கூப்பிடு தொலைவில், சில ஆண்டுகளுக்கு முன் நடந்து முடிந்த மிகக் கொடூரமான ஒரு கால கட்டத்தை மனித வரலாறு இப்போதுதான் மீள்பதிவு செய்து    பார்த்து, கண்களில் உதிரம் வடித்து வேதனிக்கிறது. ஆணென்றும், பெண்ணென்றும், முதியவரென்றும், மாணவர், பச்சிளம் பிஞ்சுகள் என்றும் கூட  மனித   இனத்தை பேதம் பிரித்துப் பார்க்காது, பேசும் மொழியை மட்டுமே பிரதான அடையாளமாகக் கொண்டு கொலைவெறித் தாண்டவம் ஆடி, கூண்டோடு   ஒழித்துக் கட்டியது ஒரு அரசு.

கையும், காலும் உடலில் இருந்து துண்டாய் பிய்த்தெறியப் பட்டு, மரணவேதனையில் உயிருக்குப் போராடிய போது கடைசி. கடைசியாய் அந்த மனிதக்கூட்டம் எழுப்பிய அபயக்குரல் காதில் பட்டும் கூட, படாதது போல ஒதுங்கிக் கொண்ட உலக சமுதாயம், இப்போது ஒன்று சேர்ந்திருக்கிறது.   தானாக ஒன்று சேர்ந்து விடவில்லை. மனித வரலாற்றின் மிக மூத்த அந்த இனத்தின் கிளைகள், கண்டங்கள் எல்லாம் படர்ந்து, பரவி, வேர் விட்டு நிற்கின்றன. மூடப்பட்டிருந்த கதவுகளை, கொஞ்சமும் சோர்ந்து விடாது, வெறி கொண்டது போல ஆண்டுக்கணக்கில் தொடர்ந்து தட்டியதன் விளைவு... இனத்தை அழித்தவர்களின் குணத்தை, உலகம் இன்று உணரத் தலைப்பட்டிருக்கிறது.

கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சம் என்று மதிப்பிடப்படுகிறது. இது உத்தேச மதிப்பீடுதான். கணவர்களை அனாதைப் பிணங்களாக,    தெருக்களில் தொலைத்து விட்டு, முள்வேலிகளுக்குள் இன்று முடங்கி நிற்கிற இளம்பெண்களின் எண்ணிக்கை மட்டுமே 90 ஆயிரமாம். இரு    இனங்களுக்கும் அந்நியப்பட்ட மூன்றாவது நபர் களத்தில் இறங்கி கணக்கெடுத்தால்... உரிமை கேட்டதற்காக, உயிரை இழந்தவர்களின் உண்மையான    எண்ணிக்கை முழுமையாக தெரியவரும். நிச்சயமாக, அது இப்போதைய எண்ணிக்கையை விடவும் மிக அதிகமாகவே இருக்கும்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், இந்தப் பிரச்னை இன்று எழுப்பப்பட்டிருக்கிறது. எழுப்பியிருப்பவர்கள், இறந்து போன    இனத்துக்கு துளியும் தொடர்பில்லாத அமெரிக்கர்கள். மொழியும், இனமும் வேறே தவிர, நாமெல்லாம் சகோதரர்கள், ஒரே தேசத்தாயின் புத்திரர்கள்,   திராவிட மொழிக்குடும்பத்தினர்... என்றெல்லாம் நாம் செய்து வைத்திருந்த கற்பிதங்கள் தவறு என்று காலம் முகத்தில் அறைந்து உணர்த்துகிறது. நமது   ‘சகோதரர்கள்’ கிரிக்கெட் பார்ப்பதிலும், சினிமா ஆராதனையிலும், ஜெயந்தி விழா கொண்டாடுவதிலும் காட்டுகிற அக்கறையில் ஒரு துளியாவது இதில்   காட்டினார்களில்லை.

உலகத் தமிழர்கள் எல்லாம், கண்களில் கண்ணீரும், நெஞ்சிலே எதிர்பார்ப்புமாக ராஜபக்ஷே என்கிற படு பாதகனுக்கு எதிராக உலகம் தனது தீர்ப்பை    (தாமதமாகவேனும்) சொல்லி விடாதா என காத்திருக்க... இந்திய செய்திச் சேனல்கள், அப்படி ஒரு சங்கதி நடக்கிறதாகவே அலட்டிக் கொள்ளவில்லை.    அவர்கள் உத்தரப்பிரதேசத்து அரசியலையும், ஷாருக்கானின் அடுத்த சினிமாவையும் புலனாய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். மூத்த மகன் முதுகெலும்பு    ஒடிந்து கிடக்கையால், பாரதத்தாய் வேறு பக்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

அமெரிக்கா கொண்டு வருகிற தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும், உலகெங்கிலும் விரவிக்    கிடக்கிற தமிழ் சமுதாயமும் தொடர்ந்து முழங்கியும், கையில் தேசியக்கொடியுடன் கம்பீரமாக நிற்கிற பாரதத்தாய், துளியும் அசைந்து கொடுப்பதாக இல்  லை. ‘‘அமெரிக்கா கொண்டு வருகிற தீர்மானத்தில் என்னென்ன அம்சங்கள் இருக்கின்றன என படித்துப் பார்த்தப் பிறகே நாங்கள் முடிவெடுப்போம்,’’    என்கிறார், கூடங்குளத்தில் புதுமனை புகுவிழா நடத்த தினம், தினமும் நாள் குறித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிற ஒரு அமைச்சர்.

உண்மையில், அமெரிக்கா கொண்டு வருகிற தீர்மானத்தை, இந்தியா எதிர்த்து வாக்களித்தால் கூட நல்லது என்றே படுகிறது. ஆதரிப்பது போல, வேடமி  ட்டு, ஆக இருப்பதையும் கெடுத்து நாசமாக்குகிற செயலை இதற்கு முன்பும் ஒருமுறை தமிழ் சமுதாயம் பார்த்து விக்கித்து நின்றிருக்கிறது. ஐக்கிய நாடு கள் சபையில், இதற்கு முன்பும் அமெரிக்கா ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது. போர்க்குற்றங்கள் குறித்து இலங்கை மண்ணில் சர்வதேச விசாரணை   நடத்தவேண்டும் என்கிற தீர்மானம் அது. ஒட்டுமொத்த தமிழகமும் உரத்த குரலில் வலியுறுத்தியது. தீர்மானத்துக்கு முந்தைய தேதி வரை, என்ன    நிலைப்பாடு என தெரியாமல் திண்டாடிய மத்திய அரசு, திடீரென அமெரிக்க தீர்மானத்துக்கு ஆதரவு என அறிவித்தது.

தமிழர்கள் உள்ளம் பூரித்துப் போனார்கள். அப்புறம்தான் தெரிந்தது; அது கூடிக் கவிழ்க்கிற செயல் என்று. போர்க்குற்றங்கள் நடந்திருக்கிறதா; இல்லையா    என இலங்கை அரசே ஒரு விசாரணைக் குழு அமைத்து, அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என அமெரிக்க தீர்மானத்தில் அழுத்தமான ஒரு திருத்தத்  தை இந்தியா கொண்டு வந்தது. எப்படியிருக்கிறது நியாயம்? கொலை செய்தவனே, நடந்த குற்றம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டு  மாம். இந்தியாவின் நீதி பரிபாலனம் எப்படிப்பட்டது என உலகம் அன்றைக்கு அறிந்து கொண்டது.

இன்றைக்கும் கூட, அது போல உள்குத்து வேலைகள் செய்து, உள்ளதையும் கெடுப்பதற்குப் பதில், அமெரிக்க தீர்மானதை எதிர்த்து நிற்பது எவ்வளவோ    மேல் என்கிறார்கள் நியாயவான்கள். அணு ஆயுத அரசென்றும், ஐக்கிய நாடுகள் சபையில் நிரந்தர இடம் தேவையென்றும், வளர்ந்து நிற்கிற வல்லரசுகள் பட்டியலில் தனக்கும் ஒரு இடம் தேவை என்றும் உரத்துக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிற இந்தியாவிடம், தமிழர்கள் வைக்கிற கோரிக்கை   ஒன்றே ஒன்றுதான். இருந்தால், உண்மையாக இருங்கள். அல்லது, ஒதுங்கி நில்லுங்கள்.

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் எதிரான நிலைப்பாடுகளைக் கூட துணிந்து எடுக்க முடிகிற இந்திய அரசால், ஏன் இலங்கையை எதிர்த்து எதுவும் பேச    முடியவில்லை என்பது சர்வதேச ஆச்சரியங்களுள் முதன்மையானது. தமிழர்களுக்கு அதிகாரப் பரவல் செய்து தரவேண்டும் என்று காலம், காலமாக இந்தியா வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. சரி, சரி என்று தலையாட்டிக் கொண்டிருந்த ராஜபக்ஷே அரசாங்கம், இப்போது அதற்கெல்லாம் சான்சே இல்லை.    தமிழர்களுக்கு ஒருகாலும் அதிகாரப்பரவல் செய்து தரமுடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தே விட்டது. இந்தியத் தரப்பில் இருந்து சிறு முணுமுணுப்பு    கூட இல்லை.

இப்படி சொல்லிய அடுத்த நிமிடமே, விமானம் பிடித்து இந்தியாவுக்கு வந்தார் ராஜபக்ஷே. விமானநிலையத்தில் ரத்தின கம்பளம் விரித்து வரவேற்றது    இந்த அரசாங்கம். இலங்கையில் உள்ள இந்து கோயில்களை எல்லாம் இடித்துத் தகர்த்த அந்த மனிதர், திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் திடீர்    விஜயம் செய்திருக்கிறார். எங்கள் கோயில்களை இடித்துத் தகர்த்தவனுக்கு இங்கென்ன வேலை என்று, எந்த இந்து அமைப்பும் ஒரு வார்த்தை பேசவில்லை. வந்தவனை வணங்கி, கும்பிடு போட்டு பிரசாதம் கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார்கள். திருப்பதியை இடிக்காமல் விட்டானே என்று திருப்திபட்டார்களோ என்னவோ!


இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து நேரடியான விமர்சனங்கள், நையாண்டிகள், அறிவிப்புகளை ராஜபக்ஷே அரசாங்கம் துணிச்சலாக செய்து கொண்டிருக்கிறது. இந்திய நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு, சீனாவுக்கு தாரை வார்க்கப்படுகின்றன. தமிழர்களுக்கு மறுவாழ்வு    என்று இங்கிருந்து யாராவது பேச்செடுத்தால், முதலில் உங்கள் நாட்டில் எல்லோருக்கும் ஒழுங்கு செய்து கொடுங்கள் என்று பதிலடி வருகிறது. இந்தியச்    சிறைச்சாலைகளை விடவும் எங்கள் முள்வேலி முகாம் எவ்வளவோ மேல் என்கிறது. தமிழக மீனவர்களுக்கு எதிராக, தமிழகத்துக்கே வந்து ஆர்ப்பாட்டம்   செய்வோம் என்கிறது. எதற்கும் இந்தியாவிடம் பதில் இல்லை.

கடைசி, கடைசியாக.... ஐக்கிய நாடுகள் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளித்தால்... காஷ்மீரில் இந்தியா   நடத்தும் மனித உரிமை மீறல்கள் குறித்து நாங்கள் குரல் எழுப்ப வேண்டியிருக்கும் என்று நேரடியாகவே தாக்குகிறார் ராஜபக்ஷே. இதற்கும் கூட இந்தியத் தரப்பில் எந்தப் பதிலும் இல்லை. தெற்காசிய பிராந்தியத்தில், இந்தியாவை இவ்வளவு தூரத்துக்கு மிரட்டி வைத்திருக்கிற வித்தை, சீனாவுக்குக் கூட   தெரிந்திருக்கவில்லை.

குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒருமுறை இந்திய அரசாங்கம் ஆயிரம், ஆயிரமாய் கோடிகளை இலங்கைக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது. அதை    நிதியுதவி என்று இதுவரை நினைத்திருந்தால், மாற்றிக் கொள்ளுங்கள். எந்த இடைஞ்சலும் தராமல் இருப்பதற்காக, அவ்வப்போது அனுப்பிக் கொண்டிருக்கிற ‘தாதா  மாமூல்’ தொகை அது. தெற்காசிய பிராந்தியத்தில் நிஜமான வல்லரசு எது என்ற சந்தேகம் இப்போது நம் மனதை ஆழத் துளைக்கிறது!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It