புரட்சிக்கு முன்:

ஹைடி சண்டமரியா குவாட்ராடோ, 1923 டிசம்பர் 30அன்று கியூபாவின் பழைய லாஸ் வில்லாஸ் மாகாணத்தில், இன்றைய என்க்ரூசிஜாடாவில் பிறந்தார். அவரது தாயின் பெயர் ஜோவாகினா குவாட்ராடோ அலோன்சோ. ஹைடியின் தந்தை பெனிக்னோ சண்டமரியா பெரெஸ் சர்க்கரை ஆலையில் மேற்பார்வையாளராகவும், தச்சராகவும் பணியாற்றினார். ஹைடியின் பெற்றோர்கள் இருவரும் ஸ்பெயினின் கலீசியாவிலிருந்து கியூபாவின் லாஸ் வில்லாஸிற்கு குடியேறியவர்கள். அவர்களுக்கு ஹைடியுடன் சேர்த்து ஐடா, ஏபெல், ஆல்டோ மற்றும் அடா என மொத்தம் 5 பிள்ளைகள். அதில் ஹைடியே மூத்தவர். ஹைடி ஆறாம் வகுப்பு வரை படித்திருந்தார், மிகச் சிறிய வயதிலிருந்தே தன்னைச் சுற்றியுள்ள சமூகப் பிரச்சினைகளை அவர் உணர்ந்திருந்தார். ஒரு செவிலியராக வேலை செய்ய முயற்சித்தார் பிறகு ஆசிரியராகக் குறுகிய காலம் பணியாற்றினார்.

haydee santamariaபுரட்சியில்:

1950களின் முற்பகுதியில் ஹைடி கிராமப்புறத்திலிருந்து ஹவானாவுக்குக் குடிபெயர்ந்து, அவரது தம்பி ஏபெலுடன் வாழ்ந்தார். அவர்கள் இருவருமே அநீதியை வெறுக்கவும், தாயகத்தையும் ஒடுக்கப்பட்டவர்களையும் பாதுகாக்கவும் உறுதியேற்றனர். ஆர்த்தடாக்ஸ் கட்சியின் இளைஞர் அணியில் இணைந்து பாடிஸ்டாவின் சர்வாதிகாரத்தை அகற்றுவதற்கான போராட்டங்களில் கலந்து கொண்டனர். 1952 மார்ச் 10இல் நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, அவரது சகோதரர் ஏபெல் சண்டமரியா மற்றும் பிற புரட்சியாளர்களுடன் சேர்ந்து, "அவர்கள் ஒரே மாதிரியானவர்கள்" மற்றும் "குற்றம் சாட்டுபவர்" என்ற இரகசிய செய்தித்தாள்களை வெளியிட்டுத் தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டார். 

மன்கடா தாக்குதல்:

ஹைடியும், ஏபெலும் தங்கியிருந்த 25 y O குடியிருப்பு புரட்சி இயக்கத்தின் மையமாக மாறியது. ஆரம்பத்தில் அங்குதான் பிடல் காஸ்ட்ரோ தலைமையில் புரட்சிக்குத் திட்டமிடப்பட்டது. ஃபிடல் காஸ்ட்ரோ, ஏபெலை இயக்கத்தின் ஆன்மாவாக கருதினார். மன்கடா தாக்குதலுக்குத் தயாரான பிடல் தான் இறந்தால் தனது பொறுப்பை ஏபெல் ஏற்க வேண்டும் அதனால் ஏபெலை உயிருடன் பாதுகாக்க வேண்டும் எனக் கருதியே சாட்டர்னினோ லோரா மருத்துவமனையைக் கைப்பற்றும் பணியை ஏபெலுக்கு அளித்தார், ஏபெல் ஆரம்பத்தில் அதை மறுத்தார். தானும் ஆயுதப் படைகளுடன் சண்டையிட விரும்புவதாகக் கூறினார்.

ஜூலை 26, 1953 அன்று ஹைடி சண்டமரியா, மெல்பா ஃபெர்னாண்டஸ் ஆகிய இரு பெண்களும் ஃபிடல் காஸ்ட்ரோ, ஏபெல் உள்ளிட்ட 160 போராளிகளோடு மன்கடா மற்றும் பேயாமோவில் பாடிஸ்டாவின் இராணுவ முகாம்களுக்கு எதிரான ஆயுதப்படைத் தாக்குதல்களில் ஈடுபட்டனர். ஹைடி சண்டமரியா, மெல்பா ஃபெர்னாண்டஸ் ஆகியோருடன், ஏபெல் சண்டமரியா தலைமையிலான போராளிகள் படை சாட்டர்னினோ லோ மருத்துவமனையைக் கைப்பற்றப் போராடினர். ஆனால் இறுதியில் அவர்களது திட்டம் தோல்வியடைந்தது. தாக்குதலில் ஐந்து போராளிகள் கொல்லப்பட்டனர், பின்னர் 56 போராளிகளை பாடிஸ்டா படையினர் தூக்கிலிட்டனர், இது புரட்சியாளர்களுக்கு ஏற்பட்ட தோல்வி என்றாலும், அதுவே கியூபப் புரட்சியின் வெற்றிக்கு உந்துசக்தி அளித்தது.

ஹைடி, மெல்பா, ஃபிடல் உட்பட மற்றப் போராளிகள் சிறைப்படுத்தப்பட்டனர். இயக்கம் குறித்தத் தகவல்களைத் தெரிவிக்குமாறு காவல்படையால் அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். ஹைடியின் கண் முன்னே அவரது சகோதரர் ஏபெலை சித்திரவதை செய்தனர். ஏபெலின் ஒரு கண்ணைப் பிடுங்கி ஹைடியிடம் காட்டி “இது உன் சகோதரனுடையது. அவன் சொல்ல மறுத்ததை நீ கூறா விட்டால், இன்னொரு கண்ணையும் பிடுங்கி விடுவோம். ” என்று அச்சுறுத்தினர். யாவற்றுக்கும் மேலாகத் தன் வீரமிக்க சகோதரனை நேசித்த ஹைடி: "நீங்கள் ஒரு கண்ணைப் பிடுங்கியும், அவர் பேசவில்லை என்றால், நான் அதை விடக் குறைவாகவேப் பேசுவேன் என்று பதிலளித்தார். ஹைடியின் கண் முன்னே 25 வயதேயான அவர் தம்பி ஏபெலைத் துன்புறுத்திக் கொன்றனர். சிகரெட்டுகளால் ஹைடி, மெல்பாவின் கைகளைச் சுட்டனர். ஹைடியை நாற்காலியில் கட்டிவைத்தவாறு ஹைடியின் காதலர் போரிஸ் லூயிஸ் சாண்டா கொலோமாவையும் அவர் கண் முன்னே துன்புறுத்திக் கொன்றுவிட்டு: "உனக்கு இனிமேல் துணைவனே கிடையாது, நாங்கள் அவனையும் கொன்றுவிட்டோம்." என்று காழ்ப்புடன் ஹைடியிடம் கூறினர். ஆனால் அதற்கும் கலங்காத ஹைடி: "அவர் இறக்கவில்லை, ஏனென்றால் ஒருவர் நாட்டிற்காக இறப்பது என்பது என்றென்றும் வாழ்வதே." என்று பதிலளித்து கியூபப் பெண்ணின் பெயரையும், வீரத்தையும் உச்சத்தில் பொறித்தார்.

ஹைடி 1953ஆம் ஆண்டில் குவானாஜய் சிறையிலிருந்து தன் அம்மாவுக்குப் பின்வருமாறு கடிதம் எழுதியுள்ளார்: "ஏபெலுக்கு ஒரு போதும் குறையில்லை. அம்மா, கியூபா இருப்பதை நினைத்துப் பாருங்கள், ஏபேல் விரும்பிய கியூபாவை உருவாக்க ஃபிடல் உயிருடன் இருக்கிறார்."

சிறையில் ஃபிடல் காஸ்ட்ரோ விசாரணையின் போது தான் ஆற்றிய “வரலாறு என்னை விடுதலை செய்யும்” என்ற புகழ்மிக்க உரையைக் கடித வரிகளுக்கிடையே கண்ணுக்குத் தெரியாதவாறு எலுமிச்சைச் சாற்றால் எழுதினார். ஏழு மாதச் சிறைவாசத்திற்குப் பின் ஹைடியும், மெல்பாவும் விடுதலை செய்யப்பட்டனர். பத்திரிக்கையாளர் ஒருவர் ”இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்?” எனக் கேட்டார். அதற்கு அவர்கள் "மீண்டும் தொடங்குவோம், இறந்த எங்கள் சகோதர சகோதரிகளுக்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்," என்று பதிலளித்தனர்.

தான் தாக்குதலிலிருந்து தப்ப முடியாது, ஹைடி போராட்டத்தைத் தொடரவேண்டும் என்றும் அடுத்து வரவிருக்கும் போராட்டங்களுக்கு ஹைடி தன்னை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஏபெல் தன்னிடம் வலியுறுத்தியதை ஹைடி பிற்காலத்தில் நினைவுகூர்கிறார். விடுதலைக்குப் பின் ஹைடியும் மெல்பாவும் செய்த முதல் செயல் கியூபத் தலைவர் எட்வர்டோ சிபஸின் கல்லறைக்கு மலரஞ்சலி செலுத்தியதுதான்.

ஹைடி சண்டமரியா, மெல்பா ஃபெர்னாண்டஸுடன் சேர்ந்து ஃபிடல் காஸ்ட்ரோவின் உரையைத் தொகுத்து, பகுதி பகுதியாகக் கடத்தி அதை அறிக்கையாக மாற்றி, அதை அச்சிடுவதற்கு நிதி திரட்டி 10,000 படிகளுக்கு மேல் அச்சிட்டு கியூபா நடாலியா ரெவெல்டா மற்றும் லிடியா காஸ்ட்ரோ ஆகியோரின் உதவியுடன் கியூபா முழுவதும் பரப்பினர். "பாதிக்கப்பட்ட கியூபாவுக்கு” என்ற அறிக்கையையும் அச்சிட்டு விநியோகத்தனர். அதில் ஃபிடல் மற்றும் சக கைதிகள் பாடிஸ்டாவின் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தைத் தொடர வேண்டிய முடிவை உறுதிபட வெளிப்படுத்தியிருந்தனர்.

பிடலும் மற்ற போராளிகளும் சிறையில் இருந்து விடுவிக்கப்படும் வரை ஹைடியும், மெல்பாவும் மற்ற போராளிகளுடன் இணைந்து போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்தனர். ஜூலை 26 இயக்கத்தின் அமைப்பாக்கத்தில் ஹைடி முக்கியப் பங்கு வகித்தார். ஜூலை 26 இயக்கத்தின் தேசிய இயக்குநரகத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்றார். நகர்ப்புறத்தில் தலைமறைவு இயக்க வேலைகளிலும் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார், ஆயுதப் போராட்டத்திற்கான புரட்சிகர சக்திகளை மீண்டும் ஒருங்கிணைப்பதில் அவர் ஒரு தீர்க்கமான பங்கைக் கொண்டிருந்தார்.

சிறிய கிரன்மா கப்பலில் பயணித்த எண்பத்திரண்டு கெரில்லாப் போராளிகளின் கியூப வருகையிலிருந்து அதிகாரிகளின் கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கில் பிராங்க் பயஸ் மற்றும் சிலியா சஞ்செஸ் ஆகியோருடன் இணைந்து ஹைடி 1956 நவம்பர் 30 அன்று சாண்டியாகோவில் நகர்ப்புற எழுச்சியை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார்.

பின்னர் சியரா மேஸ்ட்ரா மலைகளில் கெரில்லாப் படைகளுடன் இணைந்து பணியாற்றினார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையாளர் ஹெர்பர்ட் மேத்யூஸை, ஃபிடல் காஸ்ட்ரோவுடனான நேர்காணலுக்காக சியரா மேஸ்ட்ராவில் ஃபிடலின் இருப்பிடத்திற்கு வழிகாட்டி அழைத்துச் சென்றார். அந்த நேர்காணலின் வெளியீட்டால் ஃபிடல் இறந்துவிட்டார் என்ற பாடிஸ்டாவின் பொய்ப்பிரசாரம் அம்பலமானது. அமெரிக்கப் பத்திரிகையாளர் பாப் டேபர், ஃபிடல் காஸ்ட்ரோவை, நேர்காணல் செய்யவும் ஹைடி வழிகாட்டியுள்ளார்.

ஹைடி தன் சகத் தோழர்களால் யெயெ என்று அழைக்கப்பட்டார். ஹைடி பெண்களுக்கான சிறப்பு ஆயுதப் படையான மரியானா கிராஜல்ஸ் பிளாட்டூனில் இணைந்து சியரா மேஸ்ட்ராவின் மலைகளில் சண்டையிட்டார். ஹைடி ஜூலை 26 இயக்கத்தின் வெளிநாட்டுப் பிரதிநிதியாக நாடுகடத்தப்பட்ட கியூபர்களை ஒருங்கிணைத்தார். கியூபா முழுவதும் அச்சமின்றி யாரிடமும் பிடிபடாமல் பயணம் செய்தார். கெரில்லா படைகளுக்கான ஆயுதங்களைக் குண்டர்களிடமிருந்து வாங்குவதற்காக மியாமிக்குச் சென்று ஆயுதங்களுடன் கியூபாவுக்குத் திரும்பினார். தனது பாவாடை மடிப்புகளிலும் தோட்டாக்களைத் தைத்திருந்தார். புரட்சியின் வெற்றியை அறிவித்த போது, அவர் மியாமியில் இருந்தார், புதிய அரசாங்கத்தை நிறுவ உதவி பெறும் வகையில் அங்கிருந்த கியூப வழக்கறிஞர்களையும் நீதிபதிகளையும் கியூபாவிற்கு அழைத்து வந்தார்.

புரட்சிக்குப் பின்:

கியூபப் புரட்சியின் வெற்றிக்கு பின்னர், அவர் கல்வி அமைச்சகத்தில் குறுகிய காலம் பணியாற்றினார். பிறகு கியூபக் கலாசார மையத்தின் இயக்குநராகப் பணியாற்றி வந்தார். 1959இல் அவர் காசா டி லாஸ் அமெரிக்கா என்ற கலாசார அமைப்பை நிறுவினார், இருபதாண்டுக் காலம் அதன் இயக்குநராகப் பணியாற்றினார். 1965ஆம் ஆண்டில் ஆளும் கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவில் உறுப்பினரானார். கியூப மேலவையின் உறுப்பினராகவும் பணியாற்றினார். கண்டம் முழுவதும் கிளர்ச்சிப் போராட்டத்தை ஒருங்கிணைக்க 1967ஆம் ஆண்டில் ஹவானாவில் நடைபெற்ற சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த லத்தீன் அமெரிக்க ஒற்றுமைக்கான அமைப்பின் மாநாட்டிற்கு (OLAS) தலைமையேற்றார்.

மன்கடாவில் தன் காதலரை இழந்த ஹைடி, ஜூலை 26 இயக்க உறுப்பினரும், வழக்கறிஞருமான ஸர்மாண்டோ ஹார்ட் டெவலொஸை மணந்தார். அவர் புரட்சியின் வெற்றிக்குப் பிறகு முதல் கல்வி அமைச்சராகவும், பின்னர் கலாசார அமைச்சராகவும் பணியாற்றினார். அவர்களுக்கு ஏபெல், சிலியா என இரண்டு பிள்ளைகள். 1960-80களின் லத்தீன் அமெரிக்கப் போர்களால் வீடிழந்து இடம்பெயர்ந்த ஆதரவற்றவர்களையும் ஹைடி இணையர் தத்தெடுத்து வளர்த்தனர்.

1967 ஜூலை 2இல் மன்கடா என்ற தலைப்பில் உரையாற்றும் போது ஹைடி மன்கடா போராட்டத்தைத் தன் மகன் ஏபெலின் பிறப்புடன் ஒப்பிட்டுள்ளார்.

“என் மகன் ஏபெல் பிறந்த போது, நான் மிகவும் கடினமான சில தருணங்களை அனுபவித்தேன், எந்தவொரு பெண்ணும் குழந்தை பிறக்கும் போது அனுபவிக்கும் தருணங்கள் மிகவும் கடினமானவை. தாங்கமுடியாத வலிகள்! அவை என் உடலைக் கிழித்தன, ஆனாலும் அழுவது, அலறுவது அல்லது சபிப்பதைத் தடுக்க எனக்கு வலிமை கிடைத்தது. ஒருவருக்கு இத்தகைய வலி இருக்கும் போது அழுவது, அலறுவது, சபிப்பது இயல்பானது. அவ்வாறு செய்யாமலிருப்பதற்கான வலிமை எங்கிருந்து வருகிறது? நீங்கள் ஒரு குழந்தையைப் பெறுகிறீர்கள் என்பதால். அப்படித்தான் மன்கடா என்ன என்பதை நான் உணர்ந்திருந்தேன். . . எங்களால் எதிர்க்க முடிந்தது, ஏனென்றால் மிகப் பெரிய ஒன்று பிறக்க இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேசசியத்தில் ஹைடியும், சே குவேராவும் ஒத்த பார்வை கொண்டிருந்தனர். கியூபாவின் விடுதலையால் மட்டுமே ஹைடிக்கும், சே குவேராவுக்கும் நிறைவு ஏற்படவில்லை. இருவருமே அமெரிக்கக் கண்டம் முழுவதிலும் விடுதலை ஏற்படுத்தத் துடித்தனர்.

சேவின் மரணத்திற்குப் பிறகு ஹைடி சே-க்கு எழுதியக் கடிதத்தில், சியரா மேஸ்ட்ராவில் வாக்குறுதி அளித்தது போல் அமெரிக்க விடுதலைப் பயணத்திற்குத் தன்னை அழைத்துச் செல்லாததற்காக சே-வை மன்னிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

சே குவெரா 1960களில் ஹைடிக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி

”அன்புள்ள யெயெ,

நீங்கள் ஓர் இலக்கியவாதியானதை நான் காண்கிறேன், ஆனால் உங்களை எப்படி நான் மிகவும் விரும்புகிறேன் என்றால் புத்தாண்டில் அந்த நாளில், மேலெங்கும் துவக்குகளுடனான உங்கள் உருவத்தை, சியராவின் அந்த உருவத்தை --- அந்த நாட்களில் நம் போராட்டங்கள் இனிமையான நினைவுகள் --- உங்களுடையதாக என்னுடன் கொண்டிருப்பேன்.”

தான் சியராவில் கெரில்லாப் போராளியாகப் போராடிய நாட்களையே ஹைடியும் மேன்மைக்குரிய நாட்களாகக் கருதினார்… அவருக்கு சியராவில் போராட்டம் என்பது "எல்லாவற்றையும் அழகாகக் கொண்ட ஒரு தருணம், வீரமிக்க அந்த தருணத்தில் வாழ்க்கை; மரணத்தையும், தோல்வியையும் வென்றது. அத்தகைய தருணத்தில், மதிப்பிற்குகந்ததைப் பாதுகாக்க ஒருவர் எல்லாவற்றையும் தியாகம் செய்வார். நீங்கள் உங்கள் வாழ்க்கைக்காக சமரசமின்றிப் போராடும் போது வாழ்க்கையும் மரணமும் அழகாகவும், உன்னதமாகவும் இருக்கும். நம் இளம் கியூபர்களுக்கு நான் காட்ட விரும்பியதெல்லாம், நீங்கள் அவ்வாறு வாழும் போது வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கும். அதுவே வாழ்வதற்கான ஒரே வழி” என்று குறிப்பிட்டுள்ளார்.

கலாசாரப் புரட்சி:

ஹைடியின் அதியுன்னதப் படைப்பாகப் போற்றப்படுவது அவர் உருவாக்கிய கலாசார இல்லமான காசா டி லாஸ். ஹைடி "கலையைப் புரட்சிகர சமூக மாற்றத்தின் உயர்ந்த வெளிப்பாடாக நம்பினார். ஹைடி கலாசாரப் பணியின் சர்வதேசியத்தையும், "கலையை மனித வெளிப்பாட்டின் மிக உயர்ந்த வடிவமாகவும், சமூக மாற்றத்தின் அவசியமான அங்கமாகவும் ஹைடி உணர்ந்ததை அந்தக் கலாசார இல்லம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து புரிந்துகொள்ள முடியும். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவதில் கலை மற்றும் கலாசாரம் வகிக்கக் கூடிய முக்கியப் பங்கை நிரூபிக்கும் சிறப்பிற்குரிய இடமாக காசா டி லாஸ் அமெரிக்காவை உருவாக்கினார்.

அமெரிக்கா தனது போரை வெறுப்பால், பொய்களால், பணத்தால், ஆயுதங்களுடன் நடத்தியது. ஹைடியும், கலைஞர்களும், அவர் உருவாக்கிய கலாசார இல்லமும் மகத்தான தங்கள் படைப்பாற்றலாலும், பேரன்பாலும் அதை வென்றனர். அமெரிக்க ஐக்கிய நாடுகள் கியூபாவில் தொடுத்த ஆயுதப் போர், கருத்தியல் முற்றுகை, பொருளாதாரத் தடைகளைத் தாண்டி சர்வதேசிய சமூகக் கலாசார ஒருங்கிணைப்பை ஏற்படுத்த ஹைடியும், அவரது கலாசார இல்லத்தின் கலைஞர்களும் கடுமையாக உழைத்துள்ளனர். அந்தக் கலாசார இல்லத்தில் உலகெங்கிலும் உள்ள படைப்பாற்றல் மிக்கக் கலைஞர்கள், ஓவியர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள், இசைக்கலைஞர்கள், நாடகக் கலைஞர்களுடன், சிற்பிகள், புகைப்படக் கலைஞர்கள் புத்தாக்க ஆர்வலர்கள், அறிஞர்கள் அனைவரையும் இணைக்கும் சர்வதேச இணைப்பகமாக வளர்ந்தது. புதியக் கலை இலக்கிய முயற்சிகளையும், சோதனைகளையும் ஊக்குவித்து ஒருமைப்பாட்டை உருவாக்கியது. பல்வேறு நாடுகளிகளிலிருந்து கலைஞர்களையும், எழுத்தாளார்களையும் கியூபாவிற்கு அழைத்து வந்து நெருக்கமான உறவுகளை வளர்க்க உதவியது. லத்தீன் அமெரிக்க கலைஞர்களுக்குப் புத்துயிரூட்டும் கலாசார ஈர்ப்பு மையமானது. அதிநவீன கலைஞர்களை ஈர்த்து கியூபர்களை உலகின் மிகச் சிறந்த படைப்பாற்றல் கொண்டவர்களுடன் இணைப்பை ஏற்படுத்தியது,

இந்தக் கலாசார இல்லம் கியூப மக்களுக்குப் புதுமையான இசை, ஓவியம், நாடகம் என நவீன கலைப் படைப்புகளைக் கொண்டு வந்தது. கியூபாவின் கலைகளையும் இலக்கியங்களையும் நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் அறியச் செய்தது. இவ்வாறு மிகவும் வியக்க வைக்கும் கலாசாரப் பாலங்களை ஹைடி கட்டமைத்தார். அவர் காசாவை மிகவும் அசாதாரணமான முறையில் ஜனநாயகமும், அதிகாரப் பரவலும் கொண்ட முற்றிலும் கிடைமட்டமான அமைப்பாக்கினார். அங்கே வேற்றுமைகள் மதிக்கப்பட்டன. சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட கலைஞர்களை ஹைடி பாதுகாத்து ஊக்குவித்தார், நோயல் நிக்கோலா, சில்வியோ ரோட்ரிக்ஸ் (அவரது நியூவா ட்ரோவா "புதிய பாடல் இயக்கம்") எனப் பல்வேறு கலைஞர்களை ஆதரித்தார். புத்தாக்கக் கலை ஆர்வலர்களின் படைப்பார்வத்தை விரிவுபடுத்தும் வகையில், மேலும் வாய்ப்புகளையும் வழங்கினார். இன, பாலின, பாலியல் வேறுபாடுகளைக் கடந்து பெண்ணியக் கலைஞர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், வேறுபட்ட பாலியல் போக்குடையவர்கள் என ஹைடி அனைவரையும் உள்ளிணைத்து அரவணைத்தார்.

2010ஆம் ஆண்டில் ஹவானாவில் வெளியிடப்பட்ட “ஹைடிக்கு எழுதிய கடிதங்கள்” என்ற நூல், சே குவேரா முதல் எட்வர்டோ கலேனோ, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், நிக்கோலஸ் கில்லன் வரை அமெரிக்கக் கண்டத்தின் முன்னணி அரசியல் மற்றும் கலாசார பிரமுகர்கள் ஹைடி மீது கொண்டிருந்த செல்வாக்கையும், மரியாதையையும் பற்றிய ஒரு கருத்துச் சித்திரத்தை அளிக்கிறது.

காசா டி லாஸ் கட்டிடத்தின் பரந்த கதவுகள் வழியாக நடந்து செல்லும் போது, ஹைடியை அறிந்தவர்கள் அவருடைய இருப்பை உணர்கிறார்கள். அவருடைய கதையை மட்டுமே அறிந்தவர்கள், அல்லது அதைக் கேள்விப்படாதவர்கள் கூட சுதந்திரம் மற்றும் படைப்பாற்றலுக்கான உண்மையான இடமாக அதைப் பார்க்கிறார்கள் என ஹைடியின் தோழியும் அவரது வாழ்க்கை வரலாற்றை நூலாக்கியவருமான மார்கரேட் ராண்டல் கூறுகிறார்.

மரணம்:

ஹைடி 1980 ஜூலை 28 அன்று தனது ஐம்பத்தேழு வயதில் ஹவானாவில் தற்கொலை செய்து கொண்டார். ஹைடி தற்கொலை செய்து கொண்டதால் கியூபா எங்கும் துயரமும் குழப்பமும் அசௌகரியமும் ஏற்பட்டது. புரட்சிக்கு அவர் வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்திருந்த போதிலும், புரட்சியில் தற்கொலை ஏற்கப்படாததால், மற்றப் புரட்சியாளர்களுக்கு அளிக்கப்பட்ட கௌரவம் போல் ஹைடி புரட்சிச் சதுக்கத்தில் கௌரவிக்கப்படுவதை அது தடுத்து விட்டது.

ஹைடியின் வாழ்வில் அடுத்தடுத்து நேர்ந்த விபத்துகளும் துயரச் சம்பவங்களும் பெருஞ்சுமையாக அவரை அழுத்தின. அவர் வாழ்வின் இறுதி வரை தனது அன்புக்குரியவர்களை இழந்த பெருந்துயரால் அவதிப்பட்டார். மன்கடாவில் அவரது சகோதரர், காதலர் மற்றும் தோழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதால் ஏற்பட்ட காயங்கள் அவரை இறுதிவரை வதைத்தன..அதன் மீளாத்துயரால் வாழ்நாள் முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். அதனால் ஏற்பட்ட மனச்சிதைவு நோயால் ஒவ்வொரு காலையும் படுக்கையிலிருந்து எழுவதே அவருக்குப் பெரும் போராட்டமாக இருந்தது. அவருக்கு நெருக்கமானவர்களுக்கு இது தெரியும்.

பொலிவியாவில் சேவின் மரணம் ஹைடியைக் கடுமையாகப் பாதித்தது. தன்னால் இனி உயிர் வாழ முடியாது என்பதை அவருக்கு உணர்த்திய செய்திகளில் அதுவும் ஒன்று.1968ஆம் ஆண்டில் காசா டி லாஸ் அமெரிக்காஸ் வெளியிட்ட ஒரு கடிதத்தில், சே குவேராவுக்கு அவர் இறந்த பின் ஹைடி எழுதிய கடிதத்தில்: "பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் மிகவும் தீவிரமாக நேசித்த மனிதர்கள் இறக்கக் கண்டேன் -- நான் ஏற்கெனவே அதிகமாக வாழ்ந்து விட்டேன் என்று நினைக்கிறேன். சூரியன் அப்படி ஒன்றும் அழகாகத் தெரியவில்லை, பனை மரங்களைப் பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. இப்போது போலவே, சில நேரங்களில், வாழ்க்கையை மிகவும் ரசித்திருந்தாலும், இந்த இரண்டு விஷயங்களுக்காக மட்டுமே தினமும் காலையில் ஒருவர் கண்களைத் திறப்பது இன்னும் மதிப்பிற்குரியதாக உணர்ந்தாலும், உங்களைப் போல அவற்றை மூடவே நினைக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

திருமணமான இருபது வருடங்களுக்குப் பிறகு ஹைடியின் கணவர் அர்மாண்டோ ஹார்ட்டும் ஹைடி பயணத்தில் இருந்த போது அவரை விட்டுப் பிரிந்து சென்று விட்டார். கார் விபத்தில் ஹைடியின் கால் பலமாக அடிபட்டிருந்ததும் அவருக்கு நிரந்தாமான வலியேற்படுத்தித் துன்புறுத்திக் கொண்டிருந்தது. ஹைடியை உண்மையில் புரிந்து கொண்ட அவரது நெருங்கிய தோழியும், அவர் சோர்வுறும் போது உற்சாகப்படுத்தும் உற்ற துணையுமான சிலியா சஞ்செஸ் புற்று நோயால் இறந்தது அவரைத் தங்காவொண்ணா துயரத்தில் ஆழ்த்தி விட்டது. தனது வாழ்நாள் முழுவதையும் புரட்சிக்காக அர்ப்பணித்த ஹைடி, தன் வாழ்வின் பணி நிறைவேறியதாகப் பொறுப்புகளைத் தன் சக தோழர்களிடம் விட்டுவிட்டு, நீங்காது வதைத்த நிரந்தர வலிகளிடமிருந்து நிரந்தரமாய்த் தன்னை விடுவித்துக் கொண்டார்.

ஹைடியின் நினைவில்:

ஹைடியின் மகளும் சிறந்த எழுத்தாளருமான சிலியா ஹார்ட் 2005ஆம் ஆண்டில் ஹைடி மற்றும் சிலியா பற்றி வெளியிட்ட ஒரு கட்டுரையில், சிலியா சஞ்செஸின் மரணத்தினால்தான் தன் தாய் தற்கொலை செய்துகொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். சிலியா ஹார்ட் சிறுமியாக இருந்த போது ஹைடி அவரிடம் “அவர்கள் உன்னைக் கடைசிப் பெயரால் அடையாளப்படுத்தும் போது, முதல் பெயரால் உன்னை அடையாளப்படுத்துமாறு நீ சொல்ல வேண்டும் உன் பெயர் சிலியா சஞ்செஸினால் என்பதால்தான், அதை நீ கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். . இது நான் உனக்கு வழங்கிய மிகச் சிறந்த பரிசு, அதை மதிக்கக் கற்றுக்கொள்” எனக் கூறியதாக நினைவுகூர்கிறார்.

ஹைடியின் மனித நேயத்தை எடுத்துக்காட்டும் தன் குழந்தைப் பருவத்து சம்பவம் ஒன்றையும் சிலியா ஹார்ட் நினைவு கூர்கிறார். சிலியா ஹார்ட்டுக்கு ஏழு வயது இருக்கும் போது பிறந்தநாளன்று அவருக்குப் பொம்மைகளடங்கிய ஒரு பெட்டியை ஹைடி பரிசாக அளித்துள்ளார். ஒரு நாள் முழுவதும் பொம்மைளுடன் சிலியாவை விளையாட விட்ட பின் “இப்போது ஒன்றைத் தேர்வு செய், மீதமுள்ளவற்றை பொம்மைகளில்லாத உன் நண்பர்களுக்குக் கொடு” என ஹைடி கூறியுள்ளார்.… ”

2008 செப்டம்பர் 7 அன்று மூன்று தொடர் சூறாவளிகளால் வீடற்றவர்களாக வெளியேறியக கியூபர்களுக்கு உதவி செய்ய சென்ற போது ஏற்பட்ட கார் விபத்தில் ஹைடியின் மகள் சிலியா ஹார்ட்டும்(45), மகன் ஏபெல் ஹார்ட்டும்(48) உயிரிழந்தனர்.

ஹைடியின் நினைவாக வில்லா கிளாரா மாகாணத்தில் உள்ள என்க்ரூசிஜாடா நகராட்சியில் சண்டமரியா-குவாட்ராடோ குடும்பத்தின் இல்லம் அருங்காட்சியகமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளாது,

ஃபிடல் காஸ்ட்ரோ சாண்டியாகோவில் ஒரு அச்சிடும் வளாகத்தை ஹைடி சண்டமரியாவின் பெயரில் அர்ப்பணித்து ஹைடிக்கு நீண்ட அஞ்சலி செலுத்தினார் “ஹைடிக்கு ஓர் அழகிய புரட்சிகர வரலாறு உள்ளது” என்று அவர் கூறினார், பின்னர் புரட்சியின் ஆரம்ப நாட்களில் ஹைடி சூட்கேஸ்களில் மறைவாகத் துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் எடுத்துச் செல்ல வேண்டியிருந்ததை நினைவு கூர்ந்தார், “யெயெ-இன் பெயர் உண்மையில் கியூபப் புரட்சியுடன் இணைந்துள்ளது” என்று கூறி ஃபிடல் காஸ்ட்ரோ கண்கலங்கினார்.

ஹைடி பற்றி எழுதிய வாழ்க்கை வரலாற்று நூலில் மார்க்கரேட் ராண்டால், “அவர் ஏன் தன்னைத் தானே கொன்றார்? என்று ‘கேள்வி இருக்கக் கூடாது. அவர் எப்படி இவ்வளவு முழுமையாய் வாழ முடிந்தது, இவ்வளவு செய்ய முடிந்தது? என்றே கேட்க வேண்டும்” என முடித்துள்ளார்.

தொலைநோக்குப் பார்வையும், படைப்பாற்றலும் கொண்ட போற்றுதலுக்குரிய புரட்சியாளர் ஹைடி. தன் பேரன்பால் உலகத்தைப் புரிந்து கொண்ட ஹைடி, தன் இயல் நீதி உணர்வால் வர்க்கம், இனம், பாலினம் மற்றும் கலாசாரத் தடை வரம்புகளைக் கடந்தவர். கியூபப் புரட்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் நீக்கமற ஒன்றுகலந்தவர் நீங்காத துயர் இருந்தும் தளராத மன உறுதியோடு வீரஞ்செறிக்கப் போராடி கியூபாவில் கலாசாரப் புரட்சியை ஏற்படுத்திய புரட்சியாளர் ஹைடி சண்டமரியாவை நம் செயல்பாடுகளால் என்றென்றும் போற்றிடுவோம்.

- சமந்தா

Pin It