சந்திப்பு: மு.சிவகுருநாதன், மணலி அப்துல்காதர்

மனித உரிமை செயல்பாட்டாளர்களில் முன்னணியில் இருப்பவர் வழக்கறிஞர் பொ. இரத்தினம் அவர்கள். உச்சநீதிமன்றத்திலும் குஜராத் பழங்குடி மக்கள் மத்தியிலும் செயல்பட்டு, தமிழ்நாட்டில் தளி, அத்தியூர் விஜயா, மேலவளவு முருகேசன் கொலை, திண்ணியம், விருத்தாச்சலம் கண்ணகி - முருகேசன் கொலை போன்ற நூற்றுக்கணக்கான வழக்குகளுடன் நீண்ட நெடிய போராட்டம் நடத்தி வருபவர். சமூகநீதி வழக்கறிஞர் மையம், புத்தர் பாசறை, சாதி ஆதிக்க எதிர்ப்புக் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளின் மூலம் அடித்தட்டு மக்களுக்கான மனித உரிமை செயல் பாட்டை முன்னெடுப்பவர். சமத்துவப் போராளிகள் என்ற அமைப்பின் மூலம் பவுத்தம், மார்க்சியம், அம்பேத்கரியம், பெரியாரியம் போன்றவற்றின் வெளிச்சத்தில் புதிய சமத்துவ சமூகத்தைக் கட்டமைக்க அறைகூவல் விடுப்பவர்.

Rathinam இயல்பாகவே Victim-களின்பால் இணக்கம் உள்ளவர். நீதித்துறையினரையும், தலித் தலைமைகளையும் அம்பலப்படுத்தி நிறைய துண்டறிக்கைகள் வெளியிட்டு பலமுனைத் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளார். பவுத்தம், அம்பேத்கரியம் சார்ந்து முழுக்க முழுக்க அறம் சார்ந்த நிலைப்பாடுகளுக்கு முன்னுரிமை தருபவராக இருக்கிறார். தனக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு இல்லாது தன்னுடைய அறம் சார்ந்த அளவுகோலின் அடிப்படை யில் நேருக்குநேர் பேசும் இயல்புடையவராக இருக்கிறார். இதே மதிப்பீட்டினடிப்படையில் குடியை வெறுக்கிறார். வெளிப்படையான இயல்பான பேச்சுக்கிடையில் அவருக்குள்ளிருக்கும் கிராமத்து மனிதர் வெளிப்படுகிறார். நேர்மை, சத்தியத்தின் மீது உறுதியான பற்றுதலும், அது மீறப்படும் போது மிகுந்த ஆவேசமும் வெளிப்படுகிறது. ‘சஞ்சாரம்’ இதழுக்காக மதுரையில் பதிவு செய்யப்பட்ட விரிவான நேர்காணல் இது.


சமூகப் பொறுப்பு மிக்க வழக்கறிஞர் பணியில் அடித்தட்டு மக்களுக்காக நிறைய வழக்குகளில் ஆஜராகி வழக்காடியிருக்கிறீர்கள். பவுத்தம், அம்பேத்கரியம் பற்றி நிறைய பேசி வருகிறீர்கள். இளமைக்கால அனுபவங்கள், பெற்ற உந்துதல்கள் பற்றி விரிவாக சொல்லுங்கள்?

1970களில் உயர்நிலைப்பள்ளிப் பருவத்தில் கொச்சைத் தமிழில் இல்லாது நல்ல தமிழில் வெளிவந்த கல்கண்டு ரொம்ப பிடிக்கும். அதில் வரும் செய்திகள், சங்கர்லால் துப்பறிகிறார் போன்றவை மாணவர்களுக்கு பிடிக்கும். வந்ததும் வாங்கி படிப்போம். அதுல ‘பூச்செண்டு’ என்ற மாணவர் இதழ் நடத்திய மாணவர்குழுவின் பேட்டி வந்தது. ராசேந்திரன் என்ற சென்னையில் ஒரு கல்லூரி முதல்வராக இருந்தவர்தான் அதன் ஆசிரியர்.

நான் திருச்சி தேசிய கல்லூரியில பி.காம். படிச்சிக்கிட்டு இருந்தபோது கல்கண்டு பேட்டி மூலம் அறிமுகம் கிடைச்சுது. அப்பத்தான் மதுரை மருத்துவக்கல்லூரியில மாலன் பார்மஸி படிச்சுக்கிட்டு இருந்தார். அவரும் அவருடைய தம்பியும் ‘பூச் செண்டு’ல பங்கெடுத்துகிட்டாங்க. நான், சென்னையில சிலபேர், அண்ணாமலை பல்கலைக் கழகத்துல படிச்ச குமணன்னு ஒருத்தரு, அவரு மலேசியாவில் பத்திரிக்கை நடத்தியவர். இப்ப இறந்துட்டார். திருச்சி பெரியார் கல்லூரியில் படிச்ச இன்னொருத்தர் போன்ற முற்போக்கு சிந்தனையுள்ள மாணவர்களும் இணைஞ்சு அந்த இதழில் பங்கெடுத்தோம்.

சமூக அக்கறையுள்ள மாணவர்களிடம் மேலோட்டமான ஒரு முற்போக்கு சிந்தனை இருக்கும். அதில சிலபேர் ‘இந்திய இளைஞர் இயக்கம்’ நிறுவனும் அப்படியின்னு அதற்கான அமைப்பை உருவாக்கினோம். அதன் பிறகுதான் மார்க்சியம் முழுமையா படிக்க ஆரம்பிச்சோம். எந்த மார்க்சிய அமைப்போடும் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை. இதுல முக்கியமா உள்ளவங்க மார்க்சியப் பார்வையில சமூகத்தை மாத்தணும், அதற்கு சட்டம் படிப்பதன் மூலம் மக்களைத் திரட்டுவது, அவர்களுடன் பணிசெய்வது போன்றவற்றிற்கு உதவியா, இருக்கும்ன்னு யோசிச்சோம். அப்ப திருச்சியிலிருந்து விடுமுறை கிடைச்சா சென்னைக்கு போயிருவேன்.

நான் நாமக்கல் அருகே திண்டமங்கலம் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவன். சென்னைக்குச் சென்ற போதுதான் நகரவாழ்க்கை குறித்த புரிதல் கிடைத்தது. 1974ல் 6 மாதம் சென்னையில் தங்கியிருந்து நாங்க மூணுபேர் சேர்ந்து ‘மூவேந்தர்’ன்னு ஒரு கடை நடத்தினோம். அந்த வருசந்தான் சென்னை சட்டக் கல்லூரியில சேர்ந்தேன். சாரு மஜூம்தார் அணி உருவாகி சட்டக்கல்லூரியில் 3, 4 பேரு இருந்தாங்க. T.S.S.மணி சென்னை வந்து போவார். அப்ப வெங்கடரமணி பாண்டிச்சேரி லா காலேஜ்ல சேர்ந்திருந்தார். சென்னையில ‘புது நிலவு’ன்னு பெரிய சைஸில் 4 பக்க இதழ் மாதம், இருமாதம் அப்படின்னு மார்க்ஸியப் பார்வையில நடத்தினோம். பிராட்வே மாணவர் விடுதி சிறிய அறை. 10 பேர் உட்காருவோம், மார்க்சியம், லெனினியம் தொடர்பான நூல்களை சேர்ந்து, படித்து, விவாதிச்சுத்தான் மார்க்சியம் கத்துக்கிட்டோம். எந்தக் குழுவுலயும் சேராமல் நாங்கள் active வ இருப்போம். மாவோ நூல்கள் எல்லாம் இலங்கை வழியா வரும். நாங்களும் படிச்சிருவோம். T.S.S.மணி வந்து அதையும் இதையும் புரட்டுவார். அவருக்கு எப்பவுமே புரட்டிப்போடற வேலைதான்.

கிராமத்திலிருந்து வந்திருந்ததாலே எனக்கு சாரு மஜூம்தாரை படித்தவுடன் வினோதமாக இருந்தது. தலையை வெட்டுறத்துல எனக்கு ஈர்ப்பு இல்லை. “நீங்கள் எல்லாம் மாட்டிக்கிவீங்க. கிராமத்துல சாதி அப்படியே இருக்கு. ஒரு சாதிக்காரன வெட்டிப்புட்டா கோவணம் இல்லாதவங்கூட சாதிதான் பார்ப்பானே ஒழிய நீங்க வர்க்க எதிரியை வெட்டிப்புட்டிங்கன்னு உங்களை சேர்த்துக்கமாட்டான்” அப்படின்னு மணி கிட்ட சொல்வேன்.

‘தேன்மழை’ன்னு ஒரு பத்திரிக்கை வந்தது. அதுல ஆடு ML Movement-ன் தாக்கத்தில் நிறைய புதுக்கவிதைகள் வரும். கையெழுத்து பிரதிகள் மாணவர்கள் மத்தியில் நிறைய வெளிவரும். குடிசைப்பகுதியினருடன் சேர்ந்து வேலை செஞ்சோம். மேற்கு மாம்பலத்தில் விஜய பத்ரி என்பவர் இருந்தார். அவர் மேயர் கிருஷ்ணமூர்த்தி யோட வேலை செஞ்சவர். அவரோட சேர்ந்து குடிசைப் பகுதி பணிகளைச் செய்தோம். மேயர் கிருஷ்ணமூர்த்தி எல்லாக் கட்சியையும் எதிர்த்து Independent ஆக பதவிக்கு வந்தவர்.

குடிசைப்பகுதியில் என்ன மாதிரியான பணிகள் செய்தீர்கள்?

குடிசைப் பகுதி மக்கள் மீது வரும் பொய் வழக்குகள், குடிசைகளை அப்புறப்படுத்துதல் போன்றவற்றை எதிர்த்து பணிசெய்தோம். குடிசைப் பகுதியில இயக்கம் கட்டுறது பெரிய விஷயம். மாவோ சொல்றமாதிரி லும்பன்கள், அவங்களை நீங்க அடிமையா இருக்குறீங்கன்னு சொல்லி புரியவைத்து, செயல்படுத்துவது மிகவும் கடினமான ஒண்ணு. இப்ப இருக்கிற வள்ளுவர் கோட்டம் அப்ப குடிசைப்பகுதி. குடிசைப்பகுதி மக்களை விரட்டிட்டுதான் வள்ளுவர் கோட்டம் கட்டினாங்க. அதே மாதிரி ஆயிரம் விளக்குப்பகுதியில் பாரதி நினைவாலயம் கட்டுறதுக்கு நோட்டீஸ் எல்லாம் கொடுத்தாங்க. நாங்க வழக்கு போட்டு Stay வாங்கியிருந்தோம். ஒரு கமிட்டி போட்டாங்க. அதுல நா.மகாலிங்கம், எஸ்.ஆர்.கே. எல்லாம் இருந்தாங்க. அவங்க மக்களை விரட்டிட்டா பாரதி நினைவாலயம் கட்டப்போறீங்க? இந்த இடம் வேண்டாம். வேற இடம் பாருங்கன்னு சொல்லிட்டாங்க.

பெரிய கட்சிக்காரர்களின் எதிர்ப்பு எப்படி இருந்தது?

நாங்க கடற்கரையில் வாரம் ஒருதடவை பேசிப் பழகுற பயிற்சி எடுத்துக்கிட்டோம். அப்போது சமூக அவலங்களைச் சொல்வோம். அரசாங்கம், கட்சி, அவர்களின் செயல்பாடுகளைத் திட்டுவோம். ஒரு தடவை பிரசிடென்சி காலேஜ்ல உள்ள தி.மு.க. மாணவர்கள் போலீஸ்கிட்ட சொல்லி பிரச்சினைக்கு வந்துட்டாங்க. நாங்கள் எல்லாத்தையும் விமர்சனம் பண்றோம். உங்களுக்கு தி.மு.க.வை பிடிக்கும்போலன்னு சொல்லி அனுப்பினோம். நேரடியான மிரட்டல்கள் இல்லை.

இந்த மாதிரியான பின்புலத்தை வீட்டில் பெற்றோர்கள் எவ்விதம் எதிர்கொண்டார்கள்?

அப்பா 3ம் வகுப்பு படித்த நடுத்தர விவசாயி. அதனால கிராம அதிகாரிங்கிற கவுரவ பதவியில இருந்தார். அப்பாவுக்கு எங்களை படிக்க வைக்கணுமுன்னு ஆசை இருந்தது. எங்கள் வீட்டுல மூணு பேர்ல நான்தான் பெரிய பையன். வீட்ல டாக்டராக்கணும் அப்படின்னு நினைச்சாங்க. அப்ப நாங்கூட MBBS படிச்சுட்டு Law படிக்கணும்ன்னு நினைச்சேன். ரெண்டும் இருந்தாதான் கிராமத்துல மக்கள் பணிகளைச் செய்யமுடியும்னு நினைச்சேன். சகோதரர் ஒருத்தர் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில இருந்துட்டு இப்ப நாமக்கல்ல கண் மருத்துவரா இருக்கார். நான் மட்டும் கொஞ்சம் வித்தியாசமா இருப்பேன். அம்மாவுக்காக மத்து போட்டு தயிர் கடைந்து, மோர் போட்டு, சாப்பிட்டுட்டு வேகமாக பள்ளிக்கு ஓடுவோம். கால்ல செருப்பெல்லாம் கிடையாது. வக்கீல் தொழிலுக்கு வந்து 2 வருசம் கழித்துதான் கடிகாரம் கட்ட ஆரம்பிச்சேன். வீட்ல பெருசா கட்டுப்பாடுகள் இல்ல. அதுவும் ஒரு காரணமா இருக்கலாம்.

வீட்ல கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி வற்புறுத்தவில்லையா?

B.Com., முடிச்சி Law போறப்பவே சொந்தக்காரப்பொண்ணா கட்டிக்கிடனும்னு சொன்னாங்க. இல்லை, நான் Law முடிக்கணுன்னு சொல்லிட்டேன். Law முடிக்கிற முன்பே அந்தப் பொண்ணுங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆயிட்டு. என் கருத்துக்கு ஒத்துவர்ற மாதிரி இருந்தால் கட்டிக்கிறேன், அந்த பொண்ணுக்கிட்டே பேசணும், நான் இப்படித்தான் இருப்பேன், சொத்து சேர்க்க மாட்டேன், அப்படின்னு சொல்வேன். வக்கீல்னா அவங்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் இல்ல. அதனால முன்கூட்டியே சொல்லிருவேன்.

சட்டக் கல்லூரி அனுபவங்கள்...?

1974ல் சட்டக் கல்லூரியில படிக்கிற நக்சலைட் மாணவர்களுடன் Interaction ஏற்பட்டுது. அவங்களோடு மனம் விட்டு பேசிக்குவோம். 1972 தமிழ் வகுப்பு தொடங்கியாச்சு. ஆனால் 1974ல் தொடங்காம இருந்தாங்க. சேலம் சட்டக் கல்லூரி Correspondent தனபாலன் அப்ப எங்களுக்கு ஆசிரியரா இருந்தார். அவர் கலைஞரை போய் பார்த்து அனுமதி வாங்கிட்டு வந்துர்றேன்னு சொன்னார். ஆனா நடக்கல.

அப்பத்தான் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் மாணவர்களின் பித்தலாட்டம் புரியுது. Grade Sheet-ல Medium போடமாட்டாங்க. தமிழ் மீடியம்னு போட்டா அவர்கள் வரத் தயாரா இல்லை. அவர்களுக்கு தமிழ்ல படிக்கிறோம்னு வெளியே தெரியக்கூடாது. தமிழ்ல தேர்வு எழுதினால் பாஸ் பண்ணிடலாமுன்னு மட்டும் நினைச்சாங்க. நாங்க வழக்குமன்றம் தமிழ்ல வரணுன்னு நினைச்சோம். அதுக்கு தமிழ்ல படிக்கணுன்னு ஆசைப்பட்டோம். மாணவர்களைத் திரட்டி ‘தமிழ் வாழ்க’ன்னு முழக்கம் போட்டோம். அப்போதைய தி.மு.க. அரசு பேச்சுவார்த்தையில “தமிழ்ல வகுப்பு தொடங்குவோம். ஆனால் தேர்வு ஆங்கிலத்தில்தான் இருக்கும்னு சொன்னாங்க.

எங்க போராட்டத்துக்கு ஆதரவா காங்கிரஸ் பொன்னப்ப நாடார், கம்யூனிஸ்ட் கே.டி.கே.தங்கமணி, ஆகியோர் வந்தாங்க. ‘நல்ல கோரிக்கைன்னாங்க’ நீங்கள் இவ்வளவு நாள் என்ன பண்ணுனீங்கன்னு சத்தம் போட்டோம். கடைசியா தமிழிலும் தேர்வு எழுதலாம் அப்படின்னு உத்தரவு போட்டாங்க. அப்ப புத்தகங்கள் தமிழ்ல இல்லை. முன்பு சட்டக் கல்லூரி இயக்குநராக இருந்த பழனிச்சாமி ‘பன்னாட்டு சட்டங்கள்’ ன்னு ஒரு நூல் எழுதியிருந்தார். தீங்கியல் தொடர்பான நூல் ஒருத்தர் எழுதியிருந்தார். மறைமலை அடிகள் நூலகத்திலிருந்து எடுத்து நாங்களே நோட்ஸ் எழுதிக்குவோம். முக்கால் வாசி பாடத்துல நான் முதல் மாணவனா வந்தேன். தமிழ்ன்னா வேகமாக எழுதிடமுடியும் இல்லையா?

கிராமப்புறத்தில் சாதாரண பள்ளிக் கூடத்தில் படித்துவிட்டு தமிழில் தேர்வும் எழுதி விட்டு கோர்ட்டில் ஆங்கிலத்தில் வாதிடுவது தடையாக இருந்ததா?

நான் உயர்நிலைப்பள்ளி இறுதி ஆண்டுகளில் பிளிட்ஸ் மற்றும் கரன்ட் போன்ற பத்திரிகைகளையும் படித்தேன். வழக்குமன்றத்தில் ஆரம்பத்துல கொஞ்சந்தானே பேசுவோம். படிப்படியாக நாம முழுசா உள்வாங்கிக்கிறோம். அதனால ஒண்ணும் சிரமம் இல்லை.

வழக்கறிஞர் படிப்பு முடிந்தவுடன் உங்களது தொடக்ககால செயல்பாடுகள்?

1977ல் சட்டப்படிப்பு முடித்தபிறகு வழக்கறிஞர் கே.வி.சங்கரன் அறிமுகம் கிடைத்தது. அவர் மதுரைக்காரர்; அய்யர்; மனைவி அவரவிட்டு பிரிஞ்சுட்டாங்க; இரண்டு பையன்கள். வெறுப்பாகி ரொம்பத் தண்ணி அடிக்க ஆரம்பிச்சுட்டார். குவார்ட்டரை ‘ராவா’ அப்படியே ஊத்திக்கிடுவார். ஒரு Chain Smoker வேற, பிறகு கொஞ்ச நாட்கள் நன்றாக இருந்தார். ‘அப்பு’ காணாமற்போன விசாரணைக் கமிஷன் வந்தது. எமர்ஜென்ஸி காலத்துல திருப்பத்தூர் சீராளன் என்ற இளைஞனை போலீசார் கொலை செய்கிறார்கள். அதை கையில் எடுத்தோம். எமர்ஜென்ஸி முடிஞ்ச பிறகு நாடு முழுவதும் சிவில் உரிமை பத்தின விவாதம் மேலேழும்பியது..

அப்பத்தான் வால்டர் தேவாரத்தோட அட்டூழியம் தொடங்கியது. தர்மபுரியில 4, 5 மா.லெ. அமைப்புகள் இருக்கும். கே.வி. சங்கரன்கிட்ட வழக்கு கொடுப்பாங்க. ஒரு FIRல 2, 3 அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் இருப்பார்கள். வழக்க எடுத்துக்கிட்டு வரும்போது அவங்க ஆளுக்கு மட்டும் பெயிலை போடுங்கன்னு சொல்வார்கள். சங்கரன் என்கிட்ட கொடுப்பார். நான் அப்படியெல்லாம் எழுதமாட்டேன். ஏங்க தோழமையின்னு சொல்றீங்க ஏன் பிரிக்கிறீங்கன்னு கேட்பேன். சின்னப்பசங்க,. இளம் வயசு. பிரிக்காதீங்க அப்படின்னு சொல்வார் சங்கரன். அவரை கூப்புட்டுப்போய் தண்ணி போட வச்சு மீண்டும் ஒரு மாதிரியா ஆக்கிட்டாங்க.

கிராமத்துல படிச்சுட்டு நகரத்து வழக்கு மன்றத்தைப் பார்ப்பது புதிய அனுபவம். வெளியே இருந்து பார்க்கும்போது உள்ளே நடக்கிற சதிகள் எல்லாம் தெரியாது. கோர்ட்டில் விவாதம் முடிச்சுட்டு வந்து உட்கார்ந்திருப்பார் சங்கரன். அவர் பொய் பேச மாட்டார். தீர்ப்பு வந்தபிறகு வெறுப்பாகி தொடர்ந்து smoke பண்ணுவார். தண்ணி அடிப்பார். ஜட்ஜ்கள் எல்லாம் சாதி பாக்கும்போது சங்கரன் ரொம்ப பாதிப்படைவார். எனக்கு இப்பத்தான் புரியுது சங்கரன் ஏன் அப்படி இருந்தார்னு. ஜட்ஜ்கள் வெளிப்படையாகவே அநியாயமாக ஒரு தீர்ப்பு எழுதுவார்கள். அப்ப நேரடியாக திட்டமுடியாது. தனியே உட்கார்ந்து சிகரெட்டை தொடர்ந்து ஊதிக் கொண்டேயிருக்க வேண்டியதுதான்.

அப்ப இடதுசாரி வழக்கறிஞர்கள் அணியாக இருந்து செயல்பட்டது இல்லை. இப்பவும் இல்லை. அதனால் தான் நீதிபதிகளை அம்பலப்படுத்த முடியாமல் போகிறது. ராமச்சந்திரன்னு ஒருத்தர் பார் அட்-லா இருந்தார். ரொம்ப short temper. நியாயத்திற்காக போராடும்போது சில நீதிபதிகள் சாதி சார்ந்தவர்களாகவும், பித்தலாட்டகாரர்களாகவும் பேசி வைத்தே தீர்ப்பு சொல்வார்கள். அதை நேரடியாக எதிர்க்க முடியாது. மேல்முறையீடு போனாலும் அப்படித்தான் இருக்கும். சட்டத்துல நல்லா இருக்கேன்னு சொல்லிட்டு இருக்க முடியாது. இதனாலே பலபேர் பாதிக்கப்பட்டிருக்காங்க. அவங்களுக்கு Balance இருக்காது.

ஓரளவுக்கு ஒழுங்காக செயல்பட்ட நீதிபதிகள் குறித்து சொல்ல முடியுமா?

ஒரு தலித் ரயில்வே தொழிலாளிக்கு சம்பளம் கொடுக்கலை. அதற்கு அவர் கடுமையாக திட்டி விடுகிறார். அதற்காக அவரை வேலைநீக்கம் செய்கிறார்கள். அதற்கு சட்டப்படி அப்படி பண்ண முடியாது. Increment ஐ வேணுமுன்னா தள்ளி வைக்கலாம். குற்றத்திற்கு சமமான ஒரு தண்டனைதான் கொடுக்க முடியும். சங்கரன் இந்த வழக்கை நடத்தும் போது கூட நின்று பார்த்துக்கிட்டு இருக்கேன்.

ஜி.ராமசாமின்னு ஒருத்தர் அட்டார்னி ஜெனரலாக கூட இருந்தார். ஜட்ஜ்களெல்லாம் கூட நியூயார்க் Globalisation Conference க்கு கூட்டிக்கிட்டு போனார். அவர் ரயில்வேக்கு appear ஆனார். தொழிலாளி கொடுத்த representation வரவேயில்லை அப்படிங்கிறார். அது ரொம்ப முக்கியமானது. இல்லன்னா ஒண்ணும் பண்ணமுடியாது. ஜட்ஜ் பைலை வாங்கி புரட்டினார். அதுல representation இருக்கு. அவரே அதைப் பார்த்துட்டு இதோ இருக்கு அப்படின்னு சொல்றார். அப்படியிருந்தும் சங்கரன் நிறைய வாதாடியும், மனுவைத் தள்ளுபடி பண்றாங்க. அப்ப சங்கரனுக்கு எவ்வளவு வேதனை இருந்திருக்கும்? வெளியில் வந்துதொடர்ந்து சிகரெட்டை குடித்துக் கொண்டிருந்தார். அப்ப அவர்கிட்ட அதிகம் பேசமாட்டேன். அவரும் எதையும் மனசு விட்டு வெளியே சொல்ல மாட்டார்.

சூரியமூர்த்தின்னு ஒரு ஜட்ஜ் வந்தார். CPI-ல வழக்கறிஞராக இருந்தவர். ஜோலார்பேட்டை பக்கத்தில ரெட்டைக் கொலை வழக்கு. சாரு மஜூம்தார் அணியினர் செய்த வர்க்க எதிரிகள் அழித்தொழிப்பு. இளைஞர்களுக்கு bail கேட்டிருந்தோம். ஜார்க்கண்ட் மாநில தலைமை நீதிபதியாக உள்ள கற்பகவிநாயகம் அப்ப அடிஷினல் பி.பி. நீதிபதி சூரியமூர்த்தி, கற்பக விநாயகத்தைப் பார்த்து சொல்றார். “Mr. PP, Have your read Lenin’s State and Revolution”, அவர் இல்லைன்னு தலையாட்டுகிறார். அவர் அன்னைக்கும் படிக்கலை. இன்னைக்கும் படிக்கலை. “State and Revolution” படிக்காம வக்கீல் வேலை பார்க்கக் கூடாது. அதைப் படிச்சாத்தான் சமூகம், அரசு பற்றி புரியும். சின்ன புத்தகந்தான். அதைப் படிக்காமல் இருக்குறீங்களேன்னு சொல்லிட்டு. என் வீட்ல ஸ்டாலின், மார்க்ஸ், லெனின் Collected Works எல்லாம் இருக்குன்னு நிறைய சொல்லிட்டு பெயிலும் கொடுத்திட்டார். அதுமாதிரி 1, 2 நீதிபதிகள் ஒழுங்கா வருவாங்க. தொடர்ந்து நேர்மையாக இருக்கமாட்டாங்க. 1, 2ல இப்படிச் சொல்லிட்டு அப்புறமாக பல்டி அடிச்சுருவாங்க.

குஜராத் சென்ற பின்னணி குறித்து சொல்லுங்கள்?

சாரு மஜூம்தார் குழுவுல இருந்தவங்க தனித்தனிகுழுவாக போய்விட்டார்கள். அதுல நிறைய பிளவுகள் வந்தன. குழுவாக சேர்ந்து இயங்கமுடியாதது வருத்தமாக இருந்தது. நாங்க புதுநிலவு Group. நல்லா செயல்படுவோம். அப்புறம் குடிசைப்பகுதியில் வேலை செய்தது நல்ல அனுபவம். சில இடங்களில் ரிட் போட்டு மக்களை வெளியேற்ற முடியாமல் செய்தோம். மக்களை இயக்கப்படுத்த முடியலை. ஆடு ML Movement நிறைய உடைவுகளைச் சந்தித்தது. இப்படிப்பட்ட விரக்தியில் ஊருக்கு வந்து நாலு எருமைமாட்டை வாங்கி பால் வியாபாரம் பண்ணுவோங்கிற அளவுக்கு வந்தாச்சி. வழக்கறிஞர் வெங்கட்ரமணி டில்லிக்கு கூப்பிட்டார். நான் சட்ட உதவிக் கழகத்துல ஈடுபட்டோடு இருந்தேன். ராஜா என்பவர் ரொம்ப அக்கறையோடு பணி செய்தார். அவருடன் சேர்ந்து பல பணிகள் செய்தேன். அப்ப டெல்லி போய் அங்கிருந்து 1982 செப்டம்பரில் குஜராத் போனேன்.

குஜராத்தில் உங்களது பணிகள் பற்றி...?

பரோடாவுக்கும், சூரத்துக்கும் நடுவே ப்ரூச் மாவட்டத்துல சட்ட உதவி மையம் இருந்தது. அங்கு முழுக்க முழுக்க பழங்குடி மக்களுக்கான பணிகளைச் செய்து வந்தனர். 2பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். நல்ல Active ஆக இருப்பார்கள். கிறித்துவ பாதிரிமார்கள் சர்ச்க்கு கூட போகமாட்டார்கள். Libration theology-ல் ஈடுபாடு உள்ளவர்கள். 2, 3 வண்டி வைத்திருந்தார்கள். அவர்களே இரவு, பகலாக வண்டி ஓட்டுவார்கள். நிலப்பரப்பு சமமாக இருக்காது. ரோடெல்லாம் மேடு பள்ளமாக இருக்கும். அங்கு சட்ட உதவி மையம் செயல்பட்டது.

அங்கு என்ன மாதிரியான வழக்குகள் வரும்?

வனத்துறையினர், காவல்துறையினர் பழங்குடி மக்கள் மீது பொய் வழக்குகள் போடுவார்கள். நிலம் கையப்படுத்தலால் ஏற்படும் வழக்குகள், அவர்களுக்குள்ளாக அடித்துக்கொள்ளும் வழக்குகள் போன்று வரும். ‘மகுடா’ என்ற மரத்தின் பூக்களை சீசனில் சேகரித்து காயவைத்து பரணில் வைத்துக் கொண்டு, அதிலிருந்து சாராயம் காய்ச்சுவார்கள். அது போதை மட்டும் கொடுக்கும். ஆனால் unhealthy ஆக இருக்காது. இங்கு போல் கண்டதை போட்டு காய்ச்ச மாட்டார்கள். பழங்குடி ஆண்கள் சிலர் காலையிலேயே குடித்துவிட்டு படுத்துவிடுவார்கள். பெண்கள் ஏர் உழுவார்கள்.

குடி மீதான வெறுப்பு இதனால் தான் தோன்றியதா?

நமது கிராமங்களில் ஆண்கள் குடியில் விழுந்து விடுகிறார்கள். பெண்கள் இதனால் பாதிக்கப் படுகிறார்கள். சுரண்டப்படுகிறார்கள். இதற்கெல்லாம் குடி காரணமாக இருக்குதில்லையா? அதனால் தான் குடி மீது வெறுப்பு இயல்பாகவே வந்துவிட்டது.

குஜராத்தில் நர்மதை அணை பிரச்சினையை முதன் முதலாக நாங்கதான் எடுத்தோம். அணை கட்டத் தொடங்கும் போது உடனடியாக வெளியேற்றப்பட்ட 19 கிராம மக்களுக்கு பாதிரியார்கள் உதவினார்கள். அந்த நிலத்துல இருக்கிற ஒருவித களிமண்ணை கால்வாய் கட்ட தேர்வு செய்கிறார்கள். Globla tender எடுக்கிற கம்பெனி. கம்பெனியை தொழிலாளி எதிர்த்தா கொன்று தூக்கியறிஞ்சிடுவாங்க. யூனியன் எல்லாம் கட்ட முடியாது. பாதிரியார்கள் தான் இயக்கம் கட்டி எதிர்த்து நின்னாங்க. Father ஜோசப்ன்னு ஒருத்தர் இருந்தார். ரொம்ப reliable person. காங்கிரஸ் அகமது பட்டேல் பாதருக்கு நெருங்கிய நண்பர். அந்த 3 மாவட்டத்தில் உள்ள பழங்குடி மக்களுக்கு ஒரே பாதுகாப்பு இந்த கயவாநச தான். நாங்க ஒரு குழுவாக இருந்து வேலை செய்தோம்.

RSSன் நடவடிக்கைகள் அப்போது எப்படி இருந்தது?

அப்ப ரொம்ப கொறைச்சல் தான். பழங்குடி மக்கள் மரங்களைத்தான் கும்பிட்டுகிட்டு இருப்பாங்க. அப்புறம் இவங்க பூந்து பிள்ளையாரை கையில கொடுத்திட்டாங்களே! நான் அங்கு இருந்த போது, CPI லிருந்து விலகி சுயேட்சையாக MLA வுக்கு நின்னு நிறைய வோட்டு வாங்கினார். அவர் RSS உள்ளே நுழைவதை எதிர்த்து கிட்டதட்ட 1 லட்சம் பேரை திரட்டி ஊர்வலம் நடத்தினார். பாதிரியார்கள் கிருஸ்தவத்தைப் பரப்பவில்லை. சர்ச்க்கு கூட போகாமல் மக்கள் பணிகளில் ஈடுபாடாக இருந்தார்கள். RSS க்கு எதிராக மக்களோடு சேர்ந்து அமைப்புக்களை உருவாக்கவில்லை.

பழங்குடி மக்கள் பெருமளவு கிருஸ்தவத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தால் RSS மயப்படுத்தப்படாமல் தவிர்க்கப்பட்டிருக்குமோ?

பழங்குடி மக்களுக்கான அமைப்பைக் கட்டியிருந்தால் சாத்தியப்பட்டிருக்கும். பழங்குடி மக்களுக்கு சூதுவாது தெரியாது. யாரையும் ஏமாத்தமாட்டாங்க. நீங்கள் சரியா இருந்தா உங்களை நம்புவார்கள். உயிரையும் கொடுப்பார்கள். பாதிரியார்கள் அவர்களிடம் நிறைய வேலைகள் செய்தார்கள். Libration Thelogy என்று இருந்த இவர்கள் மதம் மாற்றம் குறித்து யோசித்ததெல்லாம் கிடையாது. பாதர் மேத்யூஸ் நுஞறுல் EPW எழுதியிருக்கிறார். அவர் அங்கு Law படிச்சார். பழங்குடி மக்களின் நடனம் நன்றாக ஆடுவார்.

பழங்குடி மக்களின் வழக்கு அனுபவங்கள் பற்றி கூறுங்கள்?

ரொம்ப வறட்சியான அந்த பகுதிகளில் போலீஸ்காரர்கள் மாதம் 1 லட்சம் வசூல் பண்ணி விடுவார்கள். மயில் செத்துக் கிடந்தா கேசு போட்டு விடுவார்கள். தேசிய பறவை இல்லையா? பெரிய கேசு போட்டு பணத்தை புடுங்கிடுவார்கள். பழங்குடி மக்களிடம் arranged marriage இருக்காது. வயது வந்த ஆணும் பெண்ணும் அவங்களுடைய நண்பர்களால் முறையான ஆண்/பெண் உடன் அனுப்பிவிடுவார்கள். பிறகு ஊர் கூடி பையன் side ல் ஒரு தொகை ஊருக்கு கட்டுவார்கள். ஊர் சாப்பாடு போடும். இப்படித்தான் திருமணம் நடக்கும்.

ஒருமுறை அடுத்த ஊரிலிருந்து வந்த பெண் இங்குள்ள முறைப்பையனை கூட்டிக்கிட்டு போய்ட்டு. அந்த ஊர்ல அந்தப் பெண்ணை கல்யாணம் பண்ணிக்க இருந்தவனுக்கு தாங்க முடியல. போலீஸுக்கு பணம் கொடுத்து புகார் பண்ணி அந்த °டேஷன் SI லாரி எடுத்துக்கிட்டு வந்து ஊர்ல உள்ள எல்லாரையும் அள்ளிக்கொண்டு போனார். வண்டியில கொண்டு வரும்போதே 2 பேர் அந்த பெண்ணை Rape பண்ணுறான். காலை 5 மணிக்கு °டேஷன் மாடியில பாரஸ்ட் ஆபீஸ் இருக்கு. அங்கே கொண்டு போய் வைத்து 3 பேர் Rape பண்ணுறான். SI காலையில் வந்து ரூ.3000/- கொடுத்தால் இந்த பெண்ணை விட்டு விடுகிறேன் என்கிறான். ரூ.2000/- கொடுத்துவிட்டு ரூ.1000/-க்கு ஜாமீன் சொல்லிவிட்டு அந்தப்பெண்ணை அழைத்துப் போய் விடுகிறார்கள்.

அப்ப Father மேத்யுஸ் Final year law படிக்கிறார். அவர் கிராமத்துல போய் “Know your right’ ன்னு வகுப்பு எடுக்கிறார். எங்களுக்கு ஏது உரிமை? நாங்க தான் ஆடு மாட்டைவிட கேவலமாக இருக்கிறோமே? என்று சொல்லும்போது இந்த விவரம் கேள்விப்பட்டு அந்தப் பெண்ணை அழைச்சிட்டு டாக்டர்கிட்ட போறாங்க. ஒரு trible தான் டாக்டர். அவர் போலீஸ் மெமோ வாங்கிட்டு வாங்கன்னு திருப்பி அனுப்புகிறார். இங்கக்கூட இதைத்தான் சொல்றாங்க. அது ரொம்ப தப்பு. பாதிக்கப்பட்டவங்க வந்தவுடன் treatment பண்ணனும். அவங்களுக்கு Intimation form ஒண்ணு இருக்கு. அதைப் போட்டு போலீஸுக்கு அனுப்பணும்.

அங்கேயே பட்டேல் வகுப்பைச் சார்ந்த ஒரு டாக்டர் பிராமின் லேடி டாக்டரை திருமணம் செய்திருக்கிறார். அவங்க ரெண்டு பேரும் தென்னாப்பிரிக்காவுல இருந்திருக்கிறாங்க. போபால் எல்லாம் போய் research எடுத்தாங்க. நல்ல டீம். Rape நடந்து 7 நாட்கள் மேல் ஆகிறது. அதனால் medical evidence கிடைக்கிறது கஷ்டம். அந்த அம்மா நல்ல experience hand. அந்த பெண்ணோட பின்புறத்தை நோட் பண்ணி சான்று father கிட்ட கொடுத்தாங்க. father ஜோசப் அதிகம் பேசமாட்டார். ஆனா காயை அருமையாக நகர்த்துவார். SP Office போனா treatment எடுத்துக்கச் சொல்லி அனுப்பி விடுகிறார்கள்.

வழக்காடும் போது SP பொய் வழக்குன்னு pressure கொடுக்கிறான். அது குஜராத்துல பெரிய வழக்காயிடிச்சு. நான் சுப்ரீம் கோர்ட்ல பெட்டிஷனர். பகவதி தலைமை நீதிபதி ஆயிட்டார். வழக்கை சீரியஸாக எடுத்துக் கொண்டார். தலைமை நீதிமன்றம் ஐ.ழு. கே.வி.ஜோசப் மற்றும் ஒரு பெண் பேராசிரியர் ஆகியோரை விசாரணைக் குழுவாக நியமித்தது. அவர்கள் 400 சாட்சிகள் எடுத்தார்கள். அந்த கேசுல மதராஸ் வக்கீல்ன்னு என்னை state பூராத் தெரியும். போலீசார் 5 பேருக்கு 10 வருடம் தண்டனை கிடைச்சுது.

தளி, அத்தியூர் விஜயா வழக்கிற்கு முன்னதாகவே பெரிய வழக்கு அனுபவம் இருக்கிறது.

ஆமாம். கலெக்டர், போலீஸ் எல்லாம் பாதிக்கப்பட்ட அந்தப்பெண் நடத்தை கெட்டவள்னு சொல்வாங்க. பாதிக்கப்பட்ட பழங்குடிப்பெண்ணுக்கு ஆதரவாக பெண்கள் அமைப்புகள் ஒருங்கிணைந்தன. ஊர்வலம், பொதுக்கூட்டம், அரங்கு கூட்டம் என இயக்கமாகி குஜராத்தில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது இந்த வழக்கு.

அதன் பிறகு டெல்லி போனீங்களா?

குஜராத்திலிருந்து வந்து போய்க்கிட்டு இருந்தேன். இந்த father ரோட அக்கா பையன் Teacher Training படிக்க வேண்டும் என்று வந்தார். நான் Law படிக்கச் சொன்னேன். அப்போது குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சுப்பிரமணிய போற்றி என்ற கேரளாக்காரர் இருந்தார். அவர்தான் எமர்ஜென்சி காலத்தில் நடந்த ராஜன் கேஸை மர்டராக பதிவு பண்ணவைத்தவர்.

டெல்லியிலிருந்து எப்போது சென்னை திரும்பினீர்கள்?

987ல் சென்னை வந்தேன். அப்ப எனக்கு வயசு 41. எப்பவும் ஊர்ல தங்கியதில்ல.. நாமக்கல்லில் ஒரு அறை எடுத்து, சைக்கிளில் சுத்தி வருவேன். டெல்லிலேர்ந்து வந்து சைக்கிளா ஓட்டுகிறேன்னு கேட்டாங்க. சிவில் பார்ல மெம்பரானேன். ரசீது கொடுத்தாங்க. கிரிமினல் பார்ல மெம்பர் ஆகணுன்னேன். “நீங்கள் சிக்கலான ஆளாச்சே. எல்லாத்தையும் தோண்டுவீங்க பை லா கேட்பீங்க. பதிவு பண்ணணும்பீங்க. ரசீது கேட்பீங்க” என்றனர். இதெல்லாம் இல்லாம எப்படிங்க என்றேன்.

கொல்லிமலைப் பகுதியில் மக்கள் நிலை பற்றி நேரில் பார்த்துத் தெரிந்து கொண்டேன். கொல்லிமலை பழங்குடி மக்களோட பெரிய சோகம் என்னன்னா, கிருஸ்டியன் காலேஜ்லிருந்து UGL-ல ஒரு Study எடுத்தாங்க. ரிப்போர்ட்டும் கொடுத்தாங்க. அந்த ரிப்போர்ட் Copy வாங்க போனேன். ஒரு நண்பர் அதை வாங்கிக் கொடுத்தார். அதுல அவங்களுக்கு நிறைய Venereal disease இருப்பதாக எழுதியிருந்தது. படிச்சதும் அங்க போய் சத்தம் போட்டேன். “எதுக்காக study எடுக்கிறீங்க.. நீங்க பெரிய நிபுணர் பட்டம் வாங்கவா? Health Department-க்கு எழுத வேண்டாமா”, என்று திட்டிவிட்டு வந்தேன்.

பிறகு சேலம் தமிழ்நாடன் பழக்கமானார். முதல்வர் கருணாநிதி ஒவ்வோர் ஆண்டும் கொல்லிமலையில் ஏப்ரல் மாதம் வல்வில் ஓரி விழா நடத்துவார். அப்ப என்னைக் கூப்பிட்டுருந்தார்கள். குஜராத் மக்கள் மத்தியில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டு இங்குள்ளவர்களுக்கு Venereal disease போன்ற பிரச்சினை இருப்பது பற்றி எழுதினேன். மலையில் ஒரு கொலை நடந்தது என்றால் அந்த உடலை அக்குடும்பமே தலையில் சுமந்து கொண்டு வந்து போஸ்ட் மார்ட்டம் செய்த பிறகு திரும்ப அவர்களே எடுத்துச் செல்லும் அவலம் இருந்தது. அதுமாதிரி பள்ளிகளுக்கு வாத்தியாருங்க வெள்ளிக்கிழமை போய் மொத்தமாக கையெழுத்து போட்டுட்டு வந்துருவாங்க. இந்த அவலங்களைக் கட்டுரையாக எழுதிக்கொடுத்தேன். கலெக்டர் கூட இதைப் பார்க்காமல் புத்தகத்துல சேர்த்துட்டார். அச்சாகி வந்தபின் தலையைப் பிய்த்துக்கொண்டனர்.

மீண்டும் கிராமத்துல வந்து தங்கினபிறகு வழக்கு நடத்தினீங்களா?

நாமக்கல்லில் ஒரே ஒரு வழக்குல appear ஆனேன். நாமக்கல் கவிஞரோட செயலாளர் ஒரு இஸ்லாமியர். பக்கத்து வீட்டு வாய்த்தகராறில் அவர் வீட்டுல புகுந்து அவர் பையனை ரொம்ப அடிச்சிட்டாங்க. அவர் பலருக்கு கடிதம் கொடுத்திருந்தார். CPM ல காளியண்ணன் வழக்கறிஞராக இருந்தார். அவர் அதை எங்கிட்ட கொடுத்தார். நான் சைக்கிளை எடுத்துக்கிட்டு அவர் வீட்டுக்குப் போனேன். அந்தப் பையனோட அம்மாவும், அக்காவும் இருந்தாங்க. அந்தப் பொண்ணுதான் என்னம்மா வெளியே நின்னுக்கிட்டு இருக்காங்க. உள்ளே கூப்புடுமான்னு சொல்லிச்சு. உட்கார்ந்து எல்லா விஷயத்தையும் கேட்டுட்டு வந்தேன் அவங்க அப்பா வந்தார், ‘அய்யா இது மாதிரியெல்லாம் நடந்தது இல்லய்யா, முதல்ல எங்களோட சுதந்திர போராட்ட காலத்துலதான் இந்த மாதிரி இருக்கும். மக்கள் ஒண்ணுன்னா வந்துருவாங்க. போய் கேட்பாங்க. உதவுவாங்க. இப்ப அழிஞ்சு போயிருச்சு. ஒவ்வொரு கட்சிக்கும், வக்கீலுக்கும் வீடு பூரா கொடுத்துட்டு வந்தோம். உங்களுக்கு கொடுக்கலை. நீங்க வந்துருக்கீங்க என்று ஆச்சரியப்பட்டார். நிறைய பேர் இருக்காங்க அதான் சமூகம் உயிர்ப்போடு ஓடிக்கிட்டு இருக்குன்னு சொல்லிட்டு வந்தேன்.

நாமக்கல்ல இருக்கும்போது சின்னப்ப பாரதியுடனான தொடர்பு பற்றி...?

தாகம் நாவல்ல கொல்லிமலையைப் பத்தி அந்த வட்டார வழக்கு வார்த்தைகளைப் போட்டு எழுதியிருப்பார். அவர் என்னை உட்கார வைச்சுக்கிட்டு, தோழர் நீங்க கல்யாணம் பண்ணிகிடனுன்னு ஆரம்பிச்சிட்டார். “நானெல்லாம் சாதிக்குள்ளதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். சாதி வேணான்னு எல்லாம் பாத்துக்கிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது தோழர்”ன்னார். இல்லை தோழர் நான் கொஞ்சம் யோசிக்கிறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.

தளி வழக்கு பற்றி சொல்லுங்கள்?

நான் டெல்லியிலிருந்து வந்திருந்த போது இந்த வழக்கு வந்தது. அப்ப கல்பனா சுமதிக்கு 22 வயசு இருக்கும். டீச்சர் டிரெயினிங் முடிச்சுட்டு ஒரு தனியார் ஆரம்பப்பள்ளியில டீச்சராக வேலை பாத்துக்கிட்டு இருந்தாங்க. பாதிக்கப்பட்ட கல்பனா சுமதியின் உடல்நலம் பத்தி மாலை முரசுல டெய்லி நியூஸ் வரும். அதைப் பார்த்துட்டு இன்னொரு வழக்கறிஞரை அழைத்துக் கொண்டு தளிக்குப் போயிருந்தேன். அவங்க ரொம்ப மயக்கநிலையிலிருந்து பெங்களூர்ல ஒரு கிருஸ்டியன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. தலைமை நீதிமன்றத்தில் நான் வழக்கு போட்டேன்.

தமிழ்நாட்டுல அப்ப president rule. சுப்ரீம் கோர்ட்ல வழக்கு வந்தபோது இவ்வளவு மோமான வன்கொடுமையான்னு அரண்டு போய்ட்டாங்க. மருத்துவச் செலவுக்கு ரூ.25,000/-ம், குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு தண்டனை கிடைச்சுது. பின்னர் உயர்நீதிமன்றத்தால் 5 லட்சம் கிடைத்தது. கல்பனா சுமதி தற்போது ஆசிரியர் பணியில் உள்ளார்.

சின்ன வயதுலேருந்து Victim பக்கமா இருக்கிறது பழக்கமான ஒண்ணு. பேராசிரியர் கல்யாணி அடிக்கடி சொல்வார் ரத்தினத்துக்கிட்ட போனா நக்கீரனும் ஜுனியர் விகடனும் இருக்கும்ன்னு. தொடர்ந்து வாங்கி விடுவேன். ஏதாவது அதுல வந்ததுன்னா ஆட்களைக் கூப்பிட்டுக்கிட்டு கிளம்புடுவேன்.

பேரா. கல்யாணியுடன் எப்போது பழக்கம் ஏற்பட்டது?

1991ல் பாண்டிச்சேரி சட்டக்கல்லூரி மாணவர் சுடப்பட்டார். தமிழ்நாட்டு பார்டரில் பனையடிக்குப்பம் என்ற ஊர்; தமிழரசன் தங்கியிருந்த ஊர்; போலீஸ் கண்காணிப்பு அதிகம். அந்த மாணவர் சுடப்பட்டது பாண்டிச்சேரி பகுதியில். இங்கு இழுத்துக் கொண்டு வருகிறார்கள். அம்மா காலில் விழுந்து கெஞ்சுகிறார். அம்மாணவர் இறந்துவிடுகிறார். அப்ப ஒரு கமிஷன் போடுகிறார்கள். அந்த வழக்குக்கு பாண்டிச்சேரி போனபோது முதல்நாள் கல்யாணி வந்து போனதாக சொன்னார்கள். அதிகமாக இருவரும் இணைந்து செயல்பட்டது அத்தியூர் விஜயா வழக்கில்தான்.

அம்பேத்கர் மேல் எப்போது ஈடுபாடு வந்தது? அம்பேத்கரை முழுமையாய் படித்தல் - பவுத்தம் பற்றி....?

அம்பேத்கர் அரசியல் சட்டம் எழுதினார் என்பதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக படிச்சுக்கிட்டு இருக்கோம். தலித் தலைவர்கள்ன்னு சொல்லிக்கிட்டு அம்பேத்கரை ஏமாற்றுகிறார்கள். அதிலிருந்துதான் அம்பேத்கரை முழுமையாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

அம்பேத்கரை பொருத்தவரையில் போதுமான ethics அதாவது அறம் தொடர்பான விஷயங்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்கள்?

மார்க்சீய அணியில போதுமான ethics இல்லாம இருக்குதுல்ல. அதைத்தான் அம்பேத்கர் “மார்க்சியர்கள் புத்தரைத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்கிறார். சோவியத் யூனியன் போன்று மற்ற இடங்களில் பெற்ற அனுபவங்களிலிருந்து அவர் இதைச் சொல்கிறார். சமூகவியல் என்பதில் தனி மனித வாழ்வியலும் சேர்ந்திருக்க வேண்டும் அல்லவா?

அம்பேத்கரைப் பற்றிய விமர்சனம் குறிப்பாக மார்க்ஸியத்திற்கு எதிரான கருத்துக்கள் பற்றி...?

இரத்தினம்: அம்பேத்கர் பற்றி சில விமர்சனங்கள் உண்டு. சில இடங்களில் மார்க்ஸை கடுமையாக சாடுகிறார். மார்க்ஸியம் ஒழிந்து விட்டது என்கிறார். டாங்கே போன்ற பார்ப்பனர்கள் பண்ற சேட்டைகளால் ஏற்பட்ட விரக்தியில் அவ்வாறு கூறுகிறார். கம்யூனிஸ்டுகளை விரட்டுவோம் என்று கூட எழுதுகிறார். அவர் சொல்வது போலி கம்யூனிஸ்டுகளை விரட்டுவோம் என்று. அது கொஞ்சம் emotional. அதையே நீங்க focus பண்ணினா வேற மாதிரி ஆகிவிடும். நாய் செத்ததுக்கு வருத்தப்பட்டு 1 மாதம் வீட்டை விட்டு வெளியே வரல. பையன் ஒருத்தன் இறந்ததற்கு அம்பேத்கர் மிகவும் பாதிக்கப்பட்டு 2, 3 மாதம் சாமியார் மாதிரியே ஆகிவிடுகிறார்.

காரல் மார்க்ஸுக்கும் அம்பேத்கருக்கும் ஒரு similarity இருக்குது. அம்பேத்கரோட செகட்டரியின் பதிவுல, செகட்டரி கிளம்புற நேரத்துல இரவு 9 மணிக்கு படிச்சுக்கிட்டு இருப்பாராம். காலையிலே 8 மணிக்கு திரும்பி வந்தால் இன்னும் வீட்டுக்கு போகலயான்னு கேட்பாராம். நான் வீட்டுக்கு போய் தூங்கிட்டு வர்றேன்னு சொன்னபிறகு, அடடா இந்த புத்தகத்தை படிச்சி முடிச்சிரலாமுன்னு இருந்தேன். படிச்சிக் கிட்டே இருக்கிறேன். அப்படியிம்பாராம். அவ்வளவு ஈடுபாட்டோட இருந்தார். பாலி மொழி படிச்சார். சமஸ்கிருதத்தைப் படிச்சு ஆரியத்தை அம்பலமாக்கினார். ஆரிய ஒழுக்கக்கேடுகளை, சோமபானம், சுராபானம் அருந்தி பெண்கள் யாகங்களில் குதிரைகளைப் புணர்வார்கள் என்பதை அவங்க நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். வீணாய் போன கும்பல்னு அவங்கக்கிட்டேயிருந்து எடுத்து காட்டுகிறார். யாரும் அம்பேத்கர் பொய் சொல்லிட்டாருன்னு சொல்ல முடியாது.

அம்பேத்கரை படித்த அளவுக்கு பெரியாரை படித்தது உண்டா?

பெரியாரை படிச்சுகிட்டு இருக்கேன். ஆனா அம்பேத்கர் கொடுமைகளை நேரடியாக அனுபவிச்சவர். இந்து மதத்தை விட்டு வெளியேறணும் என்றால் இஸ்லாத்துக்குப் போங்கள் என்கிறார் பெரியார். அம்பேத்கர் ஆழமாக ஆய்வு பண்ணிதான் பவுத்தத்திற்கு செல்லும் முடிவை எடுக்கிறார்.

அம்பேத்கரிடம் மார்க்ஸியத்தின் மீது emotional ஆன ஒரு வெறுப்பு இருந்ததைப் போல இஸ்லாம் மீது இருந்ததாகப் படுகிறதே...?

இஸ்லாம் மீது அம்பேத்கர் வைக்கும் குற்றச்சாட்டு பெண்களை நடத்தும் விதந்தான். படையெடுப்புகளில் புத்த பிக்குகளும் கொலை செய்யப்பட்டார்கள். இஸ்லாம் உருவ வழிபாட்டை மறுக்கிறது. இருப்பினும் அம்பேத்கர் பார்ப்பனியத்தைச் சாடுவது மாதிரி இஸ்லாத்தைச் சாடவில்லை. பார்ப்பனீயந்தான் பவுத்தத்தை ஒழித்தது என்கிறார்.

அம்பேத்கர் இஸ்லாத்தில் சேராததன் காரணம்...?

ஒன்று இஸ்லாத்தில் இறை நம்பிக்கை இருக்கிறது. மற்றொன்று பெண்களை சமமானவர்களாகப் பார்க்க மறுக்கிறார்கள். பௌத்தத்தில் இவையிரண்டும் இல்லை. புத்த மதத்தை உருவாக்கியவர்களே பார்ப்பனர்கள் தான். இருந்தாலும், அப்ப இருந்த நிலையிலேயே மதத்திற்கு போகாமல் இயக்கமாக்கியிருக்க வேண்டும். அது தப்பா தெரியுது. கடவுள் இல்லாத மதம் ஒன்னு தேவைங்கிறார். புத்தர் அப்படிச் சொன்னார்ங்கிற மாதிரி கொண்டு வர்றார். ஆனால் புத்தர் ஒழுக்கமே தம்மம், தம்மமே ஒழுக்கம் என்றார். சமூகத்திற்கு வழி நடத்தக்கூடிய சமூகவியல் அடிப்படைத் தேவை என்பதே புத்தரின் பார்வை, மதமல்ல. கடவுள் இல்லை, மறுபிறப்பு இல்லை, உயிர் என்று எதுவும் இல்லை என்பதே புத்தரின் கருத்து.

பவுத்தத்தில் திருத்தங்கள் செய்து விட்டதாக அம்பேத்கர் மீது விமர்சனங்கள் கூட உண்டு.

புத்தர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். மதம் ஆதிக்கங்கள் உருவாக்கியது; பகுத்தறிவுக்கு எதிரான சதி என்பதே அவர் பார்வை. அதனால்தான் பிரம்மனின் நெற்றியிலிருந்து பிறந்தவர்கள் பிராமணர்கள், அவரது தோள்பட்டையிலிருந்து தோன்றியவர்கள் சத்திரியர்கள், அவரது இடுப்புப் பகுதியிலிருந்து தோன்றியவர்கள் வைசியர்கள், பிரம்மனின் பாதத்திலிருந்து தோன்றியவர்கள் சூத்திரர்கள் என்ற கட்டுக் கதைகளை உடைத்து மக்களைத் தெளிவாக்கினார்.

ஒரு millitant புத்தரை கட்டமைக்க வேண்டுமென்று நீங்கள் அடிக்கடி பேசுகிறீர்கள். புத்தருக்கு அறம் தானே முக்கிய பலம்?

அப்ப இருக்கிற சூழல்ல அவர் அரசக்குடும்பத்திலிருந்து பிரிந்து தனியே வருவதை சங்கக் கூட்டத்தில்தான் முடிவு எடுக்கிறார். அடுத்த அரசை தாக்க வேண்டுமென்றும் மற்றவர்கள் சங்கத்தில் முடிவு செய்கிறார்கள். அப்ப அவர்கிட்ட தளர்வற்ற போக்கு இருக்கு. அதை அறிவு ரீதியான போர்க்குணம் என்றே நினைக்கிறேன்.

அறிவு ரீதியான millitant. ஒரு நல்ல புதிய விளக்கமாக உள்ளது.

அதனால்தான் சொல்கிறார். ஒவ்வொரு புத்த பிக்குக்கும் சமூகக் கடமை இருக்கிறது. தீமையை ஒழிப்பதற்கு ஆயுதம் எடுக்க வேண்டுமானால் தயங்கக் கூடாதுங்கிறார். அப்படி இருக்கிற சூழல்ல ரொம்ப millitancy ல இருந்தா regulate பண்ணமுடியாது.

புத்த கயாவில் கொஞ்ச நாட்கள் இருக்கப் போறேன்னு சொன்னதாக நினைவு...?

இல்லை நாக்பூர். நாக்பூர்ல அம்பேத்கர் இயக்கம் செயல்பட்ட முறையை யாரும் சரியாக வெளிக்கொண்டு வரவில்லை. ஒவ்வொரு பவுர்ணமியின் போதும் பவுத்த குடும்பங்கள் கூடுகிறார்கள். அந்த உறவு முறை பரவலாக இருக்கு. பவுர்ணமி வெளிச்சம் மக்கள் கூடுவதற்கு வசதியாகவும் இருக்கு. கயர்லாஞ்சி நிகழ்வுக்காக Spontaneous ஆக 10,000 பெண்கள் திரண்டார்கள். புத்தக் குடும்பங்களின் தொடர்புகள் மூலமாக ஆதிக்கம் செலுத்தும் தலித் தலைவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சுகமாக இருப்பதற்காக ஜெகஜீவன்ராம் போன்றவர்கள் அம்பேத்கருடன் இணையாமல் காங்கிரஸில் சேர்ந்தனர்.

அவங்க எல்லாம் அம்பேத்கருடன் இணைந்து இருந்தால் மாபெரும் இயக்கமாகி இருப்பார்கள். அம்பேத்கர் இயக்க செயல்பாட்டை புரிந்து கொள்வதற்காக நாக்பூர் செல்வது குறித்து பேசியிருக்கிறேன். ஒவ்வொரு முறை தீட்சை பெற்ற நாள் வரும்போது கூப்பிடுவார்கள். சடங்குக்கு எல்லாம் நான் வரவில்லை. கும்பகோணத்துல போய் அழுக்குத் தண்ணியில மூழ்கிறாங்கல்ல அதுமாதிரி. மண்டை காய்ந்த, காலில் செருப்பு இல்லாத தலித் மக்கள் படிச்சவன் ஏதாவது செய்வான்னு நம்பி வருகிறார்கள். விடுதலைக்கான பணி நடக்கணும் என்ற ஆசையில் மக்கள் வர்றாங்க. பல வருசமாக போய்க்கிட்டு இருக்கேன்னு சொல்றது நல்லாவா இருக்கு.

இன்று பவுத்தத்தின் நிலைமை...?

பவுத்தத்தை மதமாக ஆக்கியதே பாப்பனர்கள்தான். பவுத்தம் சங்கமாக இருந்தது. பார்ப்பனர் அதை மதமாக்கினர். மொட்டையடித்து பவுத்த பிக்குவாக ஆக்கினர். உள்ளிலிருந்து அழிக்கிறது சுலபம். நான் புத்தரை விவேகானந்தர் மாதிரி கம்பீரமாக நிறுத்தனும்னு எல்லா ஓவியர்கிட்டேயும் கேட்டேன். ஓவியர் புகழேந்திக்கிட்டேயும் சொன்னேன். யாரும் வரையவில்லை. புத்தருக்கு கம்பீரமான உடல். அவரை எப்ப பார்த்தாலும் தியானத்துல இருக்கிற மாதிரி வரைந்து வைத்திருக்கிறார்கள். அவர் கொஞ்ச நேரந்தான் தியானம் பண்ணினார். மிகவும் கம்பீரமானவர். அவர் ஒரு great teacher.

இப்போது பவுத்தத்திற்கு, அதைப் பின்பற்றுபவர்கள் தடையாக இருக்கிறார்களா?

விரோதிகளாக இருக்கிறார்கள். பல வீடுகளில் தியான புத்தரை வச்சு பூசை பண்றாங்க. சென்னையில் ஒரு நண்பரிடம் விவேகானந்தர் மாதிரி புத்தரை நிறுத்தனும்ன்னு சொன்னேன். அவர் பதறிப்போய் அப்படியெல்லாம் செஞ்சிடாதிங்கய்யா. அவர் தியானமுல்ல பண்ணிக்கிட்டு இருந்தார்ன்னு சொல்றார். உங்களைவிட பவுத்தத்திற்கு துரோகி யாருமில்லைன்னு சொல்லிட்டு வந்தேன்.

இப்போது சமத்துவப் போராளிகள் அப்படின்னு ஒரு அரசியல் இயக்கம் தொடங்கியிருக்கிறீர்கள்?

நான் ஏதோ புரட்சிகர அமைப்பிலிருந்து உதிரியாக வெளிவந்துவிட்டேன் என்று மேசைப்போராளி ரத்தினம் அவர்களுக்குன்னு கடிதமெல்லாம் எழுதுறாங்க. எதையும் தெரிஞ்சுக்காமல் எழுதுறதுதான் இவங்களுடைய மனநோய். நான் என்ன பார்வையில இருக்கிறேன் என்பதைக் காட்ட வேண்டியுள்ளது. மார்க்சியம் தான் அடிப்படை. வர்க்கத்துக்குள் சாதியும் சாதிக்குள் வர்க்கமும் இருக்கு. இதை மார்க்சியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் சாதியத்தை ஒழிக்க தீவிர மக்கள் இயக்கம் வேண்டும். படிநிலைச் சாதியம் - உள்நாட்டு ஏகாதிபத்தியம், தீண்டாமை - சாதியப் பாசிசம் - இதனை அம்பேத்கர் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தார். ஆனால் தமிழ் அமைப்புகள் பல உதட்டுச் சேவைதானே செய்கின்றன. இதனை தெளிவுபடுத்தவே ‘சமத்துவப் போராளிகள்’ அமைப்பு அறிமுகப்படுத்தி உள்ளேன்.

அடித்தட்டு தலித் மக்கள் பாதிப்படைந்திருக்கிற பல்வேறு வழக்குகளில் வாதாடியிருக்கிறீர்கள். நீதிமன்றத்தின் செயல்பாடு எப்படியிருக்கிறது?

முதல்ல நீதிமன்றம் என்ற சொல்லே தவறானது. ‘வழக்கு மன்றம்’ அப்படின்னுதான் சொல்லணும். அவர்கள் நீதிபதிகளும் அல்ல. “Judical decision are lottery” என்று பகவதி ஒருமுறை சொன்னார். ஒரு ஜட்ஜ் ஒண்ணு சொல்றார். வேறொருவர் வேறுமாதிரி சொல்கிறார். எதுவுமே மக்கள் சார்பாக இல்லை. “நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன் போலிருக்கு. நீதிமன்றத்து மேல் மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்கிவிட்டேன்”, என்று ஓய்வு பெறும்போது கிருஷ்ணய்யர் வருத்தப்பட்டார். இது மாதிரியான போக்குதான் இருக்கு. அரசியல் சட்டத்தை தேவையான போது சடங்குக்காக பயன்படுத்து கிறார்கள்.

அடித்தட்டு மக்களுக்கு எதிராக உதாரணமாக இடஒதுக்கீடு போன்ற பிரச்சினைகளில் நீதிமன்றத்தின் செயல்பாடு, Judicial activism போன்றவற்றை எவ்விதம் அணுகுகிறீர்கள்?

வழக்கு மன்றம் என்பது ஒரு நிறுவனம். அதன் செயல்பாடு அந்த நிறுவனத்துக்குள் வரும் மனிதர்களைப் பொருத்தது. நமது சமூகம் சாதீயச் சமூகம் என்பதை முழுதாக புரிந்து கொண்ட அம்பேத்கர் எல்லா நாட்டு அரசியல் சட்டங்களையும் படிச்சு நம்ம அரசியல் சட்டத்தை நல்லாத்தான் எழுதியிருக்கிறார். தீர்ப்புகள் மோசமாக வரும்போது கமாவெல்லாம் போட்டு நல்லாத்தானே எழுதியிருக்கேன்னு வருத்தப்படுகிறார். இடஒதுக்கீட்டுக்கு அரசியல் சட்டத்துல இடம் இருக்கு. பார்ப்பனத்தனமானவர்கள் அதை மீறுகிறார்கள்; திரிக்கிறார்கள். சுப்ரீம் கோர்ட்டுக்கு மேலே ஒரு கோர்ட் இருந்தால் 2 சத தீர்ப்புகள் மட்டுமே உறுதி செய்யப்படும்ன்னு கிருஷ்ணய்யர் ஒருமுறை சொன்னார். எவ்வளவு அநியாயம் பாருங்க. 98 சத தீர்ப்புகள் மோசமாத்தான் இருக்குதுங்கிற சூழல் வேகமாக பரவிவருகிறது.

நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவுடைய தீர்ப்புகள் சில நன்றாக வந்திருப்பதாக தெரிகிறதே...?

அவருடைய தாத்தா freedom fighter ஆக இருந்தவர். நல்ல குடும்பம். நல்ல மனிதர். சில சமூக அநீதிகளைச் சாடி வருகிறார். சாதிமுறை மக்களைப் பிரித்து வைக்கிறது, சமூகத்திற்குக் கேடு செய்கிறது, வேகமாக சாதியை ஒழிக்க வேண்டும், இதற்கு சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும் என ஒரு தீர்ப்பில் எழுதியுள்ளார். ஆனாலும் சில அதிரடி போக்குகளையும் மேற்கொண்டுவிடுகிறார். கிருஷ்ணய்யர் மாதிரி mould பண்ணி தீர்ப்பு எழுத மிகப் பலருக்கு தெரியாது. அவருக்கிருந்த vast experience எல்லாருக்கும் இல்லைங்குகிறது ஒரு காரணம்.

நீதிபதி கண்ணதாசன் மீது புகார் மனு கொண்டு போயிருந்தோம். அப்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மார்கண்டேய கட்ஜு இருந்தார். நீதிபதி கண்ணதாசன் தலித் கொலைக்கேஸில் bail கொடுத்திருந்தது பற்றி எழுதியிருந்தோம். “Are you all Dalits?” என்று கேட்டார். “We are all peculicat combination”. எங்களுக்கு “No religion, no caste, no nation” அப்படின்னு சொன்னோம். “Very fantastic. I am also like you”ன்னார். தலித்துகள் fraud ஆக இருந்தாலும், ஆதரிப்பார்கள் என்ற ஒரு தப்பெண்ணம் இருக்கு. நீதிபதி கண்ணதாசன் பிரச்சினையில் அப்படி இல்லையென்று எடுத்துச் சொன்னோம்.

உங்களுடைய அனுபவத்தில் யாரை சிறந்த ஜட்ஜ் ஆக பார்க்கிறீர்கள்?

இதுவரைக்கும் கிருஷ்ணய்யர். அப்புறம் பகவதி, சின்னப்பரெட்டி போன்றோர். கே.ராமசாமி தலித் ஜட்ஜ். நல்ல மனிதர். தென்னாப்பிரிக்கா டர்பன் மாநாட்டுல கலந்து கொண்டார். கர்நாடகாவுல தலித் மற்றும் BC பகுதிக்கு நடுவில் குடிநீர் பைப் போடுறாங்க. அந்த திறப்பு விழாவுல தலித் மக்களும் வரிசையா குடத்தை வச்சிருக்காங்க. பஞ்சாயத்து தலைவர் நீங்க தீட்டுக்காரர்கள் குடத்தை எடுங்க என்று சொல்கிறார். அது தொடர்பான வழக்கு வரும்போது உயர்நீதிமன்றத்தில் சாட்சியம் சரியாக இல்லையென தள்ளுபடி செய்யப்படுகிறது. அதோட அப்பீல் சுப்ரீம் கோர்ட்ல வரும்போது நீதிபதி கே.ராமசாமி தலித்துகளின் Socioogy-ஐ கிருஷ்ணய்யர் மாதிரி அமெரிக்க கருப்பின அடிமையின் கவிதையை கோட் பண்ணி, “என் காலில் விலங்கு போட்டுவிட்டு சுதந்திர தின விழாவிற்கு அழைக்கிறாயே, உனக்கு வெட்கமாக இல்லை”, என்று தனது தீர்ப்பில் அழகாக குறிப்பிட்டு இருப்பார்.

லிபரான்னு ஒரு ஜட்ஜ் இருந்தார். அவர் ரூமுக்குள்ள ஒரு தடவை செருப்பை கழற்றி போட்டுட்டு உள்ளே போனேன். “You are entering comrade place” அப்படின்னு சொன்னார். மனைவியைக் கூப்பிட்டு, இவரால்தான் தமிழ்நாட்டுல தலித் மக்களுக்கு நிறைய கொடுமைகள் இருக்குன்னு தெரியும்” அப்படின்னு சொல்லி அறிமுகப்படுத்தி என்னை encourage பண்ணினார்.

கண்ணதாசன் ஜட்ஜ்க்கு எதிரான போராட்டங்கள் குறித்து...?

ஹெராயின் கேசுல 250 கிராம் மேலே இருந்தால் Bail கொடுக்கக் கூடாதுன்னு சட்டம் இருக்கு. இவர் 20 கிலோவுக்கு கூட பெயில் கொடுத்திருக்கார். அதோட மதிப்பு 20 கோடி. இவருக்கு 20 லட்சம் கொடுப்பார்கள். அது அவர்களுக்கு பெரிய தொகை இல்லை. இப்படியே 3 மாதத்துல 3, 4 கோடி சம்பாதிச்சார். அவருக்கு எதிராக நாங்கள் கொடுத்த புகாரில் மீண்டும் வழக்கறிஞர் தொழிலுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். நீதிபதி கற்பக விநாயகம், நீதிபதி கண்ணதாசனைப் பற்றிச் சொல்லும் போது “சட்டம் தெரியாமல் ஜாமீன் கொடுத்தார். வேறு குறை சொல்லமுடியாது.” என்றார். இதற்குப் பின் அவரை சந்திப்பதை முழுமையாக விட்டுவிட்டேன்.

தலித் மக்கள் முதுகில் குத்தும் நீதிபதிகளைக் குறித்து சொல்லுங்கள்.

நீதிபதி முகோபாத்தியாய மற்றும் நீதிபதி தனபாலன் ஆகியோர் அடங்கிய சென்னை உயர்நீதிமன்ற பெஞ்ச் முன்பு டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் காவல்துறையால் தாக்கப்பட்டது பொதுநல வழக்காக விசாரணைக்கு வந்தது. தாக்கப்பட்ட 29 பேரில் 23 பேர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்றும், தலித் மாணவர்கள் படிக்க அரசு போதுமான ஒத்துழைப்பைச் செய்வதில்லை என்றும் சொன்னேன். அப்போது முகோபாத்தியாய “Don’t bring caste factor, that is imaginary thoughts” என்றார். தலித் என்ற சொல் சாதியைக் குறிப்பது அல்ல. ஒடுக்கப் பட்டவர் எனும் பொருள் கொண்ட சொல் என்றேன். இவ்வளவுக்கும் தனபாலன் ஒரு தலித் ஜட்ஜ்.

இதே போல் பழைய அனுபவம் ஒன்று உள்ளது. கொத்தடிமைகளாக பிடித்து வைக்கப்படிருந்த தலித் மக்களை விடுதலை செய்ய போடப்பட்ட ஆள் கொணர்வு மனுவை விசாரித்த சிவப்பா பிற்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர். தங்கராசு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். நீதிபதி சிவப்பா “Dalits are fraud; Dalits are cheat” என்று Open Court லேயே சொல்லியிருந்தார். இதையும் சுட்டிக்காட்டினேன். நீதிபதிகள் இந்த வழக்கை தாங்கள் விசாரிக்க விருப்பமில்லை என்று எழுந்து சென்றுவிட்டனர். இந்த விஷயத்தை மூத்த நீதிபதி சதாசிவத்திடம் சொன்னபோது முகோபாத்தியாய மிகவும் நல்லவர் என்றும் தலித் என்ற சொல் நல்லதுதானே, அரிஜன் என்பதைவிட நல்ல சொல்லா யிற்றே! தற்போது தலித் என்ற சொல்லைத் தானே அதிகம் பயன்படுத்துகிறோம் என்றார். தலித்துகளை மோசடிப் பேர்வழிகள் என்று சொல்லிய நீதிபதிகள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பொது விசாரணை நடத்த குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பினோம். போஸ்டர் போட்டோம்; துண்டறிக்கை கொடுத்தோம்.

இந்த மாதிரியான பணிகளினால் உங்கள் மீது Contempt of Court எதுவும் வரவில்லையா?

“நீதித்துறையினரே! தலித் மக்கள் முதுகில் குத்துவதை நிறுத்துங்கள்!” என்று துண்டறிக்கை போட்டுருக்கோமே. எப்படி செய்வார்கள்? நிறைய விஷயங்கள் வெளியே வந்துவிடும். Contempt of Court போட்டுட்டு தப்ப முடியாது.

விருத்தாச்சலம் கண்ணகி - முருகேசன் கொலை வழக்கு பற்றியும் அதன் மூலம் அம்பலத்திற்கு வந்தவர்கள் பற்றியும்...?

கண்ணகி வன்னியர் பொண்ணு. துடுக்கான பொண்ணு. முருகேசன் தலித். பொறியியல் பட்டதாரி. இரண்டு பேரும் லவ் பண்ணி திருமணம் பதிவு பண்றாங்க. பொண்ணு வீட்ல தேடறாங்க. முருகேசன் ஊருக்கு வர்றார். அவரைக் கூப்பிட்டு கண்ணகி எங்கே என்று கேட்க, மறுக்கவும், NLC போட்ட 300 அடி போரில் தலைகீழாக கட்டிவைத்து சேந்துகிறார்கள். அப்போது முருகேசன் உண்மையைச் சொல்லிவிடுகிறார். 12 பேர் திரண்டு இருவரையும் அழைத்து வந்து மரத்தில் கட்டி வாயை இறுகக்கட்டிக் கொண்டதால், மூக்கு மற்றும் காதில் விஷயத்தை ஊற்றி கொலை செய்கிறார்கள். அப்போது முருகேசனின் சித்தப்பாவை மற்றொரு மரத்தில் கட்டி வைத்திருக் கிறார்கள். அவர் கண் முன்னாடிதான் இவ்வளவும் நிகழ்கிறது. இருவரது பிணத்தையும் தனித்தனியே எரிக்கிறார்கள்.

ஊரே பயந்து போய் கிடக்கு. முருகேசன் அப்பா மற்றும் உறவினர்களை 4, 5 நாட்கள் கழித்து அங்கிருக்கிற தலித் இளைஞர்கள் சென்னை கூட்டி வந்து பத்திரிக்கையாளர் கூட்டம் வைத்தனர். Local பத்திரிக்கைகள் மற்றும் நக்கீரன்ல படம் போட்டு செய்தி வந்தது. அப்ப நான் திருச்சியில தங்கியிருந்தேன். நக்கீரனைப் பாத்துட்டு எல்லாருக்கும் போன் பண்ணி நெய்வேலி துரைக்கண்ணுவுடன் காரில் முருகேசன் வீட்டுக்குப் போறோம். வழக்கு CBI விசாரணைக்கு வருகிறது. தமிழ்நாடு காவல்துறை தலித்துகள் 4 பேரை கொலைக்கேஸில் போட்டிருந்தனர். ஆனால் தற்போது சி.பி.அய். முருகேசனின் சித்தப்பா அய்யாசாமியை 4வது நபராக குற்றம் சாட்டப்பட்டோர் பட்டியலில் சேர்ந்துள்ளனர். மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த அய்யாசாமி கண்ணகியின் அண்ணன் மருது பாண்டியன் டம்ளரில் ஊற்றிக்கொடுத்த பூச்சிக் கொல்லி மருந்தை முருகேசனின் மூக்கு, வாய், காதில் ஊற்றி சாவுக்குக் காரணமாக இருந்தார் என CBI அதிகாரிகள் மோசடி செய்துள்ளனர். கொலை வழக்கு என்பதால் இருதரப்பும் சமரசம் ஆகிவிடும் என்பதற்காக இவ்வாறு செய்துள்ளனர்.

சொந்தக்கார பையன் சண்முகம் மூலமாக திருமாவளவனுக்கு போன் போட்டு முருகேசன் அப்பாக்கிட்ட பேச கொடுத்திருக்காங்க. அவர் நலம் விசாரிட்டு, “எதுக்கு வீண் பகை. செத்தவன் திரும்பியா வரப் போறான். பெரிய தொகை தர்றதா சொல்றாங்க. வாங்கிக்கிட்டு வழக்கை நிறுத்தி விடுங்கள்.” என்று சொல்லியிருக்கார். அவர்கள் மறுத்தவுடன் “ஒரு வேளை நீங்க தண்டனை வாங்கிக் கொடுத்திட்டீங்க என்றால் வன்னிய மக்கள் கொதிச்சுருவாங்க. உங்களுக்கு பாதுகாப்பு இல்லை”, என்று சொல்லியிருக்கார். “பையனே செத்துட்டான். நாங்க இருந்து என்ன பண்ணப்போறோம்” என்று முருகேசனின் அப்பாவும் அதற்கடுத்து சித்தப்பாவும் மறுக்க, மேலும் சிந்தனைச் செல்வனுக்கும் போன் போட்டுக்கொடுக்க அவரும் அதே கருத்தைச் சொல்லியிருக்கார்.

முருகேசனின் சித்தப்பா எனக்கு போன் பண்ணி, “எங்களை திருமாவளவன் சென்னைக்கு கூட்டிக்கிட்டு வரச் சொன்னான்னு சொல்லி ஒருத்தன் உட்கார்ந்திருக்கிறான். விரட்டிகிட்டு இருக்கிறோம்” என்று சொன்னார். அவனை விரட்டுங்கள் எங்கேயும் போக வேண்டாம்” என்று சொன்னேன். வி.சி. விவசாய அணியைச் சேர்ந்த கிட்டு என்கிற கிருஷ்ணமூர்த்தி என்னிடம் போனில் “வழக்கு சம்மந்தமாக அய்யா சாமியிடம் பேச, ஆள் அனுப்பி அழைத்து வர அனுப்பினேன். அவர்கள் வர மறுக்கிறார்கள். நீங்கள் சொன்னால் வருவார்கள்” என்றார். நான் “அவர் ளுக்கு வழக்கு சம்மந்தமாக எதுவும்தெரியாது. என்னோட செல்போன் எப்போதும் ஆனில் இருக்கும். மனசாட்சி உள்ளவர்கள் எப்போது வேண்டுமானாலும் என்னுடன் வழக்கு பற்றி பேசலாம்” என்றேன். இதை அப்படியே வி.சி. வழக்கறிஞர் அலெக்ஸிடமும் சொன்னேன். அவர் மிகவும் வருத்தப்பட்டார். பிறகு ஒரு துண்டறிக்கையும் போட்டோம்.

இந்த நிகழ்வுக்குப்பின் முருகேசனின் ஊருக்கு உண்மை அறியும் குழு சென்றதே...?

மக்கள் சில விஷயங்களை நேரடியாக சொல்ல யோசித்தார்கள். பேரா. அய். இளங்கோவன், கோ. சுகுமாறன், வழக்கறிஞர்கள் லூசி, செபாஸ்டியன், ரஜினிகாந்த், மங்கம்மாள், செங்கொடி, ‘புதுவிசை’ ஆதவன் தீட்சண்யா, மூர்த்தி மற்றும் பலருடன் 17.02.2007 குப்பநத்தத்திற்கு உண்மை அறியும் குழு சென்றது. மாட்டுக்கறி போட்டு சாப்பிட்டுவிட்டு அவர்களிடம் பேசினோம். திருமாவளவன், சிந்தனைச் செல்வன் ஆகியோர் சண்முகம் மூலம் செல்போனில் பேசியதை உறுதி செய்தனர். அதுல கசப்பான அனுபவம் என்னன்னா ‘புதுவிசை’யில ஆதவன் தீட்சண்யா, நான் உள்பட பலரின் வாக்குமூலமாக வடிவமைக்கப்பட்ட கட்டுரையில் நாங்க சொல்லாததை எல்லாம் சொன்னமாதிரி எழுதிட்டார். வழக்கை காப்பத்துறதுக்கு நாங்க கர்ணம் போட்டுக்கிட்டு இருக்கோம். வழக்கின் பின்னணியை அறியாமல் அவர் செயல்பட்டிருக்கிறார். அவர் என்னிடம் பேசியிருந்தால் உண்மை அறியும் குழுவின் அறிக்கையை குழுவினருடன் விவாதித்து வெளியிட்டு இருக்க முடியும். அதை விட்டுவிட்டு கம்பராமாயணம் மாதிரி கண்டதையெல்லாம் எழுதிவிடலாமா?

‘புதுவிசை’யை அடிப்படையாக வச்சு ‘புதிய ஜனநாயக’த்துல 2 பக்கம் எழுதியிருந்தார்கள். இது எவ்வளவு அபத்தம் பாருங்க. வழக்கறிஞர் இராஜு ‘புதிய ஜனநாயக’த்தின் தோழர் ஒருவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். வழக்கு பற்றி கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டார். நேரடியாக தகவல் திரட்டி வெளியிட வாய்ப்புகள் இருந்தும், ‘புதுவிசை’யை ஆதாரமாகக் கொண்டு எழுதியிருப்பதை என்ன சொல்வது? இதற்கு 4 பக்க கடிதம் ஒன்றை மறுப்பாக எழுதினேன். ‘புதிய ஜனநாயகம்’ வெளியிடவில்லை.

இந்த வழக்கில் பலர் அம்பலப்பட்டு போவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதே?

இரத்தினம்: இன்னும் நிறைய இருக்கு. சமீபத்தில் காலமான தோழர் புலவர் கலியபெருமாளின் மகன் வள்ளுவன் என்னிடம் மூன்றுமுறை செல்போனில் பேசினார். திருச்சியில இருக்கும்போது ஒருமுறை பேசினார். அப்பாவின் புத்தகம், மற்றும் உடல் நலம் பற்றி பேசிவிட்டு, முருகேசன் - கண்ணகி வழக்கு நடந்து தண்டனை ஆனா குடும்பமெல்லாம் சிதறிப்போய்டும். அதை கொஞ்சம் சமாதானம் பண்ணுங்க.. அப்படின்னார். அப்போது திருச்சியில் என்னிடம் பேசிக் கொண்டிருந்த சந்திரபோஸ், வடிவேல்ராவணன், பெரியசாமி போன்றோரிடம் சொன்னேன். மறுமுறை என்னிடம் சமாதானம் பேசவேண்டும் என்றபோது நான் மாமா வேலை பார்ப்பதில்லை என்று கடுமை யாகவே பேசினேன்.

உங்க குடும்பம் புரட்சின்னு சொல்லி ஜெயில் உள்ள இருந்து பட்டபாடு எனக்குத் தெரியும். நான் மறக்கமாட்டேன். இப்ப நீங்க படையாச்சியா பேசுறீங்க. தோழர்ன்னு சொல்லாமல் இரத்தினம்ன்னு பேரைச் சொல்லுங்க. தோழர்ங்கிற வார்த்தைக்கெல்லாம் ஒரு வரலாறு உண்டு என்று சொன்னேன். இல்ல தோழமையோடத்தான் பேசுறேன்னார். எவ்வளவு சாதீயக் கொடூரம் நடந்துருக்கு. எனக்கு உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. பேசாமல் ஒதுங்கியாவது இருக்கலாம். அதைவிட்டு குடும்பம் சிதறிப்போகும் என்பது எவ்வளவு கொடூரமானது என்று சொல்லிட்டு போனை கட் பண்ணிடாதீங்கன்னு சொல்லி “CBI தலித் மக்களோட Statements எல்லாம் தமிழ்ல எழுதாமல் நேரடியாக ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள். நீதிபதி “வக்கீலுக்கு தமிழும் ஆங்கிலமும் தெரியும்”ன்னு சொல்றார். தமிழ்தான் கீழ்கோர்ட்களின் மொழி. எனவே, தமிழ் படுத்தனுன்னு சொல்லி முதன்முதலா உயர்நீதி மன்றத்தில் உத்தரவு வாங்கியிருக்கோம். தமிழ் பாதுகாப்பு இயக்கம் வச்சிருக்கீங்க. இதையாவது செய்யலாமே”, என்று கேட்டபோது சிரித்துக் கொண்டார்.

“மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” என்ற புலவர் கலியபெருமாள் புத்தகத்துல வன்னியர் சங்கத் தலைவர் முன்னுரை எழுதியிருக்கார். ஜூனியர் விகடன் அட்டைப்படத்தைப் போட்டு வீரப்பன் என் தலைவர்ன்னு எழுதுகிறார். இவங்களெல்லாம் மார்க்சியம் பேசுறாங்க. SVR இதில் ஏன் எழுதுனார்ன்னு தெரியல.

மேலவளவு முருகேசன் கேசு சுப்ரீம் கோர்ட்ல இருக்கு. அதோட நிலைமை என்ன?

அந்த வழக்கைக் கெடுப்பதற்கு நீதிபதிகள் சிலர் பண்ணின சேட்டைகள் பல. நான் பல நாட்கள் தூங்கியிருக்கவே மாட்டேன். அரசு சிறப்பு வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் கண்ணபிரானை நியமிக்க காலதாமதம் செய்தனர். விசாரணை நீதிமன்றம் 17 பேருக்கு ஆயுள் தண்டனை அளித்து மற்ற 23 பேரையும் விடுதலை செய்தது. 23 பேர் சம்மந்தமாக, சதி பற்றியும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989ன் கீழ் போதுமான சாட்சியத்தின் மூலம் அரசு நிரூபிக்க வில்லை என்று சொல்லியது. 17 பேரும் மேல்முறையீடு செய்தனர். அரசு தரப்பு மேல்முறையீடு செய்யவில்லை. உயர்நீதிமன்றத்தில் 17 பேர் மீதான ஆயுள் தண்டனையை உறுதி செய்தும், 23 பேர் மீது போதுமான சாட்சியங்கள் உள்ளன என்றும் அவர்களை விடுதலை செய்தது சரியல்ல என்றும் அரசுத் தரப்பு அப்பீல் செய்யாததால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை என தீர்ப்பு. இந்த நேரத்தில்தான் பெஸ்ட் பேக்கரி தீர்ப்பும் வருது. வழக்கு இப்போது உச்சநீதிமன்றத்தில் இருக்கு. இன்னும் நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளது.

இறுதியாக, தமிழகத்தில் தலித் இயக்கங்களிடையே ஒற்றுமையை எவ்வாறு ஏற்படுத்துவது?

தமிழ்நாட்டைவிட மகாராஷ்டிராவில் தலித் இயக்கங்களின் போக்கு மோசமாகவே உள்ளது. இயக்கம் கட்டுவோர் எல்லோரிடமும் நியாயமாக இருக்க வேண்டும். சட்டப்படி நடக்க வேண்டும். அப்பத்தான் மக்களின் மதிப்பைப் பெற முடியும். பள்ளர் பள்ளராகவும் பறையர் பறையராகவும், அருந்ததியர், அருந்ததியராகவும் இருக்கிறார்கள். படித்தவர்கள் இப்படி இருப்பது ரொம்பக் கொடூரமாக இருக்கு. ஆனா, பாமர மக்கள் நல்லா இருக்காங்க. அவங்களுக்கு வழி காட்டுவோர் தான் சரியாக இல்லை. “தலித் இளைஞர்களை சிலரை படிக்க வைத்து, பதவி பெற்றுத்தந்தேன். அவர்கள் தம் மக்கள் நலனில் அக்கறை இல்லாது சுகவாசிகளாக இருக்கிறார்களே” என்று அம்பேத்கர் தனது இறுதி காலத்தில் தேம்பி அழுத வரலாறு இன்னமும் தொடர்கிறது.

தமிழகத்தில் இனிவரும் நாட்களில் உருவாகக் கூடிய தலித் குழுக்கள் இடதுசாரி தத்துவத்தை உள்வாக்க முடியும். இனிவரும் இடதுசாரி குழுக்களும் தலித் மக்களை புரட்சிகரமான சக்தி என புரிந்து கொள்ள முடியும். இவற்றின் இணைந்த தோழமையில் தான் சமூக மாற்றத்திற்கான இயக்கப்பணிகள் பரவலாக்க முடியும். தனித்து தலித் அமைப்பு என்பது கட்டப் பஞ்சாயத்து கும்பலாகவும், ரசிகர் மன்ற எடுபிடிகளுமாகவே தலித் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடியும். வர்க்கத்துக்குள் சாதியமும், சாதியத்தில் வர்க்கமும் இந்தியச் சூழலில் பின்னிப் பிணைந்திருப்பதை உணரும் இளைஞர்கள் சமூக மாற்றத்திற்கான, தலித் விடுதலைக்கான உந்து சக்திகளாகி விடுவார்கள். இது மிகவும் சாத்தியமே. நம்பிக்கைத் தளர்வின்றி முன்னோக்கிச் செல்வோம்.

Pin It