கொரோனா வைரஸின் பரவல் முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் அனைத்தையும் அம்பலப்படுத்துகிறது. சோசலிசம் ஏன் உடனடித் தேவை என்பதையும் இது காட்டுகிறது. இது இன்னும் மோசமாகத்தான் போக இருக்கிறது. வைரஸின் பரவலை நிறுத்த இயலாது --- உயிரியல் காரணங்களை விட சமூகக் காரணங்களால்தான் இந்நிலை ஏற்பட்டுள்ளது. வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பைக் குறைப்பதற்காக மக்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அதே நேரத்தில், இருமல் வந்தவுடன் வீட்டிலேயே தங்கியிருக்கும் வசதி தொழிலாள வர்க்க மக்களுக்கு இல்லை,

கோவிட்-19 உள்ளவர்கள் “வேலைக்கும் செல்ல வேண்டும்” என்ற டொனால்ட் டிரம்பின் சமீபத்திய பரிந்துரைகளுக்கு மாறாக, வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று நோய்க் கட்டுப்பாட்டு மையம் (CDC) பரிந்துரைக்கிறது. இது முதலாளித்துவத்தின் கீழ் அறிவிக்காமல் விடுப்பு எடுக்க முடியாத தொழிலாள வர்க்க உறுப்பினர்களுக்கு ஒரு சிக்கலை ஏற்படுத்துகிறது. நியூயார்க் நகர மேயர் பில் டி பிளேசியோ சமீபத்தில் நெரிசலான சுரங்கப் பாதைகளில் கார்களைத் தவிர்க்கவும் முடிந்தால் வீட்டிலிருந்து வேலை செய்யவும் பரிந்துரைத்தார், ஆனால் பலர் பொதுப் போக்குவரத்தை நம்பியுள்ளனர். அரசாங்கத் தலைவர்களின் பரிந்துரைகள் தொழிலாள வர்க்கத்துடன் அவர்கள் தொடர்பற்று இருப்பதையேக் காட்டுகின்றன. 58% அமெரிக்கர்கள் தங்கள் சேமிப்பில் 1,000 டாலருக்கும் குறைவாகவே வைத்துள்ளனர், மேலும் 40% அமெரிக்கர்களால் எதிர்பாராத 400 டாலர் பில்களைக் கட்ட இயலாது. எனவே, வீட்டிலேயே இருக்கவோ பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தாமல் இருக்கவோ பலருக்கு வாய்ப்பே இல்லை.

நோய்வாய்ப்பட்டால் நம்மில் இன்னும் அதிகமானோர் மருத்துவரைத் தவிர்க்கிறனர். காப்பீடு இருந்தாலும் இல்லா விட்டாலும் மருத்துவமனைக்கு ஒரு முறை செல்வது என்பதே மருத்துவத்துக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை ஏற்றி விடுகிறது. 25% அமெரிக்கர்கள் தங்களுக்கான அல்லது தங்கள் குடும்பத்தினருக்கான பராமரிப்புச் செலவுகள் காரணமாக மருத்துவ சிகிச்சையைத் தாமதப்படுத்துகிறோம் எனக் கூறியதாக “தி கார்டியன்” தெரிவித்துள்ளது. மே 2019இல், அமெரிக்கப் புற்று நோய் அமைப்பு (American cancer society) 56% பெரியவர்களில் குறைந்தது ஒருவரேனும் மருத்துவ நிதி நெருக்கடியில் இருப்பதாகக் கூறுகிறது. திவால்நிலைக்கு மருத்துவக் கடன்தான் நாட்டில் முதல் காரணமாக உள்ளது. நிதி திரட்டும் தளமான “GoFundMe” என்பதன் மொத்த நன்கொடைகளில் மூன்றில் ஒரு பங்கு உடல்நலப் பராமரிப்பு செலவுகளை ஈடுகட்டவே செல்கிறது. இதுதான் உலகின் பணக்கார நாட்டின் சுகாதார அமைப்பு: ‘GoFundMe.’

இது மிகவும் ஆபத்தான சூழல் என்று தெளிவாகத் தெரிகிறது. ஏற்கெனவே, கொரோனா வைரஸுக்கான சோதனைகளை நாடினால் மக்கள் பெருமளவிலான கட்டணச் சுமைகளால் பாதிக்கப்படுகிறார்கள். சீனாவுக்கு ஒரு வேலையாகப் பயணம் சென்று வந்த பிறகு ‘ஃப்ளூ’ போன்ற அறிகுறிகளுக்காக மருத்துவமனைக்குச் சென்ற ஒஸ்மல் மார்டினெஸ் அஸ்குவைப் பற்றிய கதையை ‘மியாமி ஹெரால்ட்’ வெளியிட்டுள்ளது. நல்ல வேளையாக அவருக்கு ‘ஃப்ளூ’ இருப்பது கண்டறியப்பட்டது, மருத்துவமனை சென்றதால் 3,270 டாலர் செலவு என்று அவரது காப்பீட்டு நிறுவனத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘பிஸினஸ் இன்சைடர்’ கோவிட்-19 க்காக மருத்துவமனைக்குச் செல்வதால் ஏற்படும் செலவுகளின் விளக்கப் படத்தை வெளியிட்டுள்ளது.

நிச்சயமாக, இந்தச் செலவுகளால் ஒருசிலருக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. மூன்று பணக்கார அமெரிக்கர்கள் 50% அமெரிக்கர்களை விட அதிகச் செல்வம் வைத்திருக்கிறார்கள். குறைந்ததிலும் குறைந்த எண்ணிக்கையிலான முதலாளிகளின் கைகளில் செல்வம் குவிப்பது முதலாளித்துவத்தின் டி.என்.ஏவில் ஒரு பகுதியாகும். ஆனால் கேட் பிக்கெட் மற்றும் ரிச்சர்ட் வில்க்சன் ஆகியோர் எழுதிய ‘த ஸ்பிரிட் லெவல்:’ என்ற புத்தகம் எவ்வாறு உயர்ந்த சமத்துவம் சமூகங்களை வலுவாக்குகிறது என்பதை எடுத்துரைக்கிறது. அதிக சமத்துவமுள்ள சமூகங்களில் உள்ளவர்கள் ஆரோக்கியமானவர்களாக உள்ளனர்; அவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள்; குழந்தை இறப்பும் குறைவாக உள்ளது; மேலும் அவர்கள் உடல்நலம் குறித்து உயர்வான சுயமதிப்பீடுகளைக் கொண்டுள்ளனர்; சமத்துவமின்மை மோசமான உடல்நலத்திற்கே வழிவகுக்கிறது என்பதையெல்லாம் இந்நூல் விரிவாக எடுத்துரைக்கிறது.

இது எவ்வாறு கோவிட்-19 உடன் தொடர்புடையது? என்று பார்த்தால், ஒரு சமூகத்தில் செல்வம் மற்றும் அதிகாரத்தின் சமத்துவமின்மை நாள்பட்ட மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது என்பது இந்த முடிவுகளுக்கான முக்கியக் கோட்பாடாகும். இது இதயம், இரத்த ஓட்ட மண்டலம், மற்றும் நோயெதிர்ப்பு மண்டலம் போன்ற உடல் உறுப்பு மண்டலங்களில் பேரழிவை ஏற்படுத்துகிறது, இதனால் தனிநபர்கள் உடல்நலப் பிரச்சினைகளுக்கு எளிதில் இலக்காகக் நேரிடும். அதாவது, சமூகங்கள் மென்மேலும் சமமற்றவையாக மாறும் போது, தனிநபர்கள் மென்மேலும் தொற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள். கோவிட்-19 பரவுவது, முதலாளித்துவத்தின் சமத்துவமின்மையால் நம் அனைவரையும் அதிக ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. 

சோசலிசத்தில் கொரோனா:

கொரோனா வைரஸ் (கோவிட்-19) போன்ற தொற்றுநோய்களை எதிர்கொள்ள சோசலிசம் தேவை என்பது தெளிவாகிறது. சோசலிசம் என்றால், அனைவருக்கும் மருத்துவப் பராமரிப்பு அல்லது புதிய தாராளமய ஒப்பந்தம் என்று அர்த்தமில்லை. கொரோனா வைரஸ் போன்ற தொற்றுநோய்களை எதிர்கொள்ள அனைவருக்கும் மருத்துவப் பராமரிப்பு மட்டும் போதாது. மனிதத் தேவைகளின் அடிப்படையில் உற்பத்தியை நிர்வகிக்கும் ஒரு சமூகத்தையே சோஷலிசம் என்கிறோம். இலாபத்திற்கான உந்துதல் அல்ல. அது முதலாளிகள் இல்லாத சமூகம், அங்கு உற்பத்தி மற்றும் மறுவுற்பத்தி என்பது தொழிலாள வர்க்கத்தாலும், ஒடுக்கப்பட்டவர்களாலும், ஜனநாயக வழியில் திட்டமிடப்படுகிறது. இந்த வகையான சமுதாயத்தில், முதலாளித்துவத்தை விட மிகச் சிறந்த முறையில் கோவிட்-19ஐ எதிர் கொள்ள முடியும்.

நோய் வெடித்துப் பரவுவதைத் தடுக்கும் முறைகள் என்றாலும் சரி,, நோயை எதிர்கொள்ளும் முறைகள் என்றாலும் சரி, இரண்டுமே ஒரு சோசலிச சமுதாயத்தில் பெரிதும் மாறுபடும். கைகளுக்கான சோப்பு, கை சுத்திகரிப்பான், மேற்பரப்பைச் சுத்திகரிக்கும் துடைப்பான்கள் அல்லது தெளிப்பான்கள் போன்ற பொருட்கள் இந்த நேரத்தில் மிக அதிக அளவில் தேவைப்படுகின்றன. உலகெங்கிலும் முக்கியப் பொருட்களின் விநியோகத்திலான பற்றாக்குறையை நாம் ஏற்கெனவே காண்கிறோம். முதலாளித்துவத்தின் கீழ் இலாபப் பெருக்கம் வேண்டும் என்பதால் இப்பொருட்களுக்கான தேவை அதிகமுள்ள இந்த நேரத்திலும் நிறுவனங்கள் இவற்றின் விலையைக் கடுமையாக உயர்த்தவே செய்கின்றன. எடுத்துக்காட்டாக, பியூரல் ஹேண்ட் சானிட்டைசர் போன்ற பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருப்பதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ தெரிவித்துள்ளது. முதலாளித்துவத்தின் கீழ், பற்றாக்குறை அதிக லாபத்திற்கே வழிவகுக்கிறது.

முதலாளித்துவத்தின் உலகமயமாக்கப்பட்ட உற்பத்தி முறை உலகின் வேறுபட்ட முனைகளில் உள்ள தொழிற்சாலைகள் ஒன்றையொன்று உண்மையாகவே சார்ந்து செயல்பட வழிவகுத்துள்ளது. அமெரிக்காவில் (யு.எஸ்.ஏ.) ஒரு ஆப்பிள் நிறுவன வாடிக்கையாளரால் கவனிக்கப்படாதவாறு சீனாவில் ஐபோன்கள் உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலையில் ஒரு தொழிலாளியை முதலாளித்துவம் சுரண்டுவதற்கு இது வழிசெய்கிறது. தொழிலாளர்களுக்கு அதிகப் பாதுகாப்புகள் தராத உலகின் ஒரு பகுதியில் நிறுவனங்கள் செலவுகளைக் குறைத்துக் கொள்ள இடமளிக்கிறது. இது முதலாளிகளுக்கு நன்மை பயக்கும் அதே வேளையில், கோவிட்-19 போன்ற நோய்களின் பரவல் இந்த அமைப்பின் பலவீனங்களை தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது. புதிய மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அடிப்படைப் பொருட்களின் பெரும் பகுதி சீனாவிலிருந்து வருகிறது. வைரஸ் பரவலால் தொழிற்சாலைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால், பொருட்களின் உற்பத்தி வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது யு.எஸ். போன்ற பிற நாடுகளில் நோயை விரைவாக எதிர்கொள்ளும் திறனைத் தாமதப்படுத்துகிறது.

சோசலிசத்தின் மைய அம்சம் ஜனநாயக முறையில் இயங்கும் திட்டமிட்ட பொருளாதாரம்: பணம் செலுத்தும் திறனின் அடிப்படையில் இல்லாமல் தேவைக்கேற்ப அனைத்து வளங்களும் ஒதுக்கப்படும் ஒரு பொருளாதாரம். தேவை என்பது தயாரிப்பாளர்கள், நுகர்வோர் ஆகிய இருதரப்பாலும் ஜனநாயக முறையில் தீர்மானிக்கப்படுகிறது. தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உற்பத்திச் சக்திகள் இருப்பதால், அவசர காலத்தில் இந்த பொருட்களின் உற்பத்தியை விரைவாக அதிகமாக்க முடியும்

மேலும் மூளை மற்றும் உடல் உழைப்புக்கு இடையிலான தடைகளை நீக்குவதன் மூலம், பெருமளவிலான தொழிலாளர்கள் முழு உற்பத்திச் செயல்முறையையும் நன்கு அறிந்திருப்பார்கள், தேவையான துறைகளில் வேலைசெய்யவும் தயாராக இருப்பார்கள். அர்ஜென்டினாவில் மேடி கிராஃப், ஸ்பெயினில் மொன்ட்ராகன் போன்ற முதலாளித்துவத்திற்குள்ளான தொழிலாளர் கூட்டுறவு நிறுவனங்களில், தொழிலாளர்கள் ஏற்கெனவே உற்பத்தியின் அனைத்து அம்சங்களையும் கற்றுக்கொண்டுள்ளார்கள். இது கூடுதல் முயற்சி தேவைப்படும் துறைகளுக்கு தொழிலாளர்களை மாற்ற இடமளிக்கிறது.

ஒரு நாட்டில் மட்டுமே சோசலிசம் இருக்க முடியாது, எனவே உலகளாவிய திட்டமிட்ட பொருளாதாரம் இந்த நேரங்களில் மிகவும் அவசியம். ஒரு நாடு பற்றாக்குறையை சந்தித்தால், மற்ற நாடுகள் அதை ஈடுசெய்ய வேண்டும். கொரோனா வைரஸ் போன்ற உலகளாவிய தொற்றுநோய்களின் போது ஆட்சி செய்ய இது முக்கியமானது: நாம் அதை எல்லா இடங்களிலும் தடுப்பதால் மட்டுமே நோய் தடுக்கப்படும். உலகளாவிய திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தில், இது மிகவும் எளிதான பணியாக இருக்கும்.

வீட்டில் தங்குவது:

ஒருவர் நோய்வாய்ப்பட்டால், விடுப்பு எடுத்துக்கொள்வதன் மூலம் தன்னையும் மற்றவர்களையும் பாதுகாக்க முடிவு எடுத்தால், வேலை இழப்பது பற்றியோ, வாடகை செலுத்துவது பற்றியோ, உணவு பற்றியோ அல்லது தங்கள் குழந்தைகளின் பராமரிப்பு பற்றியோ சோசலிசத்தில் ஒருபோதும் கவலைப்பட வேண்டியதில்லை. முதலாளித்துவத்தின் கீழ் வீட்டுவசதி, சுகாதாரம் போன்ற சேவைகள் சரக்குகளாகக் குறுக்கப்பட்டுள்ளன. நோய்வாய்ப்பட்டிருக்கும் போதும்; பிறருக்குத் தொற்ற வைக்கும் அபாயத்துடன் வேலை செய்யுங்கள் அல்லது உங்கள் வேலையை இழக்க நேரிடும் அபாயத்தோடு வீட்டிலேயே இருங்கள் என்ற இறுதி எச்சரிக்கையையே பெரும்பாலும் முதலாளித்துவம் மக்களுக்கு முன்வைக்கிறது.

சோசலிசத்தின் கீழ், உற்பத்தி அதிகளவில் இயந்திரமயமாக்கப்படுவதாலும் மற்றும் தேவையற்ற வேலைகள் நீக்கப்படுவதாலும் - விளம்பரத் தொழிலே விடைகொடு! உடல்நலக் காப்பீட்டுத் தொழிலே விடைகொடு! - நாம் வேலைசெய்ய வேண்டிய நேரத்தின் அளவு வெகுவாகக் குறையும். நாளின் பெரும்பகுதியை நாம் கலையாக்கத்திலோ அல்லது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனோ களித்திருப்போம்.

நோய்ப் பரவலின் போது, சளிக்கான முதல் அறிகுறி வரும்போதே வீட்டிலேயே இருக்க முடிவதுடன் உடனடியாகப் பரிசோதிக்கப்படவும் முடியும், ஒரு திட்டமிட்ட பொருளாதாரத்தில், வளங்களை அவை மிகவும் தேவைப்படும் இடங்களுக்கு நம்மால் ஒதுக்க முடியும், மேலும் நோய் காரணமாகத் தொழிலாளர் எண்ணிக்கை குறைவதையும் கவனத்தில் கொள்ள முடியும். 

கொரோனா வைரஸ் சிகிச்சைகள் எங்கே?

தற்போது, பல இலாப நோக்குடைய நிறுவனங்கள் கோவிட்-19 க்கு சிகிச்சையளிக்க முடியுமா அல்லது தடுக்க முடியுமா என்பதை அறிய (சில நேரம் புதிய, சில நேரம் முன்பு நிராகரிக்கப்பட்டு இப்போது மறுசுழற்சி செய்யப்பட்ட) சிகிச்சை முறைகளை சோதிக்க முயற்சி செய்கின்றன. ஒரு கோவிட்-19 தடுப்பூசியைத் தயாரிப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் போது, இந்தத் தடுப்பூசியை சில மாதங்களுக்கு மனிதர்களிடம் சோதனை செய்ய முடியாது என்று உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) உயிரியல் மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் பீட்டர் மார்க்ஸ் கூறுகிறார். கடந்த வாரம் கூட, சுகாதார மற்றும் மனித சேவைகள் செயலாளர் அலெக்ஸ் அசார் புதிதாக உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி அனைவருக்கும் மலிவு விலையில் கிடைக்கும் என்று உத்தரவாதம் அளிக்க மறுத்து விட்டார், "அந்த விலையை எங்களால் கட்டுப்படுத்த முடியாது, ஏனெனில் எங்களுக்குத் தனியார் துறை முதலீடு வேண்டும்." என்று தெரிவித்துள்ளார். எலி லில்லிக்கு , நிறுவனத்தின் மருந்துகளின் விலைகள் கணிசமாக உயர்ந்த நேரத்தில் பணியாற்றிய முன்னாள் உயர்மட்டப் பரப்புரையாளரிடமிருந்து இந்த அறிக்கை வருவதைக் குறைந்தபட்சமாக முரண் என்றே சொல்ல வேண்டும்.

கிலீட் சயின்சஸ், மாடர்னா தெரபியூட்டிக்ஸ் மற்றும் கிளாக்சோஸ்மித்க்லைன் போன்ற நிறுவனங்கள் அனைத்திலும் பல்வேறு சிகிச்சைகள் வளர்ச்சி நிலையில் உள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் தங்களது குறிப்பிட்ட கோவிட்-19 சிகிச்சையை வைத்து இலாபங்களை அதிகப்படுத்துவதில் கொண்டுள்ள ஆர்வம், தங்களின் வளங்களையும், தரவுகளையும் ஒருங்கிணைத்து மிக விரைவாக சிகிச்சையளிப்பதற்கான வாய்ப்பை தடுக்கிறது. கோவிட்-19இன் ஆராய்ச்சி நிலை முதலாளித்துவம் “புதிய கண்டுபிடுப்புகளை ஊக்குவிக்கிறது” என்ற பொய்களை அம்பலப்படுத்துகிறது.

வரி செலுத்துவோரின் பணத்தில் நடக்கும் அரசு ஆய்வு இல்லாமல் "கார்ப்பரேட் கண்டுபிடுப்பு" என்று கருதப்படும் மருந்து வளர்ச்சியில் பெரும்பகுதி சாத்தியமேயில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பேஹ்-டோல் சட்டம் போன்ற மசோதாக்கள், பொது சுகாதார நிறுவனங்களான தேசிய சுகாதார நிறுவனம் (NIH) போன்றவற்றில் உருவாக்கப்பட்டுள்ள மூலக்கூறுகள் அல்லது பொருட்களின் காப்புரிமையை நிறுவனங்கள் வாங்குவதற்கும் பின்னர் லாபத்தை அதிகரிக்க விலைகளை உயர்த்திக் கொள்ளவும் அனுமதிக்கின்றன. அறிவியல் மற்றும் தொழில்துறை ஒருங்கிணைப்பு மையம் (CISI) நடத்திய ஆய்வு 2010க்கும் 2016 க்கும் இடையில் அரசாங்க நிதியுதவியில் நடந்த ஆராய்ச்சிகளுக்கும், உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) ஒப்புதல் பெற்ற ஒவ்வொரு புதிய மருந்துக்கும் இடையிலான உறவைப் பகுப்பாய்வு செய்தது. இதில் ஆய்வாளர்கள் “சந்தைக்கு அங்கீகரிக்கப்பட்ட 210 மருந்துகள் ஒவ்வொன்றும் தேசிய சுகாதார மையத்தின் (NIH) ஆதரவு பெற்ற ஆய்வுகளிலிருந்து வெளிவந்தவை" என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

முதலாளிகளைக் கையகப்படுத்துவது என்பதன் பொருள் பொதுமக்கள் இனி தனியார் நிறுவன இலாபங்களுக்கு மானியம் வழங்க வேண்டியதில்லை என்பதே. மருந்துத் துறையின் தேசியமயமாக்கினால், ஒருசிலருக்கு மட்டுமே பயனளிக்கும் அதிரடி மருந்துகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, உலகின் சவால்களைச் சமாளிக்க அறிவுசார் மற்றும் நிதி மூலங்களைத் திரட்ட வழிபிறக்கும். கோவிட்-19 வரும் சமயத்தில், உலகின் மிகச் சிறந்த மூளைகள், வளங்களைச் சேகரிப்பதற்கும் விரைவான சிகிச்சை முறைகளை உருவாக்குவதற்கும், ஒரு பெரிய அணிதிரட்டலையும், ஒருங்கிணைப்பையும் உருவாக்குவதைக் காண்போம். உண்மையில், இந்தத் துறைகளைப் படிக்க விரும்புவோர் இனி அடைக்க முடியாத கடனை எதிர்கொள்ள வேண்டியதில்லை என்பதால் அதிகமான மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் கிடைக்கக் கூடும்.

சோசலிசத்தில் உடல்நலப் பராமரிப்பு:

சோசலிசத்தின் கீழ், அனைத்து உடல்நலப் பராமரிப்பு மையங்களும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் மற்றும் நோயாளிகளால் ஜனநாயக முறையில் நடத்தப்படும். மருத்துவமனைகள், மருந்து நிறுவனங்கள், சாதன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் (“மருத்துவத் தொழில்துறை வளாகத்தை” உருவாக்கும் முக்கிய ஆட்கள்) ஆகியவற்றில் பணக்கார முதலாளிகள் முக்கிய முடிவுகளை எடுக்கும் தற்போதைய அமைப்பிலிருந்து இது மிகவும் வேறுபட்டதாக இருக்கும். கோவிட்-19 ஏற்பட்டால், உடல்நலப் பாதுகாப்பு என்பது ஒரு மனித உரிமையாக இருக்கும், பணம் சம்பாதிப்பதற்கான வழிமுறையாக இருக்காது. இது பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் பொருளாதார அழிவுக்கு அஞ்சாமல் சோதனை மற்றும் சிகிச்சையைப் பெற அனுமதிக்கும். மருத்துவமனையில் அனுமதிக்கவோ அல்லது தனிமைப்படுத்தவோ தேவைப்பட்டால், நோயாளி மற்றும் குடும்பத்தினர் மருத்துவக் கட்டணங்கள் பொருளாதார ரீதியாக அவர்களை அழிக்குமா என்று கவலைப்படுவதற்குப் பதிலாக அவர்களின் உடல்நலத்திற்கு எது சிறந்தது என்பதில் கவனம் செலுத்த முடியும்.

"உடல்நலப் பாதுகாப்பு" என்று கருதப்படுவதன் வரம்பும் விரிவாக்கப்பட வேண்டும். ஒரு நபரின் ஒட்டுமொத்த வாழ்நிலையும் சமூகச் சூழலுமே அவரின் உடல்நலத்தைத் தீர்மானிப்பதில் முக்கியத்துவம் பெறுகிறது. இதன் பொருள் என்னவென்றால் சோசலிசத்தின் கீழ் சுகாதார அமைப்பு என்பது தீர்வுபெறாமல் உள்ள காலநிலை நெருக்கடி போன்ற பிரச்சினைகளையும் கவனத்தில் கொள்ளும். கோவிட்-19க்கும் காலநிலை மாற்றத்திற்கும் இடையிலான தொடர்பு இன்னும் நிறுவப்படவில்லை என்றாலும், அதிகரித்து வரும் உலகளாவிய வெப்பநிலை --- பெரும்பாலும் 100 பெரிய நிறுவனங்கள் மற்றும் இராணுவ-தொழில்துறை வளாகங்களால் அதிகரித்துள்ளது இந்த வெப்பநிலை --- எதிர்காலத்தில் புதிய நோய்க் காரணிகள் தோன்றுவதை அதிகரிக்கும். குறுகிய குளிர்காலம், நீர்ச் சுழற்சிகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மனிதர்களுக்கு நெருக்கமாக வனவிலங்குகளின் இடம்பெயர்தல் அனைத்தும் புதிய நோய் வெளிப்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

முதலாளித்துவம் தொற்றுநோய்க்கான நிலைமைகளை உருவாக்கியுள்ளது. முதலாளித்துவத் "தீர்வுகள்" போதுமானவையாக இல்லை மேலும் அவை நெருக்கடியை அதிகரிக்கின்றன, அதாவது அதிக நோய் மற்றும் அதிக மரணங்களை ஏற்படுத்துகின்றன. கொரோனா வைரஸின் தொடர்ச்சியான பரவலுக்கு முதலாளித்துவம் ஒரு காப்பகமாக இருந்து வருகிறது. இந்த அமைப்பின் கீழான உடல்நலப் பாதுகாப்பு எப்போதுமே தொற்றுநோய்களை சரியாக்குவதற்குப் போதுமானதாக இருக்காது. உடல்நலம் மற்றும் நல்வாழ்வைப் பற்றிய ஒரு சமூகப் பகுப்பாய்வை நாம் செய்ய வேண்டும் என்ற உண்மையை கொரோனா வைரஸ் சுட்டிக் காட்டுகிறது. நாம் அனைவரும் ஒருவருக்கொருவர், இயற்கையோடும், நம்மைச் சுற்றியுள்ள சூழலுடனும் இணைக்கப்பட்டுள்ளோம். சோசலிசம் அந்த உறவுகளின் அடிப்படையில் சமூகத்தை மறுசீரமைக்கும்.

அதே நேரத்தில், சோசலிசம் ஒரு கற்பனாவாதம் அல்ல. சோசலிசத்திலும் தொற்றுநோய்கள் அல்லது கொள்ளைநோய்கள் இருக்கலாம். எவ்வாறாயினும், ஒரு சோசலிச சமுதாயம் - தொழிலாளர் கட்டுப்பாட்டின் கீழ் திட்டமிட்ட பொருளாதாரத்தில் அனைத்து உற்பத்தியும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒன்று. அதில் வளங்களை மிகச் சிறப்பாக ஒதுக்கவும், மேலும் மக்களின் படைப்பு மற்றும் விஞ்ஞான ஆற்றலை உகந்த பணிக்குச் செலுத்தவும் முடியும்.

மூலம்: மருத்துவர் மைக்கேல் பாப்பாஸ், https://www.counterpunch.org/

தமிழாக்கம்: சமந்தா

Pin It