மொழிபெயர்ப்புக்கு ஒரு குறிப்பு எழுதியதற்காக கோர்ட்டுக்கு இழுக்கப்பட்டிருக்கிறார் கவிஞர் மீனா கந்தசாமி. பொன்னர் சங்கர் சாமிகளை தலித் சாமிகள் என்று குறித்தது பிழை - கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் சாமியை தலித் சாமி என்று சொல்லி இச் சாதிகளுக்கிடையில் சண்டை உருவாக மீனா காரண‌மாகிறார் என்பது கவுண்டன்புத்தூர் லோகநாதனின் குற்றச்சாட்டு. 

தலித்துக்களிடம் இருந்து ‘சாமியைப்’ பறிப்பது காலம் காலமாக நடந்து வருவதுதான். ஒவ்வொரு சாமியும் என்ன சாதி என்ற புரளியைக் கிளப்பி விட்டிருக்கிறது இந்த வழக்கு. ஒரு சாமியை தலித் சாமி என்று சொல்வதால் சண்டை வரும் என்று மிரட்டுபவர்களின் அரசியல் கேவலமானது. தலித்துகளுக்கு அடிவிழும் என்பதை சட்ட ரீதியாக சொல்ல முற்படுகிறார்கள்.

தலித்துகளுக்கு எதிராக நடக்கும் எத்தனையோ கொடுமைகளுக்கு எதிராக ஒரு உள்நாட்டு யுத்தமே நடந்து கொண்டிருக்க வேண்டிய நிலையில் - அடி விழும் அதற்கு அவர்களே பொறுப்பு என்ற பாணியில் கோர்ட்டுக்கு போவது தெனாவட்டிலும் ஒரு தெனாவட்டு. தலித்துகள் படும் அவலங்கள் பிரச்சினையில்லையோ?

மீனா மொழிபெயர்த்த புத்தகம் வந்து இன்று 7 வருசத்துக்கும் மேலாகிறது. இன்று வரைக்கும் ஒரு சச்சரவும் இல்லை. விடுதலை சிறுத்தை கட்சிக்கெதிராக ஒரு சாதிச் சச்சரவை உண்டு பண்ணி ஒரு ‘படிப்பினை’ காட்டவேண்டும் என்ற சாதி வெறியுடன் போடப்பட்டுள்ள வழக்கு இது. உண்மையில் சாதிச் சண்டையை தூண்டுவது, வழக்கு போட்ட லோகநாதனும் -அவர் ஏதோ நியாயமான வழக்கு போட்டிருக்கிறார் என்பதுபோல் பிரச்சாரம் செய்யும் சில ஊடகங்களுமே. 

மீனா கந்தசாமிக்கு கடவுள் இல்லை. அவரது கவிதைகள் சாதிய ரீதியாக வர்க்கரீதியாக ஒடுக்கப்பட்டவர்களின் மொழியை கைப்பற்றி கலையாக்கும் உத்வேகம் கொண்டவை. அவரது அரசியற் சரிவு ஒடுக்கப்படுவோரை கவனப்படுத்துவதாக இருக்கிறது. இந்த கடவுளைக் கைப்பற்றும் பினாத்தலுக்கு அடிபணியப்போவதில்லை அவர். ‘சிறையில் களி தின்னத் தயார்’ என்று, இந்தமாதிரி மிரட்டல்களுக்கு தான் மசியப்போவதில்லை என்பதை அழுத்திச் சொல்கிறார் அவர்.

பொன்னர் சங்கர் கதையே ஒரு கற்பனைக்கதை என்று சொல்லப்படுகிறது – அதற்குள் சாமிக்கு சாதியைத் திணிக்கும் முயற்சி. போதாக்குறைக்கு இந்தியப் பண்பாடு பற்றி மீனாவுக்கு வகுப்பெடுக்க பலர் இணையதளமெங்கும் வரிசையில் வருகிறார்கள்.

மீனா ஆங்கிலத்தில் எழுதுபவர். சர்வதேச தளத்தில் அறியப்பட்டு வந்துகொண்டிருக்கிறவர். அவரை இப்படி ஒரு சொத்தை வழக்காட இழுத்து இந்திய நீதித்துறையின் லட்சணம் உலகளவில் நாறும் நல்ல நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. மீனாவுக்கு எதிராக – உலகெங்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுக்க தயங்காது இயங்கும் ஒருவருக்கு எதிராக  சும்மா ஒரு பம்மாத்து வழக்கு போட்டுவிட்டு – உலகெங்கும் இருக்கும் புத்திஜீவிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் சும்மா அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் என்பதுபோன்ற‌ கற்பனையை இந்த வழக்கைப் போட்டவர்களும் எடுத்த நீதித்துறையும் வளர்க்காதிருக்க நாம் அந்த பொன்னர் சங்கரைப் பிரார்த்திப்போம்.

-சேனன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It