வடஅமெரிக்காவில் 1913-இல் இந்திய கெதர் கட்சி நிறுவப்பட்டதன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்காக, கெதர் நூற்றாண்டு விழாக் குழு கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் ஒரு மிகப் பெரிய மூன்று நாள் விழாவை ஏற்பாடு செய்திருந்தது. சூன் 29-க்கும் சூலை 1, 2013-க்குமிடையில் டொரான்டோவில் உள்ள தெற்காசிய சமூகத்தைச் சேர்ந்த அனைவருடைய இதயமும், சிந்தனையும் அவர்களுடைய புரட்சிகர வரலாற்றின் மீதும், பாரம்பரியத்தின் மீதும் இருந்தது. அது 1857 மாபெரும் கெதர் கிளர்ச்சி, கெதர் கட்சியின் வீரச் செயல்களும், கெதர் பாபாக்கள் அவர்களுடைய சூழ்நிலைகளில் முடிக்காமல் விட்ட பணிகளை முடிப்பதற்காக தங்களிடமிருந்தவைகளையெல்லாம் விட்டுக் கொடுத்துவிட்ட புரட்சியாளர்களின் பாரம்பரியமும் உள்ளடக்கியதாகும்.

canada_communists_meeting_6

இந்த நிகழ்ச்சி வெற்றி பெறுவதற்காக பெண்கள், ஆடவர்கள், இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் என ஆயிரக்கணக்கான நாட்டுப்பற்றும் முற்போக்கான சிந்தனையும் கொண்ட இந்தியர்கள் இந்த நிகழ்ச்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு பல்வேறு வழிகளிலும் பங்களித்துள்ளனர். தாய்நாட்டை காலனிய அடிமைத்தனத்திலிருந்து விடிவிக்கவும், தங்கள் குடியேறிய நாடுகளில் இனவெறி பாகுபாட்டை எதிர்த்துப் போராடவும், கெதரி பாபாக்களுடைய நிறைவேறாத பணிகளையும் நிறைவேற்றுவதற்காக வட அமேரிக்காவிலுள்ள இந்தியப் புரட்சியாளர்களுடைய புகழ் மிக்க பாரம்பரியத்தை கனடாவில் உள்ள இந்தத் தலைமுறை இந்தியர்களுக்கு எடுத்துக் கூறுவதற்காக, கெதர் நூற்றாண்டு விழாக் குழு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இது முதலாளித்துவம் மற்றும் இதனுடைய எல்லா நிறுவனங்கள் உட்பட காலனிய பாரம்பரியத்திலிருந்து இந்தியாவை விடுதலை செய்து, இந்தியாவின் மன்னர்களாக - தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்களை நிறுவுவது பற்றி கேள்வியாகும்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க கெதர் அணிவகுப்போடு, சூன் 29, 2013 அன்று நிகழ்ச்சி தொடங்கியது. மார்னிங் ஸ்டார் துவக்கப் பள்ளியிலிருந்து காலை 11.30 மணிக்கு அந்த அணிவகுப்பு தொடங்கியது. 500-க்கும் மேற்பட்டவர்கள் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர். இந்த அணிவகுப்பை ஆதரித்து வீதிகளிலிருந்த மக்கள் உற்சாகத்தோடு கையசைத்தனர். அணிவகுப்பில் பங்கேற்றோர் கெதர் கொடிகளையும், கெதர் போராளிகளுடைய பணிகளையும், நினைவையும் போற்றுகின்ற வகையில் எழுதப்பட்ட முழக்கங்களையும் கைகளில் ஏந்திச் சென்றனர்.

இதற்காகவே தயாரிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க இரண்டாவது அவென்யு குருத்துவாராவைப் போன்றதொரு மாதிரி, ஒரு வாகனத்தில் வைக்கப்பட்டு அணிவகுப்போடு சென்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த குருத்துவாரா, கெதர் போராளிகளுடைய செயல்பாடுகளின் மையமாக விளங்கியது. இது கனடாவில் உள்ள நாட்டுப்பற்றுள்ள எல்லா இந்தியர்களின் சிந்தனையிலும் இதயத்தில் அழிக்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது. இந்த குருத்துவாராவை அதனுடைய நிர்வாகிகள் 1970-இல் விற்றுவிட்ட போதிலும், நமது மக்கள் அதை இன்றும் நினைவில் வைத்துப் போற்றி வருகின்றனர். அணிவகுத்துச் சென்றவர்கள், கெதர் போராளிகளின் பணிகளையும் நினைவையும் போற்றி முழக்கங்கள் எழுப்பினர். அணிவகுப்பு விமான நிலைய சாலையைத் தாண்டி சிரி குரு சிங் சபா குருத்துவாரா சென்றது. அங்கு குருத்துவாரா நிர்வாகிகள், பல்வேறு இனிப்பு வகைகளும், பழங்களும், பானங்களும் பலவகை உணவு வகைகளும் கொண்ட சிறப்பு விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இவ்வாறு கனடாவில் உள்ள சமூகம், கெதர் பாபாக்களுடைய பாரம்பரியத்தை கெதர் நூற்றாண்டு விழாக் குழு மேற்கொண்டு தொடர்வதற்கு முழு ஆதரவை தெரிவித்துக் கொண்டனர். அணிவகுப்பு பெரும் பஞ்சாப் பிளாசாவிற்கு வந்து சேர்ந்தது. அங்கு அது பேரணியாக மாறியது.

இந்த மக்கள் பேரணி இக்பால் சும்பாலுடைய வரவேற்புரையோடு துவங்கியது. அங்கு வந்திருந்த ஒவ்வொருவரையும் வரவேற்ற அவர், பல்வேறு உள்ளூர் அதிகாரிகளிடம் விழாக் குழுவினர் சந்தித்த பல பிரச்சனைகளையும் எடுத்துக் கூறினார். இந்த விழாவை ஏற்பாடு செய்வதற்கு பல்வேறு வழிகளிலும் உதவி செய்த மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். இந்தியா 1947 அரசியல் விடுதலை பெற்றும் கூட கெதர் போராளிகளுடைய கனவுகள் நிறைவேறாமல் இருக்கின்றன. நம்முடைய நாட்டுப் பற்றாளர்களுடைய கனவுகள் நிறைவேற்றுவதற்கு வேலை செய்வதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். இது மட்டுமே கெதர் போராளிகளுக்கு உண்மையான அஞ்சலியாக இருக்கமுடியுமென அவர் வலியுறுத்தினார். கெதர் போராளிகளைப் போற்றும் பல பாடல்களை பல பாடகர்களும் பாடினர்.

பின்னர், வாரியம் சிங் சாந்து உரையாற்றினார். இந்தியாவை விடுதலையடையச் செய்யும் பணியை கெதர் போராளிகள் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டனர் என திரு சாந்து கூறினார். அவர்களில் பெரும்பாலானோர் பிழைப்பு தேடி வட அமெரிக்கா வந்தவர்கள் ஆவர். வேலையிலும், சட்டத்திலும் அவர்கள் பாரபட்சத்தைச் சந்தித்தனர். அவர்கள் இரண்டாந்தர மக்களாக நடத்தப்பட்டனர். தங்களுடைய குடும்பத்தினரை உடன் கொண்டுவர அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர்களுக்கு குறைந்த ஊதியம் கொடுக்கப்பட்டது. பல்வேறு வழிகளிலும் அவர்கள் அவமதிக்கப்பட்டனர். அவர்கள் சந்தித்த இந்த அவமரியாதையான நடத்தைக்குக் காரணம் அவர்களுடைய தாய்நாடு ஆங்கிலேயர்களால் அடிமைப் படுத்தப்பட்டிருப்பதாகுமென அவர்கள் உறுதியாக நம்பினர். எனவே, ஆங்கிலேயர்களுடைய ஆட்சியைத் தூக்கி எறிந்துவிட்டு இந்தியா விடுதலை பெற்றாலன்றி இந்தியர்கள் எங்கெங்கு வாழ்ந்து வந்தாலும், வேலை செய்தாலும் அவர்கள் எப்போதுமே இழிவோடு நடத்தப்படுவார்கள் என்ற அவர்களுடைய நம்பிக்கையை இது மேலும் உறுதிப்படுத்தியது. ஆங்கிலேய ஆட்சியை இந்தியாவிலிருந்து, ஆயுதங்களின் வலிமையைக் கொண்டு தூக்கி எறிவதற்காக தாங்கள் அணிதிரள வேண்டுமென அவர்கள் முடிவெடுத்தனர்.

காங்கிரசு கட்சி சில சலுகைகளுக்காக மட்டுமே போராடி வந்தபோது, ஆயுத சக்தி மூலம் இந்தியாவை முழுமையாக விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக, கெதர் போராளிகள் போராடினர் என்பதை வாரியம் சாந்து சுட்டிக்காட்டினார். மேலும் பலவற்றில் முதன் முதலாக நடவடிக்கை எடுத்த பெருமை கெதர் போராளிகளுக்கு உண்டு. ஆங்கிலேயர்களுடைய ஆட்சியை மாற்றி அங்கு மதச் சார்பற்ற பஞ்சாயத்து ஆட்சி முறையை அமைக்க அவர்கள் விரும்பினார்கள். தங்களுடைய நோக்கங்களை அடைய வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருந்த அவர்கள், அதற்காகத் தங்களிடமிருந்த அனைத்தையும் துறப்பதற்குத் தயாராக இருந்தனர். ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடுவதற்காக, அவர்கள் ஆயிரக் கணக்கில் இந்தியா திரும்பினர். இந்தியாவை விடுதலை செய்ய வேண்டுமென்ற அவர்களுடைய முயற்சி தோல்வியடைந்த பின்னர், நூற்றுக் கணக்கானவர்கள் தூக்கிலிடப்பட்டனர், மேலும் பலர் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். ஆனால் அவர்களுடைய தியாகங்களும், வீரமும் அடுத்த பல தலைமுறையினருக்கும் எழுச்சியூட்டும் ஒரு ஊற்றாக ஆகியிருக்கிறது. அவர்களுடைய இயக்கமானது, அனைவரையும் தூண்டியெழுப்பதாகவும், சக்திவாய்ந்ததாகவும் இருந்ததால், உலகெங்கிலும் இருந்த இந்தியர்கள் அதன்பால் கவர்ந்திழுக்கப்பட்டு, அந்தப் போராட்டத்தில் குதித்தனர், என்றார்.

பல பேச்சாளர்களும், கெதர் போராளிகளின் வீரம் செறிந்த பணிகளைப் போற்றியும், அவர்களுடைய நினைவுக்கு அஞ்சலி செலுத்தியும் பேசினர். வான்குவாரிலிருந்து வந்திருந்த தோழர் அர்பஜன் சீமாவும், கெதர் போராளிகளுடைய பணிகளைப் பாராட்டிப் பேரணியில் உரையாற்றினார். எல்லா மக்களுடைய உரிமைகளுக்காகவும், அவர்கள் போராடினர் என்று அவர் கூறினார். தங்களுடைய குடும்பத்தினரும் தங்களுடைய போராட்டத்தில் சேர்ந்து கொள்ள வேண்டுமென்பதற்காக கெதர் போராளிகள் போராடினர். கெதர் போராளிகள் காலத்தில் இருந்தது போன்ற சட்டங்களை ஷார்பர் அரசாங்கம் கொண்டு வந்திருக்கிறது. நம்முடைய முன்னோரைப் போல நாமும் ஒருங்கிணைந்து இந்த அரசாங்கத்தை எதிர்த்துப் போராட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் பல பாடல்களோடு பேரணி நிறைவு பெற்றது. கெதர் போராளிகளின் படங்கள் காட்சிக்காக பிளாசாவில் வைக்கப்பட்டிருந்தன. இக் கண்காட்சியை பலரும் பார்த்தனர். கெதர் போராளிகளைப் பற்றிய புரட்சிகர புத்தகங்களையும் மக்கள் வாங்கிப் படித்தனர்.

சூன் 20, முழு நாளும் பிராம்டனில் உள்ள ரோஸ் அரங்கத்தில் வரலாற்று நாடகங்களும், கெதர் புரட்சியாளர்களைப் பற்றிய நாடகங்களும் நடைபெற்றன. நான்கு நாடகங்கள் நடத்தப்பட்டன. இந்த மூன்று நாள் நூற்றாண்டு விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இந்த நாடகங்களை மக்கள் கருதினர்.

சூலை 1 அன்று, அரசியல் கருத்தரங்குகள் நடைபெற்றன. மூன்று முக்கிய கட்டுரைகள் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. வாரியம் சிங் சாந்து, கெதர் புரட்சியாளர்களுடைய அரசில் கோட்பாடு குறித்து உரையாற்றினார். ராக்பீர் சிங் சிர்ஜனா, கெதர் போராளிகளுடைய இதழியல் பற்றிப் பேசினார். டாக்டர். சாது சிங், கெதர் புரட்சியாளர்களுடைய கவிதைகளைப் பற்றி பேசினார். இந்த உரைகள் மக்களால் நன்கு வரவேற்கப்பட்டன. இதைத் தொடர்ந்து உற்சாகமான விவாதங்கள் நடைபெற்றன. இக் கட்டுரைகள், கெதர் புரட்சியாளர்கள் எப்படி சாதி, பிராந்தியம் மற்றும் பிற பிற்போக்கான எண்ணங்கள் போன்ற குறுகிய சிந்தனைகளுக்கும் அப்பாற்பட்டு இருந்தனர் என்பதை வலியுறுத்தின. அவர்கள் மதத்தை அவரவருடைய தனிப்பட்ட கருத்தாக எண்ணினர். இந்தியாவை விடுவிக்கும் நோக்கத்திற்காகப் போராடுவதற்காக அவர்கள் ஒன்றுபட்டிருந்தனர். இந்தக் கோட்டபாடு அவர்களுடைய கவிதைகளிலும், இதழியலிலும் பிரதிபலித்தது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியை டோரான்டோவில் ஏற்பாடு செய்து நடத்தியதற்காக, கெதர் நூற்றாண்டு விழாக் குழுவினரை தொழிலாளர் ஒற்றுமைக் குரல் பாராட்டுகிறது. நம்முடைய புரட்சிகர இயக்க வல்லாற்றில், வட அமெரிக்காவிலும், உலகின் பிற பகுதிகளிலும் உள்ள புரட்சியாளர்களுடைய பங்கு, ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. கெதரி பாபாக்களுடைய முற்றுப் பெறாத பணிகளை இந்தியாவிலும் உலகிலும் நிலவும் இன்றைய சூழ்நிலைமைகளில் முடிக்கின்ற வேலையில் வெளிநாடுகளில் வாழும் நாட்டுப்பற்றுள்ள முற்போக்கு இந்தியர்களுக்கு ஒரு முக்கிய பங்கு தொடர்ந்து இருக்கும்.

Pin It