பூனாவில் நடைபெற்ற இந்தியாவின் உயர் வங்கி அதிகாரிகளுடைய “அறிவுச்சங்கமம்” (கியான்சங்கம்) என் இரண்டு நாள் கூட்டம் பற்றி ஆல் இந்தியா வங்கி ஊழியர்கள் சங்கத்தின் (AIBEA) துணைத்தலைவர் தோழர் விஷ்வாஸ் உதாகியுடன் நேர்முகம்

தொழிலாளர் ஒற்றுமைக் குரல் (தொ.ஒ.கு)– தோழர் உதாகி, சனவரி 2 மற்றும்3, 2015-இல் நடைபெற்ற அறிவுச் சங்கமத்தில் என்ன விவாதிக்கப்பட்டது என்று தயவு செய்து சொல்லுங்கள்.

தோழர் விஷ்வாஸ் உதாகி (விஉ)– இக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ரிசர்வ் வங்கியின் ஆளுநர்இரகுராம் இராஜன், நிதிச் செயலாளர் அஸ்முக் அதியா, சில பொதுத் துறை வங்கிகளின் தலைவர்கள், அன்னிய ஆலோசனை நிறுவனங்களாகிய மெக்கன்சி & மெக்ன்சி மற்றும் ஏர்னஸ்டு & யங்-இன் பிரதிநிதிகள் பங்கேற்றனர். எல்.ஐ.சி, 4 பொதுக் காப்பீட்டு நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜிஐபிஎஸ்ஏ-யின் (பொது காப்பீட்டாளர்கள் பொதுத் துறை இந்திய கூட்டமைப்பு, GIPSA)மற்றும் ஐஆர்டிஏ (காப்பீடு முறைப்படுத்துதல் மற்றும் வளர்ச்சி ஆணையம்,IRDA)இன் பிரதிநிதிகளும், மற்றும் செபி(SEBI)யின் தலைவரும் வந்திருந்தனர். பிஎஸ்இ(BSE)-இன் தரகு நிறுவனங்கள் மற்றும் பரஸ்பர நிதியின் (மியூட்சுவல் பண்டின்)தலைவர்களும் இதில் பங்கேற்றனர்.

தொஒகு – தொழிலாளர்களுடைய பிரதிநிதிகள் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டனரா?

விஉ : இந்தக் கூட்டத்திற்கு தொழிலாளர்களின் எந்தப் பிரதிநிதியும் அழைக்கப்படாதது, உண்மையிலேயே வெட்கப்படத்தக்கதாகும். தொழிலாளர்களுக்கு எதிரான, இந்த நாட்டின் நலனுக்கு எதிரான அவர்களுடைய திட்டங்களை நாங்கள் எதிர்ப்போம் என்பதை அவர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள். ஊடங்களுடைய பிரதிநிதிகளும் கூட கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை.

தொஒகு – இந்தக் கூட்டத்தில் என்னென்ன விவாதிக்கப்பட்டன?

விஉ – வங்கித் துறையை திருத்தியமைப்பதற்கான திட்டத்தை உருவாக்குவதற்காக அரசாங்கத்தால் அமர்த்தப்பட்ட இரு ஆலோசனை நிறுவனங்கள், தங்கள் காட்சித் தொகுப்பை முன்வைத்தனர். வங்கித் துறை மட்டுமின்றி காப்பீடு மற்றும் பரஸ்பர நிதி (மியூட்சுவல் பண்டு)உட்பட நிதித் துறையை முழுவதுமாக மாற்றியமைக்கும் முயற்சியில் இது ஒரு அங்கமாகும்.

வங்கித் துறையைத் திருத்தியமைக்க பின்வரும் நடவடிக்கைகள் முன்வைக்கப்பட்டன:

  1. வங்கி முதலீட்டு நிறுவனம் என்பதை உருவாக்கி, அதில் செயல்பட்டுவரும் 27 பொதுத் துறை வங்கிகளில் அரசாங்கம் வைத்திருக்கும் தன்னுடைய பங்குகளை அதற்கு மாற்றுதல்.
  2. பொதுத் துறை வங்கிகளில் இருக்கும் பங்குகளைத் தனியாருக்கு விற்பதன் மூலம் மூதலனத்தைத் திரட்டுதல். ரூ 2.60 இலட்ச கோடிகளைத் திரட்ட வேண்டுமென 2018-க்கு இலக்கு.
  3. 27 பொதுத் துறை வங்கிகளை ஒருங்கிணைத்து 6 அல்லது 7 பெரிய வங்கிகளாக ஆக்குதல்.
  4. இந்த வங்கிகளையும், வேளாண்மைக்கும் கிராமப்புற வளர்ச்சிக்கும், வாணிகத்திற்கும் கடனளித்துவரும் நபார்டு (வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான தேசிய வங்கி( ஐயும், இந்திய தொழில் வளர்ச்சி வங்கி ( ஐயும் முழுவதுமாக தனியார்மயப்படுத்துதல்.

இவற்றை ஒவ்வொன்றாக நாம் பார்க்கலாம்.

1.வங்கி முதலீட்டு நிறுவனம் (BIC):

பிஐசி என்ற ஒரு தனி நிறுவனம் உருவாக்கப்பட்டு, அதற்கு பல்வேறு வங்கிகளில் அரசாங்கம் வைத்திருக்கும் பங்குகள் மாற்றிக் கொடுக்கப்படும். இதன் மூலம், எல்லா பொதுத் துறை வங்கிகளுடைய உடமையாளராக பிஐசி ஆகிவிடும். நிதி வல்லுனர்கள், இந்த பிஐசி நிறுவனத்தை நடத்துவதற்கு நியமிக்கப்படுவார்கள். தற்போது 27 பொதுத் துறை வங்கிகளில் இந்திய அரசாங்கம் பெரும்பான்மையான பங்குதாரராக இருக்கிறது. 1995-இல் வங்கிகளின்  தனியார்மயம் அறிவிக்கப்பட்டதிலிருந்துஅரசாங்கம், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் தன்னுடைய பங்குகளை 58%மாகவும், மற்றும் பிற வங்கிகளில் 80%வரையிலும் குறைத்திருக்கிறது. ஒவ்வொரு பொதுத் துறை வங்கியின்தலைமைக் குழுவிலும் தனியார் பங்குதாரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 4 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ரிசர்வ் வங்கியிலேயே அதனுடைய தலைமைக் குழுவில் பல்வேறு நேரங்களில் பிர்லா, மகேந்திரா, நாராயண மூர்த்தி போன்ற பெரு முதலாளிகள் இருந்திருக்கிறார்கள். பங்குகளின் விலைகள் உயரும் போதெல்லாம் ஒவ்வொரு பொதுத் துறை வங்கிகளுடைய பங்குகள் தொடர்ந்து விற்கப்பட்டுவரும்.

பிஐசி-ஐ உருவாக்க வேண்டுமென்பது ஒரு புதிய கருத்தல்ல. பி.ஜே.நாயக் குழு, ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜனிடம் மே 2014-இல் அளித்த தன்னுடைய அறிக்கையில் இதைப் பரிந்துரை செய்திருந்தது. மிகப் பெரிய தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கியின் தலைவர் தான் இந்த பி.ஜே.நாயக்! ரகுராம் ராஜன், உலக வங்கியில் இருந்தபோது இதே கருத்தை 2006-இல் முதலில் முன்வைத்தார்.அமெரிக்க மற்றும் ஐரோப்பிய முதன்மை நிறுவன (holding company)மாதிரியை இந்திய பொதுத் துறை வங்கிகள் பின்பற்ற வேண்டுமென அவர் விரும்பினார்.

2. மூலதனத்தைத் திரட்டுதல்:

1995-இல் மிகப் பெரிய முதலாளித்துவ நாடுகளைச் சேர்ந்த மத்திய வங்கித் தலைவர்கள் பேசலில் கூடியபோது, வங்கிகள் அழிந்துவிடாமல் இருப்பதற்கு பல்வேறு நியதிகளை அவர்கள் தீர்மானித்தனர். அவற்றில் ஒன்று போதுமான மூலதன விகிதம் - சிஏஆர் (CAR) என்பதாகும். அது அப்போது 6% மாக இருக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. (சிஏஆர் என்பது, வங்கியின் மூலதனத்தை, கடன்கள், மூதலீடுகள் மற்றும் பிற சொத்துக்கள் போன்ற அதனுடைய ஆபத்தான சொத்துகளுடைய சதவிகிதமாகக் குறிப்பிடுவதாகும். எடுத்துக் காட்டாக, மூலதனமாக ரூ 100 உள்ள ஒரு வங்கி, ரூ1666.66 க்கு மேல் கடன் கொடுக்கக் கூடாது. ரூ 100 /ரூ 1666.66 = 6%சிஏஆர் ஆகும்.) 2003-இல் இந்த சிஏஆர் 9% ஆக உயர்த்தப்பட்டது. 2008 நிதி நெருக்கடிக்குப் பின்னர், அது மேலும் உயர்த்தப்பட்டு ஏப்ரல் 1, 2015 இல் 12% மாக ஆக வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. சிஏஆர்-ஐ 12% மாக வைத்திருக்க, வங்கிகளுடைய மூலதனமானது தற்போதைய ரூ 25,000 கோடியிலிருந்து ரூ 2.60 லட்சம் கோடிகளாக 2018 இல் அதிகரிக்க வேண்டுமென கணிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வங்கிகள், அவர்களுடைய சொத்துக்களுடைய வளர்ச்சிக்கு ஏற்ப கூடுதல் மூதலனத்தை தங்களுடைய இலாபத்திலிருந்து உருவாக்கிக் கொண்டனர். அதிலிருந்த பற்றாக் குறை மட்டுமே அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டது. எல்லா பொதுத் துறை வங்கிகளும் இலாபத்தில் இயங்குகின்றன. அரசாங்கத்திற்கு ஆண்டிற்கு ரூ 7000 கோடி ஈவுத் தொகையை அவர்கள் கொடுத்து வருகின்றனர். இவ்வாறு வங்கிகளிடமிருந்து பெறும் ஈவுத் தொகையிலிருந்தே பற்றாக் குறையை அரசாங்கம் கொடுத்து வருகிறது. ஆனால் அறிவுச் சங்கமத்தின் தீர்மானப்படி, இனிமேல் அரசாங்கம் பற்றாக் குறையை ஈடுகட்டாது. பிஐசி தன்னுடைய பங்குகளை விற்று மேற்கொண்டு தேவைப்படும் மூதலனத்தை உருவாக்கும்!

3. 27 பொதுத் துறை வங்கிகளை 6 அல்லது 7 பெரிய வங்கிகளாகஒருங்கிணைத்தால், 20-21 வங்கிகள் மூடப்பட்டுவிடும். பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் உபரியாக இருப்பதாக அறிவிக்கப்படும். ஒரிடத்தில் ஒரே வங்கிக்கு பல கிளைகளை வைத்திருக்க அவசியமில்லாததால், பல வங்கிக் கிளைகள் மூடப்பட்டுவிடும்.

நேஷ்னல் இன்சூரன்சு கம்பெனி லிமி, நியு இந்தியா அசூரன்சு கம்பெனி லிமி, ஓரியன்டல் இன்சூரன்சு கம்பெனி லிமி மற்றும் யுனைட்டெட் இந்தியா இன்சூரன்சு கம்பெனி லிமி ஆகிய நான்கு பொது காப்பீட்டு கம்பெனிகளையும் இதே போன்று ஒருங்கிணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது போலவே, யுடிஐ, எஸ்பிஐ கேப் மற்றும் எல்ஐசி மியூட்சுவல் பண்டு ஆகிய மூன்று பொதுத் துறை மியூட்சுவல் பண்டு நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கொடாக் வங்கி அண்மையில் ஐஎன்ஜி வைசியா-வை வாங்கியது போல, தனியார் துறை வங்கிகள் ஏற்கெனவே ஒன்று குவிக்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள தனியார் வங்கிகளில் மேலும் ஒருங்கிணைப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

4. முழுவதுமாக தனியார் மயமாக்கல் :

மேற்கண்ட எல்லா நடவடிக்கைகளும் முழுவதுமாக தனியார்மயமாக்கலை மேலும் விரைவுபடுத்துவதற்காகவே எடுக்கப்பட்டு வருகின்றன. இறுதியாக பொதுத் துறை வங்கிகளில் அரசாங்கம் தனது பங்கை 51% த்திலிருந்து 26% மாகக் குறைக்கும். பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை ஏஐபிஇஏ (AIBEA) தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறது

2008-2009 உலக நிதி நெருக்கடி அனுபவம், இவர்களுக்கு எந்தப் படிப்பினையையும் கற்பிக்கவில்லை. அறிவுச் சங்கமத்தின் விவாதங்கள், அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தோல்வியடைந்த கொள்கைகளை நமது நாட்டிற்கு அறிவுறுத்தி வருகின்றன. நமது வங்கிகள் இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த காரணத்தால் மட்டுமே, ஒரு பெரிய நிதி நெருக்கடியிலிருந்து இந்தியா அப்போது தப்பிக்க முடிந்தது. 

தொஒகு :“அறிவுச் சங்கமம்’ என்பதை நாம் “முட்டாள்களின் சங்கமம்” என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா?

விஉ : சரிதான். அது தான் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

தொஒகு : டிசம்பர் 2014 கிற்குள் 10 புதிய வங்கிகளைத் திறப்பதற்கு அரசாங்கம் உரிமங்களைக் கொடுக்குமென அரசாங்கம் அண்மையில் அறிவித்ததே. அதன் நிலை என்ன?

விஉ : டாடா, பிர்லா மற்றும் பிற ஏகபோகங்கள் உட்பட 26 விண்ணப்பங்கள் வந்தன. இந்திய அரசின் நிறுவனங்களாகிய எல்ஐசியும், தபால் அலுவலகமும் கூட விண்ணப்பித்திருந்தன. ஆனால் பன்தான்-க்கும், ஐடிஎப்சி-க்கும் என இரண்டு உரிமங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டன. குறைந்த பட்ச மூலதனமாக ரூ 500 கோடி ரூபாய் தேவை என்பது மட்டுமின்றி, விண்ணப்பிக்கும் நிறுவனம். அதனுடைய எல்லா துணை நிறுவனங்களுடைய கணக்குகளையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதும் ஏகபோக தனியார் குழுக்களின் ஆர்வத்தைக் குறைத்துவிட்டது.

இந்தப்பல்வேறு நிறுவனங்கள் கருப்புப் பணத்தை உருவாக்குவதற்காக இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பொய்யான பல துணை நிறுவனங்களை வைத்திருக்கிறார்கள் என்பது நன்கறிந்ததாகும். எனவே அவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை தீவிரமாகத் தொடரவில்லை. எல்ஐசிக்கும், தபால் அலுவலகங்களுக்கும் இந்தியாவெங்கிலும் கிளைகளைக் கொண்ட பரந்த வலை இருப்பதால் உரிமம் பெறுவதற்கு மிகவும் பொறுத்தமானவர்கள்.

ஆனல் தற்போது அரசாங்கத்தின் எண்ணம் பொதுத்துறை முதலீட்டை விரிவுபடுத்துவதற்கு எதிரானதாகவும், தனியார் முதலீட்டை ஊக்குவிக்குவிப்பதாகவும் இருக்கிறது. எனவே அவர்களுக்கு உரிமம் கொடுக்கப்படவில்லை.

தொஒகு : அரசாங்கத்தின் ஜன் தன் யோஜனா எனப்படும் வங்கிக் கணக்குத் திட்டத்தின் பின்னாலுள்ள நோக்கமென்ன?

விஉ : இதுவரை 11 கோடி வங்கி கணக்குகள் இந்தியாவெங்கிலும் திறக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரும் தங்கள் கணக்குகளில் ரூ 1000 போடுவார்களேயானால், வங்கிகள் மக்களுடைய சேமிப்பிலிருந்து ரூ 11,000 கோடி ரூபாயைத் திரட்ட முடியும். மேலும் அரசாங்கம் இந்தக் கணக்குகளைப் பயன்படுத்தி, எரிவாயு, உணவு மானியம் போன்ற பண உதவிகளை வழங்க விரும்புகிறது. ஆனால் இது கொடூரமான ஏமாற்றாகும். வருகின்ற காலத்தில் அரசாங்கம் மக்களுக்குக் கொடுக்கும் எல்லா மானியங்களையும் அறவே நீக்கிவிடுவார்கள்.

தொஒகு : அண்மையில் ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தைக் (ரிசர்வ் வங்கி, மற்றவங்கிகளுக்கு கடன் கொடுக்கும் பணத்திற்கான வட்டி விகிதம்) குறைத்திருக்கிறது. இது பற்றி உங்களுடைய கருத்து என்ன?

விஉ : பொதுத் துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கொடுக்கும் கடனுக்கு உள்ள வட்டி விகிதத்தின் (ரெப்போ விகிதம்)அடிப்படையில், வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான கடன் வட்டி விகிதத்தையும், சேமிப்பு விகிதத்தையும் நிறுவுகின்றனர். ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டால், சேமிப்புக்கான விகிதமும், கடனுக்கான விகிதமும் குறைக்கப்படும். கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படுவது, பெரும் தொழிலுக்கு மிகவும் இலாபகரமாக இருக்கும்.

வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தைக் குறைப்பது, குறிப்பாக இதற்கேற்ப பண வீக்க விகிதம் குறையாத நிலையில், சிறு சேமிப்பாளர்களுக்கு மிகவும் பாதகமானதாகும். (இது, கடன் வாங்குவதை ஊக்குவிப்பதற்கும், பொருட்களை வாங்க கடன் அட்டைப் பயன்பாட்டை அதிகரிக்கவும் எடுக்கப்படும் முயற்சியாகும்.

இது பொருட்கள் விற்பனையை அதிகப்படுத்தவும், விற்காமல் நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் இருப்பைக் குறைப்பதற்கும் ஆன முயற்சியாகும்.– ஆசிரியர்) பண வீக்க விகிதம் குறைந்து விட்டதாக அரசாங்கம் கூறி வந்தாலும், சாதாரண மனிதனின் அனுபவம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது.

தொஒகு : வங்கி ஊழியர்கள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி, அடிக்கடி ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடைய முக்கிய கோரிக்கைகள் என்ன?

விஉ : கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்களுடைய ஊதியம் திருத்தப்பட வில்லை. எனவே நாங்கள் எங்களுடைய ஊதியத்தில் 21% உயர்வு வேண்டுமெனக் கோரி வருகிறோம். வங்கிகளின் உச்ச அமைப்பாகிய இந்திய வங்கி அசோசியேசன் (ஐபிஏ, IBA)12% உயர்வை ஏற்றுக் கொள்ளுமாறு எங்களைக் கேட்டு வருகிறது. சனவரியில் 4 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருந்தோம். ஆனால், பிப்ரவரி முதல் வாரத்தில் பேச்சு வார்த்தைக்கு எங்களை ஐபிஏ அழைத்திருந்தது.

அரசாங்கம் எங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்டால், ரூ 10,000 கோடி ரூபாய் மட்டுமே கூடுதல் செலவாகும். பொதுத் துறை வங்கிகள் இந்த ஆண்டு 1,40,000 கோடி ரூபாய் இலாபம் ஈட்டி இருக்கின்றன. ஆனால் இதிலிருந்து வாராக் கடன்களைச் சரிசெய்வதற்காக ரூ 60,000 கோடியை ஒதுக்கி வைக்கப் போவதாக அரசாங்கம் கூறுகிறது. வங்கிகளுடைய வாராக் கடன்களுக்காக, வங்கி ஊழியர்கள் ஏன்தண்டிக்கப்பட வேண்டும்?வாராக் கடன்களை வசூலிப்பதற்கு வங்கிகள் கடுமையான தண்டனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஏஐபிஇஏ 1990 களிலிருந்து கடனைத் திருப்பி அடைக்காதவர்களுடைய பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

தற்போது பொதுத் துறை வங்கிகளை நடத்துவதற்கு ஊழியர்கள் பற்றாக் குறையாக உள்ளனர். 1991-இல் வங்கி ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 13 இலட்சமாக இருந்தது. இன்று இந்த எண்ணிக்கையானது 5 இலட்சம் எழுத்துப் பணியாளர்களாகவும், 3 இலட்சம் அதிகாரிகளாகவும், மொத்தம் 8 இலட்சமாகக் குறைந்துவிட்டது. வங்கிகளின் வேலையும், கிளைகளின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்துவிட்ட நிலையிலும் இவ்வாறு இருக்கிறது. எனவே எஞ்சியிருக்கும் ஊழியர்கள் மீது அதிக வேலை பளு இருந்து வருகிறது. அடுத்த 3 ஆண்டுகளில் 30%ஊழியர்கள் ஓய்வு பெறுவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

இது பிரச்சனையை மேலும் தீவிரப்படுத்தும். 1990-2010 காலத்தில் மிகக் குறைவான வேலை நியமனங்களே நடைபெற்றுள்ளது. ஆலோசனை நிறுவனமாகிய மெக்கன்சி, 2017-இல் 10 இலட்சம் வங்கி ஊழியர்கள் தேவைப்படுவார்களென கணித்துள்ளது. ஆனால் வங்கிகள் அதிக அளவில் வேலையை வெளியே அனுப்பி செய்து வருகிறார்கள். வேலைக்கு எவ்வித பாதுகாப்பும் இன்றி, வெறும் 5,000 ரூ மாத சம்பளத்தில் ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் எடுக்கப்படுகிறார்கள். நாம் போராடிவரும் எல்லாக் கொள்கைகளுக்கும் இது எதிரானதாகும்.

தொஒகு : வங்கிகள் மற்றும் அரசாங்கத்தின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிரான உங்கள் தொழிற் சங்கங்களின் நியாயமான,வீரமான போராட்டத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். நன்றி.

Pin It