காய்கறி கடைகளில் விற்கப்படும் வெங்காயத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென 50 % திற்கும் மேல் உயர்ந்து நாட்டின் பல சந்தைகளில் கிலோ 70-90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மராட்டிய மாநிலத்திலுள்ள மிகப் பெரிய வெங்காய மொத்த விலைச் சந்தையில், கடந்த இரு வாரங்களில் மட்டும் அதன் விலை கிலோ 25 ரூபாயிலிருந்து 57 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

வெங்காயத்தின் இந்த திடீர் விலையேற்றத்திற்கு, அதன் உற்பத்திக் குறைவும், பருவ மழை குறைந்திருப்பதால் உற்பத்தி மேலும் குறையுமென்ற எதிர்பார்ப்பும் காரணமென்று கூறப்படுகிறது. 2014-15 இல் 18.9 மில்லியன் டன்கள் வெங்காயம் இந்தியாவில் விளைந்திருக்கிறது. இது அதிகபட்சமாக முந்தைய ஆண்டு இந்தியாவில் விளைந்த 19.4 மில்லியன் டன்களைக் காட்டிலும் சிறிதளவே குறைந்திருக்கிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் வெங்காயத்தின் உற்பத்தி உண்மையில் இரு மடங்காகப் பெருகியிருக்கிறது.

வெங்காயத்தின் ஆண்டு உற்பத்தியில் ஏறத்தாழ 60 % குளிர்கால அறுவடையிலிருந்து வருகிறது. இது சேகரிக்கப்பட்டு அடுத்த விளைச்சல் வரும் வரை சந்தைக்கு அனுப்பப்படுகிறது. நாட்டின் வெங்காய விளைச்சலில் பாதிக்கும் மேலான விளைச்சல் மராட்டிய, கர்நாடக மாநிலங்களிலிருந்து வருகிறது.

இந்தியாவில் வெங்காய உற்பத்தியானது பெரும்பாலும் சிறிய மற்றும் நடுத்தர உழவர்களிடமிருந்து வருகிறது. சந்தை விலைகளை அவர்கள் விருப்பம் போல மாற்றும் சக்தியற்றவர்கள் ஆவர். பெரும்பாலான நேரங்களில் தங்களுடைய உற்பத்தியை அடிமாட்டு விலைக்கு மொத்த வியாபாரிகளுக்கு அவர்கள் விற்க நேரிடுகிறது. பல நேரங்களில் விளைந்த வெங்காயத்தை மண்டிகளுக்குக் கொண்டு செல்லும் செலவைக் காட்டிலும் மண்டியில் கிடைக்கும் விலை குறைவாக இருப்பதால், ஒவ்வொரு ஆண்டும், தங்களுடைய உற்பத்தியில் ஒரு பங்கை உழவர்கள் சாலைகளில் வீசி எறிய வேண்டியுள்ளது.

எல்லாப் பெரிய வெங்காய மண்டிகளும் பெரிய வணிகர்களுடைய உடும்புப் பிடியில் இருக்கின்றன என்பது நன்கறிந்ததாகும். இருப்பினும் அரசாங்கம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. இந்தப் பெரும் வணிகர்கள், விளைச்சல் நேரத்தில் விலையைக் குறைத்து, எல்லா மகசூலையும் வாங்கி கிடங்குகளில் குவித்து வைத்துக் கொள்கின்றனர். இருப்பிலிருந்து சந்தைக்கு வெங்காயத்தை அனுப்புவது, இந்த வணிகர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதைப் பயன்படுத்தி அதன் விலையை நாடெங்கிலும் அவர்களுடைய விருப்பத்திற்கேற்ப கையாள முடிகிறது.

2012-இல் இந்தியப் போட்டி ஆணையத்திற்காக மராட்டிய, கர்நாடக மாநிலங்களில் நடத்தப்பட்ட ஒரு தனிப்பட்ட ஆய்வானது, ஒரு சில மிகப் பெரிய வணிகர்களுடைய ஏகபோகமும், வணிகக் கூட்டணியும் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஒரே ஒரு மொத்த வணிகர், வெங்காயத்தின் மொத்த வணிகத்தில் 20 %-த்தை தன் கைப்பிடியில் வைத்திருக்கிறார். இருந்துங்கூட போட்டி ஆணையமோ, மத்திய அரசோ இந்த ஏகபோக மொத்த வணிகர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

ஏதாவதொரு காரணத்திற்காக, 2010-இலிருந்து வெங்காய விலைகள் 2012 தவிர, மற்ற ஒவ்வொரு ஆண்டும் சில மாதங்களுக்கு அதிகரிக்கின்றன. இந்த கடுமையான விலை உயர்வுக்குக் காரணம் பெரும் வணிகர்கள் பதுக்கி வைப்பதுதானென மத்திய அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் ஒப்புக் கொள்கிறது. ஆனால் இந்த பதுக்கல்காரர்களுக்கு எதிராக மாநில அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி பழியை மற்றவர்கள் மீது சுமத்தி அது தப்பித்துக் கொள்கிறது. பெரும் வணிகர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையே கூட்டுறவு இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

ஒவ்வொரு முறையும் விலைகள் உயரும் போது, 'வழங்கல் சங்கிலி சீர்திருத்தங்கள்' மூலமாக மட்டுமே இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியுமென அரசாங்கம் கூறி வருகிறது. 'வழங்கல் சங்கிலி சீர்திருத்தங்கள்' என்பதன் மூலம் அது, மொத்த வாணிகத்தையும், சில்லறை வணிகத்தையும், சேமித்து வைத்தல் மற்றும் வினியோகத்தை பெரும் இந்திய மற்றும் அன்னிய ஏகபோகங்களுடைய பெரிய நவீன மொத்த மற்றும் சில்லறை சங்கிலிகளுக்கு விட்டுக் கொடுத்துவிட வேண்டும் என்கிறது.

உணவுப் பொருட்களைக் கட்டுப்படியாகக் கூடிய விலையில் கிடைக்கச் செய்வதைப் பொறுத்த வரையில் அதில் இந்த பெரிய சங்கிலிகளுக்கும் வணிகக் கூட்டணிக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை என்பது இந்திய மக்களுடைய வாழ்க்கை அனுபவமாகும். சந்தையில் வெங்காயத்தின் விலைகளுக்கு ஏற்ப இந்தச் சங்கிலிகளிலும் விலை உயர்ந்தே வந்திருக்கின்றன. வெங்காயம் புதிதாக வரும்போது மிகக் குறைவான விலைகளில் அதை இந்தச் சங்கிலிகள் வாங்கியிருந்தாலும், அந்தப் பயனை அவர்கள் மக்களுக்குக் கொடுப்பதில்லை. அவர்களும் வணிகர்களைப் போலவே பேராசையோடு செயல்படுகின்றனர். அவர்களும் சந்தையை கையாளுவதன் மூலம் அதிகபட்ச இலாபத்தை அடைய விரும்புகின்றனர். ஒரு பெரிய முதலாளிக்குச் சொந்தமான ஒரு சில்லறை சங்கிலியினுடைய கிடங்குகளில் மிகப் பெரிய அளவில் வெங்காயம் இந்த ஆண்டு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

விலை உயர்வுக்குக் கூறப்படும் இன்னொரு காரணமானது ஏற்றுமதியாகும். போதுமான வெங்காயம் விளையவில்லை என்று அரசாங்கம் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் 1-2 மில்லியன் டன்கள் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய அது அனுமதிக்கிறது. இது, உழவர்களுக்கு நியாயமான, நிலையான விலை கிடைப்பதை உறுதி செய்வதாகக் கூறி, ஏற்றுமதியை நியாயப்படுத்துகின்றனர். உண்மையில் வணிகர்கள் அதிக விலையை நீடித்து வைத்திருக்க மட்டுமே இது உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், விலைகள் உயரும் போது, மத்திய அரசாங்கம் தற்காலிகமாக குறைந்தபட்ச ஏற்றுமதி விலையையும் உயர்த்துகிறது. ஓரளவு வெங்காயத்தை இறக்குமதியும் செய்கிறது. இந்த ஆண்டும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் பிரச்சனையின் அடிப்படைக் காரணத்தைத் தீர்க்க அரசாங்கம் எதையும் செய்யவில்லை.

குறைந்த பட்ச ஏற்றுமதி விலையை டன்னுக்கு 250 டாலரிலிருந்து 700 ஆக உயர்த்தி ஏற்றுமதியைத் தவிற்பதன் மூலம் வெங்காயம் கிடைப்பதை சீர்செய்திருப்பதாக அரசாங்கம் கூறிக் கொள்கிறது. ஒவ்வொரு ஆண்டும், வெங்காய உற்பத்தியில் ஏறத்தாழ 10%-த்தை இந்தியா ஏற்றுமதி செய்கிறது. விலைவாசி கடுமையாக உயரும்போது ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை உயர்த்தியும் சில மாதங்களுக்குள்ளே அதை மீண்டும் குறைக்கும் நாடகம் ஒவ்வொரு முறையும் அரங்கேற்றப்படுகிறது.

இந்த மொத்த வணிகர்களும், சில்லறை சங்கிலிகளும் கூட்டாக, இலட்சக் கணக்கான உழவர்களுக்கு அவர்களுடைய விளைபொருளுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான விலையை கிடைக்காமல் தடுத்து விடுகின்றனர். அது மட்டுமின்றி, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெங்காயத்தின் விலையைக் கிடுகிடுவென ஏற்றி விடுகின்றனர். இது வெங்காயத்தை ஒரு அடிப்படை உணவாகக் கொண்டுள்ள நமது நாட்டின் கோடிக்கணக்கான உழைப்பாளர்களை பாதிக்கிறது. 2011-இல் மராட்டிய மாநிலத்திலுள்ள சில மிகப் பெரிய வெங்காய வணிகர்கள் மீது வருமான வரி தணிக்கை செய்யப் போகிறார்கள் என்ற ஒரு வதந்தி, வெங்காய விலைகளை ஒரே இரவில் 60% குறைத்தது. இது இந்த வணிகர்கள் கொள்முதல் விலையையும், விற்பனை விலையையும் கையாளுவதன் மூலம் மிகப் பெரிய அளவில் இலாமடிக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.

வெங்காயத்தின் விலைகள் கிடுகிடுவென அதிகரிப்பதற்கு முழு பொறுப்பும், உழவர்களையும், நுகர்வோரையும் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்க மறுத்து வரும் மத்திய மாநில அரசாங்கங்களைச் சேரும். ஆளும் வகுப்பினரான பெரும் முதலாளிகள் மற்றும் வணிகர்களுடைய அதிகபட்ச இலாபத்தை உறுதி செய்வதில் மட்டுமே அவர்கள் குறியாக இருக்கிறார்கள். அறுவடை செய்யப்படும் நேரத்தில் எல்லா வெங்காயத்தையும் உழவர்களுக்கு இலாபகரமான விலையில் உத்திரவாதத்தோடு அரசு கொள்முதல் செய்வதன் மூலம், உழவர்களுடைய நலன்களைப் பாதுகாக்க முடியும். கொள்முதல் செய்யப்பட்ட வெங்காயத்தை பாதுகாப்பாக சேமித்து வைக்கத் தேவையான உள்கட்டுமானத்தை எல்லா உற்பத்தி மையங்களிலும், நுகரப்படும் இடங்களிலும் அரசு உருவாக்குவதன் மூலம் சமூகத்தின் தேவையை நிறைவேற்ற முடியும். இவை, வணிகர்கள் மற்றும் பெரும் சில்லறை சங்கிலிகள் கொண்டுள்ள இரும்புப் பிடிக்கும், கொள்முதல் மற்றும் விற்பனை விலைகளை இலாப நோக்கோடு கையாளுவதற்கும் முடிவு கட்டும்.

உழைக்கும் மக்கள், ஒரு பொது வினியோக அமைப்பை உருவாக்க வேண்டுமென கோரி வருகின்றனர். அப்படிப்பட்ட அமைப்பு, வெங்காயம் உட்பட எல்லா தேவைகளையும் தரமாகவும், கட்டுப்படியாகக் கூடிய விலையிலும் அனைவரும் வழங்கும். இதற்கு மாறாக அரசு, இன்று நிலவும் பொது வினியோக அமைப்பைக் கூட திட்டமிட்ட முறையில் ஒழித்துக் கட்டி வருகிறது.

உணவுப் பொருட்களின் கடுமையான விலை உயர்வு, பல்லாண்டுகளாக உழைக்கும் மக்கள் மீது பொறுக்க முடியாத சுமையாக இருந்து வருகிறது. உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு சில நேரங்களில் நாட்டிற்கு வெளியே உள்ள காரணிகளையும், மற்ற நேரங்களில் இயற்கையையும் காரணம் காட்டி வருகின்றனர். உணவை உற்பத்தி செய்யும் உழவர்கள் மற்றும் நுகர்வோருடைய தேவைகளை நிறைவேற்றுவதில் தனக்கு எவ்வித கடமையும் இருப்பதாக இன்றைய அரசு நம்பவில்லை. ஆளும் வகுப்பினருக்கு மட்டுமே அது பொறுப்போடு தேவைகளை நிறைவேற்றி வருகிறது. அரசாங்கத்திலுள்ள அரசியல் கட்சி மாற்றங்களும், கூட்டணி மாற்றங்களும், தொடர்ச்சியாக உயர்ந்து வரும் உணவுப் பொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. உழைக்கும் மக்கள் மற்றும் உழவர்களுடைய அரசைக் கட்டுவதற்காக வேலை செய்வதே உடனடித் தேவையாகும். அப்படிப்பட்ட அரசு மட்டுமே மற்ற எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களுடைய நலன்களை முன்னிலைப் படுத்தும். அது மட்டுமே வெங்காயம் உட்பட எல்லா உணவுப் பொருட்களும் கட்டுப்படியாகக் கூடிய விலையில் கிடைப்பதை உறுதி செய்யும்.

Pin It