இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய இன ஒழிப்பு நிகழ்ந்து முடிந்த வேளையில், இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய அறவழிப் போராட்டம் மிக துயரநிலையை எட்டி உள்ளது. கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிகழ்வுகள் இந்தப் போராட்டத்தைக்  கொச்சைப்படுத்துவதாகவும், வேதனை அளிப்பதாகவும் உள்ளது. கூடன்குளம், இடிந்தகரை, செட்டி குளம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் குடிநீர், பால், சில மணி நேரமே வரக்கூடிய மின்சாரம், 144 தடை உத்தரவு இவை அனைத்தும் அந்த பகுதி மக்களை வேதனைக்கு உள்ளாக்குவதும், இதையும் நாம் வேடிக்கை பார்ப்பதும், நாம் வாழ்ந்து கொண்டு இருப்பது ஜனநாயக நாட்டிலா அல்லது சர்வதிகாரத்திற்கு அடிமைப்பட்டு உள்ளோமா என்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது.

மிகப் பெரிய மக்களாட்சி நடைபெறும் ஒரு நாட்டில், தங்கள் உரிமைகளுக்காகவும், தங்களுடைய வாழ்வாதரங்களை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் போராடுவதற்கு அந்நாட்டு மக்களுக்கு முழு உரிமையும் உண்டு. மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும், மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதற்கும்தான், மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட அரசே ஒழிய, அரசுக்காக மக்கள் அல்ல. மற்றும் அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும், சட்டங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமும் மக்களுக்குக் கிடையாது. அணு உலைகளை ஆதரிப்பது, எதிர்ப்பது என்பது இரண்டாம் பட்சம். ஆனால் ஒரு நாட்டில் தம் மக்கள் தங்களின் உரிமைகளுக்காகப் போராடும் பொழுது, அவர்களின் உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் மதிப்பளிக்கவேண்டிய அரசாங்கம், தங்களுடைய மக்களின் மீதே உளவியல்ரீதியாக யுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதும், அவர்களின் மன தைரியத்தை சீர்குலைப்பதும் வெட்கக்கேடானது.

கடந்த எட்டு நாட்களாக இடிந்தகரையில் நிகழ்ந்த நிகழ்வுகள், மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறையும், காப்பாற்ற வேண்டிய அரசாங்கமும், தன் மக்களின் மீதே வன்முறையினை ஏவி விடுவதும், அடக்குமுறையைக் கையாள்வதும், அவர்கள் ஒடுக்கப்படுவதும், மதி கொண்ட அரசாங்கம் செய்யும் செயல்கள் இல்லை. எப்போதெல்லாம் ஒரு போராட்டத்தில் மக்களின் கை ஓங்குகிறதோ அப்போதெல்லாம் அரசாங்கம் மக்களைத் திசை திருப்பும் ஆயுதமாக இறையாண்மை, தீவிரவாதம், நக்சல்கள், அந்நிய பணம் என்ற ஆயுதங்களை போராட்டங்களின் மீது ஏவிவிடுகிறது. மக்களாகிய நாம் எது இறையாண்மை, எது தீவிரவாதம், யாரை ஆதரிப்பது, யாரை எதிர்ப்பது என்ற குழப்பத்திலேயே அதற்கான விடைகளை அறிய முன் வருவதில்லை.

மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர், தன் நாட்டில் உள்ள நூற்றி பத்து கோடி மக்களின் கருத்துகளை பிரதிபலிப்பவர். ரஷ்யாவில் தன் நாட்டு மக்களை "சிந்திக்கத் தெரிந்தவர்கள் எல்லோரும் அணு உலையை ஆதரிக்கிறார்கள்" என்று கூறிய‌தும், கூடன் குளம், இடிந்தகரை மக்களை சிந்திக்கத் தெரியாத பாமர முட்டாள்கள் என்று பிரதமர் நினைத்திருப்பதும் வேதனை அளிக்கிறது. மேலும் ஒரு நாட்டின் பிரதமர், இன்னொரு நாட்டு அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் முன்பு தன் நாட்டு மக்களை முட்டாள்கள் என்று சொல்வது எந்த வகை நாகரிகம்? அந்த பாமர மக்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல், அவர்களை சந்திப்பதையே தவிர்த்த விஞ்ஞானிகளை என்னவென்று சொல்வது?

250 நாட்களாக ஒரு துளி வன்முறை கூட நிகழாமல் மிகவும் கட்டுகோப்பாக‌ நடைபெறும் போராட்டத்தில் தீவிரவாதத்திற்கு எங்கு இருந்து இடம் வந்தது? அம்மக்களை அவர்கள் சார்ந்து இருக்கும் இனத்தின் பாலும், அவர்கள் இருக்கும் மதத்தின் பாலும், அவர்கள் செய்யும் தொழிலின் பாலும் வேறு உள்ள அனைத்து வழிகளிலும் அவர்களை கொச்சைப்படுத்துவதை நியாயப்படுத்த‌வே முடியாது. அவர்கள் என்ன கேட்கிறார்கள்? அவர்களுக்குப் பிறகு அவர்கள் தலைமுறையும் அந்த இடத்தில் வாழக் கேட்கிறார்கள். அதில் அவர்களுக்கு முழு உரிமையும் உண்டு. அது நெய்தல் சார்ந்த இடம். அவர்களின் வாழ்வாதாரத்துக்கு பிரச்சனை ஏற்படும் பொழுது அவர்களின் அடிப்படை அச்சத்தை போக்குவது ஒரு அரசாங்கத்தின் கடமையாகும். நாளை மறு தினம் ஏதாவது அசாம்பாவிதம் ஏற்பட்டால் பாதிக்கப்படுவது அந்தப் பகுதி மக்கள்.

கூடங்குளம் அணு மின் நிலையம் துவங்கப்பட்டால் தமிழகத்தின் மின் பற்றாகுறை அடியோடு தீர்ந்து விடும் என்றும், தமிழகம் ஒளிரும் என்றும் ஒரு தவறான மாயை இருக்கிறது. இதற்கு ஞாநி அவர்கள் தன் கட்டுரையில் குறிப்பிட்டது, "ஆய்வாளர் மோகன் சர்மா கணக்கிட்டுள்ளபடி கூடங்குளத்தில் உள்ள இரண்டு உலைகளும் இயங்க ஆரம்பித்து மொத்த உற்பத்தித்திறனாகிய 2 ஆயிரம் மெகாவாட்டில் 60 சதவிகித மின்சாரம் தயாரித்தாலும், 1200 மெகாவாட்தான் வரும். இதில் பத்து சதவிகிதம் கூடங்குளம் வளாகத்துக்கே செலவாகிவிடும். (வழக்கமாக அணுஉலைகள் தங்கள் உபயோகத்துக்கே 12.5 சதம் செலவழிக்கின்றன). மீதி 1080 மெகாவாட்தான். இதில் தமிழகத்தின் பங்கு 50 சதவிகிதம் எனப்படுகிறது. (இதுவும் வழக்கமாக 30 சதவிகிதம்தான்) ஐம்பது என்றே வைத்தாலும் கிடைக்கப்போவது 540 மெகாவாட். இதில் 25 சதம் வழக்கமாக தமிழகத்தில் மின்கடத்துவதில் ஏற்படும் டிரான்ஸ்மிஷன் இழப்பு. எனவே நிகர மின்சாரம் கிடைக்கக் கூடியது 405 மெகாவாட்தான். இதற்கு இத்தனை கோடி செலவு செய்து படு ஆபத்தான வம்பை விலைக்கு வாங்கத் தேவையே இல்லை. தமிழகம் முழுக்கவும் இருக்கும் குண்டு பல்புகளை மாறி குழல் பல்புகளாக்கினாலே 500 மெகாவாட்டுக்கும் மேலே மின்சாரம் மிச்சமாகிவிடும்".

மேலும் இந்தியாவில் உள்ள இருபது அணு உலைகளில் இருந்து பெறப்படும் மின்சாரம் இந்தியாவின் தேவையில் 4% மட்டுமே பூர்த்தி செய்கின்றது. நெய்வேலியில் தயாரிக்கப்படும் மின்சாரத்தில் 17% மின்சாரம் மட்டுமே தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது. மேலும் தமிழகத்திற்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரம் அளிக்கப்படும் என்று அப்பட்டமான பொய்யைக் கூறிய திரு.நாராயணசாமி, கூடங்குளம் அணு மின் நிலையம் உடனே திறக்கப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்குப் பிறகு பேட்டி அளித்தபோது, தமிழகத்திற்கு எத்தனை மெகாவாட் மின்சாரம் அளிக்கப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை எனக் கூறியதையும் என்னவென்று சொல்வது?

நமது நாடு பாலை நிலத்தை பெருவாரியாகக் கொண்டது. வருடம் முழுக்க வெயில் அடிக்கும் பிரதேசங்கள் இங்கு அதிகம். ஆனால் நமது அரசு ஏனோ சூரிய ஒளியின் மூலம் பெறும் மின்சாரத்திற்கு பெரிதளவில் விருப்பம் காட்டுவதில்லை.

இன்று முன்னேறிய நாடுகளும், மேற்கத்திய நாடுகளும் அணுவின் ஆபத்தினைப் புரிந்து கொண்டு, அதற்கு விடை கொடுத்து வருகின்றன. இன்று முன்னேறிய நாடுகள் தங்களின் பரிசோதனைக் இடமாக மூன்றாம் தலைமுறை நாடுகளையும், தன் மக்களால் புறக்கணிக்கப்பட்ட, தன் நாட்டின் வளங்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய தொழில்களை (காப்பர், ஈயம், தோல் பதனிடுதல், சாயப் பட்டறைகள்) முன்னேறாத, வளரும் நாடுகளின் மீது அந்நாட்டு அரசியல்வாதிகள் மூலம் அந்நாட்டின் மக்களின் மீதே திணிக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக அணு உலைகளே நிறுவாத நாடு அமெரிக்கா. உலகம் முழுவதும் யுரேனியம் ஏற்றுமதி செய்யும் ஆஸ்திரேலியா, தன் நாட்டில் ஒரு அணு உலையைக்கூட‌ நிறுவவில்லை. ஜெர்மனி 2020க்குள் தன் அணு உலைகள் அனைத்தையும் மூடப் போகிறது. ஆஸ்திரியா, ஸ்பெயின், ஸ்வீடன், நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளும் அணு உலைகளைக் குறைக்கப்போவதாக அறிவித்திருக்கின்றன. ஜப்பான் தன் அணு உலைகள் மற்றும் அணு சக்தி பாதுகாப்பினை பரிசீலிக்கும் தருவாயில் இருப்பதாகவும் தன்னுடைய அணுஉலைகளை 2025க்குள் மூட இருப்பதாகவும் கூறி உள்ளது.

இன்னும் இந்த உலகம் அணுக் கழிவுகளை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டுதான் உள்ளது. ஒரு டன் அணுக் கழிவில் மூன்று கிலோ புளூடோனியம் கிடைக்கின்றது. இது அணுகுண்டுகளில் மூலப் பொருளாக பயன்படுகிறது. இன்று இந்த உலகமே விடைகொடுத்துக் கொண்டு இருக்கும் அணு சக்தித் துறையில் இந்தியா ஆர்வம் காட்டுவது ஒரு வித வியாபாரத்திற்கும், ஒரு குறிப்பிட்ட சாரார் நலனுக்காக மட்டுமேயாகும். இங்கு யாரும் நாட்டின் வளர்ச்சியை எதிர்ப்பதில்லை. பன்னாட்டு நிறுவனங்களுக்கு இலவசமாகவும், சலுகைகளுடனும் கொடுக்கப்பட்ட மின்சாரத்தால், இன்று மக்கள் இருளிலும், தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டிய நிலையிலும் தள்ளப்பட்டுள்ளது. இன்றும், இந்தத் தேதியிலும் இந்த அரசாங்கம் இதற்கான திட்டமிடுதலை மேற்கொள்ளவில்லை, அதற்கான பணிகளையும் மேற்கொள்ளவில்லை.

"பிணம் தின்னும் கழுகுகள்" நம் அரசியல்வாதிகள். குப்பைத் தொட்டியைக் கூட முறையாகப் பராமரிக்கத் தெரியாததுதான் நமது அரசாங்கம். ஏற்கனவே நமக்கு மத்தியில் அரங்கேறிய பல்லாயிரம் பேரை பலி கொண்ட போபால் விஷ வாயு கசிவும், இன்னும் அந்த் மக்களுக்கு உரிய இழப்பிடு வழங்காமல் அலைய விடும் மத்திய அரசும், கொலைகாரனுக்கே வக்காலத்து வாங்கிய மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றமும், விமான நிலையம் வரை சென்று வாரன் ஆண்டர்சென்னை வழி ஏற்றி அனுப்பி விட்டு, ஐயோ விசாரணைக்கு வரமாட்டேன்கிறார் என்று கதறும் உளவுத் துறையும் இருக்கும் நிலையில், கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்று கூறுவதில் என்ன நியாயம் உள்ளது? கடைசியில் பலிகடா ஆவது மக்கள் தான். இன்னும் ஒரு இழப்பை அனுமதிக்க முடியாது.

மக்களின் கருத்துக்களை பிரதிபலிப்பதில் ஊடகங்கள், பத்திரிகைகளின் பங்கு மிக அவசியம். ஆனால் இங்கு ஒரு சில பத்திரிகைகள் தங்களுடைய இதழியல் அறத்தினை மீறி நடத்து கொண்டது வெட்கக்கேடானது. இன்று இந்த உலகில் வணிக, வியாபார நோக்குடனே அனைத்தும் பார்க்கப்படுகிறது. வியாபாரத்திற்காகவும், பணத்திற்காகவும், தன் நாட்டின் பலத்தை, மற்றொரு நாட்டின் மீது காட்டுவதிலும், சர்வதேசிய அரசியலில் தனக்கொரு வலுவான இடத்தை பிடிப்பதற்கும் ஒவ்வொரு நாடும் முனைகின்றது. இதில் மக்களின் நலன், அவர்களின் உணர்வுகள், அவர்களின் உரிமைகள் இவற்றினைக் கண்டு கொள்ள அவர்களுக்கு நேரமும் இருப்பதில்லை, அதற்கான மனதும் இருப்பதில்லை.

இலங்கைக்கு எதிரான‌ தீர்மானத்தைக் கொண்டு வந்து அமெரிக்கா, பாலஸ்தீனிய விடுதலைப் போராட்டதை எதிர்கிறது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை எதிர்க்கும் சீனா, செச‌சானியா போராட்டத்தை ஆதரிக்கிறது. செச‌சானியா போராட்டத்தை ஆதரிக்கும் சீனா, திபெத் மக்களை விரட்டி அடிக்கிறது. கம்யூனிச நாடான கியூபா இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய இனப்படுகொலையை ஆதரிக்கிறது. காஷ்மீர் போராட்டத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான், இலங்கைக்கு எதிரான‌ தீர்மானத்தை ஆதரிப்பதில்லை. அணு உலைகளை ஆதரிக்கும் இந்தியா, ஈரான் அணு உலைகளை எதிர்க்கிறது. வாக்கெடுப்பு நடத்தி தெற்கு சூடான், எரித்ரியா நாடுகளை உருவாக்கும் ஐ.நா, இலங்கையில் கை கட்டி வேடிக்கை பார்கிறது. அமெரிக்க அணு சக்தியை எதிர்க்கும் இந்திய கம்யூனிசம், ரஷ்ய அணு உலைகளை ஆதரிக்கிறது. எத்தனை முரண்பாடுகள்?? வியாபாரத்திற்காகவும், தங்களுடைய அதிகார பலத்தினை தக்க வைத்து கொள்வதற்காகவும், இது போன்ற மனிதாபிமானம் அற்ற செயல்களை ஆதரிக்கவும், எதிர்க்கவும் துணிகின்றன. இதற்கு காந்திய நாடான இந்தியாவும் விதிவிலக்கு அல்ல. பிணங்களைக் கற்பழித்து, பௌத்த நாடு என்று சொல்லிக் கொள்ளும் இலங்கையும் விதி விலக்கு அல்ல.

இங்கு இன்று ஜனநாயகம் என்ற சொல்லே கேள்விக்குறியாக உள்ளது. இங்கு நடைபெறுவது அனைத்தும் சந்தர்ப்பவாத, சமத்துவமற்ற அரசியலுக்கான இடமாகவே உள்ளது. மக்களால், மக்களுக்காக ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பது மக்களாட்சி. ஆனால் இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் மக்களைப் புரிந்து கொள்வதும் இல்லை, மக்களைப் புரிந்து கொண்ட அரசியல்வாதிகளை மக்கள் ஏற்றுக் கொள்வதும் இல்லை. மக்களும் சந்தர்ப்பவாத அரசியலையும், பணத்தையும் தான் ஏற்கிறார்கள். மாற்று சக்தியை மக்கள் ஏற்று கொள்வதும் கிடையாது. "மழை நின்றாலும் ,தூவானம் விழும்" என்று சொல்லி பிணங்களின் மீது அரசியல் நடத்திய 'தமிழினத்' தலைவர் கருணாநிதியை மக்கள் தேர்ந்தெடுப்பதும், தானே புயலின் கோர தாண்டவத்திற்கு இரையாகி உள்ள கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு, தன் சொத்தினை அடமானம் வைத்து, தேசிய வங்கியில் பத்து லட்சம் கடன் பெற்று, புயல் நிதியாக கொடுத்த அப்பழுக்கற்ற மனிதர் திரு.வை.கோ. போன்றவர்ககளை டெபாசிட் இழக்கச் செய்வதும், இந்த மண்ணில் தான் நிகழும்.

சமீபத்தில் நடந்து முடிந்த சங்கரன்கோயில் இடைத்தேர்தலில், சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு பகுதி மக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு, மற்றொரு பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு பணம் கொடுக்கப்படாத நிலையில், அந்தப் பகுதி மக்கள், தேர்தல் நாள் அன்று மறியலில் ஈடுபட்டு, தங்களின் வாக்குக்கான பணத்தைப் பெற்று கொண்டு, வாக்களித்ததை என்னவென்று சொல்வது? இங்கு நடப்பது ஜனநாயகமா அல்ல பணநாயகமா?.

இந்த எந்திரமயமான வியாபார உலகில், யாருக்கும் சக மனிதனை நேசிக்கவோ, சக மக்களைப் பற்றி நினைக்கவோ நேரமும் இல்லை, மனமும் இல்லை. இன்று நாம் செல்லும் பயணத்தின் வேகம் மிகவும் ஆபத்தானது. ஒரு முடிவினை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றோம். அந்த முடிவு மனித இனம் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு, விளைவுகளை கொடுக்கக் கூடியது. ஆம் இது மனிதர்களுக்கான இடம், மனித நேயத்திற்கு இடம் இல்லை. மனிதர்கள் நாம் பூக்களின் மீது நடக்க ஆசைப்படுவதில்லை; கல்லறைகளின் மீதே நடக்க ஆசைப்படுகின்றோம். இந்த பூமி ஒரு தோட்டம், அது கல்லறைகளால் நிரப்பப்படுகிறது. 

- அ.ராம்

Pin It