இந்திய சமூகத்தின் பலமற்ற பிரிவினருக்கு மட்டும் மரணதண்டனை வழங்கப்படுவது ஏன்? என்ற கேள்வியை இந்தியாவின் (முன்னாள்) குடியரசுத் தலைவர் திரு.அப்துல் கலாம் விடுத்துள்ளார். “மரணதண்டனை இருக்க வேண்டுமா? அல்லது ஒழிக்கப்பட வேண்டுமா?" என்ற விவாதத்தில் விருப்பமுள்ளவர் என்பது அல்ல இதன் பொருள்.

     “தற்பொழுது கிட்டத்தட்ட 100 விழுக்காடு மரண தண்டனையானது சமூகத்தின் பலமற்ற பிரிவினருக்கும், தலித்துகளுக்கும், மத சிறுபான்மையினருக்கும் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது” என்பதுதான் இதன் பொருள்.

     அப்படியென்றால் மேல்வகுப்பினர் எந்த குற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதில்லை என்று பொருளா? இல்லை. பின்னர் இது எதை குறிக்கிறது எனில் “மேல்தட்டு மக்களை ஏதோ ஒன்று மரண தண்டனையிலிருந்து காப்பாற்றுகிறது”. இந்தப் பிரச்சனை சிறிய பிரச்சனை அல்ல. உண்மையான மக்களாட்சியும், நீதியும் உறுதி செய்வதற்கு நாடு முழுவதும் இதை விவாதத்திற்கு உட்படுத்தி தக்க முடிவுக்கு வரவேண்டும்.

     இந்தப் பிரச்சனையைப் பற்றி விவாதிப்பதற்கு, சட்ட மற்றும் நீதி நிர்வாகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களின் பார்வையையும் கவனத்தில் கொள்வது இன்றியமையாதது ஆகும். முன்னாள் வழக்கறிஞர் திரு.ராம்சே கிளார்க் அவர்கள் குடியரசுத் தலைவர் (முன்னாள்) அவர்களின் கருத்தையே கொண்டுள்ளார் என்பதை இங்கே முதலில் குறிப்பிட விரும்புகிறேன். “ஏழைகள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், கல்வியறிவற்றவர்கள், வலுவற்றவர்கள் மற்றும் விரும்பத்தகாதவர்களுக்கே மரண தண்டனை நிறைவேற்றப்படுகின்றது”. (1) என்று கூறியுள்ளார். இரண்டாவதாக, நீதியரசர் வி.ஆர்.கிருட்டிண அய்யர் அவர்களும் ஸ்டாக்கோம்-ல் நடந்த கூட்டத்தில் மரண தண்டனை பற்றி அதே பார்வையை வெளிப்படுத்தியிருக்கிறார். அதாவது “எந்த ஒரு சமூக-பொருளாதார ஆய்வறிக்கையின்படியும் மரண தண்டனை என்பது வரலாறு நெடுகிலும் ஏழைகளுக்கு, ஒது(டு)க்கப்பட்டவர்களுக்கு, கருப்பர்களுக்கு, பெண்களுக்கு, அதிருப்தியாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மாறாக பணக்காரர்களுக்கு, பிராமணர்களுக்கு, வெள்ளையர்களுக்கு, ஆண்களுக்கு, திருப்தியாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. மரண தண்டனை என்பது வர்க்க சார்பு மற்றும் நிறவேற்றுமைகளைக் கொண்டுள்ளது. குற்றவியல் சட்டங்கள் இரண்டு தரப்புகளைப் பார்த்து குரைத்தாலும், அது தன்னுரிமைக்காகப் போராடும் பாட்டாளி வர்க்கத்தை தான் கடிக்கிறது” என்று கூறியுள்ளார்.(2)

     “பணம், பலம் (உடல் வலிமை கொண்ட அரசியல் குண்டர்கள்), பதவி (மக்களாட்சியை குழித்தோண்டிப் புதைக்கும் முடியரசர்களான ஊழல் அரசியல்வாதிகள்)”. (3ப’க்கள் என இனி வரும் பகுதிகளில் அழைப்போம். ஆங்கிலத்தில் இது 3M’S (Money,Mafia,Monarchy) என அழைக்கப்படுகிறது). இந்த மூன்று காரணிகளும் நீதியையும், மக்களாட்சியையும், ஒரு போலியானதாகவும், பாசாங்குத்தன்மை உடையதாகவும் மாற்றுவதில் முதன்மை பொறுப்பு வகிக்கின்றன என்பது பொதுமக்களின் கவலையாக இருக்கிறது” என்பதைத்தான் நீதியரசர்களின் மேற்சொன்ன கூற்றுகள் தெளிவுப்படுத்துகின்றன.

     பொதுவாக மேல்வர்க்க, மேல்சாதியினரின் மீது கொலைக்குற்றங்கள் பெருமளவில் நீதிமன்றத்திற்கு வருகிறது. ஆனால் நீதிமன்றத்தின் நீதியை மதிக்காமல் நீதிமன்ற அமைப்புகள் மற்றும் அரசியலமைப்புகளிடம் போக்குக்காட்டி விளையாடுகிறார்கள். “குசராத் கலவரம், 1984-ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் மற்றும் கருணையே இல்லாமல் காவல்துறையின் மேற்பார்வையில் அரியானா மாநிலத்தின் துலியானாவில் நடந்த அய்ந்து தலித்துக்கள் மீதான படுகொலைகள்” இந்த மூன்று சம்பவங்களும், 3ப’க்களின் கூட்டுறவினால் நடத்தப்பட்டது என்பதற்கு ஒரு எரியும் எடுத்துக்காட்டுகள், ஆனால் ஒருவருக்கும் மரண தண்டனை கிடைக்கவில்லை.

     “பணம்-ஆள்பலம்-அதிகாரம்” இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றை வைத்திருப்பவர்களின் கையில் தான் சட்டம் இருக்கும். மேலும் ஏழைகள், பின்தங்கிய மற்றும் சுரண்டப்பட்ட மக்களின் தோள்களில் சவாரி செய்துதான் நீதியும், மக்களாட்சியும் உயிர்வாழ்வதுடன் பெருமையடைந்து கொள்கின்றன” என்ற உண்மையைத்தான் மேற்சொன்ன படுகொலைகள் நமக்கு உணர்த்துகின்றன.

     “மக்களாட்சியின் தூண்கள் எனப்படும் நிறைவேற்று அதிகாரம் உள்ள சட்டமன்றங்கள், நீதிமன்ற அமைப்புகள் மற்றும் பத்திரிக்கைகள்” இவை அனைத்தும் சாதிரீதியான, இந்து மதரீதியான ஒடுக்குமுறைகளையும், ஒற்றையாட்சியையும் கொண்டுள்ளன என்பதை சொல்லத்தேவையில்லை. இவைகள் கிட்டத்தட்ட எல்லா சமூக, அரசியல், பொருளாதார மற்றும் நீதித்துறை விதிகளின் மேல் தங்களுடைய செல்வாக்கை செலுத்துகின்றன.

     இந்த பிரச்சனையைப் பற்றி புரிந்துகொண்டு ஒரு சரியான தீர்வை அடைவதற்கான மிகப்பெரிய உதவியை சாதிக்கொடுமை பற்றிய டாக்டர்.அம்பேத்கார் அவர்களின் பார்வையை இங்கே குறிப்பிடுவது இன்றியமையாதது என நான் உணர்கிறேன். “இந்துமத நெறிமுறைகளின் மீதான சாதிய விளைவுகள் வருந்ததக்கதாகும்” என்று அவர் கூறுகிறார். பொதுமக்களின் உணர்வை சாதி கொன்றுவிட்டது. பொது தொண்டுணர்வை சாதி அழித்துவிட்டது. பொதுமக்களின் ஒற்றுமையை ஜாதி இயலாததாக்கி விட்டது. ஒரு இந்துவின் சமூகம் என்பது அவனது சாதியாகும், அவனுடைய கடமைகள் அவனுடைய சாதிக்கு மட்டுமே உடையது. அவனுடைய விசுவாசம் கட்டுப்படுத்தப்பட்டு அவனுடைய சாதிக்கு மட்டுமே உரியதாக உள்ளது. அவனது நல்லொழுக்கம் மற்றும் நெறிகள் சாதியுடன் பிணைக்கப்பட்டுள்ளது. தகுதி உள்ளவர்களுக்கு எந்த அனுதாபமும் சாதிய கட்டமைப்பில் இல்லை. தேவைப்படுபவர்களுக்கு எந்த உதவியும் சாதியக்கட்டமைப்பில் இல்லை. பாதிக்கப்படுகிறவர்களின் கூக்குரலுக்கு, அழைப்புகளுக்கு எந்த பதிலையும் வழங்காது. சாதியில் தொண்டு உதவிகள் கிடைக்கும் ஆனால் அது சாதியில் துவங்கி சாதியிலேயே முடியும்.(3)

     விடுதலைப் பெற்று 64 ஆண்டுகள் கடந்த பிறகும், முனைவர்.அம்பேத்கார் அவர்களின் கூற்று மிகவும் பொருத்தமானதாகவும் மற்றும் குறிப்பிடத்தக்கதாகவும் இருக்கிறது. சில காமக்கொடூரன்களால் கூட்டுக்கற்பழிப்புக்கு உள்ளான ராஜஸ்தானின் தலித் பெண்ணான பான்வரி தேவியின் வழக்கை எடுத்துக்கொள்வோம். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேல்சாதியினர். அவர்கள் மனிதர்கள் என்று அழைக்கப்படுவதற்கு தகுதியுடையவர்களா என்பதே எனக்கு சந்தேகமாக உள்ளது. அப்பாவி தலித் பெண்ணை கூட்டு பாலியல் வல்லுறவு செய்தவர்கள் உண்மையில் கொடிய கோழைகளே.

     இரண்டாவதாக, நீதிமன்றத் தீர்ப்பின் பல்வேறு இடங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்களை குற்றமற்றவர்களாக அறிவிக்க, அவர்களது சாதியை கருத்தில் எடுத்துக்கொண்டு அதன் மூலம் அவர்களின் உயர்மதிப்பை சுட்டிக்காட்டியிருப்பது அதிர்ச்சியானது. மேலும் குற்றவாளிகளின் உறவினர்கள் கொடுத்த சாட்சியங்களும், கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட தலித் பெண்ணின் கற்பழிப்பை கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.

     இதுமாதிரியான போக்குகள் நீதிமன்ற நடைமுறைகளின் மேல் ஒரு உறுதியான சந்தேகத்தை கொடுக்கிறது. “பொறுப்புகள், சுயமரியாதை, சமூக மதிப்பீடுகள் மற்றும் மனித நேயம்” ஆகியவைகளுக்கு எதிராக சட்டஒழுங்கு, சமூக அமைப்பு மற்றும் நீதித்துறையில் ஓட்டையை ஏற்படுத்தியுள்ளன. அதனால் தான் நீதியானது ஒரு வெட்கப்படக்கூடிய மரணத்தை, அருவருப்பான சாதியம் மற்றும் மத அடிப்படைவாதிகளின் அராசகம் மற்றும் ஏகபோகங்களினால் சந்திக்கிறது. இந்த மாதிரியான ஊழல் நிறைந்த, பாரபட்சம் உடைய சமூக அமைப்புகள், குற்றவாளி மேல்சாதியினரையும், பணக்காரன்களையும் தப்பவிட்டு ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் மரண தண்டனையை வழங்குவதற்கு ஒரு முதன்மை காரணமாக உள்ளன.

     உச்சநீதிமன்றத்தின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரான நந்திதா ஆக்சர் அவர்களும், மரண தண்டனையின் வேர்களை “சமூக-பொருளாதாரத்தின்” கண்ணோட்டத்தில் பார்க்கிறார். மரண தண்டனை விதிக்கப்பட்ட அய்ந்து தலித்துகளின் பிரச்சனையை கவனத்தில் கொண்டு மே 21, 2004-ம் ஆண்டு அரசியலமைப்பு அவையில் நடந்த கூட்டத்தில் பேசுகையில் “தனிப்பட்ட முறையில் மனிதநேயத்திற்கு எதிரான குற்றத்திற்கு அமெரிக்க அதிபர் (முன்னாள்) புஷ், பாரிய படுகொலைகளுக்கு காரணமான குசராத் முதல்வர் மோடி மற்றும் ஒரிசாவில் கிரகாம் ஸ்டீன்ஸ் என்ற யெர்மன் பாதிரியாரை கொன்ற தாராசிங் ஆகியோருக்கு தனிப்பட்ட முறையில் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். (4) இவர்கள் இன்னமும் சட்டத்தின் பிடியிலிருந்து விலகியிருக்கிறார்கள். ஏன்? எப்படி? இதற்கான காரணம் நெருங்க முடியாத தொலைவில் இல்லை. இதற்கான வேர்கள் சாதி, மத மேலாதிக்கத்தில் இருக்கிறது என்பதை எளிதில் கண்டுணரலாம். அங்கே வெற்றிபெறுவதற்கு சாதிப்பதற்கு சாத்தியமில்லை என்று எதுவும் இல்லை.

     இந்திய சமூகத்தில் நிலவக்கூடிய அடிமைத்தனக்கட்டுகளையும் மற்றும் சமூக பழக்கவழக்க அடிமைத்தனங்களையும், மனிதத்தன்மையற்ற மரபுகளையும் உடைக்கத் தீர்மானித்து மக்களாட்சி மற்றும் அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் தங்கள் உயிர்வாழ்தலையும், இருப்பையும் மற்றும் கண்ணியத்தையும் இந்த சமூகத்தில் நிலைநிறுத்தப் போராடுகின்ற தலித் மக்களின் மற்றும் ஏழைகளின் உழைப்பை சுரண்டுகின்ற சமீன்தார் (நிலப்பிரபுக்கடவுள்) மற்றும் ஆதிக்க சாதிகளின் சர்வாதிகாரத்தை உள்ளடக்கிய ஒரு “சமூக-பொருளாதார” கட்டமைப்பைத் தான் இந்திய சமூகம் அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதை மேற்கண்ட கூற்று எதிரொளிக்கிறது.

     ஆனால் அப்படி போராடுகின்ற ஏழைகளையும், தலித்துகளையும் இந்த பூமிப்பந்தின் முகத்திலிருந்தே துடைத்தழிக்கின்ற முயற்சியை, பாரிய படுகொலைகள் மற்றும் இரத்த சிதறல்கள் மூலம் மேற்கொள்கின்றார்கள் இந்த மத மற்றும் நிலப்பிரபுத்துவக் கடவுள்கள். சில நேரங்களில், ஒடுக்கப்பட்ட பிரிவின் சில மக்கள் இந்த முடிசூடா மன்னர்களுக்கு எதிராக அவர்களின் தொனியிலேயே பதிலளிக்கின்றனர்.

     இம்மாதிரியான சூழ்நிலைகளில், இந்த எதேச்சதிகார முடியரசர்கள் அனைத்து எல்லைகளையும் உடைத்துக்கொண்டு, ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் மீது, மத அடிப்படைவாதிகள் மற்றும் தேசவிரோதிகள், சர்வதேச தீவிரவாதிகளுக்கு சற்றும் குறையாத கொடூரங்களை நிகழ்த்துகின்றார்கள்.

பீகார், ஜார்கண்ட், தமிழ்நாடு மற்றும் ஆந்திரம் போன்ற மாநிலங்கள், இதுபோன்ற மோசமான பிரச்சனைகளுக்கு ஒரு எரியும் எடுத்துக்காட்டுகள் ஆகும்.

     நந்திதா ஆக்சர் இப்பிரச்சனையின் வேர்களை புரட்சிகர அரசியலின் தலைமைகள் மற்றும் சாதி மற்றும் சமூக சூழ்நிலைகளுடன் இணைத்தும் பார்க்கிறார். “தீவிர கம்யூனிச அமைப்புகளின் அடித்தளமாக நிலமற்ற, ஏழை தலித் விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளிகளைக் கொண்டுள்ளது” என்கிறார் (5). இந்தக் கூற்றானது, இப்பிரச்சனையின் இன்னொரு பக்கத்தைத் தொடுகிறது. அதாவது, நிலமற்றவர்கள், ஏழை தலித் விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் தான் புரட்சிகர கம்யூனிசத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறார்கள்.

     இம்மக்கள் அதிகமான அளவில் சமீன்தார்களின் சேனைகளால் கொல்லப்படுகிறார்கள் அல்லது 3ப’க்களின் கைப்பாவைகளாக செயல்படும் தொழில்முறை கொலைக்காரன்களான அப்பகுதி காவல்துறையினரால் போலி துப்பாக்கிச்சூடு (என்கவுன்ட்டர்) செய்து கொல்லப்படுகிறார்கள். இவர்களுக்கு பின்னால் இருந்து செயல்படுகிறவர்கள் வெவ்வேறு நீதிமன்றங்களில் தங்களுக்கு மரண தண்டனை கிடைக்கும்வரை முயற்சிக்கிறார்கள். மேல்தட்டு மற்றும் உயர்சாதியை சேர்ந்தவர்கள் தங்களின் சமூக-பொருளாதார நிலையைப் பயன்படுத்தியும், 3ப’க்களின் மூலம் பெறப்பட்ட எதேச்சதிகார சக்திகள் மூலமாகவும், சட்டத்தின் எல்லை வரம்பிற்குள் வராமல் இருந்துகொண்டிருக்கிறார்கள். இதுதான் இவர்களை மரண தண்டனையின் பிடியில் இருந்து வெளியே வைத்திருக்கும் மிக முதன்மையான காரணியாகும்.

     ஏன் நிலமற்றவர்கள், கூலித்தொழிலாளர்கள் மற்றும் தலித்துகள் இம்மாதிரியான புரட்சிகர இயக்கங்களில் இணைகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. இது போன்ற சூழலை பூமி சேனா, சவரன விடுதலை முன்னணி மற்றும் ரன்வீர் சேனா போன்ற ஆயுதம் தரித்த சேனாக் குழுக்களின் அடக்குமுறைகளும், அவர்கள் கட்டவிழ்த்துவிடும் வன்முறைகளுமே திணிக்கின்றன. இது போன்ற சேனாக்கள் சமூகத்தின் பலமற்ற மக்களை மற்றும் தலித்துகளை ஒரு தேவையற்ற செடிகொடிகளை பூமியிலிருந்து அகற்றுவது போல கருணையின்றி கொல்கின்றார்கள். மேலும் எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் குழந்தைகளை பெண்களை மற்றும் வயதான பெரியவர்களை கொலை செய்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலைகளால் இம்மக்களின் வாழ்க்கை கடினமானதாகவும், மேற்கொண்டு வாழ்க்கையை நீட்டிக்க இயலாததாகவும் ஆகிறது. சமூகத்தின் பலமற்ற பிரிவினரிடம் இப்போது இரண்டு வாய்ப்புகளே உள்ளன. ஒன்று கோழைத்தனமாக இறப்பது, இரண்டு தைரியமான மனிதர்களாக தங்களின் உரிமைகளுக்காக போராடுவது. கண்டிப்பாக தலித்துகளும், ஏழைகளும் கண்ணியத்தையும், சுயமரியாதையையும் உடையவர்கள். அதனால் அவர்கள் இரண்டாவதை தேர்ந்தெடுக்கிறார்கள். இவர்கள் தங்களது நடவடிக்கைகளை சுயமாக முடிவெடுக்கும் வரை அனைத்தும் நிறைகளாகவும், பயனுள்ளவையாகவும் இருக்கின்றன. ஆனால் அவர்களது இயக்கங்கள் CPI (ML) போன்ற புரட்சிகர இயக்கங்களால் கைக்கொள்ளப்படுகிறது. இதனால் அம்மக்கள் வெறும் பலி ஆடுகளாக மாறுவதோடு அவர்களின் கைப்பாவைகளாகவும் மாறிப்போகின்றார்கள்.

     “இந்திய சமூகத்தின் பின்தங்கிய பிரிவை சேர்ந்த அப்பாவி மக்களை நக்சலைட் என்ற பெயரில் முன்னிருத்தி அவர்களின் கொலையை, வரையறுக்கப்படாத மற்றும் கொல்லும் அதிகாரம் பெற்ற கொலைகாரர்களான மேல்வகுப்பு, மேல்சாதியில் இருந்து வந்த உயர்தலைவர்கள் உறுதிசெய்கின்றனர்” என்ற தெளிவான செய்தியை மேற்சொன்ன கருத்தினால் ஆக்சர் அவர்கள் நமக்கு விளக்குகிறார்.

     இது போன்ற “சமூக-பொருளாதார” நிலைமைகள் சமூகத்தின் பலமற்ற பிரிவினருக்கு மரண தண்டனையை உள்ளூர் நிலப்பிரபுத்துவ கடவுள்களின் செல்வாக்கின் கீழ் உறுதிசெய்கின்றன. இதனால் தான் உச்சநீதிமன்றத்தால் வழங்கப்படும் நீதிகளிலும் மரண தண்டனை நீடிக்கிறது. மேலும் தீவிரமானதொரு மற்றொரு பிரச்சனையும் இங்கே விவாதிக்கப்பட வேண்டியுள்ளது. ஆதிக்கசாதிகளை மற்றும் வகுப்பினரை உள்ளடக்கிய ஊடகங்கள் மற்றும் மற்ற முகவர்கள் (இடைத்தரகர்கள்) இந்த மக்களுடைய உயிர்வாழ்விற்கான, கண்ணியத்திற்கான, தங்களின் அடையாளங்களுக்கான போராட்டத்தை “ஒரு சாதிக்கலவரமாக” சித்தரிப்பதோடு அப்படியே அதை விளம்பரமும் செய்கின்றன. இந்த சதிக்கு பின்னால் இருக்கும் நோக்கம் என்னவெனில் “இம்மாதிரியான சுயமரியாதை மற்றும் தங்களின் அடையாளங்களுக்கான போராட்டங்களை”  சமூக-விரோத, தேச விரோத நடவடிக்கைகளாகக் காட்டி கடுமையான, மன்னிக்கமுடியாத விதிகளை கொண்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் மரணதண்டனையை போராடும் மக்களுக்கு உறுதியாக்குவதுதான்.

1995 ம் ஆண்டிலேயே தடா சட்டம் நீக்கப்பட்ட நிலையில் மேல்சொன்ன 5 தலித்துகளுக்கும் தடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்குப் பற்றிய அறிக்கையின் நியாயத்தை எப்படி ஏற்றுக்கொள்வது?

     இரண்டாவதாக, அகிம்சையையும், சீர்திருத்தக்கொள்கைகளையும் அடிப்படையாகக் கொண்ட இந்திய நாடாளுமன்றமும் மரண தண்டனையை அரிதினும் அரிதான வழக்குகளில் ஏற்றுக்கொள்கின்றது. இதன் வரிசையில்தான் பாகல்பூர் சிறையில் உள்ள 35 மரணதண்டனை வழக்குகளும் (6) ஏழைகள், சிறுபான்மை வகுப்புகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான சதியை அம்பலப்படுத்துகின்றன. அதற்காக இவர்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நான் வாதாடுகின்றேன் என்பது பொருளாகாது. மாறாக இதற்கு பின்னணியில் உள்ள உண்மையான மூளையாக செயல்படுகிறவர்களையும், உண்மைக் குற்றவாளிகளையும் சட்டத்திற்கு முன்னால் நிறுத்தும் வேறொரு கோணத்தில் முயற்சிக்கிறேன். மேதகு (முன்னாள்) குடியரசுத் தலைவர் அவர்களின் இந்தக் கவலையைதான் ஆக்சர் அவர்களும் தனது முடிவுகளில் கொண்டுள்ளார் என்று நான் கருதுகிறேன்.

     குசராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புக்ஷ் மற்றும் தாரா சிங் ஆகியோரின் மரணதண்டனைக்காக வாதிடும் போது, பலவீனமான பிரிவு மக்கள் மற்றும் தலித்துகள், வகுப்புவாதக் கலவரங்களிலும் தவறாகப் பயன்படுத்தப்படுகிறார்கள் என்ற மற்றொரு செய்தியும் தருகிறார். அம்மக்களின் அறியாமையினாலும் மற்றும் அப்பாவித்தனத்தாலும், அவர்கள் அரசியல் சதிகளின் கைகளில் வெறும் கருவிகளாக ஆகிறார்கள். மேலும் உச்சகட்ட தண்டனையாக மரண தண்டனை கிடைக்கப்பெறுகிறார்கள்.

     குற்றத்தின் பின்னணியில் மூளையாக செயல்பட்டவர்களுக்கு தண்டனை வாங்கித் தருவதோடு, வகுப்புவாதக் கலவரத்தை செயல்படுத்துகிறவர்களாக மாறுகின்ற அப்பாவி மக்களை காப்பாற்ற விரும்புவதோடு மட்டுமல்லாமல், அக்கலவரங்களில் நடக்கும் கொலைகளில் இருந்தும் அவர்களை காப்பாற்றுவதற்காகவும் வாதிடுகிறார். போலி அரசியல்வாதிகள் மற்றும் போலி மதத்தலைவர்களுக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கைகளை வீரியத்துடன் மேற்கொண்டால், சமூகத்திலிருந்தும் அப்பாவி மக்களுக்கு எதிராகவும் உள்ள மரணதண்டனையின் எண்ணிக்கை ஒரு குறிப்பிடத்தக்க அளவுக்கு குறையக் கூடும்.

     இந்த எரியும் பிரச்சனையின் உண்மைக் காரணம் இந்திய சமூகத்தால் உறுவாக்கப்பட்ட “சமூக-பொருளாதார” அமைப்பில் உள்ளது என்றும், அது அசிங்கமான சாதியத்தையும், மத அடிப்படைவாதங்களையும் அடிப்படையாக கொண்டுள்ளது என்றும், இந்த அடிப்படைக் காரணங்களை தலித்துகளுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் மற்றும் மத சிறுபான்மையினருக்கும் மரணதண்டனையைப் பெற்றுதருகின்றன என்றும், அதிலும் மோசமாக பாதிக்கப்படுகிறவர்கள் தலித்துகள் தான் என்பதும் மேற்சொன்ன அறிக்கையிலிருந்து தெளிவாகிறது. “மரணதண்டனையில் நூறு சதவீத இடஒதுக்கீடு” என்ற பிரபாத்குமார் சாண்டில்யா அவர்களால் எழுதப்பட்ட நூலில், முன்னணி இந்திப் பத்திரிக்கையான “இந்துஸ்தான்”- அக்-நவ-2003-கட்டுரை இப்பிரச்சனையை தீவிரமாக பேசுகிறது.

     பீகார் மற்றும் சார்கண்ட் மாநிலத்தின் அய்ந்து தலித்துகளுக்கு அம்மாநிலத்தின் உயர்நீதி மன்றத்தால் வழங்கப்பட்ட மரணதண்டனையை மேதகு உச்சநீதிமன்றம் மாற்றாமல் உறுதி செய்திருப்பதை கவனத்தில் கொண்டு, திரு. பிரபாத்குமார் சாண்டில்யா அவர்கள் “பீகார் மற்றும் சார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தலித்துகள், பழங்குடியினர், பெண்கள் மற்றும் மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினருக்கு மரணதண்டனையில் நூறு சதவீத இடஒதுக்கீடு உள்ளது” என்று கூறுகிறார். மேலும் “இந்த இடஒதுக்கீடானது எழுதப்படாத, அறிவிக்கப்படாத ஒன்று என்றும் மற்றும் அது பழைய மரபுகளையும், பாரபட்சங்களையும் அடிப்படையாக கொண்டுள்ளது” என்கிறார். நாட்டின் மற்ற மாநிலங்கள் இப்பழக்கத்திலிருந்து விடுபடவில்லை. 56 ஆண்டு விடுதலைக்கு பிறகும் கூட (கட்டுரை எழுதிய நேரத்தில்), தலித்துகளும், மதசிறுபான்மையினரும் மரணதண்டனையில் முழு ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று கூறியுள்ளார். (6)

     இப்பிரச்சனையை விவாதிக்கும் போது, திரு.பிரபாத் குமார் சாண்டில்யா அவர்கள் “சமூக-பொருளாதார கட்டமைப்பையும், சமூகத்தினுள் நிலவுகிற சுமூகமான-பழக்கத்தையும் தீர்மானிக்கிற காரணிகளான சாதி, மதம் மற்றும் சமூக படிநிலைகளே இந்த முக்கிய பிரச்சனையின் வேர்கள் என்று கண்டுபிடித்த திரு.அம்பேத்கார், நந்திதா, கிருட்டிண அய்யர் மற்றும் ராம்சே கிளார்க் ஆகியோரோடு ஒத்துப்போகிறார். மேலும் நடைமுறைவாதியாகவும் இருக்கிறார்.

     எம்.என்.ராய் என்ற தீவிர மனிதநேயர், மரணதண்டனையை மிகவும் அப்பட்டமாக / வெளிப்படையாக அனுகுகிறார். “நீதி என்பது நாகரிகத்திற்கு வெகு அப்பால் உள்ளது. மனித தியாகங்களுக்கான தேவையை மிருகத்தனமான கடவுள்கள்தான் உருவாக்குகின்றன மற்றும் கடவுள்களும், கடவுளிகளும் அவைகளுடைய பக்தர்களின் மாயைக்கு பிறகு உருவாகின்றன. இந்த உலகம் உண்மையில் நாகரிகம் அடைந்துள்ளது எனில், மிருகத்தனமான கடவுள்களுக்கு இரத்தத்தை காணிக்கையாக கேட்காது. அதற்கு பதிலாக நீங்கள் மின்சார நாற்காலியை வழங்கினாலும், அது மனித தியாகங்களே” என்கிறார். (1)

     நீதியானது நாகரீகத்திற்கு வெகு தொலைவில் இருக்கிறது என்று சொல்வதிலிருந்து இந்திய சமூகம் ஒரு நாகரீகம் அற்றது என்பதை எம்.என்.ராய் அவர்கள் தெளிவுப்படுத்துகிறார்கள். அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களை சுரண்டியும், சமூகத்தில் தங்களுடைய சிறப்பான உயர்ந்த பாரம்பரிய தகுதியை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், சமூகத்தில் எங்கும் பரவிக் கிடக்கும் கடவுள் மற்றும் கடவுளிகளை, சுயநல எண்ணங்களை உடைய மோசமான மனிதர்கள் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று எம்.என்.ராய் அவர்கள் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்.

     ஆயுதங்களை கொண்டுள்ள கடவுள் மற்றும் கடவுளிகள் மிருகத்தனம் உடையவை என்றும் கூறுகிறார். கடவுள் மற்றும் கடவுளிகளின் மிருகத்தனத்திற்கு பதிலாக மின்சார நாற்காலி வழங்கப்படுவதை வரவேற்கும் எம்.என்.ராய், இது முந்தயதை விட சற்று மனிதத்தன்மை வாய்ந்தது என்கிறார். இந்திய சமூகமே அனைத்து விதமான மனித தன்மையற்ற செயல்களுக்கும், காட்டுமிராண்டித்தனங்களுக்கும் பொறுப்புடையது. அதாவது மரணதண்டனை, உச்சகட்ட மூடநம்பிக்கைகள் மற்றும் தீண்டாமை, சுரண்டலை உள்ளடக்கிய எல்லா பாகுபாடுகளுக்கும் என்று அவரின் பகுத்தறிவு மற்றும் அறிவியல் அனுகுமுறையில் தெளிவாக்குகிறார்.

     ஊழல் மலிந்த நடவடிக்கைகளால், பழக்க வழக்கங்களால், மரணதண்டனை பெறும் தகுதியுடைய உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படாமலும் மற்றும் தாங்கள் சட்டவிதிகளுக்கு அப்பாற்பட்டவர்களாக கருதிக்கொண்டும், மேலும் மிகவும் வெறுக்கத்தக்க குற்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டும் உள்ளனர். அவர்களுக்கு சட்டத்தின் மேல் எந்த பயமும் இல்லாமல் இருக்கிறார்கள் ஏனெனில் சாட்சிகளையும், வழக்கறிஞர்களையும் வாங்கும் வசதிப் படைத்தவர்களாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பல ஓட்டைகளை உடைய முதல் தகவல் அறிக்கையை தனது பணபலத்தின் மூலம் உறுவாக்கவும் செய்கின்றனர். அனைத்திலும் மோசமாக நீதியையும் 3ப’க்கள் செல்வாக்கு செலுத்திப் பெறுகிறார்கள் (4). சமூகத்தின் பலமற்ற பிரிவினர் மற்றும் தலித்துகள், நாள் ஒன்றுக்கு இரண்டு வேலை உணவையே வசதியாக பெறமுடியாமல் இருக்கும் நிலையில், மரணதண்டனைக்கு எளிதாக இரையாக்கப்படுவதுடன், மரணதண்டனை பெறவேண்டிய உண்மைக் குற்றவாளிகள் எந்த ஒரு சிறு தீங்கும் இல்லாமல் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்பதை சொல்லத் தேவையில்லை. இந்த எதேச்சதிகார தன்மைகள்தான் அப்பாவி மக்களின் வாழ்க்கையிலும், சட்டத்திடமும் விளையாடும் போக்கை உற்சாகப்படுத்துகின்றன. சமூகத்தில் நிலவி வரும் சமூக நல்லிணக்கங்களை குலைக்கும் வகையில், சாதி மத கொடூரங்களின் அடிப்படையில் அமைந்த படுகொலைகளும், கற்பழிப்புகளும் நாளுக்கு நாள் தொடர்கதையாகி வருகின்றன. சமூக மற்றும் அரசியல் நிலைகளில் எதேச்சதிகாரமும் ஒற்றையாட்சி தன்மையும் நிறைந்துள்ளன என்பது அதிகரித்து வரும் குற்றங்கள் தெளிவாக்குகின்றன.

     “ஒவ்வொரு இரண்டு மணிநேரத்தில் இரண்டு தலித்துகள் படுகொலை செய்யப்படுகிறார்கள், ஒவ்வொரு நாளும் மூன்று பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிறார்கள், இரண்டு தலித்துகள் கொல்லப்படுகிறார்கள், இரண்டு தலித்துகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்படுகின்றன” என்று டாக்டர்.கே.பி.சிங் அவர்கள், தலித்துகளுக்கு எதிராக குற்றங்களின் அளவு அதிகமாகி வருவதன் மூலம் தெளிவாக்குகிறார். (7)

     அதிகரித்துவரும் குற்றங்களின் கொடூரங்களும், தீவிரங்களும், சரியான முடிவை எட்டுவதற்கான உணவை தருகின்றன. அதாவது சமூகத்தின் பலமற்ற பிரிவுகள் குறிப்பாக தலித்துகளுக்கு எதிராக அனைத்துவிதமான பாரபட்சங்களையும், இந்த உயர் சாதி வகுப்பினர் அணிந்துக் கொள்கின்றனர். மிகப் பிரபலமான விமர்சகரும், அம்பேத்காரியருமான டாக்டர்.தேஜ்சிங் அவர்கள், அபேக்சா என்ற காலாண்டு இந்தி இலக்கிய இதழில் வந்த தனது கட்டுரையில் “சவரன் சமூகத்தினர் இன்றளவும் காவல் துறையிலும், நீதித் துறையிலும் முழுமையான ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த சவரன் மன நிலையின் கீழ் அனைத்து முடிவுகளும், தீர்ப்புகளும் வழங்கப்படுவதால் தலித்துகளும் மற்றும் சமூகத்தின் ஏனைய பலமற்ற பிரிவினரும் மரணதண்டனையை பெறுகின்றனர். (5)

     சாதாரண மனித வாழ்வை முன்னெடுப்பதற்கான அனைத்து விதமான அத்தியாவசிய தேவைகள் மற்றும் அடிப்படை உரிமைகளில் இருந்து சாதிகளை (இன்றைய தலித்துகளை) தனிமைப்படுத்தி, பின்னுக்குத் தள்ளிய இந்துக்களின் விதியை வடிவமைத்தவரான “மனு” என்பவனை மேற்சொன்னவைகள் எனக்கு நினைவூட்டுகின்றன. தனிப்பட்ட சட்டங்கள் மற்றும் பாகுபாடுடைய சட்டங்கள் முழுக்க முழுக்க சாதி மேலாதிக்கத்தையும், மத பாரபட்சங்களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன என்று அவர் உறுதிசெய்கிறார்.

     நான் இதை சொல்வதற்காக மன்னிக்கனும், “நாம் எல்லோரும் புதிய மற்றும் முன்னேறிய வாழ்க்கையை வாழ்வதாக நினைக்கின்றோம். ஆனால் இது வெறும் கண்துடைப்பே, இது உண்மை நிலையை எள்ளளவும்  மாற்றப் போவதில்லை”. எம்.என்.ராய் கூறுவது போல, இந்தியாவில் வாழும் நாம், இன்னும் மிருகத்தனமானதொரு வாழ்க்கையைத்தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம், இங்கே சட்டம் என்பது பொருளற்றது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, மனுதர்மமே எல்லா இந்திய குடிமக்களின் விதியை முடிவுசெய்கிறது. மேலும் இந்த மனு தர்மமானது சாதி, மத, நிற மற்றும் பாலின மேலாதிக்கத்தால் ஆட்சி செய்யப்படுகின்றது. மனுவினால் ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பினால் மற்ற உயர் சாதியினர் பெருமைப்படுகின்ற அதே வேளையில், தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் பலமற்ற சமூகப் பிரிவினரின் வாழ்க்கையை பரிதாபகரமானதாகவும், சமரசம் செய்துக்கொள்ள இயலாததாகவும் உருவாக்கியுள்ளது.

     இது போன்ற சட்டங்கள் மற்றும் குற்றங்களின் மீதான உலக சமூகத்தின் கவனத்தை திசைத் திருப்புவதற்காக, சாதி மற்றும் மத அடிப்படைவாதிகள் இந்திய சமூசத்தின் சமூக-பொருளாதார கட்டமைப்பானது, தங்களின் உயர்ந்த சாதி, பண்பாடு, பழக்கவழக்கம், மரபுகள் மற்றும் மதங்களினால் உருவானது என்று தொடர்ந்து ஒப்புவித்து வருகின்றனர். அறிவுப்பூர்வமான மற்றும் நடுநிலையான முடிவை மற்றும் தீர்வை எட்டுவதற்கு இதுபோன்ற பிரச்சனைகளை அப்பட்டமாகவும், பெருந்தன்மையோடும் பிரேத-பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

     இப்பிரச்சனையின் தீர்வை சொல்வதற்கு அல்லது இப்பிரச்சனையை தீர்ப்பதற்கு, இந்தியாவின் முதல் பிரதமரான சவகர்லால் நேருவின் கருத்தை மேற்கோள் காட்டும் ஆவலில் இருந்து, உணர்ச்சி மிகுதியில் இருந்து என்னால் எண்ணையே விடுவித்துக் கொள்ளமுடியவில்லை. பல்வேறு படிநிலைகளில் உள்ள இந்த பாகுபாடுகளை கடந்த கால தலைமுறையின் பழக்கவழக்கங்கள் என்ற பெயரில் நேரு குறிப்பிடுகின்றார். அவர் தன்னுடைய சுய-சரிதையான “தி டிஸ்கவரி ஆஃப் இந்தியா” என்ற நூலில் “நான் கடந்த கால மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களை பெரும் அளவில் கைவிட்டுவிட்ட போதிலும், இந்தியா தன்னைத்தானே அடிமைத்தனக் கட்டுகளில் இருந்தும், தன்னுடைய மக்களை பிரிப்பதிலிருந்தும், அதிக அளவிலான மக்களை அடிமைப்படுத்துவதிலிருந்தும், இயற்கையான முன்னேற்றம் மற்றும் தன்னம்பிக்கையை தடுப்பதிலிருந்தும் விடுவித்துக்கொள்ள வேண்டும்” என்ற ஆவல் கொண்டுள்ளேன். இவை அனைத்தும் நான் அறிந்திருந்தாலும், கடந்தகால நடைமுறைகளில் இருந்து என்னை முழுமையாக விடுவித்துக்கொள்ள நான் விரும்பவில்லை. நான் ஒரு சிறந்த பரம்பரையில் இருந்து வந்தவன் என்பதை நினைத்து பெருமைப்படுகின்ற அதே வேளையில் பழமை மாறாத இந்திய வரலாற்றைத் தக்க வைக்கின்ற சங்கிலித் தொடரின் ஒரு இணைப்பாக நானும் மற்றவர்களைப் போல் இருக்கிறேன் என்பதை மறந்துவிடவில்லை. அந்த சங்கிலியை நான் உடைக்க மாட்டேன், அவற்றை முன் மாதிரியாக வைத்துக்கொண்டு அவற்றில் இருந்து நான் கற்றுக்கொள்வேன்”. (8)

     நேரு அவர்கள், தாழ்த்தப்பட்டவர்களும், ஒடுக்கப்பட்டவர்களும் அனுபவிக்கும் கொடுமைகளை சமூகபிரச்சனை என்று கருதி விட்டுவிடுகிறார். ஆனால் இது சமூகப்பிரச்சனை அல்ல மாறாக தீவிர சமூக, நீதி, அரசியல் பிரச்சனையும் கூட. இப்பிரச்சனையை சரிசெய்ய பெருந்தன்மை, உடனடி, உறுதியான முடிவுகளை எடுக்கக்கூடிய, உறுதியான அரசதிகாரம் உடையவர்கள் தேவை. இப்பிரச்சனையை தீவிரமான ஒன்றான எடுத்துக்கொள்ளாமல் வெறுமனே அரசியலாக்கும் வரை, ஆதிக்க சாதி மற்றும் மேல் வகுப்பினர், கீழ்மட்டத்தில் உள்ளவர்களின் வாழ்க்கையோடும், நீதியோடும் தொடர்ந்து விளையாடுகின்றனர். இந்தப் போக்கானது சமூக நல்லிணக்கத்தை கெடுப்பதுடன் மேலும் அதிக அளவில் இரத்த ஆறுகளை, உயிர் இறப்புகளை ஏற்படுத்தும். இப்பிரச்சனையை அப்பட்டமாக, ஒட்டுமொத்த சமூகம் மற்றும் நாட்டிற்கான ஒன்றாக அல்லாமல், இது முழுக்க முழுக்க தலித்துகள், பலமற்ற சமூக-பிரிவினரின் மேல் தொடுக்கப்பட்டு வருகின்ற போராகத்தான் கருத்தில் கொள்ள வேண்டும்.

எடுத்தாளுமைகள்:-

1 .மரணதண்டனைக்கு எதிராக தேசிய அளவிலான கருத்தரங்கம் – புதுதில்லி, யூலை 22,2000. பக்கம் 20 மற்றும் (vi)

2. மரணதண்டனைக்கு எதிராக சர்வதேச அளவிலான கருத்தரங்கம் – ஸ்டாக்ஹோம், டிசம்பர் 10, 1977

3. அம்பேத்கரின் எழுத்துகளும், பேச்சுகளும் – தொகுதி 1, பக்கம் 56.

4. மரணதண்டனைக்கு எதிரான அனைத்திந்திய அமைப்பின் சார்பில் புதுதில்லியில் உள்ள சட்ட அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கம் – மே 21, 2004.

5. அபேக்சா – காலாண்டு இந்தி இதழ், தில்லி – “ஏப்ரல் – யூன் 2004” – முனைவர். தேஜ் சிங்-ஆல் எழுதப்பட்டது – பக்கம் 3.

6. அய்.பி.அய்.டி – பக்கம் 4

7. 2003 ஆம் ஆண்டு (பக்கம் 7) வான்காரில் நடைபெற்ற “சர்வதேச தலித் கருத்தரங்கம்” -ல் திரு.கே.பி.சிங் அவர்களால் வழங்கப்பட்ட “தி வான்கர் விசன் ஆஃப் டைவர்சிடி” என்ற நூலில் இருந்து.

8. இந்தியாவின் கண்டுபிடிப்புகள் – சவர்கர்லால் நேரு.
ஆங்கிலத்தில் : அய்ஷ் கங்கானியா, சமூக ஆர்வளர் மற்றும் அபேக்சா காலாண்டு இந்தி நாளிதழின் துணை ஆசிரியர்-டில்லி.
தமிழில் : குமணன்
Pin It