மக்கள் இயல்பாக பேசும் போதே குறிப்பால் ஒன்றை உணர்த்தும் வழக்கத்தைக் கொண்டவர்கள். ’சாடை பேசுதல்’ என்னும் வழக்கமும் சிலரிடையே உண்டு. இதுவும் குறியீடே. கவிதையிலும் இம்மரபு தொடர்கிது. பறவை என்பதை சுதந்திரத்திற்கும் வெண்மை என்பதை அமைதிக்கும் கறுப்பு என்பதை துக்கத்திற்கும் புறா என்பதை சமாதானத்திற்கும் சிங்கத்தை வீரத்துக்கும் குறியீடாக பயன்படுத்துவர். வெள்ளை மாளிகை என்றால் அமெரிக்காவைக் குறிப்பது போல் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையான குறியீடு உண்டு. கையாள்வதில் கை தேர்ந்தவர்கள் கவிஞர்கள். மனிதர்களைத் திட்டுவதற்கு விலங்குகளின் பெயரை பயன் படுத்துவதும் குறியீடு அடிப்படையிலேயே அமையும். ஒன்றை மற்றொன்றால் உணர்த்துவதே குறியீடு.

தொடக்கக் கால மரபுக் கவிதைகளில் காணப்படும் உள்ளுறை, இறைச்சி போன்றவைகளே புதுக்கவிதையில் குறியீடு என்னும் நிலையை எட்டியுள்ளது. படிமத்துக்கு அடுத்த நிலை எனினும் இரண்டும் இரண்டு நிலைகளில் பிரயோகிக்கப்படுகிறது. இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. முதுமொழி, மந்திரம், குறிப்பு என தொல்காப்பியத்தில் காணப்படுபவை குறிப்பால் மற்றொன்றை உணர்த்துபவையென அறிய முடிகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேலை நாட்டில் குறியீடு பயன்படுத்துவது பற்றிய சிந்தனை ஏற்பட்டுள்ளது. எனினும் குறியீடு பயன்படுத்துவது காலங்காலமாகவே இருந்து வந்துள்ளதை மறுக்க முடியாது. தமிழ் இலக்கியத்திலும் தொடர்ந்துள்ளது. சங்கக் காலப் பாடல்களில் குறியீடுகளைக் காண முடிகிறது. பக்தி இலக்கியக் காலத்திலும் குறியீடு முறை இருந்துள்ளது. முன்னை விடவும் தீவிரம் பெற்றுள்ளது. சித்தர்களும் இம் முறையை அதிகம் பின்பற்றியுள்ளனர்.

இருபதாம் நூற்றாண்டில் குறியீடுகளை பயன் படுத்தி வெற்றிக் கண்டவர் மகாகவி பாரதி. அவர் காலத்துக்கு ஏற்ப சுதந்திர உணர்வை ஏற்படுத்தும் வகையில் தொன்மக் குறியீடுகளைக் கையாண்டுள்ளார். காளி, கண்ணன், குயில் என்பவையெல்லாம் பாரதி பயன் படுத்திய குறியீடு எனலாம். பாரதியின் தாசன் எனினும் பாரதிதாசன் கவிதைகளில் குறியீடு யுத்தியைக் காண்பதரிது. மாறாக தமிழ் உணர்வே ஓங்கி இருந்தது. எனினும் புதுக்கவிதையே குறியீடுக்கு பொருத்தமாயுள்ளது. புதுக்கவிதையிலேயே குறியீடும் ஆட்சிச் செய்துள்ளது. செய்தும் வருகிறது.

புதுக்கவிதைக்கு வித்திட்டவர் பாரதி எனினும் புதுக்கவிதையின் முதல் கவிஞர் என்று அறியப்பட்டவர் ந. பிச்சமூர்த்தி. அவரின் ‘பம்பரம்’ கவிதை குறியீட்டு அடிப்படையில் எழுதப்பட்டதாகும்.

பம்பரமும் மன்றங்களாய்

எல்லை, மொழி தகராறாய்

எவ்வளவோ விவக்ஷயங்களாய்

எங்கும் வளர்ந்திருக்கு

நானும் வளர்ந்து விட்டேன்

கைநகமும் வளர்ந்;திருக்கு

ஆனாலும் அழுகின்றேன். இக்கவிதை ‘வன்முறை’க்குக் குறியீடாய் அமைந்துள்ளது. வன்முறையின் தீவிரத்தைக் காட்டியுள்ளது. ஆனால் ‘வன்முறை’ என்னும் சொல் எங்கும் இல்லை.

சித்தர்களுக்குக் குதம்பை, பாரதிக்கு கண்ணம்மா போல் நகுலனுக்குச் சுசீலா. கவிஞர் நகுலன் ‘சுசீலா’வைக் குறியீடாக்கி ஏராளமான கவிதைகள் எழுதியுள்ளார்.

நேற்று ஒரு கனவு

முதல் பேற்றில்

சுசீலாவின்

கர்ப்பம் அலசி விட்டதாக.

இந்த மனதை

வைத்துக் கொண்டு

ஒன்றும் செய்ய முடியாது. கவிதையின் தலைப்பு ‘அலைகள்’. மனத்தில் பல ‘அலைகள்’ஐ எழ செய்கின்றது. இதுவொரு வகையான குறியீடு. கவிஞர் கலாப்ரியாவின் ‘சசி’யும் ஒரு குறியீடே. ’ஆமென்’ தலைப்பிலான கவிதையி[ல்

சிலரின் சில

பிரார்த்தனைகள்

‘ஆமென்’னுடன்

முடிகின்றன

என் எல்லாப்

பிரார்த்தனைகளும்

‘சசியுடன்’ முடிகின்றன என்கிறார். ‘சசியை’யும் பல கவிதைகளில் பார்க்க முடிகிறது.

 

படிமத்துக்கு பிரமிள் என்றால் குறியீடுக்கு அப்துல் ரகுமான். இவரின் கவிதைகளில் குறியீடு மிகுதியாகவே காணப்படும்.

சமரச வேவக்ஷமிட்ட குரங்கினிடம்

அப்பத்தைப் பறிகொடுத்த

பூனைகள் நாம் ஒவ்வொரு சொல்லும் குறியீடாய் நிற்கிறது. குரங்கு, அப்பம், பூனைகள் என்னும் சொற்கள் வாசகனுக்குள் பிறிதொன்றை உணர்த்திக் கொண்டே இருக்கும்.

என் ஆறாவது விரல் வழியே

சிலுவையிலிருந்து

வடிகிறது ரத்தம்

ஆம்

என் ‘மாமிசம்’

வார்த்தை ஆகிறது எனத்

தொடங்கும் ‘பால் வீதி’யில் ஏராளமான குறியீடுகளைக் காணச் செய்துள்;ளார். ‘புதுக்கவிதையில் குறியீடு’ என்னும் தலைப்பில் ஆய்வித்து முனைவர் பட்டம் பெற்றதோடு தொகுப்பாக்கியும் வெளியிட்டுள்ளார். மிக முக்கியமானத் தொகுப்பாக இன்று வரை விளங்குகிறது. ‘புதுக்கவிதையில் குறியீடு’ என்ற அப்துல் ரகுமான் ஆய்வேட்டில் தொன்மங்கதை; திரித்தாளுதல் புதுக்விதையாளர் பலரிடம் காணப்படினும் அப்துல் ரகுமானிடம் மிகுதியாகக் காணப்படுகிறது. அவரது பால்வீதி என்ற தொகுப்பு இத்தகையத் தொன்மத் திரிபுக் குறியீடுகளை மிகுதியாகப் பெற்றுள்ளது’ என்று ‘புதுக்கவிதையில் தொன்மவியலாய்வு‘ தொகுப்பில் பாவலர் கருமலைத் தமிழாழன் குறிப்பிட்டுள்ளார்.

கவிஞர் பாலகுமாரனின் ‘விட்டில் பூச்சிகள்’ என்னும் கவிதை மிகவும் பிரபலமானது. மூன்றே வரி.

முட்டி முட்டிப் பால் குடிக்கினறன

நீலக் குழல் விளக்கில்

விட்டில் பூச்சிகள் கவிதையே ஒரு குறியீடாக உள்ளது. ‘விட்டில் பூச்சிகள்’ ஏமாந்து நிற்கும் மக்களைக் குறிக்கிறது. சொல்லின் பொருளை கவிதை வாயிலாக நேரடியாக கூறுவதைத் தவிர்த்து பிறிதொரு சொல்லைப் பிரயோகித்து அதன் மூ்லம் வாசகனுக்குள் ஒரு புதிய அர்த்தத்தை, பொருளை புரியச் செய்கிறது. இதுவே குறியீட்டின் தன்மை.

புதுக்கவிதை உலகில் ஒரு தனிக்காட்டு ராஜாவாக விளங்கியவர் கவிஞர் மு. மேத்தா. புதுக்கவிதை மூலம் பலவற்றைப் பேசியுள்ளார். படம் பிடித்துக்காட்டியுள்ளார். ’அரளிப் பூ அழுகிறது’ என்னும் அவரின் கவிதை குறியீட்டிற்கு நல்ல எடுத்துக்காட்டு

பூக்களிலே நானு மொரு

பூவாய்த்தான் பிறப்பெடுத்தேன்

பூவாகப் பிறந்தாலும்

பொன் விரல்கள் தீண்டலையே

பொன் விரல்கள் தீண்டலையே - நான்

பூமாலையாகலையே நாட்டுப்புறபாடல் வடிவில் அமைந்து இருந்தாலும் குறியீடும் இக்கவிதையில் முக்கிய பங்கு வகிக்கறது. ’அரளிப்பூ’ என்னும் சொல்லே ஒரு முதிர்கன்னியைக் குறிக்கிறது. ஒரு முதிர்கன்னியின் மனநிலையை படம் பிடித்துக் காட்டுகிறது. ஒரு பூவின் வாயிலாகவே ஒரு முதிர் கன்னியின் குரல் வெளிப்பட்டுள்ளது. அழுத்தமான உணர்வைக் காட்டுகிறது. கவிஞர் வாலியின் ஒரு கவிதையில் ‘ஆண்டாளை’க் கல்யாணம் ஆகாத ஒரு பெண்ணுக்கு குறியீடாகக் காட்டியுள்ளார்.

வாரணங்களும் தோரணங்களும் சூழ

ஒரு காளை புகுந்து

கைத்தலம் பற்றுவதை

கனாவில் மட்டும்

கண்டு கொண்டிருக்கும்

ஆண்டாள்கள் நாங்கள் கவிஞர் மேத்தா அரளிப்பூ என ஓர் அஃறினையைக் குறியீடாக்கினார். கவிஞர் வாலி ஆண்டாள் என ஓர் உயர்தினையைக் குறியீடாக்கியுள்ளார். ஆனால் ‘முதிர்கன்னி’யையே குறிப்பிட்டுள்ளார். அவர்களின் சோகத்தைச் சொல்லியுள்ளார்.

குறியீடுகள் எழும் அடிப்படைகளை வைத்து அதனை உணர்ச்சிக் குறியீடு, அறிவுக் குறியீடு என வகைப்படுத்தினாலும் ஆளப்பெரும் சூழ்நிலைகளை வைத்து கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம் என்கிறார் ‘மீராவின் கனவுகள்’ தொகுப்பில் கவிஞர் அப்துல் காதர்.

1, நேர்

2, புனைவியல்

3, உலகளாவியது

4, தொன்மம்

5, வழக்கு

6, இடம் காலம் பற்றியது

7, சொந்தம்

8, அதீதம் ஆனால் அப்துல் ரகுமான் கீழ்கண்டவாறு வகைப்படுத்தியுள்ளார்.

1, பொதுநிலை

2, தனிநிலை

3,இயற்கை

4, அகிலத்துவம்

5,வழக்கு

6, தறுவாய்

7, மறிதரு

8,தற்குறி

9, தூய

10, திட்டமிடல்

11, மானுடன்

12, அறிவு

13, உணர்வுநிலை குறியீடுகள் பலவகையாயியினும் அவை பயன்படுத்தும் படைப்பாளிகளின் மனத்திறனை வெளிப்படுத்துபவையாகும். இருண்மை எனினும் கவிதைக்கு ஒரு தகுதியை ஏற்படுத்தும். வாசகனை ஒரு புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்லும்.

தமயந்தி ஒரு புலம் பெயர்ந்த ஒரு கவிஞர். புலம் பெயர்ந்த கவிஞர்களிடையே சுதந்திர தாகம், தாயக நினைவு கூடுதலாகவே இருக்கும். தாயகம் மலர வேண்டும் என்னும் வேட்கையுடனான கவிதையில் கவிஞர் குறியீட்டைப் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத் தக்கது.

லட்சோப லட்சம்

மனிதக் கரங்கள்

பாதாள மலக்குழியிலிருந்து அவனை

மீட்டு

சுமந்து நின்றனர்

மக்கள்.

மக்கள் மீட்டனர்

பாதாளச் சிறை கிடந்த

தமது சூரியனை

மக்கள் மீட்டனர் கவிதையில் உள்ள ‘சூரியன்’ குறியீடாய் நிற்கிறது. தாயகம் மலர்வதைக் குறிக்கிறது.

குறியீட்டு உத்தியை நா. காமராசன், அக்னிபுத்திரன், தமிழ்நாடன், கு. ப. ராஜகோபாலன், அபி, தமிழன்பன், புவியரசு, க. நா. சு, சி. சு, செல்லப்பா, தேனரசன், இன்குலாப், அறிவன், சி. மணி, தி. க. சி. , நீல. பத்மநாபன், பசுவய்யா, குருவிக் கரம்பை சண்முகம், ஞானி, சிற்பி, வைத்தீஸ்வரன் ஆகிய கவிஞர்கள் கவிதையில் கையாண்டு வெற்றிக் கண்டுள்ளனர். வெற்றிப் பெறச் செய்துள்ளனர். குறியீட்டு அடிப்படையில் கவிதை எழுதும் கலையை இன்றளவும் கவி்ஞ்ர்கள் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறியீட்டைப் பிரயோகித்து கவிதை எழுதிய கவிஞர் கலாப்ரியாவே ஒரு கவிதையில் குறியீடு வேண்டாம் என்பது இங்கு குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது.

படிம

உருவக

குறியீடு இடையீடு இல்லாத

நிர்வாண கவித்துவம்

வேண்டி

நீ எப்போது

தியானிக்கப் போகிறாய். ஆயினும் படிமம் அளவிற்கு குறியீடு எதிர்ப்பை எதிர்கொள்ளவில்லை.

கவிஞன் கவிதையில் ஒன்றைக் குறிப்பதற்காக ஒன்றைப் பயன்படுத்தும்போது அந்த ஒன்றையோ அல்லது அது தொடர்பான ஒன்றையோ அல்லது அது போலான வேறு ஒன்றையோ வாசகன் எளிதில் கண்டடைகிறான். விமரிசகனும் அறிந்து தெரிவிக்கிறான். இதற்கு மொழி ஒரு முக்கிய அம்சமாக விளங்குகிறது. மக்களும் இயல்பாகவே இத் தன்மைக் கொண்டவர்களாக உள்ளனர். பேச்சிலிருந்து தாண்டி எழுத்திற்கு வரும் போது அதுவும் கவிதை என்னும் நிலையில் குறியீடு ஒரு சிறப்புத் தன்மை பெற்று விடுகிறது. குறியீடு பயன்படுத்தும் கவிதை இறுக்கம் பெற்று விடுகிறது. ஓர் அடர்த்தி ஏற்பட்டு விடுகிறது. தேவையற்ற சொற்களைத் தன்னுள் கொண்டிராது. பொதுவாகவே குறியீடு கொண்ட கவிதை ஒரு நல்ல கவிதை. பிறரையும் புதியவரையும் ஒரு நல்ல கவிதையை எழுதத் தூண்டுகிறது.

யாரும் விடவில்லை

எல்லோர் பார்வையும்

அதன் மீதே. . .

அதன் போக்கிலேயே

ஓடிக் கொண்டு. . .

தொட்டு விட

ஒவ்வொருவருக்கிடையேயும்

போட்டி. . .

சிலர் கையில்

வந்து சென்றது. . .

சிலருக்குச்

சிக்கவே இல்லை. . .

கீழே விழுந்து

காயப்பட்டனர் பலர். . .

எல்லோருக்கும்

விளையாட்டுக் காட்டுகிறது

பந்து. ‘இயல்பு’ தொகுதியில் பொன். குமார் எழுதிய இக்கவிதை இடம் பெற்றுள்ளது. இத்தொகுப்பு குறித்த விமரிசனம் கணையாழி (ஜூலை 2000) இதழில் வெளியானது. அதில் இக்கவிதையைப் பற்றி ‘‘பணம், பட்டம், பதவி என்று எதனோடும் பொருத்திப் பார்க்கக் கூடிய ஒரு குறியீட்டு கவிதை’ என குறிப்பிடப்பட்டுள்ளது. படைப்பாளனின் பார்வைக்கு எட்டாதது விமரிசகருக்கு எட்டியுள்ளது. ஒன்றைப் பலவாறாக பொருத்திப் பார்த்துள்ளார். இதுவும் குறியீட்டின் சிறப்பம்சம் ஆகும்.

‘‘தமிழ் புதுக்கவியாளர் வெளியீட்டிற்குரிய உயர்நத சாதனம் எனற அளவிலேயே குறியீட்டை மதித்தனரே அன்றி அதையே ஒரு கோட்பாடாக ஆக்கிக் கொள்ளவில்லை. இக்காரணங்களால் தமிழில் குறியீட்டியம் ஓர் இயக்கமாக மலரவில்லை’’ என கவிஞர் அப்துல் ரகுமான் ‘புதுகவிதையில் குறியீடு’ என்னும் தொகுப்பில் ஆய்வுரைத்துள்ளார். எனவே தமிழ்க் கவிதைகளில் குறியீட்டை ஓர் இயக்கமாக ஆக்க முயற்சிக்க வேண்டியது கடமையாகும். இலக்கியத்தையும் மேம்பாடடையச் செய்ய வேண்டும். 

- பொன்.குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It