லிபியா மீது அமெரிக்க நேச நாட்டு படைகள் தொடர்ந்து விமான தாக்குதல் நடத்தி வருகின்றன. ஏவுகணைகளும் வீசப்படுகின்றன. தலைநகரம் திரிபோலியில் உள்ள கடாபி மாளிகை மீது தக்குதல் நடத்தி அதை தரை மட்டமாக்கியுள்ளனர். பயந்து பதுங்கி விட்டதாக கூறப்பட்ட அதிபர் கடாபி தொலைக்காட்சியில் தோன்றி பேசினார். அப்போது, "நாம் மரணித்தாலும் மரணிப் போமேயன்றி ஒருபோதும் சரணடைய மாட்டோம். எங்கள் நாட்டின் மீது பறந்து செல்லும் ஏவுகணைகளை கண்டு நாங்கள் பயப்படவில்லை. இதை வாண வேடிக்கையாக கருதி மகிழ்ச்சி அடைகிறோம்.  குறுகிய காலம் ஆனாலும் சரி, நீண்ட காலம் ஆனாலும் சரி, போரில் நாங்கள்தான் வெற்றி பெறு வோம்'' என்றெல்லாம் நெஞ்சுரத்தோடு பேசினார்.

இதற்கிடையில் லிபியா மீதான அமெரிக்காவின் அத்துமீறல் தாக்குதலுக்கு உலகெங்கிலும் கண்டன குரல்கள் எழுகின்றன. இரானின் சுப்ரீம் தலைவரான ஆயத்துல்லாஹ் அலிகமேனி, ''பொது மக்களுடனான கடாபியின் அணுகுமுறையை நாங்கள் கண்டிக்கிறோம். அதே நேரத்தில் அமெரிக்காவின் அத்துமீறல் தாக்குதலை நூறு சதவிகிதம் கண்டிக்கிறோம் என்று கூறியுள்ளார். லிபியா மீதான தாக்குதலை கண்டித்து பிலிப்பைன் நாட்டில் பெருமளவு மக்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது.

இதில் 'தீவிரவாதி' என எழுதப்பட்டிருந்த அமெரிக்க நாட்டு கொடியும் கொளுத்தப்பட்டது. இதேபோல துருக்கி# இத்தாலி நாடுகளிலும் கண்டன போராட்டங்கள் நடந்துள்ளன.

மேலும், லிபியா மீதான தாக்குதலுக்கு பாதை அமைத்து தந்த ஐ.நா பொதுச்செயலாளர் முற்றுகையிடப்பட்டார். எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் அரபு லீக் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு, வெளியேறிய ஐ.நா பொதுச்செயலாளர் பான்கிமூனை மக்கள் சூழ்ந்து கொண்டு 'கேரோ' செய்ய முற்பட்டனர்.

அவரது பாதுகாப்பு அதிகாரிகள் அவரை சூழ்ந்து கொண்டு பாதுகாப்பாக அழைத்து சென்றனர். தனது எண்ணத்திற்கு மாற்றமாக எழுந்துள்ள எதிர்ப்பலைகள் நாடு பிடிக்கும் கொள்கையுடைய அமெரிக்காவுக்கு அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன.

Pin It