corona migrant workers Mumbaiஉலகளவில் இது வரை 15 கோடிக்கு மேலானோர் கோவிட்-19 தொற்று நோய்க்கு ஆளாகியுள்ளனர். அவர்களில் 31 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதிக கொரோனா பெருந்தொற்றினால் தாக்குற்ற நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன.

இந்தியாவில் இது வரை 2.5 கோடிக்கு மேலானோர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் 3 லட்சத்துக்கு மேலானோர் இறந்துள்ளனர். ஜனவரி 6 முதல் அளிக்கப்படும் கோவிட் தடுப்பு மருந்து இது வரை 1.7 விழுக்காடு மக்களுக்கே முழுமையாக அளிக்கப்பட்டுள்ளது.

2021-22 நிதிநிலையறிக்கையில் கோவிட் தடுப்பு மருந்துக்காக 35,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது, அதன் பிறகு அதிகரித்து வரும் கொரோனா தாக்குதலைக் கட்டுக்குள் வைக்க கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை என்பதுடன், ஒதுக்கப்பட்ட 35,000 கோடி ரூபாய் முறையாகப் பயன்படுத்தப்பட்டதா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

உலகிலேயே மிக அதிகமான தொற்றுகளைப் பதிவு செய்துள்ள நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. நாள்தோறும் 4 லட்சத்துக்கு மேல் மக்கள் தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். இந்தியாவில் மக்கள் சந்தித்து வரும் இக்கட்டான சூழலைப் பார்த்து சீனா, பாகிஸ்தான், பிரிட்டன் நாடுகள் உதவுவதாக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசோ கொரோனாவை அரசின் ஒடுக்குமுறை ஆயுதமாகவே பயன்படுத்தி வருகிறது. முறையான மருத்துவ சேவை அளிக்கப்படாததால் பல மாநிலங்களில் மக்கள் கொத்துக் கொத்தாகச் செத்து மடிகின்றனர்.

கோவிட்-19 தடுப்பு மருந்தை அனைத்து மக்களுக்கும் இலவசமாக அளிக்க வேண்டியது ஒரு மக்கள்நல அரசின் கடமை. உலக நாடுகளில் பொதுச் சுகாதாரத்திற்கு ஒதுக்கீடு செய்வதில் 2020இல் 158 நாடுகளில் கடைக்கோடி நிலையில், 155ஆம் இடத்தில் இந்தியா உள்ளது.

ஆனால், உலகளவில் இராணுவத்திற்கு அதிகம் செலவு செய்யும் நாடுகளில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக 2020இல் இந்தியா 3ஆம் இடத்தில் உள்ளது என ஸ்டாக்ஹோமின் சர்வதேச அமைதிக்கான ஆய்வமைப்பு (சிப்ரி) தெரிவித்துள்ளது.

இந்தியாவின் இராணுவச் செலவு 2020இல் 72.9 பில்லியன் டாலர் (54 லட்சம் கோடி ரூபாய்). இராணுவத்திற்கு 54 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்யும் பாஜக அரசால் மக்களுக்கு ஒரு தடுப்பு மருந்தைக் கூட இலவசமாக அளிக்க முடியவில்லை என்றால், எப்பேர்ப்பட்ட மக்கள் விரோத அரசாக பாஜக அரசு உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

பாஜக அரசின் சரியான திட்டமின்மையால், நிர்வாகச் சீர்கேடுகளாலும் கோவிட் 2ஆம் அலை கட்டுப்படுத்தப்படாமல் மென்மேலும் அதிகரித்து வருகிறது. மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடுதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் தேவைக்கேற்ப கோவிட் தடுப்பு மருந்துகளின் உற்பத்தி அதிகமாக்கப்படவில்லை என்பதால் தட்டுப்பாடு நிலவுகிறது. கோவிட் தடுப்பு மருந்துகளின் விலை நிர்ணய ஒழுங்குமுறையை மத்திய அரசு மேற்கொள்ளாமல், இந்த இக்கட்டான சூழலை மருந்து நிறுவனங்கள் பெருலாபம் ஈட்டுவதற்கான நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு விட்டுள்ளது. கோவிட் தடுப்பு மருந்துகளின் விலைகளில் கடும் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

நிறுவனங்கள் மத்திய அரசிற்கு மலிவு விலையிலும், மாநில அரசுகளுக்கு அதிக விலையிலும் தடுப்பு மருந்துகளை விற்றுள்ளன. சீரம் இந்திய நிறுவனம் கோவிட் தடுப்பு மருந்தை மத்திய அரசிற்கு 200 ரூபாய்க்கும், மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு.

600 ரூபாய்க்கும் விற்றுள்ளது. பாரத் பயோடெக் மாநில அரசுகளுக்கு 600 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 1,200 ரூபாய்க்கும் விற்றுள்ளது. மாநில அரசுகள் நிதி நெருக்கடியில் தவிக்கும் போது கோவிட்-19 தடுப்பு மருந்தை இலவசமாக பெற்றுத் தருவதற்கான குறைந்தபட்ச உதவியைக் கூட மத்திய அரசு செய்யவில்லை.

புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) தரவுகள், ஜனவரி 2018 நிலவரப்படி, 345 திட்டங்களுக்குக் கூடுதலாக ரூ. 2.19 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டிருப்பதையும், 354 திட்டங்களை நிறைவேற்றுவதற்கு 45 மாதங்கள் தாமதமாகியிருப்பதையும் தெரிவிக்கிறது.

முறையான திட்டமின்மை, ஆபத்துக் காரணிகளைச் சரியாக அடையாளம் காணாதிருத்தல் மற்றும் பங்குதாரர்களிடையே முறையான ஒத்துழைப்பு இல்லாமை ஆகிய காரணங்களால் பண விரயமும், கால தாமதமும் ஏற்பட்டுள்ளன.

மோடி அரசு குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம் என்ற கொள்கையின் அடிப்படையில் பங்கு விலக்கலையும் தீவிரமான தனியார்மயத்தையும் கொள்கைகளாகப் பின்பற்றி வருகிறது. இந்த நிதியாண்டில் பங்குவிலக்கலுக்கான இலக்கு 1.75 லட்சம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உட்பட நான்கு முதல் ஐந்து பொதுத் துறை வங்கிகளையும், பொது நிதிக் காப்பீட்டு நிறுவனத்தையும், தனியார்மயப்படுத்துவதற்கான ஆலோசனையை நிட்டி அயோக் (Niti Aayog) வழங்கியுள்ளது.

தற்போது மாநிலங்களிலும் பொதுச் சொத்துகளைப் பணமாக்குதலையும் தனியார்மயத்தையும் ஊக்குவிக்கும் திட்டம் குறித்து நிதி அயோக்கும், முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறையும் பரிசீலித்து வருகின்றன.

காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை 49 விழுக்காட்டிலிருந்து 74 விழுக்காடாக உயர்த்தும் மசோதாவுக்கு கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஓய்வூதியத் துறையிலும் அந்நிய நேரடி முதலீட்டு (எஃப்.டி.ஐ) வரம்பை 49 விழுக்காட்டிலிருந்து 74 விழுக்காடாக உயர்த்துவதற்கான சட்டத் திருத்த மசோதா அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

புதிய சட்டத் திருத்த மசோதாவில் தேசிய ஓய்வூதிய அமைப்பை, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை, மேம்பாட்டு ஆணையத்திலிருந்து பிரித்து, நிறுவனச் சட்ட ஒழுங்குமுறைக்குள் கொண்டுவர வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. நவீன தாராளமயம் இந்திய மக்களின் ஓய்வூதியத்தையும் விட்டு வைக்காமல் கபளீகரம் செய்யவுள்ளது.

பெருந்தொற்றுக்கு நடுவில் பொதுத் துறையும், தனியார் துறையும் கூட்டாக நடைமுறைப்படுத்தவுள்ள அரசின் உள்கட்டமைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வாய்ப்பே இல்லை என திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பதிவு செய்யப்பட்ட அமைப்புசார் துறையிலிருந்து அதிக வளர்ச்சி ஏற்படுகிறது, செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் காரணமாகப் பெருநிறுவனங்களின் வருவாயும், இலாபமும் அதிகரித்துள்ளன.

ஒப்பந்த உழைப்பாளர்களைக் குறைப்பதன் மூலமும் இது செய்யப்பட்டது, இது வருவாய் வளர்ச்சியின் குறைவையும், முறைசாரா பொருளாதாரத்திற்கு அதனால் பாதிப்புகள் ஏற்படுவதையும் குறிக்கிறது.

ஆனால் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவீட்டு முறையில் அமைப்புசாரா துறையின் வளர்ச்சி அமைப்புசார் துறைக்கு ஒத்ததாக இருக்கும் என்று கருதியே மதிப்பிடப்படுவதாகவும் அலுவாலியா கவலை தெரிவித்துள்ளார்.

கொரோனா தாக்கத்தால் அமைப்புசாராத் துறையே பெரிதும் பாதிப்புற்றுள்ளது. கடன் சேவை கிடைப்பதிலும் கூடுதல் ஏறுமாறான நிலை காணப்படுகிறது. மூலப் பொருட்களின் விலைவாசி பெரிதும் அதிகரித்துள்ளது. சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் உரிய நிதிக் கடன் பெற முடியாமல் பாதிப்புற்றுள்ளன. அதேநேரத்தில் பெருநிறுவனங்களின் பங்கு மதிப்புகள் வீங்கியுள்ளன.

முதலாளித்துவ மேலாதிக்க நாடான அமெரிக்காவில் கூட பைடன் நிர்வாகம் பெருநிறுவனங்களின் மீதான வரிகளை உயர்த்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அமெரிக்க நிதியமைச்சர் ஜேனட் யெல்லன் பெருநிறுவனங்கள் வரி ஏய்ப்புச் செய்யும் பொருட்டு லாபங்களை இடமாற்றம் செய்வதைத் தடுப்பதற்காக உலகளாவிய குறைந்தபட்ச நிறுவன வரியை நடைமுறைபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அதானி குழுமம் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான சந்தை மூலதன மதிப்பைக் கொண்ட 3ஆம் இந்திய நிறுவனமாக வளர்ந்துள்ளது. ஆசியாவிலேயே முதல் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானிக்கு, கொரோனா பொது முடக்கக் காலத்தில் மட்டும் 3,500 கோடி அமெரிக்க டாலர் சொத்து சேர்ந்துள்ளது. இரண்டாவது பெரும் பணக்காரரான அதானியின் சொத்து மதிப்பு 5,050 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் அதானியின் சொத்து மதிப்பு 5 மடங்கு உயர்ந்திருப்பதாக ஃபோர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 102ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு 140ஆக அதிகரித்துள்ளது.

ஆனால் பெரு நிறுவனங்களின் கைக்கூலியான பாஜக ஆட்சியில் பெருநிறுவனங்களின் மீதான வரியையும், வருமான வரியையும் உயர்த்தும் பேச்சுக்கே இடமில்லாது போயிற்று. மாறாக எளிய மக்களின் துயர் தணிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத பாஜக அரசு அவர்களின் மீதான வரிச் சுமையை மேலும் கூட்டியதாலேயே நிதியாண்டு 2021இல் மறைமுக வரிவருவாய் 12 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2021 ஏப்ரல் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) வழியிலான வருவாய் ரூ.1.41 லட்சம் கோடி உயர்ந்து, சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 14 விழுக்காடு அதிகரித்துள்ளது.

பெருந்தொற்றினால் ஏற்பட்ட கடன்களை அடைப்பதற்கு செல்வ வரி விதிப்பது மோசமான வழிமுறையாகும் என்றும், அது அறிமுகப்படுத்தப்பட்டால் அப்படியே நிரந்தரமாகி விடும் என்றும் கூறுகிறார் நோபல் பரிசு பெற்ற பொருளியல் வல்லுநர் அங்கஸ் டீட்டன்.

ஆனால் அவரோ பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை, சமத்துவமின்மையை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து ஆராயும் இங்கிலாந்தின் வல்லுநர் குழுவை வழிநடத்துகிறார்!. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்காக ஆய்வு செய்கிறோம் என்று சொல்லிப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பதற்கே வழிகாட்டும் இத்தகைய பொருளியல் வல்லுநர்கள்தாம் சமத்துவமின்மையின் பாதுகாவர்கள்!.

இந்தியாவில் வேலைவாய்ப்புகளைப் பெருகச் செய்வதற்கான புதிய திட்டங்கள் ஏதும் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் வேலையின்மை விகிதம் மேலும் அதிகரித்துள்ளது. இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் அமைப்பு அறிவித்துள்ள படி, வேலையின்மை விகிதம் இந்திய அளவில் 7.97 விழுக்காடாகவும், நகர்ப்புறங்களில் 9.78 விழுக்காடாகவும் உயர்ந்துள்ளது.

கடந்த ஒரு வருடத்தில் இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 3.2 கோடிக்கு மேல் குறைந்துள்ளது, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை 60 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

வேலையிழப்பாலும், ஊதிய இழப்பாலும் மக்கள் பெருமளவில் அல்லலுற்று வரும் நிலையில் கோவிட் இரண்டாம் அலை நாட்டின் பொருளாதாரத்திலும், மக்களின் வாழ்வாதாரத்திலும் மேலும் எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தவுள்ளது.

கோவிட் முதல் அலையின் தாக்கத்திலிருந்தே இன்னும் மீளாத நிலையிலிருக்கும் பொருளாதாரம் இரண்டாம் அலையால் மேலும் தாக்குறுவது உறுதி என்ற நிலையில் பொருளாதார மீட்சி மேலும் தாமதமாகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

பணவீக்கம்:

பிப்ரவரியில் நுகர்வோர் குறியீடு அடிப்படையிலான சில்லறைப் பணவீக்கத்தின் அளவு 5.52 விழுக்காடு அதிகரித்துள்ளது, உணவுப் பொருட்களின் விலைவாசி 4.94 விழுக்காடு அதிகரித்துள்ளது. காய்கறிகளின் விலைவாசி 4.83 விழுக்காடு குறைந்துள்ளது. பருப்பு வகைகளின் விலைவாசி 13.25 விழுக்காடு அதிகரித்துள்ளது.

முட்டை விலை 10.60 விழுக்காடு உயர்ந்துள்ளது. எண்ணெய், கொழுப்பு ஆகியவற்றின் விலைவாசி 24.92 விழுக்காடு அதிகரித்துள்ளது. மீன், இறைச்சியின் விலை 15.09 விழுக்காடு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பணவீக்கம் 7.70 விழுக்காடு உயர்ந்துள்ளது.

ஜனவரியில் தொழில்துறை வளர்ச்சி:

புள்ளியியல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தொழில்துறை உற்பத்திக் குறியீட்டு அறிக்கையின் படி ஜனவரியில் மொத்த உற்பத்திக் குறியீடு 3.6 விழுக்காடு சரிவடைந்துள்ளது. முதன்மைத் துறைகளில் சுரங்கத் துறையில் உற்பத்தி 5.5 விழுக்காடு சரிவடைந்துள்ளது. செய்பொருளாக்கத் துறையில் உற்பத்தி 3.7 விழுக்காடு சரிவடைந்துள்ளது. மின்சார உற்பத்தி 0.1 விழுக்காடு அதிகரித்துள்ளது.

பயன்பாட்டு அடிப்படையிலான வகைப்பாட்டில் முதன்மை பொருட்களின் உற்பத்தி 5.1 விழுக்காடு சரிவடைந்துள்ளது. மூலதனப் பொருட்களின் உற்பத்தி 4.2 விழுக்காடும், உடனடி நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி 3.8 விழுக்காடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கட்டுமானப் பொருட்களின் உற்பத்தி 4.7 விழுக்காடும், இடைநிலைப் பொருட்களின் உற்பத்தி 5.6 விழுக்காடும் குறைந்துள்ளது. நீடித்த நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி 6.3 விழுக்காடு அதிகரித்துள்ளது.

மார்ச்சில் தொழில்துறை வளர்ச்சி:

இந்தியாவின் தொழில்துறை, உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிட்ட எட்டு முக்கியத் தொழில்களின் ஒருங்கிணைந்த உற்பத்திக் குறியீடு மார்ச்சில் 6.8 விழுக்காடு உயர்ந்துள்ளது. சென்ற வருடம் மார்ச் மாதத்தில் கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்தப் பொது முடக்கம் ஏற்படுத்தப்பட்டதால் பொருளாதாரம் கடுமையான சரிவை சந்தித்தது என்பதால், அதனுடன் ஒப்பிடும் போது இப்போது அதிக வளர்ச்சி ஏற்பட்டிருப்பது போன்ற தோற்றம் காணப்படுகிறதே தவிர இது உண்மையான வளர்ச்சியைக் குறிக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்ற ஆண்டு மார்ச் மாதத்தின் உற்பத்தி நிலையுடன் ஒப்பிடும் போது நிலக்கரி உற்பத்தி 21.9 விழுக்காடும், கச்சா எண்ணெய் உற்பத்தி 3.1 விழுக்காடும், பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் உற்பத்தி 0.7 விழுக்காடும், உர உற்பத்தி 5 விழுக்காடும் குறைந்துள்ளன. இயற்கை எரிவாயு உற்பத்தி 12.3 விழுக்காடும், எஃகு உற்பத்தி 23 விழுக்காடும், சிமெண்ட் உற்பத்தி 32.53 விழுக்காடும், மின்சார உற்பத்தி 21.6 விழுக்காடும் அதிகரித்துள்ளன.

கொரோனா தடுப்பு மருந்து கிடைப்பதில் உலக நாடுகளிடையே ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை நாடுகளில் வெறும் 0.3 விழுக்காடு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

வளர்ந்த நாடுகளே கொரோனா தடுப்பு மருந்துகளை உலகளவில் அனைவருக்கும் கிடைக்கச் செய்யாமல், தங்கள் பொருளாதார மேலாதிக்கத்தால் கொரோனா தடுப்பு மருந்துகளில் 82 விழுக்காட்டை அபகரித்துள்ளன.

கோவிட் தொற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை நாடுகளின் துயர் தணிக்கவும், பொருளாதார வீழ்ச்சியிலிருந்து அவற்றைப் பாதுகாக்கவும் 650 பில்லியன் டாலர் மதிப்பிற்குச் சிறப்பு வரைவு உரிமைகள் ஒதுக்கீடு செய்ய ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஆனால் சிறப்பு வரைவு உரிமைகளின் ஒதுக்கீடுகள் பெருமளவில் வளர்ந்த நாடுகளையே சேரும் என்பதால் அவை ஏழை நாடுகளுக்கு மீள் ஒதுக்கீடு செய்யப்படாத வரை அவற்றால் ஏழை நாடுகள் எந்தப் பயனும் அடையப் போவதில்லை.

முதலாளித்துவக் கொடுங்கோல் ஆட்சியின் காராணமாக கோவிட் தாக்கத்தால் உலகளவிலும் உள்நாட்டளவிலும் -- நாடுகளுக்கிடையிலும் அந்தந்த நாட்டுக்குள்ளும் - சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன.

முதலாளித்துவ ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதீதமாக்கும் ஓர் அரச ஒடுக்குமுறை ஆயுதமாக கொரோனா பயன் படுத்தப்படுகிறது.

ஏனெனில் ஏகபோக மருந்து நிறுவனங்களின் காப்புரிமைகளையும், பெருலாபங்களையும் பாதுகாப்பதற்காகக் கோடிக்கணக்கான மக்களின் இன்னுயிர்க்ளைப் பலியிடலாம் அதில் ஒன்றும் தவறில்லை என்பதே முதலாளித்துவத்தின் நீதியாக உள்ளது!

- சமந்தா