கூட்டுறவு வங்கிகளிலிருந்து வாங்கிய எல்லா வேளாண் கடன்களையும் தள்ளுபடி செய்யுமாறு தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதி மன்றம் ஏப்ரல் 4 அன்று ஆணையிட்டிருக்கிறது. வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழக உழவர்கள் புது தில்லியில் பல வாரங்களாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் வேளையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. போராடி வரும் இந்த உழவர்களுடைய மோசமான நிலைமையை எல்லா முக்கிய தொலைக் காட்சி ஊடகங்களிலும் நாம் காணலாம்.

agri census 600ஏப்ரல் 11 அன்று அண்மையில் ஆட்சிக்கு வந்த உத்திரப் பிரதேச மாநில பாஜக அரசாங்கம், ரூ 1,00,000-க்கும் குறைவான வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. இது இரண்டு கோடிக்கும் அதிகமான “சிறு மற்றும் குறு உழவர்களுக்குப்” பயனளிக்குமென அவர்கள் கூறிக் கொள்கின்றனர். மராட்டிய மாநிலத்தில் உள்ள பாஜக அரசாங்கமும் இப்படிப்பட்ட திட்டத்தை கொண்டுவர விரும்புவதாகக் கூறப்படுகிறது.

நமது நாட்டில் வேளாண்மை நெருக்கடியானது மிகவும் மோசமானதாக இருக்கிறது என்பதையும், கோடிக்கணக்கான உழவர்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதையும், எனவே ஏதாவது செய்ய வேண்டுமென்பது ஆளும் வகுப்பினருக்கு ஒரு அரசியல் தேவையாக மாறி இருக்கிறது என்பதையும், இந்த வளர்ச்சிகள் காட்டுகின்றன.

துயரத்தில் ஆழ்ந்துள்ள உழவர்களுடைய கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற கோரிக்கை அண்மை ஆண்டுகளில் மென்மேலும் வலுத்து வருகிறது. பெரு முதலாளிகளுடைய கடன்களைத் தள்ளுபடி செய்வதற்காக மிகப் பெரிய அளவில் பொதுப் பணத்தை செலவழித்து வருகையில், தங்கள் மீது நம்பிக்கையை கொஞ்சமாவது தக்க வைத்துக் கொள்வதற்காக உழவர்களுக்கு எந்த வழியிலாவது கடனிலிருந்து நிவாரணம் தர வேண்டிய நிலையில் ஆளும் பாஜக இருக்கிறது.

நமது நாட்டின் மத்திய மாநில அரசாங்கங்களுடைய வேளாண்மைக் கடன் தள்ளுபடி திட்டங்களுடைய அனுபவம், துயரத்தில் உள்ள எல்லா உழவர்களுடைய உடனடித் தேவைகளைக் கூட நிறைவேற்றத் தவறியிருக்கின்றன என்று காட்டுகிறது. சில உழவர்கள் அவற்றால் பயனடைகிறார்கள், மற்றவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. வேளாண்மைக் கடன் தள்ளுபடி திட்டம் நன்றாக செயல்படுத்தப்பட்டு, துயரத்தில் உள்ள எல்லா உழவர்களைச் சென்றடைந்தாலும் கூட, அது ஒரு தற்காலிக நிவாரணமாக மட்டுமே இருக்கிறது. நெருக்கடியிலிருந்து உழவர்களை மீட்பதற்கு இது அவசியமானதாக இருந்தாலும், அது போதுமானதாக இல்லை. பெரும்பான்மையானவர்களுக்கு வேளாண்மையிலிருந்து வரும் வருவாய் மிகக் குறைவானதாக இருப்பது தொடரும் வரையிலும், அவர்கள் அனைவருக்கும் அது மேலும் மேலும் ஆபத்தானதாக ஆகி வருவது தொடரும் வரையிலும் இன்னொரு நெருக்கடி உடனடியாகவோ, சிறிது காலங்கடந்தோ வருவது உறுதி.

vilage census 600பிரச்சனையின் ஆணிவேர்

வேளாண்மை உற்பத்தி தொடர்பான அனைத்தும், இந்திய மற்றும் அன்னிய பெரும் முதலாளித்துவ நிறுவனங்களுடைய இலாபத்தை அதிகரிப்பதற்காகவே அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதில் இந்தப் பிரச்சனையின் ஆணிவேர் இருக்கிறது. விதைகள், உரம், பூச்சுக்கொல்லி மருந்துகள் மற்றும் விளை பொருட்களை வாங்குதல், உணவு பதப்படுத்தப்படுதல் மற்றும் ஏற்றுமதி ஆகிய சந்தைகளில் ஏகபோக நிறுவனங்கள் வேகமாக விரிவடைந்து வருகின்றன. ஒருங்கிணைந்த மொத்த மற்றும் சில்லரை வணிக நிறுவனங்கள், நிலத்தை உழுபவர்களின் நலன்களைப் புறக்கணிக்கும் வகையில் வேளாண் விளைபொருட்களின் மதிப்பில் அவர்களுடைய பங்கை அதிகரித்து வருகின்றனர். வேளாண்மை நிலங்கள் மீது தங்களுடைய கட்டுப்பாட்டை வங்கிகள் விரைவாக அதிகரித்து வருகின்றன.

ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி இந்தத் துணைக் கண்டத்தில் காலடி வைப்பதற்கு முன்னால், அரசுக்கும் நிலத்தை உழுபவர்களுக்கும் இடைப்பட்ட உறவானது, இருசாராருடைய உரிமைகளையும் கடமைகளையும் அங்கீகரிக்கும் அடிப்படையில் அமைந்திருந்தது. நில வரியை வசூலிக்கும் உரிமையும், நிலத்தில் வேளாண்மை மேற் கொள்வதற்குத் தேவையான பாசன நீர் மற்றும் பிற இடுபொருட்களை உறுதி செய்ய வேண்டிய கடமையும் அரசுக்கு இருந்தது. தேவைப்படும் உணவுப் பொருட்களையும் பிற அவசியமான தானியங்களையும் பயிரிட்டு உற்பத்தி செய்யும் வரை, தாங்கள் பயிரிடும் நிலத்தை தங்களிடம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் உரிமை உழவர்களுக்கு இருந்தது.

நிலம் ஒரு விற்பனைப் பொருளாகக் கருதப்படவில்லை. அது விற்கப்படவோ வாங்கப்படவோ இல்லை. இயற்கையின் ஒரு கொடையாக நிலம் அங்கீகரிக்கப்பட்டது. அது தானியங்களை விளைவிப்பதற்காகவோ, மேய்ச்சல் நிலமாகவோ அல்லது சமூகப் பயன்பாட்டிற்காகவோ, அரசால் தனிப்பட்ட குடும்பத்திற்கோ, குடும்பங்களின் தொகுப்பிற்கோ ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. தனிப்பட்டவர்கள் நிலத்தை வைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அதை அவர்கள் வேறு யாருக்கும் விற்க முடியாது. சமுதாயத்திற்குப் பயனுள்ள தானியங்களை அவர் உற்பத்தி செய்யும் வரை, நிலம் அந்த உழவருடைய கைகளில் பாதுகாப்பாக இருக்கும். நிலம் தவறாகப் பயன்படுத்தப்பட்டால், அந்த நிலத்தை எடுத்து வேறு யாருக்காவது ஒதுக்கும் உரிமை அரசுக்கு இருந்தது. ஆயினும், திட்டமிட்டவாறு பயன்படுத்தப்பட்டு வரும் நிலத்தில் தலையிட அதற்கு எந்த உரிமையும் இல்லை.

ஆங்கிலேய காலனியர்கள், இந்த பழைய உற்பத்தி உறவுகளை சீரழித்து, ஒவ்வொருவருக்கும் உரிமைகளும், கடமைகளும் இருக்கின்றன என்ற கோட்பாட்டை சேற்றில் போட்டு மிதித்தனர். ஆங்கிலேய முதலாளித்துவ கொள்ளையர்களுக்கு அளவற்ற உரிமைகளையும், நிலத்தை உழும் இந்திய மக்களுக்கு கடமைகளை மட்டுமே அங்கீகரித்த ஒரு அரசை ஆங்கிலேயர்கள் நிறுவினார்கள். காலனிய அமைப்போடு உடந்தையாக செயல்பட்ட ஒரு சிறுபான்மையான இந்தியர்களுக்கு சிறப்புச் சலுகைகளை காலனிய அரசு வாரி வழங்கியது. அவர்களிடமிருந்து ஜமீன்தார்களும், மிகப் பெரிய பண்ணையார்களும் பிற சுரண்டும் இடைப்பட்டவர்களும் உருவாகினர். 1947-க்குப் பின்னர், ஆங்கிலேயர்களிடமிருந்து அரசையும் கொள்ளை அமைப்பையும் தத்து எடுத்துக் கொண்ட பெரு முதலாளிகளும், பெரும் நிலக் கிழார்களும் அதை மேலும் வளர்த்துக் கொண்டனர்.

நிலப் பண்ணையார்கள் உழவர்களை ஒடுக்கும்முறையில் மிகவும் வெறுக்கப்பட்ட சில வடிவங்களை அகற்றுவதற்காவும், வேளாண்மையில் முதலாளித்துவ வளர்ச்சிக்கான இடைவெளியை திறந்து விடுவதற்காகவும், காலனிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் முதல் சில பத்தாண்டுகளில் அரசு நிலச் சீர்திருத்தங்களை மேற் கொண்டது. பசுமைப் புரட்சி என்ற பெயரில், தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளில் பெரும் நிலஉடமையாளர்களிடையே முதலாளித்துவ வேளாண்மையையும், நடுத்தர, சிறு உழவர்களிடையே சந்தைப் பயிர்களையும் அரசு ஊக்குவித்தது. அத்தியாவசிய உணவு தானியங்களை வாங்குவதற்கு ஒரு பொதுவான கொள்முதல் அமைப்பு இந்தியாவெங்கும் நிறுவப்பட்டது. உழவர்களுக்கு கிராமப்புற கடன்களை விரிவுபடுத்தவும், ஏகபோக குடும்பங்களுக்கு நிதி மூலதனத்தை உருவாக்குவதற்காக கிராமப்புற சேமிப்புக்களை ஒன்று குவிக்கவும், வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன.

agri chart 600தொண்ணூறுகளிலிருந்து அரசின் தலையீடானது, தாராளமயம், தனியார்மயம் மூலம் உலகமயமாக்கும் திட்டத்தின் கீழ் ஏகபோகக் குடும்பங்களின் உலக அளவில் மூர்க்கத்தனமாக விரிவாக்கும் முயற்சிகளுக்கு ஏற்ப மாற்றப்பட்டு வருகிறது.

ஒரு சுதந்திர சந்தையில், ஒவ்வொரு உழவர் குடும்பமும் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ள வேண்டுமென அறிவித்து, பெரு முதலாளி வகுப்பு முந்தைய காலக் கட்டத்தில் வேளாண்மைக்கு இருந்த அரசின் பற்றாக் குறையான ஆதரவு அமைப்பையும் ஒழித்துக் கட்டியிருக்கிறார்கள். வேளாண்மை இடுபொருள் மற்றும் விளை பொருட்களின் சந்தைகள் உலக மற்றும் இந்திய முதலாளித்துவ நிறுவனங்களுக்குத் திறந்து விடப்பட்டுள்ளன. இதனால் இதுவரை கண்டிராத அளவிற்கு வேளாண்மை வருவாயில் நிலையற்ற, பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. இடுபொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இதன் காரணமாக பெரும்பான்மையான உழவர்கள் வங்கிக் கடன்களை நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. அதே நேரத்தில் பருவநிலையும், விலை ஏற்றத் தாழ்வுகளும், வருவாயை மிகவும் நிலையற்றதாக மாற்றியிருக்கின்றன. ஒராண்டில் நிலவும் வளமை, அதிக அளவில் கடன் வாங்க உழவர்களைத் தூண்டுகிறது. ஆனால் ஓரிரு ஆண்டுகள் அடுத்தடுத்து நிலைமை மோசமாக ஆகுமானால், அது அவர்களை மிகவும் பயங்கரமான சூழ்நிலைக்குத் தள்ளிவிடுகின்றன.

2016-இல் தக்காளி நகர்ப்புறங்களில் கிலோ ரூ 15 க்கு விற்கப்பட்டபோது, நல்ல விளைச்சலைக் கொண்டு வருவதற்காக மூன்று மாதங்களாகப் பாடுபட்ட உழவர்கள் ஒரு கிலோவிற்கு 30 இலிருந்து 50 காசுகள் குறைந்த விலை கிடைக்கக் கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவல நிலைக்குத் தள்ளப்பட்ட உழவர்கள் ஜேஸ்புர் (சத்திஸ்கர்), சிக்கமங்களூர் (கர்நாடகா), நாசிக் (மராட்டியம்) போன்ற இடங்களில் பாடுபட்டு உற்பத்தி செய்த தக்காளியை வீதியிலே கொட்டிவிட்டுச் செல்ல வேண்டியதாகியது.

துவரம் பருப்பு உழவர்களை மராட்டிய மாநிலம் நட்டாற்றில் விட்டு விட்டது

 

2013-14 மற்றும் 2014-15 இல் ஏற்பட்ட வறட்சியின் போது, அரசாங்கம் கரும்பு, பருத்தி போன்ற பணப்பயிர்களுக்கு பதிலாக துவரம் பருப்பு விளைச்சலுக்கு மாறுமாறு உழவர்களுக்கு அறிவுறுத்தியது. கடந்த ஆண்டு துவரம் பருப்பு விளைச்சலில் ஏற்பட்ட பற்றாக்குறையால், விலைகள் கடுமையாக உயர்ந்ததோடு, பொது மக்களுடைய எதிர்ப்பையும் கோபத்தையும் சந்திக்க நேர்ந்தது.

 

அரசாங்கத்தின் அறிவுரைப்படி, துவரம் பருப்பு விளைச்சலுக்கு மாறிய உழவர்களை, நட்டாற்றில் விட்டுவிட்டது. நடப்பு ஆண்டில் மராட்டியத்தில் துவரை உற்பத்தி ஐந்து மடங்கு அதிகரித்து 20 இலட்சம் டன்களாக இருந்தது. அதன் விளைவாக சந்தை விலைகள் குவின்டால் ரூ 8500-9000 இலிருந்து கடந்த ஆண்டு ரூ 4200-4500 எனக் கடுமையாக வீழ்ச்சியடைந்தது. மராட்டிய அரசாங்கம் குவின்டால் ரூ 5050 என்ற குறைந்த பட்ச விலைக்கு வாங்கிக் கொள்வோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

 

மத்திய அரசு கொள்முதல் காலத்தை ஏப்ரல் 22-க்கு மேல் நீடிக்க மறுத்துவிட்ட நிலையில், மராட்டிய அரசாங்கம் 300 துவரை கொள்முதல் நிலையங்களை மூடி விட்டது. ரூ 500 கோடி பொருமானமுள்ள 10 இலட்சம் குவின்டால் துவரையை மராட்டிய அரசாங்கம் கொள்முதல் செய்ய வேண்டியிருந்தது. சில கொள்முதல் நிறுவனங்கள் துவரையை குவின்டால் ரூ 3700-4200 க்கு உழவர்களிடமிருந்து வாங்கி, அதை குவின்டாலுக்கு ரூ 5050 என்ற  குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரசாங்கத்திற்கு விற்று வருவதாக செய்திகள் வந்துள்ளன. இவ்வாறு, உழவர்களிடமிருந்து துவரையை வாங்க மறுக்கும் அரசாங்கம், வணிகர்களுக்கு அந்த குறைந்தபட்ச ஆதரவு விலையை அளிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. அடுத்த பருவத்தில் பயிரிடுவதற்குப் பணத்தைத் திரட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ள உழவர்கள், அவர்களுடைய விளை பொருளை வெளி சந்தையில் குறைந்தபட்ச ஆதரவு விலையைக் காட்டிலும் ரூ 1000-க்கும் குறைவாக விற்று, மிகுதியாக இழக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

2016-இல் மராட்டிய, கர்நாடக மாநில துவரம் பருப்பு பயிரிடும் உழவர்கள் கடுமையாக உழைத்து உற்பத்தியில் ஒரு சாதனை படைத்தனர். ஆனால் அவர்கள் உற்பத்தி செய்த துவரம் பருப்பை சராசரி உற்பத்தி செலவிற்கும் குறைவான விலையில் விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். (கர்நாடக வேளாண்மை விலைகள் ஆணையத்தின்படி, அந்த மாநிலத்தில் மொத்த உற்பத்தி உற்பத்தி செலவானது குவின்டாலுக்கு ரூ 6,403 ஆக இருக்கிறது). அதற்கு முந்தைய ஆண்டு இந்திய அரசாங்கம் துவரம் பருப்பை குவின்டாலுக்கு ரூ 10,114 கொடுத்து இறக்குமதி செய்தது. கடுமையான தட்டுப்பாடு இருக்கும் போது, அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யும் அரசாங்கம், உள்நாட்டு உற்பத்தி அதிகமாக இருக்கும் போது, உழவர்கள் இழப்பைச் சந்திக்கச் செய்கிறது.

பெரும்பான்மையான உழவர்கள் உற்பத்தி மற்றும் பரிமாற்றத்தில் மிகவும் சமனற்ற, சுரண்டலான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கும், அவர்களுடைய வாழ்வாதாரத்தின் பாதுகாப்பிற்கு எந்தப் பொறுப்பும் வகிக்க அரசு மறுத்து வருகிறது என்பதற்கும் மேற் கூறப்பட்டவை ஒரு சில எடுத்துக் காட்டுகளாகும்.

மீள்வதற்கு ஒரே வழி

வேளாண்மையை அதனுடைய தற்போதைய மோசமான நிலைமையிலிருந்தும், ஆபத்தான போக்கிலிருந்தும் வெளியே கொண்டு வருவதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. வேளாண்மை மற்றும் சமூக உற்பத்தியின் எல்லா துறைகளின் போக்கையும், அவற்றின் நோக்கத்தையும் மாற்றியமைக்க வேண்டும். சமூக உற்பத்தியின் இலக்கானது முதலாளித்துவ ஏகபோகங்களுக்கு அதிக பட்ச இலாபத்தை உறுதி செய்வதாக இருப்பதற்கு பதிலாக, அது அனைவருக்கும் பாதுகாப்பான வாழ்வாதாரத்தையும் வளமையையும் உறுதி செய்வதாக இருக்க வேண்டும்.

வேளாண்மை உற்பத்தி மற்றும் பரிவர்த்தனை உறவுகளை, அரசுக்கும் நிலத்தை உழுபவர்களுக்கும் தத்தம் உரிமைகள் மற்றும் கடமைகள் இருக்கின்றன என்ற கோட்பாட்டை நவீன நிலைமைகளுக்கு ஏற்ற வகையில் மீண்டும் உருவாக்க வேண்டும். நிலத்தில் பயிரிட்டு சமுதாயத்திற்குத் தேவைப்படும் பயனுள்ள பல்வேறு பயிர்களை தேவையான அளவில் உற்பத்தி செய்ய வேண்டிய கடமை உழவர்களுக்கு உண்டு. அதே நேரத்தில் பாசன நீர் மற்றும் பிற இடுபொருட்களை உழவர்களுக்கு உறுதி செய்யவும், அவர்களுடைய விளை பொருட்களை நிலையான மற்றும் இலாபகரமான விலைகளில் உத்திரவாதத்தோடு வாங்கவும் வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.

அரசு தன்னுடைய கடமையை ஆற்றுவதற்கு, வேளாண்மை இடுபொருட்கள் மற்றும் விளை பொருட்களின் மொத்த வாணிகத்தை அது தன் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். இலாபத்தை அதிகரிக்கும் நோக்கத்திலிருந்து வங்கி அமைப்பை மாற்றி, சமூக உற்பத்தியின் தேவைகளை நிறைவேற்றுவதாக மாற்றியமைக்க வேண்டும்.

வேளாண்மை வணிகத்தையும், வங்கிகளையும் சமூகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதன் மூலம் எல்லா பயிர்கள் மற்றும் பொது மக்கள் பயன்படுத்தும் எல்லா அத்தியாவசியப் பண்டங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாக ஒரு நவீன பொது கொள்முதல் மற்றும் பொது வினியோக அமைப்பை உருவாக்க முடியும்.

அனைவருடைய தேவைகளையும் நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கும் ஒரு அரசு, தங்களுடைய சிறிய நிலத்தில் பாடுபட்டு உழைக்கும் உழவர்களை தன்னார்வ அடிப்படையில் தங்களுடைய நிலங்களை ஒன்றிணைத்து பெரும் கூட்டுப் பண்ணைகளை உருவாக்குவதற்கு ஆதரவளித்து ஊக்கமளிக்கும். அப்படிப்பட்ட கூட்டுப் பண்ணைகள் அதிக உற்பத்தித் திறன் கொண்ட நவீன வேளாண்மை நிறுவனங்களாக வளர்ச்சி பெற அப்படிப்பட்ட அரசு ஆதரவளிக்கும்.

நிலத்தைத் தனியார் வாங்கியும் விற்கவும் கூடிய ஒரு பொருளாக நடத்தப்படக் கூடாது. நிலத்தின் பயன்பாடு, வேளாண்மையின் தேவைகள், கால்நடை வளர்ப்பின் தேவைகள், தொழில் மற்றும் சேவைத் துறைகளுடைய தேவைகள், குடியிருப்புக்கான இடத்தேவை மற்றும் பிற சமூக தேவைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்ட ஒரு சமூகத் திட்டத்தின் அடிப்படையில் முறைப்படுத்தப்பட வேண்டும். காலனிய நிலச் சட்டங்கள் உடனடியாக ஒழித்துக் கட்டப்பட வேண்டும். அதனுடைய இடத்தில், நிலத்தையும், மற்ற பிற இயற்கை வளங்களையும் தேசிய உடமையாக அங்கீகரிக்கவும், அவற்றின் பல்வேறு பயன்பாடுகளையும், சமுதாயத்தின் பொது நலன்களோடும் ஒருங்கிணைக்கவும் ஒரு புதிய சட்டம் நிறுவப்பட வேண்டும்.

பொருளாதாரத்தைத் திருத்தியமைக்கும் இந்தத் திட்டத்தையொட்டி, பெரும்பான்மையான உழவர்களோடு தொழிலாளி வகுப்பு ஒரு உறுதியான கூட்டணியை உருவாக்க வேண்டும். தங்களுடைய உரிமைகளுக்காகவும், அரசு தன்னுடைய கடமையை நிறைவேற்ற வேண்டுமென கோரியும் தொழிலாளர்களும், உழவர்களும் ஒரு ஒன்றுபட்டப் போராட்டத்தை மேற் கொள்ள வேண்டும். நிலத்தை உழும் உழவர்கள் உட்பட பொருட்களை உற்பத்தி செய்யும் அனைவருடைய வளமையையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் தன் கடமையை நிறைவேற்றக் கூடிய ஒரு அரசை நிறுவவும், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றவும் உரிய கண்ணோட்டத்தோடு நாம் உடனடிப் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.

Pin It