2013 - புத்தாண்டுச் செய்தி

அன்புள்ள தோழர்களே,

2012-ஆம் ஆண்டு முடிவுக்கு வருகின்ற நேரத்தில், பெண்களுக்கு எதிராக மிகவும் மோசமான அருவருக்கத்தக்க குற்றங்களை அனுமதிக்கின்ற அழுகி நாற்றமடிக்கும் சமூக அமைப்புக்கு எதிராக தில்லி மற்றும் பிற நகர வீதிகளில் மக்கள் போராட்டங்கள் நடந்து வருவதை நாம் கண்டோம்.

மன்மோகன் சிங் பின்பற்றிவரும் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்தும், அதிகரித்து வருகின்ற விலைவாசிக்கு எதிராகவும், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள் டிசம்பர் 20 அன்று பாராளுமன்றத்திற்கு முன்னே கூடி ஆர்பாட்டம் நடத்தினர். முந்தைய மாதங்களில், 1984 படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், இந்த படுகொலைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும், பாப்ரி மசூதியை அழித்ததற்கும் அதைத் தொடர்ந்து அரசு திட்டமிட்டு நடத்திய வகுப்புவாத வன்முறைக்கும் காரணமானவர்களை தண்டிக்க வேண்டுமென்றும் கோரி மாபெரும் ஆர்பாட்டங்களையும் முயற்சிகளையும் நாம் கண்டிருக்கிறோம். "பொதுத் தேவைகளுக்காக" என்ற பெயரில், பெரும் நிறுவனங்கள் நிலங்களைக் கைப்பற்றுவதற்கு மத்திய மாநில அரசாங்கங்கள் வழிவகை செய்வதை எதிர்த்து விவசாயிகளும், ஆதிவாசி மக்களும் நடத்திய எண்ணெற்ற போராட்டங்களையும் 2012 ஆண்டு கண்டிருக்கிறது.

உள்நாட்டு மொத்த உற்பத்தியின் (GDP) வளர்ச்சியை ஊக்குவிப்பது என்ற பெயரில் அமைச்சரவை ஏற்றுக்கொண்ட கொள்கைத் திட்டங்களை செப்டெம்பரில் மன்மோகன் சிங் அரசாங்கம் அறிவித்த போது அது தன்னுடைய இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டதாகக் கருதியது. ஆனால் அதன் விளைவோ, அரசியல் நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது தான். அதிகாரத்திலுள்ளவர்களுடைய ஊழல் மற்றும் குற்றவியலான நடவடிக்கைகளை எதிர்த்து பரந்துபட்ட வெறுப்பு இருக்கிறது.

உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சியை அதிகரிக்கும் திட்டமானது, உண்மையில் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதைத் தீவிரப்படுத்தவும், இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை அதிகரிக்கவும் ஒரு திட்டமாகுமென உழைக்கும் வர்க்கமும், மக்களும் கண்டு வருகிறார்கள். தாராளமய, தனியார்மயமாக்கல் மூலம் உலகமயமாக்கும் திட்டமானது ஒரு தொழிலாளர் விரோத, விவசாய விரோத, சமூக விரோத திட்டமாகும். இந்தத் திட்டமானது, இந்திய ஏகபோக முதலாளிகள் உலக அளவில் பெரிய சக்தி என்ற நிலைக்குப் போட்டியிடுபவர்களாக வெளிப்படுவதற்கு வழி வகை செய்யும் நோக்கம் கொண்டதாகும்.

இந்தப் போக்கை எதிர்த்து பரந்துபட்ட எதிர்ப்பானது சுரண்டப்பட்ட மக்களிடம் மட்டும் இல்லை. பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தில் பல நிறுவன சில்லறை வர்த்தகத்தில் 51% அந்நிய மூலதனத்தை அனுமதிப்பது பற்றிய விவாதங்களும், வாக்கெடுப்பும் இந்தக் கொள்கை சீர்திருத்தத்தில் முதலாளி வர்க்கத்திற்குள்ளேயே ஆழமான பிளவுகள் இருப்பதை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கின்றன. உலக மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பூதாகரமான வணிக ஏகபோகங்கள் விரைவான வளர்ச்சியடையும் வாய்ப்பினால் பல்வேறு பிராந்திய முதலாளி வர்க்க குழுக்கள் அச்சுறுத்தப்பட்டு வருவதை இது காட்டுகிறது.

1991-இல் தாராளமய தனியார்மயத் திட்டம் கொண்டுவரப்பட்ட போது, தொழிலாளி வர்க்கம் தனிமைப்படுத்தப்பட்டு ஒதுக்கித் தள்ளப்பட்டு நின்றது. இன்று பெரு முதலாளி வர்க்கமும், அதனுடைய கட்சிகளும் தனிமைப்படும் அச்சுறுத்தலில் இருக்கிறார்கள். காங்கிரசு கட்சியும், பா.ஜ.க.வும் கொடூரமான முதலாளித்துவ குழுக்களோடு சேர்ந்து ஊழலிலும் குற்றவியலான திட்டங்களிலும் ஈடுபட்டு வரும் கட்சிகளென வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. இன்றுள்ள அரசியல் அமைப்பு மிகச் சிறுபான்மையானோர் பொது மக்களைக் கொள்ளையடிப்பதற்கு சேவை செய்கிறது என்பது பரவலாக உணரப்பட்டு வருகிறது. இன்று பெரும்பாலான மக்கள், அதிகாரமின்றி ஏதாவதொரு முதலாளித்துவ கட்சிக்கு வெறும் வாக்கு வங்கியாக இருப்பதை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார்கள். இதற்கு ஒரு மாற்றாக ஒரு உயர்ந்த சனநாயக அமைப்பிற்கான தேவை, இக்கால கட்டத்தின் கோரிக்கையாக மாறி இருக்கிறது.

இன்றுள்ள பாராளுமன்ற சனநாயகமானது, ஒரு நவீன காலனிய அரசியல் மேற்கட்டுமானத்தை நீடித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், முதலாளித்துவ பொருளாதார அமைப்பை விரிவு படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாகும். முதலாளித்துவத்திலிருந்து சோசலித்திற்கு சமுதாயத்தைத் தொழிலாளி வர்க்கம் கொண்டு செல்வதற்கு சேவை செய்யக்கூடிய ஒரு புதிய அரசுக்கும், அரசியல் வழிமுறைக்கும் அடிப்படையை அளிக்கக் கூடிய ஒரு புதிய அரசியல் சட்டத்திற்கு நாம் அடித்தளங்களை அமைக்க வேண்டும். இதுவே மறுமலர்ச்சிக்கான நமது கட்சித் திட்டத்தின் சாராம்சமாகும்.

தோழர்களே,

முதலாளி வர்க்கத்தின் ஆட்சி, நமது நாட்டில் மட்டும் நெருக்கடியில் இல்லை. உலக அளவிலும் அது அவ்வாறே இருக்கிறது. பொருளாதார நெருக்கடியானது உலகமெங்கிலும் தீவிரமடைந்து வருகிறது. நிதி தூண்டுதல் என்ற பெயரில் அரசாங்கங்கள் மிகப் பெரிய அளவில் செய்த செலவழிப்புக்குப் பின்னர் 2010-இல் முதலாளித்துவம் ஒரளவிற்கு மீட்சியடைந்தது. ஆனால் அது பல முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் மேலும் மந்த நிலைக்கும் சுருக்கத்திற்கும் கொண்டு சென்றிருக்கிறது. இலட்சக் கணக்கான மக்கள் வேலையிலிருந்து தூக்கி எறியப்பட்டனர். வேலையில் இருப்பவர்களுக்கு வேலை நேரம் குறைக்கப்பட்டு அவர்களுடைய முந்தைய ஊதியத்தின் ஒரு சிறிய பங்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் மிகப் பெரிய வீதி ஆர்பாட்டங்கள் தொடர்ந்தன. கடந்த ஆண்டில் அவை மேலும் பரவி வருகின்றன.

இந்த நெருக்கடியை ஏகாதிபத்திய சக்திகள்,  பாசிச நடவடிக்கைகளைக் கொண்டு மாற்றுக் கருத்துக்களை நசுக்குவதன் வாயிலாகவும், இராணுவமயகாக்கலின் மூலமும், போர்த் தயாரிப்புகள் மூலமாகவும், பொய்ப் பிரச்சாரங்கள் மூலமாகவும் எதிர் கொண்டு வருகிறார்கள். உலக அமைதிக்கு "மத அடிப்படைவாதமும்", "இஸ்லாமிய பயங்கரவாதமும்" முக்கிய அபாயங்களாக இருந்துவருவதாக மாயையை அவர்கள் பரப்பி வருகிறார்கள். இது, இரண்டாம் உலகப் போருக்கு முன்னால் நாகரிகம் முன்னேறுவதற்கு யூதர்களே முக்கிய அபாயமாக இருப்பதாக பாசிச இட்லர் பிரச்சாரம் செய்து வந்ததைப் போல இருக்கிறது.

ஆட்சிகளை ஒவ்வொன்றாக திட்டமிட்டு மாற்றிவரும் ஆங்கிலேய-அமெரிக்க ஏகாதிபத்தியர்கள் உலகின் பாதுகாவலர்களைப் போல நடித்து வருகிறார்கள். ஆங்கிலேய அமெரிக்க ஏகாதிபத்தியர்கள் உலகெங்கிலும் பயங்கரவாதத்தின் ஆணிவேராக இருப்பது மட்டுமின்றி, சனநாயகத்திற்கும், மக்களின் உரிமைகளுக்கும், நாடுகளின் சுய நிர்ணய உரிமைக்கும் தீவிர எதிரிகளாக இருந்து வருகிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக வெளிப்பட்டு வருகிறது. அவர்களுடைய மேலாதிக்கத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளாத எந்த நாட்டையும், "புரட்சி" மற்றும் ஆட்சி மாற்றத்தின் மூலம் அச்சுறுத்தி வருகிறார்கள். அவர்கள், பொருளாதாரத் தடைகளை விதிப்பது, எதிர்ப்புக் கூட்டங்களுக்கு ஆயுதங்களை வழங்குவது மட்டுமன்றி, நேரடியாகவும் இராணுவ தலையீட்டை நடத்தி வருகிறார்கள். ஒரு ஒரு துருவ உலகைத் தங்களுடைய முழு ஆதிக்கத்தின் கீழ் நிலைநாட்ட வேண்டுமென்ற ஆங்கிலேய - அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் முயற்சியானது, தங்களுடைய நலன்கள் அச்சுறுத்தப்படுவதாக எண்ணும் இரசியா, சீனா போன்ற பிற சக்திகளால் இப்போது அதிகமாக கேள்வி கேட்கப்பட்டு வருகிறது.

உலக அளவில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், ஒரு மூன்றாவது உலகப் போர் நிகழக் கூடிய வாய்ப்பு ஒரு உண்மையான அபாயமென சுட்டிக் காட்டுகின்றன. ஒரு புரட்சிகர நெருக்கடியும் உருவாகி வருவதற்கான அறிகுறிகள் உள்ளன. புரட்சி வெற்றி பெறவும், இன்னொரு ஏகாதிபத்திய போரைத் தடுப்பதற்கும் அகவய நிலைமைகளைத் தயாரிப்பது கம்யூனிஸ்டுகளுடைய கடமையாகும்.

ஏகாதிபத்திய முதலாளி வர்க்கத்தின் பாசிச தத்துவார்த்த தாக்குதல்களை வெட்ட வெளிச்சமாக்கி, அவற்றை முறியடிக்கும் முயற்சிகளுக்குத் தலைமையளிக்க வேண்டிய கடமை கம்யூனிஸ்டுகளுக்கு உண்டு. வன்முறைக்கும், போருக்கும் முக்கிய தளமாக இருப்பதும், அமைதிக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் முக்கிய தடைக்கல்லாக இருப்பதும் ஏகாதிபத்தியமும், முதலாளி வர்க்கத்தின் ஆட்சியுமே எனத் தொழிலாளி வர்க்கமும், மக்களும் தெளிவு பெறுமாறு நாம் செய்ய வேண்டும்.

தோழர்களே,

இந்தக் காலக்கட்டத்தில் ஏகாதிபத்தியமும் எல்லா நாடுகளைச் சேர்ந்த பிற்போக்கு முதலாளி வர்க்கமும் பரப்பிவரும் மிகவும் நச்சான கருத்துக்களில் ஒன்று, சமுதாயத்தில் தொழிலாளி வர்க்கத்திற்கு பதிலாக வளர்ச்சி பெற்றுவரும் வர்க்கமாக "நடுத்தட்டு வர்க்கம்" இருக்கிறது என்பதாகும். இந்தப் பிரச்சாரத்தின் நோக்கமானது, தொழிலாளி வர்க்கத்தின் அடையாளத்தையே அழிப்பதாகும். திறமை கொண்ட தொழிலாளர்களைத் தாங்கள் தொழிலாளர்கள் இல்லையென்றும், நடுத்தட்டு வர்க்கம் என்றழைக்கப்படுபவர்களைச் சேர்ந்தவர்களென்றும் எண்ணுமாறு செய்யும் நோக்கம் கொண்டதாகும்.

பொருளாதார வர்க்கத்தைப் பற்றிய அறிவியல் கருத்தானது, அந்த வர்க்கம் உழைப்போடும், சமூக உற்பத்திக் கருவிகளோடும் எப்படிப்பட்ட உறவு கொண்டிருக்கிறது என்பதையும் வருவாய் எங்கிருந்து வருகிறது என்பதையும் அடிப்படையாகக் கொண்டதாகும். சமூக உற்பத்திக் கருவிகளை தங்களுடைய உடமையாக கொண்டு, இலாபம், வட்டி அல்லது வாடகை வருவாய் பெறுபவர்களாக முதலாளி வர்க்கம் இருக்கிறது. தொழிலாளி வர்க்கமானது, தங்களுக்கென எந்த உற்பத்திக் கருவியும் இல்லாமல், வாழ்க்கை வாழ்வதற்காக தங்களுடைய உழைப்பு சக்தியை விற்பதன் மூலம் கூலி அல்லது வருவாய் பெறுபவர்களைக் கொண்டுள்ளது. எதிரெதிரான இந்த இரு வர்க்கங்களுக்கிடையே, விவசாயிகள், கலைஞர்கள் மற்றும் சிறு கடை வியாபாரிகளைப் போல தங்களுடைய சொந்த உற்பத்திக் கருவிகளைப் பயன்படுத்தி வேலை செய்பவர்கள் இருக்கிறார்கள். சமுதாயத்தின் இந்த நடுத்தட்டு வகுப்பு, முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்கில் தவிற்கவியலாமல் சிதைந்து போகிறது. ஒரு சிறுபான்மையினர் முதலாளி வர்க்கமாகவும், மிகப் பெரும்பான்மையினர் தொழிலாளி வர்க்க அணிகளுக்கும் சென்றடைகின்றனர்.

சாதி அமைப்பிலிருந்து வரும் கருத்துக்களைப் பயன்படுத்தி, திறமையற்ற உடலுழைப்பு வேலைகளைச் செய்து கொண்டு மிகவும் குறைவான கூலி வாங்கிக் கொண்டிருப்பவர்கள் மட்டுமே தொழிலாளிகளென்றும், கல்வி கற்ற திறமை வாய்ந்த தொழிலாளர்கள் நடுத்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்களென்றும் கருத்து நமது நாட்டில் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்னவென்றால், தொழிலாளி வர்க்கமானது ஏற்கெனவே நமது சமுதாயத்தின் பெரும் எண்ணிக்கை கொண்ட வர்க்கமாக ஆகியிருக்கிறது. அதில் அதிகரித்து வருகின்ற கல்வி கற்ற, நவீன தொடர்பு திறமைகளைப் பெற்றவர்களையும் கொண்டதாகும்.

ஒரு பெரும் எண்ணிக்கையில் இளம் தலைமுறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் அரசியல் கல்வி புகட்டவும், பயிற்றுவிக்கவும் காத்துக் கொண்டுள்ளனர். கைகளாலும், அறிவாலும், சுத்தியைக் கொண்டோ அல்லது கணினிகளிலோ உழைக்கும் தொழிலாளர்கள் நாம் தான் சமூக செல்வத்தை உருவாக்குகிறோம்; இதை டாட்டாக்களும், பிர்லாக்களும், அம்பானிகளும் மற்றும் பிற ஏகபோக பெரும் நிறுவன குடும்பங்களும் சுருட்டிக்கொள்கிறார்கள் என்ற விழிப்புணர்வை நாம் அவர்களுக்குத் தரவேண்டும்.

தங்களுடைய ஒட்டுமொத்த வலிமையையும், புதிய அடித்தளங்களில் சமுதாயத்தை மீண்டும் கட்டுவதற்கு உழைக்கும் பெரும்பான்மையான மக்களுக்குத் தலைமை அளிக்க வேண்டிய வரலாற்றுக் கடமையையும் தொழிலாளர்களுக்கு நாம் உணர்த்த வேண்டும்.

சமுதாயத்திலுள்ள பெரும்பான்மையினருடைய உரிமைகளைப் பாதுகாக்கத் தவறும் இன்றுள்ள சனநாயக அமைப்புக்கு எதிராக உழைக்கும் பெண்களும் ஆண்களும் நாடெங்கிலும் போராடி வருகின்றனர். மிகவும் குற்றவியலான அரசியல் வழிமுறையை எதிர்த்து கோபம் அதிகரித்து வருகிறது. உரிமைகளைப் பற்றிய நவீன விளக்கங்களின் அடிப்படையில் அமைந்த ஒரு தலை சிறந்த சனநாயக அமைப்பு வேண்டுமென காலம் கேட்கிறது. சனநாயகத்திற்கான இந்தப் போரை, தொழிலாளி வர்க்கம் தலைமை தாங்கி நடத்த வேண்டும். இந்த விழிப்புணர்வை இன்று போராடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களிடையிலும், கம்யூனிச இயக்கத்தில் இருக்கும் தீவிரமாக சிந்திப்பவர்கள் அனைவரிடையிலும் கம்யூனிஸ்டுகள் நாம் பரப்ப வேண்டும்.

குடியிருப்புப் பகுதிகளிலும், வேலை செய்யும் இடங்களிலும் நாம் கட்டுகின்ற உள்ளூர் குழுக்கள், தொழிலாளிகள், விவசாயிகளுடைய அதிகாரத்திற்கான புதிய அரசின் கட்டுமானப் படிகளாகும். இந்த வேலையில் அரசியல் செயல்வீரர்களின் பரந்துபட்ட பிரிவினரைக் கவர்ந்திழுக்க நம்முடைய முயற்சிகளை நாம் தீவிரப்படுத்த வேண்டும்.

தொழிலாளி வர்க்க இயக்கத்திலும், மக்கள் இயக்கத்திலும் ஒரு முக்கிய இடத்தை வகிப்பதில் நமது கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. இருந்த போதிலும், அது இன்னும் சிறிய இடமாகவே இருக்கிறது. அதை நாம் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக விரிவு படுத்த வேண்டும். கட்சியின் நிலைப்பாட்டை தொழிலாளி வர்க்கத்தின் எல்லா பிரிவினரிடையிலும், குறிப்பாக பெரிய அளவு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடையிலும் கொண்டு செல்ல வேண்டும் என்று இதற்குப் பொருள்.

தோழர்களே,

வர்க்கப் போராட்டம் முன்னேறுவதற்கு மிகப் பெரிய தடைக்கல்லாக இருப்பது, பாராளுமன்ற சனநாயகம் குறித்து மாயைகளை உருவாக்கிக் கொண்டு, இன்றுள்ள அரசியல் சட்டத்தின் "அடிப்படைக் கட்டமைப்பை" கட்டிக் காக்க விரும்பும் கட்சிகளுடைய செயல்பாடுகளாகும்.

குடியரசுத் தலைவர், பிரதமரிலிருந்து, பாராளுமன்றத்திலுள்ள பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் வரை எல்லோரும் 1950 அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பானது மாற்றப்படக் கூடாதென்று சொல்லிக் கொண்டு வருகின்றனர். சிபிஎம்-உம், இடது முன்னணியின் பிற கட்சிகளும் இந்த மந்திரத்தைத் தொழிலாளி வர்க்கத்திற்குள் கொண்டு செல்கின்றனர். இந்தத் தத்துவார்த்த திசை திருப்பலை எதிர்த்தும், மாயையைப் பரப்புவதை எதிர்த்தும் நாம் போராட்டத்தை நடத்த வேண்டும். 1950-அரசியல் சட்டமானது ஒரு புனிதமான பசு என்னும் குரங்கிலிருந்து தொழிலாளி வர்க்கம் மற்றும் எல்லா முற்போக்கு சக்திகளையும் நாம் விடுவிக்க வேண்டும்.

தொழிலாளர்கள் அரசியலை விவாதிக்க நாம் மன்றங்களை உருவாக்க வேண்டும். தொழிலாளர்கள் தனிப்பட்ட திட்டத்தை விவாதிக்கவும், அதையொட்டி வர்க்கத்தை ஐக்கியப்படுத்தவும் நாம் வழிவகுக்க வேண்டும். வேலை செய்யும் உற்பத்தித் துறைகள், குறுகிய கட்சி சண்டைகள் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட அளவில் தொழிலாளர்களுடைய ஒற்றுமைக் குழுக்களை தொழிற்சாலைகளிலும், தொழிற் பேட்டைகளிலும் நாம் கட்ட வேண்டும்.

காங்கிரசு, பாஜக கட்சிகளைத் தலைமையாகக் கொண்ட பெரிய முதலாளி வர்க்கக் கட்சிகளுடைய உடும்புப் பிடியை உடைப்பதற்காக, அரசியல் வழிமுறையில் தீவிர மாற்றங்களுக்காக நாம் ஆர்பாட்டங்களில் ஈடுபட வேண்டும். அங்கீகரிக்கப்பட்டவை என்றழைக்கப்படும் கட்சிகளுடைய சிறப்பு நிலையை எதிர்க்கும் எல்லா வகையான சிறிய கட்சிகளோடும் கூடி நாம் விவாதிக்க வேண்டும்.

தோழர்களே,

கடந்த முப்பது ஆண்டுகளில் புதிய தலைமுறை கம்யூனிச செயல்வீரர்கள் பிறந்து நமது கட்சியின் வேலைகளில் முக்கிய முன்னணி பங்காற்றி வருகின்றனர். நம்முடைய இளம் தோழர்களிடம் எதிர்காலத்தில் கட்சியின் எல்லா வேலைகளையும் நடத்துவதற்கு பயிற்சியளிக்கக் கூடிய முக்கிய பொறுப்புக்களையும், கடமைகளையும் நம்பிக் கொடுக்க வேண்டுமென காலம் கோருகிறது.

சென்ற ஆண்டில் நமது கட்சி குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றிருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக வர்க்க நலன்களை நாம் வைப்பதன் மூலம் இது சாத்தியமாகும். தனிப்பட்டவர்களுடைய நலன்களுக்கும் மேலாக கட்சியின் நலன்களை வைப்பதன் மூலம் இது நடக்க முடியும். நம்முடைய சொற்களைச் செயல்களாக்கி, லெனினிச கருத்தியல் மற்றும் கோட்பாட்டின் அடிப்படையில் உறுதியாக முன்னேறுவதன் மூலம் நாம் அதை அடைய முடியும். நம் எதிரிலுள்ள எல்லா பணிகளிலும் வெற்றி பெறுவதற்கு முக்கிய திறவு கோலாக நம்முடைய விலை மதிப்பற்ற கட்சியை வர்க்கத்தினிடையில் கட்டி வலுப்படுத்துவோம்.

2013-இல் நமது நாட்டிலும், உலக அளவிலும் வர்க்கப் போராட்டம் தீவிரமடையுமென எல்லா அறிகுறிகளும் காட்டுகின்றன. கட்சியின் நிலைப்பாட்டை ஆயுதமாகக் கொண்டு, தொழிலாளி வர்க்கத்திற்கும் மக்களுக்கும் வர்க்கப் போராட்டத்தில் வீரத்தோடு தலைமை தருவதன் மூலம், இந்திய மண்ணில் புரட்சியும், சோசலிசமும் வெற்றியடைய நிலைமைகளைத் தயாரிப்போம்.

உங்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்!

புரட்சிகர வாழ்த்துக்களோடு,

லால் சிங்,

பொதுச் செயலாளர்,

இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி.

Pin It