உள்ளே இருக்கிற முகம் ஒன்றுதான். மறைத்து நிற்கிற முகமூடி தான், வெவ்வேறாக பிம்பம் காட்டுகிறது. ஆர்எஸ்எஸ் அடிப்படைவாத முகத்தின் இருவேறு முகமூடி / பிம்பங்களே அத்வானி மற்றும் நரேந்திர மோடி. ரதத்தில் அமர்ந்து வந்து ரத்தவேட்டை நடத்திய போது, அத்வானியை, அயோத்தி ராமனாகவே ஆர்எஸ்எஸ் பார்த்தது; பரவசமடைந்தது. இந்துத்வா அடிப்படைவாத ஆயுதத்தை உயர்த்திப் பிடித்தே, அப்போதைய பிரதமர் வாஜ்பாயின் செல்வாக்கை, செல்லாக்காசு ஆக்க அத்வானி ஆடிய பரமபத ஆட்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

வாஜ்பாயும் லேசுப்பட்டவர் அல்ல. 2002ம் ஆண்டின் ஏப்ரல் அல்லது மே மாதம் என்பதாக நினைவு. கோவா மாநில தலைநகர் பனாஜியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகக்குழுக் கூட்டம் நடந்தது. ஆயுட்கால சுயம்சேவக்கும், அப்போதைய பிரதமருமான வாஜ்பாய் இந்தக் கூட்டத்தில் பேசுகையில், "முஸ்லீம்கள் எங்கெங்கு வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் அவர்கள் மற்ற சமூகத்தினருடன் இணைந்து வாழ விரும்புவதில்லை. அமைதியான முறையில் தங்கள் பிரசாரங்களைச் செய்தவற்குப் பதில், பயங்கரவாதத்தின் மூலமாகவும், பயமுறுத்தல்கள் வாயிலாகவும் தங்கள் நம்பிக்கையைப் பரப்ப அவர்கள் முயல்கிறார்கள். உலகம் இந்த அபாயம் குறித்து இப்போது விழிப்படைந்து விட்டது..." என்று உணர்ச்சிகரமாகப் பேசி, கைத்தட்டல்களை அள்ளினார்.

அப்பேர்ப்பட்ட வாஜ்பாய் கூட, அத்வானியின் அதிரடி ஆட்டத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மதசார்பற்ற மகாத்மாவாக பரிவட்டம் கட்டப்படுகிற நிலைமை ஏற்பட்டது என்றால்... அத்வானியின் அடிப்படைவாத குணம் எவ்வளவு ஆழமானது, அபாயகரமானது என்பதை எளிதில் புரிந்து கொள்ளமுடியும். அத்வானியின் சமூக வாழ்க்கை சாதனைப் புத்தகத்தில் மறக்க முடியாத நாள்... 1992, டிசம்பர் 6. பாபர் மசூதியை இடித்துத் தகர்த்து, அதன் பின் விளை வாக, இந்தியா முழுவதும் பல ஆயிரம் மக்கள் ரத்தமும், சதையுமாக செத்து மடிந்து விழக் காரணமாக இருந்த நாள். காட்டுமிராண்டி கூட்டமொன்றுக்கு கேப்டனாக இருந்து வழிநடத்தி, நினைத்ததை சாதித்த விதத்தில், அத்வானியின் திறமை, மகேந்திர சிங் டோனியையும் மிஞ்சி விடும்.

இந்து மதத்தின் மிகத் தேர்ந்த மீட்பராக அத்வானி தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருந்த காலம் அது. எல்லாவித மோடி மஸ்தான் வேலைகளும் செய்து ஒப்பாரும், மிக்காருமற்ற அவதாரமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஆயத்தமான அத்வானிக்கு, மோடி ரூபத்தில் வந்தது வெடி. அடுத்த பிரதமர் கனவில் இருந்தவரின் அடித்தளத்தையே தகர்க்கிற ஆர்எஸ்எஸ் பிரம்மாஸ்திரமாக களம் புகுந்தார் நரேந்திர மோடி. குஜராத்தில் அவர் ஆடிய வெறியாட்டம் பார்த்து, மனித உரிமைகளை காலில் மிதிக்கிற அமெரிக்காவே ஆடிப் போய்விட்டது. அடுத்த பிரதமர் இவர்தான் என்று அடையாளம் காட் டுகிறது ஆர்எஸ்எஸ். உள்குத்து வேலையில் இறங்கி எதுவும் எடுபடாமல், இடிந்து போய் உட்கார்ந்திருக்கிறார் அத்வானி. அவரது பிரதமர் கனவில், ஒரு லாரி மணல் போட்டு மூடிவிட்டார் மோடி.
 
வரிந்து கட்டிக் கொண்டு பொய் புனைவதில் வடநாட்டு ஊடகங்களை அடித்துக் கொள்ள இன்றைய தேதிக்கு ஆள் கிடையாது. இளம்பெண்ணின் சேலையை ஏழெட்டு வில்லன்கள் உருவும் போது எங்கிருந்தோ தாவிக்குதித்து டைவ் அடித்து வந்து காப்பாற்றுகிற ஹீரோ போல, நரேந்திர மோடி இப்போது காட்சிப்படுத்தப்படுகிறார். இருக்கிற 28 மாநிலங்களிலும் குஜராத் தான் நம்பர் 1 என்கிறார்கள். எதில் நம்பர் 1? ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சி செய்த காலத்தில் ஹைதராபாத்தும், அதன் புறநகர் பகுதிகளும் ஒரே ஜம்ப்பாக முப்பதாம் நூற்றாண்டுக்கே முன்னேறி விட்டதாக செய்திகள் பரவின. தார்ச்சாலைகளில் கூட தைரியமாக ஜம்போ விமானத்தை லேண்டிங் செய்யலாம். அப்படி ஒரு தரம் என்று கார் ஓட்டிக் கொண்டே பிஸினஸ் பிரபலங்கள் சந்திரபாபுவுக்கு சபாஷ் போட்டார்கள்.

ஐதராபாத்துக்கு சில நூறு கிலோ மீட்டர் அப்பால் நிலைமை வேறாக இருந்தது. அங்கு சாப்பிட கிடைக்காமல் எலிக்கறியை விவசாயப் பெருங்குடிகள் சமைத்த பரிதாபத்தையும், தற்கொலை செய்து கொண்ட சோகத்தையும் உண்மையான ஒரு சில ஊடகங்கள் பகிரங்கப்படுத்திய போது, சந்திரபாபுவின் கம்ப்யூட்டர் பிம்பம் கலைந்தது. அவரது விலாசத்தை, அவரது கட்சிக்காரர்களே தேடிப் பார்த்து தெரிந்து கொள்ளவேண்டிய பரிதாப நிலை இப்போது. எதிர்கால இந்தியாவாக வடிவமைக்கப்படுகிற மோடியின் கதையும், சந்திரபாபுவுக்கு ஒப்பானதே. குஜராத் மாநிலத்தில் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகள் குடிநீருக்கு திண்டாடுகின்றன. வேலைவாய்ப்பு துவங்கி, விவசாயம், மனிதவள மேம்பாடு உள்ளிட்ட பல துறைகளிலும் அந்த மாநிலம் பின்தங்கி இரு ப்பதை பாரதிய ஜனதா கட்சிக்காரர்கள் கூட மறுக்கமாட்டார்கள்.

இஸ்லாமிய சகோதரர்கள் இனம் பார்த்து ஆயிரம், ஆயிரமாய் கொன்று குவிக்கப்பட்ட சோகம் ஆறுவதற்கு முன்பாக, "ஆமாம். இந்தக் கலவரத்தை நாங்கள் திட்டமிட்டுத்தான் நடத்தினோம்..." என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார் குஜராத் மாநில விஸ்வ இந்து பரிஷத் தலைவர் கேசவராம் காசிராம் சாஸ்திரி. குஜராத் இனப்படுகொலையின் நாயகனாக புகழப்பட்ட மோடிதான், இப்போது இந்தியாவின் அடுத்த பிரதமராக அடையாளம் காட் டப்படுகிறார். பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமான ஆளாக தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்கு அவர் நடத்துகிற நாடகங்கள் குமட்டலை தருகிறது. ஆயிரக்கணக்கான மக்களை வெள்ளம் அடித்துச் சென்ற உத்தரகாண்ட் மாநிலத்தில் இறங்கி, அங்கும் கூட அநாகரீக அரசியலை அவர் அரங்கேற்றியது உச்சக்கட்ட சோகம்.

உலகின் தலைசிறந்த ராணுவங்களில் ஒன்று (!?) என தம்பட்டம் அடிக்கப்படுகிற இந்திய ராணுவம், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கு படாதபாடு பட்டுக் கொண்டிருக்கையில், ஐந்து விமானம், 25 பேருந்து, 800 இனோவா கார்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் பரிவாரங்களுடன் களத்தில் இறங்கி, ஓரிரு நாட் களுக்குள் 15 ஆயிரம் குஜராத்திகளை தனியாளாக அவர் காப்பாற்றிக் கரை சேர்த்தார் மோடி என்று கடந்தவாரம் நாடு முழுக்க ஒரு செய்தி கதி கலக்கியது. உண்மையில், கேதார்நாத் சோகத்தை விடவும் மோசமானது இது. பிணங்களின் மீது ஏறி நின்று அரசியல் செய்வதில் இருக்கிற முன்னனுபவம் மோடிக்கு இதை சாத்தியமாக்கி இருக்கிறது. ‘மக்களை காப்பாற்ற வந்திறங்கிய ராம்போ’ என்று வட இந்திய ஊடகங்கள் அடிக்கிற ஜால்ரா சத்தம் நாடு முழுவதும் நாராசமாக எதிரொலிக்கிறது.

நடக்கிறவற்றைப் பார்க்கையில், நாட்டின் எதிர்காலம் குறித்த கவலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மனதை கவ்விப் பிடித்து குடைகிறது. அம்பானி வகையாறாக்களுக்காக மட்டுமே ஆட்சி செய்கிற மன்மோகன் கோஷ்டி ஒருபுறம். அதை ஒதுக்கித் தள்ளலாம் என்று பார்த்தால், மதத்தின் பெயரால் மக்களை கூறு போடுகிற கூட்டம் மறுபுறம். பெரும்பாலான இந்திய இளைஞர்களின் ஏகோபித்த ஆதரவு மோடிக்கு இருப்பதாக சமீபத்திய கருத்துக் கணிப்பு கட்டியம் கூறுகிறது. காங்கிரஸ் கூடாரம் அடிக்கிற குளறுபடி கூத்துக்களால் மனம் வெறுத்த இளைஞர்களுக்கு, அவதார புருஷனாக மோடி தெரிகிறார். மக்களைச் சொல்லி தப்பில்லை. ஈழ விவகாரத்தில் காங்கிரசின் தொடர் துரோகங்கள், பாரதிய ஜனதா மீது பார்வையைத் திரும்ப வைக்கிற அதே உளவியல் காரணம்தான்.

மன்மோகன், சிதம்பரம், சோனியா, ராகுல்... இவர்கள் எல்லாருமாக சேர்ந்து, மோடியை நல்லவராக்கி இருக்கிறார்கள். இதுதான் இந்தியாவின் தலையெழுத்து. மரண வியாபாரி என வர்ணிக்கப்படுகிற ஒரு ஆசாமி, அடுத்த பிரதமருக்கு தகுதியான ஆளாக தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறார். காங்கிரசின் கையாலாகாத தனத்தால், மோடி நல்லவர்... நிர்வாகத் திறன் கொண்டவர், பிரச்னைகளை தீர்ப்பதில் அசகாயசூரர் என்றெல்லாம் ஆர்எஸ்எஸ் கூட்டத்தால் முன்னிறுத்தப்படுகிறார்.

"இந்தக் காட்டில் இருக்கிற மிருகங்களிலேயே மிகவும் சாதுவானது... அதோ போகிறதே, அந்தச் சிங்கம்தான்!" என்ற சொற்றொடருக்கும், "இந்தியாவை காப்பாற்ற வருகிற அவதார புருஷன்..." என்கிற மோடி மீதான விவரிப்புகளுக்கும் பெரிதாக வித்தியாசம் எதுவும் தெரியவில்லை.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It