யார் இந்த காசுமீரிகள்? பாரம்பரியமாய் காசுமீரைத் தங்களது பூர்வீகமாக்க் கொண்டு வாழ்பவர்கள் தான் காசுமீரிகள். பிரித்தானியர்கள் ஆளும் காலத்தில் காசுமீரை தனி மாகாணமாகக் கருதி அவர்களின் அடாவடித்தனத்தை கொஞ்சம் குறைத்து காசுமீர் மன்னரோடு சுமுகப்போக்கையே வைத்திருந்தனர். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் அனைத்தும் ஒரு மாகாணமாகவும் காசுமீரை ஓர் தனி மாகாணமாகவும் ஒதுக்கி அதற்கு தனி சட்டமும் வகுத்திருந்தனர்.

kashmir_380காசுமீரிகளுக்கு நேரு இழைத்த துரோகமென்ன? 1947 பாகிசுதான் இந்தியாவை விட்டுப் பிரிகையில் சம்மு-காசுமீர் மக்கள் தொகையில் பெருமளவு முசுலீம்களே அதாவது நூற்றுக்கு 87 சதவீதம் இவர்களாக இருந்த போதிலும் அரசு பதவிகளும், சுய-உரிமை ஆட்சிகளும் காசுமீரிகளுக்கு மறுக்கப்பட்டது. இந்தப் பிரிவினையில் பெரும் கலவரம் வெடித்தது. இதற்கிடையில் பல முசுலீம்கள் கொல்லப்பட்டனர். சுமார் ஐந்து லட்சம் முசுலீம்கள் பாகிசுதானிக்கு இடம்பெயர நேரிட்டதாக சொல்லப்படுகிறது.

நவம்பர் 2 ,1947 வானொலியில் நேருவால் அறிவிக்கப்பட்டது பின்தொடருமாறு: இந்திய அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவு ஏற்படுத்தப்பட்டு சுயாட்சி உரிமைகள் கொண்ட மாநிலமாக சம்மு-காசுமீர் உருவாக்கப்படும். இதன்படி பாதுகாப்பு, அயலுறவு, தகவல்தொடர்பு போன்ற மூன்று துறைகளின் பொறுப்புமட்டுமே இந்தியாவிடம் உள்ளது. இதுவே 1947ல் ஏற்படுத்தப்பட்ட "இணைப்பு ஒப்பந்தம்". இந்த ஒப்பந்தத்தின் சுவடாய் காசுமீரிகளுக்கு நேரு ஆண்ட அரசால் ஓர் வாக்குறுதி வழங்கப்பட்டது. காசுமீரில் பதற்றத்தை கட்டுப்படுத்தி இயல்புநிலை திரும்பும் வேளையில் "வாக்கெடுப்பு" நடத்தி காசுமீரிகளின் உரிமைகள் மீட்டுத்தரப்படும் என்றார். இருமுறை வாக்கெடுப்பு நடந்தும் இந்திய இராணுவத்தின் அடக்குமுறையால் இருமுறையும் கலவரத்திலே முடிவுற்றது.

பின்னர், நேரு அவர்கள் காசுமீர் பிரச்சினையை இந்து-முசுலீம் பிரச்சினை என்று மதச்சாயம் பூசி கொச்சைப்படுத்தினார். 1947 நேருவால் ஆளப்பட்ட அரசாங்கம் கொடுத்த வாக்குறுதி, தற்போது ஆளப்படும் சோனியா-மன்மோகன் சிங் ஆட்சியில் கூட நிறைவேற்றப்படவில்லை இதுவே காசுமீர் தீக்கிரையாவதற்கு முக்கிய காரணமாயிற்று.

கடல்பரப்பில் வழிந்தோடிய
குருதிநீர் பனிமண்டலத்தில்
உறைந்து கசியுதே...
பூத்துக்குலுங்கும் ஈழத்திலும்
இரத்தம் பீச்சி
அடிக்கிறது!
குளிர்ந்து விளையும்
வெண்மை காசுமீரிலும்
இரத்தம் நிறக்கிறது !!

சோழன் முக்கடலிலே
மீன்கொடி பறந்ததம்மா !
மாற்றான் பிடியிருந்த
தமிழ்மண் அடிமை
மடமை துறந்திட
இமயம் வென்ற
புலிநாட்டன் கொடி
வீழ்ந்ததாம் அம்மா !
ஓயவில்லை பாரம்மா !
புத்துயிர் ஈழம் விடியும்
கண்ணீர் துடையம்மா !!

பூலோக சொர்க்கம்
ஆசாதி(விடுதலை) காசுமீர்
துரோகியவர் கூடலிலே
வெண்பிடி மண் !
உறங்குமா உன்கண்??

மரண ஓலம்
ஈரமுடையோர் நெஞ்சினை
பிளந்திட்டு
கல்லுடையோர் எண்ணத்தினை
கரைத்திட்டு
நீர் வடிக்கிறது..
கண்ணீர் வலிக்கிறது...

தற்போதைய நிலை:

பொறுத்தது போதுமென மக்களும் இளைஞர்களும் தாமே தெருவில் கிளர்ச்சி செய்ய இறங்கிவிட்டனர். இந்த உரிமை தாகத்தை அடக்கும் வகையில் தான் காசுமீரில் எல்லை பாதுகாப்புப் படை (BSF ) சி.ஆர்.பி.எப். இந்திய ராணுவமென சுமார் 6 ,67 ,000 பேர் குவிக்கப்பட்டுள்ளனர். காசுமீர் மக்களின் உரிமைப் போராட்டத்தை இந்திய அரசு பயங்கரவாதப் பிரச்சனை என்று இந்திய மக்களிடம் பரப்பி வருவதுடன் ஒடுக்குமுறைகளையும் அவிழ்த்துவிட்டு வருகிறது. அதாவது இந்தியாவில் பாகிசுதான் ஆக்கரமிப்பு காசுமீர் என்றும் பாகிசுதானில் இந்திய ஆக்கிரமிப்பு காசுமீர் என்றும் அழைக்கபடுகிறது. மொத்தத்தில் இது "ஆசாதி (விடுதலை) காசுமீர்" ஆக வேண்டுமென்பதே காசுமீர்களின் கோரிக்கை.

ஈழம்-காசுமீர் இரண்டையும் ஓர் உரிமை நியாயப்படியே பார்க்க இயலும். ஏனெனில் தமிழீழம் தமிழர்களுக்கு - காசுமீர் காசுமீரர்களுக்கே என்பது தானே நிதர்சனம். எப்படி 19,100 சதுர கி.மீ. நிலபரப்பு கொண்ட ஈழத்தில் சிங்கள ராணுவத்தின் 2500 ராணுவ முகாம்கள் உள்ளதோ அதுபோலவே காசுமீரிலும் 5 கிலோமீட்டரில் சுமார் எல்லை பாதுகாப்பு படை, சி.ஆர்.பி.எப். இந்திய ராணுவம் என மூன்றுக்கும் மேற்பட்ட முகமைகள் உள்ளன. இந்திய ராணுவம் காசுமீர் பெண்களைக் கற்பழிப்பதும், வீடு புகுந்து அட்டகாசம் செய்வதும் காசுமீரில் வாழ்க்கையாகிவிட்டது. அதுபோன்ற காணொளிக் காட்சிகூட சிலதினம் முன்னர் இணையத்தளத்தில் வெளிவந்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்டோர் இராணுவதால் சுட்டு கொல்லப்பட்டனர்.

இதுவரை காசுமீரில் மொத்தம் 70,000த்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போய் உள்ளனர். இதில் பலர் இந்திய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டனர் என்று தெரிகிறது. உள்நாட்டில் எப்படி அடக்குமுறைகளை எதிர்ப்பவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் போன்றவற்றைப் பயன்படுத்தி சிறைபடுத்துகிறார்களோ அதுபோன்ற காசுமீரில் பொது பாதுகாப்புச் சட்டம். ஆயுதப்படையினர் சிறப்பு அதிகாரச் சட்டம் என்று சனநாயக நாடென்று சொல்லப்படுகிற இந்தியாவில் ராணுவ ஆட்சி புரிந்து வருகிறது இந்த அரசு.

தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை என அப்பாவி மக்களை சித்திரவதை செய்வதும் கைதுக்குப் பின்னர் பிணை மறுக்கப்படுவதும் செத்த பின்னர் நீதி கேட்டு போராடுவதும் வழக்கமாகி விட்டது காசுமீரில். தமிழர்கள் எப்படி ஈழத்தில் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டனரோ அதுபோலத் தான் காசுமீரிலும் கொடுமைகள் நிகழ்ந்து வருகிறது. விருந்தோம்பல் மனம் கொண்டு தமிழர்களுக்கும் காசுமீரிகளுக்கும் இன்று கண்ணீரே மிஞ்சிக்கிடக்கிறது.

- மகா.தமிழ் பிரபாகரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It