இந்த வருடம் அனைத்துலக உழைக்கும் மகளிர் நாள், தமிழ்நாட்டில் பல நகரங்களிலும் சென்னையில் பல இடங்களிலும் பல அமைப்புக்களாலும் கொண்டாடப்பட்டது. பெண்கள் இன்றுள்ள அமைப்பில் படும் பல இன்னல்களையும் பற்றியும் அதனால் எழும் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர்.

சென்னையில் சோழிங்கர் சந்திப்பில் தகவல் தொழில் நுட்பப் பணியாளர் மன்றத்தின் சார்பாக அனைத்துலக பெண்கள் நாள் நிகழ்ச்சி மார்ச் 6 மாலையில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தோழர்கள் பரிமளா, தமிழ் நாசர், கபிலன், அரசி, செந்தில் ஆகியோர் உரையாற்றினர்.

பெண்களுடைய உரிமைகள் இந்த சமுதாயத்தின் பிரச்சனைகளிலிருந்து வேறுபட்டதல்ல என்பதும், ஒரு நாகரிகமான சமுதாயத்தில் பெண்களுடைய உரிமைகள் முழுவதுமாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்பதும் வலியுறுத்தப்பட்டது. தங்களுடைய உரிமைகளை வென்றெடுக்க, பெண்கள், ஆடவரோடும் உழைக்கும் மக்களோடும் ஒன்றிணைந்துப் போராட வேண்டுமென பேச்சாளர்கள் வலியுறுத்தினர்.

ஐடி பணியாளர்களுடைய போராட்டத்தின் முன்னணியிலும் பெண்கள் வகித்து வரும் முன்னிலையைக் குறிப்பிட்டு, தோழர் தமிழ் நாசர் பாராட்டினார். தொழில் நுட்பத்தில் முன்னணியில் உள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் கூட, பெண்களுடைய நிலை மிகவும் மோசமானதாகவும், உரிமைகள் மறுக்கப்பட்டும், ஆடவரிலிருந்து வேறுபடுத்தப்பட்டு நடத்தப்பட்டும் வருவதைப் பேச்சாளர்கள் குறிப்பிட்டனர்.

மனித சமுதாயத்தின் மறுஉருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பெண்களுடைய தேவைகளை தனிப்பட்டவர்களுடைய தேவைகளாக நிறுவனங்கள் கருதி வருவதை சுட்டிக்காட்டினர். அதே நேரத்தில் சமூக உற்பத்திக்கு மட்டுமே இந்த தனிநபர்களுடைய தேவை உணரப்படுகிறது.

சமூகம் இந்த எல்லா தேவைகளையும் ஒருங்கிணைத்து அதற்கேற்ப வழிமுறைகள் வடிவமைக்கப்பட்டால், சமுதாயத்தின் தேவைகளை நன்றாக நிறைவு செய்ய முடியும் என்றனர்.

உழைக்கும் மக்களுடைய ஒன்றுபட்டப் போராட்டத்தின் மூலம் நம் எல்லோருடைய உரிமைகளையும் அதே சமயம் பெண்களுடைய உரிமைகளையும் வென்றெடுக்க முடியுமென்று வலியுறுத்தப்பட்டது. 

Pin It