தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் எதிரான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ஒழிக!

ஏகபோக முதலாளித்துவ ஆட்சியின் ஒரு கருவியே பாராளுமன்றம்!

தொழிலாளர்கள் விவசாயிகளின் ஆட்சியை நிறுவும் நோக்கத்தோடு போராடுவோம்!

இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி மத்திய குழுவின் அறைகூவல், 13 டிசம்பர், 2012


தொழிலாளர் தோழர்களே!

மன்மோகன் சிங் அரசாங்கத்தின் பொருளாதார தாக்குதலை ஒன்றுபட்டு எதிர்க்க நாம் தயாராகும் இந்த நேரத்தில், பாராளுமன்றத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளில் தீவிர கவனம் செலுத்தி தகுந்த அரசியல் படிப்பினைகளை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

பல நிறுவனப் பொருட்கள் சில்லறை வர்த்தகத்தில் பெரும்பான்மை அந்நிய உடமையை அனுமதிக்கும் கொள்கை முடிவு பெரிய இந்திய நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு சில்லறை வர்த்தக நிறுவனங்களின் நலன்களை கருத்தில் கொண்டே எடுக்கப்பட்டது. வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நுகர்வோர் செலவு செய்வது குறைந்து தேக்க நிலையை அடைந்துள்ள இந்த சமையத்தில் வால் மார்ட், கேரிஃபோர் போன்ற உலகளாவிய சில்லறை வர்த்தக பூதங்கள் இந்திய சந்தையில் நுழைய ஆர்வமாக உள்ளனர். சில்லறை வணிகத்தில் நுழைந்துள்ள இந்திய நிறுவனங்கள் அவர்களுடன் கூட்டாளியாக ஆர்வமாக இருக்கின்றனர்.

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தால் 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கொள்கை மாற்றம் முன்வைக்கப்பட்டது. தன்னுடைய நட்பு கட்சிகள் சிலர் உட்பட அதிகாரத்திலிருந்த பிராந்திய கட்சிகளிடத்தில் பரவலான எதிர்ப்பு இருந்ததை கணக்கில் எடுத்துக்கொண்டு அது அந்த நேரத்தில் இந்தக் கொள்கையை மேற்கொண்டு எடுத்துச் செல்லவில்லை. காங்கிரசு கட்சி கூட அந்த நேரத்தில் எதிர் அணியில் சேர்ந்து கொண்டது.

டாடாக்கள், ரிலையன்சு, பிர்லாக்கள், பாரதி தலைமையிலுள்ள இந்திய நிறுவனங்களும், 10 ஆண்டுகளுக்கு முன்பு, பல நிறுவனப் பொருட்கள் சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை நுழையவிடக் கூடாது என்ற முனைப்போடு தான் இருந்தனர். இந்த இலாபகரமான வணிகத்தில் முதலில் தாங்கள் காலூன்ற வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். தாங்களுடைய சொந்த விரிவாக்க முயற்சியின் முலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தையின் வெறும் 5% பங்கை மட்டும் கைப்பற்றியுள்ள நிலையில் அவர்கள் தற்போது அதிவேகமாக வளர வேண்டும் என்பதற்காக உலகளாவிய சில்லறை வர்த்தக பூதங்களோடு கூட்டாளியாக ஆக ஆர்வமாக இருக்கின்றனர். உணவு விலைகள் உயர்ந்திருப்பதற்கும் அழுகக்கூடிய உணவுப் பொருட்கள் பெரிய அளவில் வீணாவதற்கும் இதுவே தீர்வு என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் அவர்களோடு ஒத்து ஊதுகின்றது.

இந்தக் கொள்கை முடிவிற்கு எதிர்ப்பு தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிறு கடைக்காரர்களிடமிருந்தும், விவசாய மற்றும் தொழில்துறை நுகர் பொருட்களின் வர்த்தகத்தில் தற்போது ஆதிக்கம் செலுத்துகின்ற முதலாளித்துவ மொத்த வியாபாரிகள் மற்றும் பெரிய அளவிலான வர்த்தகர்களின் பல்வேறு பிரிவுகளிலிருந்தும் வருகின்றது.

2011-இல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் இந்த பிரச்சினையில் பாராளுமன்றத்தில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவோமென உறுதியளித்திருந்தது. எனினும், இந்திய மற்றும் வெளிநாட்டு முதலாளித்துவ ஏகபோகங்களின் விடாப்பிடியான உந்துதனாலும், வால் மார்ட் சார்பில் அமெரிக்க அரசாங்கம் நெருக்குதல் கொடுத்ததினாலும், மன்மோகன் சிங் அமைச்சரவை செப்டம்பர் 2012-இல் இந்தக் கொள்கை முடிவை எடுத்தது. அதே நேரத்தில், பிராந்திய முதலாளித்துவ குழுக்களுக்கு இடமளிக்கும் வகையில், தங்கள் பகுதியில் இதை எப்பொழுது செயல்படுத்தலாம் என்பதை மாநில அரசாங்கங்களின் முடிவுக்கே விட்டு விட்டது.

அடிப்படையில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை பா.ஜ.க எதிர்க்கவில்லை. இருந்தாலும் பா.ஜ.க தனது பரம எதிரியான காங்கிரசு கட்சியை வலுவிழக்க செய்வதற்கும் இழிவுபடுத்துவதற்கும் எதிர்ப்பு அலை மீது சவாரி செய்வதென முடிவு செய்தது. அது, நாடாளுமன்றத்தில் ஒரு விவாதமும் வாக்கெடுப்பும் நடத்த வேண்டுமெனக் கூறி, அமைச்சரவை முடிவை மாற்றுவதற்காக ஒரு தீர்மானத்தையும் முன்மொழிந்தது.

மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், பீகார், ஒரிசா, தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களின் பிராந்திய கட்சிகள், அந்தந்த பிராந்திய முதலாளித்துவ குழுக்கள் வால் மார்ட் மற்றும் பிற உலகளாவிய சில்லறை வர்த்தக பூதங்களின் நுழைவால் அச்சப்பட்டுள்ள அளவிற்கு சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை எதிர்க்கின்றனர். தற்போது பிராந்திய சந்தை விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வருபவர்களுக்குச் சார்பாக செயல்படும் பெரும்பாலான இந்தக் கட்சிகள், அவர்களுடைய பரப்பை பெரு நிறுவன ஏகபோகங்களிடமிருந்து பாதுகாக்க விழைகிறார்கள்.

தொழிலாளர்களும் விவசாயிகளும் தற்போதுள்ள வர்த்தக அமைப்பினாலும் போக்கினாலும் பயனடையவில்லை. பல நிறுவனப் பொருட்கள் சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு நுழைவதாலும் நமக்குப் பயனில்லை. பழங்களுக்கும் காய்கறிகளுக்கும் தொழிலாளர்கள் கொடுக்கும் அளவுகடந்த விலைகளில் 15% க்கும் குறைவாகவே அவற்றை உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் சென்றடைகிறது. மீதமுள்ள எல்லாமும் சேதாரத்திற்கும், முதலாளித்துவ வியாபாரிகள் மற்றும் பல அடுக்கு இடைத்தரகர்களின் பைகளை நிரப்புவதற்கும் பயன்படுகின்றது.

நம் நாட்டிலுள்ள வர்த்தக அமைப்பு நவீனமாக்கப்பட வேண்டும். எளிதில் அழுகிவிடக் கூடிய உணவு பொருட்களின் விரயத்தை குறைக்கும் வகையில் குளிர்பதன சேமிப்பு வசதிகளைக் கொண்டு பெரிய அளவில் நிர்வகிக்கப்பட வேண்டும். தனியார் இலாபத்தை அதிகரிக்கும் நிறுவனங்களின் கைகளில் வர்த்தகத்தை கொடுத்துவிடுவது தான் வர்த்தகத்தை நவீனப்படுத்த சிறந்த மற்றும் ஒரே வழி என்ற பெரிய பொய்யை பெரு முதலாளி வர்க்கத்தின் பொருளாதார வல்லுனர்கள் பரப்பி வருகிறார்கள். இது, பல தனிப்பட்ட இடைத்தரகர்களுக்கு பதிலாக தொழிலாளர்களையும் விவசாயிகளையும் அதிக சக்தியோடு கசக்கிப் பிழியும் சில பூதாகரமான நிறுவனங்களின் கைகளில் கொண்டு சேர்க்கும்.

உண்மையான தீர்வும் சிறந்த மாற்றும், செயல்பாட்டு அளவை மட்டுமன்றி உடமையையும் வர்த்தக கட்டுப்பாட்டையும் சமூகமயமாக்குவதாகும். அனைவருக்குமான நவீன பொது வினியோகம் மற்றும் கொள்முதல் அமைப்பை நிறுவ வேண்டும் என்பதே இதற்கு பொருள். சமீப ஆண்டுகளில் தொழிலாளர்கள் விவசாயிகளின் அமைப்புகள் தொடர்ந்து எழுப்பி வரும் கோரிக்கைகளில் இதுவும் ஒன்று. மத்திய அரசாங்கம் வர்த்தகத்தில் தனியார் மற்றும் பெருநிறுவனங்களின் ஏகபோகத்திற்கான எதிர் திசையில் நகர்கிறது.

அனைவருக்குமான நவீன பொது வினியோக அமைப்பிற்கு, மொத்த வியாபார அளவில் கொள்முதல் மீது சமூக ஏகபோகம் தேவைப்படுகிறது. இறுதி நுகர்வோருக்கு வினியோகம் செய்வது பல்வேறு பொது மற்றும் தனியார் சில்லறை விற்பனை கூடங்களின் வழியாக இருக்க முடியும். மொத்த வர்த்தகத்தின் மீதான சமூக ஏகபோகம், அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களும் தங்கள் பொருட்களுக்கு இந்த ஒரே மூலத்தை நம்பியிருப்பதை உறுதி செய்யும்.

தொழிலாளி - விவசாயிகளின் மேற்பார்வைக்கும் கட்டுப்பாட்டிற்கும் உட்பட்ட அனைவருக்குமான நவீன பொது வினியோக அமைப்பிற்கு, தேவையான நிபந்தனையாக மொத்த வர்த்தகத்தை உடனடியாக தேசியமயமாக்குவதை அனைத்து கட்சிகளும், தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் சமுதாயத்தின் மற்ற நடுத்தர தட்டு மக்களுடைய அமைப்புகளும் ஒன்றுபட்டு கோரவும் போராடவும் வேண்டும்.

விவசாய குழுக்களும் கூட்டுறவுகளும் விவசாய பொருட்கள் நியாயமான விலையில் கொள்முதல் செய்யப்படுவதை மேற்பார்வையிட வேண்டும். இறுதியில் பொருட்கள் விற்பனை செய்யப்படும் நகரங்களில் நியாய விலை கடைகளை மக்கள் குழுக்கள் மேற்பார்வையிட வேண்டும். வர்த்தக மற்றும் பொருட்களின் விநியோகத்தில் தனியார் ஏகபோகங்களின் கட்டுப்பாட்டை அனுமதிப்பதற்கு மாற்று இதுவே ஆகும்.

தொழிலாளர் தோழர்களே!

ஏகபோக குடும்பங்களின் தலைமையில் உள்ள முதலாளி வர்க்கம் இந்த நேரத்தில் ஒரு மூர்க்கத்தனமான போக்கை மேற்கொண்டுள்ளது. இந்திய ஏகபோகங்கள் வெளிநாடுகளில் தங்களது மூலதனத்தை ஏற்றுமதி செய்கின்ற அதே நேரத்தில், நம் நிலத்தையும் உழைப்பையும் கூட்டாக சூறையாடுவதை  தீவிரப்படுத்த வெளிநாட்டு ஏகபோகங்களை நம் நாட்டில் முதலீடு செய்ய அழைக்கின்றனர். இந்த ஏகாதிபத்திய முயற்சிக்கு ஏற்ப கொள்கைகள் மாற்றியமைக்கப்படுகின்றன.

நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையான பேச்சாளர்கள் அமைச்சரவையின் முடிவை எதிர்த்துப் பேசி அதைத் திரும்ப பெற வேண்டும் என விரும்பிய போதும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆளும் காங்கிரசு கட்சி வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதை நிறைவேற்றியிருக்கிறார்கள். மத்திய நிதி வளங்கள் மற்றும் மத்திய புலனாய்வு துறை மீது தனக்குள்ள கட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, ஆளும் கட்சி பேரம் பேசி அல்லது மிரட்டி சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவை பெற்றனர். வாக்குகள் எப்படி இருக்க வேண்டுமென்பது திரைக்குப் பின்னால் முடிவெடுக்கப்பட்டது. முடிவில், மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் வலுப்படுத்தப்பட்டுள்ளது. சொந்த நாட்டின் மற்றும் வெளிநாடுகளின் ஏகபோக முதலாளிகளுடைய நலனுக்காக, நம்முடைய வாழ்வாதாரங்கள் மீதும் உரிமைகள் மீதும் தாக்குதல்களை அதிகரிக்க அது தயாராகி வருகின்றது.

ஓய்வூதிய நிதியை தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு திறந்து விடுவதுதான் தொழிலாளர்களின் உரிமைகள் மீது வரவிருக்கும் உடனடி தாக்குதலாகும். இதனால் ஓய்வு பெற்ற பின் கிடைக்கும் பலன்களெல்லாம் "சந்தை அபாயங்களுக்கு" உட்பட்டதாக ஆகும். நம் கடின உழைப்பின் சேமிப்புகளை முதலாளி வர்க்கம் திருடவும், பெருநிறுவனங்களுக்கு ஒரு மலிவான நிதி மூலமாக இதை மாற்றுவதற்கும் அனுமதிப்பதே இந்தச் சட்டமாகும்.

ஓய்வூதிய சீர்திருத்தம் என்ற பெயரில் தொழிலாளி வர்க்கத்தைத் தாக்குவதற்கான நிலைமைகளை தயாரிப்பதற்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வேலை உயர்வில் இடஒதுக்கீட்டிற்கான ஒரு மசோதாவை முதலில் அறிமுகப்படுத்துகிறது. இதன் நோக்கம் சாதி வேறுபாடுகளையும் போட்டிகளையும் பயன்படுத்தி தொழிலாளி வர்க்கத்தை பிளவு படுத்தி மக்களின் கவனத்தை திசை திருப்புவதாகும். அதே நேரத்தில் பாராளுமன்றத்தில் காங்கிரசு கட்சிக்கு ஆதரவாக வாக்களித்த பி.எஸ்.பி-க்கு பரிசளித்தாகவும் அது இருக்கும்.

இந்த உண்மைகளெல்லாம் எதை காட்டுகின்றன? பாராளுமன்ற சனநாயகம் என்பது உண்மையில் ஏகபோக குடும்பங்களைத் தலைமையாகக் கொண்டிருக்கும் முதலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்று அவை காட்டுகின்றன.

பெரிய அரசியல் கட்சிகளுக்கும் அவற்றின் தேர்தல் பிரச்சாரங்களுக்கும் ஏகபோக முதலாளிகள் வழக்கமாக நிதியளித்து வருகின்றன. மேலும் அக்கட்சிகளுக்குள் தங்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய ஒரே ஒரு கட்சியின் கைகளில் உச்ச செயலாக்க அதிகாரமாகிய மத்திய அமைச்சரவையை ஒப்படைக்கப்படுவதை அது உறுதி செய்கிறது.

பல்வேறு பகுதிகளிலுள்ள முதலாளிகளும் நிலபிரபுக்களும் தங்கள் சொந்த கட்சிகளைக் கட்டி மாநில அரசாங்கங்களில் செல்வாக்கிற்கும் அதிகாரத்திற்கும் போட்டியிடுகின்றனர். மத்திய அமைச்சரவையைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள கட்சியிடம் நிதி, உளவுத்துறை மற்றும் ஆயுத படை ஆகிய பல்வேறு ஆயுதங்களும் இருக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தி மாநில அரசாங்கங்களை நடத்தும் கட்சிகளை தங்களுக்கு ஏற்றவாறு சரிகட்டுகின்றனர்.

அமைச்சரவையில் தலைமை ஏற்கும் கட்சி ஒன்றன் பின் ஒன்றாக ஆணைகளைப் பிறப்பித்து ஆட்சியை நடத்துகின்றனர். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உள்ள வரை, அமைச்சரவை எந்த கொள்கை முடிவையும் எடுக்க அரசியல் சட்டம் அனுமதிக்கிறது. சட்டங்களில் மாற்றம் செய்யாமலிருக்கும் வரை அது நாடாளுமன்ற ஒப்புதலை பெற வேண்டிய அவசியம் இல்லை. கொள்கை முடிவின் மேல் விவாதமும் வாக்கெடுப்பும் மிக அரிதாக நடைபெறும். இந்த முறை நடந்தது போல, பாராளுமன்றத்திற்குள் ஆழமான பிரிவுகள் இருந்தால் மட்டுமே, தங்களுடைய வேடத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, ஆளும் முகாம் விவாதத்திற்கு ஒப்புக் கொள்ளும் கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்.

உழைக்கும் பெரும்பான்மையினர் மீது சுரண்டும் சிறுபான்மையினர் தங்கள் விருப்பத்தை சுமத்துவதற்கும் சுரண்டுபவர்களுக்கு மத்தியிலுள்ள முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ளவும் உள்ள ஒரு ஏற்பாடே இந்த பாராளுமன்ற சனநாயக அமைப்பாகும். மக்கள் தொகையில் 90% க்கும் மேலாக உள்ள தொழிலாளர்களும் விவசாயிகளும் அங்கு பிரதிநிதித்துவப் படவில்லை. நமது நலன்கள் பாதுகாக்கப்படுவதில்லை. அவைகள் தாக்க அனுமதிக்கப்படுகிறது.

தொழிலாளர் தோழர்களே!

ஆங்கிலேய அமெரிக்க வழிகளில் சிந்திக்க பயிற்சி பெற்ற டாக்டர் மன்மோகன் சிங்கும் இதர பொருளாதார வல்லுனர்களும் உலகின் மிக பெரிய முதலாளிகள் நம் நாட்டில் எவ்வளவு முதலீடு செய்கிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் பொருளாதாரம் இருப்பது போல பேசுகிறார்கள். தொழிலாளி வர்க்கத்திற்கும் பிற உழைக்கும் மக்களுக்கும் வாழ்வாதாரத்தை முதலாளி வர்க்கம் தான் வழங்குகிறது என்பது போல அவர்கள் பேசுகிறார்கள். உண்மையோ இதற்கு நேரெதிரானது. தொழிலாளர்களும் விவசாயிகளும் கைவினைஞர்களும் தான் நமது சமுதாயத்தின் செல்வத்தை உற்பத்தி செய்கிறார்கள். முதலாளிகள் ஒட்டுண்ணிகளாக நம்முடைய உழைப்பை உறிஞ்சி வாழ்ந்து வருகிறார்கள். உழைப்பாளிகளாகிய நாம் உருவாக்கும் உபரி மதிப்பை அவர்கள் தங்களுடையதாக ஆக்கிக் கொள்ளுகின்றனர்.

எனவே, ஒவ்வொரு தொழிலாளியுடைய விவசாயியுடைய குடும்பத்தின் வாழ்க்கை தரத்தில் அதிர்ச்சிகள் மற்றும் நெருக்கடிகளில் இருந்து முழு பாதுகாப்போடு கூடிய ஒரு நிலையான உயர்வை நாம் கேட்கும் போது, சமூக செல்வத்தின் படைப்பாளிகள் என்ற முறையில் நமக்கு சேர வேண்டியதைத் தான் நாம் கேட்கிறோம். நமக்கு உரிமையாக கிடைக்க வேண்டியதைத் தான் நாம் கோருகிறோம். அனைத்து முடிவெடுக்கும் அதிகாரமும் முதலாளி வர்க்கத்திடமும் அதன் நம்பிக்கைக்குறிய கட்சிகளிடமும் குவிந்து கிடப்பதற்கு பதிலாக, உழைக்கும் பெரும்பான்மையான மக்களின் கைகளில் இருக்குமானால், அது நிச்சயமாக சாத்தியமே.

சந்தையில் உள்ள பெரிய ஏகபோகங்கள் இலாபமடைவதற்கேற்ப பொருளாதாரத்தை சீரமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று முதலாளித்துவ பொருளாதார வல்லுனர்கள் அறிவிக்கின்றனர். தொழிலாளி வர்க்க அரசியல்வாதிகள் பொருளாதாரத்தின் "சந்தை சார்ந்த சீர்திருத்ததிற்கு" ஒரு மாற்று உள்ளது என்று துணிவோடு வாதிட வேண்டும்.

மக்களுடைய அதிகரித்துவரும் பொருட்கள் மற்றும் கலாச்சாரத் தேவைகளை வழங்குவதற்கு,  பொருளாதாரத்தைத் திருத்தியமைப்பதே அந்த மாற்றாகும். உழைக்கும் மக்களின் கூட்டு உழைப்பு உற்பத்தி செய்யும் உபரி மதிப்பானது, அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தையும், அவர்களுடைய உற்பத்தி திறனையும் உயர்த்துவதற்காக முதலீடு செய்யப்படும்.

மக்களைச் சுரண்டி, இயற்கை வளங்களைச் சூறையாடுவதற்கு பதிலாக, மக்களுக்காகவும் இயற்கை சூழலுக்காகவும் முதலீடு செய்வது பொருளாதாரத்தின் நோக்கமாகவும், உந்து சக்தியாகவும் அமையும். இதற்காக இருக்கும் உழைப்பு சக்தி முழுவதும் பயன்படுத்தப்படும். அங்கு வேலையின்மையோ பணவீக்கமோ, எந்தப் பொருளாதாரப் பின்னடைவோ, மிகை உற்பத்தி அல்லது குறைவான நுகர்வு போன்ற நெருக்கடிகளும் இருக்காது.

பொருளாதாரத்தை திருத்தியமைக்கும் பாதையைத் திறந்துவிடும் திறவு கோல், செல்வத்தை உருவாக்கும் உழைக்கும் மக்களே சமுதாயத்தின் மன்னர்களாக ஆவதாகும். இதைச் செய்வதற்கு, சனநாயக அமைப்பிலும், அரசியல் வழிமுறையிலும் தீவிர மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.

மக்களை முடிவு எடுப்பவர்களாக அங்கீகரிக்கும், தொழிலாளர்கள், விவசாயிகளுடைய உரிமைகளுக்கும், எல்லா குடிமக்களுடைய சரி சமமான அரசியல் உரிமைகளுக்கும், தேசங்கள், தேசிய இனங்கள் மற்றும் மக்களுடைய உரிமைகளுக்கும், எல்லா மக்களுடைய உரிமைகளுக்கும் உத்திரவாதமளிக்கும், ஒரு புதிய அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அமைந்த ஒரு புதிய அரசு நமக்குத் தேவைப்படுகிறது.

தற்போதுள்ள அரசியல் வழிமுறையில், மக்களுடைய ஒப்புதலின்றி தீர்மானிக்கப்பட்ட வேட்பாளர்களில் ஒருவரை மக்கள் தேர்ந்தெடுக்குமாறு இருக்கிறது. தங்களுடைய வாழ்க்கையை பாதிக்கும் முடிவுகளை எடுப்பதில் மக்களுக்கு பங்கிருக்க வேண்டுமென பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் இன்று கேட்கிறார்கள். பணபலமும் அதிகாரமும் கொண்ட கட்சிகளால் மேலிருந்து திணிக்கப்படும் வேட்பாளர்களில் ஒருவருக்கு வெறுமனே வாக்களிப்பதில் அவர்கள் திருப்தி அடைவதில்லை.

ஒவ்வொரு தொழிலாளியும் விவசாயியும் தேர்ந்தெடுக்கவும் தேர்ந்தெடுக்கப்பட்டவும் உள்ள உரிமையை செயல்படுத்தக்கூடிய சட்டங்களையும் வழிமுறைகளையும் கோரி அவற்றிற்காக நாம் போராட வேண்டும், அதாவது, வேட்பாளர்களைத் தீர்மானிப்பதில் நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு இருக்க வேண்டும். அனைத்துத் தொழிற்சங்கங்களும் பிற மக்கள் அமைப்புக்களும் தங்கள் வேட்பாளர்களை முன்வைக்க முடிய வேண்டும். இந்த எல்லா வேட்பாளர்களும் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வாக்காளர்களின் ஒரு பொதுவான தேர்வு முறையின் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும்.

தாங்கள் வேலை செய்யும் இடங்களிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் அணிதிரட்டப்பட்ட, உழைக்கும் மக்கள், தேர்தலில் யார்யார் வேட்பாளர்களாக நிற்கலாம் என்பதைத் தேர்வு செய்யவும், அங்கீகரிக்கவும் அல்லது நிராகரிக்கவும் உரிமை கொண்டிருக்க வேண்டும். நாம் தேர்ந்தெடுத்தவர்களை எந்த நேரத்திலும் திருப்பியழைக்கும் உரிமை நம் அனைவருக்கும் இருக்க வேண்டும், புதிய சட்டங்களை முன்வைக்கவும், கொள்கை முடிவுகளை முன்மொழியவும் நமக்கு உரிமை வேண்டும். இந்த உரிமைகளைச் செயல்படுத்துவதற்கு, ஒவ்வொரு தொகுதியிலும் பெரும்பான்மையான மக்களின் மதிப்பிற்கும் நம்பிக்கைக்கும் உரிய குடிமக்களைக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்கள் நமக்குத் தேவைப்படுகிறது.

தொழிலாளர் தோழர்களே!

அடிப்படைவாத, வகுப்புவாத பா.ஜ.க விலிருந்து மதச்சார்பற்ற காங்கிரசு கட்சியைப் பாதுகாக்கும் நிலைப்பாடானது, பெரிய முதலாளி வர்க்கத்தின் தாக்குதலுக்கு எதிராக அரசியல் ஒற்றுமைக் கட்டுவதிலிருந்து ஒரு திசை திருப்பலாகுமென்பது வரலாற்று அனுபவத்திலிருந்து பெறப்படும் ஒரு முக்கியமான படிப்பினையாகும்.

காங்கிரசு, பா.ஜ.க ஆகிய இரண்டு கட்சிகளுமே ஏகபோக நிறுவனங்களுக்கு பலனளிக்கும் அதே கொள்கைச் சீர்திருத்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் உறுதியாக இருக்கின்றன. காங்கிரசு கட்சியின் மதச்சார்பின்மையும், பா.ஜ.க வின் வகுப்புவாதமும் பிளவுபடுத்தி ஆட்சி செய்யும் முறையின் இரு பக்கங்களாகும். இந்த இரு கட்சிகளுமே வகுப்புவாத வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதிலிருந்து தடுப்பதிலும் போட்டியிட்டும் ஒருவரோடொருவர் ஒத்துழைத்தும் வந்திருக்கிறார்கள்.

மதச்சார்பின்மையைப் பாதுகாப்பது என்ற பெயரில் முதலாளி வர்க்கத் திட்டத்தோடு சமரசமாகப் போகும் போக்கிலிருந்து முற்றிலுமாக விடுபட்டுவரும் அடிப்படையில் எல்லா கம்யூனிஸ்டுகளும் ஒன்றுபட வேண்டும்.

பெரு முதலாளி வர்க்கத் திட்டங்களை எதிர்ப்பதில் வட்டார முதலாளி வர்க்கக் கட்சிகள் முன்னுக்குப் பின் முரணாகவும், நம்பமுடியாதவைகளாகவும் இருக்கின்றன. 1996க்கும் 1999 க்கும் இடையில் ஒரு சில ஆண்டுகள் நீடித்த மூன்றாம் முன்னணி அரசாங்கத்தின் செயல்பாடுகள் இதைக் காட்டுகின்றன. அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களிலும் வாக்கெடுப்பிலும் அது மீண்டும் வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

தொழிலாளி வர்க்க ஒற்றுமையையும், விவசாயிகள், பிற உழைக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களோடு அதன் கூட்டணியையும் வலுப்படுத்த கம்யூனிஸ்டுகளும், தொழிலாளி வர்க்கத்தின் எல்லா செயல் வீரர்களும் தங்களுடைய ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும் என்பது ஒட்டுமொத்த முடிவாகும். பணியானது ஒரு மதச்சார்பற்ற முன்னணியையோ மூன்றாவது முன்னணி என்று அழைக்கப்படுவதையோ கட்டுவதல்ல. வட்டார முதலாளித்துவ கட்சிகள் நம்முடைய போராட்டத்தில் தற்காலிக கூட்டாளிகளாக இருக்கலாம். ஆனால் அவர்கள் நம் தலைவர்கள் இருக்க முடியாது.

இரண்டு வகையான முன்னணிகள் அல்லது அரசியல் கூட்டணிகள் மட்டும் சாத்தியமாகும். அது இன்றிருக்கும் முதலாளி வர்க்க ஆட்சியைக் கட்டிக் காக்கும் ஒரு முன்னணியாக இருக்கலாம். அல்லது அது தொழிலாளர்கள், விவசாயிகளுடைய ஆட்சியை நிறுவுவதற்கான ஒரு முன்னணியாக இருக்கலாம். தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் பிந்தைய வகையான முன்னணியைக் கட்ட வேண்டியது கம்யூனிஸ்டுகளுடைய கடமை ஆகும்.

தொழிலாளர் தோழர்களே!

நம்முடைய உரிமைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவாகவும், முதலாளித்துவ தாக்குதல்களுக்கு எதிராகவும், தொழிற்சங்க வேறுபாடுகளைக் கடந்த அளவில், செயல்பாடுகளில் ஒன்றுபடுத்தும் ஒரு முக்கிய அடியை நாம் எடுத்திருக்கிறோம்.

'ஒருவர் மீது தாக்குதல், அனைவர் மீதான தாக்குதல்' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நாம் இந்த ஒற்றுமையைக் கட்டி உறுதிப்படுத்த வேண்டும்! முதலாளித்துவ தாக்குதலால் கொள்ளையிடிக்கப்பட்டு சீரழிக்கப்பட்டு வரும் நமது விவசாய சகோதரர்களுடைய உரிமைகளுக்காக நாம் போராட வேண்டும்.

தொழிலாளர்கள் அரசியலை விவாதிக்க மேடைகளை நாம் உருவாக்க வேண்டும். உற்பத்தி ஆலைகள், துறைகள் மற்றும் குறுகிய கட்சி வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்ட அளவில், தொழிற்சாலைகளிலும் தொழிற்பேட்டைகளிலும் தொழிலாளர் ஒற்றுமைக் குழுக்களை நாம் கட்ட வேண்டும்.

பொருளாதாரத்தை திருத்தியமைக்க வர்த்தகத்தின் மீது சமூகக் கட்டுப்பாட்டையும், ஏனைய நடவடிக்கைகளையும் கோரி நாம் ஆர்பாட்டங்களில் ஈடுபட வேண்டும்.  எல்லா ஊதியத் தொழிலாளர்கள் மற்றும் நிலத்தை உழுபவர்களுடைய மீறமுடியாத உரிமைகளுக்கு அரசியல் சட்ட உத்தரவாதம் கோரி நாம் போராட வேண்டும். காங்கிரசு, பா.ஜ.க ஆகிய கட்சிகளின் தலைமையில் இயங்கும் பெரு முதலாளி வர்க்கக் கட்சிகளுடைய உடும்புப் பிடியை உடைப்பதற்காக அரசியல் வழிமுறையில் தீவிர சீர்திருத்தங்கள் கோரி நாம் ஆர்பாட்டங்களை நடத்த வேண்டும்.

ஏதாவதொரு கட்சியின் குறுகிய பாராளுமன்ற இலாபங்களுக்காக நம்முடைய போராட்டத்தை சூழ்ச்சியாகக் கையாளும் கட்சிகளையும், தொழிற்சங்க தலைவர்களையும் பற்றி நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

ஒரு ஐக்கியப்பட்ட தொழிலாளி வர்க்கத்தின் எதிர்ப்பை உருவாக்க ஒரு முக்கியமான அடியானது, அனைத்துத் தொழிலாளி வர்க்கத்தின் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்புக்களின் ஆதரவோடு தொழிலாளர்களுடைய வேட்பாளர்களைத் தேர்தல்களில் நிறுத்துவதாகும்.

எல்லா கம்யூனிஸ்டுகளும், தொழிலாளி வர்க்கத்தின் ஆர்வலர்களும், எல்லா தொழிற்சங்கத் தலைவர்களும் ஒன்றுபட்டு, ஐக்கிய தொழிலாளி வர்க்க எதிர்ப்பின் ஒரு ஒற்றை பட்டியல் வேட்பாளர்களின் வெற்றிக்காகப் போராடுவோம்!

நம்முடைய தனிப்பட்ட திட்டத்தையொட்டி நாம் உறுதியாக ஒன்றிணைவோம்!

முதலாளித்துவ சனநாயகம் ஒழிக!

தொழிலாளர்கள் விவசாயிகளின் ஆட்சியை நிறுவும் நோக்கத்தோடு போராடுவோம்!

இன்குலாப் ஜிந்தாபாத்!

புரட்சி ஓங்குக!

Pin It