மாமா-வென கட்சியின் எல்லா தோழர்களாலும் அன்புடன் அழைக்கப்படும் நமது அன்பிற்குரிய டி.எஸ்.சங்கரன் அவர்களுடைய மறைவு குறித்து கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் மத்தியக் குழு மிகவும் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறது. அவர் டிசம்பர் 15, 2012 அன்று தன்னுடைய 86-ஆவது வயதில் சென்னையில் காலமானார்.

ts_sankaran_280சொற்களும், செயல்களும் எப்போதுமே ஒன்றுபட்டிருந்த இந்த மிகச் சிறப்பான மனிதருக்கு நமது கட்சி தன்னுடைய செங்கொடியைத் தாழ்த்தி வணங்குகிறது. அவருடைய வாழ்க்கையும், பணிகளும் கம்யூனிஸ்டுகள் நமக்கும், அவருடைய பன்முக வாழ்க்கையில் அவரோடு வேலை செய்யும் வாய்ப்பை பெற்றிருந்த அனைவருக்கும் எப்போதுமே உணர்வூட்டுவதாக இருக்கும். ஈடுசெய்ய முடியாத இழப்பால் வாடும் அவருடைய அன்பு மனைவிக்கும், அவருடைய அன்பு குடும்பத்தினருடைய எல்லா உறுப்பினர்களுக்கும், நமது கட்சியின் மத்தியக் குழு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

டி.எஸ்.சங்கரன் சனவரி 4,1926-இல் விழிப்புணர்வு மிக்க குடும்பத்தில் பிறந்தார். முற்போக்கான கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அவர், தன்னுடைய இளம் பருவத்திலேயே நமது நாட்டின் உழைக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக வேலை செய்வதில் உறுதி கொண்டிருந்தார். இந்திய ஆட்சிப் பணியில் ஈடுபட்டிருந்த போது மத்தியிலும் மாநிலத்திலும் அவர் பல உயர் பதவிகளை வகித்திருக்கிறார். அவர் முக்கியமாக தொழிலாளர் துறையில் பணியாற்றினார். தன்னுடைய வேலையின் மூலம், இந்தியத் தொழிலாளர்களுடைய நிலைமைகளைப் பற்றியும், தொழிலாளர் சட்டங்களின் குறைபாடுகளைப் பற்றியும், தொழிலாளர்களின் உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டு வருவது குறித்தும் மிகத் தெளிவான புரிதலைப் பெற்றிருந்தார். குறிப்பாக பெண் தொழிலாளர்களுடைய நிலை குறித்தும், தொழிற் சங்க உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள கட்டுமானத் தொழில், முறைசார துறை, போன்ற பிற தொழிலாளர்களுடைய நிலை குறித்து மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், தொழிலாளர்களுடைய உரிமைகளுக்காக போராடுவதில் அவர் தன்னை அர்பணித்துக் கொண்டார். இந்த நோக்கத்தோடு தொடர்புடைய எண்ணெற்ற செயல்பாடுகளிலும், அமைப்புகளோடும் சேர்ந்து அவர் வேலை செய்தார். தொழிலாளர்களாக இருப்பதாலேயே எல்லாத் தொழிலாளர்களுடைய சமூகப் பாதுகாப்பிற்கும் உத்திரவாதம் இருக்க வேண்டுமென்ற முயற்சிகளில் அவருடைய பெயரும், வேலையும் அழிக்க முடியாதவாறு இணைந்திருக்கிறது. சீர்திருத்தங்களைக் கொண்டுவர அவர் மேற்கொண்ட செயலூக்கங்களையும், தொழிலாளர்கள் - குறிப்பாக கட்டுமானத் தொழிலாளர்கள், கொத்தடிமைத் தொழிலாளர்கள் உட்பட அமைப்பு சாரா தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அவர் மேற் கொண்ட ஓய்வொழிவற்ற போராட்டத்தையும் எப்போதுமே மறக்க முடியாது. சனநாயக உரிமைகளுக்கான உண்மையான போராளியாக அவர் எப்போதுமே நினைவில் நிற்பார். தன்னுடைய வாழ்க்கையிலும், தன் வேலைகளிலும் பரந்த மனப்பான்மை கொண்டவராக அவர் வாழ்ந்திருக்கிறார்.

மக்களதிகாரக் குழுவையும், பின்னர் மக்களாட்சி இயக்கத்தையும் நிர்மாணிப்பதில் திரு.சங்கரன் அவர்கள் விலை மதிக்க முடியாத பங்காற்றினார்.

இந்திய மக்களை அதிகாரத்திற்குக் கொண்டுவரும் பணியை மேற்கொள்வதற்கு எண்ணெற்ற முக்கியமானவர்களின் ஆர்வத்தைத் தூண்டி அவர்களைத் திரட்டுவதற்கு அவர் மிகவும் முக்கியமான பங்காற்றினார். மக்களதிகாரத்திற்கான இயக்கமானது, திரு. சங்கரனுடைய பெயரோடும், பங்களிப்போடும் பிரிக்கமுடியாமல் இணைந்துள்ளது.

தோழர்கள், அவரோடு பணியாற்றியவர்கள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள் மற்றும் தொழிற் சங்க செயல்வீரர்கள் என அவரோடு வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தவர்கள் அனைவரும், அவருடைய நம்பிக்கையாலும், ஆர்வத்தாலும் புத்துணர்வு பெற்றனர். அவரோ இவர்களுடைய அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்ளவும், தன்னுடைய செறிவான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். தன்னுடைய வாழ்க்கையின் மிகவும் கடினமான சமயங்களிலும் அவர் தன்னுடைய நம்பிக்கையையும், புன்னகையையும் விட்டுக் கொடுக்கவில்லை. தன்னுடைய வாழ்க்கையின் இறுதி ஆண்டில் மிகமோசமான புற்றுநோயுடன் அவர் துணிவோடு போராடி வந்தார். அப்போதும் அவர் ஒருமுறைகூட குறைகூறவோ, வேலை செய்வதை நிறுத்திக் கொள்ளவோ இல்லை.

திரு.சங்கரனுடைய மறைவு நமக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இந்த இழப்பினால் ஏற்பட்டுள்ள கொடுமையான துயரத்தை வலிமையாக மாற்றிக் கொண்டு, இறையாண்மையானது உண்மையில் மக்களுடைய கைகளில் இருக்கக் கூடிய ஒரு புதிய சமுதாயத்தைக் கட்டும் பணியை மேற் கொண்டு எடுத்துச் செல்லுவோமென நமது கட்சியின் மத்தியக் குழு உறுதி எடுத்துக் கொள்கிறது. டி.எஸ்.சங்கரனுடைய வாழ்க்கையும், அவர் ஆற்றிய பணிகளும் நமது கட்சிக்கு எப்போதும் உணர்வூட்டுவதாக இருக்கும்.

லால் சிங்

பொதுச் செயலாளர்,

இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் மத்தியக் குழு

Pin It