கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இக்கட்டுரை எழுதும் நாள் வரை 47,000 மக்கள் கொரோனாவிற்குப் பலியாகி இருக்கிறார்கள். இது என்று முடியும் என்கிற எந்தவித கணக்கும் இல்லாமல் உலகின் வாழ்க்கை முறையை முற்றிலுமாக மாற்றி அமைத்திருக்கிறது. கொரோனாவிற்குப் பின்பான உலகம் என்பது முற்றிலும் வேறாக அமையும். இந்தியாவில் இன்றோடு 50 பேர் அரசின் எண்ணிக்கைப்படி பலியாகி இருக்கின்றனர். எவ்விதத் தயாரிப்பும் இல்லாமல் உலகம் இந்த நோய்க் கிருமி தொற்றை எதிர்கொள்கிறது. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான அனுபவத்தை நமக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றது.

இந்த நோய் இயற்கையாக வெளிக்கிளம்பியதா அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்டு ஒரு கிருமி யுத்தமாக நடத்தப்படுகிறதா என பல வகையான கேள்விகள் எழுந்து கொண்டிருக்கின்றன. சீனாவின் வூகான் பிரதேசத்தில் கடந்த 19ம் நூற்றாண்டிலேயே இது போன்ற தொற்றுநோய்க்கு உள்ளாகி பல லட்சக்கணக்கான மக்கள் இறந்திருக்கிறார்கள். ஆனால் இப்போதைய கொரோனா வகைக் கிருமியின் புதுவகையான செயல்பாடு என்பது பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது. இக்கிருமி வலிமையான தாக்கத்தை செலுத்தும் வகையில் தம்மை தகவமைத்துக் கொள்ளும் கிருமியாக அமைந்திருக்கிறது. இந்தக் கிருமி தொற்று பல வகையான மாற்றங்களை உலகப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

இந்த நோய்த் தொற்று ஆரம்பித்த 2019இன் டிசம்பரில் உலகப் பொருளாதாரம் மந்த நிலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதாவது உலகப் பொருளாதார வளர்ச்சி 2.5% எனும் அளவில் கிட்டத்தட்ட ஊர்ந்து கொண்டிருந்தது. இதில் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா 2% எனும் அளவிலும், ஜப்பான் 1% எனும் அளவிலுமே வளர்ச்சியைக் கொண்டிருந்தன. இந்தியாவும், சீனாவும் மிக மோசமான வளர்ச்சி விகிதத்தையே காட்டின. 2020 ஆம் ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி நிலை என்பது பின்னோக்கியே இருக்குமென OECD எனும் 36 வளர்ச்சியடைந்த நாடுகளின் அமைப்பு சொல்லி இருக்கிறது. இதன்படி சீனாவின் வளர்ச்சியானது கடந்த 30 வருடங்களில் இருந்ததை விட மிகவும் மோசமான நிலையை அடைந்திருக்கிறது. இதே போல இத்தாலியும் தொடந்து 17 மாதங்களாக மிக மோசமான உற்பத்தியைக் கொண்டிருக்கிறது. பிரஞ்சு தேசத்தின் நிலையும் இதே போலத் தான் இருக்கிறது. இப்படியான மோசமான பொருளாதார சூழலின் நடுவிலேயே இந்தக் கொரோனோ தாக்கம் ஏற்பட்டது.

தொற்று நோய்களின் தாக்கம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட ஆஸ்திரேலியாவின் பல்கலைக்கழகம் ஒரு குறிப்பை 2006ல் சொன்னது. அதாவது ஏதேனும் ஓர் உலகளாவிய தொற்று நோயினால் இறப்பு விகிதம் 1.2% இருக்குமெனில் வளர்ந்த நாடுகளின் உற்பத்தியில் 6% தடுக்கப்படும் என்றது. கொரோனாவினால் ஏற்படும் இறப்பு விகிதம் 3%லிருந்து 9% வரை வளர்ந்த நாடுகளில் இருப்பதை கணக்கில் எடுத்தால், வளர்ந்த நாடுகளின் பொருளாதார வீழ்ச்சி மிக மோசமானதாகவே இருக்க இயலும்.

பொருளாதார சவாலை எப்படி உலக முதலாளிகள் எதிர்கொள்ளப் போகிறார்கள்?

இதை ‘முதலாளிகள்’ என்பதைவிட முதலாளித்துவ அரசுகள், முதலாளித்துவ நிறுவனங்கள் என்பது மிகப் பொருத்தமாக அமையும். இந்த முதலாளித்துவ நிதி மூலதன அமைப்புகளுக்கு உதவி செய்யும் விதத்தில் அமெரிக்க அரசு வட்டி விகிதத்தைக் குறைத்தது. கனடாவும் இதையே செய்தது. ஐ.எம்.எஃப். மற்றும் உலக வங்கி கிட்டதட்ட 50 பில்லியன் டாலர்களை (கிட்டத்தட்ட 3 லட்சத்து ஐம்பதினாயிரம் கோடி ரூபாய்) விநியோகம் செய்யத் தயாரானது. இதில் 10 பில்லியன் டாலர்களை ஏழை நாடுகளுக்கு வட்டி இல்லாத கடனாகத் தர முன் வந்தது.

இந்த முயற்சிகள் அடிப்படையில் ஸ்டாக் மார்க்கெட் எனப்படும் பங்குச் சந்தையினை சிறிது வலுப்படுத்தியது. எனினும் போதுமான விளைவினை ஏற்படுத்தாமல் தொடர்ந்து பங்கு சந்தை கீழிறங்கிக் கொண்டே இருந்தது. இந்தியாவிற்கும் ஒரு பில்லியன் டாலர் பணத்தைத் தருகிறது. (இந்த அறிவிப்பு வந்து சேர்ந்த அதே காலத்தில் இந்தியாவானது சவுதி அரசின் உபரியாக உற்பத்தி செய்து வீணாகிக் கொண்டிருக்கும் கச்சா எண்ணையை வாங்குவதாகக் கூறுகிறது. இதன் மூலம் சவுதியின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க இயலுமென அமெரிக்கா கருதுகிறது. அமெரிக்காவின் அழுத்தத்தால் இது நடந்திருக்கிறது)

இது எதனால் ஏற்படுகிறது என்பதை கவனிக்க வேண்டும். பங்குச் சந்தையின் வளர்ச்சி என்பது மக்களின் வாங்கும் திறனையும், நிறுவனங்களின் விற்பனைத் திறனையும் வைத்து ஏறி இறங்குவதாகவே அறியப்பட்டது. இதுவே ’மார்க்கெட் எக்கானமி’ எனப்படும் ’சந்தை வணிகம்’ எனப்பட்டது. அதாவது பொருட்களுக்கான தேவையே அனைத்து வளர்ச்சி - உற்பத்தி - வணிகம் ஆகியவற்றினை முடிவு செய்வதாக முதலாளிகளால் முன்மொழியப்பட்ட கருத்தியல் ஆகும். (அதாவது மக்கள் அதிகமாக பொருட்களை நுகர்ந்தால் / வாங்கினால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்பது இன்றைய முதலாளியப் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படைத் தத்துவம்.)

மக்களிடத்தில் பொருட்களின் தேவை உயர உயர, வாங்கும் திறன் அதிகரிக்க, அதிகரிக்க பொருளாதாரம் மேம்படும் என்றார்கள். இதன் அடிப்படையிலேயே வணிகம் உயர்வதும், உற்பத்தி உயர்வதும் அதன் மூலமாக லாபம் உயர்வதும் தொடர் சங்கிலியாக அறியப்பட்டது. இதன் மூலமாக நிறுவனங்களின் பங்குகள் உயர்கின்றன. விற்பனை அதிகரிப்பதால் லாபங்கள் பங்குச் சந்தையில் பங்கிடப்படுவதாக கணக்கிடப்பட்டது. இதன் அடிப்படையிலேயே தேசத்தின் வளர்ச்சி விகிதம் என்பதும் கணக்கிடப்பட்டது. எனவே ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு பொருள் தேவையும், அதை மக்கள் வாங்கும் திறனும் அவசியம் என்பதை கொரோனாவினால் உண்டான நெருக்கடி எவ்வாறு மாற்றுகிறது என்பதை பதைபதைப்புடன் முதலாளிய உலகம் கவனிக்கிறது.

பெருமளவில் பணத்தை மூலதனத்தில் இறக்கிய பின்னரும் (மூலதனத்தில் தொடர்ச்சியாக நிதி சேர்க்கப்பட்டும்) நிறுவனங்கள், லாபங்கள், பங்குகள் இறங்கு முகத்தைச் சந்தித்தன. 2019இன் இறுதிவரை மக்களிடம் வாங்கும் திறன் இல்லாமல் போனதாலேயே பொருளாதாரம் கீழே சென்றது என்கிற கருத்து முன்வைக்கப்பட்டது. இந்த பொருளாதார மந்த நிலை என்பது மக்களிடத்தில் வாங்கும் திறன் அதிகரிக்கும் பட்சத்தில் மீளும் எனும் யோசனைகளும் முன்வைக்கப்பட்டன. உலக நாடுகளில் இது குறித்து பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. கார்ப்பரேட்டுகளுக்கு சார்பான நிதி ஒதுக்கீடு, மானியம், கடன், வரிக் குறைப்பு, வட்டிவிகிதம் குறைப்பு என பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதை கார்ப்பரேட்டுகளின் சார்பில் அரசுகளுக்கு அழுத்தமாக கொடுக்கப்பட்டது.

அதே நேரத்தில் சாமானிய மக்களிடத்தில் நிதி சென்று சேரும் வகையில் மக்களுக்கான சம்பள உயர்வும், இதர வரி விதிப்பு விலக்கும், அடிப்படை தேவைகளுக்கான மானியமும், சிறு-குறு வணிக நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியும், நீண்ட காலக் கடனும், குறைந்த வரிவிகிதமும் கேட்கப்பட்டன. முறைசாராத் தொழிலாளர்கள், விவசாயக் கூலிகள், உதிரித் தொழிலாளர்கள் ஆகியோரின் வேலை வாய்ப்பை அதிகரிப்பதும், வேலையை உறுதி செய்வதும், கூலி உயர்வைக் கொடுப்பதும் இந்த நெருக்கடியை சமாளிக்க உதவும். அதாவது அரசின் உதவி என்பது கார்ப்பரேட்டுகளுக்கா அல்லது சாமானிய மக்களுக்கா என்கிற கேள்வியே கடந்த வருட இறுதியில் பெரும் விவாதமாக இருந்தது. (இந்தக் கோரிக்கைகள் வலுப்பெறாத வகையிலேயே இந்தியா போன்ற நாடுகளில் திசை திருப்பும் வகையிலான சட்டங்கள், பிரச்சாரங்கள் வலதுசாரிகளால் முன்னெடுக்கப்பட்டன. சாமானிய மக்கள் ஒற்றை ஆற்றலாக இக்கோரிக்கையை நோக்கி நகர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே மதவெறி பரப்பப்பட்டு மக்கள் ஒற்றுமை பிளக்கப்பட்டது.)

ஆனால் கொரோனா நிலை இந்த விவாதங்களை மேலும் ஒரு புதிய பரிணாமத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது. அதாவது மக்களின் ’வாங்கும் திறன்’ முற்றிலும் இல்லாத நிலையை ஒரு புறம் வலுப்படுத்தியது. அதே போல மறுபுறம் இதுவரை இல்லாத புதிய பிரச்சனையைக் கொண்டு வந்தது. அதாவது சந்தைக்குத் தேவைப்படும் 'உற்பத்தித் திறன்’ முழுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டது. சந்தைக்கு பொருட்களை கொண்டுவரும் வழிவகைகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டன. அதே நேரம் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டதால் பொருட்களை உற்பத்தியே செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. ஆகவே இந்த சங்கிலித் தொடர் முழுமையாக சிதைந்தது. supply chain

இந்த நிலை விற்பனையை/ சந்தையை கடுமையாகப் பாதித்திருக்கிறது. பொருள் உற்பத்தியும் அதை சந்தைக்குக் கொண்டு வந்து சேர்க்கும் வழிவகையும் அடைபட்ட காரணத்தினால் புதிய நெருக்கடியை கார்ப்பரேட்டுகள் சந்தித்திருக்கிறார்கள். பொருட்களை உற்பத்தி செய்ய முடியாத நிலையும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சந்தைக்கு கொண்டு வர இயலாமல் போன நிலையும் மோசமான சூழலை இந்த முதலாளிகளுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.

ஊரடங்கு, கடையடைப்பு, உடலளவில் ஒதுங்கி இருத்தல் காரணமாக தொழிலாளர்களால் நிறுவனங்களுக்கு செய்ய முடியவில்லை அல்லது அவர்களால் குறைந்த அளவிலேயே உற்பத்தியில் ஈடுபட முடிகிறது. பெரிய வணிக நிறுவனங்களால் போதுமான உற்பத்தியைச் செய்ய இயலாமல் போனது. இதே போல ஏற்கனவே உற்பத்தியான பொருட்களை சந்தைக்குக் கொண்டு செல்லும் வழிமுறைகளும் அடைபட்டு நிற்கின்றன. இதுவே உற்பத்தி சங்கிலி அறுந்து போன நிலை. உழவு போன்ற தொழில்களுக்கும் இது நடந்து கொண்டிருக்கிறது. இப்படியாக சந்தை என்பது முடங்கிக் கிடக்கிறது.

உதாரணமாகச் சொல்வதெனில், வாகனங்கள் சாலையில் செல்வது குறைய ஆரம்பித்ததால் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனையும் முடங்கி இருக்கிறது. இந்த ஆட்டோ மொபைல் நிறுவனங்களின் தொழிற்சாலைகளும் முடங்கிக் கிடக்கின்றன. இந்த ஆட்டோமொபைலுக்குத் தேவைப்படுகின்ற உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் முடங்க ஆரம்பித்தன. இது சங்கிலியாகச் சென்று வாகன உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்கள், இதைக் கொண்டு சேர்க்கும் பணியில் இருக்கும் கண்டெய்னர்-லாரி போக்குவரத்து நிறுவனங்கள், இவர்களைச் சார்ந்து இயங்கும் சிறுவணிகக் கடைகள், இந்த வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள், இந்த நிறுவனத்தில் பணி செய்யும் பணியாளர்கள், இந்த வாகனங்களை விலை கொடுத்து வாங்க கடன் கொடுக்கும் நிறுவனங்கள், வங்கிகள், அதன் பணியாளர்கள் என ஒட்டு மொத்த சங்கிலியே முடங்கி நிற்பதால் முதலாளித்துவ உலகம் திகைத்து நிற்கிறது.

இதே போல சாலைகளில் வாகனப் போக்குவரத்து குறைந்ததும் பெட்ரோலிய பொருட்களின் விற்பனை சரிகிறது. இது பெட்ரோலிய சந்தையை பாதிக்கிறது. பெட்ரோலியத்திற்கான தேவை குறைகிறது. இது உலக அளவில் பெட்ரோலியத்தின் விலையைப் பாதிக்கிறது. பெட்ரோலியத்தை மையமாக வைத்து இயங்கும் வளைகுடா (சவூதி உள்ளிட்ட அரபு) நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் காண்கிறது. இந்த நாடுகளின் பெட்ரோலிய வணிகத்தை மையமாக வைத்து அமெரிக்க டாலரின் மதிப்பு கணக்கிடப்படுவதால், அமெரிக்க டாலரின் மதிப்பும் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. இது அமெரிக்காவின் டாலரோடு தொடர்புடைய இதர மூலதன நிறுவனங்களை கடுமையாகப் பாதிக்கின்றது.

டாலர் மதிப்பு ஆட்டம் காணுமெனில் அது உலகின் ஏகாதிபத்திய மையமாக இருக்கும் அமெரிக்காவின் 'வால்ஸ்ட்ரீட்' பங்குச் சந்தையை கடுமையாகப் பாதிக்கும். இவ்வாறு இந்த பாதிப்புகள் உலகெங்கும் எதிரொலிக்க ஆரம்பிக்கிறது. இந்த சந்தைகளோடு தொடர்புடைய மென்பொருள் நிறுவனங்களும் சரிவைச் சந்திக்கின்றன. ஆட்டோமொபைல், மென்பொருள் ஆகியவற்றின் வளர்ச்சியைச் சார்ந்து இயங்கும் ரியல் எஸ்டேட் எனும் கட்டுமானத் தொழிலும் சரிவை சந்திக்கிறது. கட்டுமான வணிகம் தடைபடுமெனில் அதைச் சார்ந்து இயங்கும் சிமெண்ட், இரும்பு, பெயிண்ட், மின்பொருட்கள், பெயிண்ட், செங்கல் என பெரும் சங்கிலித் தொடர் சரிவை எதிர்கொள்கிறது. இவ்வாறு அடுக்கி வைக்கப்பட்ட சீட்டுக்கட்டு கோபுரம் போல பொருளாதார வீழ்ச்சி ஆரம்பிக்கிறது.

வாங்கும் திறன் மட்டுமல்லாமல் உருவாக்கும் திறனும் அடிபட்டுப் போன நிலையில், அனைத்து வழிகளிலும் உலக முதலாளியம் திணறிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே திணறிக் கொண்டிருந்த உலக முதலாளிய ஆற்றல்கள் இந்த கொரோனா பாதிப்பால் பல சவால்களை எதிர்கொள்கின்றன. மக்களிடம் இல்லாமல் போன கையிருப்பு, அல்லது வாங்கும் திறனை அதிகரிக்கும் எந்த முயற்சியும் இல்லாது, சூழல் சிக்கலாகிக் கொண்டிருக்கிறது. மக்களின் பொருளாதாரத்தை வளப்படுத்தும் வழிவகையை செய்யாமல் சரிந்து கொண்டிருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன அரசுகள். பெரும் லாபங்களைக் குவிப்பதற்கு மக்களின் உழைப்பையும், செல்வத்தையும் சுரண்டிக் கொழுத்திருக்கிறார்கள் பெரும் பணக்காரர்கள்.

உலக அளவில் இந்தப் பணக்காரர்களின் செல்வம் பல மடங்கு உயர்ந்திருக்கின்றன. ஓர் உதாரணத்திற்குச் சொல்வதென்றால் 2019 ஆம் வருட காலத்தில் முகேஷ் அம்பானியின் சொத்து மட்டுமே ஒரு லட்சத்தி முப்பத்தி ஏழாயிரம் கோடி ரூபாய் அதிகரித்திருக்கிறது. இது தமிழ்நாட்டின் பட்ஜெட்டை தொட்டு விடுமளவிலான வருமானம். இந்தியாவின் வளமிக்க ஒரு மாநிலமான தமிழ்நாட்டின் வருமானத்தையே மிஞ்சக் கூடிய பணத்தை ஒரு தனிநபர் ஒரு வருட காலத்திற்குள் குவித்திருக்கிறார். இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில் 8 கோடி மக்களின் வருமானத்தினை ஒருவரே பெற்றிருக்கிறார் என்றால் இந்தியாவில் செல்வம் எங்கே சேர்கிறது என்பதை யூகிக்கலாம்.

மக்களிடமிருக்கும் செல்வம் இது போன்ற தனிப்பெரும் பணக்காரர்களின் பைகளுக்குச் சென்று விடுகிறது. இப்படியாக ஒரு பக்கத்தில் குவிந்த பணமும், மறுபுறம் எவ்வித ஆதாரமும் இல்லாத ஏழைகளும் நிறைந்த தேசத்தில் முதலாளிகளின் சந்தையில் யார் பொருட்களை வாங்குவார்கள்? வாங்குவதற்கு எவரிடத்தில் போதிய பணம் இருந்திருக்க முடியும்?. இதுதான் 2020ம் வருடத்தின் ஆரம்பத்தில் இருந்த நிலை. இது கொரோனாவினால் மேலும் மோசமடைந்து தற்போது ஏழை மக்களின் வாழ்வாதார வேலையைத் தின்று கொண்டிருக்கிறது.

rich people asset in indiaஇதுமட்டுமல்லாமல் முதலாளிகளின் உற்பத்தி சாலைகள் பணி செய்ய தொழிலாளர்கள் இல்லாமல் முடங்கி நிற்கிறது. உற்பத்தியானவற்றை சந்தைக்குக் கொண்டு செல்வதும் இயலாமல் போகிறது. இதுவே இன்றைய பொருளாதாரச் சூழல். இச்சமயத்தில் தான் பெரும் வங்கிகள் பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு அளவுக்கு மீறிய நிதியை கடனாகக் கொடுத்து திவாலாகிக் கொண்டிருக்கின்றன. வங்கிகளின் இந்த நிதி என்பது அனைத்து மக்களிடமிருந்தும் பெறப்பட்ட சேமிப்புத் தொகையே என்பதை நாம் மறக்கக் கூடாது.

இந்த கடனை செலவழித்து அல்லது சுருட்டிக் கொண்டு பெரும் பணக்காரர்கள் நாட்டைவிட்டு வெளியேறினார்கள், பலர் நாட்டிற்குள்ளேயே இன்றும் பாதுகாப்பான வாழ்க்கை வாழ்கிறார்கள். இவ்வாறு நிதியை பொறுப்பின்றி சீரழித்த சுயநலவாத முதலாளிகளான அனில் அம்பானி போன்ற முதலாளிகளுக்கு மறுவாழ்க்கையை அளிப்பதையே பிப்ரவரி 2020இல் நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் வழங்கிய பட்ஜெட்டில் விரிவாக முன்மொழிந்திருக்கிறார். (இது குறித்த கட்டுரை 2020 பிப்ரவரி குரல் இதழில் வெளியாகி இருக்கிறது).

எனவே ஒரு புறம் ஏழைகளின் நிதி சேமிப்பு பணக்கார முதலாளிகளிடம் தாரை வார்க்கப்படுகிறது. அப்பணத்தினை மீட்க முடியாமல் வங்கிகள் திவாலாகிக் கொண்டிருக்கிறன. திவாலாகிப் போன நிறுவனங்கள் மக்களின் வேலைவாய்ப்பை சுரண்டிக் கொண்டிருக்கின்றன. வங்கிகளை மீட்க மக்களிடமிருக்கும் சேமிப்புப் பணத்தையே பயன்படுத்துகிறது அரசு. ஒரு புறத்தில் பெரும் நிறுவனங்களும், மக்கள் விரோத வங்கிகளும் மக்களின் நிதியால் மீட்கப்படுகின்றன, மறுபுறத்தில் மக்கள் மீது வரி கடுமையாக்கப்படுகின்றது. இது தவிர மக்களின் வேலை வாய்ப்பு என்பது பறிக்கப்படுகிறது.

சுயதொழில், சிறு-குறு தொழில் நிறுவனங்களை மக்கள் முன்னெடுப்பதை நசுக்கும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகளை மோடி அரசு விதிக்கிறது. கடன் கொடுப்பதும், வரிவிகிதத்தைக் குறைக்காமல் மறுப்பதும், வரிச்சுமையை அதிகரிப்பதுமாக மோடி அரசின் பட்ஜெட் அமைந்தது. அரசிடம் நிதி இல்லாமல் போனதால் லாபமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை திவாலாகிப் போன இந்தியாவின் பெரும் முதலாளிகளுக்கு மோடி அரசு தாரை வார்க்கிறது.பெருமளவில் லாபத்தில் இயங்கிக் கொண்டிருந்த அரசு நிறுவனங்கள் விற்கப்பட்டன. லாப நோக்கமில்லாமல் மக்களுக்கு சேவை செய்யும் அரசுத் துறைகளும் சிதைக்கப்பட்டன. ஆனால் இந்தத் துறையின் எச்சங்களே கொரோனா நெருக்கடி காலத்தில் மக்களுக்குத் துணையாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. பொதுச் சுகாதார கட்டமைப்பு, தொலைத்தொடர்பு, போக்குவரத்து, ரயில்வே துறை, ஏர் இந்தியா நிறுவனம், ரேசன் கடைகள் ஆகியவையே கொரோனா தொற்று காலத்தில் மக்களுக்கு தேவைப்படும் சேவையை வழங்கின.

இப்படியாக மக்கள் சுரண்டப்பட்டு நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே கொரோனா பாதிப்பு இந்தியாவைத் தாக்குகிறது. இதுவே உலக அளவிலான நிலையாகவும் இருக்கிறது. உலகம் முழுவதும் வலதுசாரி அரசுகள் அரசு நிறுவனங்களை தனியாருக்குத் தாரை வார்ப்பதும், மக்கள் நலத் திட்டங்களை ரத்து செய்வதும், பெரு வணிகங்களுக்கு அதிக நிதி உதவியை வாரி வழங்குவதும், பணக்காரர்களுக்கு வரியிலிருந்து விலக்கு அளிப்பதுமான பணிகளைச் செய்து வருகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, ப்ரான்ஸ், முதற்கொண்டு இந்தியா, இலங்கை என இந்த வலதுசாரி அரசுகள் இவ்வாறே இயங்கிக் கொண்டிருக்கின்றன. தென்கொரியா, வியட்நாம், சிங்கப்பூர் போன்ற பொருளாதாரத்தில் உறுதித் தன்மையை சற்றே பெற்ற கீழ்த்திசை நாடுகள் கொரோனா தொற்றை தடுக்கக் கையாண்ட வழிகள் எதையையும் மேற்குலக நாடுகள் கையாளவில்லை. தங்களது மக்கள் விரோதக் கொள்கைகளான தனியார் மயம், கார்ப்பரேட் நிதி மூலதன நிறுவனங்களுக்கான மானியத் தொகையை வழங்குவது என இந்த கொரோனோத் தொற்றை பயன்படுத்திக் கொள்கின்றனவா எனும் கேள்வி எழாமல் இல்லை.

இப்படியான மோசமான நிலை உலகெங்கும் நிலவுவதற்குக் காரணமாக மார்க்சிய ஆய்வாளர்கள் முன்வைக்கும் காரணிகள் என்பன, உற்பத்தி மந்தமான நிலை, ஒரே கார்ப்பரேட்டின் கீழ் அனைத்தும் வருவது, அதாவது கார்ப்பரேட்டுகளின் ஏகாதிபத்திய நிலை, மக்களின் மிக மோசமான வாழ்நிலை. இவற்றை நாம் அப்பட்டமாக இந்தியச் சூழலில் காண முடியும். இப்படியான சூழலில் கொரோனாவின் மூலமாக உருவாகி இருக்கிற நெருக்கடியும், இந்திய மோடி அரசு செய்கின்ற மக்கள் விரோத நடவடிக்கைகளும் மிக மிக மோசமான சூழலை இந்தியாவிற்குள் உருவாக்கப் போகின்றது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

இந்தச் சூழலை இப்பின்னனியில் இருந்து தொடர்ந்து கவனித்து வருவது நமக்கு அவசியம். இப்படியான காலத்தில் தான் கொரோனாவை எதிர்கொள்ளும் பொருளாதாரத் திட்டம் குறித்த நிர்மலா சீதாராமனின் அறிவிப்பானது முழுமையாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவே அமைந்தது. கார்ப்பரேட் நலன்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. நாட்டின் 21 நாட்கள் ஊரடங்கினால் பாதிப்படையும் ஏழை எளிய மக்கள், அன்றாடத் தொழிலாளர்கள், சிறுகுறு தொழிலகங்கள் என எவற்றையும் கணக்கில் எடுக்காத அந்த அறிவிப்புகள் மிக மோசமான பொருளாதார விளைவையே ஏற்படுத்தும்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பொழுது ஏற்பட்ட பொருளாதார முடக்க நிலையை விட சிக்கலான நிலை இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது. அன்றய பொழுதில் அடித்தட்டு மக்களின் சேமிப்பும், சிறுவணிகர்களின் மூலதனமும் சுரண்டப்பட்டது. இதை அவர்கள் மீட்டெடுக்க முயலும்பொழுதே ஜி.எஸ்.டி அவர்கள் மீது சுமத்தப்பட்டது. இந்நிலை ஒட்டுமொத்த மக்களையும் முடக்கியது. இதைவிட மிக மோசமான நிலைக்குள் நாம் நுழைந்து கொண்டிருக்கிறோம். நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் முதலாளித்துவ உற்பத்தியின் சங்கிலித் தொடரையும், அதன் மூலதனத்தையும் அரசு பாதுகாக்கப் போகிறதா அல்லது இதனால் சிதைக்கப்பட்ட மக்களை காக்கப் போகிறதா என்பதே இனி வரும் வரலாறு.

- மே 17 இயக்கக் குரல்