நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற சட்டம் 2013-இல் நியாயமான இழப்பீடு உரிமை மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான திருத்தத்தை டிசம்பர் 29-ஆம் தேதி, 2014 அன்று ஒரு அவசர சட்டமாக, பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் அமைச்சகம், நிறைவேற்றியது. இரண்டு நாட்களுக்கு பிறகு, டிசம்பர் 31-ஆம் தேதி, இந்திய குடியரசுத் தலைவர் இந்த அவசர சட்டத்தை அங்கீகரித்தார்.

இந்த நேரத்தில், முதலாளி வர்க்கத்திற்கு சேவை செய்ய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஒரு வாய்ப்பு அளித்து முதலாளி வர்க்கம் அதிகாரத்தில் அமர்த்தியுள்ளது. இந்த அவசர சட்டம் மூலம் அரசாங்கம் 2013 சட்டத்திலுள்ள பிரிவு 10-ஐத் திருத்தி சட்டப்படியான சமூக தாக்கம் பற்றிய மதிப்பிடுதலிலிருந்து - ஐந்து புதிய துறைகளுக்கு விலக்கு அளித்துள்ளது. பாதிக்கப்பட்ட 80% மக்களிடமிருந்து ஒப்புதல் தேவை, செழிப்பான விளை நிலத்தை கையகப்படுத்துவதற்கு உள்ள தடை ஆகிய விதிகளையும் இது திருத்தியுள்ளது.

தேசிய பாதுகாப்பு, பாதுகாப்புத்துறை மற்றும் மின்மயமாக்கல், தொழில்துறை தாழ்வாரங்கள் மற்றும் ஏழை மக்களுக்கான வீட்டு வசதிகள் உள்ளிட்ட ஊரக உள்கட்டமைப்பு நோக்கங்களுக்காக நிலத்தைக் கையகப்படுத்த வேண்டும் என்றால், பாதிக்கப்பட்ட 80% மக்களிடமிருந்து ஒப்புதலும் சமூக தாக்க மதிப்பிடுதலும் அவசியமில்லை என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறுகிறார். இந்த துறைகளுக்காக, விளை நிலங்களைக்கூட கையகப்படுத்தலாம். பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டுத் (பிபிபி) திட்டங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த அவசர சட்டத்தின் மூலம் கொண்டு வந்த திருத்தங்களினால், ஏதோ ஒரு வகையில் நிலம் கையகப்படுத்தல் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு வளர்ச்சியோடு சம்பந்தப்பட்ட 13 பிற சட்டங்களும் பாதிக்கப்படும். நிலக்கரி, சுரங்கம், பெட்ரோலியம் மற்றும் கனிமங்கள், ரயில்வே, மின்சாரம், அணுசக்தி போன்றவை உள்ளிட்ட சட்டங்களும் இதில் அடங்கும். மொத்தத்தில், முந்தைய தேவைகளாக இருந்த, பாதிக்கப்பட்ட மக்களின் ஒப்புதலையும் சமூக தாக்க மதிப்பிடுதலையும், இந்த அவசர சட்டம் அகற்றிவிட்டது.

காலனிய நிலம் கையகப்படுத்தும் சட்டம் 1894-இல் உள்ள 'பொது நோக்கத்திற்காக' என்ற சாக்கைப் பயன்படுத்தி, முன்னாள் காங்கிரசு - தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், நாட்டின் பல பாகங்களிலுள்ள பெரிய நிலப் பரப்புகளை வலுக்கட்டாயமாக கையகப்படுத்தியது. இந்திய மற்றும் வெளிநாட்டு பெருமுதலாளி வர்க்கத்தின் நலன்களை முன்னேற்றுவதற்காக இது செய்யப்பட்டது.

இந்த பகுதிகளில் வாழும் விவசாயிகளும் பழங்குடி மக்களும் பலவந்தமாக நிலம் கையகப்படுத்துவதை தீவிரமாக எதிர்த்தனர். ஆர்ப்பாட்டம் செய்த மக்களிலும் அதிகாரிகள் மற்றும் இராணுவப் பாதுகாப்பு சக்திகளிலும் பலர் தங்கள் உயிர்களை இழக்கும் அளவிற்கு இந்தப் போராட்டங்கள் தீவிரமாக இருந்தன. இவையாவும் இந்திய மற்றும் வெளிநாட்டு பெரிய முதலாளி வர்க்கத்தின் திட்டங்களுக்கு பெரிய தடையாக இருந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் 1894 காலனீய சட்டத்தை திருத்தி நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் இவற்றில் நியாயமான இழப்பீடு உரிமை மற்றும் வெளிப்படைத்தன்மை சட்டம் 2013-ஐக் கொண்டு வந்தது. மக்களுடைய கோபத்தைத் தணிக்கவும் நாட்டின் பல பாகங்களில் எழுந்த மக்களின் பரந்த எதிர்ப்புகள் முதலாளித்துவ ஆட்சிக்கு சிக்கலை ஏற்படாமலிருப்பதை உறுதி செய்யவுமே இது கொண்டுவரப்பட்டது.

இந்த 2013 சட்டத்தை தயார் செய்ய பல ஆண்டுகள் ஆனது. பல குழுக்கள் நிறுவப்பட்டு பல வரைவுகள் எழுதப்பட்டன. பல அரசாங்க மற்றும் அரசு சார்பற்ற நிபுணர்கள் ஆலோசிக்கப்பட்டனர். பாராளுமன்றத்தில் பல அமர்வுகளில் சூடான பல விவாதங்கள் நடந்துள்ளன. பல கட்சிகள் வெவ்வேறு வழிகளில் இதன் மீதான தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இறுதியாக, பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்ட போது, சமூக தாக்கம் மதிப்பிடுதலிலிருந்தும் பாதிக்கப்பட்ட 80% மக்களிடமிருந்து ஒப்புதலும் விளை நிலங்களை கையகப்படுத்துவதற்கு கட்டுப்பாடுகளும் அதில் சேர்க்கப்பட்டன. இந்த சட்டம், மக்கள் இயக்கங்களுக்கு கிடைத்த வெற்றி என அப்போது கூறப்பட்டது.

மத்தியில் ஆட்சிக்கு வந்த சில மாதங்களுக்குளேயே, பா.ஜ.க தலைமையிலான அரசாங்கம், இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோகங்களின் இலாபத்தை அதிகரிப்பதற்காக அவர்கள் மக்களுடைய நிலங்களையும் வளங்களையும் கொள்ளையடிப்பதற்கு வழிவகை செய்வோமென தெளிவுபடுத்தியுள்ளது.

'இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்' என்ற பரப்புரையை பெரும் ஆரவாரத்துடன் பிரதமர் மோடி தொடங்கினார். இதன் மூலம், இந்தியாவில் முதலீடு செய்து தொழிற்சாலைகளை நிறுவி பொருட்களை இங்கே உற்பத்தி செய்து, அவற்றை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் விற்பதற்கு இந்திய மற்றும் வெளிநாட்டு முதலாளிகளுக்கு அழைப்பு விடப்படுகிறது. பெரு முதலாளி வர்க்கத்தின் இந்தத் திட்டத்திற்கு வலுவூட்ட, தேவையான அளவு நிலங்களை மிகக் குறைந்த விலையில் கையகப்படுத்துவது அவசியம்.

இதற்கு, எதிர்க் கட்சிகளிடமிருந்தோ மக்கள் இயக்கங்களிடமிருந்தோ எழும் எல்லாத் தடைகளையும் நீக்குவது அரசாங்கத்திற்கு அவசியமாக இருந்தது.

இதைப் பாராளுமன்றத்திற்குக் கொண்டு சென்றால், விவாதங்களில் நியாயமான காரணங்களைக் கொடுப்பது முடியாமல் போகும் என்பதால், பெரு முதலாளிகளுடைய செயல் திட்டத்தைத் தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் பாராளுமன்ற பாதையை தவிர்த்துவிட்டு அவசர சட்ட வழியைக் கடைப்பிடித்தனர்.

அடிமைப்படுத்தப்பட்ட இந்தியாவில் தொடர்ந்து எல்லா வழிகளிலும் கொள்ளை அடிப்பதற்கு பிரிட்டிஷ் காலனிய அரசாங்கத்திற்கு சுரங்கங்களும், தொழில்களும், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மூலப் பொருட்களை எடுத்துச் செல்ல ரயில் போக்குவரத்தும் பெரிய தொழிற்சாலைகளும், விமான போக்குவரத்தும், அணைகளும், பாலங்களும் தேவையாக இருந்தன.

மலிவான பொருட்களை இந்திய சந்தைகள் உட்பட உலக சந்தைகளில் விற்று கொள்ளை இலாபம் ஈட்ட காலனியர்கள் விரும்பினர். முதலில், அவர்களுடைய கொள்ளையடிக்கும் அரசாங்கத்தைக் கட்டிக் காப்பதற்காக இராணுவத்திற்கும் காவல் துறைக்கும் நிலங்கள் தேவைப்பட்டது.

இந்தியாவின் நிலத்தின் மீதும் இயற்கை வளங்கள் மீதும் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டை நிறுவுவதற்காக, நிலம் கையகப்படுத்தும் சட்டம் 1894-ஐ பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கொண்டுவந்தார்கள்.

தங்கள் மலைகள் மற்றும் காடுகள் மீது பழங்குடி மக்களுடைய இயற்கையான மற்றும் காலம்-காலமான உரிமைகளை பிடுங்குவதற்கான அதிகாரத்தை பிரிட்டிஷார் இந்த சட்டம் மூலம் பெற்றனர். விவசாயிகளுக்கு தங்கள் விவசாய நிலங்களின் மீதுள்ள உரிமைகளையும் கிராம மக்களுக்கு தங்கள் கிராமங்களின் மீதுள்ள உரிமைகளையும் தட்டிப் பறிக்கும் அதிகாரத்தை பிரிட்டிஷார் இந்த சட்டம் மூலம் பெற்றனர்.

பிரிட்டிஷ் அரசாங்கம் 'பொது நோக்கத்திற்காக' என்ற கருத்தை பயன்படுத்தி நாட்டை கொள்ளையடிப்பதை நியாயப்படுத்தினார்கள்.

சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய முதலாளி வர்க்கம் புதிய ஆட்சியாளர்களாக ஆகினர். இந்த பரந்த நிலப்பரப்பிலுள்ள இயற்கை வளங்களையும் மக்களின் திறமையான கடின உழைப்பையும் விரைவாகச் சுரண்டி தங்களுடைய தனியார் இலாபத்தையும் அதிகாரத்தையும் அதிகரிக்கும் காலனீய ஆட்சியாளர்களுடைய அதே நோக்கத்தையே இவர்களும் கொண்டிருந்தனர்.

காலனீயர்கள் செய்த அதே முறையில் இந்திய முதலாளி வர்க்கத்தின் அரசும், பரந்த நிலப்பரப்பு, ஆறுகள், காடுகள் மற்ற வளங்கள் மீது மக்களுடைய உரிமைகளை மறுத்து, தங்களுடைய மேலாதிக்க உரிமையை நிலைநாட்டினர். ஒரு உலக சக்தியாக ஆகவேண்டும் என்பதற்காக இந்திய முதலாளி வர்க்கமும் மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்கல், தொழிற்சாலைகள், போக்குவரத்து மற்றும் நவீன தகவல் தொடர்பு, அணுசக்தி ஆலைகள், பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி, இராணுவத் தளங்கள், போன்றவற்றை வளர்க்க வேண்டியிருந்தது.

இவை அனைத்தையும் 'பொது நோக்கத்திற்காக' என்றும் 'தேசிய நலனுக்காக' என்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை யாவும் முதன்மையாக பெரு முதலாளிகளுடைய நலன்களுக்காக செயல்படுகின்றன, இல்லாதவர்களுக்கும் இடம் பெயர்ந்தவர்களுக்கும் ஒட்டாண்டியாக்கப்பட்ட உழைக்கும் மக்களுடைய நலன்களுக்கு அல்ல. இப்படி, காலனிய நில கையகப்படுத்தல் சட்டம் 1894, முதலாளி வர்க்கத்திற்கு நல்ல முறையில் சேவை செய்துள்ளது, ஏனெனில் நாட்டின் வளங்கள் மீதான அதனுடைய கண்ணோட்டம் காலனியர்களுடையதிலிருந்து வேறுபட்டதல்ல.

மக்களின் நில வளங்களையும் உழைப்பையும் கொடூரமாக சுரண்டியும் கொள்ளையடித்தும், இந்திய பெரு முதலாளி வர்க்கம் தொண்ணூறுகளில் மிகவும் சக்திவாய்ந்தவர்களாக ஆகிவிட்டனர். இப்போது உலக சக்தியாக ஆக வேண்டும் என அவர்களால் கனவு காண முடிந்தது. ஆனால் அவர்களுக்கு உயர்ந்த தொழில் நுட்பமும் மூலதனமும் தேவைப்பட்டது. இதற்காக அவர்கள் தாராளமயம் தனியார்மயமாக்கல் மூலம் உலமயமாக்கும் காலத்தைத் தொடங்கினர்.

இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த, பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு விற்பது மட்டுமல்லாமல் நாட்டின் பல பகுதிகளிலும் பெரும் நிலப்பரப்புகளை மலிவாக கிடைக்கச் செய்ய வேண்டும். இதற்கு அரசு தன் ஆயுத வலிமையைப் பயன்படுத்தியது. நாட்கள் நகர நகர 'பொது நோக்கத்திற்காக' என்பது உண்மையில் தனியார் முதலாளிகளின் இலாபத்தை இருப்பதற்குள் அதிகப்படுத்துவதை குறிப்பதற்கான திரை என்றும் அது பாதிக்கப்பட்ட மக்களின் அழிவுக்கு இட்டுச் செல்லும் என்றும் பெருவாரியான மக்களுக்கு புரிந்தது. இதன் விளைவாக, பலவந்தமாக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக மக்கள் இயக்கங்கள் தீவிரமடைந்தன.

காலனிய நிலம் கையகப்படுத்தல் சட்டம் 1894-ஐ மாற்ற வேண்டும் என்ற குரல் நாடெங்கும் ஒலித்தது. அதனாலேயே மேற்கூறியவாறு 2013-இல் ஐமுகூ அரசாங்கம் ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்ற கட்டாயப்படுத்தப்பட்டது. ஆனால் டிசம்பர் 2014 அவசர சட்டம் மூலம், பெரிய முதலாளிகளுடைய நிகழ்ச்சி நிரலே முன்னேற்றப்படும் என்றும் உழைக்கும் மக்களின் உரிமைகள் சட்டத்தின் வலிமையைக் கொண்டு பறிக்கப்படும் என்றும் அரசு மீண்டும் ஒரு முறை உணர்த்தியுள்ளது.

நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற சட்டம் 2013-இல் நியாயமான இழப்பீடு உரிமை மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான திருத்தத்தைச் சட்டமாக்க அவசர சட்ட வழியைத் தேர்ந்தெடுத்திருப்பது, முதலாளி வர்க்கமே அரசியலில் உயர்நிலையில் இருப்பதையும், ஒவ்வொரு அரசாங்கமும் அதனுடைய நலன்களையே நடைமுறைப்படுத்த வேண்டி இருப்பதையும் காட்டுகிறது.

ஆட்சியாளர்களும் அதன் அனைத்து அரசியல் கட்சிகளும் பாராட்டும் இந்திய நாடாளுமன்ற சனநாயக முறை இந்த உண்மையை மறைப்பதற்கான மூடுதிரையாகும், சனநாயகத்தின் நடிப்பு முதலாளி வர்க்கத்தின் நிகழ்ச்சி நிரலை வேகமாக முன்னேற்ற முடியவில்லையானால், இந்த அரசு அந்த நாடகத்தை முடித்துவிட்டு, அவசர சட்டங்கள் மூலம் முதலாளி வர்க்கம் வெளிப்படையாகவே தங்களுடைய விருப்பத்தை சுமத்துகிறது.

இந்த குறிப்பிட்ட அவசர சட்டம் இதற்கு முதல் உதாரணம் அல்ல. சனநாயகத்தின் முக்கிய ஆதாரமாக கூறப்படும் இந்திய அரசியல் சாசனம், மக்கள் வணங்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் விருப்பப்படும் இந்திய அரசியல் சாசனம், பாராளுமன்றத்தை புறக்கணித்து அவசர சட்டங்களை பிரகடனப்படுத்த சனாதிபதிக்கு முழு உரிமை கொடுக்கிறது. 'தேசிய நலன்' என்ற பெயரில் பாராளுமன்றத்தையோ மாநில சட்டசபைகளையோ கலைப்பதற்கு கூட இந்திய அரசியல் சாசனம் சனாதிபதிக்கு முழு உரிமை கொடுக்கிறது.

ஒரு புறம், அனைத்து குடிமக்களின் தேவைகளை நிறைவேற்றவும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் பல்வேறு வகையான தொழில்களையும், திட்டங்களையும் நவீன சேவைகளையும் நிறுவி பொருளாதாரத்தை இயக்குவதற்கு நிலங்களைக் கையகப்படுத்த உண்மையில் அவசியம் உள்ளது.

மறுபுறம், தங்கள் நிலத்தில் தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்து அதன் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டி வரும் மக்களுக்கு தாங்கள் சார்ந்துள்ள வயல்வெளிகளின் மீதும் மலைகள் மீதும் இயற்கையான உரிமை உண்டு. அதைப் போலவே, மக்கள் முழுமைக்கும் எல்லா இயற்கை வளங்கள் மீதும் உரிமை உண்டு. கையளவே உள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு முதலாளிகளின் லாபங்களை அதிகரிக்கும் நோக்கத்திற்காக நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு அரசுக்கு எந்த உரிமையும் இல்லை.

நிலம் மற்றும் இயற்கை வளங்களை வளர்க்கும் நோக்கம் அனைத்து உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் எதிர்கால தலைமுறையினரின் நல்வாழ்வையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதாகவும் இருக்க வேண்டும். நிலத்தை கையகப்படுத்த இது ஒன்று மட்டுமே காரணமாக இருக்க வேண்டும். இதை உறுதிப்படுத்தும் பொறுப்பாளியாக அரசு இருக்க வேண்டும்.

தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் ஒன்றுபட்டு முதலாளி வர்க்க ஆட்சியை தூக்கி எறிந்துவிட்டு தங்களுடைய ஆட்சியை நிறுவ வேண்டும். அப்படிப்பட்ட ஒரு அரசு, நாட்டின் மக்களுக்கு தன்னுடைய பணியை ஆற்ற கடமைப்பட்டிருக்கும் கையளவே உள்ள முதலாளிகளுக்கு அல்ல.

அனைத்து பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களை கணக்கில் எடுத்துக் கொள்ளும் ஒரு புதிய நில கையகப்படுத்தும் சட்டம் தயாராகும் வரை, எல்லா விவசாய நிலங்கள் கையகப்படுத்தலும் தடை செய்யப்பட வேண்டும். வளமான விளை நிலங்கள் அதனை உழுது சாகுபடி செய்பவர்களின் கைகளில் இருப்பதைப் புதிய சட்டம் உறுதி செய்ய வேண்டும்.

ஏகபோக முதலாளி வர்க்கத்தின் நலன்களுக்காக பலவந்தமாக நிலம் கையகப்படுத்துவதை தொழிலாளர் ஒற்றுமைக் குரல் வன்மையாக கண்டிக்கிறது. தொழிலாளி வர்க்கத்தையும் அனைத்து உழைக்கும் மக்களையும் ஒன்றிணைந்து முதலாளி வர்க்க ஆட்சியை தங்களுடைய ஆட்சியால் மாற்றி அமைக்கும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அது அறைகூவல் விடுக்கிறது. நம் நாட்டின் விலைமதிக்க முடியாத வளங்களையும் ஏராளமான உழைப்பையும் நம் மக்களின் திறனையும் மக்கள் சேவைக்கு பயன்படுத்த இதுவே அடிப்படை நிபந்தனையாகும்.

Pin It