ஒபாமாவின் இந்திய வருகை

அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இந்திய அரசின் முக்கிய கூட்டுறவு பல ஆண்டுகளாகவே உருவாக்கப்பட்டு வந்திருக்கிறது. இது மேலும் தீவிரப்படுத்தப்பட்டு வருவதையும், உறுதிப்படுத்தப்பட்டு வருவதையும் குடியரசு தின விழாவில் முக்கிய விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகை குறிக்கிறது. எல்லா ஆளும் இந்திய பெரு முதலாளி வர்க்கமும், அதனுடைய பேச்சாளர்களும் இதை ஒரு “திருப்புமுனையான” வருகையென்றும், இந்தியாவின் “வெளியுறவு முயற்சிக்கு மாபெரும் வெற்றி”யென்றும் புகழ்ந்து வருகின்றனர். அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இந்த நெருக்கமான உறவு, உண்மையில் இந்தியாவின் தொழிலாளி வர்க்கத்திற்கும், உழைக்கும் மக்களுக்கும் எதிரான மிகப் பெரிய துரோகச் செயலாகும். இது, இந்தப்பகுதியிலும், உலகத்திலும் அமைதிக்கும் மக்களுடைய பாதுகாப்பிற்கும் ஒரு பெரிய அபாயமாக இருக்கிறது.

உலக நிதி மூலதனத்தோடு நெருக்கமாக ஒருங்கிணைவதன் மூலமும், இராணுவமயமாக்கலைத் தீவிரப்படுத்துவதன் மூலமும், உலக வல்லரசுகளுடைய அணியில் தானும் சேர வேண்டுமென்பதில் நமது நாட்டினுடைய பெரு முதலாளி வர்க்கம், விடாப்பிடியாக இருக்கிறது. இதை அடைவதற்காக, அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தைத் தொடர்ந்து நெருங்கிக் கொண்டே வருகிறது. இக்கூட்டணி உறவை அடைவதற்காக இந்திய முதலாளி வர்க்கம், நமது நாட்டினுடைய நிலத்தையும், உழைப்பையும் விலை பேசவும், உலகின் இந்தப் பகுதியில் அமெரிக்காவின் முக்கிய நோக்கங்களோடு தன்னை நெருக்கமாக இணைத்துக் கொள்ளவும், தன்னுடைய சொந்த சட்டங்களையும், “பலகாலமாக சோதிக்கப்பட்ட” கொள்கைகளையும் விட்டுக் கொடுக்கவும் கூட அது தயாராக இருக்கிறது என்பதை இந்த வருகை காட்டுகிறது.

ஆசிய பசிபிக் பகுதியில் தன்னுடைய மேலாதிக்கத்தை விரிவு படுத்துவதையும், சீனா மீது நெருக்குதல் கொண்டு வருவதையும் நோக்கமாகக் கொண்டுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம், தன்னுடைய “ஆசிய மைய்ய”க் கொள்கையில் ஒரு முக்கிய காரணியாக இந்தியாவுடனான நெருக்கமான உறவைப் பார்க்கிறது. ஆசியாவில் சீனாவின் சக்தி வளர்ந்து வருவதற்கு, ஒரு பெரும் எதிர் சக்தியாக இந்தியா இருக்குமென அமெரிக்கா கருதுகிறது. அதே நேரத்தில், பொருளாதார சரிவு தொடர்கின்ற முதலாளித்துவ உலக நிலைமைகளில், மூலதனம் செய்வதற்கான ஒரு இலாபகரமான இடமாகவும் அமெரிக்க மூலதனத்திற்கு ஒரு முக்கிய சந்தையாகவும், இந்தியாவை அமெரிக்க ஏகாதிபத்தியர்கள் பார்க்கிறார்கள். இந்தியாவையும், அதனுடைய வளங்களையும் அன்னிய முதலாளித்துவ சுரண்டலுக்கு மேலும் அதிகமாகத் திறந்துவிடும் தனியார்மய, தாராளமயமாக்கும் திசையில் அடுத்த கட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களை மோடி அரசாங்கம் கொண்டு செல்லுமென அமெரிக்கா எதிர்பார்க்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடு நெருங்கிய உறவைக் கட்டியமைப்பதற்கான முயற்சிகள் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு அரசாங்கங்களின் கீழ் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. ஆனால் முதல் முறையாக குடியரசு தின விழாவின் முக்கிய விருந்தினராக அமெரிக்க அதிபரை அழைப்பதன் மூலமும், ஒபாமாவோடு தங்களுடைய நெருக்கத்தை ஒரு பெரும் காட்சியாக ஆக்குவதன் மூலமும், மோடியும் அவருடைய அரசாங்கமும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இந்தியத் தொழிலாளி வர்க்கத்திற்கும் மக்களுக்கும் உள்ள ஆழமான எண்ணங்கள் மீது தங்களுடைய வெறுப்பை வெளிப்படையாகக் காட்டியிருக்கிறார்கள். அமெரிக்காவோடு நெருங்கிய உறவுக்காக பேராசை கொண்டு அலையும் இந்திய முதலாளி வர்க்கமும், அதனுடைய பேச்சாளர்களும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பரந்துபட்ட எண்ணத்தைப் “பழமை வாதமாகவும்”, “பனிப்போர் காலத்திய கருத்தாகவும்” காட்ட முயற்சிக்கின்றனர். உண்மை என்னவென்றால், உலகமெங்கிலும், எல்லா கண்டங்களிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், அதனுடைய ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் கோபமும், வெறுப்பும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகெங்கிலும் உள்ள சிறிய, பெரிய நாடுகளின் அமைதிக்கும், இறையாண்மைக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால் எழும் ஆபத்தை இந்திய மக்கள் முன்னெப்போதும் இருந்ததைக் காட்டிலும் தற்போது மிகவும் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு மூர்க்கத்தனமான சக்தியோடு நெருங்கிய உறவின் மூலம் ஒரு சிறுபான்மையான பெரு முதலாளிகளைத் தவிர்த்து நமது மக்களுக்கு எவ்வித இலாபமும் இல்லை.

இந்த வருகையை ஒட்டியும், வருகையின் போதும், இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் பல்வேறு ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளன, அல்லது பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டு நடைபெற்று வருகின்றன.

2005-இல் முதலில் கையெழுத்திடப்பட்ட இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதில் உள்ள தடைகள் ஓரளவிற்கு அகற்றப்பட்டுவிட்டன. இந்தியாவில் ஒரு அணு விபத்து நிகழுமானால், தொடர்புடைய அணு உலை இயந்திரங்களை அளித்த நிறுவனம், அன்னிய அல்லது இந்திய நிறுவனமாக இருந்தாலும் அவர்களே பொறுப்பு என்ற இந்தியாவின் சட்டத்தை உயர்த்திப் பிடித்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக, மோடி அரசாங்கம், இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களும், இந்திய அரசாங்கமும் ஒரு “கூட்டு காப்பீட்டை” அமைக்கவும், ஒரு மோசமான விபத்து நிகழுமானால் அதன் விளைவுகளுக்கு அது பொறுப்பேற்றுக் கொள்ளுமெனவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, விபத்திற்கான பொறுப்புச் சுமையை இந்திய மக்கள் தலையிலேயே ஏற்றி வைத்திருக்கிறார்கள். காப்பீட்டிற்கான செலவு, அணு உலைகளுக்கான விலையோடு சேர்க்கப்பட்டு, அதற்கான அதிக விலையை இந்தியா கொடுக்கும்.

மேலும் பத்தாண்டுகளுக்குப் புதுப்பிக்கப்பட்ட இந்திய-அமெரிக்க இராணுவ கூட்டுறவு ஒப்பந்தத்தின்படி, அமெரிக்க இந்திய இராணுவ அமைப்புகளுக்கு இடையில் குறிப்பாக கடற்படையில் தொடர்ந்து கூட்டுறவு அதிகரித்துவரும் போக்கு, மேலும் தொடரும். ஏற்கெனவே, அமெரிக்க கடற்படையோடு, “மலபார்” என்ற பெயரில் இந்தியா கூட்டாக நடத்திவரும் கடற்படை பயிற்சிகள் இந்த வகையில் மிகப் பெரியதாக இருக்கிறது. மேலும், பாதுகாப்பு வாணிகம் மற்றும் தொழில் நுட்ப செயலூக்கம் (DTTI) என்ற பெயரில் முடிவு செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் முதன்முறையாக கூட்டாக உற்பத்தி செய்வதற்காக நான்கு திட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தொலை தொடர்புகளை இணைந்து மேற்கொள்வது, மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் (CISMOA), வான்வெளியில் அடிப்படை பரிமாற்றம் மற்றும் கூட்டறவு ஒப்பந்தம் (BECA) போன்ற மேலும் இந்தியாவை கட்டிப்போடும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட இந்திய அரசு ஒப்புக் கொண்டாலன்றி, இந்திய அரசு எதிர்பார்க்கும் முன்னேறிய இராணுவ தொழில் நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வது நடைபெறாமல் போகலாம். இதற்கிடையே, பாதுகாப்பு கூட்டுறவு கட்டமைப்பைப் புதுப்பித்தல், அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து இராணுவ வன்பொருட்களை மிகப் பெரிய அளவில் மேலும் வாங்குவதற்கான பாதையைத் திறந்துவிடும்.

அமெரிக்க, இந்திய உளவு நிறுவனங்களுக்கு இடையில் வளர்ந்து வரும் ஒத்துழைப்பு, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என்ற பெயரில் மேலும் அதிகரிக்கும். அதில் கூட்டு செயல்பாடுகளும் சேர்ந்திருக்க வாய்ப்பு உண்டு. தில்லியில் நடைபெற்ற செய்திக் கருத்தரங்கில், ஆப்கானிஸ்தானில் இந்தியா செய்த உதவிக்கு ஒபாமா “நன்றி” தெரிவித்தார். இதிலிருந்து, வருகின்ற காலகட்டத்தில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொள்ளும் அழிவுகரமான சதித்திட்டங்களில் இந்திய அரசு மேலும் நெருக்கமாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் என்பது தெளிவு. இது இந்தியா மற்றும் நம்முடைய அண்டை மக்களுடைய அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் மிகப் பெரிய அபாயமாக இருக்கும்.

மிகவும் குறிப்பிடத்தக்கதாக, முதன் முறையாக இந்தியாவும், அமெரிக்காவும் ஆசிய பசிபிக் கடற்பரப்பில் கூட்டுறவு பற்றி ஒரு கூட்டுக் “கண்ணோட்ட” ஆவணத்தைக் கையெழுத்திட்டிருக்கின்றனர். அந்தப் பகுதியில் குறிப்பாக தென் சீனக் கடலில் கப்பல் போக்குவரத்திற்கும், விமானப் போக்குவரத்திற்கும் சுதந்திரத்தைக் கடைபிடிப்பதில் கூட்டுறவாகச் செயல்படுவதென இக் கூட்டு ஒப்பந்தம் கூறுகிறது. இது, வெளிப்படையாகவே சீனாவிற்கு ஒரு எச்சரிக்கையாகும். சீனாவும் இதை இவ்வாறே புரிந்து கொண்டுள்ளது. முந்தைய ஐமுகூ அரசாங்கத்தின் கீழ் அமெரிக்காவுடன் ஏற்படுத்தப்பட்ட முக்கிய கூட்டுறவு, ஆசியாவின் மீது மேலாதிக்கம் செலுத்த வேண்டுமென்ற அமெரிக்க ஏகாதிபத்திய திட்டத்தில் இந்தியாவை சேர்க்கும் நோக்கம் கொண்டதாகும். இந்தியாவிற்கும், அதனுடைய மிகப் பெரிய அண்டை நாடான சீனாவிற்கும் இடையிலுள்ள அமைதியான உறவுகளில் பாதிப்பை இது நிச்சயமாக ஏற்படுத்தும்.

இந்த கூட்டுக் கண்ணோட்ட ஆவணத்தோடு, ஒரு “தில்லியின் நட்புறவு அறிக்கையும்” வெளியிடப்பட்டது. அது, இந்தியாவிற்கும், அமெரிக்க தலைமைக்கும் இடையே நெருங்கிய, தொடர்ந்த நீடித்த முறையான பரிவர்த்தனைக்கும் உறுதியளித்திருக்கிறது. ஐநா சபையின் பாதுகாப்புக் குழுவில் நிரந்தர உறுப்பினராக ஆக வேண்டுமென்ற இந்திய அரசின் விருப்பத்தை ஆதரித்து கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா அளித்துவரும் ஆதரவை அது மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. இத்துடன் அணுக் கட்டுப்பாட்டு நான்கு குழுக்களில், இந்தியா உறுப்பினராக சேர ஆதரவளிப்பதாக அது வாக்குறுதியளித்திருக்கிறது.

இவை மட்டுமின்றி, புதுப்பிக்கக் கூடிய சக்தியின் ஆதாரங்களை உருவாக்கும் முயற்சிகளில் இந்தியாவிற்கு “உதவ” அமெரிக்கா தன்னுடைய திட்டங்களை அறிவித்திருக்கிறது. பாரீசு சுற்றுப்புற மாற்றம் பற்றிய கருத்தரங்குக்கு முன்னரே கார்பன் வெளியேற்றத்தை குறைக்க வேண்டுமென இந்தியா மீது உள்ள நெருக்குதலை தளர்த்தியது, அமெரிக்காவின் “சலுகையாக” ஊடக விமர்சகர்கள் கருதுகின்றனர். ஆனால், சூரிய சக்தி மற்றும் புதுப்பிக்கக் கூடிய சக்தி ஆகிய துறைகளில் அமெரிக்க நிறுவனங்களுக்கு நல்ல பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் என்று இந்த அறிவிப்புக்குப் பொருளாகும்.

ஒபாமாவின் வருகையின் போது, அமெரிக்க – இந்திய வணிகக் குழுவுடனும், இந்திய – அமெரிக்க நிறுவனத் தலைமை அதிகாரிகளின் அமைப்பின் (Indo-US CEO Forum) கீழ் உயர் மட்ட இந்திய பெரு முதலாளிகளுடனும் என இரண்டு உயர்மட்ட வணிகக் கூட்டங்கள் தில்லியில் நடைபெற்றன. வணிகத்தை எளிதாக நடத்துவதை உறுதி செய்வதாக இந்திய அரசாங்கம், அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு, தாராளமான பல வாக்குறுதிகளை வழங்கியது. இருந்த போதிலும், தனியார்மய, தாராளமயப்படுத்தும் திசையில் மேலும் பல சீர்திருத்தங்களைக் அரசாங்கம் கொண்டுவர வேண்டுமென அமெரிக்க ஏகபோக முதலாளிகள் காத்துக் கொண்டிருப்பது வெளிப்படையானதாகும். இதுவே இந்த அமைப்புக்களில் நடைபெற்ற விவாதங்களின் சாராம்சமாகும்.

ஒபாமாவின் வருகையும், அதன் பிற விளைவுகளும், இந்திய ஆளும் வர்க்கத்திற்கும், அமெரிக்க ஏகாதிபத்தியர்களுக்கும் இடையில் உறவுகள் வளர்ந்து வருவதைக் காட்டுகின்றன. அதே நேரத்தில், இந்தியப் பெரு முதலாளி வர்க்கம் முழுமையாக அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்துவிட்டதென்றோ, அது அமெரிக்காவினுடைய கட்டளைகளைப் பின்பற்றி வருகிறது என்றோ முடிவு செய்வது தவறானதாகும். இந்தியப் பெரு முதலாளி வர்க்கம், தன்னுடைய சொந்த வர்க்க நலன்களையும், ஆசியாவிலும், உலக அளவிலும் ஒரு பெரிய வல்லரசாக ஆக வேண்டுமென்ற தன்னுடைய இலக்கையும், தொடர்ந்து வருவதோடு, அதற்கு மிகச் சரியான பாதையென தான் தீர்மானிக்கும் வழியையும் கடைபிடித்து வருகிறது. பிற சக்திகளிடமிருந்தும், எங்கு முடியுமானாலும் அங்கு தனக்கு மிகவும் அனுகூலமான ஒப்பந்தங்களை அது பெற்று வருகிறது. பிரச்சனையானது, இந்தியா அமெரிக்காவிடம் “அடி பணிந்து” போகிறதா, அல்லது “சமமான பங்காளரா” என்பதல்ல. பிரச்சனையானது, ஆசியா மற்றும் உலக மக்கள் மீது பேரழிவை உருவாக்கிவரும் மூர்க்கத்தனமான அபாயகரமானதாக அமெரிக்கா இருக்கிறது. அதனுடன் நெருங்கி உறவு வைத்துக் கொள்வது, ஒரு வெறுக்கத்தக்க கொள்கையாகும். அதனுடைய நாசகார செயல்களால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட இந்திய மக்களுக்கும், உலகெங்கிலுமுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கும் இழைக்கப்படும் துரோகத்தனமான செயலாகும், அது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பது கொள்கை அடிப்படையிலானதும், இந்திய மக்களுடைய தேசிய நலன்களைப் பாதுகாப்பதும் ஆகும்.

இந்தியாவிலுள்ள முதலாளி வர்க்க செய்தி ஊடகங்கள் ஒபாமாவுக்கு அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்புக் காட்சிகளை மட்டுமே காட்டினர். உண்மையில், அவருடைய வருகையை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகளும், தொழிலாளி வர்க்கம் மற்றும் மக்களுடைய அமைப்புக்களும் பெரும் ஆர்பாட்டகளை நடத்தியிருக்கின்றனர். இன்று உலகில் மிகவும் அபாயகரமான சக்தியான அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இந்திய மக்களுடைய நலன்களைப் பாதுகாக்கும் பணியை, அமெரிக்காவோடு நெருங்கிய உறவை வளர்த்துக் கொள்ளும் ஆர்வத்தில் ஒன்றுபட்டிருக்கும் இந்திய ஆளும் வர்க்கத்திடம் விட்டுவிட முடியாதென்பது தெளிவு. எல்லா ஏகாதிபத்தியத்திற்கும் எதிராகவும், உலக அமைதி மற்றும் எல்லா நாடுகளுடைய இறையாண்மையைப் பாதுகாத்தும் கொள்கை அடிப்படையிலான எதிர்ப்பின் ஒரு அங்கமாகவும், இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி ஒபாமாவின் வருகையையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் முக்கியக் கூட்டுறவையும் வன்மையாகக் கண்டிக்கிறது.

Pin It