கூடங்குளம் அணு உலைக்கு எதிரான அப்பகுதி மக்களின் அயராத போராட்டம் கடந்த மூன்று மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் உள்ள மீனவர்கள், விவசாயிகள், வணிகர்கள், ஆசிரியர்கள்,மாணவர்கள் என அனைத்துப் பிரிவினரும் சாதி, மத, இன வேறுபாடு இல்லாமல் ஒன்றிணைந்து போராடி வருகின்றனர். தமிழகத்தின் பல பகுதிகளிலும் அப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு மக்கள் பிரிவினரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள விஞ்ஞானிகளும், அறிஞர்களும், சமூக ஆர்வலர்களும் அணு உலைகளினால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி மக்களிடையே கூட்டங்கள் மூலமும், ஊடகங்கள் மூலமும் எடுத்துரைத்து வருகின்றனர்.

தேசவிரோதிகளும் தேசப்பற்றாளர்களும்

ஆனால் இப்போராட்டத்திற்கு எதிரான அவதூறுகளை வழக்கம்போலவே ஆளும்வர்க்கமும்அதிகாரவர்க்கமும் கட் டவிழ்த்துவிட்டுள்ளன. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எங்கும், எப்பொழுதும் தங்களுக்கு எதிரான மக்களுடைய போராட்டத்தை நேர்மையாக எதிர்கொள்ளும் துணிச்சல் இருப்பதில்லை. அதைக் குறுக்கு வழிகளில் முறியடிக்கவே முயற்சி செய்கின்றனர்.

‘மூன்று மாதங்களாகத் தொடர்ந்து இந்த மக்களால் எப்படிப் போராட முடிகிறது? அதற்கான பணம் எங்கிருந்து வருகிறது என்பது பற்றி விசாரிக்கப்படும்’ என மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி மக்களை மிரட்டுகிறார்.

‘மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு எழுப்பப்பட்டுள்ள ஐம்பது கேள்விகளைப் பார்க்கும்போது அவை மக்களால் எழுப்பப்பட்ட கேள்விகளைப் போலத் தெரியவில்லை’ என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் உதவியாளர் பொன்ராஜ் (புதிய தலைமுறை தொலைக் காட்சியில் விவாதத்தின் போது) தெரிவிக்கிறார்.

இக்கூற்றுகளின் மூலம் இவர்கள் தெரிவிப்பது- போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் ஏழைகள், அன்றாடும் காய்ச்சிகள், தொடர்ச்சியான போராட்டத்தில் அவர்களால் ஈடுபடமுடியாது. இந்நிலையில் அவர்களால் எப்படி தொடர்ந்து போராடமுடிகிறது? மக்கள் அறியாமையில் உள்ளவர்கள். விவரம் தெரியாதவர்கள். இந்நிலையில் அவர்களால் எப்படி விவரமான கேள்விகளைக் கேட்க முடிகிறது? எனவே அவர்களுக்கு ஏதோ ஓர் அந்நிய சக்தியிடம் இருந்து நிதி உதவி வருகிறது. இத்தகைய கேள்விகளைக் கேட்கச் சொல்லி அந்தச் சக்திதான் அவர்களைத் தூண்டி விடுகிறது.

இவர்களுடைய பார்வையில் அணு உலையை எதிர்ப்பவர்களும், அது பற்றி ஐயம் தெரிவிப்பவர்களும் தேசத் துரோகிகள். அதை ஆதரிப்பவர்கள் அனைவரும் தேசப்பற்றுடையோர்.அனைத்து அணு உலைகளையும் கட்டத் தடை செய்யக் கோரி உச்ச நீதி மன்றத்தில் பொதுநலன் வழக்குத் தொடுத்துள்ள முன்னாள் மத்திய அமைச்சரவைச் செயலர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன், முன்னாள் கப்பற் படைத் தலைவர் எல்.ராமதாஸ்,முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி, பிரதமரின் முன்னாள் செயலர் கே.ஆர்.வேணுகோபால்,அணு விஞ்ஞானி பி.எம்.பார்கவா அனைவரும் அந்நிய சக்தியின் தூண்டுதலால் செயல்படுபவர்கள்.தேசத் துரோகிகள்.அணு உலைகளின் பாதுகாப்பற்ற தன்மைகளைப் பற்றி விமர்சனம் செய்து வரும் இந்திய அரசின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஏ.கோபாலகிருஷ்ணன் தேசத் துரோகி.அணு உலைகளுக்கு ஆதரவாகப் பேசி வரும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், முதலாளிகளும், விஞ்ஞானிகளும், இந்து மதவெறியர்களும்தான் தேசப்பற்று கொண்டவர்கள்.

பொய்களையும், அவதூறுகளையும் பரப்பி மக்களுடைய போராட்டங்களை ஒடுக்கி அணு உலைகளை நிறுவ இவர்கள் ஏன் துடிக்கிறார்கள்? உண்மையில் அணு உலைகளை விட்டால் நமது நாட்டின் மின் தேவையை நிறைவு செய்ய வேறு மூலாதாரங்கள் இல்லையா? அவற்றையெல்லாம் நாம் பயன்படுத்தி முடித்து விட்டோமா? அவ்வாறு வேறு மூலாதாரங்கள் இருக்கும் நிலையில் அவற்றைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும் அணு உலைகளை நிறுவிட இந்த அரசாங்கம் எதற்காக விரும்புகிறது? அதற்கான அரசியல்பொருளாதாரப் பின்னணி என்ன? யாருடைய நலன் அதில் உள்ளடங்கியுள்ளது?

இந்தியாவின் மின் உற்பத்தி

இந்தியாவில் 30.9.2011 வரை நிறுவப்பட்டுள்ள மின்உற்பத்தி நிலையங்களின் மொத்த மின் உற்பத்தித்திறன் பின்வருமாறு :

அ)அனல்மின் நிலையங்கள் :

1.நிலக்கரியை எரிபொருளாகக் கொண்டது - 99,753.38 Megawatt 54.70%

2.இயற்கை வாயுவை எரிபொருளாகக் கொண்டது- 17,742.85 “ 9.73%

3.எண்ணையை எரிபொருளாகக் கொண்டது- 1,199.75 “ 0.65%

ஆ)நீர்மின் நிலையங்கள் 38,706.40 “ 21.22%

இ)புதுப்பிக்கத்தக்க ஆற்றல்ஆதாரங்கள்- 20,162.24 “ 11.05%


ஈ)அணுமின் நிலையங்கள்- 4,780.00 “ 2.62%
---------------------------------------------

1,82,344.62 “ 100%

---------------------------------------------
(ஆதாரம்:Ministry of Power and Ministry of New and Renewable Energy )

(புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்கள் என்பவை சிறிய நீர்மின் நிலையங்கள்(25 மெகவாட்டிற்கும் குறைவான திறன் கொண்டவை), காற்றாலைகள், சூரிய வெப்ப ஆற்றல் சார்ந்தவை, உயிரி எரிபொருள் சார்ந்தவை(Biogassifier and Biomass power), நகர்ப்புற மற்றும் தொழிற்சாலை சார்ந்த கழிவுகள் சார்ந்தவை ஆகும்.)

அதிகச் செலவில் குறைவான மின் உற்பத்தி

நமக்கு இப்பொழுது கிடைக்கும் மொத்த மின்சாரத்தில் அணு உலைகளிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 2.62 விழுக்காடுதான். 2030-ல் நமது மின்சாரத் தேவை 9,50,000 மெகாவாட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் 63,000 மெகாவாட் மின்சாரம் அணு உலைகளிலிருந்து உற்பத்தி செய்யப்பட வேண்டும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. அது மொத்த மின் உற்பத்தியில் 7 விழுக்காட்டிற்கும் குறைவானதே! ஆனால் அதற்கு ஆகும் செலவோ பல இலட்சம் கோடி ரூபாய்கள். 2,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ள கூடங்குளம் அணு உலையை நிறுவுவதற்கு மட்டும் ஆகும் செலவு ரூபாய் 17,000 கோடியாகும். அதில் உருவாகும் கழிவுகளைப் பாதுகாப்பதற்கு ஆகும் செலவு ரூபாய் 20,000 கோடியாகும். அத்தோடு முப்பது ஆண்டுகள் அதைச் செயல்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் ஆகும் செலவைச் சேர்த்தால் அது இன்னும் பன்மடங்கு பெருகும். அப்படியானால் 63,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்குப் பல பத்து இலட்சம் கோடி ரூபாய்கள் தேவைப்படும். அதுவும் அணு உலைகள் நிரந்தரமானவை அல்ல. அவை முப்பதிலிருந்து நாற்பது ஆண்டுகள் வரைதான் செயல்படும்.

அந்நியச் சார்பு

மேலும் அவை அந்நிய நாட்டுத் தொழில்நுட்பத்தைச் சார்ந்தவை. அவற்றை இயக்குவதற்கும், பராமரிப்பதற்கும் அந்நிய நாட்டுத் தொழில் வல்லுநர்களையே நாம் எப்பொழுதும் சார்ந்து இருக்க வேண்டும். அவற்றுக்குத் தேவையான யுரேனியத்திற்காக எப்பொழுதும் அந்நிய நாடுகளையே சார்ந்திருக்க வேண்டும். ‘யுரேனியத்த்திற்குப் பதிலாக தோரியத்தைப் பயன்படுத்த முடியும். அது நம் நாட்டில் ஏராளமான அளவில் உள்ளது’ எனக் கூறினாலும் அதைப் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பம் இதுவரை உருவாக்கப்படவில்லை. யுரேனியத்திலிருந்து மட்டுமே அணு ஆயுதங்கள் தயாரிக்க முடியும் என்பதால் அமரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் அதற்கான தொழில்நுட்பத்தை வளர்த்தெடுத்தன. ஆனால் தோரியத்திலிருந்து அணு ஆயுதங்கள் தயாரிக்க இயலாததால் அவை அதில் போதிய அக்கறை செலுத்தவில்லை.ஆதலால் நம்மால் தோரியத்தைப் பயன்படுத்த முடியாது. எனவே நாம் நமது அணு உலைகளுக்கான யுரேனியத்திற்கு வெளி நாடுகளையே சார்ந்திருக்க வேண்டி இருக்கும்.

மேலும் மூலதனச்செறிவு(capital intensive) மிக்க தொழில்நுட்ப அடிப்படையில்,பல இலட்சம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் அணு உலைகள் நமது நாட்டு அடித்தட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடியதாகவும் இல்லை. அவ்வாறு உருவாக்கப்படும் ஒரு சில வேலைகளும் மேல் தட்டு வர்க்கத்திற்கானது. பெரும்பகுதியான வேலைகள் அந்நிய நாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கானவை.

அணு உலைகளின் ஆபத்துகள்

மேலும் அணு உலைகளினால் ஏற்படும் ஆபத்துகள் உலகறிந்தவை. அணு உலைகள் பாதுகாப்பானவை என அணுசார்ந்த விஞ்ஞானிகள் எவ்வளவுதான் கூறினாலும் உண்மை அதற்கு எதிர்மாறாகவே உள்ளது. 1986-ல் நிகழ்ந்த செர்னோபில் அணு உலை விபத்திற்குப் பிறகு மட்டும்

57 அணு உலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு விபத்துகள் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளன. 1952-லிருந்து 2009 வரை சிவில் மற்றும் இராணுவம் சார்ந்த 99 அணு உலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அதனால் ஏறக்குறைய 1,02,500 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அழிந்துள்ளன.

செர்னோபில் விபத்தால் மட்டும் பலியான உயிர்கள் 75,000 இருக்கும் என்றும், கதிர் வீச்சால் உயிர் போகாவிட்டாலும் நடைபிணமாக்கப்பட்டோர் எண்ணிக்கை 75,000 இருக்கும் என்றும் நியுயார்க் அறிவியல் அக்கடமி கூறுகிறது. இது ஓர் எடுத்துக் காட்டுதான். இது போன்ற பல விபத்துகள் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரைப் பலி கொண்டுள்ளன. கதிர் வீச்சால் புற்று நோய் போன்ற கொடுமையான நோய்களுக்கும் மக்கள் ஆளாகி வருகின்றனர். மேலும் கதிர் வீச்சுகள் மரபணுக்களில் மாற்றத்தை ஏற்படுத்தி பிறக்கும் குழந்தைகள் உடல் ஊனங்கள் கொண்டவையாக இருக்கின்றன.

புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் அணு உலையை இயக்குவதில் மனிதத் தவறுகளால் ஏற்படும் விபத்துகளைக் களைந்து விடமுடியாது எனப் பிரான்சின் அணு சக்தி முகமை கூறுகிறது.

விபத்துகளின்போது மட்டுமல்லமால் சாதாரணமாக இயங்கி வரும் கால கட்டங்களிலும் கூட அணு உலைக் கழிவுகள் அண்மையில் வசிக்கும் மக்களுக்கும், ஆடு, மாடு போன்ற உயிரினங்களுக்கும், அதன் அருகாமையில் உள்ள நீர்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கல்பாக்கம் அணு உலைப் பகுதியில் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு நடத்தி வரும்

மருத்துவர் புகழேந்தி அந்த உலையின் கழிவுகளில் அடங்கியுள்ள ஐயோடின்- 131 போன்ற கதிர் வீச்சுகளால் தைராய்டு புற்றுநோய், எலும்பு புற்றுநோய், குடல் புற்றுநோய் போன்ற நோய்கள ஏற்பட்டுள்ளதாகவும், பிறக்கும் குழந்தைகள் உடற்குறைபாடுகளுடன் பிறப்பதாகவும் பதிவு செய்து உள்ளார்.

இவ்வாறு மனித உயிர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் தீங்கு விளைவிக்கக்கூடிய, பல இலட்சங் கோடி ரூபாய்கள் தேவைப்படுகிற, அந்நிய நாடுகளைச் சார்ந்து இருக்கவேண்டிய, வேலை வாய்ப்புகள் வழங்காத அணு உலைகளிலிந்து நாம் பெறப்போகும் மின்சாரத்தின் அளவு நமது தேவையில் ஏழு விழுக்காட்டிற்கும் குறைவே! இத்தகைய அணு உலைகளை மக்களின் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி எப்படியும் அமைத்தே தீருவது எனப் பிடிவாதமாக இருக்கும் அரசு சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத, அந்நிய நாட்டைச் சாராத, அதிகமான மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய மாற்று ஆதாரங்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்காமல், அவற்றுக்குப் போதிய நிதிகளை அளிக்காமல் தட்டிக் கழித்தே வருகிறது.

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள்

இருபத்தைந்து மற்றும் அதற்குக் குறைவான மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் சிறிய நீர்மின்நிலையங்கள், காற்றாலைகள் மற்றும் சூரிய ஒளி ஆகியவற்றின் மூலம் பெறப்படும் ஆற்றல்கள், உயிரி ஆற்றல்கள், நகர்ப்புற மற்றும் தொழிற்சாலை சார்ந்த திட மற்றம் திரவக் கழிவுகளிலிருந்து பெறப்படும் ஆற்றல் ஆகியவை புதிய மற்றும் புதுப்பித்தக்க ஆற்றல்கள் எனப்படுகின்றன. நமது நாட்டில் அவற்றிற்கான வாய்ப்புகளைப் பார்ப்போம்.

சிறிய நீர்மின் நிலையங்கள்

மாபெரும் நீர்த்தேக்கங்களை உருவாக்கி மின்னுற்பத்தி செய்வதை விட ஆறுகளில் ஆங்காங்கே சிறு சிறு தடுப்பணைகளை உருவாக்குவதன் மூலம் குறைந்த செலவில் அதிக அளவு மின் உற்பத்தி செய்ய முடியும். இந்த வகையில் மட்டும் 15,000 மெகாவாட் மின்சாரம் அடுத்த ஆண்டிற்குள் நமக்குக் கூடுதலாகக் கிடைக்க வாய்ப்புள்ளது. இதில் அரசு கவனம் செலுத்தினால் நாடு முழுவதும் ஏராளமான சிறு சிறு தடுப்பணைகள் மூலம் ஏராளமான மின் ஆற்றல்களைப் பெற முடியும்.

காற்றாலைகள்

காற்றாலைகள் மூலம் தற்போது 14,158 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. காற்றாலைகள் மூலம் 65,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இத்தகைய வாய்ப்பு இருந்தபோதும் அரசு அதற்குப் போதிய ஊக்கம் அளிப்பதில்லை. மின் உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்து பயன்பாட்டு இடத்திற்கு மின்சாரத்தை எடுத்துச் செல்வதற்கான உள்கட்டுமானங்களைப் போதிய அளவுக்கு அரசு உருவாக்கித் தருவதில்லை.அதனால் காற்றாலை மூலம் பெறப்படும் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலை உள்ளது.

நகர்ப்புற மற்றும் தொழிற்சாலை சார்ந்த கழிவுகள்

நமது நாட்டில் தற்போது ஆண்டு ஒன்றுக்கு நகர்ப்புறங்களிளிருந்தும் தொழிற்சாலைகலிளிருந்தும் 4.2 கோடி டன்கள் திடக்கழிவும் 600 கோடி கன மீட்டர் திரவக்கழிவும் உருவாகிறது. இவற்றை எரிபொருளாகக் கொண்டு மின்சாரம் தயாரிக்க முடியும். தற்போது நமது நாட்டில் ஆறு இடங்களில் மட்டுமே கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.அதன் மூலம் 19.05 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நாடெங்கும் கழிவுகளைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டால் இன்னும் ஏராளமான மின்சாரத்தைப் பெறமுடியும்.

இத்திட்டத்தின் மூலம் மின்சாரத்தைப் பெறுவதோடு மட்டும் அல்லாமல் நாட்டின் பெரும் பிரச்சினையாக இருக்கும் மாசு பிரச்சினையை ஒழித்து விடலாம். நதிகள் நாசமடைவதைத் தடுத்துவிடலாம். மேலும் அதிலிருந்து கிடைக்கும் நீர்மப் பொருட்கலவை(Slurry) நிலத்தை வளப்படுத்துவதற்கு நல்ல உரமாகப் பயன்படும். உரங்களின் இறக்குமதிக்காக நாம் ஆண்டு தோறும் செலவிடும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள அந்நியச் செலாவணி மிச்சமாகும்.

சூரிய வெப்ப ஆற்றல்

சூரிய வெப்பத்திலிருந்து நாம் வற்றாத ஆற்றலைப் பெறமுடியும்.ராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதியில் 20,18,110 சதுர கிலோமீட்டர் பரப்புள்ள பாலைவனம் உள்ளது. அதில் வெறும் 15,000 சதுர கிலோமீட்டர் பரப்பிலிருந்தே 3,00,000 மெகாவாட் மின்சாரத்தை சூரிய வெப்பத்திலிருந்து பெறமுடியும். ஆனால் 2013-க்குள் 20,000 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

சரியாகத் திட்டமிட்டால் இந்தியாவில் உள்ள பெரும்பகுதியான கிராமங்களின் மின் தேவையை சூரிய வெப்பத்திலிருந்தே நிறைவு செய்து கொள்ளமுடியும்.

உயிரி ஆற்றல்(Bio-energy)

இன்றும் நமது மக்களில் எழுபது விழுக்காட்டினர் உயிரி ஆற்றலைச் சார்ந்துதான் உள்ளனர். மொத்த ஆற்றல்களில் முப்பத்திரண்டு விழுக்காடு உயிரி ஆற்றலாகத்தான் உள்ளது. ஆண்டுதோறும் 500 கோடி மெகாவாட் உயிரி ஆற்றலிலிருந்து பெறப்படுகிறது. அதன் மூலம் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு ஒரு கோடி மனித வேலை நாட்கள் உருவாக்கப்படுகின்றன. இத்தகைய உள்ளுறை ஆற்றலைக் கொண்டுள்ளது உயிரி ஆற்றல்.

வனங்களிலிருந்தும் வேளாண்மையிலிருந்தும் தாவரக்கழிவுகளாக நமக்கு ஆண்டு ஒன்றுக்கு ஐம்பது கோடி டன்கள் கிடைக்கின்றன. இவற்றிலிருந்து நம்மால் மின்சாரம் தயாரிக்க முடியும். இந்தியாவில் உள்ள 550 சர்க்கரை ஆலைகளிலும் கிடைக்கும் சர்க்கரை உற்பத்திக் கழிவுப்பொருட்களிலிருந்து மின் உற்பத்தி செய்ய முடியும். மேலும் சர்க்கரை ஆலைக் கழிவுகளிலிருந்து எத்தனால் உற்பத்தி செய்யப்படுவதன் மூலம் நமது ஆற்றலின் உற்பத்தியைப் பன்மடங்கு அதிகப்படுத்தலாம். உயிரி ஆற்றல் காற்றில் கார்பன்-டை ஆக்சைடின் அளவை அதிகப்படுத்தாது. சுற்றுச் சூழலைக் கெடுக்கவும் செய்யாது.

இவ்வாறு சுற்றுச்சூழலைக் கெடுக்காத, வற்றாத ஆற்றலுக்கு உரிய மூலாதாரங்களைத் திட்டமிட்ட வழியில் பயன்படுத்துவதன் மூலம் நமது மின் தேவையை நிறைவு செய்ய முடியும். தீங்கு இல்லாத வகையில் மின் உற்பத்தி செய்ய முடியும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். நமது நகரங்களையும் நதிகளையும் மாசுகளால் நாசமடைவதிலிருந்து பாதுகாக்க முடியும் .இதற்குத் தேவை நாட்டு மக்களின் நலனில் உண்மையான அக்கறை கொண்டுள்ள அரசு.

ஆனால் இந்த அரசோ இந்நாட்டு முதலாளிகளின் நலன்களிலிருந்தும், அவர்கள் சார்ந்துள்ள அந்நிய நாட்டு முதலாளிகளின் நலன்களிலிருந்தும் சிந்திக்கிறது, திட்டமிடுகிறது, செயல்படுகிறது

அணு உலைகளின் அரசியல் பொருளாதாரப் பின்னணி

தெற்கு ஆசியாவில் ஒரு துணை வல்லரசாக மாறவேண்டும், அண்டை நாடுகளில் தனது பொருளாதார ஆதிக்கத்தை நிறுவவேண்டும் என்ற இந்திய முதலாளிகளின் விருப்பத்துக்கு ஏற்ற வகையில் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது இந்திய அரசு .இவர்களின் விருப்பத்திற்கு பெரும் தடையாக சீனா இருக்கிறது. சொல்லில் சோசலிசத்தையும் நடைமுறையில் முதலாளியத்தையும் பின்பற்றி வரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் உள்ள சீனா இன்று ஆசியாவில் மட்டும் அல்லாமல் உலக அளவிலும் மாபெரும் பொருளாதார சக்தியாக வளர்ந்து வருகிறது.

அது மட்டும் அல்லாமல் பெரும் கடன்சுமை, அதிகரித்து வரும் வேலை இல்லாத் திண்டாட்டம், பெருகிவரும் மக்கள் அதிருப்தி என இன்று மரணப்படுக்கையில் கிடக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் சீனா பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

தமது வளர்ச்சிக்குப் போட்டியாக இருக்கும் சீனாவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒத்த கருத்தைக் கொண்டுள்ளன. அதற்காக இந்தியா தனது இராணுவ வலிமையைப் பெருக்கிக்கொள்ள வேண்டும். அணு ஆயுத பலத்தையும் அதிகரித்துக் கொள்ளவேண்டும். அதற்கான உதவிகளை அமெரிக்கா வழங்கவேண்டும்.

அதற்கு வழிவகுப்பதுதான் இந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம். அமெரிக்காவின் அரசியல்பொருளாதார நலனுக்குச் சேவை செய்ய இது இந்தியாவைக் கட்டாயப்படுத்தும் என்ற காரணத்தால் இடது சாரிகள் அதைக் கடுமையாக எதிர்த்த்தபோதும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கி அதை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றது மன் மோகன் சிங் அரசு. அதற்குக் காரணம் இந்திய முதலாளிகளின் அரசியல்பொருளாதார நலனும் அதில் உள்ளடங்கி இருந்ததுதான்.

இந்தப் புரிதலின் அடிப்படையில்தான் இந்தியா தனது அணு ஆயுத பலத்தைப் பெருக்கிக் கொள்வதற்கு அவசியமான அணு உலைகளை அமைக்கவும், அதற்குத் தேவையான யுரேனியத்தைப் பெறவும் அனைத்து உதவிகளையும் வழங்க அமெரிக்கா முன் வந்தது.

ஈரானும் வட அமெரிக்காவும் அணு ஆயுதங்களை வைத்துள்ளன, அது உலக அமைதிக்கு கேடு விளைவிக்கும் எனக் கூப்பாடு போடும் அமெரிக்கா இந்தியா தனது அணு ஆயுத வலிமையைப் பெருக்கிக்கொள்ள அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. அணு சார்ந்த பொருட்களை வழங்குவோர் குழுவின் (Nuclear suppliers group) நிபந்தனைகளிலிருந்து இந்தியாவிற்கு விதிவிலக்கு வாங்கித் தருகிறது. ஏனெனில் இந்திய முதலாளிய வர்க்கம் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு ஏற்ற வகையில் நடந்து கொள்ளும் என்பதுதான்.

பல இலட்சம் கோடி ரூபாய் செலவில் அணு உலைகள் அமைக்கப்படுவதன் முதன்மையான நோக்கம் மின் உற்பதியல்ல. ஏனெனில் அவற்றின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு நமது எதிர்பார்க்கப்படும் தேவையில் வெறும் 7%-க்கும் குறைவுதான் என ஏற்கனவே நாம் பார்த்தோம். ஆனால் மின் விநியோகத்தின் தற்போது ஏற்படும் இழப்பு மட்டும் 17% விழுக்காடாக உள்ளது. இந்த இழப்பை நாம் குறைத்தாலே போதும் அணு உலைகளால் கிடைக்கப்பெறும் மின்சாரம் நமக்குத் தேவைப்படாது. எனவே அணு உலைகளின் முதன்மையான நோக்கமே அணு ஆயுதங்கள் தயாரிப்பதுதான்.

இந்தியாவின் அணு உலைத் திட்டங்களால் அமெரிக்கா, பிரான்சு,ரசியா போன்ற நாடுகளில் உள்ள அணு உலை தயாரிக்கும் நிறுவனங்கள் இலட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள வணிக ஒப்பந்தங்களைப் பெற உள்ளன. அதைக் கருத்தில் கொண்டே, “அந்நிய நாடுகள் மற்றும்

அங்குள்ள நிறுவனங்களின் நலன்களையும் நாம் மனதில் கொள்ளவேண்டியுள்ளது.அதற்காக நாம் கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புக் கொண்ட அணு உலைகளை இறக்குமதி செய்ய வேண்டும்” என இந்திய அணு சக்தித் துறையின் முன்னாள் தலைவர் அனில் கக்கோதர் மராத்தி தினசரி இதழ் ஒன்றில் எழுதியுள்ளார் (Suvrat Raja and M.V.Ramana,The Hindu,12.11.2011).

மேலும் நமது நாட்டில் அணு உலைகளை அமைக்கும் நிறுவனங்கள் நட்டமடைந்து விடக்கூடாது என்பதற்கு ஏதுவான இழப்பீடு வழங்கும் சட்டத்தையும் இயற்றி உள்ளனர். அவர்களால் அமைக்கப்படும் அணு உலைகளால் விபத்து ஏற்பட்டால் அவர்கள் ரூபாய் 1500 கோடிக்கு மேல் இழப்பீடு வழங்கத் தேவையில்லை. கூடங்குளம் அணு உலை பற்றி இந்தியா மற்றும் ரசியா அரசுகளுக்கிடையில் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி விபத்து ஏற்பட்டாலும் இழப்பீடு கோரி பாதிக்கப்பட்டவர்கள் வழக்குத் தொடுக்க முடியாது.

இவ்வாறு அணு உலைகளின் பின்னணியில் இந்திய ஆளும்வர்க்கத்தின் அரசியல்பொருளாதார நலன்களும்,அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரசியல்பொருளாதார நலன்களும், பன்னாட்டு முதலாளிகளின் நலன்களும் அடங்கியிருப்பதால்தான் அணு உலைகளை அமைப்பதில் இந்திய ஆளும் வர்க்கம் பிடிவாதமாக உள்ளது. தமது வாழ்வுக்கும் முன்னேற்றத்திற்கும் ஆளும் வர்க்கத்தை அண்டி வாழும் விஞ்ஞானிகளும் அதற்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர். மின் ஆற்றலுக்கான வற்றாத மூலாதாரங்கள் நம்மிடமிருந்தும் அவை பற்றி சிந்திக்கவோ, வளர்த்தெடுக்கவோ போதிய அக்கறை காட்டாமல் உள்ளனர்.இவர்களுடைய நலன்களுக்காக மக்களைப் பலி கொடுக்கிறார்கள்.

Pin It