ஒபாமாவின் வருகையை எதிர்த்து இடதுசாரி, கம்யூனிஸ்டு கட்சிகளின் போர்க் குணமிக்க கூட்டு ஆர்பாட்டம்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைவன் ஒபாமாவின் இந்திய வருகையை எதிர்த்து ஏழு கம்யூனிச, இடது சாரி கட்சிகளைச் சேர்ந்த செயல்வீரர்கள் ஒரு போர்க் குணமிக்க கூட்டு ஆர்பாட்டத்தை சனவரி 24, 2015 அன்று தில்லியில் வெற்றிகரமாக நடத்தினர். அதே நாளில், வேறு பல இடது சாரி கட்சிகளும், அமைப்புக்களும் கூட தில்லியில் எதிர்ப்பு ஆர்பாட்டங்களை நடத்தினர்.

left parties 552

உலகெங்கிலும் அமைதிக்கும், நாடுகளுடைய சுதந்திரத்திற்கும் இறையாண்மைக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய அதிபருடைய வருகைக்கு எதிராக நாடெங்கிலும் பல்வேறு நகரங்களிலும், ஊர்களிலும் நடைபெற்ற ஆர்பாட்டங்களின் ஒரு அங்கமாக, தில்லியில் இந்த ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்டு), இந்திய கம்யூனிஸ்டு கட்சி மா-லெ (விடுதலை), ஆல் இந்தியா பார்வேர்டு பிளாக், புரட்சிகர சோசலிச கட்சி, சோசலிஸ்டு யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா (கம்யூனிஸ்டு) மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி கூட்டாக இந்த ஆர்பாட்டத்தைத் தில்லியில் ஏற்பாடு செய்திருந்தனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், குடியரசு தின விழாவில் முக்கிய விருந்தினராக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைவன் ஒபாமா பங்கேற்க வேண்டுமென இந்திய அரசு அழைப்பிதழ் கொடுத்ததற்கு எதிராகவும் தங்களுடைய கண்டனக் குரலை எழுப்ப விரும்பிய இக் கட்சிகள் மற்றும் பிற அமைப்புக்களைச் சேர்ந்த தோழர்களும், ஆதரவாளர்களும், தனிநபர்களும் தில்லியில் மண்டி அவுசில் நண்பகலில் கூடத் தொடங்கினர். தத்தம் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுடைய ஒளிரும் செங்கொடிகளையும், இந்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்த தட்டிகளையும் ஏந்தியவாறு அவர்கள் அணிவகுத்து நின்றனர்.

குறித்த நேரத்தில் ஒழுங்குமுறையோடு எதிர்ப்புப் பேரணி துவங்கியது. இக் கட்சிகளுடைய தோழர்களும் ஆதரவாளர்களும் “அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக”, “போர் வெறிபிடித்த அமெரிக்காவை எதிர்ப்போம்”, “இந்திய அமெரிக்க போர்த் தந்திர கூட்டணி ஒழிக”, மற்றும் பல முழக்கங்களைக் கொண்ட தட்டிகளை உயர்த்திப் பிடித்தவாறு சென்றனர்.

left parties 553

சனவரி 26, 2015 அன்று நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் முக்கிய விருந்தினராகப் பங்கேற்பதற்காக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைவன் பாரக் ஒபாமாவை மோடி அரசு அழைத்தது பற்றி இந்தியாவின் தொழிலாளர்கள், உழவர்கள், பெண்கள், இளைஞர்களுடைய கடுமையான கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக பேரணியில் பங்கேற்றவர்கள் வீரமான முழக்கங்களை எழுப்பினர். நாடுகளை நிலைகுலைத்து, அழிக்கும் நோக்கத்தோடும், அவர்களுடைய இறையாண்மையை மீறியும், அமெரிக்கா முன்னின்று நடத்திவரும் போர்களுக்கு எதிராக அமெரிக்க மக்கள் உட்பட, உலகெங்கிலும் உள்ள மக்களுடைய பெரும் எதிர்ப்பைப், பேரணியில் பங்கேற்றவர்கள் வெளிப்படுத்தினர். அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதனுடைய கூட்டாளிகளும் பிற நாடுகளை நிலை குலைப்பதற்காகவும், தங்கள் நாட்டில் பாசிசத்தையும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர்களையும் நியாயப்படுத்தவும், எண்ணெற்ற பயங்கரவாத கும்பல்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் பயங்கரவாதத்தின் ஊற்றாக அமெரிக்கா எப்படி இருந்து வருகிறது என்பதை அவர்கள் தெளிவாகச் சுட்டிக் காட்டினர்.

இந்த வீரமான ஆர்பாட்டம் கடந்து செல்வதை, ஆயிரக் கணக்கான அலுவலக ஊழியர்களும், மாணவர்களும் வழிநெடுகிலும் கண்டனர். அவர்களில் பலரும் முழக்கங்களை எழுப்பியும் பங்கேற்றனர். பேரணியில் பங்கேற்ற பல அமைப்புக்கள் வீதி மக்களிடையே துண்டறிக்கைகளை வினியோகித்தனர். இத் துண்டறிக்கைகள், நமது நாட்டு அரசாங்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடு கொண்டிருக்கும் கூட்டணியை கொள்கை அடிப்படையிலேயே எதிர்க்க வேண்டிய அவசியத்தையும், உலகெங்கிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர்க் குற்றங்களை வெட்ட வெளிச்சமாக்கியும், அணு ஒப்பந்தத்தில் விபத்துகளுக்கு பொறுப்புக்களைத் தட்டிக் கழிப்பதை வெட்ட வெளிச்சமாக்க வேண்டிய தேவை குறித்தும் விளக்கியிருந்தன.

எதிர்ப்புப் பேரணி தில்லியின் பாராகம்பா சாலை, டால்ஸ்டாய் சாலை வழியாகச் சென்று ஜன்தர் மன்தர் வந்தடைந்தது. அங்கு நடைபெற்ற கூட்டத்தில் ஆர்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்த ஏழு அமைப்புகளுடைய பிரதிநிதிகள் பேசினார்கள். சிபிஐ (எம்) இன் பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ் காரட், சிபிஐ-யின் பொதுச் செயலாளர் தோழர் சுதாகர் ரெட்டி, சிபிஐ (எம்-எல்) விடுதலை மத்தியக் குழுவின் உறுப்பினர் தோழர் கவிதா கிருஷ்ணன், ஏஐஎப்பி-யின் சர்வதேச செயலாளர் தோழர் தேவராசன், ஆர்எஸ்பி-யின் பொதுச் செயலாளர் தோழர் அபானி ராய், எஸ்யுசிஐ (சி)-யின் தில்லி மாநிலக் குழுவின் செயலாளர் பிரதாப் சியாமல், இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் தோழர் பிரகாஷ் ராவ் ஆகியோர் முக்கிய உரையாற்றினர்.

பேரணியைப் போலவே, கூட்டமும் ஒழுங்கு தவறாமலும், போர்க் குணத்தோடும் நடைபெற்றது. குடியரசு தின விழாவில் முக்கிய விருந்தினராக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைவனை மோடி அரசாங்கம் அழைத்திருப்பதைப் பேரணியில் பங்கேற்ற எல்லா பேச்சாளர்களும் கண்டித்துப் பேசினர். சிலியிலிருந்து பாகிஸ்தான் வரை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடு கூட்டு சேர்ந்த ஒவ்வொரு நாடும் மிகவும் மோசமான நிலையை அடைய நேர்ந்தது என்பதை அவர்கள் விளக்கிக் கூறினர். வியத்நாம், ஆப்கானிஸ்தான், இராக் மற்றும் அண்மையில் சிரியா மற்றும் பாகிஸ்தானில் அமெரிக்க ஏகாதிபத்தியம் புரிந்த போர்க் குற்றங்களை அவர்கள் கண்டித்தனர். நமது நாட்டு மக்களுடைய வளங்களையும், உழைப்பையும் சுரண்டுவதற்காக “இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்” என்ற முழக்கத்தைக் கொண்டு, உலக முதலாளிகளை மோடி அரசாங்கம் அழைத்து வருவதை அவர்கள் கடுமையாகத் தாக்கினர். 1984 போபால் நச்சு வாயு விபத்து போன்று, பன்னாட்டு நிறுவனங்களால் தன்னுடைய சொந்த குடிமக்களுடைய உயிர்களுக்கும் உரிமைகளுக்கும் ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதில் மோசமான, வெட்கப்படத்தக்க வரலாறு கொண்ட இந்திய அரசாங்கம் அணு ஒப்பந்தத்தை நீர்த்துப் போகச் செய்வதிலுள்ள ஆபத்துக்களை அவர்கள் சுட்டிக் காட்டினர்.

left parties 554

இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் ஒரு பிரதிநிதியாகப் பேசிய தோழர் பிரகாஷ் ராவ், அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக் கண்டித்து தில்லியின் வீதிகளில் துணிவோடு இறங்கி செயல் ரீதியாக ஒற்றுமையைக் காட்டிய கம்யூனிஸ்டு கட்சிகளை அவர் பாராட்டினார். எல்லா கம்யூனிஸ்டுகளும், நாட்டுப் பற்றாளர்களும் ஒரு கொள்கை அடிப்படையிலேயே அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்க வேண்டுமென்ற மற்ற பேச்சாளர்களுடைய கருத்தை அவரும் வலியுறுத்தினார். கம்யூனிஸ்டுகள், தங்களுடைய ஒற்றுமையை வலுப்படுத்தி இந்தியாவின் உழைக்கும் மக்களுக்கு ஒரு ஒளிமயமான சிவப்பு எதிர்காலத்திற்கு வழி வகுக்க உதவ வேண்டுமென அவர் அழைப்பு விடுத்தார்.

எல்லாப் பேச்சாளர்களுடைய உரைகளையும் பல்வேறு கட்சிகளுடைய தோழர்களும், ஆதரவாளர்களும் மிகவும் கவனத்தோடு செவிமடுத்தனர். பின்னர் கூடியிருந்தவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீது தங்களுக்குள்ள கடும் வெறுப்பைக் காட்டும் விதமாக, குடியரசு தின விழாவிற்கு முக்கிய விருந்தினராக மோடி அரசாங்கம் அழைத்திருந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உருவ பொம்மையை தீயிட்டுக் கொளுத்தினர். உலகெங்கிலும் உள்ள மக்களுடைய சுதந்திரத்திற்கும், இறையாண்மைக்கும் எதிரான ஏகாதிபத்தியத்தின் பன்முனைத் தாக்குதல்களுக்கும், மோடி அரசாங்கம் போன்ற அவர்களுடைய கூட்டாளிகளுக்கும் எதிராக ஒற்றுமையோடு போராடுவோமென்ற உறுதியோடு முழக்கங்களை எழுப்பியவாறு அவர்கள் கலைந்து சென்றனர்.

மோடி அரசாங்கம், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கொண்டிருக்கும் கூட்டுச் சதி பற்றி இந்திய உழைக்கும் மக்கள் கொண்டிருக்கும் தீவிர கோபத்தை, பல்வேறு அமைப்புக்கள் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கை சரியாகப் பிரதிபலித்தது. முழு தெற்காசிய பகுதிக்கும் ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இந்திய முதலாளி வர்க்கத்திற்கும் இடையே உள்ள பிற்போக்குத் தனமான கூட்டணியை எதிர்க்கும் ஒன்றுபட்ட நடவடிக்கைகளை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

Pin It