நடப்பது என்ன?

1992 டிசம்பர் 6 அன்று பாபரி மசூதியை இடித்துத் தள்ளியதற்காக பாஜக-வின் தலைவர்கள் லால் கிஷன் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி மற்றும் 11 மீதுள்ள குற்ற சதி வழக்கை உச்ச நீதி மன்றம் மீண்டும் எடுத்துக் கொள்வதாக ஏப்ரல் 19 அன்று அறிவித்திருக்கிறது. ரே பெரிலி இல் இருந்த இந்த வழக்கை லக்னோ நீதி மன்றத்திற்கு மாற்றி, ஒவ்வொரு நாளும் விசாரணை நடைபெற வேண்டுமென்றும், இரண்டாண்டுகளில் வழக்கு முடிக்கப்பட வேண்டுமென்றும் கெடு விதித்திருக்கிறது.

தீர்ப்பை வழங்கிய இரண்டு நீதிபதிகளைக் கொண்ட நடுவர் ஆயம், “25 ஆண்களுக்கு முன்னர், இந்திய அரசியல் சட்டத்தின் மதச்சார்பற்ற தன்மையை உலுக்கும் வகையில் குற்றங்கள் நடத்தப்பட்டதாக இந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வரப்படவில்லை. ஏனெனில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களிடம் ஒரு கூட்டு விசாரணையை நடத்த சிபிஐ நடவடிக்கை எடுக்கவில்லை. மாநில அரசாங்கத்தால் எளிதாக சரி செய்யக்கூடிய சில தவறுகள் இதுவரை திருத்தப்படாததும் இதற்கு ஒரு காரணமாகும்” என்று கூறியிருக்கின்றனர்.

பாபரி மசூதி தகர்க்கப்பட்டதற்கு முன்னரும், அதற்குப் பின்னரும் வேண்டுமென்றே வகுப்புவாத வெறி தூண்டிவிடப்பட்டு, முஸ்லீம்களும் இந்துக்களும் கொல்லப்பட்டனர். வரலாற்றுச் சின்னம் தகர்க்கப்பட்டதும், பரந்த அளவில் வகுப்புவாத வன்முறை நடத்தப்பட்டதும், பாராளுமன்றத்தின் இரண்டு முக்கிய கட்சிகளுடைய மேற்பார்வையில் நடைபெற்றிருக்கின்றன. அப்போது காங்கிரசு கட்சி மத்திய அரசாங்கத்திலும், பாஜக உத்திரப் பிரதேசத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தனர்.

இந்த வரலாற்றுச் சின்னம் தகர்க்கப்பட்ட பின்னர், மத்திய அரசாங்கம் இரண்டு தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்தது. ஒன்று மசூதியை இடித்துத் தள்ளியதற்காக இராமனுடைய பக்தர்கள் அல்லது கார் சேவக்கள் என்பவர்கள் மீது ஒரு வழக்கும், பாஜக தலைவர்கள் சிலர் மீது இன்னொரு சதி வழக்கும் பதிவு செய்யப்பட்டன. முதல் வழக்கு லக்னோவிலும், சதி வழக்கு ரே பெரெலியிலும் நடத்தப்பட்டு வந்தன.

ரே பெரெலி நீதி மன்றம் 2001 மே மாதத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அனைவரையும், வழக்கிலிருந்து விடுவித்தது. பின்னர் ரே பெரெலி நீதி மன்றத் தீர்ப்பை அலகாபாத் உயர்நீதி மன்றமும் சரியானதென கூறி ஆணை பிறப்பித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து 2010-இல் சிபிஐ உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஏழாண்டுகளுக்குப் பின்னர், இந்த வழக்கை மீண்டும் நடத்த வேண்டுமென்றும், அடுத்த 24 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டுமென்றும் உச்ச நீதி மன்றம் திடீரென தீர்மானித்திருக்கிறது.

பாபரி மசூதியை தகர்க்க வேண்டுமென்ற சதியானது பாஜக கட்சியின் சில தனிப்பட்ட தலைவர்களால் மட்டும் தீட்டப்படவில்லை. அது இந்தியாவிலும், உலக அளவிலும் மிகவும் சக்தி வாய்ந்த முதலாளித்துவ நலன்களால் தீட்டப்பட்டது. நாட்டில் வகுப்புவாத மோதல்களையும், குழப்பத்தையும் உருவாக்க வேண்டுமென அவர்கள் விரும்பினார்கள். அதன் மூலம் பொது மக்களுக்கு எதிரான தங்களுடைய தாராளமய, தனியார்மயத் திட்டத்தை திணிப்பதற்கு அவர்கள் திட்டமிட்டனர். எனவே தான் பாபரி மசூதியை தகர்ப்பதற்கு அவர்களுடைய முக்கிய அரசியல் கட்சிகளையும், பிற அமைப்புக்களையும் செயலில் இறக்கினார்கள்.

இந்த 15-ஆவது நூற்றாண்டின் வரலாற்றுச் சின்னத்தை தகர்ப்பதிலும், வகுப்புவாத வன்முறையை திட்டமிட்டு நடத்துவதிலும் ஆளும் வகுப்பும், முழு அரசு இயந்திரமும் பொறுப்பு வகித்திருக்கின்றனர். மத்தியில் இருந்த பிரதமர் நரசிம்ம ராவும், உத்திரப் பிரதேச அரசாங்கத்தின் தலைமையில் இருந்த கல்யாண் சிங்கும் குற்றவாளிகளில் அடங்குவர். வரலாற்றுச் சின்னத்தைப் பாதுகாக்கும் பொறுப்பிலும், மக்களுடைய உயிரைப் பாதுக்காக்கும் பொறுப்பிலும் இருந்த காவல் துறை, துணை இராணுவப் படைகள் ஆகியவற்றின் தலைவர்களும், மத்திய மாநில உள்துறையைச் சேர்ந்த அமைச்சரவை மற்றும் தலைமை அதிகாரிகளும் கூட குற்றவாளிகள் ஆவர்.

மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது, தகர்ப்பை திட்டமிட்டு நடத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்ற வெகு நாளைய கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதி மன்றம் செயல்பட்டிருப்பதாக தோன்றுகிறது. ஆனால் இதற்குப் பின்னணியில் ஒரு மோசமான இரகசியத் திட்டம் இருக்கலாம். அயோத்தியா பிரச்சனையை, அரசாங்கம் அல்லது நீதி மன்றம் என இந்திய அரசின் எந்த அங்கமும் மீண்டும் எடுத்துக் கொண்டாலும், அது எந்தத் தீர்வையையும் கொண்டு வரவில்லையென வரலாற்று அனுபவம் காட்டுகிறது. மாறாக, அது வகுப்புவாதப் பிளவையும், மோதலையும் மேலும் தீவிரப்படுத்தவே பயன்பட்டிருக்கிறது. 24 மாத காலக் கெடு குறிப்பிடப்பட்டிருப்பதன் பொருள், இது அடுத்த 2019 மக்களவைத் தேர்தல்கள் வரையிலும் தொடர்ந்து ஒரு முக்கியப் பிரச்சனையாக இருந்து கொண்டே இருக்கும் என்பதாகும்.

Pin It