டாலருக்கு வந்த வாழ்வு (3)
சவுதி அரேபியா உலகளவில் 10% எண்ணெய் இருப்புகளைக் கொண்டு ஒபெக்கில் மேலாதிக்கம் பெற்றிருந்தது. சவுதி அரேபியாவுக்குத் தன் எண்ணெய் வயல்களைப் பாதுகாக்கத் தெரியாதா என்ன, எதற்கு அமெரிக்காவிற்கு இந்தக் காவல்காரன் வேலை? பாலுக்குப் பூனை காவல் காப்பது போலத்தான் அமெரிக்கா சவுதி அரேபியாவின் எண்ணெய் வயல்களைப் பாதுகாக்கிறது.
பிற நாடுகளிலுள்ள பலவீனமான அம்சங்களை தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் வில்லத்தனத்தில் அமெரிக்காவுடன் யாரும் போட்டி போட முடியாது. சவுதி அரச குடும்பம் ஊழலில் திளைத்திருந்தது. பெட்ரோ-டாலர் என்ற இந்த பரஸ்பர உறவால் சவுதி அரச குடும்பம் டாலருக்குப் புத்துயிர்ப்பு அளித்துள்ளது கைம்மாறாக, அமெரிக்க அரசு சவுதி அரச குடும்பத்தைப் பாதுகாக்கிறது. அமெரிக்க ரவுடி அரசின் ஆதிக்கம் இல்லாதிருந்தால் அங்கு எப்போதோ ஜனநாயகம் மலர்ந்திருக்கும். வெனிசுலா, கியூபா, சீனா, ஈரான் என உலகெங்கும் ஜனநாயகம் மீறப்படுவதாகக் கூச்சல் போடும் அமெரிக்க அரசு உண்மையிலே ஜனநாயகக் காவலனாக இருந்திருக்குமானால் என்ன செய்திருக்க வேண்டும்? சவுதி அரேபியாவிலுள்ள முடியாட்சிக்கு முடிவு கட்டி ஜனநாயகத்தைக் கொண்டுவர முயற்சி எடுத்திருக்க வேண்டும். ஆனால் இன்று வரை முடியாட்சி அங்கு கட்டிக் காக்கப்படுவதற்கு அமெரிக்க அரசும், அதனுடன் கொண்ட பெட்ரோ-டாலர் ஒப்பந்தமும் முக்கியக் காரணமாக உள்ளது. அமெரிக்க அரசின் ஜனநாயகம் எவ்வளவு போலியானது என்பது சவுதி அரேபியா விஷயத்தில் வெளிப்படையாக அம்பலப்படுகிறது.
1973ஆம் ஆண்டு யோம் கிப்பூர் போரில் இஸ்ரேலுக்கு இராணுவ உதவி அளித்ததற்காக அமெரிக்காவிற்கும், பிற இஸ்ரேலிய நட்பு நாடுகளுக்குமான எண்ணெய் ஏற்றுமதியை பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு நிறுத்தியது. ஒபெக்கின் இந்தப் பொருளாதாரத் தடையினால் ஆறு மாதங்களில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 3 அமெரிக்க டாலரிலிருந்து 12 ஆக உயர்ந்தது; அதாவது டாலர் நான்கு மடங்கு மதிப்பிழந்தது. தடை முடிந்த பின்னரும் எண்ணெய் விலை அதிகமாகவே நீடித்தது. டாலர் கச்சா எண்ணெயிடம் இவ்வாறு தொடர்ந்து மதிப்பிழக்குமானால் டாலரால் உலகப் பணமாகத் தொடர்ந்து நீடிக்க முடியுமா? முடியாது. கச்சா எண்ணெய் விலையை அமெரிக்கா தனது கட்டுக்குள் வைப்பதன் மூலம் டாலரை உலகப் பணமாக நீடிக்க வைக்க முடியும். அதைத்தான் நிக்சனும், கிஸ்ஸிங்கரும் செய்தனர். கச்சா எண்ணெய்க்கு என்றென்றும் தேவையும், மதிப்பும் அதிகரித்துக் கொண்டே வருவதால் தோல்வியுற்ற டாலரை, அதனுடன் இணைத்து பெட்ரோ-டாலராக்கி வெற்றிகரமாக அதன் மதிப்பைக் கூட்டினர் (நட்டத்தில் இயங்கும் தனியார் வங்கிகளின்/ நிறுவனங்களின் மதிப்பைக் கூட்ட இலாபத்துடன் செயல்படும் அரசு வங்கிகளுடன்/நிறுவனங்களுடன் இணைக்கும் அரசின் கொள்கைகள் நினைவுக்கு வருகின்றனவா?).
ஒரு நாணயம் உலகப் பணமாக இருக்க வேண்டுமானால் அந்த நாணயத்தில் மற்றப் பொருட்களின் மதிப்பு அதிக ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகக் கூடாது, நிலைத்தன்மையுடன் இருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் நிலைத்தன்மையை இழந்தால் அந்த நாணயத்தின் மீதான நம்பிக்கையும் அதற்கான நிகரத் தேவையும் குறைந்து விடும். எதனால் என்றால் பணம் வெறும் பரிவர்த்தனைக்கான ஊடகம் மட்டுமல்ல செல்வத்தை சேமிப்பதற்கான ஊடகமாகவும் உள்ளது. ஒவ்வொரு நிதி நெருக்கடியின் போதும் தங்கத்தின் மதிப்பு கூடும் போக்கு காணப்படுகிறது. எதனால் என்றால் தங்கம் மற்ற ஊடகங்களைக் காட்டிலும் குறைந்த அளவு தேய்மான மதிப்பைக் கொண்டுள்ளதால் தங்கம் என்றென்றும் உலகப் பணமாக இருக்கும் தகுநிலையைப் பெற்றுள்ளது.
தங்கத்தை விட மதிப்பு அதிகமான ஒரு பொருள் உள்ளது என வைத்துக் கொள்வோம், உதாரணமாக சூரியகாந்திப் பூ தங்கத்தை விட விலை உயர்ந்து விட்டது என வைத்துக் கொள்வோம், அப்பொழுது சூரிய காந்திப் பூவை வாங்கி விற்பதன் மூலம் இலாபம் சம்பாதிக்க முயல்வார்களே தவிர, சூரியகாந்திப் பூக்களையே சேமிப்பு ஊடகமாக அப்படியே வைத்துக் கொள்ள யாரும் முன்வர மாட்டார்கள், ஏனென்றால் அது விரைவில் வாடிப் போவதால் மதிப்பிழந்து விடும்.
எண்ணெய் விலை டாலரில் அதிகமாகிக் கொண்டே போனால், அதாவது டாலர் மதிப்பிழந்தால் சேமிப்பாளர்கள், நிதி முதலீட்டாளர்கள் டாலரைக் கைவிட்டு தங்கத்தில் முதலீடு செய்யவே விரும்புவார்கள். எண்ணெய் விலை ரியாலிலோ, தினாரிலோ நிலைத் தன்மையுடன் நீடித்தால் டாலரை விட்டு ரியால், தினாரில் முதலீடு செய்யும் போக்கே காணப்படும். டாலரை பெட்ரோல் விற்பனையுடன் கோத்துவிட்ட பெட்ரோ-டாலர் என்ற இந்தப் புதிய ஏற்பாடு பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்ற இறக்கங்களிலிருந்தும், நம்பிக்கையின்மையிலிருந்தும் டாலரை கட்டிக் காத்து அதை உலகப் பணமாக நீடிக்க செய்வதற்கான முக்கியக் காரணியாக உள்ளது.
அமெரிக்கா உற்பத்தி செய்த பொருளை அதன் நாணயத்திலே விற்க விரும்பினால் அதை யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. தன் நாட்டில் உற்பத்தியாகாத பொருளுக்கு உரிமை கொண்டாடுவதில் என்ன நியாயம் உள்ளது? அமெரிக்காவில் உற்பத்தியான பொருளை ரியாலிலோ தினாரிலோ விற்க அமெரிக்கா அனுமதிக்குமா?.
பெருமளவு சர்வதேசப் பரிவர்த்தனைகள் டாலரிலே மேற்கொள்ளப்படுவதால் டாலரின் மதிப்பு உயர்கிறது. உலகெங்கும் கச்சா எண்ணெய் அதிகம் தேவைப்படுவதாலும், எண்ணெய் அமெரிக்க டாலர்களில் விலை நிர்ணயம் செய்யப்படுவதாலும், ஒவ்வொரு முறை டாலரில் எண்ணெய்ப் பரிவர்த்தனை செய்யும் பொழுதும் டாலரின் மதிப்பு உயர்கிறது. இது உலக நாடுகள் எண்ணெய் வாங்க டாலர் கையிருப்பு வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. ஆனால் அமெரிக்காவுக்கு அப்படிப்பட்ட தேவையில்லை. கச்சா எண்ணெயின் விலை ஏறும் போது, அதை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கான செலவினங்கள் அதிகரிக்கின்றன. ஆனால் இப்படிப்பட்ட பிரச்சனை அமெரிக்காவுக்குக் கிடையாது. அமெரிக்க இறக்குமதியாளர்கள் நாணயப் பரிமாற்ற வீத ஏற்ற இறக்கங்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அவர்களால் மட்டுமே தம் சொந்த நாணயத்தில் கச்சா எண்ணெய் வாங்க முடிந்தது. பிற நாடுகளின் மத்திய வங்கிகள் சர்வதேசச் சந்தையில் டாலருக்கு ஈடான தங்கள் நாட்டு நாணயங்களின் மதிப்பின் ஏற்ற இறக்கங்களைத் தடுக்கப் பெருமளவிற்கு டாலர் இருப்பை வைத்துகொள்ளும் கட்டாயத்தில் உள்ளன.
இத்தகைய காரணங்களால் அமெரிக்க டாலருக்கான தேவை தொடர்ந்து அதிகரித்தது, அதனால் டாலரின் மதிப்பும் உயர்ந்தது. பெரும்பாலான நாடுகள் டாலர் தேவைகளுக்காகத் தம் நாட்டின் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்கின்றன. அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதைக் காட்டிலும், பிற நாடுகளிலிருந்து அதிகளவில் இறக்குமதி செய்து கொள்வதால் அமெரிக்கா அதிக வர்த்தகப் பற்றாக்குறை கொண்ட நாடாக மாறியது. மற்ற நாடுகளில் தொடர்ந்து வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டால் அங்கு நிதி நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் அமெரிக்க டாலர் உலகப்பணம் என்பதால் அமெரிக்கா அதன் வர்த்தகப் பற்றாக்குறையை / நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை மூலதனக் கணக்கு உபரியின் மூலம் சமன் செய்து கொள்ள முடிகிறது. பெட்ரோ-டாலர் மறு சுழற்சி என்ற வழிமுறையின் மூலம் மூலதனக் கணக்கில் உபரியைப் பெறுகிறது. பெட்ரோ-டாலர் மறுசுழற்சி முறையில் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் நாடுகள் உபரி வருவாயை / பெட்ரோ-டாலர்களை அமெரிக்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்கின்றன. டாலரில் மதிப்பிடப்படும் அமெரிக்கச் சொத்துகளில் முதலீடு செய்கின்றன. இதனால் அமெரிக்கச் சொத்துக்களின் மதிப்பு எக்கச்சக்கமாக உயர்ந்துள்ளது. அதிக டாலர்களை உருவாக்குவதும் சொத்துக்களின் விலைகளை உயரச் செய்கிறது.
பல ஆண்டுகளாக யு.எஸ். கருவூலப் பத்திரங்களில் முதலீடு செய்த பெட்ரோ-டாலர்களிலிருந்து வட்டியாக வந்த டிரில்லியன் கணக்கான டாலர்களைக் கொண்டு அமெரிக்க நிறுவனங்கள் சவுதி அரேபியாவை மேற்கத்திய வகையில் நகரமயமாக்கியுள்ளன. இவ்வாறு அமெரிக்க நிறுவனங்களுக்கு வேலைவாய்ப்புகளையும் அதன் மூலம் இலாபங்களையும் வழங்கவும் பெட்ரோ-டாலர் காரணமாக உள்ளது. உலகெங்கிலும் உள்ள நிதி முதலீட்டாளர்களும் நாணயப் பரிவர்த்தனையால் ஏற்படும் ஏற்ற இறக்கங்களிலிருந்து தம் செல்வத்தைப் பாதுகாக்க அமெரிக்கக் கடன் பத்திரங்களிலும், அமெரிக்க சொத்துக்களிலும் போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்கின்றனர். இதனால் அமெரிக்கா அதற்குத் தேவையானதை விட அதிகக் கடனை நிதிச் சந்தைகளில் பெறமுடிகிறது. இது அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை குறைவாக வைத்திருக்க அனுமதிக்கிறது மேலும் அமெரிக்காவில் பணவீக்கமற்ற வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.
ஒருவருக்குக் கடன் கொடுக்க யாரும் முன் வரவில்லையென்றால் அவர் முடிந்தோ, முடியாமலோ கடனைத் திருப்பி செலுத்த மாட்டார் என்று கருதப்படும். ஆனால் இந்த தர்க்கம் அமெரிக்க நாட்டிற்கு பொருந்தாது. (இந்திய வங்கிகள் கார்ப்பரேட்டு நிறுவனங்களுக்கு அளிக்கும் கடன்களும் இப்படிப்பட்டதுதானே!). அமெரிக்கா அதிகக் கடன்பட்ட நாடுகளில் ஒன்று. உலகம் அமெரிக்காவுக்குக் கடன்படவில்லை, அமெரிக்காதான் உலகத்திற்குக் கடன் பட்டுள்ளது.
அரசியல் பொருளாதாரத்தில் எண்ணிலடங்கா தோற்றப் பிழைகள் உள்ளன. வெளித் தோற்றம் ஏமாற்றும் என்பார்களே, அது முக்கியமாகப் பொருந்துவது பொருளாதாரத்திற்குதான், வெளியில் பார்த்தால் என்ன தோன்றும்? உலக நாடுகளுக்கெல்லாம் அமெரிக்க வங்கிதான் மலிவுக் கடன் கொடுத்து அனைத்து நாடுகளின் நிதி நிலையையும், சர்வதேசப் பொருளாதாரத்தையும் சமநிலைக்கு கொண்டு வர அரும்பாடு படுவது போலத் தோன்றும், ஆனால் உண்மையில் மற்ற நாடுகள் தான் போட்டி போட்டுக் கொண்டு அமெரிக்கக் கடன் பத்திரங்களின் வழியில் கடன் தருகிறார்கள், அமெரிக்காவிற்கு மலிவுக் கடன் கிடைக்கிறது. கடன் எங்கே தேவைப்படுகிறதோ அங்கே வழங்கப்படுவதில்லை.
இந்தியாவின் விவசாயிகளும், சிறு உற்பத்தியாளர்களும் கடன் கிடைக்காமல் முடங்கிப் போயுள்ளனர். இந்திய மாநிலங்கள் கடன் கிடைக்காமல் தவிக்கின்றன. ஆனால் இந்திய நிதி முதலீட்டாளர்கள் ‘ஏழை’ அமெரிக்காவிற்கு கடன் வழங்குகிறார்கள். ரூபாயை மதிப்பிழக்க செய்கிறார்கள். இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுமிக்க இந்தப் பொருளாதார அமைப்பினால் மூன்றாம் உலக நாடுகளின் நாணயங்களது மதிப்பு எப்பொழுதும் குறைந்தே உள்ளது. இதனால் அமெரிக்கா மூன்றாம் உலக நாடுகளிலிருந்து அனைத்தையும் மலிவாகவே பெற முடிகிறது.
இங்கே நமக்கெல்லாம் ஆடித் தள்ளுபடி ஒரு மாதம்தான் அதுவும் இரண்டாந்தரத் துணிவகைகளைத்தான் ‘மலிவாக’ப் பெற முடியும், ஆனால் அமெரிக்காவுக்கு ஆண்டு முழுவதும் ஆடித் தள்ளுபடிதான். அமெரிக்காவுக்குத் தேவையான எல்லாத் தரமான பொருட்களும் தள்ளுபடி விலையில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலகப்பணம் என்ற தகுநிலையால் டாலரின் மதிப்பு ஏறுகிறது. டாலரின் செல்வாக்கு வளர்ந்து, எண்ணெய் மற்றும் பிற பொருட்களைப் பெரும் தள்ளுபடியில் வாங்குவதன் மூலம் அமெரிக்காவின் பணவீக்கத்தை ஏற்றுமதி செய்ய இது அனுமதிக்கிறது.
‘பெட்ரோ-டாலர்’ அமைப்பு அமெரிக்க தேசத்தை பெரிதும் வளப்படுத்தியுள்ளது. ஆனால் இது மற்ற நாடுகளின் இழப்பிலிருந்து பெறப்பட்டது. உலகளவில் 2⁄3 பங்குக்கும் மேலான அந்நியச் செலவாணி இருப்புகள் டாலராக உள்ளன. அமெரிக்க மத்திய வங்கி வரம்பில்லாமல் டாலர் அச்சடிப்பதற்கும் இது வழிகோலுகிறது. அமெரிக்காவில் பணப் புழக்கத்தை நிரந்தரமாக விரிவாக்குவதன் மூலம், அமெரிக்காவின் வாழ்க்கைத் தரமும் அதிகரித்துள்ளது. புவிசார் அரசியல் வழியில் பொருளாதார மேலாதிக்கம் கொண்ட, உலகின் ஒரே வல்லரசாக அமெரிக்கா இருந்துவர இந்த அமைப்பு உதவுகிறது.
இவ்வாறு பெட்ரோ-டாலர் அமைப்பு யு.எஸ். டாலர்களுக்கான உலகளாவிய தேவையை அதிகமாக்குகிறது. யு.எஸ். கடன் பத்திரங்களுக்கான உலகளாவிய தேவையையும் அதிகமாக்குகிறது. மேலும் இது அமெரிக்காவிற்கு விருப்பப்படி அச்சிடக்கூடிய நாணயத்துடன் எண்ணெய் வாங்குவதற்கான திறனை வழங்குகிறது. அமெரிக்காவிற்கு மலிவான ஏற்றுமதியையும் ஊக்குவிக்கிறது பெட்ரோ-டாலர் ஒப்பந்தம் டாலரை உலகின் சர்வாதிகார நாணயமாக நிலைநிறுத்த உதவியது. இந்த உயர் தகுநிலையால், அமெரிக்கா உலகளாவிய பொருளாதார மேலாதிக்க சக்தியாக உருவாகியுள்ளது. இதனால் அமெரிக்கா எப்பொழுதும் வர்த்தகப் பற்றாக்குறையுடனும், நடப்புக் கணக்கு பற்றாக்குறையுடனும் நீடிக்க முடிகிறது. அதன் நடப்புக் கணக்குப் பற்றாக்குறைக்கு மிகக் குறைந்த வட்டி வீதத்தில் நிதியும் பெற முடிகிறது.
1980ஆம் ஆண்டு முதல், உலகின் மிகப் பெரிய கடனாளி தேசமாக அமெரிக்கா இருந்து வருகிறது. இருந்த போதும் அமெரிக்கா தனது ஏகாதிபத்தியச் செலவினங்களையும், பொறுப்பற்ற போர்களையும் தொடர்ந்து அதிகமாக்கிக் கொண்டே வருவதால் கடன் மேலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெட்ரோ-டாலர் என்ற அமைப்பால் உலகப்பணமாக நீடிக்கும் டாலரின் மீதான நம்பிக்கையும், அதற்கான தேவையும் தொடர்ந்து அதிகரிப்பதாலும், இதனால் சாத்தியமாகும் மலிவுக் கடனாலும் அமெரிக்கா வர்த்தக / நடப்புக் கணக்குப் பற்றாக்குறையுடன் நீடிக்க முடிகிறது.
அமெரிக்க அரசியலாளர் ரான் பால் பெட்ரோ-டாலர் குறித்துப் பின்வருமாறு கூறியுள்ளார் "பெட்ரோ-டாலர்தான் டாலருக்கு உலக நாணயங்களில் ஒரு சிறப்பிடம் கொடுத்தது, சாராம்சத்தில் டாலருக்கு எண்ணெய் மதிப்பளித்தது. இந்த ஏற்பாடு அமெரிக்காவிற்கு மிகப்பெரும் நிதி நன்மைகளுடன் டாலருக்குச் செயற்கையாக வலிமையளித்தது,. டாலரின் செல்வாக்கு உயர்வதால் எண்ணெய் மற்றும் பிற பொருட்களைப் பெரும் தள்ளுபடியில் வாங்குவதன் மூலம் நமது பணவீக்கத்தை ஏற்றுமதி செய்ய இது நம்மை அனுமதிக்கிறது.”
“உண்மையான மதிப்புள்ளவற்றை மட்டுமே நாணயமாக இருக்கக் கோரும் நேர்மையான பரிமாற்றத்திற்கான பொருளாதாரச் சட்டத்தை ரத்து செய்ய முடியாது. உலகளாவிய ஒப்புறுதியளிக்கப்பட்ட(Fiat) பணத்துடனான நமது 35 ஆண்டுகால சோதனையிலிருந்து உருவாகும் குழப்பம் ஒரு நாள் நம்மை உண்மையான மதிப்புள்ள பணத்திற்குத் திரும்ப செய்யும். எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தங்கள் எண்ணெய்க்கு டாலர்கள் அல்லது யூரோக்களைக் கோராமல் தங்கத்தை அல்லது அதற்கு இணையானவற்றைக் கோரும் நாள் நெருங்கி வருவதை நாம் அறிவோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புவிசார் அரசியல் வரலாற்றின் மிகவும் தந்திரமான உத்தியாக பெட்ரோ-டாலர் இருந்து வருகிறது. பெட்ரோ-டாலர் அமைப்பின் நிலைத்தன்மை மத்திய கிழக்கின் புவிசார் அரசியலுடன் இணைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா தொடர்ந்து ஒரு வல்லரசாகச் செயல்பட வேண்டுமானால் பெட்ரோ-டாலர் அமைப்பின் மூலம் டாலர் உலகப் பணம் என்ற தகுநிலையைப் பாதுகாக்க வேண்டும் என்பதால்தான் மத்தியக் கிழக்குப் பகுதியெங்கும் ஆயிரக்கணக்கான இராணுவத் தளங்களை நிறுவி அங்குள்ள நாடுகளைப் போர்களின் மூலமும் பொருளாதாரத் தடைகளின் மூலம் அழித்து வருகிறது.
(தொடரும்)
- சமந்தா