‘நொபெக்’கை நிறைவேற்றிய கொரோனா:

2019ஆம் ஆண்டில், அமெரிக்க காங்கிரஸில் ‘ஒபெக்’ அமைப்பின் (OPEC – Organization of Petroleum Exporting Countries) எண்ணெய் விலை நிர்ணயத்திற்கு எதிராக ‘நோபெக்’ / எண்ணெய் உற்பத்தி, ஏற்றுமதி கார்டெல் மறுப்பு (No Oil Producing and Exporting Cartels) மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதை நடைமுறைப்படுத்தினால் ஓபெக்கின் மீது அமெரிக்க நீதித் துறை பொறுப்பாண்மை மீறல் (Anti-trust) நடவடிக்கை எடுக்க அனுமதிக்கும். இது ஒபெக் உறுப்பு நாடுகளின் இறையாண்மையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டது, எண்ணெய் விலைகளை உயர்த்துவதற்கான முயற்சியில் ஒபெக் உறுப்பு நாடுகள் உற்பத்தியைக் கட்டுப்படுத்தினால் அதை எதிர்த்து வழக்குத் தொடர இச்சட்டம் அனுமதிக்கிறது.

இம்மசோதாவை நடைமுறைப்படுத்தினால் பெட்ரோ டாலர்களைக் கைவிடுவதாக சவுதி அரேபியா எச்சரித்துள்ளது. அதாவது எண்ணெய் வர்த்தகத்தை டாலர் தவிர வேறு நாணயங்களில் மேற்கொள்வோம் என்று எச்சரித்துள்ளது. அமெரிக்கர்கள் நோபெக்கை நடைமுறைப்படுத்தட்டும், அதனால் அமெரிக்கப் பொருளாதாரமே வீழ்ச்சியடையும் என்றும் சவுதி அரேபியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே சவுதி அரேபியா மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்ட கத்தார் ஒபெக் அமைப்பிலிருந்து வெளியேற இதுவும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது. தற்பொழுது ஒபெக் அமைப்பில் சவுதி அரேபியா, ரஷ்யா என இரண்டு உறுப்பு நாடுகள் மட்டுமே உள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சவுதி அரேபியா செப்டபர் 11 இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கான பழியை அமெரிக்க காங்கிரஸ் சவுதி மீது சுமத்தினால் அமெரிக்கக் கருவூலங்களில் செய்த முதலீடுகளிலிருந்து வெளியேறுவதாகவும், நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்கச் சொத்துக்களை விற்றுவிடப் போவதாகவும் எச்சரித்தது. அதாவது பெட்ரோ டாலர் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக, மறைமுக எச்சரிகை விடுத்தது.

நோபெக்/எண்ணெய் உற்பத்தி ஏற்றுமதி கார்டெல் மறுப்பு மசோதா முதன்முதலில் 2000ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்மசோதா இதுவரை 16 முறை தாக்கல் செய்யப்பட்ட போதும் ஒரு முறை கூட சட்டமாகவில்லை. அமெரிக்காவின் இரு பிரதானக் கட்சிகளான ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியின் தலைவர்களும் இம்மசோதா அமெரிக்க-சவுதி உறவை சேதப்படுத்தும், பெட்ரோ-டாலருக்கு முடிவு கட்டும் என்ற அச்சத்தில் அதனைச் சட்டமாக்காமல் தடுத்து வந்தனர்.

அமெரிக்கப் பெட்ரோலிய நிறுவனங்களும் கிட்டத்தட்ட ஒபெக் அமைப்பைப் போலவே, நோபெக் மசோதாவை எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளன. ஏனென்றால் 2013- 2014ல் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்த போது அமெரிக்காவின் ஷேல் எண்ணெய் உற்பத்தி யாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். இச்சட்டத்தால் அது போன்ற விலைவீழ்ச்சி ஏற்பட்டால் அமெரிக்காவின் ஷேல் எண்ணெய் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படும். ஷேல் எண்ணெய் உற்பத்திக்கு அபாயகரமான நீர்விரிசல் முறை பயன்படுத்தப்படுவதால் துரப்பண முறையில் எண்ணெய்க் கிணறுகளிலிருந்து கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய ஆகும் செலவைப் போல் மூன்று மடங்கு செலவாவதால் ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 60 டாலர் இருந்தால்தான் அவர்களால் தொடர்ந்து தொழில் செய்ய முடியும், வங்கிக் கடன் பெற்றே நீர்விரிசல் முறையில் இத்தொழில் நடத்தப்படுகிறது. எண்ணெய் விலை தாழ்ந்தால் அந்தத் தொழிலே கடனில் மூழ்கிப் போகும். பெருமளவில் வங்கிக்கடன் நெருக்கடியும் ஏற்படும்.

இதை நடைமுறைப்படுத்தினால் அமெரிக்காவின். பொருளாதாரமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகி விடும். உலகின் மிகப்பெரிய எண்ணெய் நுகர்வாளராக இருந்த அமெரிக்கா, தற்பொழுது ஷேல் எண்ணெய் உற்பத்தி மூலம் உலகின் முதன்மையான எண்ணெய் ஏற்றுமதியாளராக உருவெடுத்துள்ளது. இம்மசோதா சட்டமாகியிருந்தால் ஏற்பட்டிருக்கும் விளைவையே தற்பொழுது பொருளாதார மந்தநிலையும், கொரோனா வைரஸ் தாக்கமும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 30 டாலருக்குக் கீழே வீழ்ந்ததால் ஷேல் உற்பத்தித் தொழில்துறையும் வங்கிகளும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகும்.

சவுதி அரேபியா, அமெரிக்காவிடமிருந்து உலகிலே மிக அதிக அளவிற்கு ஆயுதங்கள் இறக்குமதி செய்கிறது. ஏமனில் சவுதி நடத்தும் யுத்தத்திற்கு அமெரிக்காதான் ஆயுதங்கள் வழங்குகிறது. பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலையிலும் சவுதி அரேபியாவை அமெரிக்கா பாதுகாத்தது. இப்படிப்பட்ட கொலை சீனாவிலோ, ஈரானிலோ நடந்திருக்குமானால் அமெரிக்கா இரண்டில் ஒரு வழி செய்திருக்கும். யொம் கிப்புர் போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் அமெரிக்காவிற்கு எண்ணெய் விற்பனையை நிறுத்தி 1973-74ல் பொருளாதாரத் தடை விதித்த சவுதி அரேபியாவை, இஸ்ரேலிடமிருந்து பாதுகாப்பதாக அமெரிக்கா மூளைச் சலவை செய்து 1974ல் அதனுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தியது ஒரு வரலாற்று முரண். ஏன் சவுதி அரேபியாவிடம் மட்டும் அமெரிக்கா இவ்வளவு இணக்கப் போக்குடன் வலிந்து வலிந்து போய் நட்பு பாராட்டுகிறது என்று ஆராய்ந்தால் அதன் பின்னணியில் செத்துப் போன டாலருக்கு இன்று வரை முட்டுக் கொடுத்து மறுவாழ்வு கொடுத்திருப்பது சவுதியே என்ற பேருண்மை வெளிசசத்திற்கு வரும்.

(தொடரும்)