ஒபாமா

ஒரு பொம்மை என்பதை

அறியாமல்

ஒபாமா காலணி விற்கிறார்களாம்

ஒபாமா

ஒரு காலணி என்பதை

அறியாமல்

கருப்பினமக்களின் கண்ணீரை

கர்த்தர் ஒபாமா துடைப்பாராம்

சக கருப்பின மக்களின்

கண்ணீரைச் சாறெடுத்து

காசாக்கப் போகிறவன்

அவன் தானென்பதை

அறியாமல்

இந்த நூற்றாண்டின்

நம்பிக்கை நட்சத்திரம் அவன்தானென

அடித்துச் சொல்கிறார்கள்

நம்பிக்கையிழந்த கருப்பின மக்களை

நம்ப வைப்பதற்கென

அதிகாரவர்க்கம் செய்த

வெறும் சுவர்ச்சித்திரம்தான்

அவனென்பதை அறியாமல்

உலகத்தின் எந்த மூலையிலும்

கண்மூடித் திறப்பதற்குள்

உண்மையான தலைவர்கள்

உருவாகி விடுவதில்லை

 ஒரு விடுதலைப் போராட்டமேனும்

தொடங்காமல்

ஒருநாளேனும் சிறைச்சாலையில்

வாடாமல்

ஒருதுளி இரத்தமேனும்

சிந்தாமல்

 ஆட்சிக்கு வருபவன் எவனாயினும்

அவன் ஏமாற்றுக்காரனே

கைப்பாவையே

கைக்கூலியே

ஞாபகம் இருக்கட்டும்

மார்டின் லூதருக்கும், ஒபாமாவிற்கும்

நிறம் ஒன்றுதான்

ஆனால்

குணம் வேறு

மனம் வேறு

- உக்கிரன் சே குவாரா

 

Pin It