கடந்த ஒரு மாதத்தில் ஞாநி அவர்களின் நிகழ்ச்சி குறித்த விசாரிப்புகள், வினவுகள், வசவுகள் என மெயிலிலும், தொலைபேசியிலும் நிறைய 'தோழர்கள்' தொடர்புகொண்டார்கள். இப்போது தான் சற்று ஓய்ந்தது. வேலை நிமித்தமாக பெங்களுரு வந்த ஒரு வருடத்தில் இத்தனை நண்பர்களை சந்திக்க முடிந்தது மகிழ்ச்சியாக இருந்தாலும், சில தூய முகங்களுக்கு நடுவே சில துரோக முகங்களையும்(தமிழ் சங்கம்) பார்க்க நேர்ந்தது வருத்தமாக இருந்தது. மிக இக்கட்டான சூழலில் உதவிக்கரம் நீட்டிய திருவள்ளுவர் நற்பணி இயக்க தலைவர், திரு. தேனிரா உதயகுமார் அவர்களுக்கும், தோளோடு தோள் நின்று உதவிய நண்பர் சதீஷ் முத்து கோபால் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்ள என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். 

எல்லோரையும்  விடவும் என்னை ஆச்சரியப்படுத்தும் விதமாக சந்திராயன் திட்ட குழுத்தலைவர், திரு.மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் வருகை தந்தது உவகையின் உச்சம் என சொல்லலாம். தன்னை இறுக்கிப்பிடித்திருக்கும் நேரத்தை ஒரு எழுத்தாளனுக்காக தளர்த்திவிட்டு  வந்தது அவர் இந்த சமுகத்தின் மேல் வைத்திருக்கும் அக்கறையையும் ஒரு எழுத்தாளனுக்கு செய்ய வேண்டிய மரியாதையையும்  உணரமுடிந்தது. அதிலும் குறிப்பாக ஒரு விஞ்ஞானியின் சமுக அக்கறை என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நம்மால் ஊகிக்கமுடிகிறது.  

நிகழ்வு நடக்கவிருந்த முதல் நாளில், கீற்று இணையதளத்தில் மே 17 இயக்கம் வெளியிட்டிருந்த அறிக்கையை எதேச்சையாக பார்க்க நேர்ந்தது. (நிறைய பேருக்கு மே 17 இயக்கம் பற்றி தெரிந்திருக்கவில்லை. மே 17, 2009 முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றப்பட்ட படுகொலை கொடூரங்களுக்கு நியாயம் கேட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து லாப நோக்கற்று செயல்பட்டு கொண்டிருக்கும் நேர்மையான இயக்கம்.)  

முன்கதை சுருக்கம்:-

இலங்கையில் நடைபெற இருந்த IIFA விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடாது என்று தமிழ் உணர்வாளர்கள் போராட்டம் நடத்தியது அனைவரும் அறிந்ததே. சிறப்புத் தூதுவர்கள் அமிதாப் பச்சன் வீட்டின் முன் நாம் தமிழர் இயக்கமும், கமல்ஹாசன் வீட்டின் முன் மே 17 இயக்கமும் போராட்டம் நடத்தினார்கள். அதன் விளைவாக கமல்ஹாசன் (அமிதாப் பச்சனும்) கலந்து கொள்வதில்லை என்று அறிக்கையும் வெளியிட்டார்.

அதே வார 'ஓ' - பக்கங்களில் ஞாநி அவர்கள், கமல்ஹாசன் அவ்வாறு செய்திருக்கக் கூடாது என்றும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கவேண்டும் என்றும், அதற்கான காரணத்தையும் எழுதியிருந்தார். சிங்களருக்கும், தமிழருக்கும் உள்ள அரசியல் பிரச்சனைகளை தாண்டி அங்கிருக்கும் மிக சாதாரண கடைகோடி சிங்களருக்கும், சாமானிய தமிழருக்கும் உறவு மேம்பட வேண்டும் என்றும், அதற்கான இடைவெளியை இட்டு நிரப்பும் பொறுப்பு கலைஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தான் இருக்கிறது. ஆகவே கமல் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எழுதியிருந்தார்.

(துணுக்கு செய்தி: IIFA வில் கலந்துகொண்டு ஆடிப் பாடி விருந்துண்டு வந்த விவேக் ஓபராய், அசினின் படங்கள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் தமிழகத்தில் ஓடியதை மானமுள்ள தமிழர்கள் சூர்யா, விஜய் பொருட்டு மன்னித்து விடலாம் என்று சீமான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. யூ டூ சீமான்?).

ஞாநியின் இந்தக் கருத்தில் உடன்படாத மே 17 இயக்கம் அவரை எதிர்த்து விவாதத்திற்கு அழைத்தது. அதைத் தொடர்ந்து ஏற்பாடு செய்திருந்த பெங்களுரு கூட்டத்தை எதிர்த்து "ஞாநி அவர்களே அரங்கை விட்டு வெளியேறுங்கள்" என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டது. தொடர்பு சுட்டி கீழே...

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12885:2011-02-09-13-20-29&catid=1:articles&Itemid=264

அதை தொடர்ந்து நான் அவர்களுக்கு அளித்த பின்னூட்டம் கீழ் வருமாறு... 

வணக்கம், நான் திரு... ஞாநி சந்திப்பை ஏற்பாடு செய்தவன்.... உங்கள் கோரிக்கை நியாயமானதே.... நடக்கவிருப்பது விவாதக் கூட்டம் தான்.... இந்த கலந்துரையாடலில் நீங்களோ அல்லது உங்கள் பிரதிநிதிகளோ கலந்து கொண்டு உங்கள் தார்மீகக் கேள்விகளை எழுப்புங்கள்.... அறிவு தளத்தில் நடக்கும் இந்த கொள்கை மோதல்கள் ஆரோக்கியமானதாகவும்... மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் இந்த விவாதம் பயன்படட்டும்... அதைவிட்டுவிட்டு வெளியேறுங்கள் என்ற வெற்று கோஷங்கள் அவசியமற்றது.... நானும் ஈழ ஆதரவாளன் தான்.... இன்னும் சொல்ல போனால் ஈழ பிரச்சனையில் அவரிடம் மாற்று கருத்து வேண்டி அவருக்கு நான் கொடுக்க இருக்கும் நினைவு பரிசு இயக்குனர் ஜானின் 'ஆணிவேர்' திரைப்படத்தை தான்..... நேரடியாகவே தமிழ் மக்களுக்கு துரோகங்கள் செய்துகொண்டிருப்போரிடம் காட்ட வேண்டிய எதிர்ப்புகளுக்கும்... கொள்கை அளவில் மாற்று கருத்து கொண்டிருப்போரிடம் காட்ட வேண்டிய தார்மிக எதிர்ப்புக்கும் வித்தியாசம் இருக்கிறது... புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.... வாருங்கள் உட்கார்ந்து பேசுவோம்.... இப்படிக்கு... திரு

பின் மே 17 இயக்கத்தின் செயற்பாட்டாளர் திரு. திருமுருகன் காந்தியைத் தொடர்பு கொண்டு பேசினேன். மனிதர் பொரிந்து தள்ளினார். கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு சில அவதூறுகளை உதிர்த்தாலும், நல்ல விஷயத்திற்கான ஆரோக்கியமான அவரின் போராட்ட குணத்தை என்னால் உணர முடிந்தது. நான் ஞாநியின் வாசகனாகவும் மாணவனாகவும் கேட்க இருந்ததை, அவர் எதிரியாகப் பாவித்து தவறாக புனைந்து கேட்டது தான் பிரச்னை.

அரங்கிற்கு மே 17 இயக்கத்தினர் 10 பேர் வந்திருந்தனர். அறிக்கையைப் படித்ததிலும் திருமுருகன் அவர்களிடம் பேசியதிலும் பதட்டமாக இருந்தாலும், வந்திருந்தவர்கள் நாகரிகத்தோடு விவாதித்தார்கள் என்பதை நான் சொல்லியாக வேண்டும்.

ஞாநியின் பதில் அறிக்கை பின் வருமாறு...

என் கருத்துகளை நான் என் கட்டுரைகளில் பொது தளமான பத்திரிகைகள் வாயிலாக வெளிப்படுத்துகிறேன். அவற்றுடன் உடன்படவும்முரண்படவும் அனைவருக்கும் உள்ள உரிமைகளை நான் மதிக்கிறேன். என் கருத்துகளுக்கு மாற்றுக் கருத்துகளைக்கொண்டிருப்பவர்கள் அவற்றை அவர்களுக்கு உகந்த பொது தளங்களில் வைக்கலாம்.வைப்பது அவர்கள் உரிமையும் பொறுப்பும் ஆகும். எல்லா கருத்துகளையும் பரிசீலித்து முடிவுக்கு வருவது பொது மக்களின் உரிமை. நான் என்னுடன் முரண்படுகிறோம் என்று அறிவிப்பவர்களுடன் நேரடி விவாதங்களில் ஈடுபடுவதில்லை. அவர்கள் அவர்களுடைய நிலையிலும் நான் என்னுடைய நிலையிலும் உறுதியாக இருக்கும்போது இந்த விவாதத்தில் அர்த்தமில்லை. என் கூட்டங்களை வேறொருவருக்கான மேடையாகவோ, இன்னொருவர் மேடையை என்னுடைய மேடையாகவோ நான் ஆக்கிக் கொள்ள விரும்புவதில்லை. இரு தரப்பு கருத்துகளும் அவரவர் முயற்சியில் மக்களிடையே செல்கின்றன. மக்கள் தமக்கு உகந்தவைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். கடந்த 35 வருடங்களாக இதே அடிப்படையுடன்தான் நான் இயங்கி வருகிறேன். தமிழ்ச் சமூகத்தில் வாழ்வியலிலும், சமூக நீதியிலும், மானுட சமத்துவத்திலும் நேயத்திலும் என் பார்வைகள் என்னவென்பதை 35 ஆண்டுகளாக திறந்த புத்தகமாக இருந்து வரும் என் வாழ்க்கையும் எழுத்தும் அறிந்தவர்களுக்குத் தெரியும். ஈழத் தமிழர்களுக்கான அரசியல் சமத்துவத்தையும் சம உரிமையையும் நான் எப்போதும் ஆதரித்தே வந்திருக்கிறேன். எனவே அவதூறுகள், முத்திரை குத்துதல்களை நான் பொருட்படுத்துவதில்லை. தகவல் பிழைகள் இருக்கும்போது மட்டுமே சில தருணங்களில் அவற்றை திருத்த கருத்து தெரிவித்திருக்கிறேன். மற்றபடி என்னை ஏற்பதும் நிராகரிப்பதும் அவரவர் விருப்பம். இதற்கு மேல் சொல்ல ஏதுமில்லை. ஞாநி. 

மறுநாள் முழுவதும் ஞாநி அவர்களோடு தான் இருந்தேன். வாழ்நாளின் சில மறக்கமுடியாத நாட்களில் இதுவும் ஒன்று. சிறுவயதில் இருந்து அதிசயித்து பார்த்து படித்து வந்தவருடன் பழகுவது என்பது பேறுவகையாக இருந்தது. அவரோடு மதிய உணவு உண்டு (அவரின் உடன்பிறப்பு உருளைக்கிழங்கோடு) அளவளாவியது என்றும் நினைவில் இருக்க கூடியது. தமிழ்நாட்டு எழுத்தாளர்களில் தீவிர சமுக பொறுப்பும், நேரடி சமுக தொடர்பும் கொண்ட ஒருவரோடு பேசிகொண்டிருக்கிறேன் என்பதை பேச்சுவாக்கில் நடுநடுவே தொலைபேசிகளில் பல பத்திரிக்கைகள் அவருடைய கருத்துகளைக் கேட்டு அறிந்து கொண்டிருந்ததில் உணர முடிந்தது. ஆனந்த விகடனை வாங்கியவுடன் சூடு பறக்க 'ஒ' - பக்கங்களை படிக்கவில்லை என்றால் அந்த வாரம் எதையோ பறிகொடுத்தது போலவே இருக்கும். அப்படி வியந்த ஓர் ஆளுமையோடு சாவகாசமாக அமர்ந்து, உண்டு, ஊர் சுற்றிப் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பெடுத்து வைத்த எந்தக் கேள்விகளையும் கேட்க மனம் விரும்பவில்லை. இன்னொரு சந்தர்ப்பத்தில் பின்னொரு கூட்டத்தில் கேட்டுக்கொள்ளலாம் என விட்டுவிட்டேன். ஆனால் அவர் தொடர்ந்து நிறைய விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அவரின் ஈழ அனுபவங்களை பற்றியும் நிறைய பகிர்ந்துகொண்டார். 

பலரின் அவசர பார்வையிலும், உணர்ச்சிப் பார்வையிலும் பழக்கப்பட்ட ஈழப் பிரச்னையில் இவரின் நிதான பார்வையை மனம் ஏற்க தயங்கினாலும் பரிசீலிக்க வேண்டிய தேவையின் பொறுப்பை நான் உணருகிறேன்.  நிராகரிப்பது அவரவர் உரிமை. 

ஞாநி அவர்களை  என் இவர்கள் தவறாக புரிந்துகொண்டார்கள்? ஈழ ஆதரவுப் போக்கை கைவிட்டுவிட்டதாலா...? ஞாநியை ஏன் இவர்கள் எதிர்க்கவேண்டும், திருமுருகன் காந்தி அவர்கள் என்னிடம் கூறியதில் முக்கியமான இரண்டு விஷயங்கள் -  அவர் மக்களை திசை திருப்புகிறார்... இளைஞர்களை மூளைச்சலவை(brain wash) செய்கிறார்... இவர் முற்றிலும் எதிர்க்கப்படவேண்டியவர் என்றார்..

இது ஒரு புறம் இருக்க, அரசியல் ஆதாயமோ, பதவி ஆசையோ, எதுவுமே தேவைப்படாத ஒருவர்- இப்படி செய்வதனால் அவருக்கு என்ன லாபம் வந்துவிடப் போகிறது? அவரின் புலி எதிர்ப்பு நிலைபாட்டாலும், தனிநாடு கோரிக்கையின் காலத்திற்கேற்ற  மாற்று கருத்துக்களாலும் மட்டுமே அவரை எதிர்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர் எந்த சூழ்நிலையிலும் அங்கிருக்கும் மக்களுக்கான சம உரிமையிலும், சமத்துவத்திலும் சமரசம் செய்துகொண்டதே இல்லை.

ஒரு காலத்தில் கோலோச்சிய புலிகளுக்காகவும், இனிமேல் வரபோகும் தனி நாடுக்காகவும் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். இலங்கைக்கான பொருளாதார நெருக்கடி, ராஜபக்சேவிற்கு தூக்கு தண்டனை, மக்களுக்கான நியாயம் எல்லாவற்றையும் தாண்டி, இப்போது இந்த நிமிடம் அங்கே வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்கு எது உடனடி தேவை என்பதில் அவர் தீர்க்கமாக இருக்கிறார். அந்த மக்களின் தற்கால தேவையான நிம்மதிக்கும் சமத்துவத்துக்கும் நம்மிடம் இருக்கும் வழிமுறை என்ன...? 

வலைப்பக்கம் ஆரம்பித்து தொடர்ந்து ஒன்றரை வருடங்களாக ஈழ வேதனைகளை கவிதைகளாக மொழிபெயர்த்துக் கொண்டிருந்தேன். எல்லோரும் ஈழத்தை அரசியலாக்கி கொண்டிருக்க, நான் கவிதையாக்கி கொண்டிருந்தேன் என்ற குற்ற உணர்ச்சியில் அதன் பிறகு அம்மாதிரி கவிதைகளை எழுத தவிர்த்துவிட்டேன் (ஈழம்). ஈழத்திலிருந்து சமீபமாக வெளியேறி ஐரோப்பாவில் அடைக்கலம் புகுந்த  ஒரு ஈழ நண்பர் ஆன்லைன்  சாட்டிங்கில் என்னிடம் உரையாடினார், பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்ற பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு அவர் என்னிடம் கூறியது இது தான், "ஈழமும் வேணாம்... ஒரு எழவும் வேணாம்... எங்க எல்லாரையும் சாகடிசுட்டு யாருக்காக ஈழத்த கட்டமைக்கப் போறீங்க... நீங்க வாழற நிம்மதியான வாழ்க்கைய மட்டும் கொடுங்க போதும்.... அதை விட்டு விட்டு எங்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என்றார்." இவரும் உங்கள் பார்வைக்கு துரோகியாகத் தெரிவாரோ என்று பயமாக இருக்கிறது...

நாம் எல்லோரும் சர்வசாதாரணமாக வாழ்ந்துகொண்டிருக்கும் சராசரி வாழ்க்கையை தன்னால் வாழமுடியவில்லை என்ற ஆதங்கத்தில் கதறிக்கொண்டிருக்கும் எண்ணற்ற தமிழர்களுக்கு நம்மிடம் இருக்கும் தீர்வுகள் என்ன?... புலி ஆதரவு மற்றும் தனி நாடு கோரிக்கை என்று அங்கேயே தேங்கிவிட்டோமா...? அந்த மக்களின் நல்லிணக்கத்தை வளர்க்கவும், அமைதி வாழ்க்கைக்கு வித்திடவும் கலைஞர்களாலும், எழுத்தாளர்களாலும் மட்டும் தான் முடியும் என்று ஞாநி சொன்னது எந்த விதத்தில் துரோகம் என்று எனக்கு சத்தியமாகப் புரியவில்லை... ஈழம் தொடர்பான கருத்துகளை ஒரு சாரார் மட்டுமே முன்மொழியவும், அதை மட்டுமே தொடர்ந்து வழிமொழியவும் ஒரு நிர்பந்தம் இங்கே ஏற்பட்டிருப்பதை பார்த்தால், இந்த பிரச்னையை  நாம் எப்படி உலக அளவில் கொண்டு செல்லப்போகிறோம் என்ற அச்ச உணர்வுதான் மேலெழுகிறதே அன்றி, ஞாநி அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் எண்ணமோ, அதற்கான அவசியமோ துளியும் எனக்கு கிடையாது.  

80களில் உருவான ஈழ ஆதரவு அலை, பிறகு பல்வேறு அரசியல் சூழல்களால் பஸ்பமானது, ஆனால் அதைப் போன்ற ஒரு பெரும் ஈழ ஆதரவு கோஷம் 2008 - 2009 ம் ஆண்டுகளில் தமிழகத்தில் இரண்டாவது முறையாக வந்தது என்று கூறுவார்கள்.

அதிலும் குறிப்பாக முத்துகுமாரின் தியாகத்திற்குப் பிறகு மாணவர்கள் நடத்திய ஊர்வலங்களையும், பேரணிகளையும் மழுங்கடித்து மூளைச்சலவை செய்து, அரசியல் சாயம் பூசி வேதனையில் ஆழ்த்திய திருமாவளவனை எதிர்த்து எத்தனை ஈழ ஆதரவு இயக்கங்கள் போராட்டம் நடத்தியிருக்கிறது?

முத்துகுமாரின் விருப்பப்படி அவரின் உடலை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி போராட்டம் நடத்திய மாணவர்களை அடித்து உதைத்து மிரட்டி அப்புறப்படுத்திய திருமாவளவனின் முகத்திரையை 'கற்றது தமிழ்' இயக்குனர் ராம் தனது காட்சி வலைப்பதிவில் நேரடி சாட்சியமாக விவரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.(நீங்கள் அறியாததா திருமுருகன்?). 

ஞாநியை தமிழ்நாட்டு அறிவுஜீவியாக ஏற்றுக்கொள்ள தயாராக  இல்லாதவர்கள், திருமாவளவனை தமிழ்நாட்டு சே குவேராவாக போஸ்டர்களில் சித்தரிப்பதை ஆட்சேபம் தெரிவிக்காமல் இருப்பதன்  உள் அர்த்தத்தை நான் யோசித்துக்கொண்டிருக்க அங்கே வந்த மே 17 இயக்கத் தோழர் ஒருவரே அதைக் கூறினார்.

"இதுவரை பார்ப்பனர்களின் தரப்பில் இருந்து ஒரு ஆதரவுகூட ஈழத்திற்கு கிடைத்ததில்லை. பார்ப்பனர்களின் முகமூடியை உரித்துக்காட்ட வேண்டியது நமது கடமை என்றார்." நியாயம் தான். ஆனால் பிரச்சனை ஈழ அதரவு மட்டும் தானா...? உண்மையில் அங்கே நடந்தேறிய கொடுமைகளுக்கு முக்கிய காரணம், திருமாவளவனின் போலி தலித்தியமும், கருணாநிதி வகையறாக்களின் போலி திராவிடமும், காங்கிரஸ்காரர்களின் போலி இந்திய தேசியமும் தான் என்பது நமக்குத் தெரியாததா கருப்புச்சட்டை தோழரே..??! பெரியாரின் மூக்குக் கண்ணாடியை சற்று துடைத்துப் போட்டு பாருங்கள், அவர் சொன்ன பார்ப்பனக் குறியீடு என்பது சாதிரீதியான எதிர்ப்பு மட்டுமே இல்லை. நடத்தை முறையில் ஆதிக்க சக்தியாக திகழும், அனைத்துத் தரப்பினருமே பார்ப்பனியதிற்குள் தான் அடங்குவர் என்பது  -  உங்களுக்குத் தெரிய வரலாம். தமிழ்நாட்டில் பார்ப்பனியம் பெரும்பான்மை பெற்று நெடு நாட்கள் ஆகிறது தோழரே....!!!  

ஈழ விஷயத்தை எங்கே யார் பேசினாலும் எந்தத் தரப்பில் இருந்து பேசினாலும், எங்கிருந்து தான் அந்த பாழாய்ப்போன பகுத்தறிவு பொத்துக்கொண்டு  வந்து தொலைக்கிறதோ...? 

எல்லாம் அந்த தாடிக்கார கிழவன் செய்த வேலை.... இந்த இனத்தை மானத்தோடு வாழவும் வைத்துவிட்டு, இப்படி சாகவும் வைத்துகொண்டிருக்கிறான்... 

பகுத்தறிவு வெங்காயம்....!!

Pin It