நேர்காணல்: மேற்கு வங்க சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்) மாநிலச் செயலர் ஆகாஷுடன் துஷா மிட்டல் (தெகல்கா)

தமிழில்: நிழல்வண்ணன்

maoist_380ஆகஸ்டு 13 அன்று மாலை மேற்கு வங்காளத்தின் காடுகளுக்குள் இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் நடந்தன. ஜங்கில் மகால் குறித்து இரண்டு மாபெரும் வளர்ச்சித் திட்டங்களை முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்த பல வாரங்களுக்குப் பிறகு, மாவோயிஸ்டு கட்சி தனது,  இணையான வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்முயற்சி எடுத்தது. அரசாங்கம் அதைத் தொடர அனுமதிக்கவில்லை.

மேற்கு வங்காளமும், ஜார்கண்டும் சந்திக்கிற இடத்தில் ஒரு பாறையாலான மலைச் சாலை மேலே, 50 வயதான நிலிமா பாஸ்கி விழுந்து பயங்கரமாக அடிபட்டுவிட்டார், அவரால் நடக்க முடியாது. அங்கிருந்து அருகாமையிலுள்ள தொடக்கநிலை மருத்துவமனையே பல மைல்கள் தூரத்தில் இருக்கிறது. ஆகஸ்டு 13 அன்று ஒரு கல்கத்தா மருத்துவர் மூன்று ஊசிகள் மற்றும் மருந்துகளுடன் பாஸ்கிக்கு சிகிச்சையளிக்க வந்தார். அது காவல்துறை வன்கொடுமைகளுக்கு எதிரான மக்கள் குழு ஏற்பாடு செய்த பெருந்திரள் மருத்துவ முகாமின் ஒரு பகுதியாக இருந்தது. அது தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு கட்சியால் ஆதரிக்கப்பட்டது.

ஆகஸ்டு 14 அன்று மருத்துவர் சித்தார்த்த குப்தா இரண்டாவது மருத்துவ முகாமுக்கு வரும் வழியில் மேற்குவங்க காவல்துறையால் கைது செய்யப்பட்டு, அன்றிரவு பெல்பகாரி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு, தெரிந்தே ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் அடங்கிய கூட்டத்தில், அது களைந்து செல்ல உத்தரவிட்ட பின்பும் கூட, சேர்ந்திருந்ததாக சட்டப்பிரிவு 151ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டார். பின்னர் அவர் பிணையில் வெளிவந்துள்ளார். அந்தக் கணமே அதன் ஒரு தனிப்பட்ட வரையரைக்குள்ளேயே, இந்த நிகழ்ச்சி ஒரு முரண்நகையான திருப்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. யாரால் சிறந்த வளர்ச்சியை கொடுக்க முடியும் என்று அரசும் மாவோயிஸ்டுகளும் ஒருவொருக்கொருவர் மற்றவரை செயலுக்கு நிர்ப்பந்தித்துப் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

சென்ற மாதம் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான மம்தா பானர்ஜியின் முன்வைப்பு குறித்து மாவோயிஸ்டு கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ன என்று அறிந்து கொள்வதற்கு தெகல்கா கேள்விகளை அனுப்பியிருந்தது. அதற்கான பதில்கள் தவணை முறையில் அனுப்பப்பட்டன. முதலாவது பகுதி “சமாதானத்துடன் கண்ணாமூச்சி விளையாட்டு” ஆகஸ்டு 20 அன்று வெளியிடப்பட்டது. அவரது நேர்காணலின் இரண்டாவது பகுதியில் மேற்குவங்க மாவோயிஸ்டு மாநிலச் செயலாளர் ஆகாஷ் கட்சியின் மாறிவரும் செயலுத்திகள், எதிர்காலக் குறிக்கோள்கள், மற்றும் மம்தா பானர்ஜி ஏன் அவருக்கு ராமாயணத்தை நினைவூட்டுகிறார் என்பது பற்றிப் பேசுகிறார்.

அந்த நேர்காணலில் இருந்து சில பகுதிகள்:

இப்பொழுது மேற்கு வங்கத்தில் தோற்ற அளவில் மக்களுக்கு ஆதரவான அரசாங்கம் இருக்கிறது என்பதால், அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும், நீங்கள் உங்களுடைய மூல உத்திகளையும் குறிக்கோள்களையும் மறுமதிப்பீடு செய்திருக்கிறீர்களா?

எங்களுடைய மூலஉத்தி இந்தியா முழுமைக்குமானது. ஆனால் காலத்திற்குக் காலம், வட்டாரச் சூழலுக்கேற்ப நாங்கள் புதிய செயலுத்தியைக் கடைபிடிக்கிறோம். மேற்கு வங்காளத்திற்குள்ளேயே கூட, ஜங்கல்மஹாலில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் அல்லது மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் நாங்கள் ஒரே செயலுத்தியைப் பயன்படுத்துவதில்லை. நாடியா விவகாரத்தில், முர்ஷிதாபாத், பிர்பம் விவகாரத்தில், வறுமையும் பட்டினியும் முக்கியப் பிரச்சனைகளாக இருக்கும் பிற பின்தங்கிய பகுதிகளிலும் எங்களுடைய செயலுத்தி மற்றும் அமைப்பு வடிவம் ஆகியவை வேறுபடுகின்றன.

‘மிகவும் மக்கள் ஆதரவான ஒரு அரசாங்கத்தின்’ பாலான எங்கள் எண்ணப்போக்கைப் பொருத்தவரை, மம்தா பானர்ஜி உண்மையிலேயே மேற்கு வங்க மக்களுக்காக பணியாற்றுவாரானால் நாங்கள் அவரது நடவடிக்கைகளை பாராட்டுவோம். ஒருவேளை, மே 20 பதவியேற்பு விழாவின்போது மகாஸ்வேதாதேவி மம்தாவை இப்படியே இருக்கும்படி கேட்டுக்கொண்டதை நீங்கள் கேட்டிருக்கலாம். ஆனால் உண்மைநிலையில், பானர்ஜி பிரச்சாரம் செய்துகொண்டிருக்கும் ஜனநாயகக் கலாச்சாரம் என்றழைக்கபடுவது எதேச்சாதிகார ஆட்சிக்குத் தான் இட்டுச் செல்லும். உதாரணமாக, திரிணாமுல் பாராளுமன்ற உறுப்பினர் தொடர்வண்டித் துறைக்குப் பொறுப்பேற்றுக்கொண்டபோது, மம்தா பயன்படுத்தியதை விட, தனது மரியாதையயைக் காட்டும் வகையில் தனிப்பட்ட ஓர் இருக்கை ஏற்பாட்டை செய்தார். அமைச்சர் தினேஷ் திரிவேதி பதவியேற்பு விழாவின் போது அதையே செய்தார். அது ராமனின் கால்செருப்புக்களை பரதன் அரியணையில் வைத்த ராமாயணத்தை நினைவுபடுத்துகிறது. இது தான் 21 ஆம் நூற்றாண்டின் சூழல், வேடிக்கை தான்.

மமதா அரசாங்கத்துக்கு ஆதரவாகவோ எதிராகவோ எந்த ஒரு அறிவுஜீவியும் இந்த நில உடமைப் பண்பாட்டைப் பற்றி ஒரு சொல்லைக் கூட உதிர்க்காதது எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது. இந்தப் பண்பாடு நம்மை ஒரு ஜனநாயக குடியரசுக்கு இட்டுச் செல்லுமா அல்லது அரசர்கள், பேரரசர்களின் நிலப்பிரபுத்துவ அரசுக்கு இட்டுச் செல்லுமா? அவரது செருக்கான, ஜனநாயகமற்ற மனப்போக்கை மறுபரிசீலனை செய்யுமாறு நாங்கள் மம்தாவுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.

ஒரு அரசாங்கம் -அது மம்தாவாக இருக்கலாம் அல்லது வேறு ஒரு ஆனா ஆவன்னாவாக இருக்கலாம் – மக்கள் ஆதரவு நிலையை எடுத்துவரும் வரை நாங்கள் அதை எதிர்க்க மாட்டோம். ஆனால் இந்தப் புதிய அரசாங்கத்திற்கு இதைச் செய்வது சாத்தியமில்லை. எடுத்துக்காட்டாக, நிதி அமைச்சர் அமித் மித்ரா அமெரிக்க ஆதரவு செல்வாக்கு வட்டத்தைச் சேர்ந்தவர், அவர் எப்போதும் ஏகாதிபத்திய நலன்களுக்கே சேவை செய்வார். எழுத்தாளர்கள் கட்டிடத்தின் (Writers’Buildings) குளிரூட்டப்பட்ட அறைக்குள் இருந்துகொண்டு, வளர்ச்சித் திட்டங்களை அரசாங்கம் அறிவித்தால் மட்டும் போதாது.

நாங்கள் ஒரு புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அழைப்பு விடுக்கிறோம். அந்த புதிய ஜனநாயகப் புரட்சியில், நாங்கள் விவசாயம் மற்றும் தொழில்துறையில் முன்னேற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளோம். ஆனால் தற்போதைய அரசுக் கட்டமைப்பே இந்த மாற்றத்திற்கு ஒரு மாபெரும் தடைக்கல்லாக இருக்கிறது. இப்போதைய ஆளும் வர்க்கம் வளர்ச்சியின் பெயரால் அனைத்து வளர்ச்சியற்ற திட்டங்களையும் கொண்டு வருகிறது. அரசுக் கொள்கையைப் பாருங்கள்:ஜங்கல்மகாலில் உள்ள காவல்துறை முகாம்கள் கிராம மக்களிடையே கால்பந்துகள், ஹாக்கி மட்டைகள், கொசுவலைகள், சாக்லேட்டுக்கள் ஆகியவற்றை விநியோகிக்கின்றன. எதற்காகக் காவல் துறையினர் கால்பந்துகளை விநியோகிக்கின்றனர்? தங்கள் விளையாட்டுத் திடல்களுக்கான கால்பந்துகளை மக்கள் தாங்களே வாங்கிக் கொள்ள முடியும். இது எந்த உண்மையான பிரச்சனையாவது தீர்க்குமா? நாங்கள் அரசுக் கொள்கையின் பாசாங்குத்தனத்தை நிச்சயமாக அம்பலப்படுத்துவோம். அப்படிச் செய்வதிலிருந்து அரசாங்கம் எங்களைத் தடுக்க முடியாது.

எதிர்காலத்தில் ஏதாவது மறுமதிப்பீட்டிற்குத் திட்டம் வைத்திருக்கிறீர்களா?

அது சூழ்நிலைமைகளையும் அரசின் மனப்போக்ககையும் சார்ந்ததாகும். எங்களது மூலவுத்தி ஒன்றாகவே தான் இருக்கும், ஆனால் எங்கள் அரசியல், இராணுவ, அமைப்பு சார்ந்த செயலுத்திகள் மாறலாம். லால்கார் கிளர்ச்சி அதன் உச்சத்தில் இருந்தபோது, நாங்கள் எங்கள் செயலுத்தியை ஒவ்வொரு நாளும் மாற்றிக்கொண்டே இருந்தோம். இப்போது நாங்கள் நிச்சயமாக எங்களுடைய செயலுத்திகளில் சிலவற்றை மாற்றிக் கொண்டிருக்கிறோம்.  எங்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடும் எந்தத் தன்னெழுச்சியான நடவடிக்கையையும் நாங்கள் எடுக்கவில்லை. நாங்கள் அன்றாடம் வேலை செய்கிறோம், வாரந்தோறும் மதிப்பீடு செய்கிறோம்.

இராணுவ முனையில் மக்கள் திரளின் செயலூக்கமுள்ள பங்கேற்புடன் கூட்டுப் படைகளை எங்களால் எதிர்த்து நிற்க முடிகிறது. எங்களுக்கும் எங்கள் வளர்ச்சித் திட்டங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் அரசின் செயலுத்திகளை நாங்கள் நெருக்கமாகக் கவனித்து வருகிறோம். இராணுவ முனையில் மம்தாவின் சொந்த தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிகளையும் அவரது  அரசின் மனப்போக்கையும் கவனித்து வருகிறோம். ஒரு நடைமுறை சார்ந்த உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். ஜார்க்ராமில் துர்கேஷ் மைதானம் மிகப்பெரிய ஒன்றாகும், அதில் பல கட்சிகளும் பொதுக் கூட்டங்களை நடத்துகின்றன. ஆனால் ஜங்கல்மகால் மக்கள் தங்கள் சொந்தப் பொதுக்கூட்டத்தை நடத்த முயன்றபோது அவர்கள் தடுக்கப்பட்டார்கள். அரசியல் பொதுக் கூட்டங்களை நடத்த முடியும் என்றால், அவர்கள் ஏன் நடத்த முடியாது? இது அரசின் தன்மையை அம்பலப்படுத்துகிறது.

இதுவரை மேற்குவங்கத்தில் எதை உங்கள் மிகப்பெரிய சாதனை என்று நீங்கள் கருதுகிறீர்கள்? ஜங்கல்மகால் பழங்குடி மக்கள் நீங்கள் அங்கிருப்பதால் எவ்விதம் பயனடைகிறார்கள்?

இது ஒரு ஆர்வமூட்டும் கேள்வி. எங்களது மிகப்பெரிய சாதனை மேற்கு வங்கத்தில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகிற்கும் அரசின் சமூக பாசிசப் பண்பை அம்பலப்படுத்தியுள்ளதேயாகும். அடுத்தது, போலி மார்க்சிஸ்டுகளை அவர்களது அடக்குமுறை வடிவங்களுடன் சேர்த்து அம்பலப்படுத்தியுள்ளோம். எங்கள் மூன்றாவது சாதனை எங்கள் மக்கள்திரள் வழியும் மக்கள் எங்களை ஏற்றுக்கொண்டுள்ளமையும் ஆகும். சி.பி.எம். கட்சி அதன் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு இந்த பிராந்தியத்தை பேரழிவுக்குள்ளாகி விட்டது. ஆளும் வர்க்கம் இந்த பிராந்தியத்தை சூறையாடிள்ளது. இதை லால்கர் இயக்கம் அம்பலப்படுத்தி, விவாதத்தை முழுஉலகத்திற்கு முன்னால் வைத்துவிட்டது. ஐந்தாவது, மக்கள்திரள் போராட்டத்திற்கும் மக்கள்திரளின் ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கும் இடையில் ஒரு பாலம் உருவாக்கப்பட்டுள்ளதாகும். இரண்டுமே ஜனநாயக இயக்கத்தின் வடிவங்களே. பல்வேறு பிரிவு மக்களையும் அவரவர்களின் சொந்தப் பிரிவுக்குரிய கோரிக்கைகளையும் முன்வைத்து அமைப்பாக்குவதில் வெற்றி கண்டு வருகிறோம். ஆறாவதாக, தாமாகவே முன்வந்து பங்கேற்பதன் மூலம் தங்கள் சொந்த வளர்ச்சித் திட்டப் பணியை மேற்கொள்ளும் நம்பிக்கை மக்களிடையே நிறுவப்பட்டுள்ளது. பல பத்தாண்டுகளாக, அவர்கள் அரசிடமிருந்து வளர்ச்சித் திட்டங்களை கோரி வந்தனர். இப்பொழுது இறுதியாக அவர்கள் தாங்களாகவே அதைச் செய்து கொள்ளப் போதுமான ஆற்றல் படைத்தவர்களாக ஆகியிருக்கிறார்கள்.

west_bengal_391ஜங்கல்மகால் பெண்கள், அவர்கள் சந்தாலியர், பூம்ஜோ, அல்லது ஆதிவாசி யாராக இருந்தாலும் சரி, அந்த இயக்கம் முழுவதிலும் சுயமரியாதையும்  சுதந்திரமும் பெற்றிருப்பது இன்னொரு பெரிய சாதனையாகும்.

மாவோயிஸ்டு கட்சி தலையிடுவதற்கு முன்பு இந்தப் பகுதிகள் ஒருபோதும் அரசின் நிகழ்ச்சிநிரலில் இடம்பெற்றதில்லை. ஜங்கல்மகால் மக்கள் சுயமரியாதையுடனும் கண்ணியத்துடனும் சமுதாயத்தில் நிமிர்ந்து நிற்க முடியும். கானக நிலத்தின் மீது தங்களுக்குரிய உரிமைகளை மக்கள் பெற்றுள்ளனர். இப்பொழுது வனத்துறை என்பது இல்லாத ஒன்றாகும்.

இங்கு ஏதாவது செயல்படுகிறது என்றால், அது, குறிப்பாக கானக நிலத்தின் நன்மைக்காக உருவாக்கப்பட்ட, மக்கள் குழுவேயாகும். அனைத்து கானக உற்பத்திப் பொருட்களும் மக்களின் கரங்களில் இருக்கின்றன, சந்தையில் அவற்றை விற்கும்போது அவர்கள் தான் அவற்றிற்கு விலை நிர்ணயிக்கின்றனர்.

மாவோயிஸ்டு கட்சியில் பெருமளவில் ஆதிவாசிப் பெண்கள் ஈடுபட்டிருப்பது இன்னொரு சாதனையாகும். பெண்கள், குறிப்பாக, மதுக் கடைகளுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டு தங்கள் சொந்த சகோதரர்கள், பிள்ளைகள், தந்தையர்களை மது வாங்குவதிலிருந்து தடுத்து நிறுத்தியுள்ளனர். பெண்கள் இப்போது தங்கள் சொந்த மக்கள் நீதிமன்றங்களில் பங்கெடுத்துக் கொள்ள முடியும். மேலும் முடிவுகள் எடுக்கும் செயல்முறையிலும் பங்கேற்க முடியும்.

இன்னொரு முக்கியமான அம்சம்- உண்மையில், கிராமங்களில் வளர்ச்சித் திட்டங்கள் மூலமாக விவசாயத்தில் 3-5 விழுக்காடு உற்பத்தி மட்டத்தை அதிகரிப்பது எங்கள் குறிக்கோளாகும். அதை எட்டுவதே எங்கள் இலக்காகும்.

எது முதன்மையானது- பழங்குடி மக்கள் நல்வாழ்வா அல்லது அரசியல் அதிகாரமா? நீங்கள் வெளிப்படை அரசியலில் சேர்ந்துகொள்வது பற்றி கருத்தில் எடுத்துக்கொள்வீர்களா?

பழங்குடி மக்கள் நல்வாழ்வு, அரசியல் அதிகாரம் இரண்டுமே எங்கள் முதன்மையான இலக்குகள் தாம். ஆனால் இங்கு ஒரு விடயம் தெளிவுபடுத்தப்பட வேண்டியிருக்கிறது. அரசியல் அதிகாரத்தை அடைந்த பிறகுதான் பழங்குடி மக்கள் நல்வாழ்வு பெறப்படமுடியும் என்று நாங்கள் நினைக்கவில்லை. நாங்கள் வெளிப்படை அரசியலில் பங்கேற்கவில்லை என்பது உண்மையல்ல, நாங்கள் அவ்வாறு செய்யமாட்டோம் என்று ஒருபோதும் கூறிவந்ததும் இல்லை. நாங்கள் அரசியலின் வெளிப்படை மற்றும் கமுக்கச் செயல்முறைகளை மேற்கொள்கிறோம்.

நாங்கள் ஏற்கனவே ஜனநாயக பங்கேற்பை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறோம். அதனால் தான் கடந்தகால மற்றும் தற்போதைய அரசாங்கங்களிடம் கிராமங்களுக்கு வருமாறும் கிராம சபைகளுக்கு வருமாறும் பின்னர் அவர்களுடைய கொள்கைகளை உருவாக்குமாறும் நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம். இந்த கிராமங்களில் அரசாங்கம் ஒரு கூட்டத்தைக் கூட்டுமாயின் மாவோயிஸ்டு கட்சி உறுதியாக பங்கேற்கும். ஜங்கல்மகால் பகுதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிகளுக்கான விளக்கமான கணக்குகளை எடுக்கும் ஒரு விசாரணைக் குழுவை நியமிக்குமாறு நாங்கள் கோருகிறோம். அந்தக் கோடிக்கணக்கான ரூபாய்கள் எங்கே போய்க்கொண்டிருக்கின்றன என்பது தான் கேள்வியாகும். புதிய அரசாங்கத்திடம் நாங்கள் ஏற்கனவே நான்குமுறை வேண்டுகோள் விடுத்துள்ளோம் ஆனாலும் எந்தப் பதிலும் இல்லை. இது தான் மம்தா செயல்படும் முறையாகும். அவர் எந்த ஒரு கட்சி அல்லது மக்களுக்கும் பதிலளிக்க வேண்டிய பொறுப்பை எண்ணிப் பார்க்கவில்லை.

ஜங்கல்மகாலில் ஆயுதப் போராட்டத்தின் மூலம் சாதிக்க நம்பிக்கை கொண்டுள்ள மூன்று திட்டவட்டமான விடயங்களை வரையறுத்துச் சொல்ல முடியுமா?

பகுதிவாரியான கைப்பற்றுகை மூலமாக விடுதலை பெற்ற பகுதிகளை நிறுவுவதற்கும், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் இட்டுச் செல்லும் ஒரு செயல்முறை மூலமாக ஜங்கல்மகாலில் ஒரு மக்கள் அரசாங்கத்தை நிறுவுவதே எங்களுடைய நீண்டகால இலக்காகும். ஜங்கல்மகாலை ஒரு விடுதலை பெற்ற பகுதியாக உருவாக்க விரும்புகிறோம் என்பதற்கான வழிகாட்டுதலை ஏற்கனவே எங்கள் கட்சியின் 2007 ஆம் ஆண்டின் அனைத்திந்தியப் பேராயம் வழங்கியுள்ளது. எங்களுடைய மக்கள்திரள், அரசியல், இராணுவ நடவடிக்கைகள் அனைத்தும் உண்மையில் இதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளன.

குறுகிய காலத்தில், அல்லது குறுகியகால மற்றும் நீண்டகால என்றும் கருதிக் கொள்ளலாம், எங்கள் இலக்கு வளர்ச்சியாகும். எங்களுடைய வளர்ச்சி முன்மாதிரியில், பணம் மத்திய மாநில அரசுகளால் ஒதுக்கீட்டு செய்யப்பட்டாலும் அல்லது மக்களுடைய சொந்த முன்முயற்சி ஆனாலும் ஒவ்வொன்றும் மக்கள் குழுவால் வழிகாட்டப்படும், நெறிப்படுத்தப்படும், சேகரிக்கப்படும், சோதிக்கப்படும். இவையனைத்தும் ஆயுதப் போராட்டத்தின் மூலமாகத் தான் சாதிக்கப்படமுடியும் என்று நாங்கள் நம்புகிறோம். ஏனென்றால், கிராமப் பஞ்சாயத்திலிருந்து பாராளுமன்றம் வரை அரசின் அனைத்து நிறுவனங்களும் ஜனநாயகமாக இல்லை. நமது அரசியல் சட்டம் நமது மண்ணிலிருந்து உருவானதல்ல, மாறாக அது பிரிட்டிஷ், அமெரிக்க மற்றும் ஐரிஷ் அரசியல் சட்டங்களின் கலவையாகும். அதனால் ஒரு உண்மையான பொருளில் ஜனநாயகத்தை வழங்கும் ஓர் அமைப்பை வழங்குவதற்கு நமது அரசியல் சட்டம் தவறிவிட்டது. நாங்கள் அதற்கு மாற்றாக, அந்தத் திசையில் முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறோம். படையணிகள் இருப்பது மட்டும் ஒரே பிரச்சனையல்ல. நாங்கள் நீடித்து வேலை செய்துகொண்டிருக்கும் இடங்களில் எங்களது முதல் முன்னுரிமை மக்கள் எங்களுடன் இருக்கிறார்களா, எங்களை அவர்களுடைய அரசியல் வழிகாட்டியாகக் காண்கிறார்களா என்று பார்த்துக் கொள்வது தான்.

அதேநேரத்தில், எங்கள் நோக்கம் முந்தைய ஒன்றை நீக்கிவிட்டு அதனிடத்தில் இன்னொரு பாசிச சக்தியை நிறுவுவதல்ல. ஒரு வெள்ளைச் சேலையும் ஒரு சோடி ஹவாய் செருப்புக்களும் இப்போதைய அரசாங்கத்தின் உண்மையான இயல்பை வெளிப்படுத்திவிட மாட்டா. ஜனரஞ்சக முழக்கங்களை வைத்திருந்தாலும் மம்தா உண்மையில் எவ்விதம் ஏகாதிபத்திய நலன்களுக்கு பணிபுரிந்து கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வதற்கு நாம் உணர்வுடன் இருக்கவேண்டியிருக்கிறது. சி.பி.எம். ஆட்சியின் வீழ்ச்சி சமூக பாசிசத்தின் அழிவைக் குறிப்பதல்ல.

ஜங்கல்மகாலுக்கு வெளியே நீங்கள் விரிவாக்கம் செய்து கொண்டிருக்கிறீர்களா? மேற்கு வங்கத்தின் எத்தனை மாவட்டங்களில் நீங்கள் இருக்கிறீர்கள்? நீங்கள் கொல்கத்தாவில் ஒரு சக்திவாய்ந்த அடித்தளத்தை பெறுவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று மதிப்பீடு செய்திருக்கிறீர்கள்?

ஜங்கல்மகாலுக்கு வெளியே பரவுவது என்பது எங்கள் முக்கியமான நோக்கமாகும். மேற்கு வங்கத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நாங்கள் இருக்கிறோம். பல்வேறு இடங்களிலிருந்து ஏற்கனவே மக்கள் எங்களை அணுகி வருகிறார்கள். எனவே நாங்கள் அந்த இடங்களில் எங்கள் அரசியல் தலையீட்டைக் கொண்டுளோம். நாடியா, மால்டா, முர்ஷிதாபாத், பிர்பம், பங்குரா, பர்த்வான் போன்ற பகுதிகளில் எங்கள் கட்சி 2004லிருந்து பணியாற்றிவருகிறது. அந்த இடங்களில் எங்கள் அமைப்பு பலவீனமாக இருந்து வருகிறது. ஆனால் எங்கள் இருப்பு காரணமாகத்தான் அந்தப்பகுதிளில் வளர்ச்சிக் குறைவை அரசாங்கம் தீவிரமான பிரச்னையாகக் கருத்தில் எடுத்துக்கொண்டுள்ளது.

maoist_390கொல்கத்தாவில் எப்பொழுது சக்திவாய்ந்த அடித்தளத்தைக் கொண்டிருப்போம் என்று முன்கூட்டியே கூறுவதற்கு நாங்கள் சோதிடர்கள் அல்ல. அது சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளைச் சார்ந்ததாகும். இந்த நெருக்கடிகள் அந்தச் சூழலை உருவாக்குவதற்குப் போதுமான அளவுக்கு ஆழமாகும். ஆனால் புறவயச் சூழல் கனிந்திருந்தாலும் கூட, அகநிலை சக்தி இல்லாமல் இருக்கலாம். அதனால், எங்களால் நேரத்தையும் சூழலையும் முன்னறிவிக்க முடியாது.

அண்மை மத்தியக் குழுத் தீர்மானம் ஒன்றின்படி, கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும், கீழ் மட்டத்திலிருந்து தொடங்கி மாநிலக் குழு வரை, புறவயச் சூழலை அறிந்திருக்குமாறு செய்யப்படவேண்டியிருக்கிறது. அப்போது மட்டுமே நாம் ஆக்கப்பூர்வமான முறையில் மக்களை வழிநடத்திச் செல்ல முடியும். இது எங்களுடைய மிகமுதன்மையான குறிக்கோள்களில் ஒன்றாகும்.

கடந்த ஓராண்டில் உங்கள் மாநிலக் குழுத் தலைவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்குவங்கக் காவல்துறை ஒரு சிறப்பான உளவு சேகரிப்பை செய்யமுடிந்துள்ளதாக ஓர் அறிதல் இருக்கிறது. இது உள்ளூர் ஆதரவு காரணமாக சாத்தியமாகியிருக்கிறதா?

முன்னாள் மாநிலக் குழுச் செயலர் தோழர் ஹிமாத்ரி, தற்காலச் செயலர் காஞ்சன் என்றழைக்கப்படும் சுதிப் சோங்தர் மற்றும் மாநிலக் குழுத் தலைவர்கள் பிறரும் கைது செய்யப்பட்டுள்ளது உறுதியாகவே ஒரு பின்னடைவு தான். இழப்பிலிருந்து மீளுவதற்காக நாங்கள் புதிய தலைமைக்குப் பயிற்சியளித்து வருகிறோம். தோழர் காஞ்சன் கைது செய்யப்பட்ட பிறகு எங்கள் கட்சியை மறு ஒழுங்கமைப்புச் செய்ய அவகாசம் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது.

மக்கள் திரளின் ஏற்பை நாங்கள் இழந்து வருகிறோம் என்பது உண்மையல்ல. அனைத்துக் கைதுகளும் மாநகரிலே நடந்தன. கடந்த ஆறு ஆண்டுகளில் அரசு அதன் வலைப்பின்னலை மேம்படுத்தியுள்ளது. ஆனால் மக்களின் வலைப்பின்னலுடன் எந்த வலைப்பின்னலும் உண்மையில் போட்டியிட முடியாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். தலைமை இவ்விதமாக கைதுசெய்யப்பட்டுள்ளது குறித்து நாங்கள் பரிசீலனை செய்துள்ளோம். இதைக் கட்சிக் குழுவின் வழிகாட்டுதல்களைப் புரிந்துகொள்வதில் ஏற்பட்ட இடைவெளியாகவே கண்டுள்ளோம்.

கூட்டுப் படையினர் ஆயிரம் பேர் இரவும் பகலுமாக கிராமங்களில் மட்டுமல்லாது கானகத்தின் ஒவ்வொரு அங்குலமாக திடீர்த் தாக்குதல் தொடுக்க வந்ததைக் கூட நாங்கள் எதிர்கொள்ளவேண்டியிருந்தது. ஆனால் மாபெரும் மக்கள் திரளினர் எங்களை ஏற்றுக்கொண்டிருந்ததால் மக்களிடமிருந்து எங்களைப் பிரிப்பது கூட்டுப்படைகளுக்கு சாத்தியமாகவில்லை. மேலும் இப்பொழுது எழுச்சி உங்கள் கண் முன்னால் உள்ளது. ஜங்கல்மகால் மக்கள் தமது சொந்த மண்ணில் வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். மாவோயிஸ்டுகள் ஒரு கிரியா ஊக்கியின் பாத்திரத்தை வகித்து வருகிறார்கள்.

ஆம், சிறப்பான காவல்துறை உளவு பற்றி நீங்கள் கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஜங்கல்மகாலிலும் கொல்கத்தாவிலும் எங்கள் இயக்கத்தை நசுக்குவதற்கு அரசாங்கம் ஒரு வலைப்பின்னலைக் கட்டமைக்க கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவழித்துக் கொண்டிருக்கிறது. 10,000 சிறப்புக் காவல் அதிகாரிகள், தேசியத் தன்னார்வப் படைகள், ஊர்க்காவல் படையினர் ஆகியோரை நியமிப்பதாக ஏற்கனவே மம்தா அறிவித்துள்ளார்.

அவர் அனைத்து மட்டங்களிலும் தானே தேர்ந்தெடுத்த மனிதர்களை இணைத்துக்கொள்ள விரும்புகிறார், மேலும் கூட்டுப் படைகளின் கரங்களில் ஒரு கருவியாகச் செயல்படக் கூடிய ஒரு இணைப்பையும் உருவாக்க விரும்புகிறார். இந்த வேலைகள் நிரந்தரமானவையல்ல, அல்லது அரசாங்கம் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.10,000 அல்லது 15000 வழங்கவேண்டியிருக்கும். இந்த முன்முயற்சிகள் அனைத்தும் ஒருபுறம் மக்களின் இயக்கத்தை நசுக்குவதற்கானதும் இன்னொருபுறம் ஜங்கல்மகாலில் ஒரு வாக்கு வங்கியைப் பெறுவதற்கானதும் ஆகும். மக்களோ மாவோயிஸ்டுகளோ இதைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

நன்றி: தெகல்கா வார இதழ்
துஷா மிட்டல் - தெகல்காவின் முதன்மைச் செய்தியாளர்
தமிழாக்கம் - நிழல்வண்ணன்
Pin It