்டது. இறால் பண்ணை அல்லது எண்ணெய் வித்து உற்பத்தியை அரசு ஊக்குவிக்க முடிவெடுத்தபோது, ஏழைகளிடம் எந்தக் கருத்தும் கேட்கப்படவில்லை. தாங்கள் முன்வைக்கும் கொள்கைகளை கடைபிடித்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது தொடர்பாக எந்த உத்தரவாதமும் தரப்படவில்லை.

போட்டியிட இயலாதவர்கள், ஊழல்வாதிகளை ஊடகங்கள் நாயகர்கள் ஆக்குகின்றன. ஏழைகளின் சார்பில் எடுக்கப்படும் எந்த முடிவுக்கும் நிதியமைச்சர் அல்லது மான்டேக் சிங் அலுவாலியா
போன்றோர் எந்தக் காலத்திலும் அனுமதி கேட்டதில்லை. அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தால் கிராமப்புற ஏழைகளின் வாழ்வில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி எந்த பரிசோதனையும் நடத்தப்படவில்லை. அதேநேரம், முடிவெடுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்கள்தான் கருவூலங்களில் பாதி கடனை வாங்கியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஏழைகள் அல்ல. அப்படியானால் ஏழைகள் யார். 40 சதவீதம் நிலமற்ற விவசாய தொழிலாளர்கள். 45 சதவீதம் சிறு மற்றும் குறு விவசாயிகள். அவர்கள்தான் உணவு தானியங்களை வாங்குகிறார்கள் (எவ்வளவு மோசமான முரண்). 7.5 சதவீதம் பேர் கிராமப்புற கைவினை கலைஞர்கள். எஞ்சியவர்கள் எல்லாம், 'மற்றவர்கள்'தான். 85 சதவீத ஏழைகளுக்கு நேரடியாக நிலப்பிரச்சினை உள்ளது. அரசின் செயல்திட்டத்தில் இந்தப் பிரச்சினை எந்தக்காலத்திலும் இடம்பிடிக்கவில்லை. கிராமப்புற கைவினை கலைஞர்கள்கூட நிலமின்றியே இருக்கின்றனர்.

இந்தியாவிலுள்ள பெரும்பாலான ஏழைகள் 7 அல்லது 8 மாநிலங்களில்தான் உள்ளனர். அந்த மாநிலங்களிலும் குறிப்பிட்ட சில பகுதிகளில்தான் உள்ளனர். கிழக்கு உத்தரபிரதேசம், ஒரிசாவின் உட்பகுதிகள், தெலுங்கானா, ஹைதராபாத்-கர்நாடக மண்டலம் ஆகியவையே அந்தப் பகுதிகள். இதிலும் ஏழ்மையின் சாதி முகம் ரொம்பத் தெளிவாக இருக்கிறது. 50-55 சதவீதம் பழங்குடியினர் மற்றும் தலித்துகள் ஏழைகள்தான். ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 36-39 சதவீதம் பேர் ஏழைகள். ஒரு பகுதியில் நிலப்பிரபுத்துவம் மிகுந்த ஆதிக்கத் தன்மையுடன் இருந்தால், அங்கு ஏழ்மையின் நிலை கொடியதாக இருக்கிறது. இந்த ஏழைகளில் பெரும்பாலோர் பெண்கள், குழந்தைகள். விவசாயத் தொழிலாளர்களில் பெரும்பாலோர் பெண்கள், குறிப்பாக தலித் பெண்கள்.

இந்தியாவில் வறுமை மிக வித்தியாசமான முறையில் வரையறுக்கப்படுகிறது. வழக்கமாக கூறப்படுவதைக் காட்டிலும் அதிக இழப்புகள் அதில் மறைக்கப்படுகின்றன. அந்த வரையறைப்படி ஒருவரது தனிநபர் வருமானம் 2400 கேலரி மதிப்புள்ள உணவை வாங்கும் அளவு இருந்தால் அவர் ஏழையல்ல. ஒருவர் என்ன சம்பாதிக்கிறார் என்பதுதான் முக்கியத்துவம் பெறுகிறதே ஒழிய, அவரால் உணவை வாங்க முடிகிறதா என்பது கவனம் பெறவில்லை. இதற்கான காரணம் அரசியல் சாசனம் மற்றும் சோஷலிச நாடு என்று கூறப்பட்டதன் அடிப்படையில் உருவாகியிருக்கிறது. பல ஜனநாயக நாடுகளது அரசியல் சாசனத்தைப் போல, இந்திய அரசியல் சாசனமும் நீதியை வலியுறுத்தும் கருத்துகளை அழகான வார்த்தைகளில் சொல்லியிருக்கிறது. அந்தப் பார்வையில் அரசுதான் மக்களுக்கு வீடு, சுகாதாரம்-உடல்நலம், கல்வி,... உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். இந்த கடமையை அரசு நிறைவேற்றுகிறது என்ற ஊகத்தின் அடிப்படையில் நினைத்துக் கொள்ளப்படுகிறது.

இதெல்லாம் கிடைத்துவிடுகிறது என்ற ஊகத்தால், உணவுப் பொருள் வாங்க மட்டுமே ஒருவர் சம்பாதிக்கிறார் என்றும், உணவுப் பொருள் வாங்கத் தேவையான பணத்தை ஒருவர் சம்பாதிக்கவில்லை என்றால் ஏழை என்றும் வரையறுக்கப்படுகிறது. ஆனால் உண்மை நிலை என்னவென்றால், ஒருவரது சம்பளத்தில் பெரும் பகுதி அரசு வழங்க வேண்டிய விஷயங்களுக்காக செலவிடப்பட்டு விடுகிறது. அரசு கடமையை நிறைவேற்றாத நிலையிலும், ஏழ்மை தொடர்பான பழைய வரையறை இன்னமும் பின்பற்றப்படுகிறது. ஏழ்மையை அகற்ற செயல்படுத்தப்படும் அரசு செயல்திட்டங்கள் மனம்போன போக்கில் உள்ளன. எடுத்துக்காட்டாக, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோர், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளோர் என்று ஒழுங்கற்ற முறையில் ஏழைகள் பிரிக்கப்படுகின்றனர். நலஉதவிகள் வழங்குவதும் மனம்போன போக்கில் நிர்ணயிக்கப்படுகிறது.

ஒரே குடும்பத்தில் உள்ள சகோதரர்கள் இரு வேறு பிரிவுகளில் சேர்க்கப்படுகிறார்கள். குறிப்பிட்ட அளவு வருமானம் பெறுபவர்கள் எந்த அடிப்படையும் இன்றி இந்தப் பிரிவுகளுக்குள் அடைக்கப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக, ஒருவர் மிகக் குறைவாகச் சம்பாதித்தாலும் ரூ. 4,800க்கு மேல் சம்பாதிப்பதாக சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளோரை முன்னேற்றிவிட்டதாக கூறுவதற்காகவே அரசு இப்படிச் செய்கிறது. உண்மை நிலையை கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்படும் கொள்கைகளுக்கு பதில், உண்மையை உருக்குலைத்து கொள்கையின் பலன் கிடைத்துவிட்டதாக போலித் தோற்றம் உருவாக்கப்படுகிறது. கடுமையான வறுமைக்கு தள்ளப்பட்ட ஏழைகள் 'வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோர் உதவி அட்டை'களை விற்க ஆரம்பித்துவிட்டனர். (அந்த அட்டையின் கீழ் பல உதவிகள் கிடைக்குமே)

மக்களின் மீது அக்கறை கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க அரசுகள் முறையற்று செயல்படுவது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. இதற்கு மிக முக்கியமான எடுத்துக்காட்டு, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோர் எண்ணிக்கை தேர்தல்களுக்கு முன் மாயாஜாலம் போலக் குறைந்துவிடுவதுதான். எடுத்துக்காட்டாக, 2001ல் நடந்து முடிந்த தேர்தல்களுக்கு முன்னால் தேசிய அளவிலான வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோர் சதவீதம் 26 என்று கூறப்பட்டது. இதை கணக்கிட்ட நிறுவனங்கள்தான் முந்தைய 9 அறிக்கைகளில் வறுமைக் கோடு பெரிய அளவில் மாற்றம் பெறவில்லை என்று கூறிவந்தன. ஆனால் 10வது அறிக்கை வறுமை குறைத்தலில் பெரும் சாதனை புரிந்துவிட்டதாக கொண்டாடியது. 1996ம் ஆண்டு தேர்தல்களுக்கு முன்னால் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளோர் சதவீதம் 19. அதற்கு ஒரு வாரம் முன் இரட்டிப்பாக இருந்தது!

இது உண்மையாக இருந்தால், உலக வரலாற்றின் மிகப் பெரிய சாதனை, மிகப் பெரிய இந்திய சமூச சீர்திருத்தம் இதுவாகத்தான் இருக்கும். எதிர்பார்த்தது போலவே, தேர்தலுக்குப் பின் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோர் எண்ணிக்கை 30 சதவீத நிலைக்கு உயர்ந்துவிட்டது. மத்திய அரசின் பொருளாதார கணக்கெடுப்புகள் இந்த அறிக்கைகளின் போலிததன்மையை ஒப்புக்கொள்கின்றன.
சில தனிச் சிந்தைனையாளர்களும் தற்போது ஏழ்மை வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். வாங்கும் திறன் பற்றி பன்னாட்டு குழுக்கள் நடத்தும் ஆராய்ச்சிகள், வறுமை தொடர்பான அறிக்கைகளாக மாறிவிடுகின்றன. வறுமையை ஆராய்ச்சி செய்வது அவர்கள் முதல் நோக்கமாக இருக்கவில்லை என்பதை வசதியாக மறந்துவிடுகின்றன, மறைத்துவிடுகின்றன. பொதுக் கொள்கை உருவாக்கும் நடைமுறைகள், இவற்றை ஆராய்ச்சி என்று ஏற்றுக்கொள்ளுகின்றன. சில நேரம் அந்த அறிக்கை முன்வைக்கும் முடிவுகள் குழப்பமாகவும், முற்றும் பொய்யாகவும் உள்ளன. இப்படி நடத்தப்பட்ட ஒரு ஆய்வு 30,000 வீடுகளில், 300 பிரிவுகளில் தகவல் சேகரிக்கப்பட்டதாக கூறுகிறது. இப்படி அரசு, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என எல்லாரும் வறுமையை தாள்களில் ஒழிப்பதற்கான முயற்சியே தீவிரமாக நடத்துகின்றன. இவர்களது செயல்பாட்டு வறுமை ஒழியுமா?

தமிழில் - ஆதி
(அடைப்புக் குறிக்குள் இருக்கும் குறிப்புகள் நான் கொடுத்தவை - மொழிபெயர்ப்பாளர்)

பி. சாய்நாத்

நமது காலத்திய கிராமப்புற வாழ்க்கை பற்றி தொடர்ச்சியாக பதிவு செய்துவரும் முன்னணி பத்திரிகையாளர் பாலகும்மி சாய்நாத். இவரது கட்டுரைகள், ஒளிப்படக் கட்டுரைகள் நமது கவனத்துக்கு வராத இந்தியாவின் கொடூரமான முகங்களை பதிவு செய்கின்றன. 2001ம் ஆண்டு உலக உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தின் போயர்மா விருது, அரசியல்-அலசல் கட்டுரைகளுக்காக 2004ம் ஆண்டில் பிரேம் பாட்டியா விருதுகளைப் பெற்றார். கடுமையான ஏழ்மையில் உள்ள, குறிப்பாக ஆந்திராவில் உள்ள மக்களின் பிரச்சினைகளை கவனப்படுத்தியதற்காக பாட்டியா விருது வழங்கப்பட்டது.

டைம்ஸ் ஆப் இந்தியா அறக்கட்டளை நிதிநல்கை மூலம் இந்திய கிராமப்புறங்களுக்குச் சென்று நேரடியாக பல அடிப்படை பிரச்சினைகளை பதிவு செய்தார். பின்னர் அந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளிவந்தது. விவசாயிகள் தற்கொலை பற்றி தொடர்ச்சியாக காத்திரமான கட்டுரைகளை எழுதி வருகிறார். உலகமயமாக்கலின் தாக்கத்தால் நமது கிராமப் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தொடர்ச்சியாக கவனப்படுத்துகிறார். தற்போது இந்து நாளிதழின் கிராமப்புற விவகாரங்கள் பகுதி ஆசிரியராக செயல்பட்டு வருகிறார்.