2010 டிசம்பர் 25ம் தேதி டெய்லி மிரர் பத்திரிகையில், இந்தியா இலங்கைக்கு ராணுவ தளவாடங்கள் (தோளில் வைத்து சுடும் ஐஜிஎல்ஏ ஏவுகணைகள்) பரிசளிப்பதாக பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார் தெரிவித்ததாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது பிடிஐ செய்தியை ஆதாரமாக கொண்டு வெளியிட்டதாகவும் குறிப்பிட்டப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகள் தாக்குதலுக்கு உதவும் ஏவுகணைகள் ஆகும். இவற்றைத்தான் இந்தியா முன்னதாக எல்டிடிஈ மீது தாக்குதல் தொடுக்க இலங்கைக்கு கொடுத்தது. ஆனால் 2004 முதல் 2009 வரை நடைபெற்ற போரில் பயன்படுத்த இவற்றை இலங்கைக்கு கொடுத்து உதவியது என்று கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை இந்தியா தொடர்ந்து மறுத்து வந்தது.

karunanidhi_381முல்லைத்தீவின் மையப் பகுதியில் உள்ள வீடுகளின் மீது இந்த ஏவுகணைகளால் 20லிருந்து 30 குண்டுகள் சுடப்பட்டதாக அங்கிருந்து வெளியேறியவர்கள் கூறுகிறார்கள். அங்கிருந்து வெளியேறாவிட்டால் முன்னேறிவரும் இலங்கை ராணுவம் அவர்களுக்கு அந்த வீடுகளிலேயே சமாதி கட்டியிருக்கும். இது முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் மேலும் சில ஆயிரங்களை சேர்த்திருக்கும். இலங்கை மீது கொண்டுவரப்படும் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளில் இங்கிருந்து வெளியேறியவர்கள் நம்பகமான சாட்சிகளாக இருப்பர்.

இந்தியாவின் மூடிமறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நாராயணன்/மேனன் ஆகிய இருவரும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டதற்கு போராளிகளே காரணம் என்று கூறுகின்றனர். இதில் நாராயணன் உருவாக்கிய ‘பாதுகாப்பு வளையத்திற்குள்‘ (முள்ளிவாய்க்கால்) கொல்லப்பட்டவர்களுக்கும் போராளிகளையே காரணமாக கூறுகின்றனர். மேலும் 3,00,000க்கும் மேற்பட்ட மக்கள் ஆட்டுமந்தைகள் போல முள்கம்பி வேலிக்குள் அடைத்து வைக்கப்பட்டனர். இவையெல்லாம் இனி வெளியிடப்படும் பிரசுரங்களில் இனவெறிபிடித்த சிங்களர்களின் ‘மஹாவம்சம்‘ மற்றும் சமதர்ம இந்தியாவின் ‘கீதைக்கு‘ புகழ் சேர்க்கும். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு முன்னதாக 1990களில் இந்திய அமைதிப்படை ‘யாழ்ப்பாண மருத்துவமனையில் இனப்படுகொலை‘ செய்ததையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

டெல்லி தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்த ஆயுதங்கள், போர் வீரர்களை அளித்து வந்தது பற்றி பலமுறை வெளிச்சம்போட்டு காட்டியும் டெல்லி தொடர்ந்து தான் இலங்கைக்கு ஆயுத உதவி செய்யவில்லை என்று மறுத்து வந்தது. இது யூபிஏ/காங்கிரஸ் தொடர்ச்சியாக செய்துவரும் துரோகச் செயலையே காட்டுகிறது. முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற படுகொலைக்கு நாராயணன்/மேனனின் ‘திரைமறைவு‘ வேலையே காரணம் என்று கோத்தபயா ராஜபக்சே மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் தமிழர்களை கொன்று குவிக்க தாங்கள் ஒருபோதும் உதவவில்லை என்று இந்தியா சொல்கிறது. 2009 நவம்பர் 14ம் தேதி கொழும்பு ஆல்கட்டி பகுதியில் கோத்தபயா பேசியவற்றை கோகலே தன் ‘இலங்கை-போரிலிருந்து அமைதி‘ (ஆகஸ்ட் 2009) புத்தகத்தில் விவரிக்கிறார். அதில் அவர், இந்தியா இலங்கைக்கு மறைமுகமாக கொடுத்த தாக்குதல் ஆயுதங்களை பட்டியிலிடுகிறார். இந்தியா 2006ம் ஆண்டு இந்தியா ஐந்து எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர்களை இலங்கைக்கு கொடுத்தது. ‘இலங்கை விமானப்படையின் அடையாளங்களோடு‘ இந்த ஹெலிகாப்படர்களை இயக்க வேண்டும் என்ற நிபந்தனையின்பேரில் கொடுக்கப்பட்ட இது பெரும் துரோகச் செயலாகும். நிபுணர் நிதினின் கருத்துப்படி, எல்டிடிஈயின் கடல் புலிகள் மீதான தாக்குதலை இந்திய – இலங்கை கடற்படைகள் கூட்டாக நடத்தின. இலங்கை கடற்படையின் தளபதியான கர்ணகோடா, எல்டிடிஈ தாக்குதலுக்காக நடுக்கடலில் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை கண்டுபிடிக்க இந்தியாதான் உதவியது என்று கூறியுள்ளார். இந்தியா தனது இரண்டு போர்க்கப்பல்களான வராஹா மற்றும் விக்ரஹாவை இலங்கைக்கு கொடுத்தது. இவையே இலங்கையின் போர்க் கப்பல்களாக சகாரா மற்றும் சயூரலா என்ற பெயரில் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டன.

சக்திவாய்ந்த ராடார்கள் பொருத்தப்பட்ட இந்திய கப்பற்படையின் டானியர்கள் தமிழகத்தில் இராமநாதபுரத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. இவை அடிக்கடி இலங்கைக்கு பறந்து போராளிகள் மற்றும் தலைவர்கள் இருக்கும் இடம் மற்றும் போரின் நகர்வுகளை பற்றி விரிவாக தகவல் சேகரித்து இலங்கைக்கு கொடுத்து வந்ததன. இந்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் இலங்கையை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற ஆர்வக் கோளாறில் மூழ்கியிருக்க, அவர்கள் மும்பையில் எல்ஈடி தாக்குதல் நடத்துவதை கோட்டை விட்டுவிட்டனர். இந்த தாக்குதல் உலக அளவிலும் இந்தியர்களிடமும் இந்தியாவின் மானத்தை கப்பலேறச் செய்தது. இந்த தாக்குதல் பற்றிய இந்தியர்களின் மனநிலையை விவரிக்கும் வகையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா “நமது அரசியல்வாதிகள் அப்பாவிகளின் உயிருடன் விளையாடுகிறார்கள்“ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு மக்களின் ஆதங்கத்தை தெரிவித்தது. இது ஈழத்தமிழர்களை பழிவாங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த, தான்தோன்றித்தனமான சோனியா மும்பை மக்களின் பாதுகாப்பை மறந்து விட்டதை காட்டுவதாக அமைந்தது. இந்த நிகழ்வுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் மட்டுமே தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் பாதுகாப்பு படையை எல்லாம் தமிழகத்தில் குவித்த பாதுகாப்புத் துறை அதிகாரிகள் யாரும் இந்த பெருந்தவறுக்கு பொறுப்பேற்க வில்லை. வழக்கம்போல யூபிஏவின் விசாரணைகள் 9/11 தாக்குதலுக்கு காரணமாகும் பாதுகாப்பு தோல்வியையோ அதற்கு காரணமானவர்களையோ விட்டுவிட்டது.

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையை இந்தியா தடுக்க முயன்று வருவதற்கான காரணம், முள்ளிவாய்க்கால் படுகொலையில் இந்தியா மும்முரமாக ஈடுபட்டு வந்ததையும் அதன் காரணமாக ஏற்பட்ட பாதுகாப்பு இழப்பால் மும்பை மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்ற உண்மை வெளிவந்துவிடும் என்ற அச்சத்தினாலுமே ஆகும். இந்தியா, தான் இலங்கை விவகாரத்தில் தலையிடவில்லை என்று போலியானதொரு நிலையை கடைப்பிடிப்பதாக காட்டி வந்தது.

அந்த பொய்நிலையால் ஏற்பட்டதே 2ஜி அலைக்கற்றை ஊழல். தமிழ்நாட்டு தமிழர்களின் உணர்வுகள் பற்றி அக்கறை கொள்ளாமல் இருப்பதற்காகவே டெல்லி இதுபோன்ற ஒரு போலியான நிலையை கடைப்பிடித்தது. இந்த ஊழலில் ஈடுபட்ட முன்னணி தலைவர்கள் பிரதமர் மன்மோஹன் சிங் (யூபிஏவின் முகமூடி), ராஜீவ் கொலைக்காக தமிழர்களை பழிவாங்கவேண்டும் என்று துடித்து வந்த ‘தான்தோன்றித்தனமான‘ சோனியா, அவரது எடுபிடிகளான, பிரணாப் முகர்ஜி, சிதம்பரம் மற்றும் தெற்கு பிளாக்கில் உள்ள பிரிவினைவாத அதிகாரிகள் நாராயண்/மேனன் ஆவர். ஊழல் பற்றிய விவரங்கள் இன்னமும் வெளியாகவில்லை என்றாலும், இந்திய அரசு மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பு இன்னமும் முழுவதுமாக வெளிப்படவில்லை. ஊழலுக்கு எதிராக பீகாரில் கிடைத்த தேர்தல் தோல்வி யூபிஏவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் கலங்க வைத்துள்ளது. இது ஒரு ஆரம்பம் மட்டுமே.

இந்தியாவின் தொடரும் நடிப்பு வளர்த்த கடா மார்பில் பாய்வது போல 2ஜி அலைக்கற்றை ஊழலை ஏற்படுத்தியுள்ளது. பீஹார் தேர்தல் முடிவுகள் ஒருபுறம் இருக்க, யூபிஏவின் கீழாக ஆட்சியில் வளர்ந்துவரும் ஊழல் கலாச்சாரம் அதன் தேர்தல் எதிர்பார்ப்பை மாற்ற உள்ளது. பொதுமக்களின் பணத்தை தவறாக கையாளும் அரசின் மீது வாக்காளர்கள் இரக்கம் காட்டமாட்டார்கள் என்றே தோன்றுகிறது. லட்சக்கணக்கான கோடிகள் மதிப்புள்ள 2ஜி ஊழல், பொதுமக்களின் பணத்தை மிகத்தவறாக பயன்படுத்தியதற்கான உதாரணம் ஆகும். தங்களது பணத்தை கொள்ளையடித்து வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருந்தால் மக்களுக்கு கோபம் வரத்தானே செய்யும்? இதுபோன்ற மாபெரும் ஊழல்களை யூபிஏ கண்டுகொள்ளாமல் இருப்பது, ராஜீவ் காந்தியின் போபர்ஸ் ஊழல் ஆரம்பித்த காலத்திலிருந்தே ஊழல்களை கண்டு கொள்ளாமல் இருக்கும் கலாச்சாரத்தையே காட்டுகிறது. இப்போது அது யூபிஏ மூலம் உச்சநிலையை எட்டியுள்ளது.

டெல்லியின் மற்றொரு பயங்கரமான முயற்சி 2ஜி ஊழலை வைத்து திமுக தலைவரை தனது தமிழர் விரோத கொள்கைக்கு உடன்படச் செய்ததாகும். அதோடு அரசியல் ரீதியாக தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை குறைப்பதற்கான முயற்சி செய்தது. இந்திரா காங்கிரஸ் அறிவுஜீவிகள் தங்களது கட்சி உருவாக்கிய திட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சித்தனர். மேலும் காட்டிக் கொடுக்கும் விதமாக தங்களது விசுவாச கூட்டணி கட்சியை விலையாகக் கொடுத்து தங்களது அதிர்ஷ்டத்தை வாங்க முயன்றனர்.

மேலும் காங்கிரஸ் முள்ளிவாய்க்காலில் 40,000க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டபோது தமிழர்கள் தங்களது நியாயமான உணர்வை வெளிப்படுத்த விடாமல் அடக்கி வைத்தது. இப்போது 2ஜிக்கான குற்றச்சாட்டு ராஜா மற்றும் இந்திரா காங்கிரஸின் மிரட்டலுக்கு அடிபணிந்த கருணாநிதி மீது திருப்பி விடப்பட்டுள்ளது. சோனியாவின் எடுபிடியான பிரணாப், கருணாநிதியை மிரட்டி டெல்லி சொல்வதன்படி கேட்கவேண்டும் இல்லையெனில் 2ஜி உழலை சிபிஐ விசாரணை செய்யும் என்று கூறி மிரட்டினார். காங்கிரஸின் முன்னணி தலைவராக இருப்பதை மிகவும் விரும்பும் பிரணாப் முகர்ஜி எதிர்க்கட்சியின் கோரிக்கையான ஜேபிசி விசாரணையை ஏற்க மறுத்துவிட்டார்.

manmohan_a_raja2ஜி ஊழலில் சிதம்பரமின் கொள்கை மிகவும் பயங்கரமானது. சிதம்பரத்தின் அலுவலகம்தான் தொலைபேசி உரையாடல்களை பதிவுசெய்து அவற்றில் சிலவற்றை வெளியிட்டு 2ஜி ஊழலை பெரிதுபடுத்தியது. கூட்டு பாராளுமன்ற குழு விசாரணை மட்டுமே சிதம்பரத்தின் சித்து வேலையான சில ஒலிப்பதிவுகளை மட்டுமே வெளியிடுவதற்கான காரணம் என்னவென்று வெளிக்கொண்டு வரும். இதற்கு காரணம் திமுக தலைவருக்கு தர்மசங்கட நிலையை ஏற்படுத்தி மத்தியிலும்/தமிழகத்திலும் தனது நோக்கங்களை நிறைவேற்றுவதுமே ஆகும். இந்த ஊழலில் டெல்லியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கும் பங்கு உண்டு. அதனால்தான் யூபிஏ ஜேபிசி விசாரணைக்கு அஞ்சுகிறது. அதுபோன்ற ஒரு விசாரணை போபர்ஸ் ஊழலில் காங்கிரஸுக்கு ஏற்பட்ட அதே நிலைக்கே அது மீண்டும் தள்ளப்படும். ராஜாவை விசாரிக்க ஜேபிசி விசாரணை போன்ற கடுமையான முறையை பின்பற்றினால் அது யூபிஏவின் முக்கிய பிரமுகர்களின் பங்கையும் வெளிக் கொண்டு வரும். இந்திரா காங்கிரஸ் ஒரு சாதாரண மனிதனைப் போல இருந்து ஜேபிசி விசாரணைக்கு உட்பட்டால் விசாரணையில் போபர்ஸ் ஊழல் போன்ற ஒரு ஊழல்தான் வெளிவரும். 2ஜி ஊழலை வெளிக்கொண்டு வருவது நீண்டகாலமாகவே (3+ ஆண்டுகள்) தாமதிக்கப்பட்டு வந்தது. போபர்ஸ் போன்ற முடிவை தருவதற்காக ஏற்கனவே கொள்ளை அடித்த பணத்தை கொண்டு போன தடத்தை எல்லாம் அழித்துவிட்டார்கள். பிரதமரின் அலுவலகம் செயலற்று இருந்த காரணத்தால் அது உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இப்போது யூபிஏ, போபர்ஸ் முடிவை எட்டும் வகையில் எதிர்க்கட்சிகள் கோரிவரும் நம்பகமான ஜேபிசி விசாரணையை கோரிக்கையை ஏற்க மறுத்து வருகிறது. இந்திரா காங்கிரஸ், விசாரணைகளில் தான் விரும்பு முடிவை கொண்டு வருவதில் திறமை பெற்றது. பயந்து நடுங்கும் பிரணாப் ஜேபிசி விசாரணைக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அவர் ஜேபிசி விசாரணைக்கு கடுமையாக எதிர்ப்பதற்கு காரணம் யூபிஏவுக்கும் இந்த ஊழலில் தொடர்பு கொண்டிருக்கிறது, இந்தியாவில் யூபிஏவின் ஊழல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற அச்சத்தின் காரணத்தினால்தான். போபர்ஸ் மற்றும் ஊழல்களுக்கு மக்கள் அளித்த வாக்கு அதிரடியாக இருந்தது.

மேலும் இந்திரா காங்கிரஸ் 2ஜி ஊழல் விவகாரத்தை பயன்படுத்தி அரசியல் ஆதாயத்திற்காக, குறிப்பாக திமுகவை தனது நீண்டகால கொள்கையான தமிழ் ஆதரவு அல்லது திராவிட ஆதரவு கொள்கையை இழக்கச் செய்து பெரும் அரசியல் இழப்பை சந்திக்க செய்தது. திமுக டெல்லியின் மிரட்டலுக்கு பணிந்து தமிழர்களின் உணர்வுப் பிரச்சனையான ஈழத்தமிழர் விவகாரத்தில் பின்வாங்கச் செய்தது. எனவே தமிழ்நாடும் ஈழம் வழியில் செல்ல நிர்பந்திக்கப்படுகிறதா என்று அரசியல் பார்வையாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த கருணாநிதி 2008ம் ஆண்டு 2ஜி விவகாரத்தில் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்தது தமிழக மக்களை கிளர்ச்சியின் ஓரத்திற்கே தள்ளிவிட்டது. 2008 செப்டம்பருக்கு பின்னால், தமிழ் கட்சிகள் (கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் அதிமுக) நடத்திய போராட்டங்கள் உச்சநிலையை அடைந்தன. அவை கருணாநிதியை ஈழப்பிரச்சனை குறித்து பேச வைத்தன. பேரணிகள் தமிழகம் முழுவதும் கடையடைப்பு செய்ய வைத்தன. வழக்கறிஞர்களின் போராட்டம் நீதிமன்றங்களை மூடச் செய்தது. திரைப்படத் துறையினரும் போராட்டத்தில் குதித்தனர். தமிழகம் முழுவதும் சாலை, ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பல மைல்களுக்கு நீண்ட மனித சங்கிலிகளும், தற்கொலைகளும் தமிழகத்தை போராட்டத்தின் விளிம்புக்கு தள்ளின. இதைக்கண்டு டெல்லி உஷாரானது.

டெல்லி உயர்மட்டத்தில் எதிர்விளைவை காட்டியது. டெல்லி அரசியல்வாதிகள் பிரணாபும் சிதம்பரமும் தமிழகத்திற்கு வருகை தந்தனர். தெற்கு பிளாக்கின் அதிகாரி நாராயணன் சென்னைக்கு வந்து கருணாநிதியை அடங்கு என்று மிரட்டிவிட்டுச் சென்றார். சோனியாவின் எடுபிடிகளான பிரணாபும் நாராயணனும் 2ஜி ஊழலில் திமுக அமைச்சர் மீது சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறி மிரட்டினர். 2ஜி ஊழலில் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் இழுக்கப்பட்டன. இதன் காரணமாகவே கருணாநிதி திராவிட கொள்கையை விட்டுக்கொடுத்து டெல்லியிடம் சரணடைந்தார்.

திமுக தலைவர் தனது அரசியல் வாழ்க்கையை எண்ணி கவலைப்பட்டார். மேலும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை மற்றும் ஆட்டுமந்தைகள் போல ஈழத்தமிழர்கள் முள்வேலி கம்பிகளில் அடைத்து வைக்கப்பட்டபோது திறமையாக தமிழ் மக்களின் எழுச்சியை அடக்கினார். தமிழர்களின் மனநிலையை அடக்க திமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் பெரிதும் உதவினர். முன்னணி தமிழ் தேசிய தலைவர்களான சீமான், நெடுமாறன், வைகோ மீது டெல்லியும் சென்னையும் ராஜபக்சே போல செயல்பட்டு ஈழ ஆதரவு போராட்டங்களை தீவிரவாத சட்டத்தின் கீழ் தடுத்தன. கருணாநிதி தனது தமிழர்/ திராவிடர் கொள்கைகளுக்கு எதிராக தனது பதவியை தக்க வைக்க மேலோட்டமான அமைதியை உருவாக்கினார். ஆனால் அந்த அமைதியின் கீழே ஆழமான கோபம் அடக்கப்பட்டது. தமிழக மக்கள் பீஹாரை போல வாக்கின் மூலம் பதிலடி கொடுத்துள்ளனர் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். யூபிஏ தனக்கு வளைந்து கொடுக்கும் கூட்டணி கட்சியை இழந்து இப்போது இரு கட்சிகளுக்கும் சரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இன்னமும் யூபிஏ-திமுக கூட்டணி சிறிதும் பிசகாத கூட்டணிதான். யூபிஏவின் ஊழல் தொடர்பை வேறறுக்க தமிழக தமிழர்கள் செயல்பட வேண்டிய நாளும், டெல்லி/கொழும்பு இனப்படுகொலை சர்வாதிகாரத்தை ஈழத் தமிழர் முறியடிக்க வேண்டிய நாளும் இதுவே.

வி.எஸ்.சுப்பிரமணியம்

தமிழில் - தேவன்

நன்றி - கிரவுண்ட் ரிப்போர்ட்

http://www.groundreport.com/World/DELHI-S-CYNICAL-HANDLING-OF-THE-2G-SCAM-IMPLICATIO_2/2932613

Pin It