வகுப்புவாதம், மதச்சார்பின்மையும் இந்திய அரசியலும் என்ற தலைப்பில் சென்னையில் ஆகஸ்டு மாதத்தில் ஒரு விவாதக் கூட்டத்தை தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. பல தொழிலாளர் அமைப்புக்களையும் கட்சிகளையும் தொழிற்சங்கங்களையும் இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு வழங்கப்பட்டிருந்தது.

கூட்டத்தில் சிறப்புரை ஆற்ற வந்திருந்த மக்களாட்சி இயக்கத்தின் தலைவர் திரு. இராகவன், ஆங்கிலேயர்கள் நம் துணைக் கண்டத்தில் அடியெடுத்து வைப்பதற்கு முன் மக்களிடையே வகுப்புவாத கலவரங்கள் நடந்ததாக வரலாற்றில் எந்த வரலாற்றாசிரியர்களாலும் குறிப்பிடப்படவில்லை என்று சுட்டிக் காட்டினார். இந்திய வரலாற்றில் வகுப்புவாதமும் மதக் கலவரங்களும் எப்படி ஆங்கிலேய ஆட்சியாளர்களால் மக்களை பிளவுபடுத்தி அவர்கள் மீது தங்கள் ஆட்சி அதிகாரத்தை செலுத்துவதை நியாயப்படுத்துவதற்காக தூண்டிவிடப்பட்டது என்பதையும், பின் நடுநிலை வகிப்பதாக அவர்களே நாடகமாடி வந்துள்ளனர் என்பதையும் அவர் விவரித்தார். இதையே அவர்கள் வெள்ளை மனிதனின் சுமை என்று விவரித்து தங்களை ஆட்சியாளர்களாக நியாயப்படுத்திக் கொண்டனர்.

இப்படிப்பட்ட காலனிய பாரம்பரியத்தை இந்திய முதலாளி வகுப்பு ஆட்சியாளர்கள் உதறித் தள்ளாமல் அதை மேலும் வளர்த்தெடுத்து உழைக்கும் மக்களை பிரித்தாண்டு ஏய்த்து வருகிறார்கள். எப்பொழுதெல்லாம் தொழிலாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டங்கள் வலுத்து எழுகிறதோ, எப்பொழுதெல்லாம் முதலாளி வர்க்கம் தொழிலாளி வர்க்கத்திற்கு எதிரான கொள்கைகளையும் செயல்பாடுகளையும் முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறதோ, அப்பொழுதெல்லாம் வகுப்புவாத வெறியாட்டம் தலை எடுக்கிறது. பின் மக்கள் தான் மதவாதிகள் என்றும் பிற்போக்கானவர்கள் என்றும் அதனால் அரசின் தலையீடு தேவைப்படுகிறது என்ற தர்க்கத்தை முன்வைத்தும் மக்கள் மீதான எல்லா அத்துமீறல்களையும் அரசு நியாயப்படுத்தி மக்களை பிரித்தாளுகிறது.

மேலும் அவர் வகுப்புவாதக் கட்சிகள் என்றும் மதச்சார்பற்ற கட்சிகள் என்று ஆளும் வகுப்புகள் பிரச்சாரம் செய்வது என்பது எவ்வளவு போலித்தனமானது என்று விளக்கினார். அதிகார பூர்வமாக வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள் எதைக் காண்பிக்கிறது என்றால் மிக அதிகமான வகுப்புவாத தாக்குதல்களும் படுகொலைகளும் காங்கிரசு கட்சியும் பிற மதச்சார்பற்ற கூட்டணிகளும் நாட்டையும் மாநிலங்களையும் ஆட்சி செய்த காலங்களிலேயே நடந்துள்ளன. மேலும் முதலாளி வர்க்கம் தனியார்மயத்தையும் தாராளமயத்தையும் உலகமயத்தையும் உழைக்கும் மக்கள் மீது திணிக்கும் காலங்களிலும், மக்கள் போராட்டங்கள் வலுப்படும் காலங்களிலும் வகுப்புவாதம் அதிகரித்துள்ளது.

இப்படிப்பட்ட மதக்கலவரங்களை ஆதரவளித்து நடத்துவதற்கான காரணமும் அவசியமும் முதலாளி வர்க்கத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கு மட்டும் தான் உள்ளது என்பது இதனால் தெளிவாகிறது. ஆகையினால் உண்மையான மதச்சார்பின்மையை மக்கள் வாழ்விலும் சமுதாயத்திலும் நடைமுறைப்படுத்தும் அவசியமும் தேவையும் தொழிலாளி வகுப்பினருக்கு மட்டும் தான் உள்ளது என்றும் அதற்காக தொழிலாளி வகுப்பு ஆட்சியை நிறுவது மட்டுமே ஒரே தீர்வாக இருக்கும் என்று அவர் உரையை முடித்தார்.

முதுபெரும் கம்யூனிஸ்டும், அனுபவம் செறிந்த தோழருமாகிய நல்லசாமி, பேசுகையில் இந்த முதலாளித்துவ அமைப்பு இருக்கும் வரை, மற்ற எல்லா மக்களின் மீதும் தொழிலாளி வர்க்கத்தின் மீதும் இயங்கும் இந்த வன்முறை இயந்திரமான முதலாளித்துவ அரசு இருக்கின்ற வரையில், இப்படிப்பட்ட வகுப்புவாத வன்முறைகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து கொண்டு தான் இருக்கும் என்று கூறினார். மேலும் அவர், பல இலட்சம் கோடி ரூபாய்கள் செலவிட்டு முதலாளி வர்க்கம் போர்க் கருவிகளை வாங்குவதும் இன்னும் பல நவீன ஆராய்ச்சிகள் செய்வதும் மக்களுக்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் சேவை செய்வதற்காகவா அல்லது அவர்களை ஒடுக்குவதற்கா என்ற கேள்வியை எழுப்பினார்.

இளைஞர்கள் சார்பாக பேசிய தோழர். சத்தீஷ், இந்த அமைப்பின் போக்கும் பொருளாதார போக்கும் முதலாளிகளைச் சார்ந்ததாக இருக்கையில், தொழிலாளி வர்க்கத்திற்கு வகுப்புவாத அடிப்படையில் சச்சரவுகளில் ஈடுபடுவதற்கு நேரமும் அவசியமும் இல்லை. ஆகவே இப்படிப்பட்ட வகுப்புவாத கலவரங்களை ஏற்பாடு செய்வதும் அதனால் பயனடைவதும் முதலாளி வர்க்கமாகவே இருக்க முடியும், என்றார். மேலும் அவர், இந்த சமுதாயத்தின் முதலாளிவர்க்க போக்கை திசைமாற்றி தொழிலாளர்களுக்கு உகந்ததாக மாற்றுவது தான் இதற்கு சரியான நிரந்தர தீர்வாக இருக்கும் என்றார்.

வி.எச்.எஸ் மருத்துவமனை தொழிற் சங்கத்தின் செயலாளரும் தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் அமைப்பாளருமான தோழர். மணிதாசன், விவாதத் தலைப்பின் அவசியத்தையும், எப்படி நம்முடைய ஆய்வுகளும் கருத்துக்களும் தொழிலாளர்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கிறது என்றும் விளக்கிக் கூறினார். வகுப்புவாதத்திற்கும் பிளவுவாதத்திற்கும் முடிவு கட்டுவதற்கு தொழிலாளர்களிடையே ஒரு பரந்துபட்ட ஒற்றுமையைக் கட்டுவதும், அரசியல் விவாதங்களை நடத்துவதும் மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தினார். வகுப்புவாதம் பற்றிய விவாதத்தை நாம் மேலும் பல இடங்களில் உழைக்கும் மக்களிடம் கொண்டு செல்வது மிக அவசியம் என்றார்.

குலோபல் மருத்துவமனை செவிலியர் சங்க தலைவரான தோழர். மாந்தனேயன், இந்த தலைப்பு முதலாளி வர்க்க கட்சிகளிடையே பேசப்படுவதனால், நாமும் இவற்றில் உழல வேண்டுமா என்ற கேள்வியை முன் வைத்தார். இதனால் நாமும் அந்த விவாதத்தில் மூழ்கி விடாமல், முதலாளி வர்க்க சிக்கலை தீர்க்கும் வழிமுறைகளையும் திட்டங்களையும் ஆராய வேண்டும் என்றார்.

விவசாய சங்கத் தலைவர் தோழர். சரவணன் பேசுகையில், இந்த வகுப்புவாதத்தை வைத்து இந்திய அரசியலில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. முதலாளித்துவ கட்சிகளிலேயே ஒரு சாரார் கட்சிகளை வகுப்புவாதக் கட்சி என்றும் மற்றுமொரு சாராரை மதச்சார்பின்ற கட்சிகளென்றும் பரப்புரை செய்து, எப்போதும் ஒன்றை மாற்றி மற்றொன்றை அதிகாரத்திற்குக் கொண்டுவருவதன் மூலம், முதலாளித்துவ ஆட்சி மாற்றமின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முடிவற்ற இந்த சங்கிலியை நாம் உடைத்தாக வேண்டும். எனவே முதலாளி வர்க்கத்தின் சூழ்ச்சியை தெளிவுபடுத்த வகுப்புவாத அரசியல் வரலாற்றை தொழிலாளர்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் எடுத்துச் செல்லுவது மிக முக்கிய பணியாகும், என்றார்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த மற்றும் பல தோழர்கள் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இந்த கோட்பாடுகளும் விவரங்களும் தொழிலாளி வகுப்பினருக்கு சரியான பாதையை காட்டுமென பலரும் கூறினர். 

Pin It